35: சூர்விழி
மாயை தன் பலவண்ணக் கூந்தலால் இருளைப் போர்த்தியது. இருள் ஒவ்வொரு வண்ணத்திலும் கலந்து அவ் வண்ணமென ஆகியது. வண்ணங்களால் தன் விழியை இழந்தது இருள். வண்ணங்களால் தன்னை நோக்கியது. தானென அறிந்த ஒன்றை வேறெனக் கண்டது. எது தான் என அறியாமல் திகைத்தது. மாயை சிரித்தது. கூந்தல் நீண்டு நீண்டு ஒவ்வொரு திசையிலும் படர்ந்தேறியது. ஆடற் சித்தரின் விழியிடைவெளியால் அக்கூந்தல் நுழைந்து இமையென ஆயிற்று. இமைக்குந் தோறும் இருளை வண்ணங்கள் குலைத்தன. இச்சைகள் தம்மை மறந்தன. மாயையின் ஆடலில் மாயை அவிழ்ந்தது. ஆடற் சித்தர் அகவிருளில் நுழைந்திட்ட மாயையை நோக்கி நோக்கி விழியிழந்தார்.
*
வாகை சூடன் புரண்டு படுத்த போது சோதியன் விழித்துக் கொண்டான். மதுச்சாலை கூட்டப்பட்டு மழலைகள் விளையாடி முடித்த வீடு அடுக்கப்பட்டு மீண்டும் விளையாட ஆயத்தமாகியிருப்பதைப் போல் நேர்த்தியாக இருந்தது. ஆறேழு கிழவர்கள் அங்கே உறங்கிக் கொண்டிருந்தனர். இராப் பிரியன் வீணீர் உதட்டால் வழிய ஒரு மரத்தட்டில் சாய்ந்து துயின்று கொண்டிருந்தான். மதுச்சாலைக்கு வெளியே எழுந்த கூச்சல்களும் புரவிக் கனைப்புகளும் புலரியை எழுப்பிக் கொண்டிருப்பதை செவியுற்று எழுந்தமர்ந்தான்.
வாகை சூடனைத் தோள் தொட்டு அழைத்தான் சோதியன். வாகை சூடன் விழிகளை மெல்லத் திறந்து நீர் என்றான். எழுந்து சென்று மூங்கில் குவளையில் பானையிலிருந்த குளிர் நீரை எடுத்து வாகை சூடனிடம் நீட்டினான். அவன் அமர்ந்து கொண்டு அக்குளிர் நீரை வழியவிட்டு நரம்புகளை உயிர்ப்பித்தான். பின் முகத்தில் சரித்து ஊற்றிக் கொண்டான். மேற்துணியால் முகத்தைத் துடைத்துக் கொண்டு தன் மொழிக்கையால் குழலைத் தடவினான். “பொழுது புலர்ந்து விட்டது. எப்புலரியும் இப்படியே விடியக் கூடாதா சோதியா” என மெல்ல நகைத்தான் வாகை சூடன். “எப்புலரியும் இனியதே தளபதி” எனத் தானும் நகைத்தான் சோதியன். “கொடுங் கனாக்கள் கொண்டு எழும் புலரிகளுமா” என உதட்டைச் சுழித்துப் பின் விரித்துச் சிரித்தான். “கொடுங் கனாக்களும் என்னைக் கைவிட்டு விட்டன சோதியா. கொடுங் கனா என நான் விழிப்பது இனிய தோழர்களின் உடல்கள் எரியும் பிணக்காட்டில் எரியாமல் நிற்கும் விறகென நான் நோக்கியிருப்பதைத் தான்” என மேலும் தொடர எழுந்தவனை இடைமறித்த சோதியன் “தளபதி, புலரியில் எனக்கு ஒருக்கிய பணிகளுண்டு. நான் நாளை உங்களைச் சந்திக்கிறேன். எல்லையில் உள்ள காவல் நிலைகளை நோக்கி மீண்டும் தகவல்களை இற்றைப்படுத்த வேண்டும்” எனச் சொல்லி முடித்தான். “செல்க” என மொழிக்கையை விசிறினான் வாகை சூடன். “நாளை உங்களைச் சந்திக்கிறேன் தளபதி” என்றான் சோதியன். “முன்னாள் தளபதி என்று சொல். அது தான் இப்போது எனக்குப் பொருத்தமான பதவி நிலை. அல்லது அதையும் பிடுங்கிக் கொண்டுவிட்டார்களா தெரியாது. அல்லது துரோகித் தளபதி. இது குடிகள் இட்ட பெயர். கொஞ்சம் கூடுதல் பொருத்தமானதும் அதுவே” எனக் கசப்பு உதடுகளில் விரவச் சொன்னான் வாகை சூடன். சோதியன் எதையோ சொல்ல வாயெடுத்தவன் பின் “நீங்கள் என்றும் என் தளபதி” எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டு அவனைத் திரும்பிப் பார்க்காமல் நடந்தான். முன் திண்ணையில் துயிலும் குறுவேழமென ஒரு கையை நீட்டிக் கொண்டு அரூபி சயனத்திலிருந்தாள். அவளை ஒரு கணம் நோக்கிய பின் புரவியில் தாவி ஏறிக் கடிவாளத்தை இழுத்தான்.
உடல் எடைகொண்டு இருப்பதை வாகை சூடன் நோக்கினான். கால்களை ஊன்றி எழுந்து போர் வடுக்கள் மண்டிய உடலை அசைத்து நடந்தான். வெளியே திண்ணையை நோக்கிய பின் குடித்திரளின் நெருக்கைப் பார்த்ததும் உள்ளூர அனல் எழக் கண்டான். திரும்பி மதுச்சாலைக்குள் சென்று இராப்பிரியனை எழுப்பினான். “பிரியா எனக்கு மதுவேண்டும். எழுந்திரு” என அவனை உலுப்பினான். திடுக்கிட்டு விழித்த இராப்பிரியன் வாகை சூடனைக் கண்டு மெல்ல அஞ்சி “தருகிறேன் தளபதி. அமருங்கள்” எனச் சொல்லி மரத்தட்டிலிருந்து சர்ப்பம் நழுவி இறங்குவது போல் விலகி பின் தளத்திற்குச் சென்று மதுக்குப்பியொன்றைக் கொணர்ந்தான். அதை வாங்கிக் கொண்ட வாகை சூடன் அதை மணந்து நோக்கிவிட்டு “குடித்தால் எரியும் மெழுகென உள் நுழையுமா பிரியா” எனச் சொல்லிப் புன்னகைத்து ஒரு மடக்குக் குடித்தான். மது அவன் வாயை எரித்து எழ வைத்துக் கழுத்தால் நுழைந்து குடல்களின் மென்சதைகளில் எரிதிரவமெனப் படர்ந்து நிறைந்தது. நூராத கங்கு போன்ற செவ்விழிகளை நோக்க அஞ்சிய இராப்பிரியன் உள்ளே சென்றான்.
மதுக்குப்பியை அரைப்பகுதி குடித்து முடித்தான் வாகை சூடன். அவன் நரம்புகள் அம்புகள் எய்தெய்து களைத்து நிற்கும் நாண்கள் போல உள்ளாடியது. மதுச்சாலைக்குள் நிறைந்திருந்த வெறுமை அவனுக்குள் எரிவை மேலும் கூட்டியது. மரத்தட்டில் சாய்ந்து படுத்துக் கொண்டு உடலை உள்நோக்கினான். வெறும் குடலில் மது சுழன்றோடும் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. உடல் ஓங்காளிப்பென மதுவை விரட்டியபடி போர் செய்தது. அவ்வெண்ணம் எழுந்து கொள்ளப் “போர்” எனப் புன்னகைத்தான். மதுச்சாலைக் கூடம் ஒலிகளால் எழுந்தாடத் தொடங்கியது.
முதற் பருவப் போரில் வாகை சூடன் முதல் நிலை வில்லாளியாக எழுந்தான். அவனது விரல்களில் அம்புகள் எழுந்தமையும் வேகத்தை அவனை விட மூத்த வீரர்களும் காதலுடன் நோக்குவதைத் தன்பலநூறு விழிகளில் ஒன்றால் நோக்கி உளம் கிளர மேலும் மேலுமென விசை பொருதி எழுந்தான். முதன் முறையாக அவன் வில்லைத் தொட்ட நாள் அவன் நினைவில் ஒரு அம்பென நுழைந்தது. முதல் வில்லை அவன் தந்தை உக்கிர சோழியர் தன் கரங்களாலே ஆக்கினார். அதன் பெயர் சூர்விழி.
மனையின் தலைப் பிள்ளைகள் ஏந்த வேண்டிய வில்லிது என வாகை சூடனுக்கும் அவன் சோதரர்கள் நால்வருக்கும் கூறுவார். வாகை சூடன் சோதரர்களில் இரண்டாமவன். மூத்தவர் வெற்ப வேந்தன். தந்தை வீட்டின் பின்புறமிருந்த வெளியில் ஐந்து பயிற்சிப் பாவைகள் அமைத்துத் தனயர்களுக்குப் பயிற்சியளிப்பார். வில்லைத் தொட்ட பின் அவர் ஆசிரியர் என நிமிர்வு கொண்டு அமைவார். தனயர்களும் அவரை ஆசிரியரெனவே விளிப்பர். ஒவ்வொருவருக்குமான விற்களையும் அம்பு எய்யும் நுட்பங்களையும் களிமிதக்கும் விழிகளுடன் கூறுவார். வில்லை எடுப்பவன் வில்லைத் தாழ்த்தக் கூடாது. தாழும் வில்லென்பது அவன் அகமே எனச் சொல்லியே முதற் பாடத்தை நிகழ்த்தியதை நினைவு கூர்ந்தான். அது எங்கோ பாலைத் தொலைவில் எழும் ஒலியென இப்போது கேட்டது. காலையில் தொடங்கும் பயிற்சி மதியம் வரை நீளும் பின் மாலையில் ஆரம்பிப்பது இருள் படர்ந்து இருநாழிகை நீளும். இருட்டில் விழிகொள்ளாதவன் வில்லின் கண்களை அறிவதில்லை எனத் தந்தை கூறுவார். இருளின் மென் திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி இலக்கை நோக்கும் விழிபயின்றனர் தனையர். வாகை சூடன் இருளில் விழி திறந்திருக்க அனைத்தையும் நோக்கப் பழகினேன். அவனே அறியாமல் சூர்விழி தனக்கானதென அவன் உளம் ஓயாமல் சொல்லுரைக்கும். அக்குரல் அவன் எண்ணிக் கொள்ளாமலேயே அவன் அகமென ஆகியது. கையில் ஏந்தும் வில்களை சூர்விழியெனக் காண்பான். இருட்டின் திரைகள் விலகி இலக்கை அறிவதைப் போல் ஒவ்வொரு வில்லினதும் தோல்கள் அகன்று சூர்விழி என்றாயிற்று. இருளில் நின்றபடி ஆழியை அடவியை நகரை விண்ணை என ஒவ்வொரு பருவும் உருவில் எப்படி ஒளிந்து கொள்கின்றன. அதன் மேனியை எவ்விதம் தொடுவதெனக் கற்றான். இருள் நோக்குந் தோறும் விலகுவது என்பதை அறிந்தான். புடவியில் மெய்யான இருளென்பது இல்லை எனத் தெளிந்தான். இருள் அகல அகல அவன் அகவிழி கூர்கொண்டது.
மூத்த சோதரன் வெற்ப வேந்தன் களப்பலியான நாளன்று தந்தை விரல்களிலிருந்து வில் நழுவியது. வெற்ப வேந்தனின் நினைவாக மனையின் படைக்கல அறையில் சூர்விழி குடிகொண்டது. தந்தை அறியாமல் வாகை சூடன் புலிப்படை சேர்ந்த போது செந்நிற இழைகள் பின்னிய பட்டில் வைக்கப்பட்ட சூர்விழி வனக் குடில் சேர்ந்தது. தந்தையின் இருகரங்களென அதன் இருகிளைகளும் உறுதியுடன் விசை கொண்டிருந்தது. மனையிலிருந்த வரை அவன் அதை அகத்தால் அன்றித் தொட்டதேயில்லை. வனக்குடிலில் நடுங்கும் விரல்களால் சூர்விழியைத் தொட்ட போது நான் உனக்கானவள் என விரல்களை ஆற்றினாள். முதல் அம்பை விண்ணுக்கு எய்தான். கோடி கோடி விண்மீன்கள் வைரவிழிகளென மண்ணை நோக்கும் நீத்த மாவீரர்கள் என்ற சொல் புலிப்படை வழக்கு. அவர்கள் விழிநோக்கியென அவ்வம்பு வான் நுழைந்து நுனிதிறந்தது.
எண்திசைத் தோளன் படை கொண்டு மாதோட்டம் வெற்றி கொள்ளப்பட்டு அதன் எல்லைகள் புலிகளிடம் கைசேர்ந்த அன்றைய போரில் சூர்விழியின் அசுர வெறியை எண்திசைத் தோளன் நோக்கி மெய்ப்புல் கொண்டேன் எனச் சொல்லி வாகை சூடனின் குழலை வருடித் தலையில் தட்டினான். பெருங்கள வீரனென அவன் முன் நின்று சிங்கை வீரர்களை எதிர்கொள்க என உறுமும் வேங்கையென எண்திசைத் தோளன் அவனது ஆவியும் பொருளுமென ஆனான். எண்திசைத் தோளன் வில்லிலும் வாளிலும் தேர்ந்தவன். முதன்மையான போர் வியூகி. களம் புகுந்து சமரென எழும் போது கொல்தெய்வங்களைப் பகைக்கு இழுப்பவன். அம்புகள் சரப்பெருக்கென எதிரிகளை நடுங்கச் செய்பவை. வில்லின் நாணொலியே சங்கீதமென வாகை சூடன் மெய்ப்புக்கொண்டு அலைவான். போரின் நூறு நூறு வில்லொலிகளில் அவனால் எண்திசைத் தோளனின் நாணொலியைத் தனித்துக் கேட்கும் செவியொருமை கூடியது. எண்திசைத் தோளனின் வில்லின் பெயர் தசமுகன். பத்து முகங் கொண்டு போர் புரியும் இராவணென எட்டுத்திசையிலும் சுழலும் அற்புதம். மாயமென்று அச்சுழல்கையை நோக்கும் வாகை சூடன் இமை மூடாது நின்ற கணங்களை அவனே எண்ண முடியாமல் அவ்வெண்ணத்தை ஒழித்தான்.
போர் முடிந்த ராத்திரிகளில் குவிவிறகுகள் கொழுத்தி மான்களை வாட்டி ஊனொழுகத் தின்று கடித்து ஆடும் தோளனை நண்பனென உற்றான். வாகை சூடன் அருகிருக்கையில் தசமுகன் உயிருடன் எழுந்து தன் இடப்புறம் நிற்கிறான் எனச் சொல்லி எண்திசைத் தோளன் களிவெறியில் கூவுவான். இருவரும் அணுக்கர்கள் என்பது படையறிந்த மெய். வில்லும் அம்புமென நீலழகன் ஒருமுறை நகையாடினான்.
எண்திசைத் தோளன் போர் வியூகங்களை எப்படி மாற்றுகிறான். அடிப்படையில் ஒன்றென ஆகுவது போரில் எப்படி உருமாறி உருமாறி வேறு வேறு உருக்கொள்கிறது எனக் கண்டு கற்ற விழிகளால் போரைத் தேர்ந்தான். வனக்குடிலின் வியூகப் பயிற்சிகளில் முதன்மை வீரர்களில் ஒருவரானான். போர் ஒரு மொழியென அவனுள் விளைந்தது. அதன் ஓசைகளை ஒலியிழைவுகளை நடனத்தை அவன் நரம்பும் குருதியுமெனக் கற்று எழுந்தான்.
மலகந்தகமவின் திரிகோணமலைத் தாக்குதலை முறியடிக்கும் படைநடவடிக்கையை வழிநடத்தும் பொறுப்பை எண்திசைத் தோளன் வாகை சூடனுக்கு அளித்தான். “என் விழியை அவன் அறிவான். கிழக்கின் அடவி தெய்வங்கள் அவனை வழிநடத்தும்” எனப் புன்முறுவலுடன் நீலழகனிடம் சொன்னான் எண்திசைத் தோளன். படைக்கலங்கள் ஒருங்கியது. வாகை சூடன் புரவியேறிய போது “இனி நீ தளபதி இளவலே” எனச் சொல்லிப் புரவியைத் தட்டினான் எண்திசைத் தோளன். தோளனின் விரல்களை நோக்கிய பின் ஒருகணம் அதை உளத்தால் தொட்டுக் களம் புகுந்தான் வாகை சூடன். கிழக்கின் அவனறியாத காடுகள் அவனை மைந்தனென அரவணைத்தன. இருள் அவன் விழிகளைத் தீண்டாது எப்பருவும் துலங்கும் ஒன்றெனத் தோன்றியது. அதுவரையான முறியடிப்புச் சமர்களில் இழப்புக் குறைந்த மாபெரும் வெற்றியைச் சூடி வந்தான் வாகை சூடன். சூர்விழி ஒலிகொண்டு போர் புகுந்து தானே முதன்மை ஓசையெனப் போரை நிகழ்த்தியது எனப் பாராட்டினார் இன்மர். அதன் விடுபடும் ஒலிகேட்டு காட்டின் பறவைகள் அஞ்சி ஓடின என்றனர் வீரர்கள். ஒருகணம் எம்முன் நின்று சுழலும் வில்லாளன் எண்திசைத்தோளனெனத் தோன்றியது. மறுகணம் அது தசமுகன் என்றாகியது. மேலுமொரு கணம் நோக்குகையில் அது சூர்விழியின் கணையொலி எனக் கேட்டது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு சொல் சொல்லிச் சென்றனர். நீலழகன் அவனை நெஞ்சு தழுவி வாழ்த்தினான்.
தளபதியான பின்னர் நெடும் போர்களால் எண்திசைத் தோளனை அவன் காண்பதே அரிதென்றாயிற்று. மெல்ல மெல்லப் புது வீரர்களாலும் புதுப் போர்களாலும் வேறொருவனாக உருமாறத் தொடங்கினான் வாகை சூடன். அவனது களப்புண்கள் மேனியை அழகூட்டும் அணிகளென எண்ணினான். வடுக்களை அவன் தொடுவதில்லை. அவற்றை நோக்குவான். வருட எண்ணும் உந்தலை அடக்கி அதன் வலியை நோக்குவான். அது மென் தாளமென உடலின் கீழ் நடமிடும். அதை ரசிக்கப் பழகினான். வீரனெனக் களம் கண்டவனென வலி அவனுடலை ஆக்கியது.
எண்திசைத் தோளனுடன் கிழக்கின் பெரும்பகுதி வீரர்கள் பிரிந்த பிளவுச் செய்தியைக் கேட்ட போது வாகை சூடன் கிழக்கின் காடுகளில் இருந்தான். கிழக்கிற்குத் திரும்பும் படையினரைத் தாக்கி அவர்களது ஆயுதங்களைக் கைப்பற்றச் சொல்லும் சேதியைத் தூதுப்புறா கொணர்ந்த போது அவன் கால்கள் தரையிலிருந்து இழுபட்டு நீங்கின. அச்செய்தியைத் திரும்பத் திரும்ப வாசித்தான். அவனுடன் கூடவிருந்த ஏனைய தளபதிகள் உத்தரவைப் பின்பற்றச் சொல்லி அவனை நெருக்கினர். “ஒருபோதும் இயலாது. நமது தசைகளை நாமே அறுத்துத் தின்ன முடியாது வீணர்களே, இழிமக்களே” எனக் கூவினான் வாகை சூடன். “எண்திசைத் தோளன் என் ஆசிரியருக்கு நிகரானவர். அல்ல. எனது தந்தைக்கு நிகரானவர். அவரை எதிர்த்து நான் எழ மாட்டேன். எழுபவர்களையும் விட மாட்டேன்” என வெறிகொண்டு கூச்சலிட்டான். எண்திசைத் தோளனுடன் பிரிந்து சென்ற வீரர்களைத் துரத்திச் சென்று தாக்கிக் கொன்றமையைக் கேட்ட பொழுது வாகை சூடன் சூர்விழியை ஓங்கி நிலத்தில் அறைந்து இருகூறாய் உடைத்தான். நாண் பிரிந்த ஒலி பெருங்கேவலென ஒலித்தது.
“தோழர்களுக்கும் எதிரிகளுக்கும் மாவீரர்களுக்கும் அவர்கள் தியாகங்களுக்கும் பொருள் தெரியாத இந்த யுத்தத்தில் சூர்விழி எழமாட்டாள். அற்பர்களே, அறிவிலிகளே, நீங்களெல்லாம் வீரர்களா, சொந்த வீரர்களைக் கொன்ற பின் உங்களுக்கு எதற்குப் புலிக்கொடி. உங்களுக்கு எதற்கு நாடு. யாரை ஆள இந்த யுத்தம். பிணங்களைத் தின்பவர்களே. சோதரரைக் கொன்று புணர்பவர்களே” என வெடித்துச் சினந்து கூவினான்.
கூடத்தில் அழியனும் பார்தேவனும் களிமந்தகனும் அவனை நோக்கிக் கொண்டு செய்வதறியாது திகைத்தனர். கூடத்தைச் சுற்றிலும் வீரர்கள் திரண்டு நின்று அவன் எழுந்து நின்ற கோலத்தையும் அவன் குழல் காற்றில் சாட்டையென எழுப்பும் ஒலியையும் கண்டு அஞ்சினர். வாளை எடுத்து அங்கிருந்த புலிக்கொடியை அறுத்து எறிந்தான் வாகை சூடன். பார்தேவன் கொடி வீழ்ந்ததைக் கண்டு சினமேறி “துரோகிகளுக்கு உரியது மரணமே வாகை சூடா. நிகழ்ந்தவை அறியாது நம் மண்ணின் கொடியை இழிவு படுத்தாதே” என உறுமினான். “மண்ணின் கொடியா. இது மண்ணின் கொடியா அற்பர்களே. வெறும் விலங்கு. கொல்லும் விலங்கு. கொல்வதைத் தவிர பிறிதொன்றும் அறியாத விலங்கு. உன்னுடன் களம் நிற்கும் வீரர்களை நீயே கொல்வாயா வீணனே. உனது தோளெனவும் கரமெனவும் களம் நின்ற தோழர்களை ஆணையின் பொருட்டுக் கொல்வாயா. படுகொலை புரிந்து பேய்க்களியாடுஅதன் பின் உறங்குவாயா. இதுவரை நாளும் சோதரியெனவும் காதலியெனவும் பேசிச் சிரித்துச் சண்டையிட்ட மாவீரிகளை வெட்டியெறிய உன் வாள் எழுமா. அறிவிலியே. நோக்கு. நாம் சிங்கை வீரர்களை விடக் கொடியவர்கள். நோக்கு. அவர்கள் சொந்த வீரர்களை அழிக்க அப்படை என்றாவது ஆணையிடுமா சொல். இனி எனக்கு யாரும் தலைவனும் இல்லை. எதுவும் என் நாடுமில்லை. இக்குடி அழியும் நாள் வரை நின்று அதை நோக்கி நோக்கி வெந்து சாவேன்” எனக் கொந்தளிக்கும் திராவகத்தைத் தொண்டையால் துப்புபவனென அவன் கூடத்தில் வாளைச் சுழற்றிக் கூவினான். புலிக்கொடியை மிதித்து மிதித்து மண்ணுள் புதைத்தான். அழியன் அவனை நெருங்க “எவர் என் அருகில் வந்தாலும் கொல்வேன்” எனக் கூவினான். மறுகணம் அவன் எண்ணாத திசையிலிருந்து வாளொன்று துடித்து வாகைசூடனின் வாளேந்திய கரத்தை வெட்டிக் கடந்தது. மறுகரத்தால் நிலத்தை ஊன்றியவன் “அறிவிலிகளே, நீங்கள் வெட்டியது என் கரத்தை அல்ல மூடர்களே. உங்கள் சொந்தக் குருதியை. சொந்த உதிரத்தை” எனக் கத்தியபடி மண்ணில் சரிந்தான். மருத்துவக் குழு வீரர்கள் அவன் வெட்டுண்ட கரத்தின் குருதிப்பெருக்கை நிறுத்தி மருந்திட்டார்கள்.
விழித்த போது தான் உயிருடன் இருப்பதை எண்ணி மருந்து நாற்றம் உடலில் எழ கசந்து கசந்து அழுதான். எச்சிலைத் துப்பிக் கொண்டான். அவனை வடக்கிலிருந்த வனக்குடிற் சிறையில் ஒருபருவம் அடைத்து வைத்திருந்தார்கள். அல்லும் பகலும் உறுமலுடன் அங்கேயே கிடந்தான். எண்திசைத் தோளன் உயிருடன் தப்பித்தான். கிழக்கின் நானூறு வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதைக் கேட்டு உளம் ஒரு செய்திக்கு ஆறுதலும் மறு செய்திக்குப் பேதலிப்புமென நீலழகனைச் சபித்தபடியிருந்தான்.
உக்கிர சோழியர் நீலழகனைச் சந்தித்துப் பேசினார். “அவனை நான் ஆற்றுகிறேன் நீலரே. என்னிடம் என் குழந்தையைக் கொடுங்கள்” எனக் கால்களில் விழுந்து கதறினார். அம்முதிய போர் வீரன் கால்களில் விழுந்தான் என்ற செய்தியைக் கேட்டு சிறைச்சாலை இரும்புகளைப் பற்களால் கடித்தபடி ஓலமிட்டுச் சீறி மண்ணில் கைகளால் அறைந்து சொன்னான் “வீணர்களே, அழிவீர்கள். உங்கள் தந்தையைக் கால்களில் விழ வைத்த நீங்களும் ஒரு மைந்தர்களா. உங்கள் சாவுகளில் சொல்ல ஒரு சொல்லும் எச்சமின்றிச் சாவீர்கள்” என விம்மி விம்மிச் சொன்னான். அவன் குரல் நாண்கள் இழுபட்டு வலிப்பு வந்தவன் போலாகினான். மனை திரும்பிய பின் ஒருபருவம் அவன் வெளியே வரவில்லை.
மனை நீங்கியவன் குடிகளின் சொற்களைக் கேட்டான். சத்திரத் திண்ணைகளில் அவன் நீலழகனைக் கொல்லும் சதி கொண்டவன் என்றார்கள். எண்திசைத் தோளனின் அணுக்கன். காலைச் சுற்றும் நாகம். அவன் ஒரு துரோகி. கட்டளைகளுக்குப் பணியாதவன். அரசை எதிர்ப்பவன் எனச் சொற்கள் அவன் செவிகளில் உலோகக் குழம்பெனப் படிந்து படிந்து இறுகியது. மதுச்சாலையொன்றில் இளவயதுப் பாணனொருவன் “துரோகம் என்பதும் நிழலில் நிற்கும் நாகம். அதை அறிந்ததும் கொல்வதே வீரம். தமிழ்க்குடி அழிக்க எழுந்தவர் துரோகங்கள் வீழ்த்திய உருகம் வாழ்க” என மதுவெறியில் யாழைக் கையிலேந்திப் பாடினான். அவன் யாழைப் பிடுங்கி மொழிக்கையால் அவன் கழுத்தை நெரித்து அவனைத் தூக்கித் தரையறைந்தான் வாகை சூடன். அருகிருந்த சோதியனும் புலிப்படை வீரர்களும் வந்து அவனை விலக்கி அமைதியாக்கினர். உதடுகளைக் கடித்துக் கொண்டு “வீரம் என்றால் உன் தலைவனிடம் சென்று என்னவென்று கேளுங்கள் அறிவிலிகளே. நிழலில் நிற்கும் நாகம் அவன் தான். அந்த இழிமகன் தான்” என எச்சில் உமிழ்ந்து தெறிக்கச் சொன்னான். அவனது சீறலைக் கண்ட பாணன் அகம் தெளிந்து எழுந்தோடினான்.
சோதியன் வாகை சூடனை பொழுதுள்ள போதுகளில் சந்தித்து அவனுடன் கதைத்தான். எண்திசைத் தோளன் அவனுக்கொரு செய்தி மடலை அனுப்பியிருந்தான். நீண்ட ஓலைக்குவியல் ஒன்று அவனிடம் வந்து சேர்ந்தது. “இனிய இளவலுக்கு, என் ஆவியும் அணுக்கனும் ஆனவனே. உன் நிலை அறிந்தேன். துவளாதே தோழனே. நம் விடுதலையின் கனவுகள் நம்மை விடப் பெரியவை. எனது களங்களை வென்று நான் நீலருக்கு அளித்து விட்டேன். நீயும் யாரென இக்குடி அறியும். சூர்விழியை நீ உடைத்தாய் என அறிந்த போது அது உன் அகத்தை உடைக்கும் சடங்கென உணர்ந்தேன். தசமுகனை அக்காட்டிலேயே விட்டுவிட்டேன். நம் விரல்கள் எதுவரை செல்லுமோ அதுவரை சென்றவை. இப்படையில் அனைவரும் கொலைகள் புரிந்தவர்கள். கொலை நமக்குப் புதிதல்ல. துரோகமும் அவ்வாறே. நானும் துரோகியென எண்ணியவர்களைக் கொன்றிருக்கிறேன். அவர்களில் எத்தனை எண்திசைத் தோளன்கள் வாகை சூடன்கள் இருந்தார்கள் எனத் தெரியவில்லை. கொலை எல்லா விழைவுகளையும் விட மூத்தது இளவலே. அதில் அறம் நோக்குவது இருளில் விழிநோக்குவதைப் போன்றது. இருளில் விழிநோக்கும் கலை பயின்றவன் நீ. நோக்கு. இக்கொலைகளில் எங்கேனும் அறமென ஒன்று எஞ்சுமா. கொலைகள் தமக்கான அறங்களைத் தாமே உச்சரித்து உச்சரித்த மறுகணமே அவற்றை மறுத்து வேறொன்றை உச்சரிக்கும் ஆயிரமாயிரம் நாக்கொண்ட தெய்வங்கள். அவற்றுடன் நாம் பொருத முடியாது. என்னைச் சந்தேகத்தின் நிழலில் கண்ட போதே என் வில் தாழ்ந்து விட்டது வீரனே. நாம் களம் கண்ட நாட்களும் அடித்துண்ட கொழு மான்களும் பாடிய விடுதலைப் பாடல்களும் இக்காட்டிலும் காற்றிலும் என்றும் மிதந்திருக்கும். நீலரின் மேல் என் சினம் இன்னும் தணியவில்லை. ஆனால் நான் அவரை அகமறிவேன் தோழனே. அவர் சுமக்க முடியாத பெருவிசையொன்றால் அழுந்தி நிற்கும் சிறுகல். அதன் ஒவ்வொரு விசையும் அவரைக் கைவிட்டு விட்டன. தோழர்களும் குடிகளும் மெல்ல மெல்ல அவரை நீங்குகிறார்கள். களமறியாக் குடிகள் புலிப்படை வீரன் தனக்கு அணுக்கர்களெனப் பெருமை கொள்கிறார்கள்.
அதிகாரம் நுண்வடிவில் குடிகளிடம் பரவுகிறது. இனிச் சோதரக் கொலைகளை சத்திரத் திண்ணைகள் நியாயம் உரைக்கும். விடுதலை என உச்சரித்த வாய்கள் நாடு என உச்சரிக்கத் தொடங்கிய போதே அதிகாரத்தின் ருசி மிக்க நாவுகள் குடிகளுக்கு முளைத்து விட்டன. நாம் களங்களில் சிந்திய குருதியைப் பாணர்கள் மலர்கள் என்கிறார்கள். மடிந்த வீரர்களை மாவீரர்களென உரைத்துத் தெய்வமாக்கி அவர்களைக் கல்லென ஆக்கினர் குடிகள். துணைவனை இழந்த பெண்கள் மழலைகளை நோக்கி அழுகின்றனர். இரவுகளை ஓசையின்றி அழுத்துகின்றன அவர்களுக்கு எழும் துர்க்கனவுகள். அங்கங்களைக் களத்தில் கொடுத்த வீரர்கள் மனைகளில் ஒடுங்கியிருக்கின்றனர். முதுதாய்கள் சித்தம் பிறழத் தங்கள் மகவுகளின் பெயரை உச்சாடமென உதடுகள் ஒலிக்க நகரலைகின்றனர். எங்கும் எவரும் சந்தேகத்தின் அச்ச நிழல் நிலம் வீழ அலைகிறார்கள். அவை நாகங்களெனப் பின்வருகின்றன தோழனே.
நாம் எண்ணுதற்கரிய விலைகளை விடுதலையின் கண் கொடுத்து விட்டோம். நீலர் வெல்லலாம். வெல்ல வேண்டும். அவ்வெற்றியில் தசமுகனும் சூர்விழியும் இருந்தார்கள் என்பதைக் காலம் மறக்கப் போவதில்லை. பாணர்களின் நாக்குகள் அதிகாரத்தின் கால்களில் புரண்டு புரண்டு ஒட்டுவது. அச்சொற்களைக் கேட்காதே. என்றாவது ஒரு நாள் அனைத்துக் கேள்விகளுக்கும் விடைகள் எழும். உனதும் எனதும் கேள்விகளுக்கும் கூட. அதுவரை நீ காத்திரு. நம் காலத்தில் அதற்கு பதிலில்லையென்றால் அது நிகழும் காலத்தில் நிகழட்டும். சித்தத்தை இழக்காதே. விடுதலைப் பெருந்தீக்கு ஆயிரமாயிரம் நாக்குகள் தோழனே. நம் பொருட்டு மடிந்தவர் நினைவைத் தழல் நடனங்களில் நோக்கியபடி காலத்தை அளக்கிறேன். நீண்டு நீண்டு வானமெரிக்கும் தீ எழுகிறது. அதன் சாம்பல் இந்த ஓலைகளில் ஒட்டியிருக்கிறது. காலம் கனிந்தால் ஏதோவோர் திசையில் சந்திப்போம். அதுவரை வாழ்ந்திரு” அச்சொற்களை எண்திசைத் தோளனிடம் அவன் கேட்டறியாத நிதானமான குரலொன்றினால் அவன் அகம் வாசித்துக் கொண்டது.
மதுப்புட்டி கையிலிருந்து நழுவி வீழ்ந்த போது வாகை சூடன் விழிதிறந்து நோக்கினான். இராப்பிரியன் குப்பியின் கண்ணாடிச் சில்லுகளைக் கூட்டினான். எருவீரன் சிரித்தபடி “நல்ல துயிலா தளபதி” எனக் கேட்டான். பதில் பகராத வாகை சூடன் எழுந்து மதுச்சாலைத் திண்ணைக்கு வந்தான். துயின்றவர்கள் சென்று புதியவர்கள் நிறைந்திருந்தார்கள். தீயிலைப் புகை திண்ணையை மறைத்தது.
அரூபி குளித்து விட்டு ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தாள். மதுச்சாலை வாசலை நோக்கியவள் வாகை சூடனைக் கண்டாள். அவன் மொழிக்கையை நோக்கிய பின் தலையைத் திருப்பிக் குடிகளை நோக்கினாள். அவளுள் சொற்கள் நடுங்கிக் கொண்டும் உடல் குளிர்ந்து காய்ச்சல் எழுவதெனவும் உணர்ந்து ஒடுங்கிக் கொண்டாள். வாகை சூடன் விழிகளால் குடித்திரளை நோக்கிய பின்னர் வீதியால் இறங்கி மனை நோக்கி நடக்கத் தொடங்கினான். சுற்றிலும் களிக்கூச்சலில் பெருநடனமாடும் குடிகளின் பேராரவாரத்தின் நடுவே ஒரு இருட் கோடென அவன் பாதை விழிகளுக்குத் துலங்கியது. புன்னகைத்தபடி தள்ளாடித் தள்ளாடி நடந்தான். அவனும் ஆடுகிறான் என எண்ணி அவனை அறிந்த பட்டினக் குடிகள் நகைத்துக் கொண்டனர். இருளில் இருளிலெனப் பாதைகளின் திரைகள் பழக்கத்தில் விலகின.