இந்தாங்கோ இனிப்புத் தட்டு

இந்தாங்கோ இனிப்புத் தட்டு

வாழ்வில் இனிப்பதைப் பகிர்வதே முதன்மையானது. நாம் வாழும் காலம் தினந்தோறும் எதிர்மறை மனநிலைகளாலும் கசப்பின் கசடுகளாலும் பனித்திரையெனச் சூழப்பட்டிருக்கிறது. இதனிடையில் இந்தா வைத்துக் கொள் என வயதான பாட்டியோ தாத்தாவோ யாருமறியாமல் கைபொத்தி அழுத்தித் தரும் ரகசிய இனிப்புத் துண்டெனக் கவிதைகளை எழுதுகிறார் ஆனந்த்குமார்.

இனிப்பின் தித்திப்பை நாவுகளும் காதுகளும் இதயங்களும் மறந்துபோகலாகாது. வாழ்க்கை மகிழ்ச்சியான கணங்களின் தொகுப்பாக மட்டுமே எஞ்சுவது. அதற்கு மேல் எதுவும் கணக்கல்ல.

வாழ்வின் நொடிகளை ஆனந்த்குமார் பார்க்கும் கோணம் என்பது தொடும் ஒவ்வொன்றையும் பொன்னாக மாற்றிவிடும் தேவதையொன்று கவிஞராகப் பிறந்தது போல் அத்தனையும் இனிக்கும் கவியுலகை எழுதியிருக்கிறார். ஒவ்வொரு தொடுகையும் அதுவரை சாதரணமாய் ஒளிர்ந்த ஒரு கல்லை வேறொரு வெளிச்சத்தில் சூரியனென ஒளிர வைக்கிறது. உதாரணத்திற்கு வழி என்ற கவிதையில் உள்ள பூக்கள், எத்தனையோ சுடுகாட்டின் பயண வழி மலர்களை நான் கடந்திருக்கிறேன். இன்று இப்போது இக்கவிதை திறந்து கொள்ளும் வாசலில் நான் அப்படி அவற்றைப் பார்த்ததேயில்லை. இதுதான் ஒரு கவிதை தன் அகத்தால் இன்னொரு அகத்தைத் திறக்கும் கணம்.

ஆனந்த்குமாரின் கவியுலகிற்கொரு பார்வையிருக்கிறது, ஒரு பார்க்கும் தன்னிலை. அது ஓர் ஆந்தையைப் போல் முழுத்திக்கும் தலை திருப்பி நின்று இனிப்பைத் தேடுகிறது, கிடைத்தால் பகிர்கிறது, அந்த இனிப்புத் தட்டிலிருந்து உங்களுக்கும் சிலது.

*

வழி

அறிந்திருந்த ஒருவரின்
இறுதிச்சடங்கிற்கு
அறியாத ஊருக்கு கிளம்பிச்சென்றேன்
நான் வந்திறங்கியபோது
உடல் கிளம்பிவிட்டதைச் சொன்னது
பாதை மறித்துக்கிடந்த மலர்கள்

சுடுகாட்டிற்கு எப்படி
வழி கேட்பதெனத் தயங்கி
ஒளிரும் மஞ்சள் பூக்களை
பின்தொடர்ந்தேன்

நடுவேயொரு
கோவிலின் வாசலுக்கு மட்டும்
இடைவெளி விட்டு
தொடர்ந்தது பூக்களின் வழித்தடம்

குறுகிய தெருக்களுள் சென்ற
பூக்களின் வண்ணம் மாறிற்று
இப்போது அரளி இதழ்கள் என்னை
அழைத்துச் சென்றன

அமைதி தவழும் ஒரு தோட்டத்துள்
இறங்கிச் சென்றது
பூவிரிப்பு
அதன் ஒழுக்கில் இறங்கி
திரும்பிக் கண்டேன்
எரிந்தணைந்து நீர்தெளித்து
குளிரத்துவங்கியிருந்த
அவர் வீட்டை.

*

இனியது

இன்று என் ஒருவனுக்கு மட்டும்
சமைத்த உணவு
அவ்வளவு சுவையாய் வந்துவிட்டது
நான் கூரைமேல் நின்றுகொண்டு
ஊரையே அழைக்கிறேன்
“சாப்பிட வாருங்கள்”

ஒரு இனிய இசை
கேட்டவுடன்
நட்பின் அத்தனை முகங்களுக்கும்
அதை பகிர்கிறேன்

ஒரு புதிய மலரைப் பார்த்தவுடன்
சுற்றிச் சுற்றி படம் பிடிக்கிறேன்
அதை மேலும்மேலும்
மலர்களாக்குகிறேன்

எல்லாவற்றையும் அல்ல நண்பர்களே
இனிய ஒன்றை பலவாய் பெருக்கும்
இனிய ஒன்றையே பெருக்குகிறேன்

கழற்றக் கழற்ற முளைக்கிறதே
என் தலையிலும் ஒரு கிரீடம்.

*

வண்டியின் பின்னால்
அமர்ந்திருக்கும் அவர்
ஒரு குழந்தையைப்போல்
அணைத்துப் பிடித்திருக்கிறார்
அந்தத் தென்னங்கன்றினை

மரங்கள் தன்மீது
பறக்கும் சாலையை
தலைசாய்த்து பார்த்துப்போகிறது
குட்டித் தென்னை

நிமிர்ந்து வளர்ந்து
நிலத்தில் கால்சிக்க
ஓர்நாள்
காற்று தலைவீசும்
ஒரு பெருமழைக்குமுன்,
கண்மூடி
நினைத்துப் பார்க்குமோ
இந்தப் பயணத்தை?

*

தெய்வம்

வலது கையில்
அவளந்த
மலரை மலர்த்தியபோது
இடது காலை
அங்குகொண்டு
சரியாக வைத்துவிட்டது
நடனம்.

*

தரிசனம்

தடுப்பின் இடையில்
ஓடித்திரியும் சிறியவனை
அப்பா இழுத்துப் பிடித்துக்கொண்டார்
மறைக்கும் கம்பிக்குழாய்க்கு கீழ்
தலை நுழைத்து
வளைந்து பார்க்கும் பெரியவனுக்கு
அம்மா சுட்டிக் காண்பிக்கிறாள்
கருவறையை
தீபாராதனை காட்டப்படுகிறது
நால்வரும் கண்களை
மூடித் தொழ
ஒளியின் கயிற்றால்
அவர்கள் மூன்று முறை
சுற்றிக் கட்டப்படுகிறார்கள்.

ஆனந்த்குமாரின் வலைத்தளம்:

https://anandhkumarpoems.wordpress.com/

TAGS
Share This