பாவைக்கைச்சுடர்
அண்மையில் வாசித்த கவிதைகளில் ஒளி என்ற இந்தக் கவிதை இன்னதென்று அறியாத புதுவுணர்வை மனதிற்குள் உண்டாக்கியபடியே இருக்கிறது. மனசு கவிதையின் இறுதி வரிகளை உருட்டியபடியே இருக்கிறது. எளிமையான ஒரு கவிதை தான். ஆனால் ஏணைக்குள் கிடக்கும் குழந்தை தலையை மட்டும் வெளியில் நீட்டி, நான் ஒரு அதிசயம் என்று ஈறு தெரியச் சிரிப்பது போல் தோற்றங் காட்டுகிறது.
கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் எனக்கு மிகவும் பிடித்த கதை. ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும் தொண்டை கசிந்து கண்ணீர் உருள்வதை உள்ளே உணர்ந்திருக்கிறேன். சபரிநாதனின் இந்தக் கவிதைக்குள் அந்தக் கதையிலிருந்த கருணையின் நீள் தொடுகையொன்று ஒரு விளையாடென ஒரு அற்புதமென ஒரு சிரிப்பென கனிவு கொண்டிருக்கிறது.
அலையலையெனப் பென்சிலிலிருந்து துருவி விழும் துகள்களுக்குள்ளிருந்து, முகத்தைப் பொத்திக் கொண்டு கண்ணை விரல்களுக்குள் திறந்து வைத்திருக்கும் குறும்பின் வாய்மொழியென கவிமொழி திகழ்ந்திருக்கிறது.
*
ஒளி
நான் ஒளியைக் கண்டுபிடிக்கும்
முன்னமே
ஒளி என்னைக் கண்டுபிடித்தது.மழை.
வாசல் திண்டு மறைவில் நின்றபடி
வெடைகளுக்கு நடுவே பெட்டைக்கோழி பார்க்கிறது
சிலை போல் நின்று நனையும்
கரும்போர் மாட்டை. தொலைவில் தெரியும்
அதிரச கம்பனியின் கபிலநிற புகைபோக்கியில் இருந்து
வெள்ளைப்புரவிகள் புறப்படுகின்றன.
எனக்கும் அக்காவுக்கும் பசிக்கிறது.
நாலாபுறமும் சுவர்கள்.
வீட்டுக்குள் வந்த தட்டான்
குழல்விளக்கை நோக்கிப் பாய்கிறது,
சுற்றிச்சுற்றி வந்து மோதுகிறது.சட்டென
ஒரு மௌனம், அசைவற்ற தியானம்.
விளக்கின் அருகமர்ந்து அதிசயத்தை அருந்துகிறது.
பின் மீண்டும் உன்மத்த உழலள்.
நடுக்கமும் தட்டழிவும்.
ஒளி, சிலரைப் பாடாய்ப் படுத்துவதுண்டு.
மூடிய பொழுதினிலேபாயும்
வெள்ளத்தின் சீற்றத்திலே
குற்றுயிராய் ஒளிரும்
குறையுயிராய்ப் பதறும்
கல்மண்டபத்தில்
நெஞ்சின் முன் ஏந்திய ஒரு
பாவைக்கைச்சுடர்.
மின்சாரம் அற்ற இரவு.
சமைத்த உணவுகளை
மூடி வைத்துவிட்டு
அம்மா முற்றத்துக்கு வந்தமர்ந்ததும்
ஒளிர்கின்றன விளக்குகள்,தெருவில்
விளையாடிக்கொண்டிருந்த பிள்ளையல்
காட்டுக்கூச்சல் இடுகின்றன.
அப்பா வாங்கி வந்தார்
அப்ஸரா பென்சில்
கட்டர் உள்ளிருந்து
பொங்கி வந்தன அலைகள்
முட்டை உடைக்கும் கரட்டாண்டி குஞ்சு போல
எட்டிப்பார்க்கும் நெட்டை பென்சிலே
அழைத்தது நாந்தான்
எப்படி இருக்கு
எங்கள் வீடு
எங்கள் புத்தம்புது
நாச்சியார் விளக்கு.
சபரிநாதன்