சிறிய கடவுள்

சிறிய கடவுள்

தினசரி என்பது நூற்றுக்கணக்கான சிறு கணங்களால் ஆனது. பெரியதுகள் நிகழும் வாழ்க்கைகள் உண்டு. வாழ்வின் தீவிரம் மிகுபவை அவை. அவற்றுக்கான விழைவுகள் அடைவுகள் உச்சங்கள் தனியானவை. சிறியவைகள் நிகழும் கோடிக்கணக்கான வாழ்க்கைகள் மண்ணிலுண்டு. அவையே பூமியை வாழும் பெரும்பான்மை.
அவ்வாழ்க்கைகள் அன்றாடத்தில் சிறிய மகிழ்ச்சிகளில் பெரிதும் மகிழ்ந்து, சிறிய துக்கங்களில் பெரிதும் துயருற்று, சிறிய குற்றங்களுக்குச் சிறிய தண்டனைகள் கொடுத்து வாழ்வை அக்கணங்களின் சிறியவைகளால் வாழ்ந்து செல்கின்றன.

பெரிய கடவுள்கள் கேட்கும் பெரிய பலிகளை விடச் சிறிய தெய்வங்கள் கேட்கும் சுருட்டும் சாராயமும் போல போகன் சங்கரின் இக்கவிதை சிறியவைகளின் கனவைச் சொல்கின்றது. நான் சிறியதாய் இருக்க ஆசை மிகுகிறது. பெரிய கடவுள்கள் தலை உடைத்துப் பலிகேட்கும் மேடையில் நின்று சில கணங்கள் எல்லாம் சிறியதாகிவிட்ட உலகின் விடுதலையை இக்கவிதைக்குள் கொஞ்ச நேரம் வாழ்ந்து கொள்கிறேன்.

*

சிறிய விஷயங்களைப் படைத்துப் பார்க்கும்
சிறிய விஷயங்களில் மகிழும்
சிறிய கடவுள் நான்.
பெரிய சப்பாத்துகள் அணிந்த
பெரிய கடவுள்கள் திரியும்
வனத்துக்குள் நான் போவதில்லை.
ஆகவே அவர்கள்
என்னை புறத்தாக்குவதும் இல்லை.
நான் என் மீது
இயற்றப்படும்
சிறிய கீர்த்தனைகளைக் கேட்டுவிட்டு
அவற்றை இயற்றும் சிறிய பாணர்களுக்கு
சிறிய பரிசுகளைக் கொடுத்துவிட்டு
ஒரு சிறிய ஒலியுடன்
அணைந்து போகிறேன்.

TAGS
Share This