தவளைத் தாவல்: கடிதம்

தவளைத் தாவல்: கடிதம்
  1. கவிதை ஒன்றில் மாறுகின்ற பகுதி மற்றும் நிலையான பகுதி என்று ஏதாவது உண்டா?
  2. தற்கால தமிழ் கவிதைகளில் கதைகூறும் பாணியில் கவிதை நகர்வது ஆரோக்கியமானதா?
  3. றியாஸ்குரானாவின் கவிதைகளை எப்படி நோக்குகிறீர்கள்? அவரால் மாயயதார்த்தம் அல்லது கவிதைக்கு கற்பனை செயல் மட்டும் போதும் என்பதில் உடன்படுகிறீர்களா?

லலிதகோபன்

*

வணக்கம் லலிதகோபன்,

கவிதையின் முதற் சொற்கள் கலையாடிகளின் வாயிலிருந்து எழும் உச்சாடனங்களாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்புகிறேன். அதன் ஆதித்தன்மை இன்றளவும் மாறுபடவில்லை. ஒரு வடிவத்தின் எல்லைகள், பிறப்பில் மனித உடல் ஆவதைப் போல் நிலைகொள்பவை. அவற்றின் உள்ளுயிரை வேறுவேறு வகையில் கற்பனை செய்துகொள்ள முடியும் என்றாலும் வடிவம் பற்றிய எல்லைகள் அதன் பிறப்பியல்பால் மட்டுப்பாடு கொண்டவை. சொல்லில் திகழும் கலையே கவிதை. இதற்கு மாற்றான பார்வைகள் வடிவ மாறுதல்களை சிலர் முயல்வது ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழும்.

உதாரணத்திற்கு கவிதா நிகழ்வு என்ற வடிவம் ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் உருவான ஒரு கவிதை சொல்லும் நிகழ்வு. இதில் நாடகீயம், இசை, சொல்லும் முறையில் ஏற்ற இறக்கங்களுடன் கவிதை நிகழ்த்தப்படும். கவிதையின் நிகழ்த்து முறை தொடர்பான வடிவம் அது. ஆனால் கவிதை தன் சொல்லால் நிலை கொள்வது. அதுவே அதன் மூல ஊற்று. அது மாறுபடாத தன்மை கொண்டது. கவிதையை ஒரு நிகழ்த்துகலையாகக் கையாள்வது அவ்வடிவம் பெருந்திரளின் முன் கூவி அழைத்து அதன் கவனத்தைக் கோரி அவர்களுடன் உரையாடும் நோக்கம் கொண்டது. அதுவொரு வகை அனுபமாக மக்களின் அரசியல் பிரக்ஞையுடன் உரையாட வல்லது. ஆனால் இன்று கவிதா நிகழ்வு அத்தகைய பெருங்கூட்டத்தின் முன் அதே உணர்ச்சிப் பெருக்குடன் ஆற்றப்பட்டால் இளம் தலைமுறை அதனை எப்படி எதிர்கொள்ளும்? அவர்கள் அதை ஒரு மிகை நாடகீயமாக எண்ணவே அதிகம் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் இத்தகைய வடிவ உருவாக்கங்கள் புறச்சூழலுடனும் தங்கி நின்றே ஆற்றலுடன் வெளிப்படுபவை. மக்கள் அரசியல் நெருக்கடிகளால் உயிராபத்துகளால் இரத்தமும் சதையும் இழுபட துப்பாக்கிகளின் முன் மண்டியிட்டு நிற்கும் பொழுது ஒவ்வொரு சொல்லும் பேரர்ர்தத்துடன் வெளிப்படும். உள்ளிறங்கும். ஆனால் புறச்சூழல் மாறியதும், அவை வலிமையிழந்து செல்லும், ஒருவகைப் பழங்கதையாகிவிடும். அல்லது அக்காலத்தில் இப்படியிருந்தது என்ற கதையாக மனதில் தங்கும், அது ஒரு கவிதை அனுபவமாக மாறாது.

கவிதையொன்றினுள் சொல்லப்படும் பெரும்பாலான வரிகள் குளக்கரையில் காத்திருக்கும் தவளையின் கால்களைப் போன்றவை. அவை தாவிக்குத்தித்து அக்குளத்தின் நீருள் மூழ்கும் தாவலாக சில வரிகளோ சொற்களோ நிகழாமல் மிகுதி வரிகள் கவிதை நிலையை எய்தாது. மாறாத வரிகளென்று இல்லை, தாவல் நிகழவில்லையென்றால் அங்கு கவிதை நிகழவில்லையென்று பொருள் .

கவிதை எந்தக் கலை வடிவிலும் நிகழும் ஓர் உச்சம். அதைக் குறிக்கத் தான் கவித்துவம் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. ஒரு நாடகத்தின் உச்சமான தருணம் கவித்துவம் கூடிமுயங்கும் கணத்தினாலேயெ மதிப்பிடப்படுவது. ஒரு இசையில் ஒரு பொயட்டிக் டச், கவித்துவத் தொடுகை நிகழ்ந்தாக வேண்டும். சிற்பம் உறைந்த சொற்களின் மெளனமென ஆகும் போது அது கவித்துவம் கொள்கிறது. ஓவியம், நாவல், சிறுகதை என்று எந்த வடிவத்துள்ளும் கவித்துவம் நிகழ்வதே அதன் கலை மதிப்பினை அளக்கும் அளவுகோல். அதே போல் கவிதைக்குள்ளும் பிறவடிவங்களின் தன்மைகள் நிகழும். கவிதைக்குள் உள்ள இசைத்தன்மை ஒரு அளவுகோல், சிற்பம் போன்ற சொல்லிணைவுகள் ஒரு திறவு. ஓவியத்தின் தீற்றல்கள் போன்ற விபரிப்புகள் ஒரு அம்சம். அப்படியே கதை என்ற வடிவமும். நிகழும் அக்கதை அங்கு கவித்துவத்தை அடைந்தால் அது கவிதையே.

எண்ணிப்பாருங்கள், வரலாற்றில் தமிழினதும் உலக மொழிகளினதும் மகத்தான இலக்கியங்கள், காவியங்கள் கவிதையிலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. கவிதைக்குள் கதை சொல்வதல்ல, கதையையே கவிதைகள் மூலம் தான் மானுடம் கலயத்தில் பொன்னென இதுவரை பாதுகாத்து வந்திருக்கிறது. கவிதைக்கு அத்தகைய இயல்பு இருக்கிறது. நவீன கவிதையில் கதை எதற்காக கவிதையால் சொல்லப்படுகிறது என்ற திட்டவட்டமான வரையறை எதுவுமில்லை. சிலருக்கு படிமமாக உருக்கொள்வது, சிலருக்கு கதை விபரிப்பாகத் தோன்றும். சிறு புனைவுத் துண்டுகளெனக் கவிதையை எழுதவும் கூடும். நானும் அப்படி எழுதுவதில் ஆர்வமுள்ளவன். எனது தனி அனுபவத்தில் உணர்வுகள் என்னைக் கேட்டுக்கொள்ளாமலே தான் வடிவத்தின் தன்மையை எப்போதும் தீர்மானிக்கின்றன. அனேகம் ஒரே தருணத்தில் மேல்கீழாக முளாசி எரியும் தீபோல் இரண்டு பக்க புனைவுப் பரப்பொன்று சடசடவென மனதில் மூளும். அதைப் பிறகு வேறொன்றாக மாற்றவோ எடிட் செய்யவோ மனம் ஒப்புவதில்லை. அந்தக்கணத்தின் நான் எதுவோ அது தான் நான் கவியாக வாழும் தருணம். அதை விட்டு அகலும் நான் சாதாரணமானவர். என்னால் செய்யப்படும் எடிட்டிங்குகள் மூளையினால் ஆகிவிடுபவை. நான் மனதால் கவிதை ஆவது எனும் தரப்பைச் சேர்ந்தவன்.

ஆகவே ஆரோக்கியம் அல்லது ஆரோக்கியமற்றதா என்பதல்ல நாம் கணக்கிலெடுக்க வேண்டியது. அது கவிதையா இல்லையா என்பது தான் முக்கியம்.

(றியாஸ் குரானா)

றியாஸ் குரானாவின் கவிதைச் செயல்பாட்டின் மேல் எனக்கு இளவயதில் ஆர்வமிருந்தது. அவரின் சிந்தனைகள் என்னை ஈர்த்திருந்தன. ஆனால் சில காலத்தின் பின் அவை கவிதை உற்பத்தித் தொழிற்சாலையாக தோன்றத் தொடங்கிவிட்டன. கற்பனைச் செயல் போன்ற இருந்து எழுதி எடிட் செய்து மூளையால் உண்டாக்கப்படும் கவிதைகள், கவிதையின் தற்செயலான ஒருங்கையும் இசையையும் சொல்லிணைவுகளையும் நினைவில் தங்கும் தன்மையையும் முக்கியமாக மொழிக்கால்கள் ஊன்றி நிகழ வேண்டிய தாவலையும் இழந்து விடுகின்றன. ஆகவே நான் அவரது தரப்பிற்கு மாற்றான இன்னொரு தரப்புடனேயே என்னை அடையாளங் காண்கிறேன். அவர் தன்னளவில் கவிதையைத் தீவிரமாக எதிர்கொண்டு சில பாணிகளை முன்வைத்திருக்கிறார். அவை ஒரு பங்களிப்பென இருக்கும். அவை எனது பார்வைக்குக் கவிதையின் மாயத்தை இழந்தவை. கவிதையின் மாயத்தை இழப்பதென்பது எனக்கு அச்செயலின் வசீகரத்தைக் குன்றச் செய்வது. நான் கொஞ்சம் சின்னப் பெடியன். கவிதை எனக்கு ஒரு மாயாஜாலமாகத் தோன்றுவதை வேடிக்கை பார்க்கும் கண்களே எனக்கு வேண்டும். அது இறைச்சிக் கடையிலோ பிணவறையிலோ அறுபடுவதைப் பார்க்க அஞ்சும் மனது கொண்டவன்.

மாய வித்தையைப் பார்க்கும் குழந்தைக்கிருக்கும் வியப்பின் கண்கள் கொண்டவரே என்னளவில் கவிஞர். அங்கு முன்னின்று அதை வித்தையெனக் கற்று முன்வைக்கும் வித்தைக்காரரல்ல.

TAGS
Share This