கவிப்புதிர்
ஓர் அறிவிப்பு
52 வது சுவிஸ் இலக்கியச்சந்திப்பைத் தொடர்ந்து 53வது இலக்கியச் சந்திப்பை இத்தாலியின் சிசில் தீவில் நடத்தலாம் என இருக்கிறேன். அனலைதீவில் நடத்த ஆதரவளித்த நண்பர்கள் ஐரோப்பாவின் காலடியில் நசிவுண்டு கிடக்கும் சிசில் தீவில் 53வது இலக்கியச் சந்திப்பு நிகழ ஆவன செய்ய வேண்டுகிறேன். அந்த சிலக்கியச் சந்திப்பை ஒட்டியும் ஒரு தொகுப்பு வெளியிடலாம் என வேலைகளை ஆரம்பித்திருக்கிறேன். இம்முறை கவிதைத்தொகுப்பு.
யாரையும் புண்படுத்தாத, விடுபடல்களே இல்லாத பெருந்தொகுப்பு திட்டம். முதலில் 5 இலட்சம் ஈழப் புலம்பெயர் கவிஞர்களின் 5 இலட்சம் கவிதைகளைத் தொகுக்கலாம் என்றே பணியைத் தொடங்கினேன். ஈழப் புலம்பெயர் சூழலில் ‘முக்கியமான’ – கிட்டத்தட்ட சொற்களைப் பொடிபோடும் அனைவரும் முக்கியமானவர்கள்தான் இல்லையா- 5 லட்சம் கவிஞர்களை தொகுத்து, கவிதைகளை பட்டியலிட்ட போதுதான் ஒன்றைக் கவனித்தேன். முக்கியமான இரண்டு விடுபடல்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒன்று றியாஸ் குரானா, மற்றது கற்சுறா. முக்கியமான அவர்கள் இருவரையும் தவிர்த்துவிட்டு ஒரு கவிதைத் தொகுப்பு கொண்டு வருவதில் அறப்பிழை இருப்பதால் அய்ந்துலட்சம் என்ற குறைந்தபட்ச எல்லையை விரிவாக்கி பத்துலட்சம் கவிஞர்கள், பத்து லட்சம் கவிதைகள் என்று தீர்மனித்தேன். அப்படி ஈழப் புலம்பெயர் சூழலில் முக்கியமான 10 லட்சம் கவிதைகளை தொகுத்தபின்னரும் மேற்குறிப்பிட்டவர்களுள் ஒருவருக்கே அந்தப் பத்துலட்சத்தில் இடம் கிடைத்திருக்கிறது. அது யார் என்பது இப்போதைக்கு ரகசியம்.
விடுபட்ட கவிஞரை சரியாக ஊகித்து மின்னஞ்சல் செய்யும் வாசகர்களுக்கு பெரும் தொகுப்பு இலவசமாக அனுப்பி வைக்கப்படும். தொகுப்பின் பெயர் கழிவறைக் கவிதைகள். அதாவது கழிவறையில் வைத்து பாதுகாக்க, படிக்க வேண்டியவை என்ற இடுகுறிப்பெயருடன் தொலைநோக்காக இடப்பட்டிருக்கிறது. ஆக கவிதை தொகுப்பை கழிவறையில் வைக்க வேண்டும் என்பதே முன்நிபந்தனை. கழிவறையில் அவசரத்து டிஸ்யூ பேப்பர் இல்லாவிட்டால் – அது அப்படி அவசரத்துக்கு எப்போதும் இல்லாமாலாகும் வஸ்துதான் – கவிதைத் தொகுப்பைக் கிழித்து பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படியான ஒரு பெரும் தொகுப்பின் பயன் சமூகத்தில் அது ஒன்றாக மட்டுமே இருக்க முடியும். அதற்காக இலகுவான, மென்மையான தண்ணீரில் கரையக்கூடிய எடை குறைந்த தாளில் கவிதைத் தொகுப்பை அச்சடித்துக் கொடுக்க நீலண்டன் தோழர் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
கவிதைகளையும், ஊகித்தவர் பெயரையும் அனுப்பவேண்டிய முகவரி : dhpirasath@gmail.com
தர்மு பிரசாத்
*
இப்படியொரு பதிவை நண்பரொருவர் அனுப்பியிருக்கிறார். இருட்டில் சாணியை மிதித்தது போல் அதிர்ச்சியடைந்தேன்.
தர்மு பிரசாத்துக்கு என்னவாகிவிட்டது, ஈழத்தின் பத்து லட்சம் கவிஞர்களுடன் சேர்த்து, மூத்த எழுத்தாளர் மு. பொன்னம்பலம் எழுதியிருக்கும் பட்டியலிலுள்ளவர்கள் பெயரும் உண்டா என்பது எனக்கு இப்போதே தெரிந்தாக வேண்டும். தனியொரு கவிஞர் தன்னும் தொகுப்பில் விடுபட்டால் தொகுப்பினைக் கிழித்திடுவோம் என்று பாரதி ஆவேசத்துடன் பாடிய கவி வரிகள் காதில் அசரீரியென ஒலிக்கிறது.
எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டு, வழங்கப்பட்ட கவிப்புதிருக்கு விடைதேடப் பகுத்தறிவைப் பயன்படுத்தினேன். விடுபட்டது ரியாஸா கற்சுறாவா என்று பார்ப்பதற்கு முதலில் டொஸ் போட்டுப் பார்த்தேன், பின்னர், சாமிப்படத் தட்டில் இருவர் பெயரையும் எழுதிப்போட்டு திருவுளச் சீட்டு எடுக்க, எனக்கென்ன என்று லீவில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக் குழந்தையை அழைத்து துண்டுச்சீட்டை எடுக்க வைத்தேன், கடைசியாக முன் வீட்டு அய்யாவை அவசரமாய்க் கூப்பிட்டு (அவர் தமிழீழப் போராட்டம் தொடங்க முதல் பிறந்து இப்போது வரை இருப்பவர் என்ற தகுதியின் அடிப்படையில்), நிலமையின் தீவிரத்தை விளக்கி உங்கள் கையில் தான் எல்லாம் உள்ளதென்று சொல்லி இரண்டு விரலில் ஒன்றைத் தொடச் சொன்னேன். தொட்டார்.
ஆச்சரியம் என்னவென்றால் மூன்று முறையும் வந்தது ஒருவரின் பெயரே. அது யார் என்பதை அறிந்து கொள்ள எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
முகவரி: Kirishanth300@gmail.com