வெட்டுக்கிளிகள், தவளைகள், ராட்சத நத்தைகள்
இலக்கியத்தினது முதன்மையான பண்பாட்டுப் பணிகளில் ஒன்று தொகுத்து அளித்தல். ஒவ்வொரு மரபும் காலம் மாற மாறத் தான் தனது உடலைப் பாம்பு செட்டையைக் கழற்றுவது போல இயல்பான ஒன்றாகத் தோலை நீங்கி விட்டுச் சென்றுகொண்டேயிருக்கும். முப்பது வருட ஆயுதப் போராட்டம் என்ற செட்டையைக் கழற்றிவிட்டு நமது பண்பாடு வேறொரு தோலைத் தனக்கென ஆக்கிக் கொண்டிருக்கிறது. ஒருமுறை எனது வீட்டில் ஒரு பாம்பு ஆடைப் பெட்டியில் தனது சட்டையைக் கழற்றி வைத்துவிட்டுப் போயிருந்தது. அதற்கு எப்படித் தெரியும் அதுதான் ஆடைகள் வைக்கும் பெட்டியென்று? மனிதர்களின் கதைகளும் அறிதல்களும் அவர்கள் அறிந்தோ அறியாமலோ எங்கு சேரவேண்டுமோ அங்கே அடுக்கி வைக்கப்படுகின்றன. இலக்கியம் பண்பாடுகளின் ஆடைப்பெட்டி. அதுவே நாகரீகங்களைப் போர்த்தியுள்ள பேராடை. ஒவ்வொரு காலத்திற்கும் ஒன்றை விட்டு இன்னொன்றென மாற்றியணிந்தபடி பண்பாடு முன்னகரும். தொகுத்து அளித்தலென்பது நெய்யப்பட்டவற்றில் சிறந்தவற்றை ஒரு பெட்டியில் அடுக்கி வைத்து அடுத்த தலைமுறைகளிடம் கையளிப்பது. நாம் அறியும் பெரும்பாலான கடந்த கால இலக்கியங்கள் தனி நூல்களாக அல்ல, தொகுப்புகளாகவே பரந்துபட்ட கலாசாரத்திடம் வழங்கப்பட்டிருக்கின்றன.
தொகுப்புகளின் தன்மையில் ரசனை அழகியல், புரவலர் பங்களிப்பு, வரலாற்றுக் காலகட்டங்கள், அரசியல் நோக்குநிலைகள் போன்றன செல்வாக்குச் செலுத்தும். எந்தத் தொகுப்பும் இதற்கு விதிவிலக்கல்ல. எல்லோரும் சொல்லிய, எல்லோரும் எழுதிய, எல்லாமே தொகுக்கப்படுவதில்லை. ஏதொவொரு வகை மதிப்பீடே தொகுப்புகளை முக்கியத்துவப்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலிருந்து எஞ்சுபவை எவை? கையளிக்கப்பட வேண்டியவை எவை? என்ற பார்வையிலிருந்தே ஒரு பண்பட்ட சமூகம் தன் தேர்வுகளை ஆக்குகிறது.
தொகுப்பது என்பது வெறுமனே அரசியல் நோக்குநிலை சார்ந்து மட்டுமே புரிந்து கொள்ளப்படக் கூடாது. தொகுப்பது என்பது முதன்மையாக அக்காலகட்டத்தின் ரசனையைத் தொகுப்பது. மதிப்பீட்டில் எந்த ரசனையின் தேர்கரங்கள் முன்னேறியவையோ அவை சமூகத்தில் அடுத்தகட்ட அசைவை உண்டாக்கி காலத்தில் தம்மை நிலைத்துக் கொள்கின்றன.
*
ஒரு மொழியில் நிகழும் கவிதைகள் தத்தும் வெட்டுக்கிளிகள். சிறுகதைகள் தாவும் தவளைகள். நாவல்கள் பண்பாட்டைத் தன் வீடென முதுகில் உணர்ந்து ஊரும் நத்தைகள். இந்த மூன்று உவமைகளும் அவ் உயிரிகளின் இயல்புகளினால் சுட்டப்பட்டிருக்கின்றன.
அதிகளவிலான எண்ணிக்கையில் எழுதப்படுவதினால் பெருகும் இயல்பு கொண்டதாக லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளெனக் கவிதைகள் ஒரு மொழியில் உருவாகின்றன. உச்சங்களை நோக்கி மொத்தப் பிரவாகமென வேகங் கொண்டு பயணிக்கின்றன. மேலும், கவிதையால் மொழிக்குள் நிகழ்வது ஒரு தத்தல். ஒன்றிலிருந்து இன்னொன்றாக மொழியைத் தத்துவது அதன் இயல்பு.
சிறுகதைகள் மொழியினாலும் அறிதலினாலும் மானுட உள்ளத்தில் தாவலை நிகழ்த்த வேண்டிய வடிவம். தத்தலுக்கும் பிராமண்ட வீட்டை இழுத்தபடியும் நகர்பவற்றுக்கிடையே தாவி மீளும் இயல்பு கொண்டவையாக அமைய வேண்டும்.
ஒரு சிறுகதை ஒரு நாவலிற்குள் எங்கோ அமைய வேண்டிய ஒரு அத்தியாயம் என்ற புரிதல் இருக்க வேண்டும். வரலாற்றின் ஊர்தலுக்கும் தத்துவத்தினை உள்ளொடுக்கிய அறிதலுக்கும் முன்னும் பின்னும் தன்னைத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறுகதையை ஏதோவொரு நாவலின் அத்தியாத்தை வாசிக்கும் அடர்த்தியுடன் உள்வாங்கும் வகையில் அதன் இயல்பு ஒருங்க வேண்டும்.
நாவலை நம் காலத்தின் முழுமை கூடிய இலக்கிய வடிவமெனக் கொள்ளுவது எனது தரப்பு. வரலாறு தத்துவம் எனும் இரண்டு சிறகுகள் கொண்ட வடிவமென்றும் அதனைக் கூறுவர். அது நிதானமாகத் தன் மொழியுடலால் அதன் களங்களை ஊர்ந்து, ஈரம் கசியக் கசிய நகர வேண்டியது. பின் தன் பண்பாட்டின் கூட்டில் மொழியுடலைத் திரும்பச் சேர்த்துக் கொண்டு முழுமை கூடும் உயிரியெனத் திகழவேண்டியது.
ஒவ்வொரு சிறுகதையும் தாவித்தாவி முன்னேறுவது ஏதோ ஒரு மகத்தான நாவலின் பகுதியெனத் தன்னை ஆக்கிக் கொள்வதற்காகத் தான். ஒவ்வொரு கவிதையும் மொழிதுலக்கி சடசடவெனத் தத்தியபடி படையெடுத்து உச்சம் நோக்கி நகர்வது, அம் மகத்தான நாவலின் நாடகீய உயரங்களில் ஒளிர்விடும் வரியெனத் தன்னைப் பொருதிக் கொள்ளத் தான். இரண்டும் நாவலெனும் கலை வடிவத்தினுள் முழுமை கூடிப் பொருதுகையில் ஒரு பண்பாடு தான் இதுவரையறிந்த ஒட்டுமொத்த அறிதல்களினதும் கண்டடைதல்களினதும் சிகரங்கள் போலான நாவல்கள் தோற்றம் பெறும்.
இம்மூன்றின் கூட்டிணைவினதும் ரசவாதத்தினையும் இழைப்பையும் அறிந்து கொண்டு பெருங்கலையை ஆக்கியளிக்கும் கலைஞர்களுக்காக ஈழத்தமிழ் இலக்கியம் காத்திருக்கிறது.
*
ஆற்றின் ஆதிச் சுனையிலிருந்து அது முடியும் கழிமுகக் கடல் வரை நீளக் கூடியது நாவல் எனக் கொண்டால், அந்த நீரின் பொங்கும் பரப்பையோ திரும்பும் பெருவளைவையோ நீர்வீழ்ச்சியெனப் படீரென வீழும் குத்திடும் சரிவையோ அல்லது வழிநடக்கும் ஆற்றின் திடுக்கிடலையோ ஒரு சிறுகதைக்குள் இருந்தாக வேண்டிய பண்பு எனக் கொள்ளலாம். சுவாரசியம் என்பது விறுவிறுப்பான மொழிநடையால் ஆவதல்ல. அது மொழியினாலும் நிகழக்கூடியது தான். ஆனால் சுவாரசியமான மொழி தனித்து ஒரு கலையை உண்டாக்கி விட முடியாது. அதற்குக் கதையின் அடர்த்தி, வர்ணனைகளின் வழியான புறச் சித்தரிப்பு, கவித்துவத் தத்தல், நாவலெனும் கொடுமுடி நோக்கிய ஓரடி தாவல் தன்னும் இருந்தாக வேண்டும்.
நான் ஏன் சிறுகதைகளையோ நாவலையோ வாசிக்கிறேன் என்று எண்ணிப் பார்க்கிறேன். எனக்கு சமகால இலக்கியங்களை வாசிப்பதில் இருக்கின்ற பெருந்தயக்கத்திற்குக் காரணம் இளவயதில் வாசித்த பேரிலக்கியங்களின் தாக்கம். இழை இழையாகப் பின்னப்பட்டும் அடி அடியாகச் செதுக்கப்பட்டும் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான மெய்நிகர் உலகுகளில் அலைந்திருக்கிறேன். உலகில் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான மகத்தான நாவல்களையும் கதைகளையும் வாசித்திருக்கிறேன். இது சமகாலத்தை வாசிக்கும் ‘வடியாக’ ஆகிவிடுகிறது. ஏற்கெனவே கண்டடையப்பட்ட ஒரு இலக்கிய உண்மை மீள சமகாலத்தில் விவாதிக்கப்படுவதோ அல்லது புதிதாகக் கண்டடையப்படுவதோ முக்கியமானது. ஆனால் அப்புதிய கதை குறந்தபட்சம் அந்த இலக்கிய உண்மையின் அகச்சிக்கலில் ஏதாவதொரு புதிய இழையையாவது நெய்திருக்க வேண்டும். ஒரு அடியையாவது மேலும் செதுக்கியிருக்க வேண்டும். இந்த அடிப்படையைப் பூர்த்தி செய்யாதவற்றை நான் வலிந்து வாசித்துக் கொள்வதில்லை.
இமிழ் கதைமலரில் என்னை வெகுவாக ஈர்த்த மூன்று கதைகளின் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு எனது மேற்சொன்ன கருத்துக்களுக்கான உதாரணங்களை விரித்துக் கொள்கிறேன். எனக்கு ஒரு இலக்கிய அனுபவம் உண்டு. ஒரு நல்ல கலையை நான் அறியும் பொழுது என் உளம் முழுதறிய முன்னர் உடலியல் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இதுவொரு உளமயக்காகக் கூட இருக்கலாம். ஆனால் என்னளவில் அதுவே இலக்கியத்தின் போதையம்சம்.
ஒரு நல்ல கவிதையை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது, சிலநேரம் அந்தக் கணத்தில் மூளை அதை நல்ல கவிதை என்று உணர்ந்திருக்காத போதிலும், காலைப் பனியில் பந்தலெல்லாம் பூத்துக்கிடக்கும் மல்லிகைகளின் நறுமணமெழுந்து எனது நாசிக்குள் நுழைந்து மிதத்தும். ஏதொவொன்று அந்தக் கவிதையில் இருக்கிறது என்பதை உடலால் உளமறியும்.
அதேபோல ஒரு நல்ல கதையை வாசிக்கும் பொழுது உடலின் நரம்புகளிலெல்லாம் இரத்தம் குபுகுபுவென்று குதித்தோடுவது போலிருக்கும். அத்தகைய உடலியல் மாற்றம் நிகழத் தொடங்கிவிட்டால் காவல் நாயெனத் திடுக்கிட்டெழுந்து புலன்கள் கூர்கொண்டு விழித்து விடும்.
இமிழ் கதைமலரில் என்னைக் கவர்ந்த முதற்கதை, அ. முத்துலிங்கம் எழுதிய ‘சைபர் தாக்குதல்’ என்ற கதை. இழப்பின் விடுதலை என்ற சொல்லிணைவு கதையை வாசித்து முடித்த பொழுது மனதில் எழுந்தது. குள்ளமான உருவங் கொண்ட சகா என்னும் சகாதேவன். சிறுவயதில் இருந்தே தனது குன்றல்களையும் தாழ்வுணர்ச்சிகளையும் அறிவுப் பெட்டியை வைத்தோ பணப்பெட்டியை வைத்தோ சமப்படுத்தியபடியே வருகிறார். ஆனால் ஒரு முற்றறிந்த இழப்பின் பின் வாழ்க்கை வேறொருவகையான அறிதலை அளிக்கிறது. எல்லா வகையிலும் சுதந்திரம் அளிக்கப்பட்ட அவரது மகள், ஏதொரு தடையுமின்றி சுமூகமாகவே நிகழ்ந்திருக்க வேண்டிய இணைத் தேர்வை, ஒரு தப்பியோட்டத்தால் சாகசமாக்கிக் கொண்டாள். அவளைக் கண்டுபிடிப்பதும் கட்டுப்படுத்துவதும் சகாவுக்குச் சொடுக்கெடுக்கும் வேலைக்குச் சமம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அவரிலிருந்து ஒரு மயிர் உதிர்வதான பாவனையில் நகர்கிறார். அவரியல்புக்கு அது நேரெதிரானது. விடுதலையுணர்வு என்பது சகா வைத்திருக்கும் வெறும் பெட்டி போல, அதுவரை கூச்சத்தினால் பிறரின் முன் பெட்டியின் மேல் ஏறி தனது நாற்பதாம் மாடிக்கான லிப்ட் இலக்கத்தை அழுத்த முடியாதவர். சட்டென ஒரு நிகழ்வின் பின் தனது பெட்டியை விட்டு வெளியேறிச் சுற்றியிருப்பவர்களைப் பொருட்படுத்தாமல், எந்தக் கூச்சமுமின்றி, தான் விரும்பியபடி நடந்து கொண்டார். அது அவரது மகள் அளித்த இழப்பின் விடுதலையுணர்வு. தனது தேர்வைத் தான் விரும்பியபடி நிகழ்த்தும் சுதந்திரம்.
கதையின் இறுதியில், ஒருலட்சம் டொலர்களைக் ஹோட்டல் முன்பதிவொன்றுக்காகச் சாதாரணமாகச் செலவழித்து விட்டு,
சகா சொல்லும் வாக்கியத்தை வாசித்த பொழுது அம்மனத்தின் சிரிப்பொலி கேட்கும், “அற்ப விசயம் ஒன்று கொடுக்கும் அற்ப சந்தோசத்துக்காக அற்ப காரியம் ஒன்றைச் செய்யலாம். தப்பே இல்லை”.
கதையை வாசித்து முடித்ததும் தோன்றிய இரண்டாவது நினைப்பு முத்துலிங்கம் பற்றியது. படையப்பா படத்தில் நீலாம்பரி படையப்பாவைப் பார்த்துச் சொல்லும் ஒரு வசனம், “படையப்பா, வயசானாலும் உன் அழகும் ஸ்ரைலும் இன்னும் மாறல”.
இரண்டாவது கதை, சப்னாஸ் ஹாசிம் எழுதிய ‘கன்னி ரத்தம்’ என்ற கதை. வாழ்வின் மாந்திரீகம் என்ற சொல்லிணைவினால் இந்தக் கதையை அழைக்கலாம். பொதுவான மாந்திரீகக் கதைக்களங்களிலிருந்து வேறொரு அடுக்கில் நிகழும் கதையம்சம் கொண்டது சப்னாசின் கதையுலகு. மாந்திரீகத்தின் திடுக்கிடும் சுவாரசியத்தினால் அல்ல, கதையின் நுட்பமான வர்ணனைகளாலும் கதை பின்னப்படும் இழைவுகளாலும் முக்கியமாக ஆகும் கதை. முன் பின் என விரியக் கூடிய வரலாற்றின் நீள் மாந்திரீகக் கயிற்றின் மீது நடக்கும் கதை. அதற்கான பின் தளம் கதையில் மிக விரிவாகவே உருவாகியிருக்கிறது, தலைமுறைகளின் மாந்தீரிக வாழ்வின் சாபம் உடலென ஆன பெண்ணான சாராவின் வாழ்வில் கொக்குப் பட்டமொன்று குத்தியெழும் கணங்களளவான சிலநாட்களின் கதை. கதையின் அடர்த்தியான வர்ணனைகளும் கதைத் தொடர்ச்சியைப் பின்னும் விரல்களில் தேர்ந்த கையொன்றின் படுகை புலப்படுகிறது. சப்னாஸ் முக்கியமானன நாவலாசிரியராக மேலெழ வேண்டியவர். வாழ்விற்கு அன்றாடமான யதார்த்தங்களால் மாந்திரீகத்தன்மை உருவாவதுண்டு. அதன் தற்செயல்களால் உருவாகும் புதிர்களும் அவை அவிழும் தற்செயல்களும் எக் கரங்களால் எங்கு இடப்படுகின்றன எங்கு அவிழ்க்கப்படுகின்றன என்பதை தர்க்கத்தால் கணிக்க முடியாது. அதையே வாழ்வின் மாந்திரீகம் எனச் சுட்டுகிறேன்.
மூன்றாவது கதை தர்மு பிரசாத் எழுதிய ‘செவ்வாத்தை’ என்ற கதை. இந்தக் கதையையே இமிழில் மிக முக்கியமான அடைவு கொண்ட கதை என்று மதிப்பிடுகிறேன். கதைக்கான அம்சங்களுடன் முழுமையை நோக்கிய சித்திரத்தைக் கொண்ட அகவுலகு உள்ளது. வரலாறாகவும் தத்துவார்த்தமாகவும் இணைக்கக் கூடிய தொடு இடங்களையும் கொண்டிருக்கிறது. விநாசியின் எழுத்தின் தன்மையை விபரிக்கும் பொழுதிலும் நகைப்பெட்டிக்குள் மண்புழு நெளிவெனக் கிடக்கும் நகைகளின் தோற்றத்தை வர்ணிக்கும் போதிலும் அறைக்குள் அம்மணமாக நிற்கும் அக்காளின் நிர்வாண உடலில் செவ்வொளி பரவிப் பேயனெத் துரத்தும் ஆத்தையின் கண்ணை அகம் கொள்ளும் கணத்திலும் தலையில் சிறுமங்கற் சிவப்பின் துடிப்பொளியில் கிடைக்கின்ற மீட்பின் புன்வெளிச்சத்திலும் உள்ள வியப்பை உடலால் உளமறிந்தது. கதைக் கட்டுமானம் என்ற அம்சத்தில் தர்மு பிரசாத் அடைந்திருக்கின்ற தாவல் முக்கியமானது. ஆத்தையின் செவ்வொளிக் கல் ஒவ்வொரு பிரகாசத்தின் ஊடேயும் ஒவ்வொன்றாய் உருமாறியபடி ஒளிர்வது போல் ஒரு நாவலைச் சுடரேற்றும் தீத்துளியென இக்கதை வாசிப்பில் மேலெழுந்து வந்தது.
இமிழை வாசிக்கின்ற பொழுதும் இலக்கியச் சூழலை அவதானிக்கும் போதிலும் இத்தனையாண்டுகளாக மகத்தான நாவல்களை நோக்கித் தத்தலாகவும் தாவலாகவும் நகர்ந்து வந்து கொண்டிருக்கும் கவிதைகளும் சிறுகதைகளும் தமது வீட்டினைக் கண்டு கொண்டுவிட்டன என்ற மனச்சித்திரம் உள்ளூர எழுந்தது.
ஒருவகையில் புறம் சார்ந்த யுத்தத்தின் சித்தரிப்புகள் பூச்சுக் கழன்ற வீடு போல் உதிரத் தொடங்கி மானுட அகம் சார்ந்த சித்தரிப்புகளுடன் புறம் பூசப்படுகிறது. மானுடரின் அகங்கள் பெருக்கனத் திரண்டு புறத்திற்கு நிறங்களை அளிக்கின்றன. அந்த அகச் சிக்கல்களைத் தொட்டுத் தீற்றப்படும் ஓவியப்பரப்பில் மாபெரும் இப்புயற் களத்தின் அமைதியான கண்ணினை ஆக்குவது கலை மேதமை கொண்ட உளங்களால் நெருங்கி அறியக் கூடிய தளம் என நினைக்கிறேன். கொட்டிவீசப்படும் கதைப்பெருக்கிலிருந்து அப்புயற்கண்ணை உணரும் மனங்கள் தம்மை உந்தி மீறிக் கண்டடைந்தவற்றை மானுடம் முழுமைக்கான அறிதலாக வெளிப்படுத்த வேண்டும்.
யேசுவின் பிறப்பின் போது தோன்றிய மூன்று நட்சத்திரங்கள் ஒரு தீர்க்கதரிசனம் என்ற கதையுண்டு. இமிழில் உள்ள கதைகள் அத்தகைய நம்பிக்கையின் தீர்க்கதரிசனத்தை அளிக்கின்றன. உதாரணத்திற்கு மூன்று கதைகளை மேலே விபரித்திருந்தேன். தொகுப்பில் பா. அ. ஜயகரன், அகரன், யதார்த்தன், செந்தூரன் ஈஸ்வரநாதன், உமா வரதராஜன், தொ. பத்திநாதன், ஓட்டமாவடி அறாபத், நெற்கொழுதாசன் ஆகியோரது கதைகளில் உள்ள பல அம்சங்கள் விவாதிக்குமளவு அடிப்படைகள் கொண்டவை என்பது என் அவதானிப்பு.
நமது பண்பாட்டை வீடென முதுகில் உருவாக்கி வரலாற்றினதும் தத்துவத்தினதும் அறிதலடியில் தமது ஈரவுடலால் ஊர்ந்தபடி முழுமை கூடிய நாவலாசிரியர்கள் மெல்ல மெல்ல அசைந்து முன்னகர்வதின் மென்னொலியை இமிழ் எழுப்புகிறது.
மானுடம் எனும் பெருங்கனவில் இந்த மண்ணின் கதைகள் சென்று திகழ்தல் என்ற அம்சம் முக்கியமானதில்லையா! உலக இலக்கியம் என்ற மகத்தான சிகரங்களுள்ள கலைப்பரப்பில் நாமும் ஒன்றென நிமிர்ந்து பொலிவது நமது அடுத்த அடியாக இருக்க வேண்டுமில்லையா!
(04. 05. 2024, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இமிழ் கதைமலர் குறித்த அறிமுகக் கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரையின் முழுமையான வடிவம்)
குறிப்பு: முகப்பிலிருக்கும் படம், இமிழில் உள்ள இராமர் வில் என்ற நெற்கொழுதாசனின் கதையில் உள்ள கறுப்பிக் குளத்தில் இமிழை வைத்து எடுக்கப்பட்ட படம், இப்பொழுது கோடை காலம் என்பதால் தமரைகளின்றி இலைகள் மட்டும் விரிந்து கிடக்கும் கறுப்பிக் குளம், ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு பேரழகுடன் அலைததும்புவது.