பிணக்கு

பிணக்கு

தெய்வங்களுடன் கோபித்துக் கொள்வது அம்மாவின் வழக்கம். நேர்த்திகள் வைப்பது, சந்நிதிகளில் புலம்புவது, இறைஞ்சு நிற்பது, கதைத்துக் கொள்வது அம்மாவின் இயல்பு. பெரும்பாலும் பெண் தெய்வங்களுடன் தான் பேச்சு வார்த்தையும் ஒரு உரிமையும் இருக்கும். ஆயிரந் தான் இருந்தாலும் பெண்ணுக்குப் பெண் தானே உதவி!

ஆனந்த்குமாரின் பதில் என்ற கவிதையை வாசித்த போது அம்மாவின் பிணக்குக் காலங்களை நினைத்துக் கொண்டேன். அந்தப் பிணைப்பில் உள்ளது ஒருவகையில் தாய் – மகள் உறவு. அம்மா கோயில்களில் அடியழிப்பதுண்டு. என்ன ஒரு சொல்! அடியழிப்பு. தனது பாதத்தை எண்ணி எண்ணி வைத்தெடுத்துத் திரும்பிப் பார்க்காமல் முன்சென்று கொண்டேயிருப்பாள். நெற்றியில் மணல் ஒட்டியிருக்கும். கரை நெற்றியால் வியர்வை ஓடிச் சிறு தீற்றலென ஈரலிப்பாய் இருக்கும். இக்கவிதையை வாசித்த பொழுது பிணக்கிடை மகளுக்கும் தாய்க்குமிடையில் ஒரு அடி அழிவது போலிருக்கிறது.

*

பதில்

தாத்தா இறந்து வெகுகாலம்
ஆச்சி
கோவிலுக்குச் செல்லவில்லை
சந்தன மாரியம்மனுடன் பிணக்கு

இப்போதெல்லாம் அவள்
அடிக்கடி போகிறாள்
எனினும்
வினாயகரை மட்டும் தொழுதுவிட்டு

அம்மனை பார்க்காமல் திரும்பிவிடுவாள்
வெள்ளிக்கிழமை மாலைகளில்
தாயாருக்கு முதுகு காட்டி
கோவில் வாசலில்
நின்றிருப்பாள்

உள்ளேசெல்லும் யாரிடமாவது
கொடுத்துவிட்டு நகரவென
அப்போதவள் கையில் வைத்திருக்கும்
அந்தச்சரம்
அவள் நாளெல்லாம் உட்கார்ந்து
எண்ணியெண்ணி தொடுத்தது.

TAGS
Share This