குறையொன்றுமில்லை…

குறையொன்றுமில்லை…

நவீன தமிழில் குழந்தைகளைப் பற்றி எழுதப்படும் கவிதைகளை கூர்ந்து அவதானித்து வருகிறேன். கவிகளின் மனதளவில் மிக அதிகமான குழந்தைகள் பழைய தத்துவார்த்தச் சுமைகள் நீங்கி பையப் பைய நடந்து வந்து சிரிப்புக் காட்டி, தம் ஆசைகள் விரித்துப் பறக்கிறார்கள்.

போகன் சங்கர், ஆனந்த் குமார், சபரிநாதன் மூவரதும் கவியுலகில் உள்ள குழந்தைகளின் தன்மைகள் அவர்களால் ஈடேறும் கவித்துவ உண்மைகள் முக்கியமானவை.

*

நண்பரின் மகள்
ஒலி நீக்கம் செய்யப்பட்ட
ஒரு உடலுக்குள்
இருபதாண்டு காலம் இருந்தாள்.
பிறகு நவீன அறிவியல் மூலம்
ஒலி
அவள் உடலுக்குள்
கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டது.
அவள் முதல் முறையாக
ஒரு குயிலின் கூவலையும்
மழையின் தூறலையும் கேட்டாள்.
அம்மாவும் அப்பாவும்
சண்டை போட்டுக்கொள்ளும்போது
அவர்கள் பேசுகிற தடித்த சொற்களையும்
அவளால் கேட்க முடிந்தது.
முன்பு அவை
எல்லாம் அவள் பொருட்டு
என்பது மட்டுமே புரிந்து
அவள் அழுவாள்.
இப்போது அவள்
ஒலியின் முதல் ஆச்சர்யங்களுக்குப் பழகிவிட்டாள்.
ஓசையும் இசையும் வேறு என்று
அவளுக்கு இன்று தெரியும்.
இடையில் ஒரு நாள்
‘நீ என்றாவது
உன் பழைய அமைதியை விரும்புகிறாயா?’
என்று
ஒரு கவிக்கே உரிய அசட்டுக் கேள்வியை
அவளிடம் கேட்டேன்.
அது அமைதி இல்லை அங்கிள்’ என்றாள் அவள்.
‘சாம்பலை நிறமென்றா சொல்வீர்கள் நீங்கள்?
நான் அமைதியாகவே இல்லை.
மேற்தளத்துக்கு வந்து
உடைய முடியாத
ஒலிக்கொப்புளங்கள்
என் எரிமலை ஆழத்தினுள்
உருவாகிக்கொண்டே இருந்தன.
நான் அமைதியாகவே இல்லை.
நான் இப்போது அமைதியாக இருக்கிறேன்
என் கொப்புளங்கள்
கரையேறிவிட்டன’.

*

த்தோ!த்தோ! என்று
ஒரு நாய்க்குட்டியை அழைப்பது போல
வாஸ்!வாஸ்!என்று
ஒரு பூனையை அழைப்பது போல
ஒரு குட்டி எறும்பை எவ்வாறு அழைப்பது
என்று ஹரிணி ஒருமுறை கேட்டாள்.
ஒரு எறும்பை நாம் செல்லமாகக் கூப்பிடலாம்
என்பதே எனக்கு அப்போதுதான் தெரிந்தது.
ஒன்றின் செல்ல விளியை
நாம் அறிந்திருந்தால்
எல்லாவற்றையும் இப்படி அழைக்க முடியும்
என்று ஹரிணி எனக்கு தெரிவித்தாள்.
அந்த விளி ஒரு ரகசியத் திறவுகோல் என்றாள் அவள்.
இந்த அறைக்குள்
ஒரு இலையை
அல்லது
நிலவொளியை எப்படி அழைப்பது?

போகன் சங்கர்

*

வேடிக்கை பார்த்தபடி இடையிடையே மேய்கின்றன ஆடுகள்.
மலைப்படுகையில் காலார ஓய்வெடுக்கும் இடையன் கைவிரல்களால் தொட்டுத்
தடவிப்பார்க்கிறான் வட்டெழுத்துகளை
சிறுவனாய் தந்தையுடன் மேய்ச்சலுக்கு வந்தபோது கண்மறைவாகத்
தீண்டிப்பார்த்ததுண்டு குளித்துப் பின்னலிட்ட பெண்ணின் சிலைமுலையை.
அன்று அத்தனை விரைவாக இருட்டிக்கொண்டு மழை தொடங்கிற்று.

மழைக்காலத்தில் முளைவிடுகின்றன மண்ணில் உறங்கிய காட்டு விதைகள்.
மற்ற நேரங்களில் அவல் விற்க வரும் ஊமையன் அப்போதெல்லாம் கோயில் வாசலில்
கிளியாஞ்சட்டிகளை விற்பார்.
தீபத்திற்கு பிறகு மழை இல்லை. ரொம்ப நாட்களுக்குப் பின் ஊருக்கு வரும் குயில்.
மிக உயரமான இடங்களில் கனியும் பனம்பழங்கள். உருத்தெளிந்து வரும்
ஒற்றையடிப்பாதைகள்
காற்றில் இயல்வாகைப் பூவின் மறைமணம்.

வெயில் இன்றைக்குத் தாவலை. மத்தியானத்தின் மஞ்சள் நிசப்தம்.
அப்பா பூவரச மரத்தடியில் லாடம் அடித்துக்கொண்டிருக்கிறார்.
(போன மாதம் வரை தாத்தாவும் அங்கே அடித்துக்கொண்டிருந்தார்)
தூரத்து வயலை உழவடிக்கும் ட்ராக்டர் வட்டமிட்டுத் திரும்புகையில் ஒரே பாட்டமாய்
செட்டையடித்து பின் நிலம் சேர்கின்றன கொக்குகள். மரக்கொப்பில் படுத்து
படித்துக்கொண்டிருக்கும் மூத்தவன் கண்ணெடுத்து காண்கிறான் அதை.
கீழே ஸ்கிப்பிங் ஆடும் இளையவள் கேட்கிறாள்: ‘அது என்ன சத்தம்’
அவள் என் சிநேகிதி, படுசுட்டி, வாய் ஓயாது பேசிக்கொண்டிருப்பாள்
அவளுக்கு இன்னும் ‘ர’வன்னாவும் ‘த’வன்னாவும் வரவில்லை.

சபரிநாதன்

TAGS
Share This