சூரநடம்

சூரநடம்

சின்ன வயதில் சூரன் போர் பார்க்கப் போவது மகிழ்ச்சியான ஒன்று, சூரர்கள் கடவுளைப் போல அல்ல, வேடிக்கையானவர்கள், கோபமூட்டுபவர்கள், கொல்லப்படப் போவபர்கள் என்று பலவிதக் கற்பனைகளைக் கொண்டிருந்தேன்.

சூரன்போரில் பயன்படுத்தப்படும் முகமூடிகள், ஆடைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை மிக ஆர்வத்துடன் பார்ப்பேன். நல்லூரில் பரிவாரம் சூழ வரும் படைகள் மோதிக்கொண்டு மாங்காய்கள் பொறுக்கிக் கொண்டு சேவலும் மயிலும் வெளிப்படும் காட்சியில் உடம்பு சிலிர்க்க வைக்கும் நாடகம் திரும்பவும் அதே உக்கிரத்துடன் ஒவ்வொருவருடமும் நிகழ்த்தப்படும். அதில் சூரன் படையினரின் வேசங்களும் அவர்கள் முன்வந்து பக்தர்களைப் பயமுறுத்துவதும் சுவாரசியமானது. ஒரு விளையாட்டுப் போல பயங் காட்டுவது கேளிக்கையாக இருக்கும்.

சபரிநாதனின் சூரநடம் என்ற இந்தக் கவிதை பால்யத்தின் பாவனைகளையும் நினைவுகளையும் உருக்கொள்ள வைத்தது. கவிதைக்குள் பாரதியின் தத்தகிட தத்தகிட தித்தோம் என்ற தாளம் கேட்டபடியிருக்கிறது.

*

சூரநடம்

ஆடி வருபவர் சூரர்
கொட்டும் குதியாளமும்
கும்மாளச் சிறுவரும் சூழ
சுற்றிச் சுழன்று ஆடி வருபவர் சூரர்.

நாங்கள் சூரரை விரும்பினோம்
சூரரோடு சூரராய்க் கூடித் திரிந்தோம்
வானவெடியும் சீழ்க்கையொலியும் மூள
வானத்துக்கும் பூமிக்கும் கிடந்து குதித்தோம்.

ஊர் தூற்றியது எங்களை
பக்தரும் பண்டிதரும் கழுவி ஊற்றினர்
அப்பா முறைத்தார் அம்மா அழுதார்
நாங்கள் சூரரைப் பின்பற்றும் தோழராயினோம்.

சங்காரம் எனும் சலிப்பூட்டும் சம்பவம் முடிவுற்றதும்
பணிக்குத் திரும்பினர் ஆணும் பெண்ணும். சூரராய் மாறிவிட்ட
நாங்கள் தேர்நிலைக்குப் புறத்தே கண்டோம்
அநாதையாய்ச் சாய்ந்து நின்ற பிரம்மாண்ட சூரப்பதுமைகளை.

ஆ… கரிச்சூரம்
எலே… பெரியசூரம்
இங்கே பச்சைமுகச்சூரன்
இதோ, சிங்கமுகச்சூரன்
தயங்கி நாங்கள் நுழைந்தோம் குனிந்து ஒரு
பதுமைக்குள். உள்ளே யாருமில்லை,
கிழிசலில் புகுந்திருந்த ஒளி தீரத்தில்
ஒழிவற்று சுழன்றாடிய மண்டலங்கள் அன்றி
அங்கு யாருமில்லை.

தப்பிவிட்டனர் சூரர்
சாமியும் ஐயரும் கோயில் மீண்டனர்
காக்கிச்சட்டைகள் பணிக்கு திரும்பினர்
கைபோய் கால்போய் கீறல்கள் சூடிநின்ற சூரர் முகத்திலோ
கரியால் தீட்டிய மீசையோரப் புன்னகை.

நாங்கள் சூரரை விரும்பினோம்
அம்மாயரின் சீடராய் ஆடித் திரிந்தோம்
வராத வரத்து வந்தபடி
வானுக்கும் பூமிக்கும் கிடந்து குதித்தோம்.

சபரிநாதன்

முகப்புப் படம்: சிவப்பிரியன்

TAGS
Share This