பணிவும் அகங்காரமும்
என்னிடமிருப்பது ஈடில்லாத ஒரு அகங்காரம். இன்னும் ஒன்றுமே குறிப்பிடும் படி நீ எழுதவில்லை உனக்கெதுக்கு இந்த ஆணவம். நீ உன் அகங்காரத்தாலேயே அழியப் போகிறாய். பணிதல் ஒரு நற்குணம் போன்ற பல பரிந்துரைகளை அண்மைக்காலமாக வழக்கத்தை விட அதிகமாகவே நண்பர்கள் சொல்லி வருகிறார்கள். உனது நன்மைக்குத் தான் சொல்கிறேன். பலரும் இப்படி அபிப்பிராயப்படுகிறார்கள் என்று சற்றுத் தயங்கிய முறையில் சொல்பவர்களும் உண்டு.
நான் எவ்வளவு அகங்காரம் கொண்டவனோ அதேயளவு பணிவும் கொண்டவன். என்னிடமில்லாமல் இருப்பது குன்றல் மட்டுமே. யார் முன்னும் நான் பணிவதில்லை என்பதல்ல பொருள். தாழ்வுணர்ச்சி அடைவதில்லை. நான் என்பது முழுமுற்றாக நான் தான். அதில் கூடுதலும் இல்லை குறைவுமில்லை.
நான் அகமாரப் பணியும் ஆளுமைகள் இருக்கின்றனர். நான் அற்பர்கள் என்று சொன்னவர்கள் கூட யாரோ ஒருவருக்குச் செய்யக் கூடிய கனிவொன்றுக்காக அவர்களை உளமார மதிக்கவும் செய்கிறேன். எந்த நிரந்தரமான கோபங்களோ வெறுப்புகளையோ நெஞ்சில் குடிபுக விடுவதில்லை. அவற்றை உள்ளே அனுமதித்தால் எனக்கு நானே செய்வினை வைப்பது போலாகிவிடும்.
யாரின் முன் என்பதை விட எதற்கு முன் பணிகிறேன் என்பதே எனது சுபாவமாயிருக்கிறது. ஒரு மனிதர் சக மனிதருக்கோ இயற்கைக்கோ ஆற்றும் சிறு உதவி கூட என்னைப் பெரும் நெகிழ்ச்சியடையச் செய்யும். அகம் நீர் மல்கும். எதற்காக இந்தக் கருணை இங்கு மலர்ந்தது என்ற ஆச்சரியம் எப்பொழுதும் தீரவே போவதில்லை. அன்றாடம் ஏதோவொரு மலர்தல் என்னைச் சுற்றி நிகழ்ந்தபடியே இருக்கிறது. அது என்னை வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. அத்தகைய ஊக்கம் தேவையானது என்று தான் தோன்றுகிறது.
இந்த உலகே மோசமானது, இங்கு எல்லாமே கொடுமையானது, எல்லாமே அதிகாரத்தின் சித்து விளையாட்டு, மனிதர்கள் வஞ்சமும் வன்மமும் நிறைந்து வழிகிறார்கள், நல்லதுக்குக் காலமேயில்லை, நீதி செத்துவிட்டது.. ப்ளா ப்ளா ப்ளா.. என்று தினமும் டிப்பிரசனில் சுற்றும் பலரையும் பல கூற்றுகளையும் சமூக வலைத்தளங்களில் நானிருந்த காலத்தில் அவதானித்திருக்கிறேன்.
இப்பொழுதும் ஒன்றும் மாறியிருக்காது. ஏனெனில் இது ஒரு மானுட சுபாவம். எதிலும் குறையே அறியும் மனங்கள் தம்மளவில் அக்குறைகளை அறிவதாலும் அதற்கெதிராகக் களமாடுவதாலும் ஒருவகை மனக்கிளர்ச்சியை தமக்குத் தாமே ஊட்டிக் கொள்கிறார்கள். தம் முதுகில் தாமே தட்டிக் கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். இத்தகையவர்களைக் குறித்த பொதுவான பிம்பம் நமது காலத்தில் உருவாகி வந்துவிட்டது. இவர்களின் குணவியல்புகள் ஒரேமாதிரியானவை.
முதன்மையாக இத்தகையவர்கள் எதிர்மறையானவர்கள். அவர்கள் மோசமானவர்கள் அல்லது கெட்டவர்கள் எனச்சொல்லவில்லை. இவர்களை இயக்கும் அடிப்படை விசை எதிர்மறையானது. குறைகளே இவர்களின் கண்ணுக்கு டக்கென்று தெரியும். நிறையென்ற ஒன்றைக் காணும் பார்வையை அகம் மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கியிருக்கும். எதையும் பாராட்ட மனம் வராது. வந்தாலும் உடனே இன்னொரு இடத்தில் நஞ்சைக் கொட்டாமல் மனம் அலையடங்காது. தீராத தாழ்வுணர்ச்சியை மணிக்கொருமுறையோ அல்லது பலமுறையோ கூட அடைவார்கள். இதற்கு முக்கிய காரணம் சமூகவலைத்தளங்கள் உண்டாக்கும் மிகை பிம்பங்கள். இத்தகைய இயல்புடையவர்கள் சமூக வலைத்தளங்கள் ஆக்கியளிக்கும் மிகை பிம்பங்களின் முன் தங்களைக் கூனிக் குறுக்கிக் கொள்வார்கள். அந்தக் குறுகலையே பலமடங்கு உருப்பெருக்கி எந்த அடிப்படை அறிவையும் தகுதியையும் வளர்த்துக் கொள்ளாமல் தாம் ஓர் அறிவுஜீவியெனவோ கலகப் போராளி எனவோ தம்மை முன்வைத்துக் கொள்வார்கள்.
பொதுவாக இத்தகைய இயல்புடையவர்கள் சமூக வலைத்தளத்தைத் தம் வாசலெனவும் வீடெனவும் கழிப்பறையெனவும் பயன்படுத்துவார்கள். அவர்களின் உடலும் ஆவியும் மெய்நிகர் வெளிக்குள் வாழத்தொடங்கியிருக்கும். சிலர் அதை உணர்ந்தாலும் வெளியேறும் வழியற்று மனச்சள்ளை மிகுந்து அங்கேயே தங்கிவிடுவார்கள். இத்தகையவர்களுக்கு என் அகங்காரத்தைக் காட்டவே விரும்புகிறேன். இவர்களின் முன் நான் ஒருபோதும் பணியப்போவதில்லை. என்னுடைய அகங்காரம் என் துறையில் நான் உண்டாக்கிக் கொண்ட என் குரலுக்கான அகங்காரம். அது ஒரு வகை மேட்டிமைத்தனம் தான். ஆனால் அது இந்த மழை ஈசல்களுக்கு நான் வைத்திருக்கும் தண்ணி வாளி.
மேலும் அவர்களின் முன் பணிவது அத்தகையவர்களின் அகக் குறைகளை அங்கீகரிப்பதாகிவிடும். அது சுட்டிக்காட்டப்பட்டு அம்மந்தத்தனம் நீக்கப்பட்டாக வேண்டியது. ஆக்கபூர்வமான நேர்நிலையான மனநிலையை சமூக வலைத்தளம் அழிக்கும் இயல்பு கொண்டது. அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஒரு நல்லதும் ஒன்பது மலக் கும்பிகளும் வரும் ஆற்றில் புனித நீராடுவது சாத்தியமில்லை. அழுக்கும் நாற்றமும் மனதில் தேங்கியே ஆகும். இல்லை, நான் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வேன் எனச் சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன். வாய்ப்பில்லை ராஜா. ஒவ்வொரு அடியாக அவர்களது ஆளுமையினைச் சமூக வலைத்தள அல்கோரிதங்கள் செதுக்கி உருமாற்றுவதை அவதானிக்கிறேன். எந்த போதைக்கு அடிமையான அடிக்டும் முதலில் சொல்வது தான், இந்த நிரந்தரச் சிக்கலுக்குக் காரணம். “நான் சும்மா தான் பாவிக்கிறன். சய்க், நான் அடிக்ட் எல்லாம் இல்லை” சொல்லிவிட்டு ஐந்தாவது நிமிடம் பேஸ்புக்கின் தீமைகளையும் அதன் மோசமான போக்குகளையும் பட்டியலிடுவார்கள். எது எப்படியோ, அது ஒரு கேளிக்கைத் தளம் என்ற எல்லையுடன் ஒரு நாளில் அரைமணி நேரம் செலவழிப்பதே கூட வாழ்விற்குத் தேவையற்றது என்பது எனது பரிந்துரை. அங்கு சென்று உங்கள் மனதைரியத்தினைப் பரிசோதிக்கும் யோகவித்தையைச் செய்யாமலே கூட இருக்கலாம்.
நான் ஒரு சொல் கூட இதுவரை நாலு பேர் மதிக்கும் படி எழுதாமல் இருக்கலாம். ஆனால் என்றோ ஒரு நாள் நான் எனது சொற்களால் மகத்தானதுகளை ஆக்குவேன் என்ற தீராத ஊக்கத்திலிருந்து எனது ஆணவம் பிறக்கிறது. ஆணவம் கலையூக்கத்தின் முதன்மை விசை. குன்றல் எதிர்விசை. நான் முதன்மையானதையே தேர்வு செய்கிறேன். நான் என்னவாக இருந்தேன் என்பதால் அல்ல. நான் என்னவாக ஆகுவேன் என்ற நம்பிக்கையாலேயே ஆணவம் நேர்நிலையானதாக உருமாறுகிறது. சிலருக்கு இன்றைய நிகழ்கணத்தில் இது மிகையாகத் தோன்றலாம். அதை நான் புரிந்து கொள்கிறேன். நான் அப்படியொன்றும் அசகாய பங்களிப்புகளைச் செய்து முடித்து விடவில்லைத் தான். ஆனால் நான் இதுவரை செய்திருப்பவற்றினதும் ஒரு துளி கூடப் பங்களிப்பாற்றாத மந்தர்கள் முன் நான் பணிய முடியாது. அவர்களைப் பொருட்டென்றே கொள்ள முடியாது. அவர்களுக்குக் கொடுக்கக் கொஞ்சம் ஆணவமும் நக்கலும் தான் கைவசமிருக்கிறது.
நேரம் முக்கியமானது. எனது வாழ்வைப் பொருள் கொண்டதாக ஆக்கிக் கொள்ள எனக்கான கனவுகள் இருக்கின்றன. அவற்றை எழுத வேண்டும். அவற்றுக்காக உழைக்க வேண்டும். மந்தர்களுக்கும் எதிர்மறையில் சிக்கிக் கொண்டு உழலும் பதர்களுக்கும் என்னால் நேரத்தை ஒதுக்க முடியாது. மானுடமென்னும் பெருக்கில் இவர்கள் யார்? இவர்களால் மானுடருக்கு உண்டாகக் கூடிய நல்விளைவென்ன? இருக்கும் இருளில் எதற்கு மேலும் இருள்? தேவை ஒரு அகலோ மெழுகுவர்த்தியோ தானே. குறைந்தபட்சம் ஒரு தீக்குச்சி உரசலில் பற்றும் ஒளியாகவாவது ஒரு வாழ்க்கை அமைய வேண்டாமா?
அப்படித் தம்மை ஆக்கிக் கொள்பவர்கள் முன் பணிவையும் சூழ்ந்திருக்கும் இருள் மனநிலைகளுக்கு முன் அகங்காரத்தின் தீயெரிவின் நிமிர்வையும் காட்டுகிறேன். எது நீங்கள் என்பதைப் பொறுத்து அதைப் பெறுகிறீர்கள்.