சிறு கோட்டு

சிறு கோட்டு

பொன்னை இன்னொரு பொன் தாழிக்குள் வைத்துப் பாதுகாப்பதைப் போல் ஒரு கவிதையை இன்னொரு கவிதைக்குள் வைத்து விடலாம். அது பழந்தங்கத்தின் நுண்மையான இழைகளைப் புது வார்ப்பினுள் சேகரிப்பதென ஆகும். சங்கக் கவிதைகளை அப்படி எடுத்துச் சொல்லும் வாசிப்பு முறையையே நான் கைக்கொள்ள விரும்புகிறேன்.

காதலின் எல்லா விதானங்களிலும் சிறகடித்து வளைய வளைய அமரும் பலவகைப் பட்சிகள் போன்றவை குறுந்தொகையின் கவிதைகள். காமத்தின் உன்னதமாக்கலே காதலின் விசையூற்று. சங்கக் கவிதைகள் காமத்தை விபரித்த உவகையுடன் நவீன கவிதைகள் அதற்கான சுதந்திரத்தையும் உள்விழிகளையும் எவ்வளவு விரித்துக் கொண்டன என்பது சந்தேகம் தான். காதலை உலகியல் சார்ந்த பிரிவுகளாலும் விலகல்களாலும் எழும் அகக்கணங்களால் நவீன கவிதைகள் மொழிக்குள் மேலும் சில கதவுகளைத் திறந்தன என்றாலும் அதன் அப்பழுக்கற்ற தாகத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும் பெருங்கவிதைகளுக்காக மொழி இன்னமும் அசைபோட்டபடி காத்திருக்கிறது.

உயிரின் தூய விழைவெனக் காமத்தை ஆக்கிக் கொள்ள முடியுமா?
காமத்தின் சிலந்தி தன் எச்சிலால் தானே உண்டாக்கிய வலையில் பனித்துளிகளுக்குள் பிரகாசிக்கும் வானவில் முத்துகளெனச் சங்கக் கவிதைகள் அவிழ்கின்றன. பெண் வேட்கையின் மூச்சுக் கரைக்கும் மொழிப்பாறைகளுள் கவிப்புல் வேர் கொள்கின்றதான பல வரிகளைக் குறுந்தொகையில் வாசிக்கலாம். காமம் இவ்வளவு நுண்மையாக்கப்பட்ட கனவென, என்றோ எங்கோ யாரினுள்ளோ விசிறிச் சீறும் சாரலென ஆக்கப்பட்டிருப்பது சங்கக் கவிஞர்களின் மேதமைத்தனம். நுண்மையாக்கப்படுதலின் வழி கவிதையின் அர்த்தங்கள் மயாஜாலக்காரனின் துணிக் குவையிலிருந்து உருவப்பட்டு வெளிவரும் வர்ணத் துணிகள் போல் கொட்டிக் கொண்டேயிருக்கும்.

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம்
தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே!

கபிலரின் இந்தக் கவிதையை எல்லா ஒளியிலும் வாசித்திருக்கிறேன். உறவில் பிரிவில் கூடலில் கூடலின் பின் கனவின் வரியெனவும் அதை வாசித்திருக்கிறேன். அதிகாலைப் புள்ளின் முதற் சிலுப்பெலன அகத்திற்குக் ஏற்கெனவே இருந்துகொண்டும் திடீரென்று எங்கிருந்தோ வந்திறங்கியபடியும் அவ்வரிகள் இருக்கின்றன. சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு என்ற வரியின் தாளாமை ஒருநேரத்தில் என்னை வருத்துவதும் இன்னொரு தருணத்தில் வியத்தலின் நுனியில் ஒலியற்று உதட்டின் வெறும் அசைவவெனவும் ஆகிறது. சிறுகாம்பென்ற உயிரில் தொங்கும் பெரும் பலாப்பழமெனக் கனிந்திருக்கும் காமத்தின் விளைசுவை எத்தனை கனியெடை கொண்டதாகியிருக்கிறது. இன்னொரு சிறு சொல்லின் பொருளை இப்படிக் கொண்டால் அதன் கனியர்த்தம் வேறொருவகையில் துலங்கும். சிறு கோட்டு என்பது சிறு காம்பு எனப் பொருள் கொள்ளப்படுகிறது. வேறு கவிதைகளில் வேறு அர்த்தங்களையும் பூண்டிருக்கிறது, வெண் கோட்டு அதவத்து என்ற பரணரின் பாடலில் யானையின் தந்தங்களென ஆகுவதும் கோட்டு என்ற சொல்தான். நான் அதைக் கொங்கையின் சிறு கோட்டென, காம்பில் தூங்கும் முலைகளென ஆக்கிக் கொள்கிறேன்.

நாத் தீண்டாத இளமுலைக் குறுங்காம்பு முதல் நாச்சுவையேறிய முதிர்முலைகள் வரை எத்தனை வகை முலைகள்! அவற்றிற்குள் காமம் எப்படிக் குடிகொள்கிறது! அழைத்ததும் காம்பு உயிர் நீண்டு தானுமொரு நாவென எப்படி அளைபடுகிறது! குளிரால் விடைக்கும் சிறு மொட்டென கொங்கைகளில் உறைகின்றன. வியர்வையில் நனைந்து உப்புக் கொண்டு வாயுள் நாவைத் தட்டுகின்றன. எவ்வளவு பருவங்களிலும் அவை எவ்விதம் தீண்டலுக்குத் தழைகின்றன. குழலால் ஊதும் போது வீசும் காற்றில் கண் திறந்து மூடும் தணற் துண்டுகளெனக் காம்புகள் ஒளிரும் பருவங்களை எந்த வரியால் பத்திரப்படுத்துவது!

உயிர் தவச் சிறிது, காமமோ பெரிது! என்னும் சொற்பாத்திரத்துள் தேனில் ஊறிய பலாச் சுளைகளை இட்டு நாவனுப்ப முடியுமா! தூங்குதல் என்பதும் தொங்குவதும் இருவேறு நுட்பமான சொற்கள். பற்றி நிற்கும் பருவமே தொங்குதல், கனிந்து முற்றிக் கனம் பொறுக்காமல் துவளும் கனியைத் தூங்குதல் என்ற சொல்லால் சுட்டுவது வேறொரு பருவம். தூங்கும் பலாவின் முட்காம்புகள் தடவி, பிளந்து, வாசனையைத் தூபமென நுரையீரல் நிறைத்து, மூளையின் போதை நரம்புகளைச் சென்று தீண்டும் பலாவைத் தாபத்திற்கு உவமித்த கபிலருக்குள் உள்ள காமத்தின் உணர்கொம்பில் வண்ணத்துப் பூச்சியென எழுந்து பறந்து மீண்டும் தேனருந்த அழைக்கிறது சங்ககாலத்தின் கவியுலகு.

சாளரங்களுக்கு வெளியே நிலவின் ஒளியில் பலாமரத்தின் கனிக்கிளைகள் அசைவற்று நிற்கின்றன. உள்ளே அறையில் முழுதும் பழுத்த பலாவின் நிறைமணம் கமழ்கிறது. கனிந்த பலாப்பழத்தின் நறுமணம் போகத்தின் படுக்கையில் கிடக்கிறது. தேனிற் துவைத்து உதட்டில் தடவுகிறான் தலைவன். இன்னொரு சுளையென விரிந்த உதடுகளில் தேன் வழுகி கழுத்தில் சிறு நரம்பென ஊர்ந்து வழிகிறது, அவ்வறையின் குளிருக்குள் அகல் எரிகிறது, சுவற்றில் நிழல்கள் பேருருவென அசைகின்றன. தாமரை, அல்லி, கொன்றை, மல்லிகை என்று மலர்களின் பூங்கொத்தொன்று மயிற்பீலிக் கட்டில் தூவப்பட்டிருக்கிறது. முலைகளில் இரண்டு பலாச்சுளைகளைத் தடவிப் பொருதுகிறான் தலைவன். தலைவியோ பலாச்சுளையொன்றை வாயுள் உமிழ்ந்து தலைவனுக்கு ஊட்டுகிறாள். நிழல்களின் இருதலைகள் பின்னிக் கொள்ள, தலைவன் மார்பும் தலைவியின் முலைகளும் ஒன்றையொன்று தேன் தடவிக் கொள்கின்றன. சந்தனக் குச்சிகளும் குங்கிலியமும் மென் புகையென எழுகின்றன. தீயிலை இழுத்து மூச்சின் உள்ளே ஊதினாள் தலைவி. தலைவன் தேன்பலா ஊறிய முலைகளில் மின்னிய காம்பை உதட்டால் ஒற்றியெடுத்து மெல்ல உமிகிறான், அவளைத் திருப்பித் தன் மார்மேல் சாய்த்துக் கொண்டு கூந்தலைக் கோதிவிட்டுச் சொன்னான், சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, உன் உயிர் தவச் சிறிது, காமமோ பெரிது!

தலைவி அவன் மார்பில் பின்தலை நிமிர்த்தி விழிகிறங்கி உதடு குவித்து ஊதினாள், எழுந்தது பலாவின் தேன் மணம். உயிரை விடப் பெரிய காமம் கனிந்து உறைபவளின் பலாச்சுளையூறிய கொங்கைகளில், மொழியே, நீ போதமழிந்து அயர்க!

TAGS
Share This