தங்கமே குட்டியே
நான் எளிமையான சொற்களை
அடுக்கிக் கொண்டிருந்த போது
நான் ஏற்கெனவே கட்டிய மாளிகைகளின் நிழல்
எதிர்ப்பக்கமாய் விழத்தொடங்கி விட்டது
பெருக்கெடுத்து மதகுடைத்த சொல்லாறு அடங்கி
அமைதியான கன்னமென
பிசிறற்று ஓடியது
நான் மெளனத்துக்கு அஞ்சிக் கூப்பாடு போட்ட
என் சொற்களே
உங்களை நம்பியது என் தவறுதான்
நீங்கள் என்னுடையவை அல்ல
நீங்களும் அல்ல
ஒவ்வொரு நிரையாய் அடுக்கி வைக்கப்பட்ட
கார்ட்ஸ் கோபுரத்தின் இறுதி அட்டையை
எடுக்கத் திரும்பிய போது
ஏதோவொன்று
அதை வீழ்த்தியிருக்கிறது.
அக்கணத்தின் விடுபடலுக்கு
வாழ்த்துக்கள்
என் தங்கமே.
அழகிய தெத்துப்பல்லென
பழைய கவிதைகளின் ஒரு பல்
இந்தக் கவிதைக்குள்ளும் முளைத்திருக்கிறது.
உனக்கும் மிக்க அன்பு
என் குட்டியே.
TAGS தங்கமே குட்டியே