இரண்டு கையளவு ஒற்றைச் சூரியகாந்திப்பூ

இரண்டு கையளவு ஒற்றைச் சூரியகாந்திப்பூ

தினசரியின் கொடுமணல் மீது கால் வெதுக்க நடக்கும் கவிஞர்கள் மொழியில் தோன்றுவதுண்டு. சமூகச் சிக்கல்களையும் மானுட நெருக்கடிகளையும் ஒன்றாகக் குவித்துப் பார்ப்பது எந்தவொரு அகத்தையும் கொந்தளிப்பூட்டக் கூடியது. சமூகத்தின் அழியாத சிக்கல்களினை மாற்றும் கருவியாகக் கவிதையையும் தன்னையும் ஆக்கிக் கொண்ட கவிஞர்களில் ஆத்மாநாம் முக்கியமானவர்.

அரசியல் கவிதைகள் மானுடரின் ஆன்மீகத்தை ஒரு நுனியால் பற்றிப் பிடித்து வளரும் பொழுதுதான் கற்சுவரில் கொடியென கவிதைகள் தழைக்கும். ஆத்மாநாமின் கவிதைகள்  தன்னகம் என்ற மென்வேர்களால் மானுட நெருக்கடிகள் என்ற சுவர்ப்பரப்பை குழந்தையின் கரங்களென இறுக்கிப் பிடித்தபடி படர்ந்தவை.

அவரது கவிதைகளுக்குள் உக்கிரத்தின் சங்கீதம் ஓடிக்கொண்டேயிருக்கும். நீதியான கேள்விகளின் சத்தமும் மனம் நெருக்கடிகளால் விகாரமடையும் பைத்திய நிலையின் ஒலியும் சிலபோது அமைதியாக ரோஜாக்களுடன் உரையாடும் பாவமும் அவரது கவிதைக்குள் வந்தமையும். எல்லா உலகை மாற்றும் எண்ணத்துடன் எழும் கவிதைகளின் உள்ளும் ஓடும் மானுட அன்பின் வளர்குரலென ஆத்மாநாம் தமிழ்க் கவிதைகளுக்குள் பதியம் வைக்கப்பட்டிருக்கிறார்.

(ஆத்மாநாம்)

*

நாளை நமதே

கண்களில் நீர் தளும்ப இதைச் சொல்கிறேன்
இருபதாம் நூற்றாண்டு செத்துவிட்டது
சிந்தனையாளர் சிறு குழுக்களாயினர்
கொள்கைகளை
கோஷ வெறியேற்றி
ஊர்வலம் வந்தனர் தலைவர்கள்
மனச் சீரழிவே கலையாகத் துவங்கிற்று
மெல்லக் கொல்லும் நஞ்சை
உணவாய்ப் புசித்தனர்
எளிய மக்கள்
புரட்சி போராட்டம்
எனும் வார்த்தைகளினின்று
அந்நியமாயினர்
இருப்பை உணராது
இறப்புக்காய்த் தவம் புரிகின்றனர்
என் ஸக மனிதர்கள்
இந்தத் துக்கத்திலும்
என் நம்பிக்கை
நாளை நமதே.

*

விடுதலை

கண்ணாடிச் சிறைக்குள்
கண்ணாடிச் சிறை
அக்கண்ணாடிச் சிறைக்குள்
நான்

அக்கண்ணாடிச் சிறையைத்
திறந்து
வெளி வர முயல்கிறேன்

திறக்கும் வழியே இல்லை

எரிச்சலுற்று
உடைத்து வர
நினைக்கிறேன்
உள் மனப் போருக்குப் பின்
முயற்சியை விடுத்து
சும்மா இருக்க முடிவெடுக்கிறேன்

கண்மூடித் திறக்குமுன்
கண்ணாடிச் சிறையைக் காணோம்
எங்கும் முன்பிருந்த அதே ஒளி.

*

என் ரோஜாப் பதியன்கள்

என்னுடைய இரண்டு ரோஜாப் பதியன்களை
இன்று மாலை சந்திக்கப் போகிறேன்
நான் வருவது அதற்குத் தெரியும்
மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள்
பரபரத்து என்னை வரவேற்கத் தயாராவது
எனக்குப் புரிகிறது
நான் மெல்லப் படியேறி வருகிறேன்
தோழமையுடன் அவை என்னைப் பார்க்கின்றன
புன்னகைத்து அறைக்குள் நுழைகிறேன்
செருப்பைக் கழற்றி முகம் கழுவி
பூத்துவாலையால் துடைத்துக்கொண்டு
கண்ணாடியால் எனைப் பார்த்து
வெளி வருகிறேன்
ஒரு குவளைத் தண்ணீரைக் கையிலேந்தி
என் ரோஜாப் பதியன்களுக்கு ஊற்றுகிறேன்
நான் ஊற்றும் நீரைவிட
நான்தான் முக்கியமதற்கு
மெல்ல என்னைக் கேட்கின்றன
என்ன செய்தாய் இன்று என
உன்னைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன் என
பொய் சொல்ல மனமின்றி
செய்த காரியங்களைச் சொன்னேன்
அதனை நினைத்துக் கொண்ட கணத்தைச் சொன்னேன்
சிரித்தபடி காலை பார்ப்போம்
போய்த் தூங்கு என்றன
மீண்டும் ஒரு முறை அவற்றைப் பார்த்தேன்
கதவைச் சாற்றி படுக்கையில் சாய்ந்தேன்
காலை வருவதை எண்ணியபடி.

*

காரணம்

எதிர்த்து வரும்
அலைகளுடன் நான் பேசுவதில்லை
எனக்குத் தெரியும் அதன் குணம்
பேசாமல்
வழிவிட்டு ஒதுங்கிவிடுவேன்
நமக்கு ஏன் ஆபத்து என்று
மற்றொரு நாள்
அமைதியாய் இருக்கையில்
பலங்கொண்ட மட்டும்
வீசியெறிவேன் கற்பாறைகளை
அவை மிதந்து செல்லும்
எனக்குப் படகாக.

*

உன் நினைவுகள்

எனினும் நான்
உற்றுப் பார்த்தேன்
கூர் வைரக் கற்கள்
சிதறும் ஒளிக் கற்றைகளை
வீசும் விளக்கை

அப்பொழுதேனும்
துடிக்கும் மனத்தின்
பிணைப்பினின்று மீள

முடியாது
இவ்விதம்தொடர்ந்திருக்க முடியாது என்று
நிற்கும் தரையின்
பரிமாணங்களைச் செதுக்கிய
ஓவியத்திற்குச் செல்வேன்
பழகிவிட்ட ஓவியமும்
கைவிடும்

உதிர முடியாத
காகிதப் பூக்கள்
வண்ணம் இழக்கும்

மெல்லிய ஒலியுடன்
நாடி நரம்புகளைத்
தொற்றிக் கொண்டு
சிறிது நேரம்
மூச்சளிக்கும் இசை

எழுத்துக் கூட்டங்களுக்கும்
தொடர்வேன்
ஏதேனும் ஒரு மூலையில்
உன் நினைவுகள்

என் அறையில்
நான் முடங்கிக் கிடக்கையில்
எப்பொழுதேனும்
அந்த உயிரிழந்த பஸ்ஸரை
அழுத்திச் சென்றுவிட்டாயோ
என்று மன மதிரும்

பின்னர்
உயிர்த்திருக்கும்
புட்களுடன்
தேடிக்கொண்டிருப்பேன்
அலையும் நினைவுகளில்.

*

சுதந்திரம்

எனது சுதந்திரம்
அரசாலோ தனி நபராலோ
பறிக்கப்படு மெனில்
அது என் சுதந்திரம் இல்லை
அவர்களின் சுதந்திரம்தான்
உனக்கொரு அறை
உனக்கொரு கட்டிலுண்டு
உனக்கொரு மேஜையுண்டு
உனக்குள்ளே ஒரே உரிமை
சிந்திப்பது மட்டும்தான்
மலைகளைப் பார்
மரங்களைப் பார்
பூச்செடிகளைப் பார்
ஜீவநதிகளைப் பார்
பரந்த கடலைப் பார்
இதமூட்டும்
கடற்கரையைப் பார்
எவ்வளவு இல்லை நீ பார்க்க
ஏன் அக்கசடர்களைக் குறித்து
வருந்துகிறாய்
குமுறுகிறாய்
எழுத்துக் கூட்டங்களைச் சேர்க்கிறாய்
உன் வேலை
உன் உணவு
உன் வேலைக்கு போய்வரச் சுதந்திரம்
இவற்றுக்கு மேல்
வேறென்ன வேண்டும்
சாப்பிடு தூங்கு மலங்கழி
வேலைக்குப் போ
உன் மீது ஆசை இருந்தால்
குறுக்கிடாதே.

*

எதாவது செய்

எதாவது செய் எதாவது செய்
உன் சகோதரன் பைத்தியமாக்கப்படுகிறான்
உன் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள்.
சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச் செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்றுச் செய்யத் தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும் வீரியமிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்…

*

அவரவர் பாட்டுக்கு

எல்லோரும் அவரவர் பாட்டுக்கு
ஒன்றுக்கிருந்துகொண்டிருந்தார்கள்
நான் நுழைந்ததும்
அவையிலே அமைதி
நான் கேட்டேன்
ஏன் நிறுத்திவிட்டீர்கள்
அவரவர் போதனைக்கேற்ப
திரும்பிப் பார்த்தேன்
எல்லாம் உன்னால்தான்
உற்றுப் பார்த்தேன்
கேட்டது ஒரு குரல்
ஒன்றும் விளங்கவில்லை
குப்புற விழுந்து பார்த்தேன்
எல்லாம்
நின்ற நிலையிலேயே
அரங்கேறிக்கொண்டிருந்தது
தாவிக் குதித்தேன்
பாதாள சாக்கடை வறண்டிருந்தது
எங்கும் நில நடுக்கம்
மெல்ல எட்டிப் பார்த்தேன்
இரண்டு கையளவு
ஒற்றைச் சூரியகாந்திப்பூ.

*

முத்தம்

முத்தம் கொடுங்கள்
பரபரத்து
நீங்கள்
முன்னேறிக்கொண்டிருக்கையில்
உங்கள் நண்பி வந்தால்
எந்தக் தயக்கமும் இன்றி
இறுகக் கட்டித் தழுவி
இதமாக
தொடர்ந்து
நீண்டதாக
முத்தம் கொடுங்கள்
உங்களைப் பார்த்து
மற்றவர்களும்
அவரவர்
நண்பிகளுக்கு முத்தம் கொடுக்கட்டும்
விடுதலையின் சின்னம் முத்தம்
முத்தம் கொடுத்ததும்
மறந்துவிட்டு
சங்கமமாகிவிடுவீர்கள்
பஸ் நிலையத்தில்
ரயிலடியில்
நூலகத்தில்
நெரிசற்பூங்காக்களில்
விற்பனை அங்காடிகளில்
வீடு சிறுத்து
நகர் பெருத்த
சந்தடி மிகுந்த தெருக்களில்
முத்தம் ஒன்றுதான் ஒரே வழி

கைவிடாதீர்கள் முத்தத்தை
உங்கள் அன்பைத் தெரிவிக்க
ஸாகஸத்தைத் தெரிவிக்க
இருக்கும் சில நொடிகளில்
உங்கள் இருப்பை நிரூபிக்க

முத்தத்தை விட
சிறந்ததோர் சாதனம்
கிடைப்பதரிது
ஆரம்பித்துவிடுங்கள்
முத்த அலுவலை
இன்றே
இப்பொழுதே
இக்கணமே
உம் சீக்கிரம்
உங்கள் அடுத்த காதலி
காத்திருக்கிறாள்
முன்னேறுங்கள்
கிறிஸ்து பிறந்து
இரண்டாயிரம் வருடங்கள் கழித்து
இருபத்தியோறாம் நூற்றாண்டை
நெருங்கிக்கொண்டிருக்கிறோம்
ஆபாச உடலசைவுகளை ஒழித்து
சுத்தமாக
முத்தம்
முத்தத்தோடு முத்தம்
என்று
முத்த சகாப்தத்தைத்
துவங்குங்கள்.

*

கவிதை தலைப்பிடப்படாதது

இந்தக் கவிதை
எப்படி முடியும்
எங்கு முடியும்
என்று தெரியாது

திட்டமிட்டு முடியாது
என்றெனக்குத் தெரியும்
இது முடியும்போது
இருக்கும் (இருந்தால்) நான்
ஆரம்பத்தில் இருந்தவன்தானா

ஏன் இந்தக் கேள்வி
யாரை நோக்கி

இன்றிரவு உணவருந்தும்
நம்பிக்கையில் இங்கிருப்பேன்

இப்படியும் ஓர் நம்பிக்கை

இருந்த நேற்று
எனக்கிருண்ட கணங்கள்

அவற்றின் தவளைக் குரல்கள்
கேட்கும் அடிக்கடி
அதனை ஒதுக்கத் தெரியாமல்
தவிக்கையில்

நிகழ்ச்சியின் சப்தங்கள்
செவிப்பறை கிழிக்கும்

நாளை ஓர் ஒளிக்கடலாய்
கண்ணைப் பறிக்கும்

இருதயம்

இதோ இதோ என்று துடிக்கும்.

*

ஆத்மாநாமின் நூல்:

ஆத்மாநாமின் படைப்புகள் – காலச்சுவடு பதிப்பகம்

https://www.tamilvu.org/ta/library-l9301-html-l9301001-151253

TAGS
Share This