மாய மருத்துவம்

மாய மருத்துவம்

வசீகரமான ஒரு பரிசை, ஒரு ஆச்சரியத்தை முதன் முதலில் ஒருவருக்கு அளிக்கப் போகும் மனம் சிலிர்த்துக் கொண்ட மயிர்க்கொட்டியென சுணைத்தபடியும் உள்ளூர வியந்தபடியும் நடந்து கொள்ளக்கூடியது.

நான் யாருக்கும் பரிசளிப்பதில்லை. அல்லது ஒரு பொருளை பரிசென்னும் மகத்துவத்துடன் காவிச்செல்வதில்லை. எனக்குப் பரிசளிக்கப்படுவதிலும் ஆர்வமற்றவன். அதில் ஏதோவொரு கொழுவி எனக்குள் இருக்கிறது. ஒரு விலக்கம். பரிசுடன் வருபவர் என்னை நெருங்கிவிடுவார் என்பது போல் ஒரு மயக்கு. இதயத்தை மட்டும் இதுவரை பரிசளித்திருக்கிறேன். பரிசாகப் பெற்றுமிருக்கிறேன்.

ஆனந்த்குமாரின் பரிசு என்ற கவிதையை அவரது டிப் டிப் டிப் தொகுதியில் வாசித்தேன். தானே ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியத்தை வழங்கச் செல்லும் குழந்தை மனமொன்று ஒவ்வொரு பரிசுக்குள்ளும் இருக்கிறது. நான் அதைத் தான் அஞ்சியிருக்கிறேன். அந்தக் குழந்தை மனதிடம் உள்ள வாஞ்சை நிராகரிக்க முடியாதது. ஒரு பரிசைப் பெறுவதென்பது குழந்தையொன்று தானே கனிந்து வழங்கும் முத்தத்தைப் போன்றது. மறுக்க முடியாதது, மறையவும் கூடாதது. அதனால் தான் நான் குழந்தைகளிடமும் முத்தம் பெறுவதுமில்லை, கொடுப்பதுமில்லை. பரிசுகளற்ற வாழ்வை எதிர்கொள்ள விரும்பும் என்போன்ற ஒரு பிரகிருதிக்கும், பரிசின் ஆச்சரியத்தில் உள்ள குழந்தையின் முத்தத்தை எச்சிலொழுகத் தரும் ஆனந்த்குமாரின் கவிதையை அணைத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைப் போல.

பலாப்பழம் என்ற இன்னொரு கவிதையில் ஒரு குட்டி டப்பாவில் அழைத்து வரப்படும் குழந்தையாக மாற்றப்பட்டிருக்கும் சுளைகளை இனிக்க இனிக்க வீட்டில் விளையாட விடும் மனவிருப்பை ஆனந்த்குமார் அளிக்கிறார். மேகங்களும் சூழ்ந்திருக்கும் இருட்டுமாக நிறைந்திருக்கும் வானத்தில் ஒரு சிறு கீற்றின் ஒளியென அவரின் கவிதைகள் ஊடுபுகும் பொன்னொளியின் மின்துகள்கள் போல மாயம் செய்கின்றன. ஒரு மருத்துவம் போல் கவிதை நிகழ்கின்றது.

காயமுள்ளவரைத் தானே கண்டடையும் மாயமருத்துவம் தான் கவிதையோ!

(ஆனந்த்குமார்)

*

பரிசு

கைக்குள் மூடி வைத்து
எடுத்துவருகிறான்
எனக்கொரு பரிசை
கைகளை உடலாலே
ஏந்தி வருபவன்போல்
மிகமிக கவனமாக
நடக்கிறான் அவன்

மர்மம் தாளாமல்
வழியில் நின்றவன்
ஒருமுறை
லேசாய் திறந்து
பார்த்துக் கொள்கிறான்
தானே மறைத்துவைத்த
ஆச்சரியத்தை.

*

பலாப்பழம்

வைத்துப் பார்த்திருந்து
ஒருநாள் பனிக்குடம் போல்
உடைந்தது அதன் மணம்
நாங்கள் அதை
வெட்டித் திறந்தோம்
வீடெல்லாம் தவழ்கிறது
அந்தப் பலாப்பழம்

ஒரு குட்டி டப்பாவில்
கொஞ்சம் அடைத்து
இப்போது உங்கள் வீட்டு
அழைப்பு மணியை
அழுத்துவது நான்தான்

உங்களுக்குச் சம்மதம் என்றால்
இவளை இங்கே கொஞ்சம்
விளையாட விடுகிறேன்.

TAGS
Share This