சமகால இலங்கை முஸ்லிம் சமூகத்தை வாசித்தல் – ‘உம்மத்’ நாவலை முன்வைத்து
அறிமுகம்
அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நாவல் ‘உம்மத்’. கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஸர்மிளா செயித்தால் எழுதப்பட்டிருக்கிறது. அதன் சமகாலத் தன்மையைக் கருத்திற் கொண்டு, இந்தப் பத்தி முஸ்லிம் சமூகத்தினதும், குறிப்பாக அதன் பெண்களின் நிலைமையைப் பற்றியும் அறிய இந்த நூலை (புத்தகத்தில் குறிப்பிட்டதன் படியே இதை நாவல் என அறிமுகம் செய்கிறது பத்தி) பயன்படுத்துகிறது. இன ரீதியாக மூன்றாவது நிலையில் இருக்கும் இலங்கை முஸ்லிம் இனம், அதன் உள்ளடுக்குகளில் எதைச் சேர்த்து வைத்திருக்கிறது. புற இனங்களை அது எப்படி பார்க்கிறது என்பதை நாவலாசிரியரின் பார்வையுடன் ஒட்டியும் வெட்டியும் இந்தப் பத்தி அறிய முயற்சிக்கிறது. பத்தியாளரின் அறிதல் எல்லைக்குட்பட்டே இதன் சரி பிழைகள் ஆராயப்படுகின்றது. இதுவிர இதை முழுமையான பார்வை என்றும் கொள்ள முடியாது.
நாவல் – காலம் – மாந்தர்கள்
இந்த நூலை இலக்கிய அடிப்படையில் நாவல் எனும் வடிவத்திற்குள் பொருத்திப் பார்ப்பதற்கு முடியவில்லை. அதற்கான காரணங்களை அலசுவது இப்பத்தியின் நோக்கமும் இல்லை. முதல் 94 பக்கங்கள் வரை கதையின் ஆரம்பப் பகுதி மிகவும் குழப்பகரமாகவே இருக்கிறது. இன்னும் அதன் அமைப்பு சீர் செய்யப்பட்டிருக்க வேண்டும். பல மொழிச் சறுக்கல்கள், கட்டுரைத் தன்மையான பந்தி அமைப்புக்கள் என்பனவும் மற்றும் ஸர்மிளா தானே நேரடியாக கருத்துக்களை கூறியும் கதையை அதன் ஓட்டத்திலிருந்து நழுவ விட்டுவிடுவதும் தான் அப்படி நினைக்கத் தோன்றுகிறது.
காலம் – யுத்தம் முடிந்த பின்னர் நடைபெறுவதாக கதை அமைந்திருக்கிறது. ஈழப்போராட்டத்தின் இரண்டு முன்னாள் போராளிகளினதும் ஒரு முஸ்லிம் சமூக சேவையாளினியுடையதும் பார்வையில் காலம், வெட்டி வெட்டி நினைவுகளாகவும் தற்காலமாகவும் நகர்கிறது. பின் 2009க்குப் பின்னரான கிழக்கிலங்கை நிலைமையினையும் முஸ்லிம் சமூக மனநிலையினையும் பதிவு செய்கிறது.
மாந்தார்கள் – மூன்று பெண்களின் வாழ்க்கை பின்னப்பட்டு அவர்களின் பார்வையிலேயே கதை முன் செல்கிறது. கதையில் சில சிங்கள இன மாந்தர்களும் வந்து செல்கிறார்கள். மேலும், பல வகை மாந்தர்கள் வந்து சென்றாலும் கதை மொத்தமும் பெண்கள் உலகமாகவே உள்ளது. அதில், கல்லெறியும் ஆண்களும் அதைக் காவல் செய்யும் ஆண்களுமாக ஆண்களுக்கு இந்த பெண்களின் உலகில் வேறு முகம் (இத்தனை நாள் அறிந்த முகத்திலிருந்து).
‘உம்மத்’ – தமிழ் சமூகத்தை எப்படிப் பார்க்கிறது?
இலங்கை தமிழ் சமூகமென்பது தமது தாய் மொழியாக தமிழை பேசும் மக்களின் தொகுதி. அதில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அடக்கம். ஆனால், இந்த இடத்தில் உம்மத்தின் மனநிலை, “வாப்பாவும் அவரது தமிழ் நண்பர்களும் ……” என்று பிரித்துக் காட்டும் மனநிலை. எப்படி இது வருகிறது என்ற கேள்வியை எழுப்புவதை தவிர்க்க முடியவில்லை. அப்படியென்றால் ‘வாப்பா’ யார்? அங்கே, அறிந்தோ அறியாமலோ ஒரு பிரிப்பு விழுந்து விடுகிறது.
ஒரு தடவை செய்த குற்றத்திற்காக… முன்னாள் போராளிகள் எத்தனை தடவை தண்டிக்கப்படுவது என்று ஏங்கும் கதை சொல்லி ‘குற்றமாக ‘ எதைக் கருதுகிறார். போராடச் சென்றதையா?
பல இடங்களில் கட்டுரை போல் எழுதியிருக்கும் பந்திகள் ஈழப் போராட்டத்தை கட்டம் கட்டும் அதேநேரம், அதை சமன் செய்யும் வகையில் பின் பகுதிகளில் பொதுப் பேச்சுக்களில் எழும் பொத்தம் பொதுவான கருத்துக்களால் அதை தாண்டி விடலாம் என்றும் எத்தனிப்பது போல் இருக்கிறது.
இந்தப் பத்தி முஸ்லிம் சமூகத்தையும் தமிழ் சமூகமாகவே பார்க்கிறது. முஸ்லிம் சமூகத்தின் மேல் போராட்டக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட வன் கொடுமைகள், கட்டாய வெளியேற்றுகை என்பவற்றை தவறாகவே கருதுகிறது. அந்த வகையில் ஸர்மிளா சுட்டும் இடங்கள் முக்கியமானவை, பதிவுசெய்யப்பட வேண்டியவையே. ஆனால், பல தமிழர்கள் விடும் அதே தவறைத் தான் ஸர்மிளாவும் விடுகிறார். அது “ஒரு பக்கத்தை முன்னிறுத்துதல்” அல்லது “தமது பக்கத்தை வலுச்சேர்த்தல்’ ஆகியனவாகும். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள், ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது தொடர்பான எந்தக் காரணமும் பரிசீலனை செய்யப்படவில்லை. அதன் உளவியல் பின்புலம் தொடர்பாக சிறு கீற்றேனும் இல்லை. ஒரு மக்கள் கூட்டத்தை மொத்தமாக வெளியேற்றுவதற்கு ஒரு காரணமுமா இல்லாமலிருக்கும். அந்தப் பக்கத்தையும் பதிவு செய்திருந்தால் இன்னும் அதிக விளக்கத்தை ஸர்மிளாவால் பகிர்ந்திருக்க முடியும்.
சமகாலத்தில் இந்த நூலின் இடம் என்ன?
இப்பொழுது நூலின் பெரும்பானமையான பகுதிக்குள் நுழைவோம். மிகுதி முந்நூற்றுச் சொச்சம் பக்கங்கள். அதில், அவர் உருவாக்கும் உலகம் உண்மையானது. அதில் பிரச்சாரம் இல்லை. காழ்ப்பு இல்லை. அதை படிப்பவரால் உணர முடிகிறது. அதானால்தான் இதை ஒரு ஆவணமாகவும், பொருட்படுத்தக் கூடிய குரலாகவும் கொள்ள முடிகிறது. உள்ளிருந்து ஒலிக்கும் இந்தக் குரலானது, தான் பிறந்தது முதல் விளங்கி வைத்திருக்கும் ஒரு சமூகத்தை பற்றிப் பேசுகிறது. அதன் உள்ளடுக்குகளை மோதி உடைக்கிறது. அதன் சிறுமைகளைக் கண்டு கொதிக்கிறது. இதன்போது ஒரு சக மதத்தின் நிலைமையையும் அதன் பெண்களின் நிலைமையையும் எங்களால் தொட்டு உணர முடிகிறது. ஆகவே, இந்த நூலின் முக்கியத்துவம் என்பது அது பேசும் முறையை விட பேசும் விஷயத்தினால் அதிகம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆண் பெண்ணைப் பார்க்கும் முறை, பெண் பெண்ணைப் பார்க்கும் முறை, பெண் ஆணைப் பார்க்கும் முறை, இந்த மூன்று கோணங்களில் பார்வை நிகழ்ந்திருப்பது, ஒரு பொது வாசக அனுபவத்திற்கு மேலும் நெருக்கமாக இருக்கிறது.
முடிவுரை
இந்த நூலின் மீதான குறிப்பை எழுதும் மனநிலையைத் தூண்டியது எது? அது பேசும் அரசியல் எனக்கு ஒத்து வராதது. அதன் இலக்கியத் தரமும் என்னைக் கவரவில்லை. இருந்தும் அதன் குரலில் உள்ள வேகமும் கோபமும் பெண்ணிற்கே உரியது. அதுதான் மற்ற எல்லாவற்றையும் தகர்த்துவிட்டு இந்த நூலை அறிவின் வெளிச்சத்தில் என்னைப் படிக்க வைத்தது. இன்னுமொரு முக்கியமான விடயமும் இந்த நூலில் உள்ளது. அது இந்த நூல் எதையும் தொடங்கவில்லை என்பது தான். எதையும் முடிவாக கொள்ளவில்லை. அது உச்சமாக ஒரு தருணத்தை உருவாக்குகிறது. அது கடைசிப் பக்கம். அந்த முடிவு ஒரு பெண்ணாக – ஒரு முஸ்லிமாக – ஒரு தமிழராக – அவர் எடுக்கும் முடிவு சமகாலத்தின் துயரையும் நிலையையும் பேசாமல் காட்டிச் செல்லுகிறது. ஆகவே, இந்த நூலிற்குள் இருக்கும் ஸர்மிளாவின் குரல் பொருட்படுத்தக் கூடியதுதான். அவரிடம் இருந்து இன்னும் செறிவான ஆக்கங்களை நாங்கள் எதிர்பார்க்கலாம். சமகால இலங்கை முஸ்லிம் சமூகம் சார்ந்து எழுந்துள்ள இந்த நூல், கட்டாயமாக சக மதத்தவர்களாலும் படித்து, புரிந்து, உரையாடப்பட வேண்டியது. அதன் மூலம் ஒளி பொருந்திய ஒரு காலத்திற்கான கனவை ‘உம்மத்’ காணச் சொல்கிறது. மேலும், இந்தப் பத்தி இதை ஒரு அறிமுகமாகவே செய்கிறது என்பதால், அவரின் ஏனைய அரசியல் தொடர்பான நிலைப்பாடுகளை கண்டுகொள்ளவில்லை.
(2014)
(www.maatram.org)