செயற்களம் புகுவோருக்கு: 02

செயற்களம் புகுவோருக்கு: 02

வரலாற்றின் திரைச்சீலைகள்

சுன்னாகம் நிலத்தடி நீரில் அங்குள்ள மின்சார உற்பத்தி நிறுவனமொன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயில் மூலம் அந்தச் சுற்றுவட்டத்தில் நீர் மாசடைந்திருக்கிறது என்பதை நான் அறிந்த போது வருடம் 2015. விதை குழுமம் ஆரம்பித்த புதிது அது. பெப்ரவரி 14 காதலர் தினத்தில் காதல் கவிதைகள் வாசிப்பதற்கான நிகழ்வொன்றை யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்தோம். சுன்னாக நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் நண்பர்கள் மூலமும் கேள்விப்பட்டவற்றையடுத்து ஒரு கலந்துரையாடலைச் செய்ய முடிவெடுத்து, காதலர் தின நிகழ்வை, தண்ணீரைக் காதலிப்போம் என்று மாற்றினோம்.

கலந்துரையாடலின் மூலம் அப்பிரதேசத்திற்கு நேரடியாகச் சென்று மக்களின் நிலையறிதல் அவற்றை எழுதுதல் என்று முடிவு செய்தோம். அங்கு சென்று பார்வையிட்ட பின்னர் மக்களின் வாழ்நிலை தொடர்பில் எழுதினோம். பின்னர் வேறு வேறு அமைப்புகள், அவற்றின் செயற்பாடுகள், போராட்டங்களைக் கவனித்தோம், பங்குபற்றினோம். ஒரு கட்டத்தில் வடக்குமாகாண சபையின் முதலமைச்சர், ஆபத்தான நச்சுப் பொருட்கள் நிலத்தடி நீரில் இல்லை என்று பத்திரிகையொன்றுக்குச் சொல்லவும் பிரச்சினை கூர்மையடைந்தது. அதன் பின்னர் அங்கிருக்கும் மக்கள் நீரை அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். நேரில் இவற்றைப் பார்த்த எமக்கு சில அடிப்படையான கேள்விகளும் கோரிக்கைகளும் எழுந்தன. இந்த நீரைக் குடிக்கலாமா? இல்லையா? என்பதே முதன்மையான கேள்வி. அப்போது அமைப்பில் நான்கு பேர் தான் செயற்படும் உறுப்பினர்கள். ஒரு குழு என்ற தோற்றத்தை உருவாக்க, அறிந்த பல நண்பர்களுடன் பேசி அவர்களின் பெயர்களையும் இணைத்துக் கொண்டோம்.

(தண்ணீரைக் காதலிப்போம்)

நானும் ஆதி பார்த்திபனும் உயர்தொழில் நுட்பக் கல்லூரியில் அப்போது மாணவர்களாக இருந்தோம். யதார்த்தன் யாழ். பல்கலைக்கழக மாணவர். இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்வதற்கு நாங்கள் அந்தப் பிரதேசத்திற்கு நேரில் சென்று பார்க்க வேண்டும், அந்த மக்களுடன் கதைக்க வேண்டும் என்று வகுப்பு வகுப்பாகச் சென்று பேசினோம். பெரியளவில் மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. நானும் ஆதி பார்த்திபனும் பேசினோம். ஆதி உணர்வுபூர்வமாக இந்தப் பிரச்சினையை திரளின் முன் பேசக் கூடியவன். அது ஓரளவு கவனத்தை ஈர்த்தது. ஆனால் போதவில்லை. பின்னர் எல்லா வகுப்பும் பேசி முடித்துவிட்டு, கன்ரினில் சென்று அமர்ந்திருந்தோம். Dead poets Society படத்தில் வரும் காட்சியொன்று ஞாபகத்திற்கு வந்தது, மாணவர்களை மேசையின் மீது ஏறி நின்று உலகத்தை வேறு கோணத்தில் பார்க்க அந்தப் படத்தில் வரும் ஆசிரியர் தூண்டுவார். அந்தக் காட்சியைச் செய்து பார்த்தேன். கன்ரினில் இருந்த கதிரையின் மீது ஏறி நின்று நிலமையின் தீவிரத்தையும் மாணவர்களாக நாம் ஏன் அங்கு செல்ல வேண்டும், மக்களைப் பார்க்க வேண்டும் என்பதையும் பற்றி களைத்துப் போயிருந்த நிலையிலும் தீவிரமாகப் பேசினேன்.

பேசி முடித்து வெளியே சென்ற போது இஸ்லாமிய நண்பர்கள் சிலர் வந்து கதைத்தார்கள், இங்கு படிக்கும் அத்தனை இஸ்லாமிய, சிங்கள மாணவர்களும் உங்களுடன் வருகிறோம் என்றார்கள். நெஞ்சில் கிளர்ந்த அந்தக் குளிரூற்றும் சொற்களை இதை எழுதும் போதும் நினைத்துப் பார்க்கிறேன். முப்பது வருட யுத்தத்தின் பின் இளைஞர்களாக ஒரு பொதுப்பிரச்சினைக்காக எந்த அரசியல்கட்சியின் பின்புலமும் இன்றி சுயாதீனமாக இஸ்லாமிய, சிங்கள, தமிழ் இளைஞர்கள் ஒன்று திரண்டது அதுவே முதல் முறை. இப்பொழுது ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அதுவே ஒரேமுறையும் ஆகுமென்று நினைத்துப் பார்க்கவில்லை. பல்கலைக்கழகத்தில் நடக்கும் பொதுப்போராட்டங்களில் தமிழ் மக்களுக்கான உரிமைப்பிரச்சினைகளுக்காகப் போராடும் சிங்கள, இஸ்லாமியர்கள் மிகக் குறைவு, அல்லது இல்லை.

நினைவு கூரல்களில் சிலரைப் பார்க்கலாம் அவ்வளவு தான். எல்லாப் போராட்டங்களிலும் தனித்தமிழ்த் தவில் தான் இன்றும் வாசிக்கப்படுகிறது. இதை மாற்றும் ஒரு விதை அன்று விழுந்திருந்தது. நான் கற்று வெளியேறும் வரை வேறு போராட்டங்களிலும் இணைந்தே அனைவரும் பயணித்தோம். இது முக்கியமான ஒரு கூறு. செயற்களம் புகுவோர் இன எல்லைகளைக் கடந்து உண்டாக்க வேண்டிய உரையாடல் இளம் தலைமுறையினுடனானது. வாதப்பிரதிவாதங்கள், பரஸ்பரம் வெறுப்பும் கசப்பும் அனைவரிடமும் உண்டு. அதற்கு இன, மொழி பேதமே கிடையாது.

பின்னர் ஒரு நாள் அனைவரும் சுன்னாகம் பகுதியில் கூடி, உரையாடி குழுக்களாகப் பிரிந்து வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டார்கள், மக்களுடன் கதைத்தார்கள், துயர் கேட்டுக் கண்ணீர் சிந்தினார்கள், பிரச்சினையை அகம் கொண்டார்கள், மக்களுடன் நேரடியான பிணைப்பு உருவாகியது. இது எந்தச் செயற்களம் புகும் இளையவருக்கும் அடிப்படையான பயிற்சி, முகநூலிலும் வெளிநாட்டிலும் இருந்து கொண்டு சமூகப் பிரச்சினைகளை அலசிக் கொடியில் காயப்போடுபவர்களால் ஒருபோதும் களத்தையும் மக்களையும் அறிந்து கொண்டு மனப்பிணைப்பை உண்டாக்கிக் கொள்ள இயலாது. ஆனால் ஒட்டுமொத்த சமூகத்தினதும் முன்னசைவுக்குக் காரணமாகும் நுண்ணுணர்வுள்ள ஒரு செயற்பாட்டாளர் மக்களையும் நிலத்தையும் நேரில் அறிய வேண்டும். அறியாத நிலங்களுக்குப் பயணித்து அறிமுகமில்லாத மனிதர்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டி, அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளும் வாழ்க்கை ஒரு இளைஞருக்கான அடிப்படைத் தேர்ச்சி.

(மூவின இளைஞர்கள் சுன்னாகத்தில்)

நான் புத்தகங்களிலிருந்து எழுந்து வந்தவன். கதைகள் வழியும் வரலாற்றின் வழியும் ஆக்கப்பட்ட மகத்தான மானுடக் கனவுகளின் விழி பெற்றவன். அதிலிருந்து அன்றாட மனிதர்களுக்குப் பயணப்படுவதென்பது மக்களை அவர்களின் குறை நிறைகளோடும் ஏற்ற இறக்கங்களோடும் அணுகும் பண்பை அளித்தன. மக்கள் என்பது தூய திரளல்ல. அதில் அனைவரும் உண்டு, நேர்மையானவர்கள், பொய் சொல்பவர்கள், தன்னலமற்றவர்கள், சுயநலனுக்காகக் கூடுபவர்கள், ஏழைகளின் நியாயம், பணக்காரர்களின் நியாயம், பெண்ணின் அறம், ஆணின் அறம், முதியவரின் கருத்து, நடுத்தர வயதினரின் விருப்பு என்று பலநூறு நுண் இழைகளால் ஊடும் பாவுமாக இழைக்கப்பட்ட மாபெரும் பாய் தான் மக்கள். அதில் உள்ள மைய இழையே செயற்படுபவர். எதனாலும் தீண்டப்படாமலும் அனைத்தினாலும் பின்னப்பட்டதுமான இணைவாக ஒரு செயற்பாட்டாளர் மேலெழ வேண்டும்.

பாடசாலைகள், யாழ் நகரின் தனியார் கல்வி நிலையங்கள், மக்கள் கூடுமிடங்கள் பலவற்றிலும் உண்ணாவிரதம் பற்றிப் பேசினோம், மக்களின் கவனத்தை ஓரளவு திரட்டினோம். எமது கோரிக்கைகளுடன், அவ்வூர் மக்களினதும் பல அமைப்புகள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், யாழ் மருத்துவ பீட மாணவர்கள் என்று பலரும் நீரும் அருந்தாத சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்திலும் பேரணியிலும் நல்லூருக்கு முன் கூடினர்.

(ஆதியும் சதீஷ்குமாரும் நல்லூரின் முன்)

அந்த நாளில் இடம்பெற்ற பேரணியிலும் போராட்டத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் பங்குபற்றினர். இரு நாட்கள் இடம்பெற்ற அவ் உண்ணாவிரதம் வடமாகாண ஆளுநர் எமது கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதென்று சொன்ன உத்தரவாதத்துடன் முடிவுக்கு வந்தது. வடக்கு மாகாண சபை சார்பில் பேச்சு வார்த்தை நடத்தியவர்களின் இழுபறிகள், முன்னுக்குப் பின் முரணான வாதங்கள் அப்போது இளைஞர்களாயிருந்த எங்களைச் சினமேற்றியது. முதல் நாளிரவு போராட்டக் களத்திற்கு வந்திருந்த வடக்குமாகாண சபை முதலமைச்சருடன் நான் பேசும் பொழுதும் சில உணர்வுபூர்வமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுவிட்டது. உதாரணத்திற்கு, அங்கு பிரச்சினையைப் பற்றிய பல்வேறு விதமான விளக்கங்கள் போராட்டத் தரப்பினரால் முன்வைக்கப்பட்டு உரையாடப்பட்டது. ஆபத்தான நச்சுகள் நீரிலில்லை என்பதை முதலமைச்சர் சொன்னது தான், பிரச்சினையைத் தீவிரப்படுத்திய முதன்மைக் காரணி. ஆகவே நான் கேட்டேன், நீரைக் குடிக்கலாமா? இல்லையா? பதில் சொல்லுங்கள் என்று. அதனை நான் சொல்ல முடியாது, ஆய்வுகள் தான் சொல்ல முடியும் என்று. அப்படியென்றால் நச்சு இல்லை என்பதை எந்த அடிப்படையில் வெளிப்படுத்தினீர்கள், அதைப் பற்றிப் பேசியிருக்கவே தேவையில்லையே, மக்கள் நீரைக் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள், அதற்குக் காரணம் அவரது பேச்சுத் தான். அதேநேரம் பெரும்பாலனவற்றுக்கு முதலமைச்சர், தெரியாது, நான் இனித் தான் பார்க்க வேண்டும் என்பதாகப் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஆகவே நான் மக்களின் பிரச்சினைகளை அறியாத நீங்கள் எப்படி முதலமைச்சராக இருக்கலாம் என்ற கேள்வியைக் கேட்டேன். கோபித்துக் கொண்டு சென்று விட்டார் அம்முதியவர். பின்னரும் பேசினோம், பலனில்லை.

(வடக்குமாகாண முதலமைச்சர் வந்த பொழுது)

ஆளுநர் அடுத்த நாள் மதியத்திற்குப் பின் வந்திருந்தார். அவர் எமது அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்பதாகச் சொன்னார். எழுத்துமூல வாக்குறுதி கேட்டோம். இத்தனை ஊடகங்களுக்கு முன் சொல்கிறேன். இதையே எனது உறுதியாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று. அந்த வயதுக்கு அது நியாயமாகப்பட்டது. ஊடகம் உறுதியானது, அதுவொரு சாட்சி என்று நம்பியிருந்த காலகட்டமது.

இரண்டாவது நாளே, வடக்கு மாகாண முதலமைச்சரை அவமதித்த போராட்டக்காரர்கள் என்ற பட்டம் எங்களுக்கு வழங்கப்பட்டது. போராட்டம் முடிந்த கையோடு, சிங்கள அரசின் ஏஜெண்டான ஆளுநரின் வாக்குறுதியை நம்பி போராட்டம் முடிக்கப்பட்டது என்று விமர்சிக்கப்பட்டோம், இவை கூடப் பரவாயில்லை, போராட்டத்திற்கு அடுத்த நாள் ஆதியின் அம்மாவின் பிறந்த நாளுக்குச் சென்றிருந்தோம், அந்தப் படத்தினை கொசிப் ஊடகங்கள் வெளியிட்டு, ஒரு அம்மணியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காகப் போராட்டம் முடித்து வைக்கப்பட்டது என்றும் சமூக ஊடகங்களாலும் இணைய ஊடகங்களாலும் வசைபாடப்பட்டோம்.

செயற்களம் புகுவோர் அவதானிக்க வேண்டிய மூன்று அம்சங்கள் இந்தச் சிக்கலில் உள்ளது.

தமிழ் அரசியல் தலைமைகளைக் கையாளுதல் அல்லது பணிய வேண்டியதன் அரசியல், ஊடக வெளி பற்றிய அறிதல்

சிங்கள அரசின் உத்தியோகத்தர்கள், அரசியல்வாதிகளினுடன் ஒடுக்கப்பட்ட தமிழ்த்தரப்பின் பிரச்சினை ஒன்றை முன்வைக்கும் போது அவர்களின் அணுகுமுறைகளை அறிதல்.

வசைகளை எதிர் கொள்ளுதல், சமூக, இணைய ஊடகத் தாக்குதல்களினைக் கையாளும் அறிதல்.

(மூவின இளைஞர்கள் பயணம் தொடர்பான சிறு காணொலி)
  • தமிழ் அரசியல் தலைமைகளைக் கையாளுதல் அல்லது பணிய வேண்டியதன் அரசியல், ஊடக வெளி பற்றிய அறிதல்

சுயமரியாதையுள்ள ஒவ்வொரு குடிமக்களினதும் பிரதிநிதியாகிய அரசியல்வாதி ஒருவரை விமர்சிப்பதும் கேள்வி கேட்பதும் செயற்களத்திலிருப்பவர்களின் அடிப்படை உரிமை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அரசியல்வாதி தேர்தல் மூலமான சமூகப் பிரதிநிதி என்பது போலவே, செயற்பாட்டாளரோ அல்லது பொதுமக்களில் ஒருவரோ அனைவரும் சமூகப் பிரதிநிதிகளே, அனைவரும் ஜனநாயகபூர்வமான உரையாடலை மேற்கொள்ளும் வெளியிருக்க வேண்டும். அணுகுமுறை தொடர்பில் முதலமைச்சரின் முதல் கூற்றிலிருந்த அசட்டையான பேச்சே அங்கிருந்த இளைஞர்களைக் கோபமூட்டியது. என்ன தம்பியவை, காலமையில இருந்து தண்ணியும் குடிக்காமல் இருக்கிறியளாம் என்று தொடங்கிய பேச்சு வார்த்தை, அங்கிருந்த இளைஞர்களால் சீண்டலாகவே புரிந்து கொள்ளப்பட்டது. அவர் மூத்தவர், கனிந்து, இளையவர்களின் கோபங்களுடன் சேர்த்தே பொறுமையாக உரையாடியிருக்க வேண்டியவர்.

ஆனால் நமது பெரும்பான்மைப் புத்தி எப்படிச் செயற்பட்டது, அவர் மூத்தவர், இப்பிடியா பெரியாக்களோட கதைக்கிறது என்றார்கள். மக்களின் பிரச்சினைகளை அறியாமல் மக்களை ஆள என்ன தகுதி இருக்கிறது என்பதெல்லாம் என்ன வகையான அவமதிப்பென்று இன்றுவரை தெரியவில்லை. அதுவொரு நியாயமான கேள்வியென்றே இப்போதும் தோன்றுகிறது.

ஆனால் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் வேட்டிமடிப்புக் குலைய விரும்பாதவர்கள், கோர்ட் ஷூட் அணிபவர்கள், அவர்களை நாம் தான் குழந்தைகள் போல் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது கூடப் பரவாயில்லை. நம் சமூகமும் அவ்வாறு தான் எதிர்பார்க்கும் என்ற அவலநிலையை ஒவ்வொரு இளைஞரும் மனதில் கொள்ள வேண்டும். இந்தக் கிளார்க் மனநிலை என்றாவது ஒழிய வேண்டும்.

பெரும்பான்மை தமிழ் அரசியல்வாதிகளின் ஏக நண்பர்கள் மக்களோ கட்சி உறுப்பினர்களோ கூட இல்லை. பெரும்பாலான ஊடகவியலாளர்கள் தான் உற்ற நண்பர்கள். பார்ப்பதற்கு எல்லாம் சுயாதீனம் என்பது போல் தோன்றினாலும் பழக்கவழக்கத்தில் குடும்ப உறுப்பினரளவுக்கு நெருக்கமான பலரும் இருக்கிறார்கள். ஆகவே தான் இத்தகைய அரசியல் தலைமைகளை நாம் கேள்வி கேட்டு விமர்சிக்கும் பொழுது, பல ஊடகங்கள் ஒன்று மறைப்பையோ அல்லது சேறடிப்பையோ, வசையையோ தூண்டி விடுகிறார்கள். அதன் மூலம் செயற்பாட்டாளர்களை சமூக மனதில் நம்பிக்கையற்றவர்களாக ஆக்குதல், சோர்வுறச் செய்தல் போன்றவற்றை நிகழ்த்த முனைவார்கள். அந்த நேரத்தில் அச்சு ஊடகங்கள் சில விசயங்களை நேர்த்தியாகக் கையாண்டன. தீபம் பத்திரிகையின் இணையத்தில் ஒரு முக்கியமான கட்டுரை வெளியாகியதாக ஞாபகம். அது அப்போதைய காலகட்டத்தில் யுத்தம் முடிவடைந்த பின்னர், இத்தனை காலகட்டத்தில் சுயாதீனமாக எழுந்த முக்கியமான போராட்டம், அதன் தவறுகளும் நிதானமாகவே முன்வைக்கபட வேண்டும் என வலியுறுத்தியது அக்கட்டுரை.

* சிங்கள அரசின் உத்தியோகத்தர்கள், அரசியல்வாதிகளினுடன் ஒடுக்கப்பட்ட தமிழ்த்தரப்பின் பிரச்சினை ஒன்றை முன்வைக்கும் போது அவர்களின் அணுகுமுறைகளை அறிதல்

இந்தச் சிக்கலைப் பொறுத்த வரைக்கும் அரசிடமிருந்து பெற வேண்டியவை தொடர்பிலும் உள்ளூர் அதிகாரங்களுடன் பெற வேண்டியவை தொடர்பிலும் இரண்டு வேறு வேறு வகையான அணுகுமுறை தேவை. நீருக்கான போராட்டம் முடிக்கப்பட்ட முறைக்குப் பின்னர் விதை குழுமம் சார்பில் இலங்கை இன முரண்பாட்டை விளங்கிக் கொள்தல் எனும் உரையாடல் தொடரை நடாத்தியிருந்தோம். அரசின் ஒடுக்குமுறைகள், கையாளுகைகள் பற்றி ஏற்கனெவே இருந்த புரிதலுடன் தமிழ் மக்களுக்கு அரசின் மீது இருக்கும் தீராத அவநம்பிக்கைகளின் வரலாற்று அறிதலையும் அடைந்தோம். வரலாற்றின் திரைச்சீலைகள் எவ்வளவு விலக்கினாலும் முற்றிலும் அறியமுடியாதவை. அவற்றின் பருமட்டான புறச்சித்திரத்தையும் சாராம்சத்தையுமாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

செயற்களம் புகும் ஒரு பண்பாட்டுச் செயற்பாட்டாளர் இதனை நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒடுக்கப்படும் தரப்பின் மன உணர்வுகளைப் புண்படுத்தாமல் எவ்விதம் விமர்சன முறையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று பயில வேண்டும். இது ஒரு முன் நிபந்தனையாக இருக்கலாகாது தான். ஆனால் உணரும் தேவை நிறையவே இருக்கிறது என்பது எனது பட்டறிவு.

(பேரணி)

நமது காலத்தில் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயங்கள், தேவைகள், அதற்கெதிரான அரசின் ஒடுக்குமுறைகள், மக்களின் இழப்புகள் என்பவற்றைத் தொகுத்து உரையாடும் வாய்ப்பு இன்னமும் போதுமான அளவில் எழவில்லை. சிதறலான கவனிப்புகள், எதிர்ப்புகள் என்பதாகவே அனைத்தும் கணிக்கப்படுகிறது. இதிலிருந்து ஒருவர் தனது தரப்பை எடுத்துக் கொள்வது தவறான திசைக்கே அவரைக் கொண்டு சேர்க்கும். நாம் ஒரு அப்பழுக்கற்ற தூய போராட்டத்தை நடாத்தினோம் என்ற மனநிலை ஒரு வகைக் கடும்போக்கென்றால், நடந்தவை அனைத்தும் வீணான இழப்பே அதில் எந்த நியாயங்களும் இல்லையென்ற புலியெதிர்ப்புக் கடும்போக்கில் சேர்ந்து புலிகள் பாசிஸ்ட்டுகள் என்ற நிலைக்குச் செல்வதும் தவறான மனநிலையே. இரண்டிற்கும் அப்பால் உள்ள அரசியல் வெளியையே விதை குழுமம் உண்டாக்கியது. விமர்சனபூர்வமான நியாயங்களின் தரப்பு என்று அதைச் சுருக்கிச் சுட்டலாம்.

தமிழ் மக்களின் அரசியல் வெளிக்குள் நுழையும் ஒரு செயற்பாட்டாளர் ஒடுக்கப்படும் மக்களுக்கான போராடும் குரலாகவும் மருத்துவராகவும் செயற்பட வேண்டும். காயங்களை ஆற்றலாம். ஆனால் கிளறக் கூடாது. காயங்களை ஆற்றுவதென்பது, நிகழ்ந்த அழிவுகளையும் இழப்புகளையும் கொச்சைப்படுத்தாது, ஒவ்வொரு உயிரையும் மதிப்புடன் அணுக வேண்டும் என்பதே. பொது உரிமைகளில் அனைவரும் சமம் என்பதும் வரலாற்றில் எவர் மீதும் நிலையான தீர்ப்பிடல்களை நிகழ்த்தி புறமொதுக்காது பங்களிப்பு மதிப்பிடப்பட்டு மதிக்கப்பட்டு முன்வைக்கப்பட வேண்டும் என்பதற்காக செயல்வாதியொருவர் இவற்றைத் தொகுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எவர் பேச்சையும் முடிவெனக் கொள்ளாது, எல்லோர் அபிப்பிராயங்களையும் பார்வைகளெனக் கொண்டு, வரலாற்றை அறிந்து நிகழ்காலத்தில் தன் உள்ளுணர்வால் முடிவெடுக்க வேண்டும்.

* வசைகளை எதிர் கொள்ளுதல், சமூக, இணைய ஊடகத் தாக்குதல்களினைக் கையாளும் அறிதல்

சமூகத்தின் எந்த நகர்வைச் செய்யும் நபரும் பொதுச் சமூகத்தின் சராசரிகளினால் வசைபாடப்படுவார், அவதூறேற்றப்படுவார் என்பது சமூக அசைவியக்கத்தின் அடிப்படை விதி. இதனை ஒரு செயல்வாதியோ சிந்தனையாளரோ தவிர்க்க முடியாது. அதுவே அவர்கள் சமூக நம்பிக்கைகளுடன் மோதிக்கொள்ளும் போது எழும் ஒலி. ஒரு நிரந்தரமான அம்புப்படுக்கை.

நிலத்தடிநீர்ப் போராட்டத்தின் பின் இரண்டு வகையில் வசைபாடப்பட்டோம். ஒன்று, மூத்த அரசியல்வாதியை மதிக்கவில்லை. இரண்டு, போராட்டத்தை அவசர அவசரமாய் முடித்தது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் போவதற்கு, இரண்டுமே வகைதொகையின்றி சமூக சராசரிகளால் இணையத்தில் பகிரப்பட்ட அவதூறுகளும் வசைகளும். இவை சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் இவற்றையே மீள மீளப் பரப்பி, அதை ஒரு பொது உண்மையென அவதூறாளர்கள் நிறுவுவார்கள். இவற்றின் மூலம் எமது சொற்களின் மீது இரவில் கள்வர்களைப் போல யாரும் அறியாமல் நம்பிக்கையிழப்பை உண்டாக்கினார்கள். இதையே இன்றுவரை பலரும் செய்து வருகிறார்கள்.

இப்போது இருப்பதைப் போலவே அப்போதைய இளைஞர்களான நாம் இவற்றைப் பொருட்படுத்தவேயில்லை. அறிவுபூர்வமாக எழுப்பப்படும் கேள்விகளுக்காக இப்பிரச்சினை தொடர்பில் விமர்சனம் உள்ளவர்களை நேரில் சந்திக்க ஒரு கலந்துரையாடலை ஒழுங்கமைத்தோம். அதில் பதிலளித்தோம். அந்த நேரடியான கூட்டத்திற்கு வந்தவர்கள் முப்பது பேருக்கும் குறைவாகவே இருப்பார்கள். பொதுப்புத்தியில் ஏதாவதொரு கவனிப்பை அடையும் நபரோ அமைப்போ உடனடியாக சராசரிகளிடம் உண்டாக்கும் எதிர்வினை நமைச்சலும் சிறுமையுமே. ஒரு சிந்தனையாளர், எழுத்தாளர், கலைஞர், சமூக செயல்வாதி தனது இருப்பின் மூலம் சராசரிகளை உள்ளூரக் காந்த வைக்கிறார். சராசரிகளின் சமூக மதிப்பை அவர்களுக்கு உணர்த்துகிறார். சராசரிகளது இடத்தைத் தன்னளவிலே சுட்டுகிறார். இதனை சராசரிகளால் தாங்கிக் கொள்ள முடியாது. இணைய மற்றும் சமூக வலைத்தளங்கள் இத்தகைய சராசரிகளின் சமர்க்களங்கள். அங்குள்ள மந்தர்களுடன் இணைந்து வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தன் ஆற்றலால் வாழ்வால் மேலெழும் ஒவ்வொருவர் மீதும் தமது தாழ்வுணர்ச்சியைப் பலவகைக் கோமாளித்தனங்களால் எதிர்கொள்வார்கள். மந்த யுத்தத்தின் பிரதான விசையென்பது அறிவு வறட்சியிலிருந்து பிறப்பது. செய்வதற்குக் காரியமுள்ளவர்கள் இந்த யுத்தத்தைப் புறந்தள்ளியே முன் நகர முடியும். அச்செயல் இடங்கையால் செய்யப்பட வேண்டியது என்பதை ஒவ்வொரு இளையவரும் அறிவது முக்கியம்.

செயற்களம் புகுவோருக்கு சமூகத்தில் தமது செயல்களில் தவறு விட, பிழை விட்டுக் கற்றுக்கொள்ள எல்லா உரிமையும் உண்டு. எந்த சமூக நிர்பந்தமும் உங்களைத் தடுத்துவிடக் கூடாது. நீங்கள் வரலாற்றில் சரியான முடிவுகளை மட்டுமே எடுக்க வேண்டும், அரசியல் சரிநிலைகளுடன் மட்டுமே ஒவ்வொரு காலடியையும் வைக்க வேண்டும் என்று வற்புறுத்தும் குரல்களை இடங்கையால் புறந்தள்ளி முன்னேற வேண்டும். நம் காலத்தின் அரசியல் சரிநிலைகளென்பவை சமூகத்தின் தற்கால மடமையில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள். எதிர்காலத்திற்கெனச் செயலாற்றும் ஒருவர் அவற்றை மிதித்து வெடிக்க வைத்து நமத்துப்போனவற்றை தனியே எடுத்து இவை இனிப் பயனற்றவை என்று சொல்லியே ஆக வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில் யுத்தத்திற்குப் பின்னர் உருவான இளம் தலைமுறையினரில் என்னளவுக்கு அவதூறு பரப்பப்படும் வசைபாடப்படும் வெறுக்கப்படும் இன்னொரு செயற்பாட்டாளரோ எழுத்தாளரோ மொத்த ஈழத்தமிழ் சமூகத்திலும் கிடையாது. அரசியல்வாதிகளுக்கு நிகராக வசையும் அவதூறும் சுமத்தப்பட்டிருக்கிறேன். இளம் தலைமுறையினர் வசைகளை இடங் கையால் புறந்தள்ள வேண்டும் என்று நான் சொல்வதற்கான எனக்கான முதன்மைத் தகுதி அதுதான். இன்றும் குன்றாத ஊக்கமும் என் எழுத்தின் வழி மகத்தான கனவுகளை ஆக்கும் ஆற்றலையும் இவை எதனாலும் நான் இழந்து விடவில்லை என்பது என் இரண்டாவது தகுதி. ஒவ்வொரு முறையும் மீண்டெழுவதல்ல நான் பரிந்துரைப்பது, நீங்கள் மூழ்குவதேயில்லை என்பதை உணருங்கள். எத்தனை அவதூறிலிருந்தும் உங்கள் நெஞ்சறிந்த உண்மை உங்களைக் காக்கும். அதுவே உங்கள் தன்னறம். அதுவே உங்கள் மெய்ச்சுடர். நீங்கள் அஞ்ச வேண்டியது அதற்கு மட்டுமே.

*

இறுதியில் நிலத்தடி நீருக்கான அனைத்துப் போராட்டங்களினதும் விளைவென்பதைச் சுருக்கமாக கணித்தால், ஒரு நாடளாவிய கவனயீர்ப்பை அவை உண்டாக்கின, எமது போராட்டத்தின் வழி ஆளுநர் வாக்களித்தபடி ஒரு கூட்டத்தை ஒருங்கிணைத்தார், எல்லாவற்றையும் விட முக்கியமாக நாங்கள் போராட்டத்தில் கேட்டபோது சொல்ல மறுக்கப்பட்ட குடிப்பதற்கு உகந்ததா இல்லையா என்ற கேள்விக்கான பதில், சிலகாலத்தின் பின் உகந்ததில்லை என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் கலாநிதி ரவீந்திர காரியவசத்தால் தொடரப்பட்ட வழக்கு தொடர்ந்து இடம்பெற்று 2019 அளவில் இலங்கையில் ஒரு சூழலியல் கேட்டுக்கு அளிக்கப்பட்ட உச்சபட்ச தண்டமான இரண்டு கோடி ரூபாய்கள், ஐநூறு குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்க நீதிமன்றத்தால் தீர்ப்பிடப்பட்டது.

(உண்ணாவிரதம் முதல்நாளிரவு)

ஆகவே இளையோரே, கடந்த காலமும் நிகழ்காலமும் நாம் செயல்புரியும் ஆற்றலால் நிரம்பியிருக்கும் வெளி மட்டுமே. எதிர்காலம் மட்டுமே செயல்களை மதிப்பிடப்போகும் அளவு கோல். முழுமுற்றாக நம் வாழ்வளித்து ஆற்றும் பணியெதுவும் வீணாகி விடாது. அச்செயல்கள் மானுடப் பெருக்கிற் சேரும் சிறுதுளியென்ற வரலாற்றுப் பணிவும் நிகழ்கால அசடர்கள் முன் அப்பெருக்கின் பேராற்றலென எழும் நிமிர்வும் செயற்களம் ஏகுவோருக்கு வாய்ப்பதாக.

செயற்களம் புகுவோருக்கு 01: https://kirishanth.com/archives/992/

TAGS
Share This