மறைந்து மறைந்து தெரியும்

மறைந்து மறைந்து தெரியும்

காதலினால் ஊதப்படும் வண்ணச் சவர்க்காரக் குமிழியில் ஒளிரும் அபூர்வமான நிறச் சிதறல்கள் எண்ணற்றவை. காதலின் கணங்களும் அத்தகைய விரிவுகள் கொண்டவை. இன்றைய காலகட்டத்தில் காதலின் பெரும்போக்கான ஒற்றை உரையாடல்கள் உடைப்பெடுத்து அதீத மிகை பாவங்கள் கைவிடப்பட்டு, அதனை அதுவாகவும், அதன் இருட்டையும் ஒளியையும் நிறங்களின் கரைசலெனவும் கலைகள் ஆக்கக்கூடிய காலம். இக்காலத்தின் கவிதைகளில் வெளிப்படும் நுண்மைகள் இதற்கு முன்னர் இத்தனை எளிய வடிவத்தில் நுண்மையாக்கம் பெற்றதில்லை.

போகன் சங்கரின் சில காதல் கவிதைகளில் வெளிப்படும் அந்தரித்தும் சோர்வுற்றும் தவிப்புற்றும் தாகமுற்றும் பிறழ்வுற்றும் நிறைவுற்றும் முகிழும் இக்காதல்கள் அழகின் வானவில்லென ஓராயிரம் கோடுகளில் பல்லாயிரம் நிறங்கள் குழையும் ஓவியங்களெனக் காதலை விரித்து விரித்துப் பார்க்கின்றன. அவை மறைந்து மறைந்து தெரியும் வானவில்களாகவும் தெரிந்து தெரிந்து மறையும் வானவில்களாவும் இம்மழையில் நிகழ்கின்றன.

(போகன் சங்கர்)

*

அதிகம் கட்டுப்படுத்திக் கொள்கிறேனோ
அதிகம் வெளிக்காட்டி விடுகிறேனோ
தெரியவில்லை.
காதலில்
இரண்டும் ஒன்று போலவே உள்ளது.

*

மாடி சன்னல் கண்ணாடியில்
நான் கடக்கும் போதெல்லாம்
மறைந்து மறைந்து தெரியும்
தெரிந்து தெரிந்து மறையும்
ஒரு குழந்தையின் முகம் போல்
இருக்கிறது
உன் காதல்.

*

நானொரு மாலை அவளுடன்
அவள் அருகில்
நீர் மேல் நடக்கும்
ஒரு யானை போல்
அசைந்து சென்ற
பேருரு கொண்ட
ஒரு கப்பலைப் பார்த்தபடி
கடற்கரையில் அமர்ந்திருந்தேன்.
நான் அது போல் மாலைகள்
ஏராளம் என் பையில் உள்ளதாக
ஏனோ ஒரு அலட்சியத்துடன் அப்போது இருந்தேன்.
உண்மையில் என் கையில்
அந்த அந்தி மட்டுமே இருந்தது.
சூரியனின் கடைசித் துளி போல்
அவள் கொலுசு மினுங்கிய அந்த அந்தி.
நான் முன்னறிந்தவனாய் இருந்திருந்தால்
மறு மாலைக்கென்று ஒத்தி வைத்திருந்த
பல வார்த்தைகளை அன்று சொல்லியிருப்பேன்.
இன்னும் சற்று துணிவுகொண்டு
ஈர மணலுக்குள் அவள் கைதேடி
என் கையை அனுப்பியிருப்பேன்.
மணலை உதறிவிட்டு நாங்கள் எழுந்தபோது
நானொரு முத்தமிட்டிருக்கவும் கூடும்.
நாங்கள் இப்போது
வெவ்வேறு கரைகளில் அமர்ந்திருக்கிறோம்.
கார்களில் எதிரெதிர் திசைகளில் விரைகிறோம்.
புதிய மனிதர்கள் எங்கள் கவனங்களைச் சூழ்கிறார்கள்.
அவர்கள் நிகழ்த்தும்
தற்காலிக வாணவேடிக்கைகள் முடிந்ததும்
நாங்கள் திரும்புகிறோம்
திரும்பி வராத அந்த பொன்னந்தி மாலையின்
மவுனங்களுக்கு.

*

பெட்ரோல் வங்கியில்
வேலை பார்த்த பெண்ணை
இன்று டீக்கடையில் பார்த்தேன்.
நாள் முழுவதும் நின்றுகொண்டிருப்பதின் சிரமம் பற்றி
அவள் ஒருமுறை
என்னிடம் சொல்லியிருக்கிறாள்.
அதனால் கால்களில்
மெல்ல விம்மி வீங்கும்
ரத்தக்குழாய்கள் கொடுக்கும்
வலிக்கு மருத்துவம் கேட்டிருக்கிறாள்.
வேலையை இப்போது விட்டுவிட்டதாகச் சொன்னாள்.
கால் வலி காரணமல்ல
காதல் என்றும் அவளே சொன்னாள்.
ஏற்கனவே கல்யாணம் ஆன
உடன் வேலை பார்த்த ஒருவருடன்
காதல் ஏற்பட்டுப் பிரச்சினையாகிவிட்டது
என்றாள்.
நான் ‘அவனுக்குக் கல்யாணம் ஆகியிருந்தது
உனக்குத் தெரியாதா?’ என்று கேட்டேன்.
டீக் கோப்பையை உருட்டிக்கொண்டே அவள் ‘தெரியும்’
என்றாள்.
‘ஆனால் அங்கே
உட்காரச் சொல்லி
என்னை வற்புறுத்திக் கொண்டிருந்தவன்
அவன் மட்டும்தான்’.

*

நீதான் சொன்னாய்.
‘நான் உன்னை விரும்புகிறேனா
இல்லையா
நாமிருவரும் எப்போதும் இன்பமாக இருப்போமா
விரும்பினாலும்
நம்மிடையே எவ்வளவு காலம்
இந்த விருப்பம் நீடிக்கும்
என்றெல்லாம் எனக்குத் தெரியாது’
என்றாய் நீ.
‘எது குறித்தும் நிச்சயமில்லை எனக்கு.
ஆனாலும் இந்தப் பாதையில்
கொஞ்ச தூரம் நடந்து பார்ப்போமே?
இப்போதைக்கு
இந்தப் பாதையில்
இளம்புற்களும்
சிறிய மலர்களும் தென்படுகின்றன’.

TAGS
Share This