17: அரூபம் எழல்

17: அரூபம் எழல்

மதுச்சாலையின் அன்ன வடிவக் கொத்து விளக்குகள் ஒளிக்குமிழிகளைப் போல் ஓவியங்கள் தீற்றப்பட்ட சுவர்களிலும் தரையிலும் குமிந்திருந்தன. விளக்குகள் இல்லாத இடங்களில் கருமை கலைந்த கூந்தலெனப் படிந்திருந்தது. முது பாணர்களும் விறலியரும் பாகர்களும் படை வீரர்களும் முன்னாள் வீரர்களும் குடிகளில் சிலருமென கலவையான மனிதர்கள் மரக்குற்றிகளில் அமர்ந்து கொண்டு கரும் பாறையாலான தட்டுகளிலும் சாணத்தால் மெழுகப்பட்ட திண்ணைகளிலும் செம்மண் தரையிலும் தலைகளையும் உடல்களையும் போட்டபடி உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் குறட்டை ஒலிகள் ஏற்ற இறக்கங்களுடன் உறுமல்களென எழுந்தன. பெரிய முரசு வயிறுகள் கொண்ட பாகர்களின் மூச்சில் கள்நெடியும் ஊன்சோறும் இலைதழைகளின் மணமும் பரவியிருந்தது. முது பாணர்கள் தமது குழல்களை விரித்துப் போட்டு வாயில் வீணீர் வடிய உதடுகளைச் சப்புக் கொட்டியபடி மழலைகளைப் போல் துயின்றனர். மதுச்சாலை வியாபாரியும் அவன் துணைச் சிறுவனும் கீழேயும் தட்டுகளிலும் விழுந்தும் புரண்டும் இன்னும் பிடியை விட்டு நகராமல் கைகளுக்குள்ளும் பற்றியிருக்கும் மூங்கில் குவளைகளைச் சேகரித்து கழுவுநீர்க் கலயத்தில் போடும் ஒலி பொதக் பொதக்கெனக் ஒலித்துக்
கொண்டிருந்தது.

துணைச் சிறுவன் இராப்பிரியன் கீர்த்த மந்திரரின் முன் குவிந்து கிடந்த குவளைகளைப் பார்த்துவிட்டு “இந்தக் கிழவரிடம் நாணயங்கள் இருக்குமா ஐயனே, ஒரு தினம் முழுவதும் நாம் விற்கும் கள்ளையும் மதுவையும் ஒருவரே குடித்திருக்கிறார். பாருங்கள், எத்தனை குவளைகள் சிதறிக் கிடக்கின்றன. இவர் பாடிய பாடல்களையும் விட இவை அதிகம்” எனச் சலித்துக் கொண்டு குவளைகளை ஒன்றன் மேல் ஒன்றாக உறித்தட்டுகளென அடுக்கி கலயத்தில் போட்டான். “பிரியா, இன்னும் மூநாட்களுக்கு ஒருவர் ஒரு செப்பு நாணயம் கொடுத்தாலே நமக்குப் போதும். இது களிக்காலம். கள்ளும் மதுவும் நமக்கு அன்பளிப்பாகவே வியாபாரிகளால் அளிக்கப்படுகிறது. நமது கூலிதான் இந்த ஒரு செப்பு நாணயம். அதுவும் இல்லையென்றால் கூடப் பரவாயில்லை. நமக்கும் இது களிக்காலம் தான்” என வாயை விரித்து காற்றை ஊதிக்கொண்டு சொன்னான் மதுச்சாலை வியாபாரி எருவீரன். அவனது குரலில் இருந்த மகிழ்ச்சியான பாவனை இராப்பிரியனை எரிச்சலாக்கியது. “என்ன களிக்காலம். என்னால் இன்னும் மூநாட்கள் துயில முடியாது. அது தானே. அவர்களைப் பாருங்கள். ஒவ்வொருவரும் கூத்தம்பலத்தில் ஆடும் பதுமைகள் போல் அபிநயித்தபடி படுத்திருக்கிறார்கள். அதோ அந்த இளம் வீரன் இரவுக்காவலுக்கு நிற்பவனைப் போல் மரக்குற்றியில் இருந்தபடி வேலில் கையை ஊன்றி தலையை முட்டுக்கொடுத்து உறங்குகிறான். இவனெல்லாம் என்ன காவல் வீரன். சிங்கை வீரர்கள் இவனுக்கு முன் வந்தாலும் கனவு என நினைத்து மீண்டும் துயில்வான். அங்கே அந்தப் பாணரைப் பாருங்கள் குருவியின் அலகு போல் வாயைக் குவித்து யாழை முத்தமிட்டபடி உறைந்து துயில்கிறார். யாழுக்குப் பதிலாக யாரும் இளம் பெண்கள் கிடைத்திருந்தால் அந்தப் பெண்ணின் இரவை நினைத்துப் பாருங்கள். அவ்வளவு தான். அவளைப் பிறகு கழுவுநீர்க் கலயத்தில் தான் போட வேண்டும். இங்கே இந்தப் பாகனின் வயிற்றில் ஒரு யானைக்கு வைக்கும் தழைகள் கிடக்கிறதா அல்லது காடே ஒலிக்கிறதா எனத் தெரியவில்லை. உள்ளே புலி கிலி இருக்குமா என்றும் ஐயமெழுகிறது. வாயா குகையா..” என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை சொல்லியபடி அப்படியும் இப்படியும் கைகளை உலாத்தினான். துயிலின்றிச் சிவந்திருக்கும் அவன் கண்களைப் பார்த்த எருவீரன் அவனுக்கு இது துயில் விரட்டும் பாடல் என எண்ணிக் கொண்டான்.

இராப்பிரியன் கடைசிக் குவளைத் தட்டுகளின் உறியை நுனி விரலில் வாழைப் பிடித்தபடி வீழாமல் நடப்பவனைப் போலக் கவனத்துடன் கீழே துயில்பவர்களை மிதித்து விடாமல் கால்களை எடுத்து வைத்து நடந்து வந்தான். மூன்றாவது கழுவுநீர்க்கலயம் நிறையும் நிலையில் இருந்தது. அதற்குள் விழுந்து விடுவபனைப் போல் நின்றவன் நேரே கலய வாய்க்கு நேரே கரங்களை நீட்டி விடுவித்தான். சதக் பொதக்கென நீரில் யானை துள்ளுவதைப் போல நீரொலி எழுந்தது. மூங்கில் குவளைகள் விழுந்த நீர்க்கலயத்தில் விழுந்த ஒலிகேட்டு எழுந்து விழிவிரித்து எங்கிருக்கிறோமென அரண்டாள் அரூபி.

நீருள் விழுந்து திரும்பவும் மூங்கில் குற்றியென எழுந்து வந்தது துரிதையின் குருதியொட்டிய முகம் எனக் கண்டு உடல் நடுங்க அமர்ந்திருந்தாள். நெஞ்சின் நடுவிலிருந்து தலையளவு வண்டொன்று துளைத்து நெளிந்து கூர்க் கொடுக்குகளால் கிளறிக் கிளறி நகர்ந்து உள்ளே கிண்டி இறங்கிச் செல்வது போல் வலியெழுந்தது. நெஞ்சை இரண்டு கைகளாலும் பொத்தியபடி அழுத்தி நீவினாள். இராப்பிரியனைப் பார்த்து “மதுவுண்டா இளவலே” என நடுங்கும் குரலில் கேட்டாள். “இருங்கள் அக்கா தருகிறேன். நெஞ்சுக்கு என்ன செய்கிறது. யாரையேனும் எழுப்பவா” என அவளை நோக்கிக் கேட்டுக் கொண்டு வந்தான். “இல்லை இளவலே. இது நெஞ்சின் துயரல்ல. நினைவின் வடு. அதை மதுவூற்றித் தான் வருட முடியும். ஒரு குப்பி இருந்தாலும் கொடு” என இரங்கும் யாழின் குரலில் கேட்டாள். அவளைக் கைகொடுத்துத் துக்கியவன் “வாருங்கள் அக்கா இங்கு முழுவதும் கேட்கும் குறட்டையொலிகளில் எனக்கே நெஞ்சில் வலி வந்துவிடும் போலிருக்கிறது. முன் திண்ணையில் சில விறலிகள் துயில்கிறார்கள். அவர்களின் குறட்டை கொஞ்சம் பாட்டுப் போலவாவது இருக்கும்” என இளம் முறுவலுடன் சொல்லிக் கொண்டு அவளை எழுப்பினான். எழுந்து நின்ற அரூபிக்குக் கால்கள் முன்செல்வது போலவும் உடல் ஆடிப் பின் பிரிவது போலும் விழிகள் மயக்குக் காட்டியது. “நீர் இருக்கிறதா” என்றாள். “இதோ” என நீர்க்கலயத்தைத் திறந்து புதிய குவளையில் நீரைக் கொடுத்தான். நரம்புகளில் நீர் வழிந்து செல்லச் செல்ல கண்கள் மயக்கு நீங்கித் தெளியத் தொடங்கியது.

சுற்றியிருப்பவர்களைப் பார்த்தாள். சோதியனும் வாகை சூடனும் உட் திண்ணையில் படுத்திருந்தார்கள். வாகை சூடனின் மொழிக்கை சோதியனின் நெஞ்சில் கிடந்தது. அரூபி வாகை சூடனின் கையை நோக்கியதும் வயிறு பிரண்டு ஓங்காளித்துக் கொட்டினாள். பிரியன் அவளின் தலையை இருபுறமும் பிடித்துக் கொண்டு நிற்க வயிற்றில் இருந்த எல்லாமும் வெளியே கொட்டுவது போல் எக்கியெக்கி ஓங்காளித்துக் கொட்டினாள். மூக்கிலும் விழியிலும் நீர்வர உடைந்த தாமரைத் தண்டெனத் துவண்டவளைக் கைகளில் தாங்கி மரக்குற்றியில் அமர வைத்தான். “முகத்தை நீரால் கழுவிக் கொள்ளுங்கள் அக்கா. எலுமிச்சை பிழிந்த சாறிருக்கிறது. அதில் உப்பைக் கொஞ்சம் போட்டுக் குடித்தால் சுகமாகிவிடும்” என்று சொல்லிக் கொண்டு உள்ளே சென்றான். வாழைக் கிளைகள் எனத் தோன்றச் செய்யும் இரு பசுங் கரங்களையும் தொடைகளில் ஊன்றியபடி கலங்கிய விழிகளால் மதுச்சாலையை நோக்கினாள். விழிகள் நீரைத் தாண்டி எதையும் பார்க்க முடியாமல் கலங்கின.

துரிதை சிறிய சங்குக் கைவளைகளை கைகளில் குலுக்கிக் காட்டி அதைத் தனக்கு அணிவித்த நினைவு நீரில் ஆடிபிம்பமென குலுங்கியது. விழிகளை இறுக்கி மூடித் திறந்தாள். வெண்ணைய்க் கட்டியொன்றை எடுத்து அம்மாவின் முதுகில் கொட்டி விட்டு ஓடும் துரிதையின் சிறுகுழலில் தூங்கும் கனகாம்பரச் சரம் விழிகளில் எழுந்து செங்காவி வண்ணமென விழிநீர் திரண்டது. ததும்பி நிற்க முடியாமல் பாதாளத்தில் விழும் துரிதை தனது கண்ணீரைப் பற்றியபடி “ரூபி. ரூபி” எனக் கத்துமொலி காதை அடைந்த போது மீண்டும் ஓங்காளித்தாள். வயிறு வெட்டுப்பட்டதைப் போல் நோவுண்டது.

இராப்பிரியன் உப்புக் கலந்த எலுமிச்சை நீரைக் கொணர்ந்து முன்னால் வைத்து விட்டு கழுவுநீர்க் கலயத்தைச் சாய்த்து நீர் சிந்திவிடாமல் உருட்டிக் கொண்டு உள்ளே சென்றான். மூங்கில் குவளையிலிருந்த நீரை எடுத்து முகத்தில் கவிழ்த்து ஊற்றினாள். மூச்சு ஒருகணம் நிறைந்து கனல் அணைந்தது போலிருந்தது. எலுமிச்சைச் சாற்றை உதட்டில் வைத்து வாய்க்குள் நிறைத்து மெதுமெதுவாக உள்ளே வழியவிட்டாள். கசப்பும் கரிப்பும் உடலில் இறங்குவது கொஞ்சம் அவளை இளக்கியது. எழுந்து வாசலைக் கடந்து மூஆல்களுக்கு அருகில் எரிந்து அணையாத விறகுத் துண்டுகளின் அருகில் சென்று வேப்ப மரக்குற்றியொன்றில் அமர்ந்தாள். தணலில் நெருப்பு ஒரு அகல் வெளிச்சமென தன்னைச் சுற்றி அனலைப் பரப்பியபடியிருந்தது. முகத்தில் எஞ்சியிருந்த ஈரம் மென் துமிகளெனக் கரைந்து செல்வதை உணர்ந்து கொண்டிருந்தாள். விறகின் தணல் மேனியில் காற்றுக்கு எழும் தீக்கண்களால் துரிதை தன்னைப் பார்க்கிறாள் என எண்ணினாள். வெட்சி மலரின் உட்காம்பில் உறிஞ்சும் தேன் துளியென அவளுக்குள் துரிதை நுழைந்தாள்.

துரிதை அரூபியின் சிறுகரங்களை எப்பொழுதும் விடுவதில்லை. “அவள் எனது மகளடி. நீயே அவளைக் கொஞ்சிக் கொண்டிருந்தால் நான் எதற்கு அவளைப் பெற்றேன்” என புன்னகையுடன் சலித்துக் கொள்ளும் அம்மாவின் எழில்வதனம் கனவில் ஒலியெனக் கேட்டது. “அவளுக்கு நான்கு வயதாகிறது துரிதை. அவளைத் தவழவாவது கற்றுக்கொள்ள விடு” என நகைக்கும் தந்தையின் குறும்பு முகம் காற்றில் அலைத்து கசங்கி நகர்ந்தது. தூளியில் ஆட்டியபடி அதற்குள் எட்டிப் பார்த்து இனிவிழிகளை உருட்டிக் காட்டி தாமரைக் கூர் நாவை ஓணான் போல் நீட்டியும் மடித்தும் இதழ்களை உள்மடித்து விளையாட்டுப் பாவையென முன்னிற்பாள் துரிதை. அவளது செவிகளில் அந்திச் சூரியனின் கரம் தொடும் பொழுது அவளுக்குச் சிவந்த இரத்தினக் காதுகள் என அரூபி வியந்திருக்கிறாள். அம்மாவின் நாசியில் ஒரு நீல இரத்தினத் துளி பொருத்திய மூக்குமின்னி தங்கத்தில் இழைக்கப்பட்டிருக்கும். துரிதை அந்த மின்னி தனக்குத் தானெனச் சொல்லிவிட்டு இல்லை இல்லை அது பிள்ளைக்குத் தானென அரூபியைக் காட்டிவிட்டு முகம் நாணி கலகலகலவென நகை சிந்துவாள்.

ஒவ்வொரு திங்களுக்கும் இரண்டு கால்களையும் நீட்டி அதில் நேராக ரூபியை வளர்த்தி மருந்தெண்ணை பூசி மேனியை மலர்த்தி செவியைப் பிரட்டி நாசியைப் பிடித்து உள்ளங் கால்களை இதமான விரல்களால் அழுத்தி இடையில் மின்னும் வெள்ளி அரைஞ்சாண் கயிற்றுடன் இதழில் மெல்ல விரியும் பூச்சிரிப்பைப் பார்க்கும் துரிதை இவள் ஆகாய மேகங்களின் தேவியென எண்ணி அரூபியின் உடலை நூறு நூறு விழிகளால் சுற்றி விரல்களால் காற்றில் வளைத்து தன்நெற்றிக் கரைகளில் மடித்து நெட்டி முறிப்பாள்.

பருத்தியின் பஞ்சில் திரிகளை உருட்டி கையாந்தகரையின் இலைகள் கொய்து அதன் சாற்றில் திரிகளை ஊற விட்டு வெயிலில் காய வைத்து ஒரு அகல் விளக்கில் காய்திரிகளைப் போட்டு எரிப்பாள். மொழமொழவென மழித்த தேங்காய்ச் சிரட்டையில் சந்தனம் பூசி அகல் மேல் கவிழ்ப்பாள். புகை படிந்து கொட்டும் கரும் பொடியில் அகலெண்ணை கலந்து அரூபியின் கண்களுக்குத் தீட்டுவாள். சிவப்பரிசி குற்றி குறுநெல்லாக்கி கருகும்வண்ணம் வறுத்து நீர்சேர்த்து செவ்விரத்தம் மலர்களை அதில் ஊறவைத்துப் பிழிந்து காய்ச்சி வடித்த சாந்துப் பொட்டை ரூபியின் கன்னங்களில் இரு கருநிலவுகளென ஒட்டி உள்ளங்கால்களில் மலர்க் கண் போல் பொட்டிட்டு கண்ணூறு கழிப்பாள். தித்திக்கும் அவள் வாயொலியைக் கேட்டுவிட்டு அத்தைகளோ மாமிகளோ பளிங்குக் கன்னத்தில் முத்தமிட்டு வாயூறிச் சொற்கள் சொன்னால் அவர்கள் எழுந்து சென்றதும் அவர்களின் காலடி மண்ணையெடுத்து அதில் உப்பையும் சேர்த்து கைகளில் மடித்துக் கொண்டு அவளைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டே வாய்க்குள் எதையோ முணுமுணுத்து மண்ணைக் கொண்டு போய் வீதியில் எறிந்து மூன்று முறை எச்சிலைத் தூ தூ தூ என உமிழ்ந்து நாவூறு கழிப்பாள்.

துரிதைக்கு அரூபி நெஞ்சில் முளைத்த மலர். அவளைக் கசங்காமல் தாங்கும் காம்பெனத் தன்னெஞ்சை எண்ணும் போது மார்பு சுரந்து கனிவதை அவளே நோக்குவாள். நாகதேவித் திருவிழாவில் தந்தையை இழுத்துக் கொண்டு ஒவ்வொரு வாணிபத் தலமாய் அலைந்து வளைவிகளும் ஆடிகளும் பாவைகளும் கேட்டுக் கேட்டு வாங்குவாள். “இவையெல்லாம் தான் மனையிலிருக்கிறதே துரிதை. ஒவ்வொரு பருவமும் நீ வாங்கிக் குவிக்கும் பாவைகளை வைத்து அடுத்த திருவிழாவிற்குள் நானொரு பாவை வியாபாரி ஆகிவிடுவேன் போலிருக்கிறது” என வாய்நிறையத் தழையும் சிரிப்புடன் சொல்லும் தந்தையைப் பார்த்துக் கொண்டே இடுப்பில் மந்திக் குட்டியெனத் தொங்கிக் கொண்டு திருவிழா வெளிச்சத்தில் ஆடிகளில் ஆடும் தன்னை யாரோ ஒரு குழந்தை ஒவ்வொரு ஆடிக்குள்ளும் நின்று தன்னைப் பார்ப்பது போல் விழிவிரித்து நோக்கும் அரூபியைக் காட்டி “ஆஹ், நான் எனக்கா கேட்டேன் தந்தையே. எல்லாம் பிள்ளைக்குத் தான். அவள் விழிகள் எப்படி பாவைக் கடையில் ஏங்குகின்றன என்பது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா. உங்களுக்கென்ன குழந்தையைப் பெற்றால் தானே அதன் அகம் தெரியும்” எனச் சினந்து கொள்வாள் துரிதை. “நீ பெறாத பிள்ளைகளுக்கும் அவர்களுக்குப் பிறக்க இருக்கிற பேரர்களுக்கும் சேர்த்துப் பாவைகள் உன்னிடம் இருக்கிறது துரிதை” எனத் தந்தை பதிலாடினால் அரூபியைத் தூக்கிக் கொண்டு போய் அன்னையிடம் முறையிடுவாள். “அம்மா நாங்கள் தந்தையை மாற்றிக் கொள்ளலாமா. இவரை எப்படியம்மா நீங்கள் மணமுடித்தீர்கள். குழந்தையின் தவிப்பைக் காணும் விழிகளல்லவா தந்தையென்பது” எனப் புலம்புவாள்.

“வண்டிலில் புதிய பாவைகளையும் அழகுப்பொடிச் சுண்ணக் கிண்ணங்களையும் மணிகள் கோர்த்த கழுத்து மாலைகளையும் ஏற்றிய பின் தான் அவளிலிருந்து சாமியிறங்கும்” எனத் தந்தை வண்டியோட்டிக்குச் சொல்லியபடி குலுங்கிச் செல்லும் வண்டிலில் காற்று அலைத்து செம்மண் புழுதி எழுந்து மோதும் பொழுது அரூபியை மார்புக்குள் ஒளித்துக் கொண்டு அம்மாவின் பட்டாடையை இழுத்து மூடிப்போர்த்திருக்கும் துரிதையின் மார்புச் சூடு அரூபியின் உளத்தில் பிறந்த பின் தவழ்ந்த கருப்பையென ஒட்டிக்கொண்டிருப்பது.

மனையின் முற்றதிலிருந்த வேங்கை மரத்தில் தந்தை கட்டிய நீண்ட மரவூஞ்சல் தூங்கும். வேங்கை பூத்துக் கண்திறக்கும் காலத்தில் உதிரும் மஞ்சள் பொன்னைச் சேர்ப்பது போல் காற்றில் விழும் போதே எத்தி எழுந்து ஏந்திக் கொள்ளும் துரிதையைக் காட்டி “வானத்திலிருந்து வந்திருப்பவள் துரிதை. திரும்ப அங்கேயே போய்விடுவாள்” என தோழிகள் சொல்லி வெருட்டும் பொழுது அரூபி விக்கி விக்கி அழத் தொடங்குவாள். நெஞ்சில் அவளுக்கு அன்னை துரிதை. அவளின்றிப் பிறிதெவரும் இலாத உலகு அரூபியினது. தோழிகளை விரட்டி அனுப்பிக் கொண்டே பாடலென எழும் குரலில் அவளைத் தேற்றுவாள் துரிதை.

“என் கன்றுக் குட்டிக்கு என்ன ஆனது. கனிச் சாந்தே. தளிர் தோகையே. முகை முத்தே. பனி தண்ணே. எழுபொன்னே. வெண்தூவிப் பாவையே. தூமதியின் அத்தையே. களியின் பொலிவே. மடியில் குயிலே. மஞ்ஞையின் பாட்டே. புன்மழைப் பொழிவே. மேகக் குலையே. மென்னிளம் மஞ்சளே. துடி விண்மீனே. தீத்தொடும் துடிப்பே.
உண்ணா அமுதே. உறையும் கனவே. உருகும் நெய்யே. திரையும் கடலே. தீராத திளையே. மூடாத விசும்பே. முலை தொடும் குருத்தே. கூடாத வெறியே. கூடும் விருந்தே. அள் விழைவே. கள் மயக்கே. சிகை மலரே. சிந்தும் யாழே. மின்னும் துளியே. கன்னல் இன்னும் பாலே. வெட்சியில் பொன்வண்டே. வெந்நீரில் பனங்கட்டியே. தேன்பாகில் செய்சிலையே. உம்பர் தோட்ட நறுமலரே. தித்திக்கும் திளைநடையே. திரை மலரும் சித்திரமே. பறக்காத வான்வில்லே. பட்சிகளின் பண்குலைவே. துன்னிருளில் வெளிர்வழியே. துயிலாத சுழல் உலகே. அகலாத பாவை விழியே… யார் உன்னை என்ன சொன்னார். அக்காவிடம் சொல். பிடிகாப்பு போட்டு வைப்பேன். தடிகொண்டு அடியிடுவேன். உறிக்கயிற்றில் கட்டிடுவேன். உரலிட்டு நசுக்கிடுவேன். சொல்” எனக் கொஞ்சிக் கொஞ்சி இடை ஏற்றி உடல் சாற்றுவாள். அரூபி இதழ் பூத்து சிரித்துக் கொண்டே “அக்கா அக்கா” என மிழற்றி கால்களைச் சிறகென உந்தி உந்தி அக்காவின் இடையில் பறவையென ஆவாள்.

மனையின் திண்ணையில் அந்தி பொன்னை வார்க்கும் வேளைகளில் வகை வகையான மலர்களை அலைந்து திரிந்து கூடையில் கொணர்ந்து வைப்பாள். மஞ்சளும் அழகுப் பொடிகளும் கொணர்ந்து சந்தனமும் பன்னீரும் கலந்து அரூபியின் முகத்திலும் கைவிரல்களிலும் பூசுவாள். எந்த மலர் அவள் சிறுசிகைக்கு வடிவெனத் தேர்வாள். இது இல்லை இதுவென ஒவ்வொன்றாய் வைத்து ஆடியில் காட்டுவாள். “ஒவ்வொரு குழந்தையும் வடிவாயிருக்கிறது அக்கா” எனச் சொல்லி வாய்விரித்து பல்லொளிர்ந்து உமிழ்நீர் சொட்டும் அரூபியைப் பார்த்து “என் ஒவ்வொரு குழந்தையும் நீதானடி கொழுந்தே” என முத்தாடுவாள்.

விறலியர் பாடங்கள் மனை முற்றத்தில் நடக்கும் பொழுது அக்காவின் மடியில் யாழுக்கு மாற்றாக அரூபியே அமர்வாள். “இவளையா மீட்டப் போகிறாய். வீர் வீரெனக் கத்தும் யாழைப் பிடித்திருக்கிறாள் துரிதை” எனச் சொல்லி முதுபாணர்கள் எள்ளியாடுவார்கள். “அரூபி என் குழந்தை. அவள் யாழெடுத்து மீட்டும் பொழுது விரல்களில் அன்னை கொற்றவை எழுவாள். பாணர்களே உங்கள் சொற்களை விடவும் என் தங்கையின் விரல்கள் மண்ணில் நிலைக்கும். அவள் நாவினில் எழும் பாடல்கள் உங்கள் கனவுகளை வெல்லும். அவள் மங்கலம் என்ற சொல்லென அமைவாள். அவள் நீட்டிய திசையில் மலர்கள் சடைக்கும். காட்டிய விழியில் காலங்கள் திறக்கும். உங்கள் பார்வை படுவதே அவளுக்கு நோய். இங்கிருந்து போங்கள்” என அதிரும் யாழின் குரலில் சண்டைகளிடுவாள்.

இரவிரவாய் நடக்கும் விறலியர் கணிகையர் ஆட்டங்களில் விரல்களை காற்றில் காந்தள் மலரென அசைத்தபடி உன்னியெழும் அரூபியை சிறகு விரிக்கப் போகும் அன்னமெனக் கரங்களில் தூக்கி மிதத்துவாள் துரிதை. ஆட்டங்களில் கால்களும் கைகளும் விரல்களின் செந் நுனிகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றாய் விரிந்து துடிப்பதை விழியுருட்டி நோக்கிமலரும் தங்கையின் குறுமுகத்தைக் கிண்ணமெனக் கைகளில் ஏந்துவாள். அரூபியின் செவிகளில் “நீ எழுந்து ஆடும் பொழுது சொல் தீயென நெளிய வேண்டும் ரூபி. கழல்கள் மண்தொட மறக்க வேண்டும். கைகள் சிறகுகளென்பதை மறவதே. விழிகளை முன்னிருப்பவரின் ஆடிகள் என ஆக்கிக் கொள். குரலில் தழையாத நாண் பூண வேண்டும். கூந்தலில் எம்மலர் நீ சூடினாலும் அம்மலரே புடவியில் அழகானதென்று வாய்கள் ஒலிக்க வேண்டும். அணிகளில் நீ பார்க்க வேண்டியது அவற்றின் நுண்மை. இழைவது எதுவோ அதுவே விழிகளை மயக்குக் காட்டி எழிலென ஆவது. நாணிச் சிவக்கும் கன்னங்கள் ஒரு பாவனை மட்டும் தான் ரூபி. உன்னுள் கனன்று சிவக்கும் சொல்லே உன் மெய்மை. நாம் ஆடும் கால்களும் அசையும் விரல்களும் கொண்ட தோற்பாவைகள் அல்ல. உன்னும் விசையும் காட்டும் சொற்களும் எழும் கொற்றவைகள். மானுடக் கதைகள் நம் உடலில் முத்திரைகள் என ஆகின்றன ரூபி. சொல்லில் இணைவுகளெனத் திகழ்பவையும் அவையே. நீ இரண்டும் இழையும் அன்னையின் நீலக்கல் மூக்குமின்னியென நம் குடியில் ஒளிர்விட வேண்டும்” ஓதும் ஆசிரியரின் குரலில் அவளுக்கு மட்டுமெனச் செவிக்குள் சொல்லுவாள்.

சிங்கை நகரின் படைகள் நாகதேவி கோவிலில் நிகழ்த்திய கொடுகலவிக் கொலைகளில் அன்னையும் துரிதையும் மாண்டு போனார்கள். தந்தையின் சித்தம் அக்கணமே பிறழ்ந்தது. பித்தனென ஆன தந்தையின் இடையாடையைப் பற்றியபடி “அக்காவின் நாட்டியம் இன்னும் முடியவில்லையா தந்தையே. அன்னையும் ஆடுகிறாளா என்ன. ஏன் அம்பலத்தில் துயில்கிறாள். என்ன கதை இது தந்தையே” என தத்தித் தத்தி அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நெஞ்சில் நெடுவேல்பாய்ந்த ஓநாயின் ஊளையெனப் பெருகிய நீள்கேவலுடன் தந்தை மார்பிலும் வயிற்றிலும் ஓங்கியறைந்தபடி “என் குடிகாப்பவளே” என அலறிக் கத்திச் சரிந்தார்.

கழுத்தின் நடுநரம்புகள் பெருவேழத்தின் கரத்தில் அகப்பட்ட குழந்தையின் விரல்களென உறுகியது. நெஞ்சிலிருந்து எழுந்து பரவும் பிண வாசனை நாசியிலிருந்து பிரிந்து திரும்பவும் நாசியேறியது. தணல்களின் கடைசி எரிவிறகுகள் மென் தூசுகளாக விம்மி மறைந்தன. கால்கள் எழமுடியாதவையென இறுகிச் சமைந்தன. கரங்கள் வெட்டுப்பட்டவை போல உடலில் கிடந்தன. விழியின் மேலிமைகள் நொந்தன. உயிரின் உள்ளிருந்து துரிதையின் குரல் கேட்டது. “எழு ரூபி. என் சொல் நீ. என் நீலக்கல் மூக்குமின்னி” என தன் அகவல் குரலில் ஒலித்தாள். அரூபி கரங்களைத் தூக்கி இருகன்னமும் பரவி சூட்டை ஏற்றிக் கொண்டு கூந்தலை பின்னால் தள்ளி மதுச்சாலையை நோக்கினாள். மதுச்சாலையில் ஒளிரும் விளக்குக் கொத்துகளின் கீழ் அலைந்து கிடக்கும் உடல்களைப் பார்த்தாள். அமிழ்ந்தும் எழுந்தும் குதிக்கும் வயிறுகளை நோக்கினாள். சிறு புன்னகை எழுந்தது. விழிகளைக் கசக்கிக் கொண்டாள். உடலில் உயிர் ஊறி வந்தது. மூங்கில் குவளைகள் நிரையாக அடுக்கப்பட்ட கற்தளத்தில் கார்காலத்துக் குளக்கரைத் தவளைகளின் கத்தல்களென எழும் குறட்டைகளுக்குள் கால்களை நீட்டி மார்பினில் இருகரங்களையும் பின்னிக்கொண்டு இராப்பிரியன் துயின்றிருப்பதைப் பார்த்துவிட்டு விறலியர் துயில் கொண்டிருந்த திண்ணையில் சென்று தனியான ஒரு இடையில் படுத்து விழிகளை மூடாமல் நிழல்களை நோக்கினாள்

இருளும் நிழலும் வேறு வேறு எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள். துயில் அவளை அடைந்த போது இருட்டில் அசையும் நிழல்களில் ஒரு போர்க்களம் முடிவின்றி நிகழ்வதை விழிகளால் கண்டாள் இளம் விறலி அரூபி. சேவலொன்று கூவிய ஒலி கூடிக் கூடி ஒவ்வொரு திசையிலிருந்தும் மறு கூவல்கள் எதிரொலித்து அதிகாலையின் போர்வையென அவளை மூடியது.

TAGS
Share This