கடைசிச் சில்லறையையும் செலவழித்தல்

கடைசிச் சில்லறையையும் செலவழித்தல்

ஓர் எழுத்தாளனாக உங்களுடைய ஒரு நாள் எப்படி இருக்கும்? நான் எழுத்தாளனின்றிப் பிறிதொன்றில்லை என அகமுணர்தல் ஏன்? என சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள். ஒரு நாளை எப்படி ஆக்கிக் கொள்கிறேன் என்பதே அவர்களது பலகேள்விகளின் சாராம்சம். ஒரு நாவலாசிரியரோ சிறுகதை எழுத்தாளரோ ஓர் எழுத்தாளராக அன்றாடம் எழுதுவதென்பது அவர்களது வடிவம் சார்ந்த தேவை. ஒரு கவிஞன் எதற்கு இவ்வளவு எழுத வேண்டும் அல்லது அன்றாடம் எழுதித் தான் ஆக வேண்டுமா?

சொல்லினால் உண்டாகும் கற்பனையின் மீது தீராத பித்திருக்கிறது எனக்கு. உரையாடுவதிலும் அதேயளவு பித்திருக்கிறது. அன்றாடம் எழுதுவதென்பதைப் பயில்வெனவும் யோகமெனவும் ஆக்கிக் கொள்வதற்கு முன்னரான எனது அன்றாடத்துடன் ஒப்பிட்டு இக்கேள்விகளை எண்ணிப் பார்க்கிறன். கரைந்து காற்றாகிவிட்ட நாட்களவை. பல நாட்கள் பொருள் கொள்ளும் படி எதனையும் ஆற்றாமல் செலவழித்திருக்கிறேன். கடந்த இரண்டு வருடங்கள் சமூக வலைத்தளங்களை விட்டு விலகியிருந்த காலப்பகுதியில் அன்றாடம் வாசிப்பதைத் தவிர தினப் பணிகளையே முழுமூச்சாகச் செய்திருக்கிறேன். இன்று அவற்றை எண்ணி நினைத்துப் பார்க்க எஞ்சுவது சில நல்ல நினைவுகளே. அதற்கு மிஞ்சித் தினசரியை முழுமையாக்குவது என்பது என்ன? இந்தத் தவிப்பிலிருந்து வெளியேறி நான் என்னை முழுமுற்றாக அளிக்கும் செயலென ஒன்றை ஆக்கிக் கொள்ள வேண்டும். முதன்மையாக அன்றாடத்தின் சலிப்பூட்டும் ஒரேவகையான சுழற்சியே என்னை அச்சுறுத்தியது. காலத்தை சோப் குமிழியென ஊதிக்கொண்டிருப்பது வேடிக்கையானது தான். ஆனால் எவ்வளவு காலத்திற்கு?

இணையத்தளம் ஆரம்பிக்கும் பொழுது எனக்கு நானே இட்டுக் கொண்ட நிபந்தனை இச்செயலை எதன் பொருட்டும் கைவிடக் கூடாது என்பதே. இது என் தனி உலகம். அதன் எல்லைகளும் விரிவுகளும் நானே உருவாக்கிக் கொள்ளக் கூடியவை. ஏழு நாட்களில் உலகைச் சிருஷ்டித்து முடித்த பின் வாழ்வை அதில் நிகழ்த்தும் கடவுளின் ஆற்றல் போல ஒரு வாய்ப்பு. எழுத ஆரம்பித்த பொழுது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என ஒரு சிறிய மனப்படம் மட்டுமே இருந்தது. ஆரம்பித்து சில தூரங்கள் நடந்த பின் பார்த்தால் பாதையின் நெடுவழியில் எல்லை பிடிபடாத தொலைவு மட்டும் தெரிகிறது. எழுத விசயங்களும் சொல்லச் சொற்களும் உள்ளூறி வருகின்றன. மூச்சுத் திணறுமளவு சொற்கள் பெருக்கெடுக்கின்றன. இவ்வளவு காலமும் கற்பனையின் கேணியை நான் தான் தூர்த்து வைத்திருந்திக்கிறேன். அதன் அடைசல்களைக் கொஞ்சம் மனக்கையால் அள்ளிய பின் புது ஊற்றென மொழி நனைந்து பரவுகிறது.

இன்னும் எழுத என்ன இருக்கிறது? அதைச் சொல்லச் சொற்கள் எங்கிருக்கின்றன? முழுவதையும் அள்ளியெடுக்கக் காலம் எங்கிருக்கிறது?

அன்றாடம் கவிதைகளைப் பற்றிச் சில பந்திகள் எழுதுவதென்பது இனிப்புக் கூடையைக் குழந்தைகள் கூடியிருக்கும் மைதானத்தில் திறந்து வைத்து விட்டுக் கைகட்டிக் கொண்டு நிற்பது போன்றது. அள்ளியெடுக்க ஆயிரங் கைகள் விரைந்து வரும். உண்டு திளைக்க ஒவ்வொரு நாவும் எழுந்து நிற்கும். ஆகவே சிக்கலில்லை. நான் கவிதை எழுத ஆரம்பித்த வயதில் ஒரு நினைப்பு இருந்தது. இந்த உலகில் எல்லோருமே கவிதை எழுதுவார்கள். ஒருவரால் ஒரு கவிதையைக் கூட எழுதாமல் எப்படி நித்திரை கொள்ள முடியும்? இதைத் தீவிரமான தோரணையுடன் நண்பர்களிடம் கேட்டுமிருக்கிறேன். முகத்தை ஊன்றிப் பார்த்து விட்டு பதில் சொல்லாமல் அமைதியாகி
விடுவார்கள். இப்படி நிறையக் கிறுக்குத்தனமான எண்ணங்கள் இப்பொழுதும் வருவதுண்டு. ஆனால் இந்தக் குழந்தைத்தனமான எண்ணம் தான் எவ்வளவு கவித்துவமானது! மனிதர்கள் ஒரு நாளைக் கவிதையில்லாமல் கடப்பதேயில்லை. எங்கோ ஒரு வரி அவர்கள் காதில் விழும்படிக்கே உலகு அமைந்திருக்கிறது. அதில் என் சிறு பங்களிப்பாகச் சில சொற்களைச் சொல்லிக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் அன்றாடத்தின் நறுந்தூபமெனப் பரப்புதல் என்னளவில் செய்யக்கூடிய நற்செயல்.

சொற்கள் எப்படி முளைக்கின்றன? மனதைச் சொற்களிலிருந்து விலத்தி வைத்த காலங்களில் ஒரேவகையான அன்றாடச் சொற்களின் குமைவு அழுத்திக் கொண்டேயிருந்தது. தமிழில் எத்தனையாயிரம் சொற்கள். ஒவ்வொன்றுக்கும் எத்தனை ஒத்தசொற்கள், கவிதையில் உரை நடையில் பேச்சு வழக்கில் வட்டார வழக்கில் இலக்கண நூலில் என்று சொற்கள் கொட்டிக்கிடக்கும் மொழியில் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். சொற்பஞ்சம் எழ வாய்ப்பேயில்லை.

அதிகமாக எழுதுவது இலக்கியமா? தரமாய் எழுதுவது தான் முக்கியம் என்ற வாதம் ஒருசாராரால் தொடர்ந்து வைக்கப்பட்டே வருகிறது. ஊர்வழக்கில் ஆடத்தெரியாதவன் மேடை கோணலென்றானாம் என்ற மூதறிவுச் சொற்களை அவர்களுக்கு ஒரு பார்சல் அனுப்பி விடலாம். எழுத்தே தியானமென அமைவதை அப்பிரகிருதிகள் அறிய இன்னுமொரு நூற்றாண்டு கற்பாறைகளுக்கடியில் தவளைகளெனத் தவமியற்ற வேண்டும். பாலைவன மழையென ஏதாவது அருள் கிட்டலாம்.

தினசரி நூறுபக்கங்களாவது நாவல்கள் வாசிப்பேன். பெரும்பாலும் செவ்வியல் நாவல்கள். அவை சொற்களஞ்சியங்களென விரிந்து கிடப்பவை. நவீன கவிதைகள் சிலவும் சங்ககாலக் கவிதைகள் சிலவும் வாசிப்பேன். அதிகாலை எழுந்தவுடன் கவிதைகளில் கண் விழிப்பது வாழ்விற்குக் கிடைத்த வரம். அவை அந்த நாளின் ஏதோவொரு தருணத்தில் மனதைக் கிடத்தி அசைபோட உதவும் நினைவுகளாக ஆகிவிடுகின்றன. கட்டுரைகளை இணையத்தில் வாசிப்பேன். கொஞ்சம் அன்றாட இலக்கிய வம்பு தும்புகளைத் தெரிந்து கொள்வேன். அன்றைய நாளுக்குரிய அரட்டைப் பொருளாக அவை இருக்கும். ஒருநாளுக்குக் கொஞ்சம் நொறுக்குத் தீனியும் தேவையில்லையா. கேட்பதற்கு மேல் பெரும்பாலும் அவற்றைக் கவனிப்பதில்லை.

காலம் எப்படிக் கிடைக்கிறது? வேலை நாட்களில் காலை இரண்டு மணித்தியாலங்கள் வாசித்துத் தேவையானவற்றை போனில் சேமித்து வைப்பேன். மாலையில் கட்டுரைகளாக எழுத வேண்டியவற்றை எழுதிக் கொண்டிருப்பேன். ஆரம்பித்த சில நாட்களிலேயே மூளை தன்னைத் தானே பயிற்றுவித்துக் கொண்டது. குன்றாத ஊக்கமென்ற நீரே மூளைக்கு ஊற்ற வேண்டியது. மற்றையவை வால் போலப் பின்னாலேயே வரும்.

ஓர் எழுத்தாளரின் அன்றாடத்தை அறிவதென்பது உலகம் முழுவதிலும் உள்ள வழக்கம் தான். தொடர்ந்து ஊக்கத்துடன் செயலாற்றும் எந்தக் கலை மற்றும் சமூக ஆளுமைகளினதும் அன்றாடத்தின் ஒழுங்கையும் அழகையும் கேட்டறிவதென்பது சுவாரசியமானதும் கூட. நான் பலரதும் அன்றாடத்தை புனைவுகளின் தீவிரத்துடன் வாசித்திருக்கிறேன்.

இப்போது விடுமுறைக்காலம். காலையில் ஆறுமணிக்குக் கண் முழிப்பேன். அன்றைய நாளுக்குரிய கட்டுரையையோ அல்லது கவிதைகள் பற்றிய குறிப்பையோ இணையத்தில் பதிவேற்றுவேன். பின்னர் காலைத் தேநீர் அல்லது கோப்பி. காலையில் ஒரு சிறுநடை. வெளியில் சென்று அருகில் உள்ள குளத்தடியிலோ அல்லது பூங்காவின் அருகிலோ அரைமணி நேரம் அமர்ந்திருப்பேன். மரங்களையும் மலர்களையும் பறவைகளையும் மனிதர்களையும் பார்ப்பேன். எல்லோரும் காலையை எதிர்கொண்டு உற்சாகமும் வேகமுமாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். உற்சாகமும் ஒரு தொற்றுநோய் தான்.

நடைவழியில் உள்ள மலர்களைப் பார்ப்பது இப்பொழுதுள்ள ஒரு பொழுதுபோக்கு. மேகங்களை அவை என்ன உருவங்களாக அலைகின்றன என்பதைக் கண்டுபிடிப்பது போல் மலர்மரங்கள் எப்படி அணிகொள்கின்றன எனப்பார்ப்பதும் வேடிக்கையாய் இருக்கிறது. வீட்டிற்கு அருகில் இரண்டு இடத்தில் ஊதா நிறம் கொண்ட கடதாசி மலர்களும் பொன்னொச்சி மலர்களும் இரட்டையர்களென வைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு பேரும் பூத்துப் பொலிகின்றனர். யாழ்ப்பாணம் பழைய பூங்காவிற்கு முன்னுள்ள கடதாசி மலர்கள் மதிலுக்கு மேலால் வீதியை எட்டிப்பார்த்தபடி வீதியில் செல்வோருக்குப் பூங்கொத்தை நீட்டிப்பிடிப்பதைப் போல் நிற்கின்றன. சிலநேரம் மரத்தண்டொன்றில் ஓய்வெடுக்கும் குரங்கெனவும் தோற்றங் கொள்ளும்.

பக்கத்தில் எங்கோ ஒரு குயிலின் வீடும் இருக்கிறது. காலை முதல் மாலை வரை கூவிக்கொண்டேயிருக்கிறது. கோடையின் இசையமைப்பாளர் குயில் தான். இதர சிறு பறவைகள் குவிக் குவிக் என்றும் கீச்சுக் கீச்சென்றும் பலவித ஒலிகளை எழுப்பிக் காற்றை நிறைத்தாலும் சன்னமான ஒலியில் கூஊ கூஊ என்று தெளிவாகத் தன் இருப்பை அறிவித்துக் கொண்டேயிருக்கும். வேலைகளால் வெளியின் சத்தங்களை மறந்து காதை அடைத்துக் கொண்டுவிட்டு மீண்டும் காதைத் திறந்து எங்கே அந்தக் குயில் என்று நினைத்தால் போதும் இதோ நான் இங்கிருக்கிறேன் எனக் கூவும். ஒரு மாயக்காரி தான்.

சிறுவயதில் யாழ்ப்பாணத்தில் குரங்குகளே இல்லை. அவை வன்னியில் தான் இருக்கின்றன என நினைத்துக் கொண்டிருந்தேன். ஐந்தாம் வகுப்புப் படிக்கும் பொழுது ஒரு குரங்குக் கூட்டத்தை பள்ளிக்கூடத்தில் பார்த்ததும் எங்கிருந்தோ வழிதவறி வந்தவை என நினைத்துக் கொண்டேன். இப்போது வாழும் வீடு யாழ்ப்பாணம் பழைய பூங்காவிற்கு அருகில் உள்ளது. அவ்வப்போது சில குரங்குகள் வருவதுண்டு. சில குதிரைகளும் வீதியால் அலங்கி நடந்து செல்வதுண்டு. நீளமான கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது இடையில் ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டு ஒருமணித்தியாலம் அலார்ம் வைத்து விட்டு நித்திரை கொள்வேன். எழுந்த பின்னர் வேறொரு குறிப்பையோ கட்டுரையையோ எழுத ஆரம்பிப்பேன். மாலையில் ஒருமணிநேரம் திரும்பவும் உறக்கம். மாலை நடையில் ஒவ்வொரு உயிரிகளும் ஓடிச் சென்று வீடுகளுக்குள் அமைவதை வேடிக்கை பார்ப்பேன். பழைய பூங்காவின் அருகில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் ஒலியெழுப்பியபடி எழுந்து பறந்து மீண்டும் பெருமரக் கிளைகளில் நீள்பழங்களெனத் தூங்கிக் கொண்டிருக்கும்.

கச்சேரிக்கு அருகில் ஒரு இருமுதிய ஆலமரங்கள் இருக்கின்றன. நேர்த்தியாகச் சவரம் செய்த தாடியெனெ விழுதுகள் பொலிந்திருக்கும். அதனடியில் கொஞ்ச நேரம் அமர்ந்து எழுதுவது உண்டு. இதையும் அந்த ஆலமரத்தடி பஸ் ஸ்டாண்டில் இருந்து தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஒரு ஊதாரியைப் போலக் கடைசிச் சொல்லையும் செலவழிப்பேன். இறைக்க இறைக்க ஊறும் செல்வத்தை வேறு எப்படிச் செலவு செய்வேன்!

இனி என் கூட்டுக்குத் திரும்புவேன். கொஞ்ச நேரம் எழுதுவேன். பின்னர் உறக்கம் சொக்கி விழும்வரை நாவல்கள் வாசித்துக் கொண்டிருப்பேன். ஏதாவதொரு நாவலில் ஏதோவொரு காலத்திற்குள் நுழைந்து விடுவேன். அது இம்மையுலகிலிருந்து மறுமையுலகிற்குச் செல்வது போல். பிறகு துயில்வேன். கண் விழிப்பது கவிதையில்.

சொல்லில்.

TAGS
Share This