என் தனிமை யானே

என் தனிமை யானே

அதுவொரு முன்பனிக் காலத்து நள்ளிரவு, உலகு ஒரு நீர்த்திரையென ஆகி ஆகாயத்தின் தாழ்கள் திறந்து கொண்டு பெருமழை துள்ளிக் குதித்து மண்ணிறங்குகிறது. அதிர்ந்து அதிர்ந்து இதயம் நோகுமளவுக்கு இடி கொட்டுகிறது. மின்னல்கள் நீள்முடி கொண்டவளின் கழுவிய முகத்தில் பிரிந்திறங்கும் மயிர்ப்பீலிகளென விரிந்து பரந்தது. காற்றின் ஈரம் உடலுள் நுழைந்து உடலால் வெளியேறிக் குளிர்கிறது. தேகம் தன்னுள் எஞ்சிய உயிர்ச்சூட்டைத் தனக்குத் தானே மூட்டிக் கொள்கிறது. இம்மழைப் பெருக்கில் தன் குடிலில் தேவி நிற்கிறாள். தானே தனிமையின் யாக்கையென ஆகியவள். காத்திருப்பின் உலைகளத்தில் நெடுங்காலம் படுத்திருப்பவள். அங்கங்களில் சிலிர்ப்புகள் எதுவாகவும் ஆக முடியாமல் இயற்கையின் பேராடலைத் தனித்துப் பார்த்து எரிகிறாள். மழை ஓய்ந்து அகிலத்தை மோகத்தின் கரங்களெனப் பனிப்புகார் அணைக்கிறது.

(ஈங்கை)

கருவிளை மலர்கள் காதலர்கள் பிரிந்திருக்கும் தேவிகளின் நீர் சொரியும் விழிகளென அவளுக்குத் தோன்றுகிறது. பஞ்சு போன்ற தலையையுடைய பூக்களைக் கொண்ட ஈங்கை, நெய்யில் தோய்ந்தது போல் நீரில் தோய்ந்திருக்கும் அவற்றின் தளிர்கள், இருபிளவாய்ப் பிரிந்த ஈரலைப் போல அவள் விழிகளுக்குத் தெரிகின்றன. மழையில் அவை அவளின் அகத்தைப் போல் ஊறிக் கிடக்கின்றது. அகன்று பரந்திருக்கும் வயலில் நெற்கதிர்கள் ஈரத்துடன் சாய்ந்து பொலிகின்றன. அவரைப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன. வண்டுகள் கிளைகளில் உடலில் ஊர்வது போன்று அசைகின்றன. வாடைக்காற்று வீசிக் கொட்டுகிறது. தேவி துயில் மிகாமல் மழை ஓய்ந்த நள்ளிரவில் துளிர்த்த பனிச்சீலை அசைய அதற்குள் வெறித்திருக்கிறாள்.

(அவரைப் பூக்கள்)

மோகம் மூத்து முதிர்ந்து காயும் பொழுது புடவியின் எல்லாப் பெருக்கும் நோவென ஆகும். இனியவை அகலும். அழகு கெடும். உடலின் துன்பத்தை அகம் எதுவொன்றாகவும் மாற்றிக் கடந்து விடமுடியாது. மெய்யின் துயர் மெய்யே. மேனியை வாட்டுவது எதுவோ அதன் தாகம் தணியாமல் உடலும் உளமும் தவிக்கும் தழலென உள்நின்றெரியும். அது இச் சொற்களின் இடைவெளிகளெல்லாம் மதனப் பெருக்கெனச் சுழித்தும் இறங்கியும் பெருகியபடியிருக்கிறது. ஒரு கதையின் காட்சி உச்சத்தில் இயற்கையின் பேருவப்பைச் சுகிக்க முடியாமல் உள்ளிருந்து தவிப்பது எது தேவி, பனிச்சீலையில் உன் கண்கள் ஆடியெனக் காண்பது எவனை! அவனை நோனேன் தோழி.

கழார்க்கீரன் எயிற்றியாரின் கவிதை,

மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கித்
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகையுறப்
புள்ளி நுண் துவலைப் பூவகம் நிறையக்,
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர்வார் கண்ணின் கருவிளை மலரத்,
துய்த்தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய் தோய்ந்தன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
அவரைப் பைம் பூப் பயில அகல்வயல்
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்சக்,
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்
காய்சின வேந்தன் பாசறை நீடி,
நம் நோய் அறியா அறனிலாளர்
இந்நிலை களைய வருகுவர் கொல், என
ஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன் தோழி, என் தனிமையானே.

TAGS
Share This