முத்தித்தழுவி
ஒரு வாழ்கதையின் உச்ச தருணத்தைக் கவிதைக்குள் கதையென நிகழ்த்த இயலும். சபரிநாதனின் இக்கவிதை ஒரு கடலோடியின் கதை. அதனுள் ஒரு கவிஞனான சபரி சென்று தொடக்கூடிய எல்லை என்ன என்பது தான் என்னை ஈர்ப்பது.
ஒரு தருணத்தைச் சுழலும் அலைக்குள் மூழ்குபவனைப் போல மூழ்கவிட்டு அலைகடந்த பின் எழுந்து நிற்க வைப்பதைப் போன்ற மயக்கின் நொடிகளை மொழிக்குள் உண்டாக்குவதே கவிஞர் ஒரு கதையைக் கவிதையாக நிகழ்த்தும் பொழுது நிகழ்த்த வேண்டிய அற்புதம். கவிதையின் இறுதி வரிகளில் அலைகள் அழைத்துச் செல்லும் அவனைச் சித்தரிக்கும் இடத்தில் தோன்றும் சொற்கள், முத்தித் தழுவி அழைத்துச் செல்லும் உற்றாரென ஆகும் அக்கணம், அலைகளென்பவை மானுடத்தின் கரைகளை அணைத்தபடி முத்திக் கொள்வதன் காட்சியைத் தீராத ஒரு சித்தரிப்பென நினைவுள் புரளவைக்கிறது.
*
சிறிய கூர்மையான ஒளிரும் பொருள்
அப்படி என்ன இருக்கிறது அதில்?
நமக்குத் தெரியாது
அத்திரவத்தில் கரைந்துள்ள இரவுகள் எத்தனை என்று
நாம் பார்த்ததில்லை
அந்நீர்மத்தின் உள்ளிருந்து சூரியன் உதிப்பதை
அவர்கள் சொல்கின்றனர்
‘கடல்தான் எம்மைக் குடிக்க வைக்கிறது’
அது உண்மை
அடிப்படையில் அவர்கள் கடலோடிகள் அப்புறம்தான் குடிகாரர்கள்
திரும்பி வருவார்களா என்று தெரியாது. ஆனாலும் கிளம்புகின்றனர்
கைவிளக்குகளையும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியையும் எடுத்துக்கொண்டு.
கடலுபாதைகளும் கத்திச்சண்டைகளும் காத்திருக்கின்றன அங்கே
மாயமகரமும் கடற்கண்ணியரும் கூட.
ஒரு சமயம் எங்களூருக்குத் திரும்பி வந்திருந்தான்
கடலுள் மாயமாகி ஆண்டு பல கடந்து மீண்ட ஒருவன்.
நாங்கள் அவனது சாகசங்களைக் கேட்கச்சென்றோம்.
அவன் சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்:
‘என்னுடைய பொருளொன்றை சமுத்திரத்தில் விட்டு வந்துவிட்டேன்
சிறிய கூர்மையான ஒளிரும் பொருளொன்றை…’
உப்பங்காற்று மரைகளைக் கொறிக்கிறது, பட்சிகளைக் காணோம்,
சிப்பிகள் வாய்மூடி உறங்கும் வெறிச்ச நிலா நாளில்
தூக்கமின்றி அலைந்தேன் நான் கரைநெடுக.
தொலைந்து போய் கிடைத்த ஒருவனை
முத்தித்தழுவி உற்றார் அழைத்துச்செல்வதைப் போல
அலைகள் அவனைக் கூட்டிச்சென்று கொண்டிருந்தன.
சபரிநாதன்