பாணன்களும் பாடினிகளும்
பாடலெழுதுவதும் கவிதையும் இரண்டு வேறு வேறு துறைகள். இரண்டினதும் தன்மைகள் வித்தியாசமானது. சட்டென நம்முன் எழும் பிரிப்பு என்பது
பாடலாசிரியர் என்பது தொழில். கவிஞர் என்பது தொழில் அல்ல என்பது தான். ஆனால் பாரதி சொல்வதைப் போல் எமக்குத் தொழில் கவிதையென்று சொல்லி வாழ்ந்தால் யானையில் மிதிபட்டே சாக வேண்டியது தான்.
தொழில்முறையால் மட்டும் அப்பிரிப்பு நிகழ்வதில்லை. நுட்பமான சில திறன்கள் சார்ந்த பிரிவு அது. கவிஞர் தன் சொந்த அனுபவத்தினை அக்கணத்தின் எதிர்ப்படலுக்குத் தன்னை அளித்து மொழியில் புதிதாக ஒன்றை நிகழ்த்த வேண்டியவர். பாடலாசிரியர் தன் சொந்த அனுபவங்களை வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திற்கும் கதாபாத்திரத்திற்கும் கதைப்பின்னலுக்குமேற்ப சொற்தேர்வுகளை நிகழ்த்த வேண்டியவர். பாடலாசிரியர் என்பவர் ஒருவகையில் தரப்பட்ட மலர்களைக் கொண்டு சரம் தொடுப்பவர். கவிஞர் தன்னில் பூவென ஒன்றை அவிழ விடுபவர்.
பாடலாசிரியர்கள் எந்தச் சொல்லால் தொட்டெடுத்து அதை இன்னொன்றாய் மாற்றுகிறார்கள் என்பதும் வழமையான சொற்களுக்கிடையிலேயே அவர்கள் ஒரு புதிய அல்லது வழக்கமில்லாத சொல்லை ஒளிரவிடுகிறார்கள் என்பதும் அச்சொல் பிற சொற்களுடன் இணைந்து மலர்ச்சரமென ஆகுகையில் அதில் நிகழும் கவித்துவமும் உள்ளங்களை இணைக்கின்றன. நம் உதடுகள் மந்திரமெனப் பாடிக்கொள்ளும் நினைவில் தங்கும் வரிகளாகின்றது. உதாரணத்திற்கு புழக்கத்தில் இல்லாத பழந்தமிழிலக்கியச் சொற்களை மீளத்தருவித்தல், அல்லது சமகாலத்தின் ஏதாவது வட்டாரச் சொற்களைப் பயன்படுத்துதல். இவை மீள மீளப் புதிய ஒலியிணைவுகளையும் ஈர்ப்பையும் கொள்கின்றன. அம்பறாத்தூணியிலிருந்து அம்புகளை எடுப்பதைப் போல் பாடலாசிரியர் சிறந்த சொற்களை எடுத்தபடி சரம்தொடுக்கத் தயாராய் இருக்க வேண்டியவர்.
பாடலாசிரியர்களின் பணியென்பது அனுபவத்திலிருந்து ஓர் அறிதலை மீள நிகழ்த்துதலே. ஓம் என்று மனங்கள் கூட்டாக இணைந்து கொள்ளும் உடன்படல்களே பாடல்களில் பெரும்பான்மையாக நிகழ்பவை. கவிதை இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட சரிகளிலிருந்தும் ஓம்களிலிருந்தும் மீறிய முனையைத் தம்மில் திகழ வைக்க வேண்டியது.
கவிஞர்கள் மொழியின் உள்ளோடும் இசைக்குத் தம்மை முழுதளிப்பவர்கள். பாடலாசிரியர்கள் புறமொலிக்கும் இசைக்குத் தம்மை முற்றளிக்க வேண்டியவர்கள்.
தொல்காலப் பாணன்களிடமும் பாடினிகளிடம் உள்ள இசைகூரும் தன்மை பாடலாசிரியர்களுக்கு அவசியம். சொற்கள் இசையின் கிளையில் பறவையின் கொழுநகங்களுடன் பற்றிப்பிடித்தபடி எடையற்று அமரவேண்டும். அங்கிருந்து விசையின்றி எழுந்து பறக்க வைக்கும் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும்.
பின்னணி இசை, குரல், பாடற் சந்தர்ப்பம், காட்சியாக்கப்பட்ட முறைமை, நடிக நடிகையர் கூட பல பாடல்களுக்கு முக்கியமானவையாகவே நம் காலத்தில் திகழ்கின்றன. ஆனால் சில பாடலாசிரியர்கள் காலம் நினைந்து சுமக்க வேண்டிய பாடல்களினைக் கலயத்தில் சுமந்து வந்து மொழியினில் இசையுடன் பிசைந்தூட்டுபவர்களாக இருக்கிறார்கள். இசையினதும் வரிகளின் கூட்டு வடிவமான பல அற்புதமான தமிழ்ப்பாடல்கள் இருக்கின்றன. அவற்றை என் ரசனைக்கேற்ப எழுதவிருக்கிறேன். இத்தனை இடையீடுகளுக்குள்ளும் கழைக்கூத்தாடியின் சமநிலை கூடும் பாடலாசிரியர்கள் எவ்விதம் கவித்துவத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதினை பாடலாசிரியர்களினூடாகப் பட்டியலிடவிருக்கிறேன்.
நற்தொடக்கமென வாலி எழுதிய கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் என்ற முருகன் பாடலுடன் ஆரம்பிக்கலாம். சிறுவயது முதல் கோயில் லவுட் ஸ்பீக்கர்களில் கேட்கும் பக்திப் பாடல்கள் இரண்டு வகையில் உள்ளம் தோய வைப்பவை. ஒன்று அவற்றில் உள்ள பக்தி பாவம். இரண்டாவது அப்பாடல்கள் திருவிழாக்கால மனநிலையின் பின்னணி இசையென விரிபவை. இப்பொழுதும் வீதியில் கேட்கும் பாடலொன்றின் சிறு வரி கூடக் கடந்த காலத்தில் உள்ள எனது சிறுவனுக்குள் திடீரென்று நுழைபவை. திருவிழாவின் வாசனையொன்றை அலகில் கொத்தி வந்து கொடுக்கும் பறவையென லவுட் ஸ்பீக்கர்கள் போஸ்ட்களில் அமர்ந்திருக்கின்றன.
“கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்
நீ கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அறுமறை தேடிடும் கருணையங் கடலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே”
பகுத்தறிவோ பக்தியோ நான் உன்னை மறவேன், நீயொரு முருகு, அழகு, இளமை, அற்புதமான சித்திரம் என உவகை கொள்ளும் தொடக்க வரிகள் முதல், கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே என தமிழ் மற்றும் முருகனுடன் இணையும் அன்றாட வரலாற்றிலிருந்து சிறகு கொண்டு காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே என்ற கடைசி வரி ஈறாக கவித்துவ ஒருமையை விரிகிறார் வாலி.
ஒருவகை சங்ககால முருகு அயர்தல் நிலையில் எழுதப்பட்டதும் பாடப்பட்டதுமான பாடலிது. வரிகளும் குரலும் இசையும் ஒன்றையொன்று மஞ்சைத் தோகை விழிகளென மயக்கும் எழில் கொண்டது இப்பாடல். எப்பொழுது கேட்டாலும், கல்லைச் சிலையென ஆக்கி அதன் கண்மடல் திறப்பித்து குறும்புடன் முருகன் இதழ் தழைத்துத் தவழ்ந்து வருவது போல் மனம் அசை கொள்ளும் காலத்தில் ஒலித்துக்கொண்டேயிருப்பது.
எனது வீட்டிற்கு அருகில் உள்ள புகழ்பெற்ற ஆலயம் நல்லூர் தான். பலபிரதேசங்களின் மனிதர்கள் ஆறுகளின் சங்கமமெனத் திரண்டு சேரும் கழிமுகமென ஆகும் ஆலயமது. சிறுவயது முதல் அந்தக் கோயிலின் பிரகாரத்தின் உள்வெளி. அதன் திருவிழாக்களின் நினைவுகள் மூளையிணைவுகளில் ஒன்றெனக் கலந்து விட்டவை. முருகனின் கதை எனக்குப் பிடித்தமானது. அவனது இயல்புகளும் கோபங்களும் கூட. வீட்டில் உள்ளோருடன் கோவித்துக் கொண்டு எனக்கென்றொரு நாடு, எனக்கென்றொரு மக்கள் என்று உருவாக்கிக் கொண்டு நான் அங்கிருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் என்னை அங்கே வந்து சந்தியுங்கள் என்ற சிறுவனின் கோபம் அழகியது. நான் முகநூலை விட்டுவெளியேறி இணையத்தளத்தில் மட்டுமே எழுதுவேன். வேண்டுமென்றால் வந்து அங்கு என்னை வாசித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்குப் பின்னாலும் ஒரு முருகுக் குறும்பு உண்டு.