உடல் செவ்வாது பிணி ஒவ்வாது

உடல் செவ்வாது பிணி ஒவ்வாது

பாடலாசிரியர் தாமரையின் பாடல்கள் தன் சொற்தேர்வுகளாலும் அன்றாடத்தின் அவதானிப்பு நுண்மைகளாலும் புகழ் பெற்றவை. இவரது பாடல் வரிகள் இசையில் குழந்தையின் விரல்களில் தாயின் கூந்தலிழைகளென பற்றிக்கொள்பவை. ஒரு நல்ல பாடலாசிரியர் தனது சொல்லுலகின் தனித்துவத்தால் தனக்கான பொருளுலகையும் உருவாக்கக் கூடியவர்.

தாய்மை அல்லது தந்தைமை பற்றிய தாமரையின் பாடல்வரிகள் நம் காலத்தின் மகத்தான தாலாட்டுப் பாடல்களாக தாய்க்கும் தந்தைக்கும் ஆகியிருக்கின்றன. குழந்தைமை தாலாட்டும் பெற்றோர்களென அவர்களை எண்ணத் தூண்டுவது.

*

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீா்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை

முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்தத்தால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே

இந்த நிமிடம் நீயும் வளா்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை
பல நூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ
இசையாக பல பல ஓசை செய்திடும்
ராவணன் ஈடில்லா என் மகன்

எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொா்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்
சுவா் மீது கிறுக்கிடும் போது ரவிவா்மன் நீ
பசி என்றால் தாய் இடம் தேடும்
மானிட மா்மம் நீ
நான் கொள்ளும் கா்வம் நீ

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை..

*

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா

நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா

தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

….

அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே….

புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகையை எறிந்தே
மீட்டாய் என்னை

விண்ணோடும் மண்ணோடும் ஆடும்
பெரும் ஊஞ்சல் மனதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
என ஏதோ பயம் கூடும்

மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி

நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்

எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்

*

இந்த இரண்டு பாடல்களிலும் உள்ள நவீன தாலாட்டு பாரதியில் தொடங்குவது. சின்னஞ் சிறு கிளியே என்ற பாரதி பாடலின் இசைத் தன்மை, சொற் தேர்வு நுட்பம், மனோபாவம் ஆகியன பாடலாசிரியர்களின் தாலாட்டில் இசையொருமையையும் மனோபாவத்தையும் உண்டாக்குவதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

குழந்தைகளிற்கென சொல்லப்படும் பாடல்கள் அல்ல இவை. மறுவளமாக பெற்றோருள் குழந்தையின் உலகின் தேவைகளையும் அவர்களுக்கு என்ன வகையான பாத்திரத்தை பெற்றோர் வகிக்க வேண்டும் என்பதையும் சொல்வதைப் போல் இப்பாடல்கள் உருவாகின்றன.

தாமரை அந்த நுட்பத்தை எளிமை கொண்ட சொற்களுடன் பழைய சொற்களையும் இணைத்து மெல்லாபரணமென ஆக்குகிறார். இவை இசையாகவும் குரலாகவும் இணையும் போது காலம் கீறி மருந்திடும் பாடல்களாக மாறிவிடுகின்றன.

(தொடரும்)

TAGS
Share This