எங்கிருந்து பார்ப்பது

எங்கிருந்து பார்ப்பது

யாழ்ப்பாணத்தில் நடந்த இமிழ் கதைமலரின் அறிமுக நிகழ்வில் நான் ஆற்றிய உரை இலக்கியச் சூழலில் வாழ்த்தப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது. வாழ்த்துகளை ஒருபுறம் வைத்து விட்டு, விமர்சனங்களையும் கேலிகளையும் சில அன்பான பரிந்துரைகளையும் கவனத்தில் எடுக்கலாம்.

முதன்மையாக எழுந்த சிக்கல் எனது திமிர்த்தனமான தெனாவெட்டான இலக்கிய ஞானம் சொட்டுகின்ற உடல்மொழி. சிலரால் கேலியாகவும் சிலரால் அன்பான முறையில் பணிவற்றதோ அல்லது அவையடக்கமற்றதாகவோ கருதப்படுகிறது.

எனது கவிதைகள் சில உள்ளடக்கப்பட்ட கூட்டுத் தொகுப்பான மயான காண்டம் வெளியீட்டைத் தற்போது நினைத்துப் பார்க்கிறேன். அப்பொழுது வயது 20. மேடையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தேன். அரங்கிலிருந்த அண்ணன்கள் சிலர் கைகளாலே சைகை காட்டி, காலை இறக்கும் படி விநயமாகக் கேட்டுக் கொண்டனர். எனக்கு முதலில் அவர்கள் சொன்னது விளங்கவில்லை. ஒரு டெனிம் ஜீன்சும் எல்லாக் கூட்டத்துக்கும் போட இருக்கும் இரண்டு நல்ல சட்டைகளில் ஒன்றான மண்ணிற சேர்ட்டும் அணிந்து முள்ளு பாட்டா என்று அழைக்கப்படும் செருப்பையும் போட்டுக்கொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தேன். மேடையில் வயதில் பெரியவர்கள் எல்லாம் அமர்ந்திருக்கிறார்கள் காலை இறக்கி இரடா என்று அன்பாகக் கேட்டுக் கொண்டார்கள். நான் காலை இறக்கிய அடுத்த கணம் மற்றக் காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தேன். விசயம் எளிமையானது, ஒன்று என்னை நீங்கள் மேடையில் அமர்த்தக் கூடாது. அது எனக்கு அவசியமுமில்லை. ஆனால் அமர்வதானால் நான் விரும்பியபடி தான் நான் அமர்வேன். கால் மேல் கால் போடுவேன். முதலாவது பட்டன் திறந்து தானிருக்கும்(இது எனது பாடசாலைக் காலப் பழக்கம்), எனக்கு வாகான உடல்மொழி தான் வெளிப்படும். முன்னிருக்கும் எவருக்காகவும் நான் என்னை இழக்க மாட்டேன். அதற்காக அது வேண்டுமென்று செய்வதுமில்லை. எனக்கு அது இயல்பாக வருகிறது. என்னை நான் அப்படியாகவே முன்வைத்துக் கொள்ள விரும்புகிறேன். மற்றவர்களின் உடல்மொழியைக் கூட அவர்கள் இறுக்கமாகவோ தளர்வாகவோ எப்படி இருந்தாலும் அதைப் பொருட்படுவதில்லை. அவர்கள் எப்படி எழுந்தருள விரும்புகிறார்களோ அவர்கள் அப்படியே ஆகுவதில் எனக்கு ஒருகருத்துமில்லை.

எழுத்தாளர் அல்லது கவிஞர் என்ற எனது தன்னிலைக்கு ஒரு சொல்மொழி இருப்பது போலவே அதன் நீட்சியான உடல்மொழியும் இருக்கிறது. அது எனது சொற்கள் மனதுள் உருவாகுவதன் இன்னொரு பாவம். எனக்கு சுந்தர ராமசாமியோ ஜெயமோகனோ எஸ் ராமகிருஷ்ணனோ பேசும் பேச்சுகளில் உள்ள உடல்மொழி பிடிக்கும். பவ்வியமான சிறுவனின் வியப்புடன் ஆற்றப்படும் உரைகள். உள்ளூரில் நிலாந்தன், கருணாகரன், தி. செல்வமனோகரன், ராஜேஷ்கண்ணா ஆகியோரின் உடல் மொழியும் குரலும் பிடிக்கும். தேர்ந்த மேடைக்கலைஞர்கள். ஆனால் நான் இவர்கள் யாருமல்ல. எனக்கு ஜெயகாந்தனின் விடைத்த உக்கிரமான உடல்மொழியே என்னுள் எழுவதாக உணர்கிறேன். அந்தத் தோற்றத்தை அவரது காலத்திலும் அகங்காரம் என்றும் திமிர் என்றும் மொழிபெயர்த்தார்கள். ஜெயகாந்தனோ அவ்வாறே ஆகுக என்று அம்மொழிபெயர்ப்பை எதிர்கொண்டார். ஜெயகாந்தனின் பேச்சாற்றல் எனக்கில்லை. அவர் மதகு திறந்த பேராறெனச் சொற்களைப் பிரவாகிப்பவர். எனக்கு அப்படி இருகரைகளுக்குள் பொங்க வராது. ஆனால் உடல் மொழியில் அவரின் ஒத்த தன்மைகளையல்ல என்னில் உணர்வது, அவரின் இயல்பும் சுதந்திர உணர்வும் தான் என்னை ஈர்ப்பது.

(ஜெயகாந்தன்)

மூன்று உடலசைவுகளை எனது உரையில் கவனித்தேன். ஏதாவதொன்றைச் சற்று விரிவாக விளக்கும் பொழுது கரங்கள் அசைந்து குவிந்து விரிந்து நடனமிடுகின்றன. கொஞ்சம் நக்கலாகவோ முன்னிருப்பவர்களுக்கு ஏற்றுக் கொள்வதற்குக் கடினமென்றோ நான் கருதுபவற்றைச் சொல்லும் பொழுது கைகளைப் பின் புறம் கோர்த்துக் கொள்கிறேன். ஒரு எண்ணத்திலிருந்து இன்னொரு சிந்தனைக்குத் தாவும் பொழுது இடுப்பில் ஒரு கை ஊன்றி நெற்களை விசிறியெறிவது போல் மறு கையை விரித்துக் கொள்கிறேன். நிகழ்வின் காணொலியில் எனது நடனத்தையும் தோற்ற வெளிப்பாட்டையும் நானே சிரித்துக் கொண்டு பார்த்தேன். எதிரிலிருந்தவர்களும் புன்னகையுடன் ஒரு சிறுவனின் நாட்டியம் என அதை எடுத்துக் கொண்டிருந்தால் வம்பிருந்திருக்காது. அதை ஒரு சின்னப்பெடியனின் திமிர் என மொழிபெயர்த்து விட்டார்கள். அம்மொழிபெயர்ப்பும் எனக்குப் பிடித்திருக்கிறது. அது அவ்வாறே ஆகுக!

இரண்டாவது சிக்கல், என்னுடைய சில கருத்துகள் பற்றியது. உரையின் போது தற்கால இலக்கியங்களை நான் வாசிப்பதில் உணரும் ஆர்வமின்மைக்குக் காரணம் அறிந்தோ அறியாமலோ சிறு வயதில் இருந்தே நான் தேர்ந்தெடுக்கப்பட்ட மகத்தான இலக்கியங்கள் என்று இன்று வரை சொல்லப்படும் எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன். எல்லாவற்றையும் என்றால் பெரும்பாலனவற்றை என்று அழுத்தியும் சொல்லியிருந்தேன். அப்படி வாசித்திருப்பது எனக்கு சமகாலத்தை வாசிப்பதற்கான ‘வடியாக’ ஆகிவிட்டது என்று கூறினேன். அதனைக் கூட்டத்திலிருந்த சில நண்பர்கள் நான் உலக இலக்கியம் எல்லாவற்றையும் வாசித்து விட்டதாகக் கூறியதாக திரித்து சமூக வலைத்தளமொன்றில் எழுதியிருக்கிறார்கள். நான் சொன்னதற்கும் இவர்கள் பொருள் கொண்டதற்கும் இடையில் உள்ள விடுபடலில் எத்தனை தோற்ற மயக்கங்கள் உண்டாகும். யாரேனும் உலகின் மொத்த இலக்கியத்தையும் வாசித்தேன் என்று சொல்ல முடியுமா? குறைந்த பட்சம் ஒரு தர்க்கமாவது இருக்காதா? ம்ம். என்ன செய்ய, என்னுடைய தமிழ்ப் பேச்சுகளின் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் இன்னும் நான் சொல்ல வருதைக் கூர்ந்து கவனிப்பது அவர்களின் இலக்கியச் சிந்தனைகளை இன்னும் விரிவாக்க உதவும் என்று வேண்டி விரும்பிப் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

ஏன் ஒருவர் தனது தன்னிலையை ரசனையின் மதிப்பீட்டை முன்வைத்து தனது உரையை ஆற்ற வேண்டும்?

முதன்மையாக நான் எங்கிருந்து உலகைப் பார்க்கிறேன் என்பது முக்கியமானது. ஒருவர் உள்ளூர் இலக்கியங்களில் பெரிய பாண்டித்தியம் கொண்டிருக்கலாம். எந்த இதழ் எத்தனையாம் ஆண்டு வெளிவந்தது, 1940 களில் எந்தப் புத்தகத்தை யார் பதிப்பித்தது, பாலியல் சார்ந்த சித்தரிப்புகள் வலிந்து எழுதப்படுகிறதா? அவை வக்கிரமா? எப்படி வேண்டுமானாலும் அவர்களுடைய திறன்களும் கேள்விகளும் அமையலாம். ஆனால் இலக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டிய முதன்மையான அம்சம் ஒருவரின் ரசனை சார்ந்த நுண்ணுணர்வு. ஒருவர் இலக்கியத்தின் சிகரங்களை உள்ளாழம் வரை சென்று அறிந்து தனது உணர்கொம்புகளை உருவாக்கிக் கொள்ளாமல் தகவல்களால் அறியப்படும் வாசிப்பு ஒருவகை ஆவணப்படுத்தல் பங்களிப்பு மட்டுமே. ஈழத்துச் சூழல் கெட்டு நாசமாய்ப் போயிருப்பதற்கும் இத்தகைய விமர்சனப் போக்கே காரணம். ஒரு ஆக்கத்தின் மீது வாசகர் நிகழ்த்த வேண்டிய முக்கியமான அறிதல் என்பது தன்னிலையை உதிர்த்து விட்டு அவ் ஆக்கம் அளிக்கப்போகும் அறிதலுக்காகத் தன்னைத் திறந்து கொள்ளுதலே. இலக்கியம் மொழிநுட்பங்களின் கலை. கற்பனையின் நுண்மைகளால் மெய்நிகர் ஒன்றை உணர மனதைப் பழக்கும் வித்தை. என்னவகையான புதிதான ஒன்றை மொழியில் ஒருவர் ஆக்கியிருக்கிறார் என்பதே அதை மதிப்பிடுவதற்கான முதற் கருவி. ஆனால் பெரும்போக்கான நம் வாசகச் சூழல் கதைகளில் அளிக்கப்படும் கருத்துக்களையும் தாமறியாத வாழ்க்கைச் சூழல் பற்றிய சித்தரிப்புகளையுமே முக்கியமான கதைகளாகக் கருதும் போக்கு நிலவி வருகிறது. பெரும்பாலும் குழந்தைகளுக்கான நீதிக்கதைகளையே நல்ல கதைகள் என்றும் சொல்லி வருகிறார்கள்.

தகவல்களுக்காக அல்ல நுட்பங்களிற்காகவும் கண்டடைதல்களுக்குமாகவே ஒரு இலக்கிய ஆக்கமோ கலையோ நிகழ்கிறது. இதையே நவீன இலக்கிய ஆரம்ப காலம் முதல் நம் முன்னோடிகள் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். இந்த எளிமையான பிரிப்புக் கூட நிகழ்வதற்கு வாய்ப்பற்று, முன்னேறாத நமது சூழல் கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான வாசிப்பு முறையில் தேங்கியிருப்பது ஒரு ஈழத்து இலக்கிய இளவலாக எனக்குத் துயரச் செய்தியே. வெகுசிலரே இதனை மீறிய வாசிப்புகளை அளித்து வருகிறார்கள். அந்தளவிற்கு ஆறுதல்பட்டுக் கொள்ளலாம். (அவர்கள் யார் என்பதைப் பரம ரகசியமாக வைத்திருக்கிறேன்).

மூன்றாவது சிக்கல், இது ஒரு கேலியாகச் சில நண்பர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. கதைகளை நான் வாசிக்கும் பொழுது உடலில் குபுகுபுவென்று இரத்தம் ஓடுவதை உடலறியும் அதன் பின்னர் காவல் நாயின் புலன்களென மனம் விழித்துக் கொண்டு அந்த ஆக்கத்தைக் கூர்மையாகக் கவனிப்பேன் எனச் சொன்னேன். கவிதைகள் வாசிக்கும் பொழுது நாசிக்குள் காலைப் பனியில் பூத்துக் கிடக்கும் மல்லிகை வாசம் நுழைந்து மிதத்தும் எனவும் சொல்லியிருந்தேன். இது ஒருவருடைய இலக்கிய அனுபவம் சார்ந்த குறிப்பு. உளமறிய முன்னர் உடலறியும் அனுபவம் வாய்ப்பது இலக்கியத்தின் போதையம்சம் எனவும் கூறியிருந்தேன். இதில் கேலி செய்பவர்களைப் பார்த்தால் இலக்கியம் வாசிப்பதால் இவர்களுக்கு என்னவிதமான அனுபவம் வாய்க்கிறது என்றே தெரியவில்லை. இது பிற கலைகளிலும் சொல்லப்படும் அனுபவம் தான். ஒரு கலை ஒருவருள் உடலியல் அம்சங்களைத் தொட்டு எழ வைப்பதற்கு அகம் அந்த வடிவத்தினால் பயின்று தன் ஆழுள்ளத்தை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். இதற்குத் தான் மகத்தான நுண்ணுணர்வுகளை உளத்திற்கு நல்கும் இலக்கியக்கங்களை வாசிக்கச் சொல்லித் தலையாய் அடித்துக் கொள்கிறேன். மயிற் பீலியின் ஒரு மின்னும் துண்டைக் கொண்டு ஆடும் பெரு மயிலை ஆக்கிக் கொள்வது போல் ஒரு சொல் இன்னொன்றாகக் கற்பனையில் தோகையவிழ்க்க வேண்டியது. அதற்கு சொல் ஒரு தியானமென நுழையும் மனம் உருவாக வேண்டும். அது முற்றிலும் அவ்வடிவத்தின் மீதான தாகத்தினாலும் பயில்வினாலும் அகத்தை உருமாற்றும் தொடர் நிகழ்வு.

ஆழகம் பயிற்றுவிக்கப்பட்டு உணர்கொம்புகள் வளர்ந்த பின்னர் எவருக்கும் எக்கலையிலும் அறியக்கூடிய அனுபவமாகவே உடலியல் அனுபவங்கள் இருக்கும். ஒரு கலையின் முன் அகம் எழுந்து மிதக்கும் பரவசமடைவதும் இன்னொன்றின் முன் தொண்டைக்குள் உப்புத்திரண்டு கண்ணீர் பெருகுவதும் இன்னும் பலவித உடல் பாவங்களும் கலையின் பகுதிகளே. ஆனால் அதற்கு உளம் அவ்வடிவத்தை யோகமெனப் பயில வேண்டும்.

நெடுந்தீவில் இடம்பெற்ற நேதாமோகனின் புத்தக வெளியீட்டில் நான் ஆற்றிய உரையைப் பலரும் பாராட்டியிருந்தார்கள். இந்த உரைக்குப் பின்னர் சில நண்பர்கள் அதனையும் இதனையும் ஒப்பிட்டுச் சொல்லியிருந்தார்கள். நேதாமோகனின் புத்தக வெளியீட்டில் பேசும் பொழுது முன்னால் அமர்ந்திருந்த பெரும்பாலானவர்கள் ஊரவர்களும் பொதுசனங்களுமே. மக்களின் முன் உரையாற்றும் பொழுது மனதின் எண்ணங்கள் முன்னிருப்பவர்களின் சிந்தனைகளுடன் எதிர்வினை புரிவதில்லை. அந்த நேரத்தில் எனக்குள் எழுவதையே நான் பற்றி நடக்கிறேன். இமிழ் கதை மலர்க்கூட்டம் அறிந்த இலக்கியச் சூழலில் நான்கு பேரின் உரைகளுக்குப் பின் இடம்பெற்றது. அவர்களின் ஒவ்வொரு கருத்தும் எனக்குள் நுழைந்து இடைவினை புரிந்து கொண்டிருக்கும். அதே நேரம் வெகுசனத் திரள் போல் அல்லாது இலக்கியக் கூட்டங்கள் என்பவை அறிந்த நட்பான சூழல். அங்குள்ள இயல்பான நெகிழ்ச்சித் தன்மை தயாரித்த உரைக்கு மேலதிகமாகவும் சில இடைவினைகளைப் புரியும் மனநிலையை அளிக்கிறது. மேலும் நேதாவின் கூட்டக் காணொலியைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் அந்த உரையிலும் எனது உடல்மொழி இதேவகையிலேயே இருந்தது.

எங்கிருந்து இந்த உலகையும் கலைகளையும் ஒருவர் பார்க்கிறார் எனத் தொடர்ந்து முன்வைத்துக் கொள்வது தன்னைத் தொகுத்தளிக்கும் முறை. எனது உடல் மொழியும் கருத்துநிலைகளும் எவ்விதமும் எதிர்கொள்வதற்காகத் திறந்து விடப்பட்டது. என்றேனும் அது தன் நடனத்தை மாற்றிக் கொண்டால் அது அவ்விதமே நிகழட்டும். அதுவரை கொஞ்சம் தடித்தனமாகவும் தெனாவெட்டாகவும் மேட்டிமைத்தனமாகவும் அகங்காரமெனவும் வெளிப்படக் கூடிய நான் தான் நான்.

என்னை நன்றாகப் பாருங்கள், என்னை யார் என்று தெரியவில்லை?

TAGS
Share This