33: துடி

33: துடி

அழிவு தன்னைக் கருப்பையிலிருந்து தலைநீட்டும் குழந்தையென ஆடற் சித்தரின் தீயலைக்கும் அகக்கண்ணில் தோன்றியது. இச்சைகளால் புன்னகைத்தது. தன் விரலைத் தானே கடித்துச் சிரித்தது. தன் கழலைத் தானே உறிஞ்சிச் சினந்தது. காணும் ஒவ்வொன்றையும் எட்டி மிதித்தது. மிதிக்கும் போது உவகை கூடிச் சிரித்துச் சிரித்து உளம் திளைத்தது. இச்சைகள் அதன் மேனியில் நாகங்களென வளர்ந்தன. அவற்றை அது ஆடையென அணிந்து கொண்டது. வெம்புலியை அறைந்து கொன்று அதன் தோலை அக்கணமே உரித்து ஒழுகும் கடுஞ்சிவக் குருதியுடன் இடையில் கட்டிக் கொண்டது. எதிர்ப்பட்ட கிரகங்களையும் விண்பாறைகளையும் கோர்த்து கழுத்துக்கு ஆரம் செய்து கொண்டது. நீறாகிக் கரைந்த உயிர்களின் சாம்பலால் மேனி வண்ணம் தீட்டியது. புவியின் மேல் ஒருகால் தூக்கி ஆடியது. நகைத்தது. பின் சிறு குழவியென ஆகிப் புடவி புகுந்தது. மலைச்சிகரங்களில் தாவியது. தீயிலை புகைத்துக் காலங்களை வளையங்களென ஊதியது. மானுடர்களை நோக்கி நோக்கிக் கனிந்தது. பின் சிரித்து மகிழ்ந்தது. தன் நிழல்களால் உலவும் உயிரினம் இதுவெனக் கண்டது. தன் ஆடியின் நிழலென எண்ணி அழிவு சிரித்துக் கொண்டது. மானுட உடல் பூண்டது. சடைகள் தழைத்துச் சுருண்டு அவிழ்ந்ததது. இருளின் கருமையைக் குழைத்து மேனி கொண்டது. இருவிழிகளைச் சினமெனக் கொண்டது. நெற்றியில் திறந்த
சினம் கொள்ளும் எதுவும் சிவனென ஆகும். சினம் கனியும் எதுவும் சிவனென உறையும். சினம் கடக்கும் எதுவும் சிவனென அடையும். அழிவைத் திறக்குந் தோறும் ஓர் இச்சைக் குழவி பிறந்தது. கருநிற மேனியும் தீரா வியப்பும் சூடியது. ஊழ்கத்தின் முதற் சொல்லென மண்ணிலிருந்து நீண்ட மாபெரும் மலைச் சிகரத்தில் முச்சூலம் ஏந்தி அமர்ந்தது. ஆடலை நோக்கி நோக்கி ஆடலென்றாகித் தன்னைத் தானே அழித்து ஆடியது. அழிவிலா விழியில் அழிவு தன்னை விழித்தது. விழித்ததும் விழியை மூடியது. மூடியதும் விழியுள் விழியெனப் பல்லாயிரம் விழிகளெனத் திறந்தோடியது.

*

நோயுற்றவன் உடல் மீண்டு திறந்து கொண்ட முதற் காமமெனப் புலரி விடிந்ததை நோக்கியிருந்தான் துடியன். மன்றுக்குச் செல்லும் வண்டில் நிரைகள் இருளில் அசைந்து நத்தைகளெனச் சென்று கொண்டிருந்தன. காளைகளின் கழுத்து மணிகள் கிலுங்கிக் கிலுங்கிக் காலையென விடிவதாக எண்ணிக் கொண்டான். ஒவ்வொரு மணியோசையும் கணீர் கீதமென உரசியெழ ஒயிலையின் முகம் நினைவில் சூரியனென எழுந்தது. ஆழியின் தொலைவில் உதிக்கும் சூரியனின் பிஞ்சு மஞ்சள் நிறம். அவள் முகத்தில் துடிக்கும் தான் எதையும் அறியாதவள் என்ற பாவனையை அகத்தில் நோக்கி நகை கொண்டான்.

மன்றுக்குப் பணியாள்களை எழுப்பும் சங்கொலி மும்முறை ஒலித்து ஓய்ந்தது. இளைய நீல வண்ணப் புத்தாடை அணிந்தான். கழுத்தில் வெளிர்முத்துகளில் செவ்விரத்தினக் கல் பதித்த மாலையை அணிந்தான். நெற்றியில் நீறிட்டு அதன் முக்குறியை ஆடியில் நோக்கினான். பிசிறில்லாத ஓவியக் கோடுகள் போல் அமைந்திருந்தது. சவரக் கத்தியால் மெல்லிய நறுக்குகள் கொண்ட தாடியின் விளிம்பு நுனிகளைத் தொட்டு அதன் கூர்மையை விரல்களால் அளைந்தான். அடுமனையிலிருந்து கள் அப்பம் வேகும் வாசனை வீட்டில் பரவியிருந்தது. நறுமணக் குச்சிகளும் அகிற் புகையும் மனையின் சிற்றிடை வெளிகளையும் நிறைத்து ஊறியது. பசுஞ் சாணத்தால் மெழுகிய மனை முற்றத்தில் இருநாகங்கள் ஒன்றையொன்று முகம் நோக்கியிருப்பதான ஆடல் கோலத்தை தங்கை சிரித்திரி போட்டிருந்தாள். அதன் முன்னே கரும்புகள் நடப்பட்டு தோரணங்கள் தூங்கியாடின. பசுஞ் சாண வாசம் இன்மணமாக எழுவதை நோக்கியவன் மெல்லச் சிரித்தபடி வெளியே வந்தான். அகம் நறுமணங்களாலான வெறும் கலயமென நிறைந்திருந்தது.

துடியன் தன் மஞ்சள் பட்டு உடுத்திய வெண் புரவி சேனியை நோக்கிச் சென்று பிடரி மயிரைத் தடவினான். அதன் நாசியில் கைவைத்து சுவாசத்தை நோக்கினான். இளம் சூடான சுவாசம் எழுந்தது. “புறப்படலாமா சேனி” எனத் தன் புரவியின் விழிகளை நோக்கினான். சேனி தலையை ஒரு சுழல்வு சுற்றி அமைந்தாள். ஏறியமர்ந்து கொள்ள சிரித்திரி ஓடிவருவது கேட்டது. பெரிய காற்சலங்கைகள் குலுங்க ஓடிவந்தவள் “அண்ணா, அந்தியில் நிகழும் ஆடலுக்கு என்னைக் கூட்டிச் செல்வாயா” எனக் கேட்டாள். துடியன் சற்று யோசித்த பின் “இயலாது சிரித்திரி. இன்று மன்றின் பணிகள் அந்திக்குள் ஓயுமா எனத் தெரியாது. பெரும் பன்றியும் எல்லா வேலைகளையும் என் கைகளில் கொடுத்து விட்டு ஆலயத்துக்கு ஓடிவிடுவார். நான் ஒருவனே அனைத்தையும் மேற்பார்வை செய்ய வேண்டும். உன் தோழிகளுடன் செல்லேன்” என மறுமொழி பகர்ந்தான். அவள் கோபமான முகம் ஒன்றைச் சூடியபடி “மன்றையே சுற்றிச் சுழலும் செக்கு மாடா அண்ணா நீ. இன்றேனும் சற்று ஓய்வு கொள்ளக் கூடாதா. ஒரு மாதமாக நீ அங்கேயே இரவு பகலாகக் கிடந்தது போதாதாமா அந்தப் பன்றிக்கு” எனச் சொல்லிவிட்டு பின் சிரித்தாள். “சரி அண்ணா. நான் பார்த்துக் கொள்கிறேன். ஒயிலை அக்கா வருவதாகச் சொன்னாள். அவளுடன் செல்கிறேன்” என நகைத்துக் குழைந்த விழிகளுடன் இருகைகளையும் பின்புறம் பின்னிக் கொண்டு அவனை நோக்கி மேலும் சிரித்தாள். அவளின் நோக்கைப் புரிந்து கொண்டவன் “எப்படியோ போ. உனது தோழிகள் ஆடல் பார்க்கட்டும். நான் சென்று என் பணியைப் பார்க்கிறேன்” எனச் சொல்லிப் புரவியின் கடிவாளத்தை இழுத்தான். அது மென்நடையுடன் வீதிக்குள் ஏறியது. புலரியில் குவிந்திருந்த குடித்திரளை அகன்ற விழிகளால் நோக்கியபடி குழலை வருடிக் கொண்டு மன்று நோக்கிய பாதையால் விரைந்து செல்ல வழிகேட்டபடி முன்னேறினான் துடியன்.

அருகிருந்த சிற்றாலயக் கேணிகளில் ஆடவரும் பெண்டிரும் சிறுவர்களும் குளித்து நீச்சலடிக்க முடியாமல் அருகருகே நின்று உடல்களைக் கழுவினர். முங்கியெழுந்து நீரை வாயால் உமிழ்ந்து விசிறியபோது பூசலிட்டுக் கொண்டனர். குளித்துக் கரையேறித் தலையை விரித்து துணியால் துவட்டிக் கொண்டிருந்த இளம் பெண்களை நோக்கியபடி குளித்துக் கொண்டிருந்த வாலிபர்கள் நீரில் மூழ்கியெழுந்து கொண்டிருந்தனர். சிலர் நீறு பூசி சிற்றாலயத்தில் அகல்களை ஏற்றிப் பாடல்களைப் பாடிக்
கொண்டிருந்தனர். பாணர்கள் குழுவொன்று புலரியின் முதற் கள்ளை அருந்திக் கொண்டு வீதியை இடைமறித்து நின்றனர். ஒரு முதுபாணர் யாழை வாள் போல் கையில் பிடித்தபடி “எனது சொல்லுக்கு பதில் சொல்லுங்கள்” எனக் கூவியபடியிருந்தார். அங்கிருந்த இளம் பெண்ணொருத்தி “எங்களைப் போகவிடுங்கள் கிழவரே. யாழை அறுத்தால் தான் வழிகிடைக்குமென்றால் இப்போதே யாழுடன் சேர்ந்து உம் விரல்களும் அறும்” எனக் கூவினாள். அவரிலிருந்து புளித்த கள் அங்கு மணமென மிதந்தது. “என் யாழ் மீது கைவைக்கும் தைரியம் இம்மண்ணில் யாருக்குண்டு எனப் பார்க்கிறேன் அறிவிலியே. நோக்கு. இதோ என் யாழ். அதன் நரம்புகளில் ஓடுவது என் குடியின் குடல்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகள் உங்களுக்கெனப் பாடல் புனைந்தவர்களைக் கொல்வதா உன் அறம். எங்கே உன் குறுவாள். எடு. இப்போதே என் யாழை அறு” எனக் கூவினார். கூட்டத்தினர் அலையலையாச் சிரித்தனர். இரு புலிப்படை வீரர்கள் அவரை அழைத்து அருகிருந்த திண்ணையில் அமர்த்தினர். “நீலழகனிடம் போய்க் கேளுங்கள் வீரப் புலிக்குட்டிகளே. உங்கள் போர் வெற்றிகளைப் பாடிப் பாடி கதைகளாக்கியவை என் யாழும் சொல்லும். இறப்பேயில்லாத சொல்லில் நிறுவியவன். என்னை இன்று ஒரு சிறு பெண் கொல்லப்போகிறாளாம். பேதை” என சிரித்துச் சிரித்துச் சொன்னார். வீரர்கள் அவரை அமைதியாக்கிய பின் கூட்டதினரை விலகிச் செல்லும்படி ஆணையிட்டனர்.

மறுதிசையில் பாகர்கள் குழுவொன்று தம் யானைகளை நிரையாக அழைத்தபடி ஆலய வீதியால் சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு வேழமும் மினுங்கும் பலவண்ணங்களால் இழைக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்திருந்தன. குன்ற வேலன் முதல் யானையின் மேல் அமர்ந்தபடி குடிகளை நோக்கியபடி நகர்ந்து கொள்ளச் சொல்லி சைகைகள் காட்டினான். சிறுவர்கள் அதன் துதிக்கையைத் தொட்டு ஓடினர். யானை ஈக்களையென அவற்றை விரட்டின. குன்ற வேலன் இளம் சிவப்பு வண்ண ஆடையுடன் கையில் அங்குசமும் ஏந்தி போருக்கு வாளேந்தி நுழைபவனென உடல் நிமிர்த்திக் கம்பீரமாக அமர்ந்திருந்தான். அவன் கூர் மீசை முறுக்கி நீவப்பட்டிருந்தது. தலையில் இறுக்கிச் சுற்றிய பாகையணிந்திருந்தான். அது கருவண்ணத் துணியில் பொன்னிழைகள் பின்னிய அவனது குலவழிப் பாகை. கழுத்தில் தந்தமொன்றின் நுனியால் இழைக்கப்பட்ட பதக்கம் கொண்ட கறுப்பு மாலையொன்றை அணிந்திருந்தான். வேழம் மேல் வரும் இளங் குமரனெனப் புன்னகை அவன் உதட்டில் நின்றாடியது.

துடியன் தன் புரவியை மேலும் விரைத்தான். அது வாணிபத் தல வீதியால் செல்ல முடியாமல் குழைந்து சேற்றில் அகப்பட்டதைப் போல் சிக்காடியது. ஒயிலை தன் தோழிகளுடன் சமையல் பந்தலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். ஒருகணம் தயங்கியவன் பின் புரவியை அவளருகே செல்ல அனுமதித்தான். அவள் உதாவண்ண ஆடை அணிந்திருந்தாள். இடையில் வெள்ளியாரம் ஒன்றும் கழுத்தில் தங்க அன்னம் பதித்த மெல்லரவு போன்ற சங்கிலியும் பூண்டிருந்தாள். குழலை ஒற்றைச் சர்ப்பப் பின்னலென ஆக்கி நீள்தூங்க விட்டிருந்தாள். அவற்றின் ஒவ்வொரு பின்னல் சுருக்கிடையிலும் மல்லிகைகள் முளைத்திருந்தன. சர்ப்பத் தோலில் முளைத்த வெண்விழிகளென எண்ணிக் கொண்டான். அவளிலிருந்து நெய்யூற்றிய பருப்பு மணத்துடன் மல்லிகைக் குழம்பும் எழுவதாக நினைத்துச் சிரித்தான். அவன் சிரிப்பு முகம் மறையும் முன் அவனைத் திரும்பி நோக்கிய ஒயிலை தன் கூந்தலை எடுத்து முன்னே விட்டுக் கொண்டாள். அவள் முதுகில் ஓடிய சிறுமயிர்கள் காலைப்பனிதொட்ட புற்களெனத் துலங்கின. விரிவிரிவாக அதை நோக்கினான். எண்ணத்தால் சென்று முத்தமிட்டான். அவள் ஒருகணம் உடல் மெய்ப்புக் கொள்ளக் கூந்தலைப் பின்னால் போட்டுக் கொண்டாள்.

புரவியை சற்று வேகம் கூட்டி துடியன் அவளைக் கடந்தான். கடக்கும் பொழுது தன் குழலை ஒரு வருடு வருடி நோக்காத தினவுள்ளவன் என்பது போல் முன்னேறினான். ஒயிலையின் தோழிகள் கோழிக்கூட்டமென சிற்றலம்பல் ஒலிகூடினர். அதிசூடி “என்ன மன்றுத் தலைவரே. பணிக்கு இவ்வளவு தாமதம். நீங்களே இப்போது தான் போனால் களியாட்டை யார் பொறுப்பாக நடத்துவது” எனக் கூவினாள். தோழிகள் சிரித்துக் கைகளைத் தட்ட உற்சாகமான அதிசூடி “நின்று பதில் சொல்லுங்கள் தலைவா” என மேலும் கூவினாள். அவன் புரவியை ஒருகணம் தழைத்து ஒயிலையை நோக்காது “தலைவிகள் இன்னும் அடுமனை புகவில்லை என ஒற்றுச் சேதி வந்தது. அதுதான் பார்த்து விட்டுப் போக வந்தேன்” எனச் சிரித்தபடி சொன்னான். “தலைவி அடுமனை புகுவாள் தலைவரே. நீங்கள் மன்றின் ஓலைகளுக்குள் சென்று ஓலைச்சேவலென அதையே மேய்ந்து கொள்ளுங்கள்” என புகழ்விழி சொன்னாள். “நீங்கள் ஆணையிட்டால் செல்கிறேன் சேடிகளே” என அவர்களைச் சீண்டினான். “பார்த்தாயா புகழ், அவருக்கு நாங்களெல்லாம் சேடிகள். யாரைத் தலைவியென்று சுட்டுகிறார் கள்வர் என நோக்கினாயா” என்றாள் அதிசூடி. பொய்யான கோபத்துடன் குரலை மீட்டிய புகழ்விழி “எங்களைப் பார்த்தால் அவருக்கு ஏன் தலைவி எண்ணம் வரப்போகிறது. அவரின் தலைவி தான் எங்களுக்கும் தலைவியென நடந்து கொள்பவள் ஆயிற்றே” என ஒயிலையின் முதுகில் மெல்ல அடித்தாள். சிறுசீறலுடன் எழுந்த ஒயிலை அவளின் வெண்மூக்குத்தியின் சுடரென “ஓலைக்காரர்களுடன் உனக்கென்ன பேச்சு புகழ். அவரது கடும்பணிகளுக்குச் சேவகம் செய்யச் சேடிகள் தான் தேவை” எனச் சொல்லிக் கொண்டு கொல்லும் விழிகளுடன் துடியனை நோக்கினாள். அவன் நீறு நெற்றியில் அரும்பிய வியர்வையை நோக்கிய அதிசூடி “தலைவன் பயந்து விட்டான் தோழிகளே. இன்னும் கொஞ்சம் தலைவி சீறினாள் மயங்கியே விடுவான். போய்வருக தலைவா. தலைவியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” எனச் சொல்லிச் சிரித்தாள். துடியன் தரையை நோக்கியவன் சிறுசினம் கோடென எழுந்த விழிகளால் ஒயிலையை நோக்கினான். ஒயிலை தாழ்ந்திருந்த விழிகளால் அவனை நோக்கியபின் ஒரு மென்மெளனம் அக்குடித்திரளுள் எழுவதென எண்ணமெழுந்தாள். அப்புரவியில் ஏறி அவனது குழலை உரசியபடி இங்கிருந்து மிதந்து எழுந்து ஆழிக்கரையில் யாருமற்ற வெளியில் மிதப்பதாக எண்ணினாள். ஒருகணத்திற்குள் ஒருகாதம் புரவி வரிவரியாகச் சென்ற தடம் தொட்டு அளந்து மீண்டவளென நின்றாள். அக்கணம் அவளின் விழிகளில் கனவு ஒரு புன்னகையென ஓடியதை நோக்கிய துடியன் விழிநரம்புகள் கரைந்து சிறுநகை குறுகிச் சிரித்தன. “இனி இங்கு நாம் ஒருவரும் இல்லமாலாவோம் புகழ். இவர்கள் ஆடும் பகடையில் நாம் தான் உருண்டு விழவேண்டும்” எனக் கூவினாள் அதிசூடி. துடியன் அவிழ்ந்த காதற்கணத்தை அள்ளியிறுக்குபவன் போல் குழலை நீவிய பின் புரவியை உந்தினான். புரவி செல்லமாட்டேன் என்பது போல் குடிச்சேறில் அசைந்தது. ஒயிலை புரவியின் வாலைத் தடவியபடி அவனைக் கடந்து சென்றாள். புரவியின் வால்வரை விழிகொண்டவனென அத்தொடுகையை உணர்ந்தவன் நினைவு மேலிட்டு அற்புதம் ஒன்றைக் கண்டெடுத்தவனென “ஒயிலை. தங்கை, மாலை ஆடலுக்கு உன்னுடன் வரப்போவதாகச் சொல்லச் சொன்னாள். எனக்கு மன்றுப் பணிகள் உள்ளது” என்றான். அக்குரலின் இனிமையை அவனே கேட்டு அடடா என்றான். ஒயிலைக்கு ஒவ்வொரு சொல்லும் தெளிவாய்க் கேட்டது. குடிகளின் சத்தத்தில் கேட்காதவள் போல் என்ன என முகத்தை நீட்டினாள். துடியன் புரவியிலிருந்து இனிப்புக் கூடை கண்ட சிறுவனைப் போல் குதித்து இறங்கினான். அவளின் அருகே சென்றபடி மீளவும் சொன்ன சொற்களை நினைவில் பதித்த மந்திரச் சொற்களென அதேயமைவில் சொன்னான். “நான் அவளைக் கூட்டிச் செல்கிறேன். நீ வரமாட்டாயா” எனக் கேட்டாள். அக்குரலில் நீண்டிருந்த ஒரு தொடுகைக்கு அந்தப்பக்கம் அவள் ஒருத்தி மட்டுமே உறையும் குகையொன்று உள்ளது என அதைத் தொட்டு நீண்டான் துடியன். “நான் வரவா”என்றான். ” வரலாம்” என்றாள். “வந்தால்” என்றான். “வந்தால்” என்றாள். ஒருபுன்னகைச் சரம் சிந்தியது போலச் சிரித்தான் துடியன். அங்கிருந்தவர்களை அவன் சித்தமழித்தது. “இவ்வளவு குடிகள் கூடியிருப்பது காலத்தை மென்மையான சேற்றுக் குழைவாக்கியிருக்கிறது ஒயிலை. அது நல்லது தான் என்றான். “உனக்கென்ன துடியா. உனது காலம் சேற்றில் சிக்கியது. எனது காலம் தீயில் வேகுவது. தீ ஒவ்வொரு கணமும் துடிப்பது தான் இல்லையா” என்று அவர்கள் மட்டும் கேட்கும் ஒலித்தளத்தில் அவள் குரல் நடந்தது.

தத்துவ வகுப்பின் முதல் நாளில் நுழைந்து பெருங் கேள்விகளைக் கேட்பவன் என்ற பாவனையுடன் “தீயில் துடிப்பது தான் சேற்றில் குழைவதும் ஒயிலை. பெண்ணின் உள்ளே துடிக்கும் தீ தான். ஆணின் உள்ளே குழையும் சேறு” என உவகையுடன் தனது கண்டுபிடிப்பைச் சொன்னான். ஒயிலை அவனது சிற்றார்வத்தைக் கண்டபின் அதை வேறொரு திசைக்குத் தள்ளினாள். “ஆடலில் சுடர்வதும் அமைவதும் ஒன்றேயல்ல துடியா. அமைவது அடங்குவது. துடிப்பது எழுவது. துடிப்பை அறிந்த பின்னே அமைவது முறைமை. இன்று மாலை சிற்பனின் ஆடலில் அதை நோக்கலாம். போன விழவில் அவர் ஆடிய நடனத்தை இன்றுவரை நான் மனதில் காண்கிறேன். உடல் ஒரு தீயென உணர்ந்தது அவரில் தான். ஆடியமர்ந்த போதும் உடலில் தீநெளிவதைக் கண்டேன்” என்றாள். அச்சொற்களால் களம் பட்ட வீரனென துடியன் உளத்தில் சொற்தடை எழுந்தது. அதை நோக்கிய ஒயிலை “எல்லோரும் அப்படித் தான் சொன்னார்கள் துடியா. கலைஞர்களை ரசிப்பது அவர்களின் கலை நிகழும் கருவியை நோக்குவது. அக்கருவியாக நம்மை அறிவது. சிற்பனில் ஆடியது நான். என்னுள் ஆடும் தீ” என மழலையை வருடும் தாயெனச் சொன்னாள். ஒளடம் பூசிய வீரனென ஆடலை அறிந்தவன் போல் துடியன் “ஓம். ஒயிலை. நானும் அவரின் ஆடலை நோக்கியிருக்கிறேன். அவரது விரல்களும் பாதங்களும் மொழியாக ஆடுபவை. அவரது விழிகளில் உள்ள நோக்கின்மை நம்மை அவரென ஆகச் சொல்லும் அழைப்பு வாயில்” என தன் சொற்களை சோழிகள் பொறுக்கிய சிறுவன் என மகிழ்ந்து கொண்டான். “ஆடலின் வாயிலில் அழைப்பு எப்போதுமிருப்பது துடியா. அதில் அமைவதும். அமைந்து பின் முழுதென அகம் மலர்ந்து நம்மை விடுவித்துக் கொள்வதும் தான் பிரதானமானது. நமது ஆற்றை நாமே கட்டி வைத்துக் கொள்வதெனப் பொழுகளைச் சூடிக் கொள்கிறோம். அதன் மறைவான இடங்களில் நமது ஆறுகளை வழிய விடுகிறோம். பெருமழையென ஒன்று நம்மீது வீழாத வரை ஆறு தன் பாதங்களை உணர்ந்து கொள்வதேயில்லை. ஆடும் பேராற்றின் பாதங்களை என்னுள் உணர்கிறேன். அதன் ஒலியில் என்னை நானே அறிந்து துடிக்கிறேன். அது என் துடி” என்றாள் ஒயிலை. அச்சொற்கள் கவிதையின் மெளனமெனத் துடியனில் விரவியது. அது என் துடி என்ற சொல் ஒரு ரீங்காரமென அசரீரியென இசைக்கிண்ண ஒலியென மயக்கம் வந்தவன் போலானான். பிறிதொரு சொல்லும் பேசாமல் உடல் தளர்ந்து நழுவுபவன் போலப் புரவியைப் பற்றிபடி நடந்தான். ஒயிலையின் விரல்கள் அவன் வலக்கர விரல்களை ஒருகணம் தொட்டு மீண்டது. வெடிப்போசை கேட்ட புரவியென அவனுள் எண்ணங்கள் குதித்தாளமிட்டன. “நான் ஆடலுக்கு வருகிறேன் ஒயிலை” என்று சொன்னவன் ஒருகணம் நின்றாலும் உயிர் பிரிந்து விடுவேன் என அஞ்சியவன் போல புரவியில் வழுகிப் பின் தாவி ஏறினான். அவளை ஒரு கணமும் நோக்கலாகது கொலைகாரி எனச் சொல்லியபடி வழிபிரிந்த வீதியால் இடப்புறமாகத் திரும்பினான். ஒயிலை அவனை நோக்கிய பின் அவனது அச்சத்தைக் கண்டு நாணினாள். அவன் கடிவாளத்தை இழுப்பவள் தான் என எண்ண வலவிழிப் புருவம் மும்முறை துடித்து அடங்கியது.

துடியன் மன்று சேர்ந்து இருநாழிகை கழிந்த பின்னர் சங்கநாதர் வெற்றிலையைக் குதப்பியபடி வந்தார். “என்னடா துடியா. அனைத்தும் ஒருங்கு தானே. எனக்கு ஆயிரம் வேலைகள் உண்டு” எனக் காவிப் பற்கள் விரியச் சிரித்தார். புதிய பட்டாடையில் அவரைப் பூசிக் கட்டியதைப் போலிருந்தார். அவரை நோக்கிய பின் “அனைத்தும் ஒருங்கி விட்டன. தாளகதியில் பணிகள் நடக்கின்றன. கவலை வேண்டாம்” எனச் சொன்னான். “இன்று இரவு வரை மன்றை நீ தான் கவனித்துக் கொள்ள வேண்டும். எனக்கு ஆயிரம் பணிகள் உண்டு. ஆடற் குழுவையும் ஒருக்கும் வேலை எனக்கே” என்றார் சங்கநாதர். “ஓம். நான் பார்த்துக் கொள்கிறேன்” எனச் சொல்லியபின் அந்தியின் பொழுது வேலைகளை ஒருக்கிக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாய் கலந்து விடும் திட்டத்தை எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டான். சங்கநாதர் பாடலொன்றை முணுமுணுத்தபடி வெளியேறினார். மன்றில் பணியோலைகள் தீர்ந்து அனைத்தும் அட்டையின் கால்களென நடக்க ஆரம்பித்ததை நோக்கிய துடியன் நூற்றுக்கணக்கில் வருவோரையும் போவோரையும் நோக்கியிருந்தான்.

ரூபகன் அவனருகே வந்து “புத்த துறவிகள் வந்து விட்டார்கள் துடியா. அவர்களுக்கான குடில்களில் அவர்களைச் சேர்க்க வேண்டும்” எனக் கூறினான். “எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்” என்றான் துடியன். “இருபது பேரளவில் இருப்பார்கள். மகாசோதி அவர்களின் தலைமையானவர். அவரும் வந்திருக்கிறார்” என்றான் ரூபகன். “நானே சென்று குடில்களைக் காட்டுகிறேன்” எனச் சொல்லியெழுந்தான் துடியன். இருபது துறவிகளும் கடுஞ் சிவப்பு வண்ணக் காவியணிந்து அரை வட்ட வடிவில் மன்றின் முன்னே நின்றிருந்தனர். மகாசோதியை நோக்கிச் சென்ற துடியன் அவரை வணங்கினான். அவர் கால்களில் விழுந்து எழுந்தான். மகாசோதி அவனது சிரசைத் தொட்டு எழுப்பிப் புன்னகைத்தார். மழிக்கப்பட்ட அவரது தலையை ஒளிர்விடும் கலயமென எண்ணினான் துடியன். “வாருங்கள் துறவியே. உங்களது குடிலை நான் காட்டுகிறேன்” எனத் தணிந்த குரலில் சொன்னான். அவர் அவனுடன் நடக்கத் தொடங்கினார். மன்றிலிருந்த அடுத்த சிற்றாலய வளாகத்தில் அவர்களுக்கான பத்துக் குடில்கள் ஒருக்கப்பட்டிருந்தன. அவற்றைக் காட்டியதும் அவர்களுக்கன உணவினைக் கொணரச் சொல்லி ரூபகனை அனுப்பினான். மகாசோதி துடியனை நோக்கி “தந்தை நலமா துடியா” எனக் கேட்டார். “நலமாய் உள்ளார் துறவியே. இன்னும் சில நாழிகைக்குள் வந்து விடுவார் அவரிடம் சொல்கிறேன்” என்றான் துடியன். பின் அவரை வணங்கி மன்று திரும்பினான்.

*

வேறுகாடார் இளம் பாணனை அழைத்தபடி சிற்றாலய வளாகத்தின் வாயிலுக்கு வந்து சேர்ந்தார். “பாணனே, இங்கு புத்த துறவிகள் குடிலமைந்துள்ளது. நான் ஒருவரைச் சந்திக்க வேண்டும். நீயும் வருகிறாயா” எனக் கேட்டார். அவன் தலையசைத்த பின் இருவரும் குடில்களின் முற்றத்தைச் சென்றடைந்தனர். மூங்கிலால் சுவர்கள் அமைக்கப்பட்டு தென்னோலைகளால் பின்னப்பட்டு கூரையமைக்கப்பட்ட பத்துச் சிறுகுடில்கள் வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. குடிலைச் சுற்றியும் இடை முளைத்ததுமென வேப்ப மரங்களும் மா மரங்களும் இலைகள் சடைத்து நின்றன. வேப்ப மரம் ஒன்றின் அடியில் ஒரு திரிசூலம் நாட்டப்பட்டு அதன் நடுச்சூலத்து முனையில் செவ்விரத்தம் பூவொன்று தலைகீழாய்ச் சொருகப்பட்டிருந்தது.

மகாசோதி அம்மரத்தின் கீழே அமர்ந்து புன்னகை தவழ ஊழ்கத்தில் இருந்தார். அவரின் முகத்தை நோக்கிய வேறு காடார் அதே முகம். அதே புன்னகை என எண்ணிக் கொண்டார். அருகே சென்று நின்ற போது விழி திறந்து மலர்ந்தார் மகாசோதி. வேறுகாடார் அவரின் அருகமர்ந்து “நலமா நண்பரே” எனக் கேட்டார். இளம் பாணனை அருகழைத்து அமரச் சொன்னார். “இவர் அயல் தேசப் பாணர். நம் தேசம் காண வந்திருக்கிறார்” என்று அறிமுகப்படுத்தினார். மகாசோதி புன்னகைத்து “இளம் பாணர்களே கடந்த காலத் துக்கங்களை புதிய களிம்பைக் கொண்டு ஆற்றக் கூடியவர்கள். நமது விழிகள் வேறொன்றுக்குப் பழகிவிட்டன. அவை எவ்வளவு விரிந்தாலும் வேரில் இருப்பது மலரில் கசிந்து தான் ஆகும். வேறு வேர்களில் வேறு மலர்கள் அவிழக்கூடும். புதியதின் நறுமணம் பரவுக” என தண்குரலில் சொன்னார்.
“ஓம். இவர் அசகாய சூரர். நமது மண்ணுக்கு ஏற்ற போர்க்குணமும் பெரும் அச்சமும் சூடியவர். ஆனால் சொற்களை மீட்டி நான் கேட்டதில்லை. நீண்ட காலம் கருச்சுமந்து கவிதைகள் புனைவார் என எண்ணுகிறேன்” எனச் சிரித்துக்கொண்டு சொன்னார் வேறுகாடார். “நீண்ட கர்ப்ப காலங்கள் நல்லவையே நண்பரே. பிறக்கும் குழவி மண்ணில் ஆற்றப்போவதே முதன்மையானது. கருவில் எதுவெனவும் அது ஆகியமையலாம். மண்ணில் அது இன்னொன்று” எனச் சொல்லி மகாசோதியும் சிரித்தார். இளம் பாணன் இரண்டு சிரிப்புக்குமிடையில் நீளும் பாலமென ஒரு சிரிப்பை எடுத்து உதட்டில் நீட்டிக் கொண்டான்.

TAGS
Share This