யாரோ யாருக்கோ

யாரோ யாருக்கோ

வாழ்க்கை தற்செயல்களின் புதிர்விளையாட்டு. எங்கோ சிந்தும் எதுவோ இங்கே இன்னொன்றாய் ஆகுவது. யார் கையோ தீண்டும் இசை யாருக்கோ மந்திரமென ஆகலாம். எவர் எப்பொழுதோ கொடுத்த முத்தம் இன்று இப்பொழுதை சொஸ்தப்படுத்தலாம். தற்செயல்கள் நோயளிக்குமளவுக்கு குணமாக்குபவையும் கூட. அதில் யார் கையும் இல்லாத ஏதோவொரு கை இருந்து கொண்டேயிருக்கிறது. இசையின் இந்தக் கவிதை அக்கரத்தின் ஓரணைப்பு.

*

மானிடர்

அவசரத்தில் இருக்கும் இளம் பெண்
ஸ்கூட்டியை விட்டு இறங்காமலேயே
மாகாளியம்மனின் வாசலில்
காலூன்றிப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறாள்.

ஒரு அவசரமுமின்றி
ஆடி அசைந்து
வெளிவரும் ஒரு மூதாட்டி
தன் கைக்குழியை ஒற்றி எடுத்து
பூசி விடுகிறாள்
அவளுக்கு.

பிசிறை
கண் மறைத்து
ஊதியும் விட்டாள்

அந்த ஊதலில் வந்த இசை
தூரத்தில் இருந்த
ஒருவனுக்குத் தெளிவாகக் கேட்டது.

யாரோ யாருக்கோ
தீற்றி விடும் திருநீரில்
யாரோ ஒருவனின்
ஏதோ ஒன்று குணமடைகிறது.

தன் கை ஒன்றுமில்லாத
இந்தக் காரியத்தைக் காணும் தேவியின் வதனத்தில்
ஒரு பூரித்த புன்னகை.

இசை

TAGS
Share This