39: ஆட்டம்

39: ஆட்டம்

நிலவையின் மஞ்சத்தறையில் லீலியா உசையை நோக்கியபடி நின்றாள். “நீலா” “நீலா” என மிழற்றினாள் உசை. பச்சையின் எழிலாலான உசையின் சிறகுகளை நோக்கியவள் கூண்டின் வாயிலைத் திறந்து உசையை உள்ளங்கையில் வைத்துக் கொண்டாள். அகலில் ஏந்திய சுடரென உசை அவள் கரத்தில் நிமிர்ந்து நின்றாள். நிலவை அவளை நோக்கி விட்டு மொழிபெயர்ப்பாளர் பட்டினம் சென்று விட்டார் என்ற தகவலைக் கொணர்ந்த தானகியை சதுரங்கப் பலகையை எடுத்து வரும் படி சொன்னாள். இரு வீரர்கள் துணையுடன் பெருஞ் சதுரங்கப் பலகையும் அதன் ஆடுகாய்களும் மஞ்சத்தில் வைக்கப்பட்டன. தானகி அவற்றைச் சீராக அடுக்கினாள். சதுரங்கப் பலகையைப் பார்த்த லீலியா முகம் விரியச் சிரித்துக் கறுப்பு ஆடுகாய்களின் முன்னே அமர்ந்தாள்.

“வெள்ளை இளவரசிக்குக் கறுப்பு ஆடுகாய்” எனச் சிரித்துக் கொண்டே சொன்னாள் நிலவை. தானகியும் சிரித்து விட்டு “முதலில் இவரைப் பார்த்த போது இவரது தோற்றத்தின் மிதப்பைக் கண்டு அஞ்சினேன். ஒரு நாளில் அரண்மனையில் உசைக்கு அடுத்த அதிகாரம் கொண்டவர் எனத் தோன்றுகிறார்” எனச் சொன்ன போது உசை தலையைச் சாய்த்து தானகி தன் பெயரைச் சொல்கிறாள் எனக் கூர்ந்து நோக்கினாள். பின் தலையை ஆட்டிவிட்டு லீலியாவின் தலைமேல் சென்று அமர்ந்தாள். “வெண்குன்று என நினைத்திருப்பாள்” என நகைத்தாள் தானகி.

சுடுபாலும் தேனும் தீயிலைத் துதியொன்றையும் கொணர்ந்து மஞ்சத்தருகில் வைத்தாள் தானகி. தீயிலைத் துதியைக் காய்ந்த மலர்களைக் கொண்டு நிரப்பி நிலவையிடம் நீட்டினாள். “லீலி நம் விருந்தாளி தானகி. அவளிடம் கொடு” என்றாள் நிலவை. தானகி தயங்கியபடி துதியை லீலியாவிடம் நீட்டக் குறுஞ்சிரிப்பொன்றுடன் துதியைப் பற்றியவள் அதிலிருந்த மரவேலைப்பாடுகளை நோக்கினாள். படுத்திருக்கும் குட்டி யானையின் வயிறு போன்ற துதி. அதன் தும்பிக்கை வாய் பொருதும் இடமென அமைக்கப்பட்டிருந்தது. செம்மண்ணிற வண்ணத்தில் அமைந்த துதியில் மெல்ல விரிந்திருந்த தேவ இலை மலரை முகர்ந்தாள். முகர்ந்து நாசிக்குள் அது விளைந்த மண்ணை அறிந்தாள். இளஞ் செம்பாட்டு மண்ணி முதல் மழை பொழியும் நாளில் விளைந்த முதற் செடியின் கடைசி மலரது. அதன் கனிவும் முதிர்வும் ஒரு முழுச்செடியின் போதைக்கு நிகரானது. அகலில் நீட்டித் துதியை இழுத்தாள். தலையை உயர்த்தி நீள் பெருக்கெனப் புகை நாசியிலிருந்து சுழன்று எழுவதை நோக்கினாள். தீயிலையின் இன்மணம் மஞ்சத்தறையை நிறைக்கத் தொடங்கியது. மூன்று முறை இழுத்துவிட்டு நிலவையிடம் நீட்டினாள். நிலவை துதியை வாயில் பற்றியபடி இடக்கையால் எடுத்தும் வைத்தும் ஊதினாள். லீலியா அவளின் பாவனையை நோக்கித் தன் தொடைகளில் தட்டிச் சிரித்தாள். நிலவை அவளின் குறும்புகளை நோக்கிக் கொண்டு முதல் ஆடுகாயைத் தொட்டாள்.

சதுரங்கத்தில் அரசிகளே முழு ஆற்றல் பொருத்தியவர்கள் என்பதே நிலவைக்கு ஆட்டத்தை அறிய எழுந்த முதல் விசை. அரசனை எளிய குடிகள் என்றே கற்பனை செய்வாள். ஒரு கட்டத்திற்கு மேல் சிந்திக்க முடியாத கடக்க இயலாத எளிய உள்ளங்கள். அரசிகள் கட்டங்களில் எத்திசையும் அலைபவர்கள். வலிமையின் முதன்மை வடிவு. அரசியை இழக்க அவள் என்றும் விரும்புவதில்லை. காலாட் படைகளை புரவித் தளபதிகளை மந்திரிகளை கோட்டைத் தளபதிகளை அவள் பலிகொடுக்கத் தயங்குவதில்லை. சில அரிதான நேரங்களில் அரசனைக் கூட அவள் நோக்குவதில்லை. வல்லமையுடன் அரசி கட்டத்தில் பொருதும் வரை தோல்வியென்பதே இல்லை என்பது நிலவையின் எண்ணம். அவள் ஆடுகாய்களை நகர்த்தும் வரை சிலகணங்கள் ஆடுவெளியை நோக்குவாள். நோக்கிய கணத்தில் அவற்றின் செல்திசைகளை அறிவாள். எதிர்த்தரப்பை முற்றழித்து வெல்வதே அவளின் இயல்பு. தன்னை அழித்து எதிர்த்தரப்பை அழித்துக் கொள்ள அழைப்பாள். சதுரங்க ஆடுகாய்கள் அவளது மொழியென மதியூகிகள் வர்ணிப்பதுண்டு. ஒவ்வொரு அசைவிலும் எதிர்த்தரப்புடன் அவள் சொல்லாடுகின்றாள். சொல்லில் வஞ்சம் மட்டுமேயெனக் களத்தில் நுழைவாள். ஒவ்வொரு அசைவும் ஒரு வஞ்சம். ஒரு வஞ்சத்தை நோக்கிய அடி. அடுக்கடுக்காக நிலைகுலையும் போர்களை நிகழ்த்தி மூளை சிந்திக்க முடியாத திசைகளில் ஆற்றலுடன் எழுந்து வந்து களத்தின் மையத்தில் வெறியாட்டு ஆடுவாள். நீலன் அவளுடன் தோற்பதை மன்னிப்புகளென நிகழ்த்துவான். தாழ்ந்து பணிவான். அவன் வேண்டுமென்றே தாழும் போது சீறலுடன் அவன் ஆணவத்தை நோக்கி ஆடுகாய்களை நகர்த்துவாள். அவன் அரசியை வென்ற பின் நகையுடன் அவன் ஒவ்வொரு கரத்தையும் வெட்டுபவளைப் போல ஆடுகாய்களை வேட்டையாடுவாள். சதுரங்கப் பலகையில் அவளொரு மெய்நிகர்ப் போரை நிகழ்த்துவாள். ஆனால் அதிலிருந்து விலகியும் இருக்கக் கற்றுக்கொண்டிருந்தாள். மெய்க்கு நிகரான வெளியென்பது மெய்யல்ல எனச் சொல்வாள். அரசு சூழ்கையில் சிக்கலான நெருக்கடிகள் எழும் பொழுது சதுரங்கப் பலகையின் இருபுறமும் தானேயமர்ந்து தனக்குள் ஆடிக்கொள்வாள்.

“இந்த ஆட்டத்தில் வெல்பவர் யார் நிலவை” என நீலன் புன்னகையுடன் கேட்ட போது “இரண்டு புறமும் நானே வென்று நானே தோற்கிறேன். என் ஒன்று வெல்லும் போது இன்னொன்று தோற்கும் ஆட்டமிது. வாழ்க்கைக்கு நிகரானது என்று இது ஆகும் தருணம் நானே ஆடிக்கொள்கையில் தான் அமைகிறது” எனச் சிரிப்பாள். அவளின் சொற்களென ஆடுகாய்கள் அவிழ்வதை நீலன் விரும்புவான். அவளது நேர்ச்சொற்களை விட அந்தச் சங்கேதச் சொற்களில் கொல்லும் வாள் நுனி கொஞ்சம் மழுங்கியிருப்பதாகவே எண்ணிக் கொள்வான். அவளது சொற்களில் அவள் ஒரு சதுரங்க ஆட்டத்தை இடைவிடாது நிகழ்த்துகிறாள் என நீலன் அறிந்திருந்தான்.

லீலியாவுடன் ஆடத் தொடங்கிய அரை நாழிகையிலேயே லீலி ஆடுவது வேறொரு வெளியிலிருந்தென்பதை நிலவை அறிந்தாள். நிலவையின் கணக்குகளை அறிந்திராதவள் போல தலையைக் கொடுத்து விட்டு தேளின் கொடுக்கெனப் பின்னிருந்து எழுந்து வந்து விசையுடன் தாக்குவாள் லீலி.
ஒவ்வொரு அசைவுக்கும் முதல் சுடுபாலை ஊதிக் குடித்து விட்டு மெல்லிய சிந்தனை பாவத்தைச் சூடி விரல்களால் மீன் வாலைப் பிடிப்பதைப் போல ஆடுகாய்களைத் தூக்கி நகர்த்தினாள். மெல்ல மெல்ல இருவருக்குமிடையில் ஆடுகாய்கள் உரையாடத் தொடங்கின.

“காலாட் படைகளை ஏன் அழிய விடுகிறாய் நிலவை” என அவளது ஆடுகாய்கள் முன்னின்று கேட்டன. “அழிவதற்காகவே பலம் குன்றிப் பிறந்தவை. அவைக்கு இப்பலகையில் பொருளென இருப்பது ஏதுமில்லை. வரலாற்றின் விசைப் பெருக்கில் காலாட் படைகள் ஒரு திரள் மட்டுமே. அவை என்னை அழித்துக் கொள் என போர்முகம் எழுபவை. ஆற்றலற்றவை” என பதிலளித்தாள் நிலவை.

“உன் மந்திரிகள் ஏன் அரசனைச் சுற்றாமல் அரசியைச் சுற்றியே வாட் கோடுகளென அலைகிறார்கள் நிலவை”

“அரசியே ஆட்டத்தின் சக்தியூற்று. அரசனைக் காக்க ஒரு புரவிப்படைத் தளபதியும் சில காலாட் படை வீரர்களுமே கூடப் போதும். அரசிக்கு அனைத்தும் வேண்டும். அரசி அனைத்தையும் ஆள நினைப்பவள். ஆள்வதன் மூலமே தன் ஆற்றலை களத்தில் ஆடிக்காட்டுபவள். மந்திரிகளும் கோட்டைகளும் அரசிக்கே. அரசன் பொந்தில் வாழும் எலியென எங்காவது ஒளிந்து கொண்டிருந்தால் போதும். ஆட்டம் ஆடுபவளே ஆற்றலைக் குவிக்கவும் நிகழ்த்திக் காட்டவும் வேண்டியவள் லீலி”

“உனது கரங்கள் போர்க்களத்திற்கும் அரசு சூழ்கைக்குமென அங்கும் இங்கும் நிலையற்று அலைகின்றன. ஏதாவதொரு நிலையிலிருந்து நீ ஆட மாட்டாயா நிலவை”

“இரண்டும் போரே லீலி. இரண்டு போரிலும் வெல்பவளே அரசி. களத்திலும் சூழ்கைகளிலும் இணையும் இருபார்வைகளும் ஒன்றை ஆடும் இன்னொரு ஆட்டம். ஒன்று இன்னொன்றைத் தீர்மானிக்கிறது. சொற்கள் போதாத போது போர்கள் பிறக்கின்றன. போரை அழித்துப் போர்கள் தொடர்கின்றன. போரை அழிக்கவும் போர்களே நிகழ்கின்றன. இங்கு ஒவ்வொரு உளத்திற்குள்ளும் போர் நிகழாத நாளே இல்லை. போர் ஒரு உருமாற்றி பூதம். தன்னை ஒவ்வொன்றாக அது உருமாற்றிக் கொள்கிறது. மானுட உறவுகளில் விழைவுகளில் கனவுகளில் சொற்களில் செயல்களில் இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருக்கும் போரே வாள்களையும் கொல்வேல்களையும் விட ஆழமான அச்சமூட்டும் போர்கள். மண்ணில் இப்போர்கள் ஒழியாது. நாம் நமது முழு ஆற்றலுடன் திகழ்வது ஒன்றே போரை வெல்லும் ஒரே வழி. போரை அஞ்சினால் போர் ஒழிவதில்லை லீலி”.

” நான் எனது ஆடுகாய்களைக் காக்க எண்ணுகிறேன் நிலவை. நீ ஒன்றுக்குப் பதில் இன்னொன்றெனக் குருதிப்பலி கொள்கிறாய். அழிக்காமல் இவ்வாட்டம் ஓயாதா”

“அழிவளவுக்கு விசை கொண்ட ஆற்றல் மானுடருக்கு இல்லை. தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொள்ளாதவர்கள் அரிதான யோகிகள் மட்டுமே. பிறர் ஒவ்வொரு நாழிகையும் தம்மில் ஒன்றை அழித்து இன்னொன்றை ஆக்கிக் கொள்கிறார்கள். ஒரு அழிவிலிருந்து இன்னொரு அழியக் கூடிய ஒன்றை உருவாக்கிக் கொள்கிறார்கள். அழிவு அழியும் தோறும் காதலென்றாகிறது. காதலில் நாம் ஆடுவது அழித்துக் கொள்ளும் பித்தின் ஆட்டத்தையே. காதலும் போரும் நிகரானவை அல்ல. காமமும் போருமே ஒப்பிடக் கூடியவை. காதல் முடிவற்ற அழித்துக் கொள்ளல். போரும் காமமும் ஓயும் காலங்கள் அதற்குண்டு. அதன் விசைகளை உடல்கள் ஒழியலாம். காதல் தீராத அழிவில் நெளிந்து கொள்ளும் சோதிப்பெருக்கு. பார்க்கும் தோறும் எழிலாய். அணையும் பொழுது எரிவாய் ஆகுவது லீலி”.

” நீ அழிவைக் காமுறுகிறாயா. நான் அழிவைக் காக்க எண்ணுகிறேன். அழியாமல் எஞ்சுபவற்றிலிருந்து இன்னொன்றை ஆக்கிக் கொள்ள விழைகிறேன் நிலவை”

“ஆகிய அனைத்தும் அழிவிலேயே தமது அழலை மூட்டிக் கொண்டவை. அவை அழிந்து கொள்ளும் காலத்தை நீட்டிக்க முடியுமே ஒழியக் காக்க முடியாது. அவ்வெண்ணமும் தற்செயலான ஒன்றே லீலி”.

“உனது ஆட்டம் அழிவில் எஞ்சுவது. எஞ்சுபவையும் அழிவெண்ணமே கொண்டிருக்கும் இல்லையா நிலவை”

“அதை மானுடரிலிருந்து நீக்க முடியாது லீலி. அவர்கள் அமைதியாக இருப்பது போருக்காகவே”

“உன்னை இப்படி ஆக்கிய விசைகளை நான் அறிவேன் நிலவை. அவை கொடியவை. நீ அவற்றை நீங்க வேண்டும். காத்துக்கொள். ஒரு அன்னையாக நீ உன்னை இழக்கக் கூடாது”

“நான் அன்னையல்ல. குருதிக் கொற்றவை. அன்னையராகும் பெண்கள் அழிவையும் இச்சைகளையும் கருச் சுமக்கிறார்கள். பின்பு அதையே காத்துக் கொள்கிறார்கள். இப்புவியில் அன்னையரே அழிவைக் காப்பவர்கள். அவர்களாலானதல்லவா இப்புடவி”

“நானும் அழிக்கிறேன் உன்னை. உன் ஆணவம் அடங்கும் இப்பலகையில் நிலவை”

“ஒரு பெண் இன்னொரு பெண்ணை வெறுப்பது இங்கிருந்து தான் லீலி”

சதுரங்க வெளியின் ஆடுகாய்கள் நகைத்துக் கொண்டன.

“நீ குருதியை அஞ்சுகிறாயா லீலி”

“நான் குருதியை வெறுக்கிறேன் நிலவை”

“குருதி உண்டாக்கிய சதைப்பாவைகளல்லவா நாங்கள். குருதியை நீ அஞ்சுகிறாய். ஒரு பெண் அஞ்சவே கூடாதது குருதிக்குத் தான். ஆண்களுக்குக் கூட அடுத்த இடம் தான் லீலி”

“உனது குருதியை நீயே அழிப்பாயா நிலவை”

” அழிப்பதை நோக்கியிருந்திருக்கிறேன். அழித்திருக்கிறேன். அழிப்பவரின் உடனிருந்திருக்கிறேன். அழிப்பதைத் தருக்கித்திருக்கிறேன். அறமென்று கொண்டிருக்கிறேன். அதன் வழி அழிவை தெய்வப்பலியென ஏற்றுக்கொண்டிருக்கிறேன்”.

“இந்த ஆட்டத்தை நாம் நிறுத்திக் கொள்ள முடியும். என்னையும் உன்னையும் காத்துக் கொள்ள முடியும். நிறுத்தி விடலாம் நிலவை”

“ஆட்டம் தொடங்கிய பின்னர் நிறுத்த ஒண்ணாது லீலி. நீ அழிய வேண்டும் அல்லது அழிக்க வேண்டும். இரண்டு தெரிவுகள் தான் உனக்கு இவ்வெளியில் அளிக்கப்பட்டிருக்கிறது. அழியும் கடைசிக் கணம் வரை அழிக்கப் போராடு. வெல்லப் போராடு. நீ பெண். வீழ்த்தப்பட முடியாதவளாக நீ ஆகும் போதே அழிவையும் வெல்கிறாய்”

“நான் உன்னிடம் சரணடைகிறேன் நிலவை”

“போரில் சரணடைவதும் தோற்பதும் ஒன்றே லீலி. நீ காத்தவர்களே உன்னை வெறுப்பார்கள். அவர்கள் உன்னை அறிய முடியாது. உன் அறங்களை அவர்கள் எள்ளியாடுவர்கள். நீ அடையும் வெற்றி ஒன்றே இவ்வெளியில் அழிந்தவைக்கு ஏதேனும் மதிப்பளிக்கும். பொருள் கொள்ளும்”

“அழிவை எதன் பொருட்டுப் பொருள் கொள்ள வேண்டும் நிலவை. யாரின் முன் எம்மை நிலைநாட்டியாக வேண்டும்”

“நமக்கு நாமே தான் லீலி. நாம் இக்கணம் என எண்ணும் நாமல்ல நாம். ஒவ்வொரு கணமும் வீழ்ந்தும் எழுந்தும் குலைந்தும் மாறியும் வரும் ஆடிப்பெருக்குகள். ஒன்று ஏற்றுக் கொள்வதை இன்னொன்று மறுக்கும். வெற்றியும் நிலையற்றதே. ஆனால் பொருள் கொண்டது. வாழ்க்கைக்கு எப்படிப் பொருள் கொள்வதென்பதே இன்றைக்குள்ள ஆதாரமான சிக்கல்”

“அதற்கு இந்தப் போர்க்களத்தில் என்ன மதிப்பு நிலவை. வாழ்க்கைக்கு என்ன பொருள் அமைந்திடல் கூடும்”

“பொருளற்ற ஒன்றிற்குப் பொருளளிக்கும் விளையாட்டு வாழ்க்கை என அறியப்படுகிறது. இந்தக் கேள்வியை ஆடாதவர் எவருமில்லை. அவரவர் கைபிடிக்கு எது வாய்க்கிறதோ அதுவே பொருள். நான் ஆகும் போதே என் ஆசையும் இச்சையும் விழைவும் உண்டாகிவிடுகின்றன. நான் அழியும் போது அவை இன்னொருவரைத் தேர்கின்றன. நான் அடைந்தேனா இழந்தேனா என்பதே கணக்கு”

“இழப்பதன் மூலம் அடைய முடியாத பொருளா வாழ்க்கை நிலவை”

“வாய்க்கலாம். துறவிகளைப் போல. நாம் எளிய பெண்கள் லீலி. மந்திரக்காரியானாலும் அரசியானாலும் அதுவே நம் நிலை. நாம் துறக்க வைத்திருப்பவை ஏற்கனவே எம்மிடமிருந்து பிடுங்கப்பட்டவை. அவற்றைத் துறப்பதென்பது சரணடைதலே. நான் வென்றே தீருவேன் என்ற விசை தான் பெண்”.

“நான் உன்னை வெல்வேன் நிலவை. அழிப்பதற்கும் காப்பதற்கும் வேறு வேறு பொருளுண்டு”

“நீ இரு நாழிகைகள் என்னுடன் ஆடிக்கொண்டிருக்கிறாய். அதன் பொருள் அறிவாயா. இந்தப் பட்டினத்தின் மதியூகிகள் கூட ஒரு நாழிகை என் முன் நின்றிருக்க மாட்டார்கள். உனது விசையை நான் அறிகிறேன்”

“நான் உன்னுடன் சொல்லாடவே இதைத் தொடர விரும்பினேன். அந்த விருப்பின் விசையே உன் நுட்பங்களை அவிழ்த்தறியும் விழைவை அளிக்கின்றன. காதலைப் போல”

“காதலில் உள்ள பெண் மட்டுமே என்னுடன் நின்று பொருத முடியும். உனை அறிகிறேன். விழைவுகளின் எல்லைகளுக்கு அப்பால் நின்றிருக்கும் பெண்ணின் ஒற்றையுணர்வு காதல். அதற்கு அறியா நுட்பங்களை அவிழ்க்கும் திறனிருக்கிறது. ஆனால் போரிலேயே தான் நாம் நின்றிருக்க முடியும். போரே காதல் நிகழும் ஆடல்”

“அது என்றைக்கும் முடிவடையாத போரா”

“ஆடல் முடிந்த பின்னர் எஞ்சும் அதிர்விலும் ஒரு போர் நிகழும். ஆடியது என்ன என எஞ்சும் வியப்பிலும் ஒரு போர் நிகழும். மானுடர் போர் விலங்குகள் லீலி. இப்பலகையில் குருதியற்று நிகழும் போரே புறத்தில் குருதியள்ளிக் குடிக்கிறது”.

“எனக்கு இந்தப் பலகை அச்சமூட்டுகிறது நிலவை”

“அச்சமற்ற ஒன்றை நீ காதலிக்க முடியாது லீலி”

ஆடுகாய்கள் கலைந்து புரண்டு உரக்கச் சிரித்தன. நிலவை ஒவ்வொன்றாய் வீழ்த்தியபடி லீலியாவின் அரசனின் முன் நின்றாள்.

“எவ்வளவு பலவீனமானவன் அரசன் லீலி. அவனைக் காக்க எத்தனை இழப்புகள். இழந்த பின் எஞ்சும் அவன் களத்தில் வீழ்த்தப்பட முடியாதவன் என நிற்கிறான். இந்த ஏற்பாட்டை வெறுக்கிறேன்”.

“அரசன் எளிமையானவன் நிலவை. அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கனவு மட்டுமே உண்டு. அரசியே கனவை ஆக்குபவள். வெற்றியடைந்தே ஆக வேண்டியது அரசிகள் கொள்ளும் விருப்பு. ஆண்கள் அவர்களின் ஆசைகளின் முன் ஒரு கட்டத்தில் சிக்கிக் கொண்டவர்கள். அதன் மேல் அவர்களுக்குக் கனவுகளும் இல்லை”.

“ஆயிரமாயிரம் ஆண்டுகள் பெண்களே கூடுகளைக் கனவு கண்டவர்கள் லீலி. ஆண்கள் அதன் பணியாட்கள். ஏற்கும் பொருட்டு இவ்வெளியில் நின்றிருக்கும் ஒரு எல்லைக் கல். அவன் பணியை முடித்து அவளிடம் திரும்பியாக வேண்டும். அவள் பலகை திரும்பவும் இன்னொரு கனவுடன் ஒருங்கியிருக்கும். ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்யப்பட்டு அடுக்கப்படும் மனை போல அவள் அகம் மீண்டும் மீண்டும் ஒருங்கியெழுவது. ஆண் அதற்குள் நுழைபவனும் வெளியேறுபவனும்”

“நீ ஆண்களை வெறுக்கிறாயா நிலவை”

“அவர்களின் எளிய கனவற்ற வாழ்வை வெறுக்கிறேன். ஆண்களின் விழைவுகள் கருப்பையால் உண்டாகுபவை. அங்கிருந்து அவன் அள்ளுபவை எவையோ அவன் அவ்வளவு தான். பெண் கருப்பை அல்லவா லீலி”.

“ஆண்களை மகவுகளாக எண்ணியே ஒவ்வொரு குற்றமும் மண்ணில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மன்னிப்பு அளிக்கப்படுகிறது. பிழைகள் பொறுக்கப்படுகின்றன”

“ஆண்கள் பெண்களின் மன்னிப்புகளின் மேல் முளைத்த விதைகள். மன்னிப்புகள் அளிக்குமிடத்தில் இருப்பதே பெண் இப்புடவியை ஆளும் அரியாசனம் நிலவை”

“நீ மன்னித்திருக்கிறாயா லீலி”

“ஒவ்வொரு நாளும் யாரையோ எதற்கோ மன்னித்துக்கொண்டு தான் இருக்கிறேன். கைமருத்துவமென அக்களிம்பைப் பூசிக்கொள்ளாமல் விழி துயில இயலாது”

“எனது தேகம் அக்களிம்பு லீலி”

“உன்னைத் தொட்ட போது அதை உணர்ந்தேன். உனது விழிகளில் உள்ளவள் அன்னை. அன்னையின் விதிகள் அறங்களுக்குப் பொருந்தாது நிலவை”

“அறிவேன். அவ்விதியே நம் குழவிகளை ஆளும் விசைகள். அதை அவர்கள் அறியும் போது இக்களத்தை வெல்கிறார்கள். அன்னையின் விதி. குழவியின் பொருட்டு எதையும் விழையும் விசை லீலி”

“அறம் என்றால் என்ன நிலவை”

“இந்த விளையாட்டை ஆடும் விதிகள் லீலி. அதற்கு வெளியே அவைக்கும் பொருளில்லை. களமே விதிகளை ஆக்கும் வெளி. இப்பலகையின் களம் அதற்குரிய அறங்களை உருவாக்கிக் கொள்வது போல் புடவி தன் விதிகளை ஆக்கிக் கொள்கிறது. அன்னையரின் கருப்பைகள் சுமந்து பெற்ற குழவிகள் களங்களை மாற்றும் தோறும் விதிகளை மாற்றி வைக்கிறார்கள். இங்கு ஆட்டம் நிகழும் என்பது மட்டுமே மாறாநியதி லீலி. அரசிகள் வல்லமையை ஒருக்கிக் களத்தைக் காக்க வேண்டும் அது இயற்கையின் நெறி. கருப்பையில் தான் அறங்களும் பிறக்கின்றன லீலி”

“நாம் இந்தச் சுழல்விலிருந்து ஒழிய முடியாதா”

“கருப்பையின்றிக் குழவிகள் பிறக்கும் காலத்தில் ஆகலாம்”

“உன் மேதமை கொல்தெய்வங்களுக்குரிய கூர் வாளென முன்னிற்கிறது நிலவை. சொல் தாழ்ந்து உன்னிடம் தோற்கிறேன்”

“காதலில் பெண்கள் அடைவதில்லையே ஒழியத் தோற்பதில்லை லீலி”

இருவரும் சதுரங்கப் பலகையை நோக்கிச் சிரித்து ஒருவர் முகத்தை இன்னொருவர் நோக்கினர். தானகி நிகழ்வது புரியாமல் விழித்து நின்றாள். உசை எழுந்து மஞ்சத்தறையைச் சுற்றி நிலவையின் தோளில் வந்தமர்ந்தாள். பலகையை நோக்கித் தலையைச் சாய்த்துச் சாய்த்து வெட்டினாள். தீயிலைத் துதியை நிரப்பி லீலியாவிடம் நீட்டினாள் தானகி. அவள் துதியை வாயில் வைத்தபடி தன் தொடையில் தட்டிச் சிரித்தாள். நிலவை இருவரின் அரசிகளையும் எடுத்து களநடுக் கட்டத்தில் வைத்தாள். உசை எழுந்து பறந்து கூட்டில் சென்றமைந்தாள். லீலியா மெல்ல எழுந்து உடலமைவைக் குழைத்து நெட்டி முறித்தாள். பின் நிலவையின் வலக்கரத்தைத் தன் இடக்கரத்தால் தூக்கி அவள் விரல்களை நுதலில் வைத்து ஒற்றிப் புன்னகைத்தாள். நிலவை பேரிதழ்களில் சூடிய மலரென அவிழ்ந்து சிரித்தாள்.

TAGS
Share This