கறுமலர்க்காடு

கறுமலர்க்காடு

கவிதை என்பது ஒன்றை இன்னொன்றாக்கிக் கொண்டேயிருக்கும் கலை.

கருங்கற்பாறைகளாலான கரைகொண்ட குளமொன்றில் செவ்விதழ்கள் உரிந்தும் உரியாமலும் நீண்டு கிடக்கும் தாமரைகள். காற்று உய் உய் என விசிறியடிக்க மழை பலத்துப் பெய்யும் முன்னிரவின் தொடக்கம். ஞாயிறு இருள்மேகங்களின் பின்னிருப்பதால் ஒளியிழக்காத உலகு. எருமைகள் நாப்பிரட்டி குளமிறங்கி தலையை இடமும் வலமும் அசைத்தபடி நகர்கின்றன.

குளத்திற்கு அப்பால் கறுத்த மலர்களாலான காட்டின் வரை. அதற்கு அப்பால் மழை சூடிய மலை. பச்சையும் மண்ணிறமும் பலநூறு வண்ணங்களில் தோன்றி விழி நிறைகின்றன. ஒரு சிறு வானவில் குளத்திற்குள் விழுகிறது, நீண்ட வானவில் ஒன்று மலையில் உதிக்கிறது. கறுமலர்க் காடோ இரண்டின் இடையிலும் பெரிய புருவமென்று சரிந்து கிடப்பதைப் போல் கிடக்கிறது. எனது அருகில் ஒரு இருப்பின் தண்மை நிலவுகிறது. வானத்தின் நடுவெளி திறந்து முழுநிலவு ஒற்றைத் தூண் ஒளியென கறுமலர்க் காட்டில் விழுகிறது. அவ்வொளியில் ஒரு மான், மருள் விழிகளால் என்னைப் பார்க்கிறது, அதனருகில் தங்க மஞ்சள் கொத்தென ஒரேயொரு சரக்கொன்றை தழைத்து நிற்கிறது. மாகறுப்பின் நட்டிடையில் ஒரு மஞ்சட் சரக்கொன்றை. புருவ இடை வெளியில் சிறுமயிர் நரம்பென அம்மலர் மரம் தோன்றியது.

மிளைப் பெருங்கந்தனார் எழுதிய இரண்டு கவிதைகள் காமத்தின் மதம் முற்றிய களிறின் அகவுலகில் நிலவொளித் தூணென விழுவது. காமம் என்றால் என்னவென்று இந்த மக்கள் நினைப்பதுவல்ல அது. அதன் நுண்மையென்பது முதன்மையாக உள்ளில் எழும் அருட்டல். அது அதுவாகவே எதிர்ந்து கொள்ளும் கனவில் கிளைப்பது. புற்களை அரைத்து உண்ண முடியாத முதிய பசுவொன்று முற்றாத இளம் புல்லை நக்கியெழ எண்ணும் வேட்கையின் தீராத நாவு காமம்.

“காமம் காமம்” என்ப, காமம்
அணங்கும் பிணியும் அன்றே,
நினைப்பின்
முதைச் சுவல் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்தாங்கு,
விருந்தே காமம், பெருந்தோளோயே.

விரிந்த தோள்களென்பவை ஆண்மைக்குரிய லட்சணமாக சிற்பங்களிலும் இலக்கியங்களிலும் வெளிப்படுத்தப்படுகிறது. பெருந்தோள்கள் கொண்டவனே சிறப்பான உடலியல் அம்சங்கள் உள்ளவனாக வர்ணிக்கப்படுவது திரும்பத் திரும்ப அறியக் கிடைக்கிறது. அகன்ற தோள்களுடையது தான் ஈசனின் லட்சணமும். மூங்கில் போன்ற விரி தோள்கள்.

இக்கவிதையில் ‘முதைச் சுவல் கலித்த முற்றா இளம் புல்’ என்ற சொல்லிணைவு அபாரமானது. கவிதையை இரு புருவங்களுக்கிடையில் உள்ள சரக்கொன்றை நரம்பின் அழகென ஆக்குவது இவ்வரி தான். மொழியின் அச்சைச் சுழற்றும் ஆணியென கவிதைக்குள் நிலை கொண்டிருக்கிறது. கற்பனை அத்திருகினால் மலைமேலிருந்து உருண்டோடுகிறது.

முதிய பசுவும் இளைய புல்லும் இரண்டு எல்லைகள் கொண்ட பருவங்களுக்குள் நிகழும் விருப்பைத் தன் திறவெனக் கொள்வதும் இங்கு கவனிக்கத் தக்கது. மலைமழையில் உதிக்கும் நீள் வானவிற் சரிவென எவ்வளவு முதிர்கிறதோ காமம் அவ்வளவு பெருகுகிறது.
கரும்பாறைக் குளத்தில் உரிந்தும் உரியாமலும் நிறைந்திருக்கும் செவ்விதழ்த் தாமரைகள் மேல் உதிரும் சிறுவானவிலென எவ்வளவு இளையதோ காமம் அவ்வளவு விசை கூடியது.

இரண்டு எல்லைகளுக்குமிடையில் மாறாத கறுமலர்க் காடொன்றுண்டு. அதில் மருள் விழி மானின் கண் தொடுதலென இக்கவிதை உளம் தீண்டுகிறது.

மிளைப்பெருங் கந்தனாரின் இன்னொரு கவிதையில்,

“காமம் காமம்” என்ப, காமம்
அணங்கும் பிணியும் அன்றே,
நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே, யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப்
பெறினே.

காமத்தை அறிந்தவர்களுடன் கொள்ளும் காமமென்பது தழையுண்டு மதமேறிய யானையின் இயற்கையெனச் சுட்டப்படுகிறது. யானை மதங் கொள்ளும் போது அதன் அனைத்து ஆற்றல்களும் உடலென ஆகக் கூடியது. பெருங்காதுகளை அசைத்தபடி நீண்ட வாழைக் குருத்தெனத் தூங்கும் துதிக்கையை மாகரமென ஆக்கி வெளியில் துழாவும். மரங்களைப் பெயர்க்கும் மூர்க்கம் ஏறி, காமம் மட்டுமே தானென உணரக் கூடியது யானை.

காமத்தின் உக்கிரத்தைக் குறிக்க இலக்கியங்களில் மாபெரும் குறியீடென யானை ஆக்கப்பட்டிருக்கிறது. யானையென்பது சொல்லில்லா அசையும் பாறை. அக்கற்பாறை பிளிர்ந்து காமம் கனிவதென்பது பாறை இளக்கும் திரவமெனக் காமத்தை விளிப்பது.

நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் என்ற வரியும் இருட்டில் ஒளிரும் மணிமுத்தென ஈர்க்கிறது. நுண்மையான மிகுதலோ குறைதலோ கூடக் காமம் அல்ல என்கிறார் மிளையார். காமம் உளக் கடுத்தல் இல்லை. அவதியின் பெருக்கம் அல்ல காமம். தணிந்து நீங்குவதும் அல்ல. அதுவோர் மிகாத குறையாத உக்கிரத்தின் உறைகணம்.

கறுமலர்க் காட்டில் விண்ணொளித்தூண் விழும் சரக்கொன்றையருகில் மருளும் மான் விழியின் தொடுதலை இளங் காமம் எனவும், அக்கறுமலர்க் காடென்பது படுத்திருக்கும் பெருயானையின் உட்சுனையும் மாமுதிர்காமமெனவும் இரு துருவ உணர்வுகளை இணைத்துத் தைக்கிறது மிளையாரின் கவியுள்ளம்.

TAGS
Share This