சாம்பலாய் அடங்கும் தாகம்
மொழியுள் நுழையும் உரிமைகளினதும் நீதிகளினதும் குரல்கள் சிலவேளைகளில் நேரடித்தன்மையான மொழியாகத் தம்மை பாவனை செய்வது உண்டு. அது தனது இயல்பின் சொற்பிசகாத் தோற்றமெனத் தன்னை முன்வைப்பதுமுண்டு. இவை தோற்ற வெளிப்பாடுகள். பலநூறு வகைகளில் சொல்லப்பட்டு அழகியலாக்கம், நுண்மையாக்கம், உருவகமாக்கம் நிகழ்வதன் மூலமே ஒரு கவிதை மொழியுள் வாழும் மனங்களில் தம்மை நினைவுறுத்திக் கொள்கின்றது. இந்தத் தன்மைகளை அடைவது ஒரு மொழிச்சூழல் கூட்டாக நடந்து செல்லும் நெடும்பயணம். பண்பாட்டில் இதுவொரு தினசரிச் செயற்பாடென எங்கோ எவரோ ஒவ்வொரு வரியாக அதை நோக்கி நடந்துகொண்டேயிருக்கிறார்கள்.
பெண் தன்னிலைகளின் கவிதைகளில் ஈழத்துச் சூழலின் நுண்மையாக்கமும் அழகியலாக்கமும் உருவகமாக்கமும் சிவரமணி, செல்வி, ஆழியாள், ஒளவை போன்ற முன்னோடிகளில் தொடங்குவது. அதன் இன்றைய நீட்சியும் வளர்ச்சியும் உருக்கொள்ளும் தன்னிலைகளில் தில்லை முக்கியமானவர். அவரது கவிதைகளில் தனது நிலத்தின் களங்களை மொழிக்குள் பூஞ்செடிகளெனப் பதியம் வைக்கிறார். அவரது நீதியின் உரையாடல்கள் நேரடித்தன்மையைத் தன் தோற்றமென அணிந்து கொண்டிருப்பவை. அதனுள் வாழ்வின் மென்சவ்வுகள் உயிர்த்துடிப்புடன் விரிகின்றன. கனிவும் கசப்புமான மொழியில் அவரது கவியுலகு உருக்கொண்டிருக்கிறது.
அவரது கவிதைகளுள் கேட்கும் இசை உரையாடும் தாளமுள்ளது. மெல்லிய எழுச்சிகள் அவ்வப்போது கூடும் கவிதைகளும் உண்டு. எல்லாவற்றையும் விட முக்கியமாக அவரது கவிதைகளின் உரையாடல்கள் குவிக்கும் கேள்விகளில் உள்ள எதிர்கொள்ளப்பட வேண்டிய உண்மைகள், மொழிக்குள் நுண்களங்களைத் திறக்கும் விழைவுகள் கொண்டவை.
*
ஆச்சரியங்களுக்காக காத்திருத்தல்
இருள் அடர்ந்த பகலாய்
அடங்கிக்கிடக்கிறது மனம்.
நவீன கவிதை ஒன்றை
நக்கிக் குடிக்கிறது நாக்கு.
பெண்ணுடலின் விடுதலையை
அள்ளி அளைவதற்காய்
விரிகிறது யோனி.
மூடுண்ட
உணர்வுகள் பிரவகித்து
ஊறிஊறி
பிரபஞ்சத்தை நனைக்கிறது.
முக்கி முனகி அதிசயித்து
முலைகளை அழுத்திக்
குப்புறக்கிடக்கிறது
துளிர்விடும் ஓர் கவிதை.
கால்களை உயர்த்தியும்
பணித்தும்
என்னமாய்
உற்சாகப்படுகின்றேன்
ஒரு கவிதையாய்.
*
இல்லாது இருப்பினும்
நம்பிக்கை
இரவில் என்னை எழுப்புகிறது.
குளியலறையின்
கண்ணாடியில் தெரிவது
ஒரு பெரிய ஆம்.
மற்றும் ஒரு சிறிய இல்லை.
மேகங்களின் பின்னால்
ஒரு காற்று
சாளரத்தைத் திறந்து
சந்திரனை எனக்குக் காட்டுகிறது.
சோர்வான தூக்கத்திற்குப் பிறகு
ஒரு சிறிய பறவை
தனது கொக்கியைத் திறந்து
பாடுகிறது.
அங்கே கண்ணாடியில்
எனது பாதம்.
ஒரு குறிப்பு
அறையை விட்டு
வெளியேறுகிறது பயம்.
*
வசந்தத்தில் உதிரும் இலைகள்
மரணத்தைத் தழுவி
மீண்டும் உயிர்க்கிறது
உடல்.
முழுநிலவு ஒளிரும்
நாட்களில்
விடியல்களால்
கலையும்
உறக்கமற்ற இரவு
ஆடைகளற்ற உடலுக்கடியில்
எனை அணைத்து
பனிபடர்ந்த நிலத்தை
தழுவுகிறது.
உன் நினைப்பின் தவிப்பு
என்னை நிர்வாணமாய்
தனித்து விட
நீ புராதன
குகை ஓவியமாய்
போன நிலைக்களத்தில்
நான் பட்டிப்பூவாய்
பூக்கின்றேன்.
சுகந்தங்கள் பரவ
நான் உனக்காவே
மணம் பரப்புகிறேன்.
நீ என்னுள்
அழியாத வாசம்.
*
வரி மங்குகிற நினைவு
பொட்டுப் பொட்டாகத்
தாடைவிளிம்பில்
தொங்கிற்று
ஆற்றுக்கு அந்தபக்கம்
நிற்கிற
வாழ்வின் புலம்பல்.
அரசல் புரசலாக
ஊர்காதில் விழுந்தும்
விழாததுமாக
காற்றின் இறுக்கம்
தளர்ந்திருந்தது.
வயல்வெளி நடுவில் போகும்
தென்னைகள்
ஓரமிட்ட சாலையில்,
தலைகிடந்த
அலங்கோலத்தில்
விரல்கள் பதிந்த
கன்னநோவில்
விலா எலும்புகளும்
நுரையீரல்களும்
நொறுங்கிய மூச்சடைப்பில்
ஒரு குரல்
நடுங்கி நடுங்கி வீழ்கிறது.
அவர்கள்,
உட்கார்ந்திருந்த
தரையை இழுத்து
அந்தரத்தில்
தொங்கவிட்டார்கள்.
அவர்கள்,
குளத்தையும்
ஏரியையும் தூர்த்து
குப்பை கொட்டினார்கள்.
குப்பைகள் எரிந்து
கட்டைக் கரியும்
புகையுமாக
நெடி வீசிற்று.
இன்னும் இன்னும்
இரத்தக் குட்டைகளில்
மயிர் உறைந்து
எனக்கு நாக்கு
நுனியில் வந்துவிட்டது
மறுகணம்
என் தாகம் அடங்கி
சாம்பலாயிற்று.
*
கனத்தசுமை
உன்னில் ஆசைகொள்ளப்பட்ட
இரு பொழுதுகளும்
செங்காலனில்
பனி பொழியத் தொடங்கியது.
என் மேனியை குளிர்தீண்டாமல்
நீ அனுப்பிவைத்த
முத்தத்தை
கட்டியணைத்து
உன் நினைவுகளுடன்
உறங்கச் செல்கிறேன்.
பெருங்காட்டில் நீ
வாகைசூடி
குளம்படி ஓசையெழ
மெல்லமெல்ல துளிர்த்தாய்.
அப்போது எங்கிருந்தோவந்த
பெரும்பறவை உன்னைத்தீண்ட
உன் இடுப்பில் சொருகியிருந்த வீச்சுவாள்
பறவையின் சிறகினை தறிக்க
நான் திடுக்கிட்டு எழுந்தேன்.
நெஞ்சிற்கு மேலால்
வீங்கி எழுகின்றது
முலைகளின் வெப்பம்.
…………..
மீண்டும் கண்ணயர்ந்தேன்.
செங்காலன் மணியோசை
துயில் எழுப்பிற்று.
…………..
உறைந்திருக்கும்
படுக்கையை உதறித்தள்ளி
நிர்வாணமாகின்றேன்.
……………..
நீயற்ற படுக்கை
இனி எனக்கு எதற்கு?
கனத்த சுமையாய் என்னுள்
இறங்குகிறது உன் உடல்.
*
கனவுகள் போர்த்திய இரவு
நான் நிராதரவாயிருந்த
ஒரு நெடும் பொழுதில்,
பீறிடும் அவனது
நினைவுகளைக் கடக்க
பனிக்கும் என் ஈரக்கண்கள்,
சின்னச்சின்ன குட்டைகளாய்த் தேங்கி
மிகப்பெரும் சாலையாக விரிகிறது.
பெண்கள் பற்றிய புனைவுகள் தகர
உரத்துச் சொல்கின்றேன்
இந்த வனாந்தரத்தில்
உனது தோள்களின் மீது
நான் மட்டும் சாயவிடு.
கண்களை இறுக்கியபோதும்
மனவெளியெங்கும் காற்றின் பரவுகை
இவ்விரவை இதற்கப்பாலும்
ஒற்றைக் கொடியாய் படர்வது
துயர் அன்பே!
எதிர்வீட்டு மரத்தில் உட்காரும்
ஒரு மைனாவின் ஒலியில்,
முட்டிமோதும் தொலைபேசி வார்த்தைகளில்
நான் நம்பிக்கையிழக்கின்றேன்.
உன்னுடனான அவளின்
உன்னத சிநேகித்தல் என்பது
இந்தப் பின்னிரவில்
வெறும் பச்சைப் பொய்யல்லவா?
நான் பெண்தான்
சரி நீ சொல்வது போலவே அதிபெண்
பார் மறுபடி மறுபடி
தூசுகள் தட்டி திரைகள் விலக்கி
என் அதி மனிதத்தை
வெளியே எடுத்துத் தருகின்றேன்.
ஒற்றைச் சிறகால் வருடுகிறாற்போல்
உன் உதட்டின் ஸ்பரிசம்
இன்னும் என்னில் ஒட்டியிருக்கிறது.
என் மடியில் நீயும்
உன் மடியில் நானுமாய்
கழியாதுபோன அந்த இரவு
இன்னும் மிச்சமிருக்கிறது.
*
தில்லையின் நூல்கள்:
விடாய் – தாயதி பதிப்பகம்
நிலங்கடந்தவள் – தாயதி பதிப்பகம்