ஒளிக்குருத்து

ஒளிக்குருத்து

சங்கப் பாடல்களில் உள்ள ஒலியிழைகள் நுண்ணியவை. சொற்கள் சர சரவென நீர்த்தொட்டிக்குள் விழுந்த பாம்பென ஒலியை நோக்கித் தலையெழுந்தபடியே இருப்பவை. அவ்வெழுகை நேரிடையாக எழும் கவிதைகள் உள்ளெழுச்சியில் பாடலெனத் திகழக்கூடியவை. இந்தக் குறிப்பில் உள்ள ஒளவையாரின் இரு கவிதைகள் ஒலியிழையின் தலையெழ மனத்துள் உரத்தெழுபவை.

நான் வழமையாகச் செல்லும் வழியில் இருந்த குளத்தடித் தூங்குமூஞ்சி வாகை மரங்கள், சில நாட்கள் இடைவெளியில் முழுதும் மலர்ந்து வேறொரு தெய்வீகமாய் உருமாறி நின்றன. நாட்கணக்கில் இலைகளாய் மட்டுமே செறிந்து விரிந்து கிடந்த மரத்தின் உடலெல்லாம் மலர்கள். கீழே அதன் இமைமுடிகள் என உதிர்ந்து கிடக்கும் காய்ந்த மலர்கள். மரத்தின் பெரிய தண்டுகளில் பொன்மணற் கீரியென மலரிமை முடிகள் விழுந்து கிடக்கும். அருகில் உள்ள குளத்தில் இமைத்தரையென அவை குமிந்து மிதந்து கொண்டிருந்தது. இதை மழைமரம் என்றும் அழைக்கிறார்கள். ஆனால் இந்தப் பெயர்கள் அவ்வழகிய மலர்களுக்கு சூடக்கூடியவை தானா எனத் தெரியவில்லை. எனக்கு இந்தப் பெயர்கள் பிடிக்கவில்லை. இனி நான் இந்த மலர்களை செவ்விதழ்வாகை என்ற செல்லப் பெயருடன் அழைக்கலாம் என்றிருக்கிறேன்.

செவ்விதழ்வாகை விரிந்தும் வீழ்ந்தும் அழகென ஆகக் கூடியது. அகவன் மகளே என்ற கவிதையின் வரிகளை உதடுகள் உச்சரித்தபடியே அக்குளத்தின் வீதியால் சென்று கொண்டிருந்த பொழுது செவ்விதழ்வாகையின் பேரெழில் சுற்றிக் கிடந்த அந்தக் குளம் இந்த நகரத்திற்கிடையில் நுழைந்து விட்ட சங்கக் கவிஞையின் சொற்களென எழில் கொண்டு எதிர் நின்றன. அதன் எழிலில் உளம் கால் கொண்டது.

அகவன் மகளே அகவன் மகளே
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய
பாட்டே.

தலைவியிடம் காமம் மிகுந்து அவள் இயல்பில் மாற்றங்கள் எழும் போது அவளது தாய் கட்டுவிச்சியை அழைத்து குறி கேட்க வைக்கிறாள். கட்டுவிச்சி முறத்தில் அரிசியையோ நெல்லையோ சோழிகளையோ போட்டு அவற்றை எண்ணிக் குறி சொல்வாள். அப்படிச் சொல்லும் பொழுது கட்டுவிச்சி பாடும் பாட்டு முருகனை நோக்கியே தொடங்கும். அந்தப் பாடலை திரும்பத் திரும்பப் பாடச்சொல்வதன் மூலம் தன் உள்ளத்தின் தவிப்பை தன் தலைவனின் மலையை தலைவி குறிப்புணர்த்துவதாக இப்பாடல் பொருள் கொள்ளப்படுகிறது. குறி கேட்டு நோய் அறியுமிடத்து வேலன் வந்து வெறியாட்டு ஆடுவது தான் அக்காலச் சடங்கு.

நான் இந்தக் கவிதையின் அர்த்தங்களினை விரிவாக்க வேறொரு தளத்தில் நுழையத் தடையாய் இருப்பது கவிதையின் வாசலில் உள்ள முதற் சொற்கள். அது ஓர் வனப்பு வந்து வாசலில் நின்று நான் வந்திருக்கிறேன் என்னை நோக்கினாயா? நோக்கி உளம் துள்ளினாயா? என்று சொல்வதைப் போலானது. கவ்விய பின் இதழ் பிரிக்க விரும்பாத முத்தத்தின் தித்திப்பு அது.

அகவன் என்பது குறி சொல்பவர் எனக் கொள்ளும் பொருளே புழக்கத்தில் உள்ளது. எனக்கோ ஒலிக்கும் மயிலின் அகவலே மனதில் ஆடிக்கொண்டிருக்கிறது. ஒரு அர்த்தப் பிழை அல்லது சொல்லறிதல் பிழை கூட கவிதை வாசிப்பில் ஏற்கத்தக்கதே. குழந்தைகள் விடும் எழுத்துப் பிழைகளில் உண்டாகும் கவிதை போல அவை இருக்கலாம். ஒரு சிறுமி தேயிலையைத் தோயிலை என்று ஒருமுறை எழுதியிருந்தாள். அதை வாசித்த போது எழுந்த சிலிர்ப்பை நினைத்துப் பார்க்கிறேன். தேயிலைக்கு எவ்வளவு கவிதையாய் ஒரு பெயர் தோயிலை!

அப்படியான ஒரு வாசிப்பில் தான் அகவக் கூடிய மயிலின் மகளே முருகனின் மலையை நீ திரும்பத் திரும்ப பாடிக்கொண்டேயிரு எனக் கவிதை என் முன் தோன்றுகிறது. முருகனின் தோழனல்லவா தோகை விரித்தாடும் அகவன். அகவக் கூடியவன். சங்கக் கவிதைகளில் மஞ்சை எனும் சொல்லும் மயிலைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

கவிதைக்குள்ளும் அவ் அகவல் போலே இசையுண்டு. திரும்பத் திரும்ப ஒலிக்கும் சொற்களை ஒரே கவிதைக்குள் பயன்படுத்தும் ஒளவையின் கவித்தேர்ச்சி வியக்க வைக்கிறது. சொல்லிணைவாலும் ஒலியிழைவாலும் துள்ளும் இளம் பெண்ணின் நுனிக் கால்களெனக் கவிதை இசை கொள்கிறது.

இதே போன்ற இன்னொரு ஒலியிழைவு அசாத்தியமான இணைவைக் கொண்டது.

முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆ ஒல் எனக் கூவுவேன் கொல்
அலமர அசைவு வளி அலைப்ப என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.

இக்கவிதையின் தீவிரம் தாங்கொணா விரகத்தினால் உடல் விளிம்புகள் முட்டி இவ்வுலகை மோதித் தகர்க்கும் காமத்தின் சொரூபமெனப் பெண்ணை உருப்பெருக்கிக் கொள்வது. பனியால் குளிர் கூடிய இரவில் சீதளம் எங்கும் பரவியிருக்க ஒளிச் சுடர்கள் மிதக்கும் இருப்பிடத்தின் உள்ளே நின்று மல்லிகைக் கொடி முழுதும் பூத்திருக்கும் பந்தலில் சர்ப்பமெனக் கிறங்கி உருவேறிக் கிடக்கும் தேவியின் நாசிக் காற்றென கவிதையின் சொற்கள் நறுமணத்தின் கொல்தாபத்தில் மயக்கு உருகக் கிடக்கிறது.

முட்டுவேன் கொல் என்பதிலிருந்து ஒரே தாவலில் கேணியின் ஆழத்திற்குள் பாய்ந்து நுழையும் பெண்ணைப் போல் தாக்குவேன் கொல் என்ற சொல்லிணைவு பிறக்கிறது. மனம் எங்கிருந்து எங்கும் பாயும் வேகம் கொள்கிறது! காமம் உடலை விசையூற்றி உயிரை அதில் ஒளிக்குருத்தென அலைபட வைக்கிறது. யானைத் தந்தந்தங்கள் உரச வந்து இம்மனையின் கதவுகளை முட்டித் திறப்பேன் எனப் பிளிறுவது போன்ற சொற்கோர்வைகள் அவை.

ஆ ஒல் எனக் கூவுவேன் கொல் என்ற சொற்கள் அம்மனநிலையின் ஒலிச் சிறகுகளாக எழுகின்றன. முனகல்களின் கூவலை அறியாமல் காமமுண்டா! உணர்ச்சி கொள்ளும் ஒற்றைச் சொற்களால் காமம் ஓங்காரமான எல்லைகளை ஈட்டிக் கொள்கிறது.

அலமர அசைவு வளி அலப்ப என்ற சொற்குவையின் தேர்கைகள் மனமலர அசைகின்றன. தருக்கள் சுழற்றும் காற்றென ஆகி ஒன்றையொன்று எழுந்து படர்ந்து அணைத்துக் கொள்வது போல் இவ்வரிகள் உள் வருகின்றன.

குறுந்தொகையில் உள்ள கவிதைகளில் சொல்லிழைவுகளின் நுண்மை உளத்தை வருடும் கண்ணின் ரகசிய அகவலென நெருங்குவது. நான் எழுதிய கவிதையொன்றின் இறுதி வரிகள் இவ்விதம் முடியும்,

“போதுமென் தெய்வமே
விரகம்
கொல் என்றால் கொல்லும் வேல்
உறை என்றால் உறையும் நாகம்”

என்றோ ஒரு பழங் காலத்தில் வாழ்வின் நுட்பமறிந்த என் முதுகவி ஒளவை எழுப்பிய சொல்லின் அதிர்கணம் இத்தனை ஆண்டுகள் கடந்து வந்து என்னிலும் ஒலித்திருக்கிறது, இன்னும் எத்தனை காலம் இம்மொழி உயிர்க்குமோ அத்தனை ஆண்டுகள் வரும் கவிகளுக்குள்ளும் அத்தாளம் இசைந்து களிக்கும். தீராத் தவிப்பின் உளம் எழுதியவளின் பொற்கரம் பற்றி மொழி நடக்கும்.

குறிப்பு : யாழ் புனித ஜோன் பொஸ்கோ பாடசாலைக்கு முன்னுள்ள குளமே நான் குறிப்பிட்ட குளம். நான் இந்தப் பாடசாலையில் தான் ஆரம்பக்கல்வி கற்றேன். இது தற்பொழுது அனைத்துக் கரைகளிலும் சீமெந்து இருக்கைகள் அமைக்கப்பட்டு நடைபாதை போடப்பட்டு அழகாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மக்களின் வருகையாலும் யாரோ சிலரின் செயல்களாலும் அதன் கரைகளில் பிளாஸ்டிக் போத்தல்களும் மதுக்குப்பிகளும் கொட்டப்பட்டு அதன் இயற்கையும் வனப்பும் கெடுகிறது.

TAGS
Share This