குறிஞ்சியின் தலைவி
குறுந்தொகையின் காட்சிகளுக்குள் நேரே சென்று வைத்துவிடக்கூடிய அனாரின் கவிதையிது. குறுந்தொகைக் கவிதைகளுக்குச் சில பின்னணிக் காட்சிகளை எழுதி அவற்றை அதனோடு பொருத்தி வாசிக்கும் முறையையே எழுதி வருகிறேன். அதில் நவீன கவிதைகள் சங்ககாலக் கவிதைகளைச் சென்று மீளும் வரிகள் அலாதியான வாசிப்பை உருவாக்குகிறது. அது ஒரு நெடுங் கயிற்றை இங்கிருந்து இழுத்துப் பார்த்து அந்தப் பக்கம் இருப்பவரின் உணர்வை அறிந்து உள்ளூரத் தோன்றும் மகிழ்ச்சி.
வேலன் வெறியாட்டு நிகழும் போதோ அல்லது ஊர்மன்றில் நடனக் களி புரியும் பொழுதோ தோன்றும் சடங்கெனவும் களியெனவும் இணையும் கவிதை. இக்கவிதையில் உள்ளது இரங்கலிலிருந்தல்ல தன்னிலை எழுதலிலிருந்து தேர்வை நிகழ்த்துவது. வருந்துதல் மெலிதல் அல்ல. தினவினதும் தன்னறிதலினதும் ஒருங்கெனத் தன்னை முன் வைப்பது. இந்தத் தளமாற்றம் நவீன கவிதைகளில் மாறியே வந்திருக்கிறது.
சொல்லிணைவுகளினதும் இசைத்தன்மையினதும் நுட்பங்களினால் நிகழும் சங்கக் கவிதைகளுக்குள் உள்ள கற்பனையின் பெருவீச்சே இன்று நாம் எண்ணிக் கொள்வது. அதனுள் உறையும் பாவங்களினதும் உணர்ச்சிகளினதும் உட்சுனையை இன்றென்பது மேலும் விரிவாக்குகிறது. தலைவனின் இயல்பைச் சுட்டி நீ இன்றென்னைத் தீண்டலாம் என்று அளிக்கும் அனுமதியின் திறவைத் தன் கைகளில் வைத்திருக்கும் தேவியின் வருகையே சங்கத்திலிருக்கும் சித்திரங்களை சமகாலக் கவிதைகள் உருமாற்றிய புள்ளி. இரவின் சுரங்கத்திலிருந்து எழும் கறுப்புத் தங்கம்!
குறிஞ்சியின் தலைவி
இரண்டு குன்றுகள்
அல்லது தளும்பும் மலைகள் போன்ற
முலைகளுக்கு மேல் உயர்ந்து
அவள் முகம் சூரியனாக தக தகத்தது
இரண்டு விலா எலும்புகளால் படைக்கப்பட்டவள்
பச்சிலை வாடைவீசும் தேகத்தால்
இச்சையெனப் பெருக்கெடுத்தோடும்
மலையாற்றைப் பொன்னாக்குகிறாள்
வேட்டையின் இரத்தவீச்சத்தை உணர்ந்து
மலைச்சரிவின் பருந்துகள் தாளப்பறக்கின்றன
மரக்குற்றிகளால் உயர்த்திக்கட்டப்பட்ட
குடில்களில் படர்ந்த மிளகுப்பற்றை
மணம்கசியும் கறுவாச்செடி
கோப்பிப்பழங்களும் சிவந்திருந்தன
நடுகைக் காலத்தில் தானியவிதைகளை வீசுகிறாள்
சுட்டகிழங்கின் மணத்தோடு
பறைகளுடன் மகுடிகளும் சேர்ந்து ஒலியெழுப்ப
ஆரம்பமாகின்றது சடங்கு
களிவெறி… கள் சுகம்…
மூட்டிய நெருப்பைச்சுற்றி வழிபாடு தொடங்கிற்று
வளர்ப்பு நாய்களும்… பெட்டிப்பாம்புகளும்… காத்துக்கிடக்கின்றன
மாயஆவிகளை விரட்டி
பலிகொடுக்கும் விருந்துக்காக
தீர்ந்த கள்ளுச்சிரட்டைகளைத் தட்டி
விளையாடுகிற சிறுசுகள்
வாட்டிய சோளகக்கதிர்களை கடித்துத்திரிகின்றனர்
பிடிபட்டு வளையில் திமிறும் உடும்பை
கம்பினில் கட்டி… தீயிலிட்டு…
அதன் வெந்த இறைச்சியை மலைத்தேனில் தொட்டு
கணவன்மார்களுக்கு பரிமாறுகின்றாள் குறத்தி
தும்பி சிறகடிக்கும் கண்கள்விரித்து
இரவுச் சுரங்கத்தின் கறுப்புத்தங்கமென எழும்
தலைவியை மரியாதை செய்கின்றனர்
மலைத்தேன் அருந்தியவாறு இருப்பவளை
புணர்ச்சிக்கு அழைத்தவன் கூறுகின்றான்
‘போர் தேவதையின் கண்களாக உறுண்ட
உன் முலைகளால்
குறிஞ்சி மலைகளையே அச்சுறுத்துகின்றாய்’
அவளது குரல் … மலைகளில் சிதறி ஒலிக்கின்றது
‘பெண் உடல் பூண்ட முழு இயற்கை நான்’
காற்றில் வசிப்பவன் …
காலத்தை தோன்றச் செய்வபன் …
இன்றென்னைத் தீண்டலாம்!
*
ஓவியம் : ட்ரோஸ்கி மருது