செயற்களம் புகுவோருக்கு: 03
அரசியல் வெளியை ஆக்குதல்
ஈழத்தில் ஆயுத விடுதலைப் போராட்டம் 2009 இல் முடிவுக்கு வந்த பின்னர் முகிழ்த்த முதல் தலைமுறை செயற்பாட்டாளர்கள் எதிர்கொண்ட வெளியென்பது யுத்தத்தில் வெற்றி பெற்ற சிங்கள பவுத்த பேரினவாதக் கருத்துகளை முதலீடாக்கிய அரசின் தொடர்ந்த கண்காணிப்பையே. எங்கு கூட்டமென்றாலும் போராட்டம் என்றாலும் களச் செயல்களென்றாலும் முதலில் வரும் விருந்தினர்கள் அரச புலனாய்வாளர்களே. செயற்படுபவர்கள் அரசிற்கு எப்பொழுதும் ஆபத்தானவர்கள். அவர்களே சமூகத்தின் முன்னேறிய அரசியல் பிரிவினர் என்பதை சமூகத்தின் பெரும்பான்மை மக்களை விட அரசு நன்கே அறிந்து வைத்திருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு அல்பம் போடுமளவு ஒளிப்படங்களும் அவர்கள் செயற்பாடுகள் பற்றிய தரவுகளும் அரசிடம் உண்டு. இதனை அறிந்து கொண்டு, என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு குற்றச்சாட்டின் பெயரில் கைதானால் அந்த மொத்தச் செயற்பாடுகளுக்கும் சேர்த்து அரசு கணக்குத் தீர்த்துக் கொள்ளும் என்ற வாழ்நாள் நெருக்கடியோடேயே ஒருவர் செயற்களம் புக வேண்டும்.
ஏன் ஒருவர் இத்தனை ஆபத்தான வெளிக்குள் தன்னைச் செலுத்திக் கொள்ள வேண்டும்? தனக்கு ஆபத்து வரும் பொழுது தன்னைக் காக்க இயலாத மக்களின் பொருட்டு ஏன் தன் வாழ்வைப் பணயம் வைக்க வேண்டும்? எது இத்தகையவர்களின் முதல் விசை? பல காரணங்களுடன் பலரும் நுழையும் இவ்வெளிக்குள் என்னை உட்தள்ளியது சக மனிதர்களின் கண்ணீர் தான்.
யாழ்ப்பாண நூலகத்தின் முன் வலிந்து காணமலாக்கப்பட்டோரின் உறவினரால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு இளவயதில் சென்றிருந்தேன். நண்பரொருவர் தனது ஆவணப்பட ஒளிப்பதிவுக்காக அங்கிருந்த மக்களின் முன் மைக்கினைப் பிடிக்கத் தந்திருந்தார். விபூஷிகா என்ற சிறுமி தனது அண்ணாவைக் கொண்டு வாங்கோ, எங்க வச்சிருக்கிறியள், அவன் சாப்பிட்டானோ தெரியாது.. என்று விழி வற்றாது பெருகிய கண்ணீருடன் அலறிய சொற்கள் நெஞ்சினுள் இரும்புத் திரவமென விழுந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திற்கு மேல் மைக்கினைப் பிடிக்க முடியவில்லை. கொழுத்தியெறிந்த அவ்வெய்யிலை விடச் சுட்டுக் கொண்டு எனது கண்களும் வடிந்து ஓடியது. அங்கிருந்து விலகிச் சென்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். யார் இவர்கள்? இவர்கள் என் மக்கள், எனது உறவினர். இவர்களுக்கு நடந்த அநீதிக்கென நான் என்ன செய்ய முடியும்?
இன்னொரு நாள் ஏதோ ஒரு பிரபலமான நடிகரின் திரைப்படம் வெளியிடப்பட்ட நாள், யாழ் நகரில் வெடி கொழுத்தி அவரின் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். நான் அப்பொழுது அபான்சில் ஒரு எடுபிடியாளாக வேலை செய்து கொண்டிருந்தேன். காலையில் பஸ்ஸில் வந்து நகரில் இறங்கிய போது ஒரு சிறுவன் என்னிடம் வந்து அண்ணை போனிருக்குதா என்று கேட்டான். சற்றுப் பருமனான உடலும் முகத்தில் மாறாத சிரிப்பும் கொண்டவன். அண்ணை என்று அழைத்த குரல் இன்னமும் காதிற்குள் ஒலிக்கிறது. அவ்வளவு நெருக்கமான அழைப்பு அது.
இன்று ஒரு வேலை தேடி நகருக்கு வந்தேன். வீட்டிலிருந்த காசையெல்லாம் சேர்த்து அம்மா பஸ்ஸுக்குத் தந்து விட்டா. தேங்காய் வாங்கக் கூடக் காசில்ல. ஆனால் இப்ப வேலை இல்லையாம். போய்க் கேட்டுப் பார் எண்டு தெரிஞ்ச ஒராள் தான் சொன்னவர். வந்து கேட்டன். வேலை கிடைக்கேல்ல என்றான்.
அவனுக்குப் படிக்கிற வயசு. குடும்பத்தில் வறுமை என்று வேலை தேடி வந்திருக்கிறான். என் இளவல் அவன். அவனைக் காக்க எனக்கு ஒரு உபாயமும் இல்லை. போனைக் கதைக்க விட்டுட்டு, கையிலிருந்த கொஞ்சக் காசைக் கொடுத்து விட்டேன். அதைப் பற்றி அன்றிரவு எழுதினேன். நண்பர்கள் அதை வாசித்து விட்டு அவனுடைய சகோதரர்கள் படிப்பதற்குச் சில உதவிகளைச் செய்யலாம் என்று சொன்னார்கள். அவன் போனில் பேசிய அந்த நபரைத் தொடர்பு கொண்டு அவனுடைய முகவரியைக் கேட்டு, ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்கள், பயிற்சிக் கொப்பிகளை வாங்கிக் கொடுத்தோம். ஒரு எளிய நிறைவு மனதில் கூடியது. இந்த எளிய நிறைவுணர்வு தான் பலரையும் செயற்களம் நோக்கி உந்தித் தள்ளிக் கொண்டேயிருப்பது.
சமூகத்தின் எல்லாத் திசைகளிலும் பல்வேறு நெருக்கடிகள், இன்மைகள், இழப்புகள் சூழ்ந்திருக்கின்றன. அவற்றை எங்கனம் மாற்றுவது? என் சிறிய வாழ்க்கைக்கு அதை மாற்றும் வல்லமை இருக்கிறதா?
ஒரு குழந்தை எங்கோ அடிபட்டுக் கதறும் பொழுதும் யாரோ ஒரு தாய் நெருப்புத் தழலும் தார் வீதியில் மண்டியிட்டுப் புரண்டு கைக்கூப்பி முறையிடும் பொழுதும் எங்கோ ஒரு சிறுமி வன்புணரப்படும் பொழுதும் எங்கோ அரசு தன் ராணுவச் சப்பாத்தின் முன்னும் துப்பாக்கிகளின் கீழும் சாதரண மனிதர்களைக் கீழ்ப்படிய வைக்கும் பொழுதும் துறவாடையணிந்த பிக்குகள் வரலாற்றுச் சின்னங்களை மிதித்தெழும் பொழுதும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் தடியடிகளும் மாணவர்கள் மேல் வீழும் பொழுதும் படிப்பதற்குக் கொப்பி வாங்க வசதியில்லாமல் வகுப்பறையில் அழுது கொண்டிருக்கும் சிறுவர்களின் பிரார்த்தனைகள் கேட்கும் பொழுதும் சாதி சொல்லி ஒருவரை ஏசும் பொழுதும் அவரை வெட்டும் பொழுதும் அந்த மக்களின் சொத்துகளை அடித்து நொறுக்கும் பொழுதும் என்னுடைய நிலத்தை எனக்கே தாவென்று வறிய வயிறுகள் குரலெழுப்பும் பொழுதும் ஒருவரது பாலீர்ப்புக்காகவோ பாலியல் அடையாளத்துக்காகவோ அவரை அவமதித்துக் கேலி செய்து சமூகம் ஒடுக்கும் பொழுதும் வாசிக்கப் புத்தகங்கள் இல்லையென்று குழந்தையொன்று வானம் பார்த்து இரங்கி நிற்கும் பொழுதும் எங்கோ மலையகத்தில் மண்ணடுக்குச் சரிந்து விழ மக்கள் அல்லற்படும் பொழுதும் பசியால் வாடி ஒரு முதியவர் கீழே சரிந்து மூர்ச்சையாகும் பொழுதும் நினைவுகூரல் மறுக்கப்பட்டு கவச வாகனங்களின் முன் மக்கள் வெறுங்கையுடன் நிற்கும் பொழுதும் கோயில் வாசல்களில் கைவிடப்பட்டு பிச்சை புகும் மனிதர்களைப் பார்க்கும் பொழுதும் இன்னும் இன்னும் எத்தனையோ கொடுந் தருணங்களின் பொழுதும் என்ன நான் உணர்ந்தேன்?
இப்பெருந்திரளில் நான் யார்? நானும் இவர்களுடன் இணைந்து நின்று கையறு நிலையில் நிற்க வேண்டியவரா? அரசு ஒடுக்கும், கைது செய்யும் மிரட்டும் என அஞ்ச வேண்டியவரா? இதைப்போல் இன்னும் நூறு அநீதிகள் நிகழும் இம்மண்ணில் நான் என்பது என்ன? அலக்ஸ் ஹேலி எழுதிய ஏழுதலைமுறைகள் என்ற நாவலில் ஒரு வரியுண்டு. நான் என்னும் சதைப்பிண்டத்தில் நான் என்றால் நீ, நீ என்றால் நாங்கள். ஒரு குலக் குழுவின் நீதியும் அறமும் அந்தச் சொற்கள். இன்றுவரை நிகழ்ந்து கொண்டிருக்கும் அநீதிகளில் நான் உணர்வது இதையே. நான் என்பது இத்திரளில் ஒருவர். என்னால் அதில் பொருள்கொள்ளும்படி ஆற்றக் கூடியது எது? இதுவே என்னை உள்ளியக்கும் விசை.
இதை எங்கோ ஓர் நுனியில் தொட்டு நீண்டே ஒருவர் செயற்களம் புகுகிறார். அன்றாட அனுபவத்திலிருந்து உந்தப்பட்டு சமூகத்தை மாற்றியே ஆகவேண்டிய கனவுடன் தன்னைப் பொருதும் இடம் அதுவே. இல்லையெனில் எனக்கென்று இங்கு நிகழும் அநீதிகளென்று தனித்து எவையுமில்லாததே என்னுடைய வாழ்க்கை. எனது சொந்தப் பிரச்சினையல்ல எதுவும். ஆனால் அவை எப்படி என் சொந்தப் பிரச்சினையாக உணரப்படுகிறது என்பதே அறிதல். அது தன்னைக் கரைத்து இக் கடலில் தானும் ஒரு உப்பின் துளியென்று எழும் தன்னுணர்வு. இதை உணர்ந்தவர்கள் இப்பெருந்திரளை எதிர்கொள்ளும் பாவனைகள் குறித்து எனக்கு எந்த மாற்றும் இல்லை. ஒருவர் தன்னை எந்தப் பண்பாடினதோ அரசியலினதோ சிக்கலின் பகுதியாத் தன்னை முன் வைத்துக் கொள்ளலாம். ஊர் ஊராக நூலகம் அமைப்பதும் மாணவர்களை நோக்கித் தங்களைச் செலுத்துவதுமான சிறகுகள் அமையமும் ஒடுக்கப்படும் பெண்களிற்கானதும் குழந்தைகளுக்கானதும் எதிர்காலப் பண்பாட்டு மாற்றத்திற்கெனவும் வாழ்வளித்துச் செயலாற்றும் வல்லமையும் தானுண்டு தன் படிப்புண்டு நாளை அதற்கோர் வேலையுண்டு என இல்லாமல் சமூகத்தின் குழந்தைகளை நோக்கித் தம் செயற்கரங்களையும் கனிந்த உள்ளங்களையும் சேர்க்கும் மனிதம் அமைப்பும் நாடகங்களின் வழி சமூக மாற்றத்தை பல்வேறு வடிவங்களில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் செம்முகம் ஆற்றுகைக் குழுவும் அழிக்கப்பட்ட நூலகத்தின் அனுபவத்திலிருந்து அழிக்கவே இயலாத மெய்நிகர் நூலகத்தை உருவாக்கும் நூலகம் அமைப்பும் குயர் உரிமைகளுக்காகப் பணியாற்றும் அமைப்புகளும் தமிழ் மக்களின் அரசியல் நெருக்கடிகளை இனப்படுகொலைக்கான நீதியைப் பெற வேண்டி ஆய்வுகளை ஒருங்கிணைக்கும் அடையாளம் அமைப்பும் போல் இன்னும் இன்னும் செயற்களத்தின் பண்பாட்டு எல்லைகளை விரிவாக்கும் நூறு நூறு அமைப்புகள் உருவாக வேண்டும். அவை ஒவ்வொன்றும் ஏற்கனவே உள்ள சமூக நகர்வை ஒற்றை அடிதன்னும் முன்னகர்த்தினால் மானுடம் என்ற பெரும் பெருக்கில் தம் நிறைவை அடைவார்கள். பூத்தலே பூவின் இயல்பெனவும் நிறைவெனவும் ஆவது போல் பண்பாட்டை ஆக்கும் கரங்களுக்கு செயல்புரிதலே அடையும் மலர்தல். அப்படி செயற்களம் புகுந்து குன்றாது செயல்புரியும் ஒவ்வொரு முகங்களையும் இக்கணம் நினைவில் கொள்கிறேன். அவர்கள் ஆற்றும் பங்களிப்பு மதிக்கப்பட்டே அவர்களது செயல்விளைவுகள் கணிக்கப்பட வேண்டும். எல்லாச் செயல்புரியும் அமைப்பின் மீதும் ஏதோவோர் வகையிலான குற்றச்சாட்டுகள் பொது சமூகத்தினாலும் செயலூக்கமற்றவர்களாலும் முன்வைக்கப்பட்டே தீரும். அது முரணியக்கத்தின் தவிர்க்க முடியாத அம்சம்.
ஒரு விரிவான பண்படுத்தப்பட்ட அரசியல் வெளியை ஆக்கி அளித்தல் என்பது பலவகை நெருக்கடிகளாலானது. இலங்கை போன்ற நாட்டில் முதலாவதாக எதிர்கொள்வது அரச நெருக்கடி, அதன் பின்னர் சமூக மந்தர்களினால் அத்தகையவர்கள் மேல் நிகழ்த்தப்படும் அவதூறுகள், சேறடிப்புகள், வசைகள், மூன்றாவது தன் சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பலநூறு நெருக்கடிகள். இத்தனையும் கடந்தே ஒருவர் பண்பாட்டில் தன் பங்களிப்பை ஆற்றுகிறார் என்ற அடிப்படைப் புரிதல் சமூகத்தில் நுண்ணுணர்வுள்ள ஒருசிலருக்காவது இருக்க வேண்டும்.
நமது பெரும்பான்மைச் சமூகம் மூன்று அடிப்படையான குற்றச் சாட்டுகளினால் ஒரு அமைப்பினை அழிக்க நினைக்கும். அவை பொதுவிலேயே சொல்லப்படுபவை தான். ஒன்று, பாலியல் குற்றச்சாட்டுகள், இரண்டு நிதி மோசடிகள், மூன்று போதைப் பொருள் குற்றங்கள். இவை எந்தவொரு பொது சமூகத்திலும் உள்ள சுயாதீன அமைப்புகளின் சமூக மதிப்பையும் கீழிறக்கக் கூடியவை. இந்த மூன்று குற்றச்சாட்டுகளும் சாட்டப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவன் என்ற வகையில் இத்தகைய சூழல்களை செயற்களம் புகுவோர் எவ்விதம் கையாள வேண்டும் என்பதைத் தொகுக்க நினைக்கிறேன்.
முதன்மையாக ஒருவர் கவனிக்க வேண்டியது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் பொழுது அங்கிருப்பவர்களின் தனிநலன் என்ன? என்ன உள்நோக்கத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன? இதை அறியாமல் ஒருவர் பொதுவெளியில் எதிர்வினையாற்றுவது புதைசேற்றில் தலைகீழாகக் குதிப்பதற்குச் சமம். அரசியலில் எதுவும் அப்பாவித்தனமானது அல்ல. எமக்குள் இருக்கு அப்பாவித்தனமான நல்லியல்புள்ள குழந்தைமையே எங்களைச் செயற்களம் நோக்கி நகர்த்துகிறது. ஆனால் களம் கேட்கும் முதற் பலி அந்த அப்பாவிக் குழந்தையின் தலையையே.
உங்களை அறியாதவர்களோ அறிந்தவர்களோ, யார் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் உங்களது கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அவை ஏதேனும் ஒருவகையில் சீர்திருத்தப்பட வேண்டியவை எனில் அவற்றை எதிர்காலத்தில் மீள நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டினைக் கையாளும் பொழுது இதில் அவர்களது தனிநலன்கள் தீங்கானது, உள்விருப்புகள் உங்களை அழிப்பதற்கானது என்று அறிந்து கொண்டீர்கள் என்றால் ஒருகணம் கூட யோசிக்காமல் அவர்களை இடங் கையால் புறந்தள்ளி உங்கள் செயல்களைத் தொடர்ந்து ஆற்றுங்கள். நமது சமூகத்தில் பண்பாட்டு அரசியல் வெளியின் கழுதைப்புலிகள் இத்தகையவர்கள்.
அத்தகைய கழுதைப்புலி அரசியலுக்கு உங்களைப் பலியிட்டுக் கொள்ளாதீர்கள். அதற்கான எந்த அவசியமும் இல்லை. பொறுப்பு எனும் பெயரில் உங்களை நிர்பந்திப்பவரின் உள்நோக்கம் உங்களின் சமூக ஆளுமையைச் சிதைத்து கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிய்த்து உண்பதென்றால் அவ்வெளியிலிருந்து வெளியேறி உங்களின் சொந்தப் பயணத்தை மேற்கொண்டு செல்ல உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.
சுன்னாகம் நிலத்தடி நீருக்கான போராட்டமென்பது வடக்கு மாகாணசபையை நோக்கி உருவாக்கப்பட்டது என்றாலும் அதற்குப் பொறுப்பான தரப்பு அன்றைய அமைச்சர் பொ. ஐங்கரநேசனே. அப்போராட்டத்தை அவர் எதிர்கொண்ட விதம் போதுமானதாக இருக்கவில்லை. சிறிது காலம் கழித்து அவர் மேல் வகை தொகையில்லாமல் குற்றச்சாட்டுகள் இறைக்கப்பட்டன. பொதுவெளியால் பந்தாடப்பட்டார். அக்காலப்பகுதியில் நான் எழுதிய கட்டுரையின் மையக்கருவே கழுதைப்புலி அரசியல் என்பது. ஒரு சமூக ஆளுமையின் பங்களிப்பை எவ்விதத்திலும் பொருட்படுத்தாது நீ ஒரு அயோக்கியன் என்று பட்டமளிப்பு விழா நடத்தும் எந்த சமூக பொதுப்புத்தியையும் அறிவுத் தரப்பாக நின்று நான் எதிர்கொண்டே ஆக வேண்டும். அவருடைய வரலாற்றுப் பங்களிப்பை முன்வைத்து அவரின் இடத்தை அங்கீகரித்தே அவர் அணுகப்பட வேண்டும் என வாதிட்டேன்.
சமூக ஆளுமைகளைச் சமூக சராசரிகள் சிதைப்பதன் பின்னால் உள்ள குரூரமான மனநிலையை நாம் சுட்டிக்காட்டவே வேண்டியிருக்கிறது. கழுதைப்புலிகள் ஆக்க விரும்பும் அரசியல் வெளியென ஏதாவது ஒன்றிருக்கிறதா? அவர்களால் இந்த சமூகம் பொருட்படுத்தும்படி முன்னேறும் படி எதையாவது ஆற்ற முடியுமா? இயலாது. அவர்களின் மந்தத்தனமே அவர்களைக் கழுதைப்புலிகள் ஆக்குவது.
ஆகவே தான் செயற்களம் புகுந்து செயல்புரிந்து அதன் வழியான அறிதலை அடைய விரும்பும் யாருக்கும் சமூக சராசரிகளின் அரசியல் சரிநிலைகளும் அவதூறுப் புதைசேறும் என்றெறைக்குமாகத் திறந்தேயிருக்கும்.
பண்பாட்டு அரசியல் வெளியை ஆக்குபவர்கள் இப்படி இருப்பது பொறுப்பற்றதனம் என சிலர் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்வினையாற்றலாம். ஆனால் பொறுப்பு என்பது கூட்டானது மட்டுமே. எந்த அறமுமற்ற வெளியில் ஒருவருக்கு எந்தப் பொறுப்பும் தேவை இல்லை. செயற்பாட்டாளர் என்பவர் சமூகத்தின் நேர்த்திக்கு வைத்திருக்கும் பலியாடல்ல. அவர் தன்னுணர்வால் சமூகத்தை முன்னகர்த்தும் கருவி. நான் சொல்லியிருக்கும் இடங்கை வழிகளின் பொறுப்பற்றதனத்தை மேட்டிமைத்தனத்தை சமூக சராசரிகளுக்கு முன் எழுந்து நிற்க வேண்டிய நிமிர்வை செயற்பாட்டாளர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.
பண்பாட்டு அரசியல் வெளியை ஆக்குபவர் முதன்மையாகக் கரிசனம் கொள்ள வேண்டியது தன் சொந்த உள்ளுணர்வுக்கும் தன்னறத்திற்கும் அறிந்து அவர் ஆற்றக் கூடிய பணிகளின் விரிவைக் கற்பனையில் காண்தல். அதை நோக்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அடியாக முன்னேறுதல். சமூக மாற்றமென்பது ஒரு நீண்ட செங்குத்தான மொழுமொழுவென்று எண்ணெய் வழியும் சறுக்கு மரம். அதில் வழுகி வழுகிக் கீழிறங்க வேண்டியேற்படும். ஆனால் பயணத்தின் ஓர்மத்தை இழந்து விடக்கூடாது. ஏதேனும் ஒருவழியில் அம்மரத்தின் சிற்றளவு முன்னேறினால் கூட அதனளவில் அது முழுமையானதே. சறுக்கல்களைக் கண்டு துவளத் தேவையில்லை. அது சறுக்குமரத்தின் இயல்பு. முன்செல்லத் தோள்கொடுக்கப் பலநூறு கரங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் உருவாகியே தீரும். அதுவே வரலாறு நமக்களிக்கும் வரலாற்றுணர்வு. அந்த அறிதலின் உள்ளொளியுடன் நாமறியாமல் நம்மை உந்தித்தள்ளும் உணர்வெழுச்சிகளின் பேராற்றல் எம்மை வழிநடத்தும்.
நான் நினைவு கூரும் ரஷ்யச் சிறுகதையொன்று உண்டு. இள வயதில் வாசித்திருந்தேன்.
ஒரு மக்கள் கூட்டம் இருண்ட அடர் கானகத்திற்குள்ளால் வெளியேறி தம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று பலரும் குளிரில் உறைந்து உணவின்றி வாடி அவ்விருள் சூழந்த காட்டினைக் கடக்க முடியாமல் வழி புலப்படாமல் பல நாட்களாக அலைகின்றனர். சிலர் இறந்தும் போகின்றனர். என்ன செய்வது எப்படி வெளியேறுவது யாருக்கும் தெரியவில்லை. அக்கூட்டத்திலிருந்த ஒருவர் தன் நெஞ்சை அறுத்து இதயத்தை வெளியில் எடுக்கிறார். அது ஒளிர்விடும் நீல வெளிச்சமாகிறது. அதனை முன்னே தீப்பந்தமெனக் காட்டியபடி காட்டின் எல்லைவரை அம்மக்களை வழிகாட்டிச் சென்று முடிவில் இறந்து வீழ்கிறார். இது ஒரு குறியீட்டுக் கதை. தன் நெஞ்சை அறுத்து ஒளிர்விடும் பொருளாக ஆக்கிக் கொள்ளும் ஒருவரே செயற்களத்தில் மக்களின் முன் செல்பவர். இதுவே என்னுள் செயற்களம் புகுவோர் பற்றியிருக்கும் நித்திய சித்திரம். இப்பாதை எவ்வளவு இருண்டது, பாதைகள் எத்தனை குழப்பமானது, தன் நெஞ்சைத் தானே அறுத்து அதை ஏந்தும் நிலையை ஒருவர் ஏன் தேர்கிறார், அவர்களை உள்ளியக்கும் விசை எது, அவர்கள் துவளாமல் முன்செல்ல வேண்டியது ஏன், அத்தகையவர்களுடன் உடனிருக்க வேண்டியது ஏன் என்னுடைய பொறுப்பு என்பதை ஒரு எழுத்தாளராக செயற்களம் புகுந்து இன்று வெளியில் மீளவும் எழுத்தாளராக நின்று சொல்கிறேன்.
நாம் ஆக்கியளிக்கும் பண்பாட்டு அரசியல் வெளியே பிரதானமானது. அதில் உள்ள நபர்களையும் அவ்வரசியலையும் இணைத்து நாம் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. ஒரு சிக்கலில் எழும் மானுட உணர்வுகள், கோபங்கள், ஆற்றாமைகள், சிறுமைகள், காழ்ப்புகள், வெறுப்புகளுடன் இடைவிடாமல் போராடிக் கொண்டே நாம் அறுத்துப் பலியிட்ட நம் குழந்தையின் தலையை மீளப் பொருத்தி செயல்களால் தைத்து, வடுவைக் காற்றில் ஆறவிட்டு அக்குழந்தை விழாதபடி பலநூறு கரங்களால் அரணமைத்து நடைபழக விடுவோம்.