22: தூமழை உரைத்தது
செருக்களமேவிய புரவியே நீயுரை
மாகளன் ஏந்திய வாள்முனை கண்டனையோ
மின்னவன் விழிகள் உற்றனையோ
கூவிடும் புலிக்குரல் கேட்டனையோ
தேர்ச்சில் சுழல் குருதிக் கூத்தில் தாளக் கால் பூண்டனையோ
இன்னிரா இராத்திரியில் சுடர் மீன்கள் விம்மினையோ
அழியாட்டு வெஞ்சேற்றில் அழலெனத் திரும்பினையோ வருதோழர் உயிர் நீங்கக் கூற்றன் கயிறாகினையோ
என் மாகளன் நெஞ்சம் கேட்டிட நீயுரை
ஆடுமஞ்சள் நோக்கியிரு விழிகள் உண்டு வேந்தே
உயிர்ப்பிலம் பற்றி நீ சென்ற வழி காற்றாடும் குடசத்தில் உற்று என.
பாடினி தூமழைப் பூம்பொழில்
தன்னைத் தானே வியக்கும் கதைகளாய் ஆகுவதன் வழி காமமும் போரும் மண்ணில் முடிவற்று நிகழ்கிறது என எண்ணிக் கொண்டாள் பாடினி தூமழைப் பூம்பொழில். வயலின் நீள்வரம்பில் நிரையாய் ஆடும் மஞ்சள் பூவரசுகளின் செவ்விழிகள் நோக்கியிருந்தாள். கார் திரண்டு வானம் இருள் கனத்திருந்தது. ஒரு இமைக் கீற்றென விரிந்த வெளியிடை சூரியச் சில்லுகள் பூவரசம் வரம்பிலே குதித்திறங்கின. மஞ்சைகள் வயல் என ஆகும் வண்ணம் அவை ஆடி விரித்த தோகைகள் நிழலில் வயல் நனைந்தது. மேகம் தன் முதல் காதலை நெடுநாள் கழித்து மண் சிந்தவிருக்கிறது. தினையற்ற அவ்வயலின் கரையில் சணல் காடென முளைத்திருந்தது. சணல் அறுத்து நூல் துன்னிடும் பருவம் முற்றியிருந்தது.
துரு வீரன் வனக்குடிலுக்குச் சென்ற அன்று நாகதேவித் திருவிழா. நடுகல் வழிபாட்டுடன் தொடங்கும் திருவிழாவிற்கு வந்த நீலழகனையே விழியுற்று நின்றிருந்த அரும்பு மீசைச் சிறுவன் துருவை விழி சாற்றி நின்றிருந்தாள் பூம்பொழில். எங்கிருந்து அகம் திறந்து தீம்பால் பொழிகிறது என அறியாத ஆட்டின் மடியினைப் போல் அவள் மேனி திறந்து அவனை நோக்கினாள். குறும்பன். மூடன். தித்திக்கும் பொய்காரன். அணிற் கால்களால் நடப்பவன். அவன் வால் எங்கோ அரூபமாய்த் துடிக்கிறது என எண்ணிச் சிரிப்பாள். கொய்யாவைக் கடிக்கும் சிறுநெற் பல்லுடன் முலைகள் பொருதுபவன். அவன் இருவிழியும் காதலுற்று நோக்குகையிலும் அசையும் வெள்ளி மீன்களென ஆகுபவை. இக்கணம் அவன் நோக்கியிருப்பது காதலை விட மூத்ததொன்றா. அவன் ஏன் விழியுறைந்தான். அவை நீலழகனின் மேனியில் எதைக் கண்டன. அவன் வீரனல்ல. சாரைப் பாம்பு கண்டாலே ஓடி வந்து பூம்பொழிலில் ஏறிக் கொள்பவன். அவள் “இறங்கடா கொழுத்த அணிலே. உனக்கு பாம்பைக் கண்டாலே பயமா” என அவனைச் சீண்டுவாள். “பாம்பென்றால் மட்டும் பயம்” எனக் கத்துபவனை இடையில் ஏற்றியபடி சாரையை நோக்கி ஓடியோடி விளையாட்டுக் காட்டுவாள். “தூமழை என்னை விட்டுவிடடி.. நான் சாகப் போகிறேன்” என அழாக் குறையாய் கெஞ்சுவான். “விற் பயிற்சியில் என்ன தான் கற்கிறாயோ. வீரனென்றால் ஒரு சணற் புல்லை எறிந்தே பாம்பைக் கொன்று விடுவான். நீயும் இருக்கிறாயே” என நகைத்துக் கொள்வாள்.
திருவிழாவில் நடுகற்களின் முன்னிருந்த விலங்குக் குருதியை அள்ளி அங்கிருந்த நெடுங் கல்லில் நீலழகன் ஊற்றிய போது முழவைகளும் முரவுகளும் பறைகளும் துடித்தெழுந்தன. கொம்புகள் முழங்கின. முதுபெண்டிர் குலவையிட்டனர். வாலிபர்கள் உடல்கள் வேல்களென மின்னுவதை நோக்கியிருந்தாள் பூம்பொழில். நீலழகன் திரும்பி இருகரம் கூப்பி குடியினரை வணங்கினான். சாமியாடி கையில் ஒரு வாளுடன் வந்து தன் கையைக் கீறி நீலழகனின் வலக்கரத்தில் இருந்த விழுப்புண்ணில் ஒற்றினார். குலவைகள் கூடிக் கூடி குடிகளின் அகம் தீப்பட்டு அழலேறியது. ஒவ்வொரு விழியும் கனலும் தீ. தீயன்றிச் சொல்லின்றி எழுந்து நின்றனர் குடிகள். நீலழகன் திரும்பி வாளைப் பெற்றுக் கொண்ட போது அவனது பார்வை ஒரு கணம் துரு வீரனைத் தொட்டகன்றது. அன்று இரவே வனக்குடில் புகுந்தான் இளம் வீரன் துரு. பூம்பொழில் அக்கணத்தை அகத்தில் எப்போதோ கண்டுவிட்டவள் போல உளம் நடுங்க நின்றிருந்தாள்.
*
இடாவத்தவில் தேம்பவாவி நிலைகொண்டிருக்கிறான் என்ற சேதியைத் தூதுப்புறா கொணர்ந்த வேளை அல்லியனும் துரு வீரனும் உறக்கம் பிடிபடமால் கதைத்துக் கொண்டிருந்தனர். “அண்ணா, நான் போர்க்களம் புகுந்தால் நூறு பேரையாவது கொன்ற பின் தான் போரில் என்ன நடக்கிறது என நோக்குவேன்” என துருவீரன் குழந்தை விழிகளுடன் சொல்லிக் கொண்டிருந்தான். “இதுவரை நீதான் போரே பார்த்ததில்லையே துருவா. நான் பார்த்திருக்கிறேன். அது நாம் கேட்கும் கதைகளைப் போலிருக்காது. அங்கு வேழங்களும் புரவிகளும் வாள்களும் அம்புகளும் தான் மோதிக் கொள்கின்றன. நாம் அவற்றை தாங்கும் கலன்கள் மட்டும் தான் துருவா. நான் எத்தனை பேரைக் கொன்றிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது. எழுந்து விண்தொட்ட அம்புகள் எதிரியைக் கொன்றனவா. அங்கம் துளைத்தனவா என்பதை நாங்கள் அறிய முடியாது. யுத்தம் ஒரு அருவருப்பான அங்காடி இளவலே. அது விளையாட்டுக் களமல்ல” என அல்லியன் சலிப்பு மண்டிய குரலில் சொன்னான். அல்லியனின் சொற்கள் நெருங்க முடியாத வெளியில் பறந்து கொண்டிருந்த துருவீரன் “நான் அம்புகளை எய்யும் வேகத்தில் சிங்கை வீரர்கள் யார் இவன் என நோக்க வேண்டும். அவர்கள் நோக்கும் திசை எதுவென தலைவர் நோக்க வேண்டும். அது நான் என அவர் விழிகள் ஒரு கணம் உற்றால் போதும் அண்ணா. ஒரு கணம். அக்கணத்திற்கென ஆயிரம் தலைகளை நான் கொன்று சூடுவேன்” என உடல் கூச்செறிய மின்னிக் கொண்டிருந்தான் துரு வீரன். அவனது இளம் முகத்தின் களியை நோக்கிய அல்லியன் மனம் இளகி “சிங்கை வீரர்கள் படையை நீ ஒருவனே கொன்று விட்டால் நாங்கள் என்ன செய்வது இளவலே. நாங்கள் கொல்வதற்கும் யாரேனும் மிச்சம் வை” என மெல்லச் சிரித்தான். “நான் தேம்பவாவியின் தலையைக் கொய்து அதை ஏழு அம்புகளில் வானத்திலேயே சுழல வைத்து நீலழகரின் காலடியில் வீழ்த்துவேன். இது சத்தியம் அண்ணா. சத்தியம்” என படுத்தபடியே கால்களை உதைந்து கொண்டு துருவீரன் அக் காட்சியை அகக்கண்ணால் கண்டு துள்ளினான். “ஏழு அம்புகளா. நல்லது. இங்கு வரும் இளம் வீரர்கள் அம்பினால் பாலம் அமைத்து அதில் தேம்பவாவியின் தலை வழுக்கியபடியே வரும் கதைகளையும் சொல்வதுண்டு” என தீவிரமான முகபாவனையுடன் சொல்லி பின்னர் சிரித்தான் அல்லியன். “போங்கள் அண்ணா. என்னைப் போல் ஒருவனைச் சந்திக்கக் களம் காத்திருக்கிறது. நான்..” எனத் தொடர்ந்தவனின் குரலைக் கேட்டபடி உறங்கிப் போனான் அல்லியன்.
வீரர்கள் குடில் முன் ஒருங்கும் சங்கேத முரசு எழுந்த வேளை அல்லியன் விழித்தான். அருகில் எதுவும் கேட்காத வெளியில் தேம்பவாவியின் தலையை அந்தரத்தில் நிறுத்திப் போர் புரியும் தன் இளவலின் சிறுமுகம் நோக்கினான். உமிழ் நீர் வடிய வனக்குளிரில் கால்களை ஒருக்கி கைகளைத் தொடையிடுக்கில் வைத்தபடி உறங்கிக் கொண்டிருக்கிறான். அவனை மெதுவாகத் தட்டி எழுப்பி “அழைப்பு வந்திருக்கிறது இளவலே. வாரும் குடில் முற்றம் போக வேண்டும்” எனச் சொன்னான். அவன் சலித்துக் கொண்டே “இன்னும் கொஞ்ச நேரம் உறங்கிக் கொள்கிறேன் அண்ணா” என்றான். அவனை உலுப்பி எழுப்பி “இது ஆணையொலி துருவா. ஏதோ முக்கியமாய் சொல்ல
விருக்கிறார்கள்” என்றான் அல்லியன்.
இருவரும் குடில் முற்றம் நுழைந்த போது இருமர் வரைபடத்தை நோக்கியபடி இடுப்பில் கையூன்றி நின்றார். படை வீரர்கள் ஒருங்கியிருந்தனர். சாகும்பர் விழிகளாலேயே அம்பெய்பவர் போல் இருவரையும் நோக்கினார். தலையைத் தாழ்த்திக் கொண்டு தம் அணியினருடன் போய் ஒண்டிக் கொண்டனர். துருவீரன் படை நடவடிக்கை என்ற சொல் கேட்டதும் முழுப் புலனும் செவியென அசைய இன்மரின் சொற்களை நோக்கியிருந்தான்.
குதிரைகளில் ஏறிய போது “அண்ணா நாளை விடியலில் நான் சொன்னவை நடக்கப் போகிறது” எனச் சிரித்துக் கொண்டே உரக்கப் பேசியபடி வந்தான். “இளவலே, உனது போர்த்திறனை நாளை பார்க்கப் போவதை எண்ணி இப்பொழுதே விழிகள் துஞ்சுதடா” எனச் சிரித்தான். அருகில் வந்த சுகவாசனும் வெல்வேல் அழகனும் “என்ன சொல்கிறான் இளவல்” என நகைத்தனர். “நாளை தேம்பவாவியின் தலை அந்தரத்தில் மிதப்பது உறுதி தோழர்களே. இவன் ஒருகையால் அம்பு தொடுத்தபடி மறுகையால் தேம்பவாவியின் தலையைக் கையில் பிடித்தபடி செருக்களத்தில் நடந்து வரப் போவது உறுதி” எனச் சொல்ல அலையலையாய் சிரிப்பெழ துருவீரன் நாணிச் சிரித்தான். சுகவாசன் “நல்லது. நல்லது. நாளை அந்தத் திருக்காட்சிக்கு நான் பேய்க்களியாடுவேன் இளவலே” என வெடித்துச் சிரித்தபடி சொன்னான்.
புரவிகள் வனக் கரையை அடைந்து வாட்படை வீரர்கள் நகர் புகுந்த போது துரு வீரனின் உடல் நடுங்கத் தொடங்கியது. என்னவென்று அறியாத அச்சம் எழுந்து அவன் முன்னால் புரவியென ஓடுவது அகத்தில் கேட்டது. அவை நாகங்களின் நெளிவென ஆகியிருப்பதை நோக்கியவன் அகத்தில் பூம்பொழிலின் முகம் எழுந்து சிரித்துக் கொண்டே அவள் அவனை நெருங்கி வந்தாள். “கொழுத்த அணிலே இடையில் ஏறிக் கொள். வா. அஞ்சாதே வா” என அவளின் குயிற் குரல் அழைப்பது போல் நடுக்கமேறி வந்தது. அல்லியன் துருவீரனின் தொடையில் தட்டி “உனக்குள் என்ன ஒலிக்கிறது என அறிவேன் துருவா. இங்குள்ள ஒவ்வொருவரும் அறிவர். களத்தில் முதல் குருதியை நீ காணும் வரை தான் அக்குரல்கள் உன்னுள் எழும். வா. படை நகரத்தொடங்கி விட்டது” என அவன் விழிகளை நோக்காது சொல்லிய அல்லியனை நோக்கி “இவருக்கு எப்படிக் கேட்டது” என வியந்து கொண்டான்.
கோட்டையின் முன் புலி வீரர்கள் மடிந்தபடியிருந்தனர். துருவீரன் இவ்வளவு பெரிய கோட்டை மதிலை முன்னர் பார்த்ததில்லை. தன் வில்லும் அம்பும் வேறு யாருடையதோ கையிலிருப்பவை போல் தோன்றின. அவன் இறந்து கொண்டிருந்த வீரர்களையே நோக்கிக் கொண்டிருந்தான். சாமன், வியூகன், இரதவேழன்.. என ஒவ்வொரு படைத் தோழனும் அம்புகள் மூடிய உடலனெக் கிடப்பதை நோக்கியவனின் கால்கள் பின்னே பின்னே என நகர்ந்தன. அவன் மூளை மட்டும் முன்னே என ஒலியே எழாமல் முனகிக் கொண்டிருந்தது. சிங்கை வீரர்கள் கோட்டையின் மீதிருந்து சிரித்து நகைப்பதை நோக்கிய போது அவனது அகம் ஆயிரங் கால்கள் கொண்ட அட்டை ஒரு சொடுக்கில் சுழல்வது போல் ஒவ்வொரு சிரிப்புக்கும் சுருண்டு நடுங்கியது.
அல்லியன் துரு வீரனை நோக்கினான். அவன் புரவி முன்னெழ முடியாமல் தயங்கி நிற்பதை பார்த்தவன் “துருவா. இங்கே என் பின்னால் வா” எனக் கூவினான். துருவீரனுக்கு அந்த முழக்க வெளிக்குள் அல்லியனின் குரல் மட்டும் சன்னமாய்க் கேட்டது. புரவியை அல்லியனுக்கு அருகில் விரட்டினான். “அண்ணா. என்ன இது. நம் வீரர்கள் மடிந்து கொண்டேயிருக்கிறார்கள். சிங்கை வீரர்கள் தொலைவில் நிழல்களென மட்டும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். என்னால் அவர்களை நோக்க முடியவில்லை. என் அம்புகள் அகழியைக் கூடத் தாண்டவில்லை. என் கைகள் நடுங்குகின்றன. நான் ஒரு கோழை. நானொரு கீழ்மகன் அண்ணா” எனக் கத்தினான். “இந்த யுத்தத்தில் ஒவ்வொருவரும் கோழை தான் துருவா. நீ இங்கு ஒரு படைக்கலன் என ஆகாமால் உன்னால் எதையும் நோக்க முடியாது. உன் அகத்தை மற. நீ வீரனல்ல. இங்கிருக்கும் ஒருவனும் வீரனல்ல. நாம் ஒரு படைக் கலன். நாம் ஒரு படைக்கலன்” எனக் கூவியபடி அம்புகளைத் தொடுத்தான் அல்லியன். சாகும்பர் வீரர்களை அரைச் சிறகு வடிவில் ஆகச் சொல்லி ஆணையெழுந்தது. அதன் கீழ்மடிப்பில் அல்லியனும் துரு வீரனும் ஒண்டிக் கொண்டனர்.
“அண்ணா, நாம் இன்று உயிர் பிழைப்போம் என எண்ணவில்லை. என்ன நிலமை இது. என்ன நாளிது. இழி நாள். இழி கணம். இதற்குத் தானா என் கைகள் இத்தனை நாள் வில் பழகின. செவிகள் கதைகள் நுகர்ந்தன. உள்ளம் கெலி கொண்டாடியது. நான் இறப்பதற்கு அஞ்சுகிறேன் அண்ணா. கோட்டையின் மேலிருப்பவர்கள் மரணத்தின் பூதங்களெனத் தோன்றுகிறார்கள்” என துருவீரன் சொன்னான். அல்லியன் தன் வில்லை சாய்த்துக் கொண்டு வியர்த்து வழியும் குழலை வழித்து விட்டுக் கொண்டான். அவனது புஜங்கள் துடிப்பு அமராத நாண் போல விம்மின. மூச்சு நாகமெனச் சீறியமைந்தது. துரு வீரனை நோக்கி மெல்லிய புன்னகை புரிந்தான். “என்ன அண்ணா சிரிக்கிறீர்கள். எனக்குச் சித்தமழிகிறது. நான் கேட்ட கதைகளில் ஏன் யாருமிந்த நடுக்கைப் பாடவில்லை. சொல்லுங்கள் அண்ணா. நம் படை எழுந்தால் சிங்கைப் படைகள் நடுங்கி ஓடுமென்றல்லவா மன்றுகளிலும் சத்திரங்களிலும் அம்பலங்களிலும் பாடல்கள் ஒலிக்கின்றன. இங்கு நாம் வந்து விட்டோம். அவர்கள் பேய்நடனம் புரிகிறார்கள். கற்பாறைகளை மலர்களென வீசுகிறார்கள். ராட்சதர்கள்..” என்றான் துரு வீரன். “இளவலே. நீ கேட்ட அதே கதைகளைக் கேட்டு வனம் புகுந்தவன் தான் நானும். கதை சொல்பவர்கள் யுத்தத்தில் உயிர் மீண்டவர்கள். அவர்கள் இக்கணங்களை மறக்கவே விழைவார்கள். இல்லையென்றால் இந்த நடுக்கம் ஒரு நிழலென அவர்களுடன் வாழத் தொடங்கிவிடும். அவர்கள் அதை வீரமென ஆக்கிக் கொள்வதும் சாகசங்களென எண்ணிச் சொல்வதும் இக்கணங்களை மறக்கும் போதையைத் தமக்குத் தாமே ஊட்டிக் கொள்ளத்தான். மிச்சக் கதைகள் அதோ அந்தத் தேரின் பின் ஒளிந்து நின்று யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறானே பாணன். அவர்கள் சொல்வது. அவனுக்கு இந்தக் களத்திலிருந்து ஒரு புரவி மீண்டால் கூடப் போதும். ஏறி ஓடிவிடுவான். பிறகு மன்றுகளில் தோன்றி தான் கண்ட மாபெரும் சாகச வீரத்தைப் பாடுகிறேன் எனக் குரலைச் செருமிக் கொண்டு தான் காண விரும்பியதைப் பாடத் தொடங்குவான். நாம் வீரர்கள் துருவா. வீரர்கள் காணும் யுத்தம் இறப்பில் எழுவது. நாம் இறந்தால் நடுகல்லில் வழியும் குருதி கூட அறியாத துயரொன்றை நாம் நீங்குவோம். நான் அதன் பொருட்டே இன்னும் களம் நிற்கிறேன். கொன்று வீசப்பட்ட எம் அன்னையருக்காக கொடுகலவி புரியப்பட்ட நம் குடிப் பெண்களுக்காக. ஒவ்வொரு போரிலும் மடிந்து கொண்டிருக்கும் நம் இளவல்களுக்கும் மூத்தவருக்காகவும். இன்று இதோ நம் முன் மடிந்த நம் தோழர்களுக்காகவும். நாம் யுத்தம் புரிவது நமக்காக என எண்ணிக் கொண்டால் நாண் அசையாது இளவலே. நம் குறிகள் பிசகும். நாம் போர்புரிவது நம் தலைவருக்காகவும் அல்ல இளவலே. நமக்காக. நம் குடிக்காக. இந்தக் கொடியும் புகழும் நமக்கானதல்ல. நாம் அதில் ஒரு படபடப்பு மட்டுமே. உன் நாண் அதை அறியும் பொழுது நீ அதை அறிவாய்”.
துரு வீரன் விழிகள் தாழ்ந்திருந்தன. “பின் வருக” “பின் வருக” என எழுந்த ஆணை கேட்டதும் அல்லியன் அவனை அழைத்தான். “வா இளவலே. ஓய்வு கொள்ளும் நேரமிது. யுத்தத்தில் தமிழ்க்குடி புறம் காட்டியதில்லை எனப் பாடல்கள் கேட்டிருப்பாயல்லவா” என பெரிய குரலில் சிரித்துக் கொண்டு புரவியை விரட்டி வனவிளிம்பில் புரவியைச் சேர்த்து அமர்ந்தார்கள். சுகவாசனும் அவர்களுடன் இணைந்து கொண்டான். “இளவலே. யுத்தத்தில் முன்னே சென்று விட்டதால் உன் சாகசங்களைப் பார்க்க முடியவில்லை. எங்கே நீ வீழ்த்திய தலைகள்” எனச் சிரித்துக் கொண்டே கேட்டான். புண்பட்ட துரு வீரன் நடுங்கும் தன் கைவிரல்களை மடித்துக் கொண்டான். “வாசா, அவனை விடு. இது தான் அவனது முதற் களம். அவன் நாணை அறிந்து கொண்டதும் அவன் யாரென நீ பார்ப்பாய்” என அல்லியன் சொன்னான். அல்லியன் நிலத்தில் சாய்ந்து படுத்துக் கொண்டு வானை நோக்கினான். மேகங்களற்று வெறுவானம் நீலமாய்க் கிடந்தது. சூரியன் குத்தி மேனி எரிந்தது.
தன் அகத்தை மாற்றிக் கொள்ள “வெல்வேல் அழகர் எங்கே அண்ணா” எனக் கேட்டான் துரு வீரன். களத்தை நோக்கி விரலை நீட்டியபடி “அங்கே” என்றான் சுகவாசன். குவிந்து கிடந்த பிணங்களுக்கிடையில் எது அவன். அம்புகள் துளைத்த உடல்களில் எது யாரென இங்கிருந்து நோக்குவது. துருவீரன் அகம் மேலும் மேலும் சுருண்டது.
மீண்டும் அம்புப் பெருக்கை நிகழ்த்தச் சொல்லி ஆணை எழுந்தது. “நீ எங்கள் பின்னே இரு இளவலே. எக்கணத்திலும் உன் புரவி எங்களை மீறி முன்செல்லக் கூடாது. இது ஆணை” என சொல்லி அல்லியன் புரவியை முடுக்கினான். துருவீரன் கரங்கள் சோர வில்லை அணைத்தபடி போர்க்களம் புகுந்தான். நீலழகன் ஏன் போர்க்களம் வரவில்லை என்ற எண்ணம் துருவீரனை உழற்றிக் கொண்டிருந்தது. அவன் கேட்ட ஒவ்வொரு கதையினிலும் அவர் தான் முதல் வீரர். நீலழகர் புரவியே களம் ஏகும் முதற் கால்கள் கொண்டவை. இன்று அவர் வரவில்லை. தோல்வி பெறும் போர்களுக்கு அவர் வருவதில்லையோ என எண்ணிக் கொண்டான். பிறகு அந்த எண்ணம் எங்கிருந்து எழுந்ததென துழாவத் தொடங்கினான். அம்புகள் வெறுவானில் சுழன்று இறங்கின.
துரும்பரின் படை ஊர்ந்து செல்வதை நோக்கிய அல்லியன். “துருவா. ஏதோ வியூகமிட்டிருக்கிறார்கள். நாம் துணை புரிய வேண்டும். சோராதே. போர் உனது பிள்ளைக் கதையல்ல. அது உன்னை இயக்கும் விசை. நீ யாருக்காகவும் இங்கு போரிட வரவில்லை. உனக்கு நீயே போரிடு. உன் அச்சத்தை அம்பென ஆக்கித் தொடு. நம் உதவி அவர்களுக்கு வேண்டும். நம் அம்புகள் தயங்கும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு வீரராய் நாம் இழப்போம். நாம் இப்போது ஒரு அம்புத்திரை மட்டுமே. திரையில் நீயொரு நெளிவு மட்டுமே. அம்பைத் தொடு. அம்பைத் தொடு” என உறுமினான் அல்லியன். அவன் கரங்களை நோக்கினான் துருவீரன். நடுக்கமிலாத விற்கரங்கள். மூச்சை விடுபவனைப் போல அம்பை எய்கிறான். வானில் திரையென விரிந்து கோட்டையில் அம்புகள் மோதிப் பின் அகழியில் வீழ்கின்றன.
எதற்கு இந்தப் பெருக்கு. எதற்கு இந்த யுத்தம். துரு வீரனுக்கு எல்லாம் மறந்து போய்க் கொண்டிருந்தன. அம்புப் பெருக்கின் திரை ஒரு சுவரென எழுந்து பொடித்துகள்கள் என வீழ்ந்தன. ஒரு கணம் அதிலவன் பூம்பொழிலைக் கண்டான். அவள் சிரிக்கும் போது மின்னும் அம்பு என எண்ணினான். அந்த எண்ணம் அவன் அகத்தை விரியச் செய்தது. காற்றை இழுந்து ஊதினான். எல்லாம் எளியவையாகின. திரையில் அவளை மேலும் சிரிக்க வைக்கவென ஒரு அம்பைத் தொடுத்தான். “வா துருவா. என்னிடம் வா” என தூமழைப் பூம்பொழில் சிரிக்கிறாள் என எண்ணினான். தன் அம்புகளை ஒன்றன் பின் ஒன்றாய் பொழிவென ஆக்கிக் கொண்டே உதடு விரித்துச் சிரித்து “பூம்பொழில்” என மேலும் சிரித்தான். “என்ன துருவா. ஒரே சிரிப்பாய் இருக்கிறதா. அம்புப் பொழிவில் யாரைக் கண்டாய்” என எள்ளினான் அல்லியன்.
*
வயலில் பீலிகளை உதிர்த்து நின்று காரைக் கொண்டாடிய மயில்களை நோக்கியவள் மயில் விசிறி செய்யவென பீலிகளைக் குவித்து கட்டத் தொடங்கினாள். மேகங்கள் இமை மூடின. இருள் முழக்கத்தில் உடல் மெய்ப்புக் கொள்ள வரம்பில் அமர்ந்து தீயிலையை மூட்டினாள் பூம்பொழில். உளம் தாளமென எழுந்தது. விரல்களைக் காற்றில் யாழென அசைத்து மயிற்பீலிக் கட்டில் தலை சாய்த்தாள். குடசப் பூக்களின் மஞ்சள் சிரித்துக் குவியும் துருவின் இதழ்களென எண்ணினாள். மேகங்களின் படை நடத்தலை நோக்கினாள். தொலைவில் சடைத்து இறங்கிய மின்னலைக் கண்டு அதோ துரு என உளம் சிலிர்த்தாள். இருள் கொண்ட பகை நடுவிலே அவன் மின்னல் வீரன் என எண்ணி மேலும் சிலிர்த்தாள். அடுத்த கணம் அவன் தளிர் விரல்கள் நினைவெழுந்தது. காந்தள் மலர்கள் என அவை குவிந்து விரிவதை அகத்தில் கண்டாள்.
ஆயிரம் ஆடுகள் கொண்ட நெடுபட்டியொன்றை மேய்த்தபடி போன பெண்களை நோக்கினாள். ஒரு ஆட்டுக் குட்டி அவளது வயலுக்குள் குதித்து பின் பட்டியோடு பாய்ந்து ஒட்டிக் கொண்டது. அந்தக் கூட்டத்தில் அது தான் துரு என நினைத்தாள். அகம் பொலிந்து பொலிந்து தூறலென அவன் மண் வந்தான். ஒவ்வொரு சிறு துமியும் மின்னிடும் பளிங்குத் தூவியென மண்ணிறங்கின.
அவள் நாசியில் கழுத்தில் இடையில் வயிற்றில் கால்களில் விரல்களிலென அவன் தொட்டான். “துருவா” என எழுந்தாள். விளியாடாதே என மழையுடன் கோபித்துக் கொண்டாள். எழுந்து ஒரு குடச மலரைக் கூந்தலில் வைத்து மென்சேறு எழப்போகும் வயல் வரம்பால் ஆடுகளுடன் ஆடாய்த் துள்ளியெழுந்தாள். மண்ணில் புரண்டு வெண்மையும் மண்ணிறமும் கருமையும் கொண்ட ஆட்டுப் பட்டி பெருங் குரல்களில் கனைத்தபடி மெல்லோட்டத்துடன் நடந்தன. ஆய்ச்சியொருத்தி வரம்பில் தப்பியோடும் குட்டியெனத் தூமழையை நோக்கினாள். பின் பனையோலைத் தொப்பியை இழுத்துப் போட்டுக் கொண்டு மழையில் உடற் புல்லெழ நடந்து போனாள்.
ஆய்ச்சியின் பட்டியிடை வெள்ளாடே நீயுரை
தூவிய வான்மழை நோக்கினேன் விழுந்தான்
ஓடிய குதிகளைப் பாடினேன்
எழுந்தான்
ஆடிய மஞ்ஞைகள் போலானேன்
விரிந்தான்
சூடிய பூமலர் தொட்டேன்
மலர்ந்தான்
தேடிய விழிகளைச் சொல்லிடு வெள்விரிவே
போர்க்களம் ஆடிடும் வேல்விழி
வேந்தனிடம்.