அந்தந்த நாள்களின் நற்குணங்களால்…

அந்தந்த நாள்களின் நற்குணங்களால்…

கவிதைக்கு மிருதுவான தோல் வளர்ந்து மென்மயிர்கள் முளைத்த குட்டிப் பூனையாய் ஒரு குழந்தையின் கையிலிருப்பதைப் போல் தர்மினியிடம் கவிதை மொழி பயின்று வருகிறது. வாலை மெல்ல நேராக நிமிர்த்தியபடி கொட்டும் மழைக்குள்ளால் ஓடி, ஈரத்தை உதறிக்கொண்டே வெதுவெதுப்பைத் தேடிச்செல்லும் பூனையென மென்பஞ்சுத் தோலாடையின் மீது சாய்ந்து கொண்டே கணகணப்பூட்டிக் கொள்கிறது.

கீழுள்ள இரண்டு கவிதைகளிலும் பயிலப்படும் மொழி தமிழ்க்கவிதைகளில் முக்கியமான ஒரு அடைவு. ஒரு குட்டிப் பூனையின் நேர்த்தி என்று அதைச் சுட்டலாம். அதன் கூர்மையான நகங்கள், இளம் பற்கள், துடிதுடிப்பான இளங்குரல், தாவி உயிர்க்கும் கண்கள் எல்லாவற்றிலும் உள்ள குட்டியான தன்மை இந்தக் கவிதைகளை எழுதும் மனதுக்கு அந்த நேரத்தில் வாய்த்திருக்கிறது.

எனக்குள் உள்ள காதலனைச் சீண்டியபடியிருக்கும் மொழிப்பூனைகளென இக்குட்டிகள் இரண்டும் மனதில் விளையாடியபடி இருக்கின்றன. அந்தந்த நாள்களின் நற்குணங்களால் அந்தப் பூனைக்குட்டிகள் சட்டையில் நகங்களால் பற்றிப் பிடித்தபடி ஒரு தாவலில் கவிதையடைகின்றன.

(தர்மினி)

*

அந்தந்த நாள்களின் நற்குணங்களால்…

நான் மணந்து திரியும் பூனை.
நீ நீரில் துடித்துப் பாயும் மீன்.

அலைகளை எத்தி எத்தி விளையாடும்
குட்டிப் பையனான குழப்படி மீன்.

என் பதின்பருவத்தின் நீண்ட நூலில்
படபடக்கிறேன்.
காலக் கடப்பில்
கற்பனைகளின் ஓவியங்கள் நிறங்கள்
பூசி நிற்கின்றன.

ஊறிய பேரீச்சையின் உதடுகளால்
முத்திய வாசனை
ஆடைகளிலிருந்து நீங்கவில்லை.

ஞாபகத் தெப்பத்தைத் தூக்கியெறியும்
புயல்.
சுருக்கமாக எழுதினால் நான் வழமை
போலில்லை.
விட்ட இடத்திலிருந்து
பேசிக்கொண்டிருக்கிறேன் நம்மோடு.

நினைவுகளின் வெதுவெதுப்பில்
இரகசியங்களைப் பொதிந்த
பெட்டகத்துள் சுடரெழுந்தலைகிறது.

என்னை நானே தள்ளி நின்று
பார்க்கிறேன்
பெரியவளின் பாவனையில்
சலித்துப்போனேன்.
மலைகளும் கடல்களும் நெருக்கியபோது
துள்ளிப் பாய்ந்து காற்றேகி…
மெதுமெதுவெனும் மென்காலமது.

என் பாதங்களைச் சுமந்த மடியில்
நீர்ப்பூக்களின் குளிர்மை அலையடித்தது.

கூட நகரும் நிலவின் தோற்றப்பாடாய்
அவ்வொளி சொரியும் இப்பொழுதுகள்.

*

நிமித்தம்

நீயும் நானும் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளாமல் அந்த நகரில் நடமாடினோம்.

நாம் பயணித்த பாதைகளில்
பலமுறைகள் விலகிச் சென்றிருந்தோம்.

ஒரே வானின் கீழ்
ஒரே நிலவொளியில்
சூரியனின் வெப்பத்தில்
வாழ்ந்துகொண்டிருந்தோம்.

நாம் கதைகளில் பறந்தும்
பாடல்களில் மிதந்தும்
காதல்களோடும் காயங்களோடும் திரிந்துகொண்டிருந்தோம்.

நம் வேலையில்லாத காலத்தை விரட்டிக் கொண்டிருந்தோம்.
வீடுகளில் அந்தரத்தில் நின்றிருந்தோம்.

ஆடைகளை ஒரே இரசனையில் உடுத்திப் பழகியிருந்தோம்.

தலையையும் முக வடிவையும் கூட
நம்மைத் தெரிந்து கொண்டதைப்போல
ஒருவருக்கொருவர் அழகுபடுத்தினோம்.

பிறகு…
ஆண்டுகளாய் மினுங்கும் நட்சத்திரங்களின் நிமித்தங்களில்,
அளக்க முடியாத ஆகாயவெளியின் துணையில்,
கடக்க முடிந்த காலக் கடலின் பாதையில்
நின்று கொண்டிருந்தேன்.
எதிரே நீ வந்து கொண்டிருந்தாய்.
அங்கே விலகிச் செல்ல வழியேயில்லை.

TAGS
Share This