கடவுள் இருக்கான் குமாரு

கடவுள் இருக்கான் குமாரு

அன்று சிவராத்திரி. அம்மாவை காலையில் கோவிலில் இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளின் மீது சாய்ந்த வாறு போனை எடுத்து வைபர் அரட்டைகளை கிண்டத் தொடங்கினேன். தோழியொருத்தி வீடியோ லிங் ஒன்றை அனுப்பியிருந்தாள். அது ஒரு தமிழ் குறும்படத்தின் லிங்
“கடவுள் இருக்கான் குமாரு” என்று அதன் பெயர் குறிப்பிட்டு இருந்தது. எனக்கு உடனே விடயம் புரிந்தது நேற்றிரவு “கடவுள் இல்லையென்று ”நான் அவளுடன் நடத்திய விவாதத்திற்கு வலுச்சேர்க்க அவள் தன்பங்கிற்கு அனுப்பிய குறும்படம் அது. நான் ஏற்கனவே அந்த படத்தை பார்த்திருந்தேன். அதனால் அவளிற்கு ஒரு ஸ்மைலியை அனுப்பி விட்டு நிமிர திருநீற்றை கொண்ட அம்மாவின் கை என்நெற்றியை நோக்கி நீண்டது. சட்டென அம்மாவின் கையை பற்றினேன். அம்மா அதை எதிர்பார்த்தவளாக என் கையை அநயாசமாக தட்டி விட்டு நெற்றியை கீறி விட்டாள். (இப்படித்தான் அடிக்கடி என் நாத்திகம் அம்மாவிடம் மிகச்சாதரணமாய் தோற்று போகும் )
நான் மோட்டார் சைக்கிளை நகர்த்தினேன்.

எனக்கொரு பழக்கம் உண்டு காலையில் ஏதாவது ஒரு பாடலோ பிரத்தியேக வார்த்தையோ என் காதில் வீழ்ந்தால் அன்று முழுவதும் அது மீண்டும் மீண்டும் மனதிலும் பேச்சிலும் வருவதுண்டு. அன்று “கடவுள் இருக்கான் குமாரு என்ற வார்த்தை சிக்கி கொண்டது. மோட்டார் சைக்கிள் நகர தொடங்கியது முதல் அவ்வார்தைகள் எழுந்து வந்தன “ஏன் வேகமா போற நீ லைசன்ஸ் எடுக்காமல் இருக்கிறது தான் நல்லம் போல கிடக்கு” அம்மா இரைந்தாள்.

அம்மா சுன்னாகம் போகோணும் கிரியும் ஆதியும் பாத்துக்கொண்டு நிப்பாங்கள் பஸ்க்கு நேரமாச்சு
”ஏன் சுன்னாகம்?”
”அங்க தண்ணி எல்லாம் ஓயில் கலந்த இடத்தை பாக்க போக போறம்” இன்னும் முறுக்கினேன். வார்த்தைகள் மீண்டும் “கடவுள் இருக்கான் குமாரு”.

*

தாவடி சந்தியில் மூவரும் பஸ் எடுத்தோம். ஆதியின் நண்பன் ஒருவன் மல்லாகம் வரச்சொல்லி இருந்தான். அவனைத் துணைக்கு அழைத்து கொண்டு ஓயிலால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்க்க போவதாய் திட்டம். பஸ்சில் சுற்றியிருப்பவர்களைப் பற்றி கவனிக்காமல் உரத்த குரலில் மூவரும் அந்த ஓயில் பிரச்சினை பற்றி விவாதித்தபடி வந்தோம்
அப்போது எங்கள் அருகில் இருந்த ஆசனம் ஒன்று காலியாக கிரி அதில் அமர்ந்து கொண்டான். அவன் பக்கத்தில் இருந்த பெண்மணி ஒருத்தி தான் ஒரு லெக்சர் என அறிமுகப்படுத்தி கொண்டு கிரியுடன் சுன்னாக பிரச்சினை தொடர்பாக கதைக்கத்தொடங்கினார். நானும் ஆதியும் பின்னால் சீற் கிடைக்க நழுவி நகர்ந்தோம்.

மல்லாகத்தில் இறங்கும் போது
“என்னவாம் மச்சான் அன்ரி சொல்லுறா?”

“கீரி மலைக்குப் போறாவம்”

“தண்ணி பிரச்சினைக்கு என்ன சொன்னா?”

”தண்ணி பிரச்சினைக்கும் தேசியம் தான் தீர்வாம்”

“கீரிமலை சிவனிட்ட தேசியம் வாங்க போறா போல” சிரித்தே விட்டோம்.

சரி, ஆதி உன்ர நண்பனைக் கூப்பிடு.
ஆதியின் தோழன் தன் வீட்டு கிணற்றை காட்டினான். நாங்கள் மேலும் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்க்க வேண்டும் என்றோம். தன்னுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் சைக்கிள் ஒன்றையும் தந்தான். நானும் ஆதியும் மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டோம்
எங்களிடம் லைசன்ஸ் இல்லை. ஆனால் உள்ளே எதுவும் நடக்காது என்ற உறுதியான உள்ளுணார்வு இருந்தது, கிரிசாந் சைக்கிளில் முன்னால் கிளம்பி விட்டான்.
ஆதியின் நண்பன் கண்களில் பொலீஸ் பிடித்தால் என்ன செய்வது என்ற பயம் தெரிந்தது, நான் அவனிடம் விளையாட்டாய்
கடவுள் இருக்கான் குமாரு என்றேன்.
ஏழாலை வீதியில் நுழைந்து இறங்க பொலீஸ் மோட்டார் சைக்கிளொன்று சலனமின்றி கடந்து சென்றது.

அண்ணை இவடத்த கிணத்துக்கு எண்ணையோ? என்று நானும் ஆதியும் ஒரு இளைஞர் கூட்டத்துடன் அளவளாவலை ஆரம்பித்தோம். கிரிசாந் கையில் அம்பு வில்லுடன் சென்ற சின்ன பையன்கள் சிலரைத் தொடர்ந்து சென்றுவிட்டான்.
ஓம் தம்பி எல்லாக் கிணறும் எண்ணை தான் எனத்தொடங்கினர் அந்த வாலிபர்கள். வெளியில் இருந்து கொண்டுவரும் தண்ணீர் போதுமானதாக இல்லை எனறனர். குளிப்பது, பாத்திரங்கள் கழுவுவதெல்லாம் ஓயில் கலந்த தண்ணீரில் தான் என்றனர்.

அப்போது ஒரு வாலிபர்
“தம்பி தீவு பக்கம் போல இங்க ஆகிப்போச்சு. தீவில இருக்கிற சனம் எங்களை கிணறு காவியள் எண்டு நக்கல் அடிக்கிறதுகள். அப்ப பெருமையா இருக்கும் எங்கட தண்ணிய நினைச்சு. ஆனா இண்டைக்கு எங்கட கிணறுகள் நாசமாய் போச்சு” அவர்களுடன் நிற்கும் போது கிரிசாந் வந்து சேர்ந்தான்.

அவனுடன் புறப்பட்டோம் கிரிசாந் பின்தொடர்ந்த அம்பு வில் ஏந்திய சிறுவர்களைக் கண்டேன், அவர்கள் சிவராத்திரிக்கு கண்ணப்ப நாயனார் நாடகம் கோவிலில் நடிக்க போவதாய் சொன்னார்கள். அதற்காகவே அம்புகளுடன் அவர்கள் காணப்பட்டனர்.
அப்போது கோயில் மணியோசை கேட்டது. ஆதி விளையாட்டாய் சொன்னான்
அப்ப இண்டைக்கு சிவனுக்கும் ஓயில் தண்ணிலையோ அபிசேகம்?
“கடவுள் இருக்கான் கு……”(இடையில் நிறுத்திக்கொண்டேன்)

அவர்கள் பட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் பட்டத்தை பக்கத்து தெரு gang ஒண்டு கிழிச்சிப் போட்டார்கள் என்று பிரச்சினை போய்க் கொண்டிருந்தது. நாங்கள் ஒவ்வொரு வீட்டு படலையையும் திறந்து திறந்து அந்த கிராமத்தின் உண்மையான நிலத்தினுள் போயிருந்தோம். அந்த பட்டம் விட்ட சிறுவர் சிறுமியர் எங்களை இன்னும் உள்ளே அழைத்து போனார்கள் அவர்களில் சிலருக்கு கைகளில், மற்றும் உடலில் சிரங்கு பிடித்தது போல புண்கள். தண்ணீர் நஞ்சாகி அந்தப் பிஞ்சுத் தசைகளை பிய்த்திருந்தது. தொடர்ந்தும் அவர்கள் அந்த நீரைத்தான் பயன்படுத்துவதாய் இயல்பாய் சொன்னார்கள்.

நான் உணர்ச்சி பொங்கி அவர்களுக்கு லெக்சர் எடுத்தேன். அப்பிடிப் பயன்படுத்த வேண்டாம் என்று. அந்த குழந்தைகள் எங்களை தங்கள் ஊரின் உள்ளே அழைத்து சென்றனர், போகும் போது கிரிசாந்
“டேய் உணர்ச்சி வசப்படுற ..உனக்கு அதுதான் பிரச்சினை நாங்கள் ஒண்டும் இலக்கிய கூட்டத்துக்கோ பிரச்சாரத்துக்கோ வரேல்ல. இவங்கள் எல்லாம் சாதராணமக்கள் முதல்ல அவர்கள் சொல்லுறதை கேள். பிறகு சாதரணமாய் சொல்லு, விளங்கப்படுத்து. உணர்ச்சி வசப்படாதை”. எனக்கு கிரிசாந் ஏற்கனவே நிறையத்தடவை இதை சொல்லி இருக்கிறான். ஆனால் அந்த புண்களை பார்த்ததும் நான் மீண்டும் முருங்கை மரம் ஏறி விட்டேன்.

இந்தப் பயணக்குறிப்பில் நான் உங்களுக்கு கண்டிப்பாய் சொல்ல வேண்டியது மீனாட்சியை பற்றி. அவள் ஒரு கிளி. கடைசியாய் அந்த சிறுவர்கள் எங்களை அழைத்து போன வீட்டில் வளரும் கிளி அவள், ஒரு சிறுமி மீனாட்சியை என் தோள்களில் ஏற்றி விளையாடினாள். அப்போது தான் அவள் இறக்கைகளை கவனித்தேன். பாதி இறக்கைகளை வெட்டி இருந்தார்கள். அப்போது மீனாட்சி தாவிச்சென்று எங்களுடன் வந்த சிறுவனின் கைகளில் இருந்தாள், அவன் கைகளில் புண்கள் இருந்தன. நான் மீனாட்சியின் வெட்டப்பட்ட இறக்கைகளையும் அவன் புண்படர்ந்த கண்களையும் பார்த்தேன். இரண்டும் அருகருகில் இருந்தன.

நாங்கள் புறப்படுவோம் என்று எங்கள் புதிய தோழர்களிடம் இருந்து விடைபெற்று புறப்பட்டோம். கிரிசாந் சைக்கிளை எடுத்து கொண்டான் நானும் ஆதியும் மோட்டார்சைக்கிள். வந்து கொண்டிருக்கும் போது போன் சிணுங்கியது. ஆதியின் நண்பன்.
“டேய் மல்லாகம் சந்தியில் பொலீஸ் நிக்குது” நான் பரபரத்தேன்
அதற்குள் ஆதி மல்லாகம் சந்தியில் மோட்டார் சைக்கிளை ஏற்றி விட்டான். முகத்தில் இருவரும் சற்றும் பதட்டம் காட்டவில்லை. பொலீசை கடந்தோம் நான் ”அப்பாடா” என்று ஆசுவாசமடைய ஆதி சொன்னான் டேய் ஒண்டு சொல்ல மறந்திட்டாய்.
என்னடா?

“கடவுள் இருக்கான் குமாரு”

(பெப்பிரவரி 21, 2015)

யதார்த்தன்

TAGS
Share This