வேலன் வெறியாட்டு
அப்பாவுக்குச் சாமி நம்பிக்கை அளவுக்கு அதிகம். சாமிகளே அஞ்சி ஒளியுமளவுக்குப் புதிய புதிய சாமிகளைத் தேடி ஓடியபடியே இருப்பார். பிரிந்தாவைக் காதலித்ததை அறிந்த பின் இரண்டு விநோதமான சாமியாடிகளிடம் அழைத்துச் சென்றார். ஒன்று வவுனியாவில் உள்ள ஒரு இளம் பெண் சாமியார். பலவகையான வித்தைகளைக் காட்டி பக்தர்களை ஈர்க்கும் கெட்டிக்காரியாக இருந்தார். பால கிருஷ்ணன், வைரவர், அம்மன் என்று ஒவ்வொரு தெய்வமாகவும் மாறி அதற்கேற்றபடி குரலை மாற்றி உடல் பாவங்களை அபிநயித்து அற்புதமான ஆற்றுகையை நிகழ்த்தினார். உண்மையிலேயே திறமையான கலைஞர் தான். ஒவ்வொரு தெய்வத்தினையும் உடலில் ஆடவிட்டு மெய்மறந்திருந்தார்.
பக்தர்களுக்குக் குறி சொல்லும் நேரத்தில் அப்பா அழைத்துச் சென்று அந்த அம்மனின் முன் நிற்க வைத்தார். கடும் ஆற்றுகையால் கண்கள் இரத்தச் சிவப்பாக இருந்தன. நான் நேராகக் குறுகுறுவென்று அவரின் கண்களைப் பார்த்தபடியிருந்தேன். இத்தகைய சாமியாடிகள் பலரை முன்பே டீல் செய்திருந்ததால், அப்பாவியான, பயபக்தியான முகத்தை வைத்திருந்தேன். இவன் யாரையோ அடித்திருக்கிறான். பொறுக்கிகளுடன் சகவாசம் வைத்திருக்கிறான் என்று இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் ஒரு உருட்டை அம்மன் உருட்டினார். இவ்வேளையில் அம்மனைச் சுற்றி நான்கு சிவப்புத் துண்டுகள் கட்டிய தொண்டர்கள் நின்று கொண்டிருந்தனர்.
நான் இல்லை என்று திரும்பத் திரும்ப மறுத்தேன். அப்பாவோ காதல் விசயத்தை அம்மன் எப்போது கண்டுபிடிப்பார் என்று காத்து நின்றார். அம்மனை எதிர்த்து மறுத்துப் பேசியதால் அம்மன் கோபமாகிவிட்டார். அம்மனை வெறுப்பேற்றக் கூடாது என்று தொண்டர்கள் உறுக்கினர். நம்பும்படி எதையாவது சொல்லு தாயே, இந்தத் தடிக்குச்சி எவனையாவது அடிக்கும் வல்லமையுள்ளவனா என்று அப்பாவும் பார்த்துக் கொண்டிருந்தார். கேஸ் டிஸ்மிஸ் என்று தொண்டர்கள் அனுப்பி வைத்தனர். அம்மன் பாலகிருஷ்ணனாகத் தவழ்ந்த போது எறிந்த லட்டு ஒன்றினைப் பொறுக்கித் தின்று விட்டு திரும்பி வந்தோம்.
இன்னொருநாள் கண்ணகி கோயிலொன்றுக்குக் கூட்டிச் சென்றார். பாதையே இல்லாத இந்தக் கோயில்களையெல்லாம் எங்கு தான் தேடிப்பிடிக்கிறார் என்பது இன்று வரை பிடிபடவில்லை. அங்கு ஒரு ஆண் சாமியார் கோழியையும் சேவலையும் வைத்து வேறொரு வகை ஆற்றுகையைக் காட்டியபடி இருந்தார். திடீரென்று கண்ணகியுடன் நேரடித் தொடர்பில் பேசத் தொடங்கினார். அம்மா சொல்லம்மா, ச்சாய், அப்பிடிச் சொல்லாத, சொல்லு, உன்ர குஞ்சுக்கு என்ன செய்ய என்று கண்ணகியின் குழந்தைகளான பக்தர்களுக்கு ஒரு இடைத்தொடர்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
தரையில் முட்டுக்கால் போட்டு நின்றார், ஊர்ந்தார், சேவலைப் பிடித்து வைத்து அதன் காதுக்குள் ஏதோ பேசினார். பார்த்துக் கொண்டிருக்க நல்ல பொழுது போக்காய்த் தான் இருக்கும். என் முறை வந்தது. வந்திருப்பவர் சரியான சாமியார் தானா என்பதைக் கண்டுபிடிப்பதில் அப்பா சில தந்திரங்களைக் பிரயோகிப்பார். என்ன பிரச்சினை என்று சாமி கேட்டால், எல்லாமே பிரச்சினை தான் சாமி, முடிந்தால் நீயே கண்டுபிடியென்று சாமிக்கு ஒரு பரீட்சை வைப்பார். அதில் தோல்வியடைந்த சாமியார்களை அக்கணமே கைவிட்டு அடுத்த சாமியாரைத் தேடுவது அவரது பழக்கம். இன்றும் நிரந்தரமாக ஒரு சாமியாரை அவர் தேர்ந்தெடுக்கத் தடையாய் இருப்பது அத்தகைய பரீட்சையே. என் முறை வந்த பொழுது முகத்தை சோகமாய்த் தொங்கப்போட்டுவிட்டுப் பாவமாக நின்றார். எனது பக்திபூர்வமான முகத்தைப் பார்த்த பின் சாமியாடி நாலு நல்ல வார்த்தைகள் சொல்ல கேட்டுக் கொண்டிருந்தவர் முகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு ஒளியெழவில்லை.
சாமியாடிக்கு விசயம் ஓரளவு பிடிபட்டுவிட்டது. அப்பா வைக்கும் பரீட்சையை ஏமாற்றி வெல்வதற்கு ஒரு தந்திரத்தைப் பயன்படுத்தினார். என்னைத் தனியாகக் கருவறைக்குக் கூட்டிச் சென்றார். தோளில் கைவைத்து, தம்பி என்னடாப்பா பிரச்சினை சொல்லு என்றார். நான் ஒரு பிள்ளைய லவ் பண்ணுறன். அப்பாக்கு அது சரிவருமா வராதா என்பது தான் சந்தேகம். நீங்கள் சரிவரும் என்று சொன்னால் நல்லம் என்று சுருக்கமாகச் சொன்னேன். முகத்தில் வென்ற களையுடன் திரும்பியவர், கண்ணகிக்கு டயல் செய்து தொடர்பை ஏற்படுத்திய பின் அப்பாவின் முகத்தைப் பார்த்து எல்லாம் சரிவரும் போ. அவன் விரும்பியிருக்கிறது நல்ல பிள்ளை என்று ஒரு தெய்வ வாக்கை அளித்தார். அப்பாவின் முகம் தெளிந்து ஒளி கொண்டது. உதட்டுக்குள் மெல்லச் சிரித்தார். நான் அப்பா குனிந்து காசை எடுத்து தட்டில் வைக்கும் நேரத்தில் சாமியாடியைப் பார்த்து கண்ணசைத்து ஒரு மரியாதையைச் செலுத்திய பின் வீடு திரும்பினேன்.
குறி கேட்டல் அல்லது பலன் கேட்டல் இன்றுவரை இந்த மண்ணில் நிலைகொண்டுள்ள ஒரு வழக்கு. தெய்வம் இறங்கி வந்து பேசும் உடல்களின் மீது மனிதருக்கு இன்றளவும் பெரும் மதிப்புள்ளது. பெரும்பாலானோர் ஏமாற்றுப் பேர்வழிகள் என்றாலும் அந்த ஆற்றுகைக்குள் நீண்ட மரபின் தொடர்ச்சி உள்ளது. ஜெயமோகனின் என்றும் இனிக்கும் சங்க இலக்கியம் பற்றிய ஒரு உரையில் வேலன் வெறியாட்டு என்ற சடங்கைப் பற்றிப் பேசியிருந்தார். அதுவே எனக்கு அச்சடங்கு பற்றிய முதல் அறிமுகம்.
ஜெயமோகன் சொன்னவை, “வேலன் என்பவன் முருகு என்ற சிறிய மலைத் தெய்வத்தின் பூசாரி. வேல் ஏந்தியவன். இன்றிருக்கக் கூடிய முருகன் என்ற பெருந்தெய்வமல்ல முருகு. அதன் முன்வடிவமாக முருகு இருக்கிறது. தலைவி காதல் நோய் கொண்டிருக்கும் பொழுது இது முருகு பிடித்ததாக இருக்கும், முருகு அயர்ந்ததாக இருக்கும் என்று எண்ணி வேலன் வரவழைக்கப்பட்டு வெறியாட்டு ஆடி முருகை நீக்க முயற்சிக்கிறான். ஆனால் முடியாது. ஏனென்றால் அவள் காதல் கொண்டவள். இந்த வேடிக்கை
தான் சங்க இலக்கியத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் கதை”.
“கலித்தொகையில் வெறியாட்டுப் பற்றிய விரிவான சித்திரம் வருகிறது. வேலன் வேலோடு வருகிறான். ஊண் சோறு கலந்து எட்டுத் திசைக்கும் வீசி அந்த வேலைச் சுழற்றிக் கொண்டு நடனமாடுகிறான். நடனமாடிக் குறி சொல்கிறான். இது தான் சங்ககாலம் காட்டக் கூடிய வேலன்”.
“வனமனைத்தும் கொண்ட அழகினால் ஆகி வந்தவன் என்று அர்த்தங் கொள்கையில் முருகு என்ற சொல் வேறொரு அர்த்தம் வருகிறது. அயர்தல் என்பது எப்படி ஒரு உன்னதமாக ஆக்கப்படுகிறது. அறிவு மங்கும் தன்மையென்பது எப்படி ஒருபடி மேலானதொன்றாக ஆகிறது”.
புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர்மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பாகின்றே.
தெய்வத்துக்கென நேர்ந்த பொன்போன்ற தினையை உண்ட மயில் மயக்கு வந்து வெறியாட்டு ஆடும் ஆடுமகளைப் போல்
நடுங்கும் உள்ளம் கொண்ட பெண்ணை நக்கீரரின் இக்கவிதை வெறியுறு வனப்பென ஆக்குகிறது. ஆடுமகளைக் கணிக்காரிகை என்றும் அழைப்பார்கள். தெய்வப் பலிக்கெனத் தன்னை அறியாமல் நேர்ந்துகொண்ட மயிலின் மனதுடன் அறியாமல் தன்னைப் பலியிடும் காதல் தொடர்புபடுத்தப்படுகிறது.
இந்தக் கவிதை ஆடும் மயிலின் உளமயக்கெனக் காமத்தைப் பித்துழலும் நிலைக்கு எடுத்துச் செல்வதால் இதை காமத்தின் உன்னதமாக்கல் என்று ஜெயமோகன் கூறுகிறார்.
அகவன் மகளே கவிதையில் கட்டுவிச்சி வந்து குறிசொல்லும் சடங்கை ஒளவை எழுதியிருப்பார். வெறியாட்டு பல சங்கக் கவிதைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கட்டுவிச்சி, தரையில் அல்லது சுளகில் அரிசியைத் தூவி, அரிசி சிதறி விழுந்த அமைப்பைப் பார்த்துக் குறி சொல்வாள். தாயிடம் இது முருகனின் அணங்கினால் ஏற்பட்டது என்று சொன்னால் முருகனின் சினத்தைப் போக்க வேலனை அழைத்து வந்து வெறியாட்டத்தை நடத்த வேண்டும் என்று கூறுவாள்.
வெறியாட்டு அன்று வீட்டிற்கு முன் புது மணல் பரப்பி, பந்தல் ஒன்றை அமைப்பார்கள். மலர்களால் பந்தலை அலங்கரிப்பார்கள். இரவில் வெறியாட்டம் நிகழும். வேல் ஒன்றைத் தரையில் நட்டி, அதற்குக் கடம்ப மலர் மாலையை அணிவிப்பார்கள். தரையில் அரிசிப் பொரியைத் தூவி, முருகனுக்குச் செந்தினையைக் குருதியுடன் படைப்பான் வேலன். ஆட்டுக் குட்டி ஒன்றைக் கொன்று, பலியாகக் கொடுப்பான். கழங்கினைத் தரையில் தூவி அது விழுந்த விதத்தைப் பார்த்துக் குறிச் சொல்லுவான். வேப்ப மாலையினை அணிந்து, முரசும் பிற இசைக் கருவிகளும் ஒலிக்க, வெறியாட்டம் ஆடுவான். தலைவியின் கையில் தாயத்தைக் கட்டுவான். இது வெறியாட்டுப் பற்றிய சற்று விரிவான குறிப்பு.
வேலனிடம் பேசும் வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனாரின் கவிதையிது.
முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல சினவல் ஓம்புமதி வினவுவது உடையேன்
பல் வேறு உருவில் சில் அவிழ் மடையொடு
சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி
வணங்கினை கொடுத்தியாயின், அணங்கிய
விண் தோய் மா மலைச் சிலம்பன்
ஒண் தார் அகலமும் உண்ணுமோ பலியே.
முருகு உன்னில் வந்து மயங்கும் வேலனே, என் மீது கோபங் கொள்ளாதே. உன்னைக் கேட்பது ஒன்று தான், பல்வேறு நிறங்களைக் கொண்ட சோற்றையுடைய பலியுடன், சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று, தலைவியுடைய நறுமணமுடைய நெற்றியைத் தடவி, முருகை வணங்கி, பலியாகக் கொடுப்பாயின், இவளைத் துன்புறுத்திய வானத்தைத் தோய்க்கும் பெரிய மலையின் தலைவனின் ஒளியுடைய மாலையை அணிந்த மார்பு நீ கொடுக்கும் பலியை உண்ணுமோ?