மென்னிழைகளால் நெய்யும் பூமி
எந்தவொரு கலைக்கும் ஞாபகத்துக்கும் உள்ள தொடர்பென்பது மிக அந்தரங்கமானது. அது தான் கலையின் வேலை. ஞாபகத்தை ஞாபகத்தின் மூலம் ஞாபகப்படுத்துதல். அதன் மூலம் அந்தரங்கமான வகையில் அதை அனுபவிப்பவனிடம் ஏற்படுத்துவது. கிளர்த்துவது.
ஈழத்து சிறுகதை வரலாற்றில் பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களினதும் ஒரு கதையைத் தானும் படித்திருக்கிறேன் . மிகப் பிரபலமானவர்களின் எல்லா தொகுப்புக்களையும் படித்திருக்கிறேன். ஆனால் முழுமை கூடிய இப்படி ஒரு தொகுப்பை படித்ததில்லை. ஒரு மகத்தான கலைஞனின் கைகளுக்குத் தான் இப்படி எழுதுவது சாத்தியம். வாழ்வின் எல்லைகளற்ற சாத்தியங்களை தொடராமல், சாதாரண வாழ்வின் சாத்தியங்களின் விரித்துச் சென்று அகமும் புறமுமாய் விரியும் கதைப் பரப்புக்களை நெய்கிறார்.
இந்த தொகுப்பை பற்றி எதுவும் அதிகம் பேசத் தேவையில்லை. தொகுப்பு தானே தன்னளவில் அதிகம் பேசக் கூடியது. அதன் உள்ளாமைப்பே அதன் எல்லைகளை எந்தவொரு புற வார்த்தையையும் விட விரித்துச் செல்லும் வல்லமை கொண்டது. ஆனாலும் ஒரு வாசக அனுபவ அடிப்படையில் இந்த கதைகளின் போக்கை அது வாசகரை இழுக்கும் பக்கங்களை ஏனைய முக்கிய அம்சங்களை தொகுத்துச் சொல்லலாம். அதுவே இந்த பத்தியால் ஆகக் கூடிய சாத்தியம்.
முதலாவது இவர் யார் என்பதை, இவரை எங்கே வைக்கலாம் என்பதை பார்க்கலாம். ஈழத்தைப் பொறுத்தவரையில் உருவாகியிருக்கும் மிக முக்கியமான இந்த தலைமுறை கதை சொல்லிகளின் படைப்புக்கள் எள்ளலையும் மிக அதீத அரசியல் நிலைப்பாடுகளையும் பேசுவதாக உள்ளது. ஆனால், இவர்களிடம் இருந்து வெகு சுவாரசியமான படைப்புக்களை அடையாளம் கண்டிருக்கிறோம். இவர்கள் எல்லோரிலும் இருந்து மாற்றாக உருவாகியிருக்கும் கதை சொல்லல் முறை. வாழ்வை தரிசிக்கும் தளம் என்பவை கெளரிபாலனை தனித்துவப் படுத்துகிறது.
இவர் யாருக்காக கதை சொல்கிறார் ? என்னை பொறுத்தவரையில் யாருக்காகவும் சொல்லவில்லை. கதை தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு எளிமையான இதயத்தை காலம் தேர்வு செய்திருக்கிறது.
கதை சொல்லும் நுட்பத்தில் இவர் தனது முத்திரையை உருவாக்குகிறார், அதன் மிக நுட்பமான விவரணைகள். அறுபடாத அல்லது தெறிக்காத நீண்ட காட்சி தொடர் அமைப்புக்கள், உவமைகள். படிமங்கள் மூலம் ஒரு காட்சி உலகை அங்குலம் அங்குலமாக நெய்கிறார். கதையின் மொழி உடைத்துப் பரப்பிய கவிதை வரிகள். வேறு என்ன சொல்ல? உவமைகளிற்கு ஒரு உதாரணம்,
“திசை தப்பிய சமுத்திர வெளியில் படகு அலைந்த போது, வானில் தும்பிக்கை கொண்ட முகில் கூட்டம் சில நாட்கள் பின் தொடர்ந்து வர தாம் கரை தட்டியதாக, அப்பா சொன்ன போது, தான் பிள்ளையாரப்பாவை வேண்டிக் கொண்டதை நினைத்துப் பார்த்தாள்.”
டோர்னாடோ சூறாவளியையும் மனித நம்பிக்கைகள் உலகைப் பார்த்து விரியும் விதத்தையும் இவ்வளவு அழகாக பதிவு செய்த வரிகளை அடையும் தருணங்களில் கலைஞனின் மந்திர விரல்கள் சொற்களை சொற்களால் உருவாக்கிய படி நம்பிக்கையை வாழ்வினால் உருவாக்குகிறது.
ஒவ்வொரு கதையாக விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லை மிக நேர்த்தியான படைப்புக்கள் என்று எல்லாவற்றையுமே சொல்கிறேன், உலகத்தரமான கதைகள் படிக்க விரும்பும் வாசகர்களுக்கு இந்த கதைகளை பரிந்துரைக்கிறேன்.
மனித வாழ்வின் சிதைவுகளை, மனித மனங்களின் ஒழுங்கமைப்பை, மனித கண்ணீரின் விலைமதிப்பை ஒவ்வொரு கதையும் தனக்கே உரிய ஒழுங்குருவாக்கலுடன் படைக்கிறது. தான் வாழும் பூமியை ஒரு கலைஞன் நேசிக்கிறான், தனது எளிய வாழ்வை நேசிக்கிறான், தனது மனிதர்களை. தனது இயற்கையை, தனது இயலாமைகளை எல்லாவற்றையும். அதனாலேயே அவன் படைக்கிறான். அவன் மூலமாக படைப்பும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
புத்தகத்தின் ஆரம்பத்தில் சில வரிகள் உண்டு. ” யுத்தத்தின் எச்சங்களாக, மனச் சிதைவுகளுடனும், உடற்ச் சிதைவுகளுடனும், உடல் உறுப்புகளுக்குள் செல்த் துண்டுகளுடனும், துப்பாக்கி ரவைகளுடனும் வாழ்ந்து கொண்டிருப்போருக்கு, இந்த புத்தகத்தை சமர்பிக்கிறார் என்று, அதுவே அவரின் படைப்பு அனுபவங்களின் வெளிப்பாடும்.
யுத்தம் முடிவடைந்த பின் யுத்தத்தின் மக்கள் என்னவானார்கள்? யார் அவர்களை பராமரிக்கிறார்கள், யாருக்காக போராடினோம் என்ற கேள்வி எப்படி எழுந்தது. இந்த வாழ்வும் போராடமும் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் இன்றும் நடந்து கொண்டிருக்கும் ஒன்று தான், அப்படியான மனிதர்களுக்கு இந்த சமூகம் பொருட்படுத்தும் படியாக எதனையும் செய்யவில்லை, மதிக்கக் கூட இல்லை, அதற்குப் பதில் பயப்பிடுகிறது. ஒதுக்கி வைக்கிறது, எளிமையான ஒரு துளிக் கண்ணீர் தான் அவர்களுக்காக நாம் சிந்தியது. கண்ணீரை விட அடர்த்தியானது இரத்தம். அவர்களுக்கு கொடுக்க இந்த கலைஞனுக்கு இருப்பது இவை தான். ஞாபகத்துக்கும் வாழ்வுக்குமான மாயப் புதிரிலிருந்து பிறக்கும் இக் கதைகள், இந்த மனிதர்களின் வாழ்வின் மறக்க முடியாத தழும்புகள். அலைகளில் சிதறியும் காடுகளில் பதுங்கியும், வீடுகளில் ஒடுங்கியும் வாழ்ந்த ஒரு சமூகத்தின் கதைகள் தான் இவை, இவர்களுக்கு இக் கதைகள் இருளில் கண்ணீரொளிரும் பத்து மெழுகுவர்த்திகள்.
(2016)