40: ஆடுகாய்கள்
ஆட்டம் முடிந்ததும் லீலியா செலினியைக் கவனிப்பற்கென தானகியுடன் சென்றாள். நிலவை எழுந்து நின்று சதுரங்கப் பலகையை நோக்கினாள். இரு அரசிகள் கட்டத்தின் நடுவிலே வீற்றிருந்தார்கள். சுற்றிலும் ஆடுகாய்கள்.
நீலனுடன் சதுரங்கம் விளையாடுவது நிலவைக்கு சொல்லாடும் மகிழ்ச்சியளிப்பது. அவன் சமமான எதிரி. இரண்டு சமமான எதிரிகள் சந்தித்துக் கொள்ளும் போது தான் ஆடுகாய்கள் புன்னகைத்துக் கொள்கின்றன என நீலன் சொல்லுவான். அவன் இயல்பைப் போலவே சலிக்காமல் விளையாடுவன். அவன் எண்ணியதை அடைய அனைத்து ஆடுகாய்களையும் ஒருக்கி முன்னகர்த்துவான். அவனுடையது இயற்கையான போர் விழைவு. அடைவதின் ஆனந்தம். வெல்வதன் நிறைவு.
அவனது விளையாட்டின் நுட்பங்கள் கணம் தோறும் மாறுவது போல் தோன்றினாலும் அவனுக்குள் உள்ள உள அமைப்பை நிலவை அறிவாள். அது தோற்றுக் கொண்டிருக்கும் சிறுவனின் பிடிவாதம். எதிர்த்தரப்பை ஆடுகாய்களென மட்டும் எண்ணும் அகம். விதிகளுக்குள் எவ்வளவு மீற முடியுமோ அவ்வளவு மீறுவது. புலனைக் குவித்துத் தன் இலக்கை அடைவது.
நிலவைக்கு அப்பலகையில் காக்கப்பட வேண்டியவள் அவள் மட்டுமே. அவளைக் காப்பதன் மூலம் ஆட்டம் வெல்லப்பட்டால் போதும். அவளை இழந்து ஒரு ஆட்டத்தை அவள் ஆடுவதில்லை. அவளது ஆடுகாய்கள் அவளது விலகலின் குறிநிரப்பிகள். அவை எங்கு அமைகிறதென அவள் ஒரு சொடுக்கில் நோக்கி விட்டு மண் வாரித் தூற்றும் மூதன்னை என களநடுவே காய்களை அள்ளி வீசி வருவாள். எஞ்சுவது எதுவுமல்ல எனப் போரிடுவாள். ஆனால் அவளுள் எஞ்சும் ஒரு எண்ணமே அவளது விசை என நீலன் அறிந்திருந்தான். அது அவள் தான். களத்தில் அரசியை வீழ்த்தி விட்டால் அவள் நிலைகுலைந்து விடுவாள். ஆனால் அவளது அரசியை யாரும் எப்பொழுதும் வீழ்த்தியதில்லை. களம் நடுவே சிம்மமெனத் தோன்றுவாள். அழிப்பாள். குகை திரும்புவாள். மீண்டும் வேட்டைக்கென வெளியெங்கும் அலைவாள். அவள் ஆடுகாய்களை அசைக்கும் தோரணை மெய்ப்புரவிகளும் மந்திரிகளும் களம் சென்று போரிடுக என ஆணையிடுவது போல் தோன்றும்.
அவளது அரசியை வீழ்த்தும் ஒரு கணம் நீலனின் வாழ்க்கையில் நிகழ்ந்தது. அந்த நாளை நிலவை எண்ணிச் சிரித்தாள். இரு அரசிகள் உள்ள அந்தக் கட்டங்களில் ஒரு நோக்கு உண்டு. எளிய அரசனால் எதிரி அரசியின் முன் கவசங்கள் இன்றி நேரெதிர்ப்பட முடியாது. அரசிகள் ஒருவரை இன்னொருவர் எதிர்கொண்டு கொள்வார்கள் என நினைத்து நகைத்தாள்.
நீலன் ஆட்டத்தின் விசையில் அவளது அரசியைக் கைப்பற்ற ஓயாது முனைந்தான். “ஒருவரின் பலவீனமான பகுதியைத் தேடித் தேடித் தாக்குவது மன்னருக்கு அறமா” எனப் புன்னகையுடன் கேட்டாள் நிலவை. அரண்மனை மஞ்சத்தறையில் உறக்கம் விழிநனைக்காத ஒரு நள்ளிரவில் இருவரும் ஆடுகாய்களுடன் மஞ்சத்தில் அமர்ந்திருந்தனர்.
நீலன் மெல்லிய குறும்புப் புன்னகையுடன் “வெல்வது ஒன்றே போரில் மகிழ்ச்சியளிப்பது என்பது அரசி அறியாததா. வெல்வதற்கு இடையூறாய் இருப்பவற்றை அழிக்க நினைக்கிறேன். இதில் என்ன தவறு” என்றான்.
“இல்லை. போரில் வெல்வதென்பது எதிரியின் அரசனை வீழ்த்துவது. நீங்கள் அரசியை வீழ்த்த முனைகிறீர்கள்” என்றாள் நிலவை.
“ஆட்டத்தில் சக்தி வாய்ந்தவர் அரசியே. அவர் இருக்கும் வரை அரசனை நெருங்க முடியாதல்லவா. அவரை வீழ்த்திய பின் அரசன் ஒரு தோற்பாவை. அரசி ஒழியும் வரை அரசன் பாதுகாக்கப்பட எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன” என நீலன் சொல்லாடினான்.
“அரசிகளை வீழ்த்தி அரசர்களைக் கைப்பற்றுவது பழங்கால முறை மன்னரே. அரசு சூழ்கையின் அடிப்படைப் பாடங்கள் மாறி விட்டன. அரசி ஒரு பலகையின் ஆதார விசையூற்று என்பதை நீங்களே ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இந்தச் சதுரங்கத்தை உண்டாக்கியவரின் கற்பனையை எண்ணிப் பாருங்கள். சக்தியற்ற ஒரு அரசனைக் காக்க பலம் மிக்க அரசி. சதுரங்கம் ஓர் ஆணால் கண்டுபிடிக்கப்பட்ட வாழ்க்கை என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆண்கள் தம்மைக் காக்கும் படைக்கலன்களாகவே அனைத்தையும் கற்பனை செய்கிறார்கள். அவனை விட ஆற்றலுள்ளவர்கள் கூட அவனைக் காத்து மட்டுமே நிற்க முடியும். சதுரங்கத்தில் மட்டுமல்ல அரசு சூழ்கையிலும் அரசர்கள் ஒரு எல்லைக்கு மேல் வரலாற்றை நோக்க முடியாதவர்கள்” என்ற நிலவையின் சொற்களைக் கேட்டு நீலன் சற்றுச் சினத்துடன் “அரசன் என்பது ஆட்டத்தின் மைய விசை நிலவை. அது காக்கப்பட வேண்டியது. ஆடுகாய்கள் அனைத்தும் ஒழிந்த பின்னும் தனித்து எஞ்சுவது அரசனே. அரசன் அத்தனிமையை என்றும் சூடியவன் என்பதை அறிந்த ஒருவனால் சதுரங்கம் ஆக்கப்பட்டிருக்கிறது” என்றான். நிலவையுடன் சொல்லாடிச் சொல்லாடித் தனது சொற்களும் தத்துவ மொழி போல் இருப்பதை எண்ணி நகை எழுந்தான்.
“தனிமையென்பது ஆடுகாய்கள் அனைத்துக்கும் உள்ள பொதுவிதி நீலா. அவை களத்தில் நிற்பதால் மட்டுமே ஓரணியெனத் தோன்றுகின்றன. களத்திற்கு வெளியே அவற்றுக்கிடையே எந்த நெறிகளும் விதிகளும் இல்லை. அரசன் ஆட்டத்தில் நகர முடியாமல் பின்னப்படுவானே ஒழிய அரசியைப் போல் வெட்டி வீழ்த்தப்பட மாட்டான். தன்னை அழித்துத் தலைவனைக் காக்கும் ஒருத்தியாக வாழ்வது அரசிக்கு முக்கியமா. அவள் ஏன் களத்தில் தனித்து நிற்க முடியாதவளாக உருவகிக்கப்
படுகிறாள்” என நிலவை இனிய குரலில் சொல்லாடலை நீட்டித்தாள்.
“அரசியை நான் பலவீனமனாவளாக உருவாக்கவில்லை நிலவை. ஆட்ட விதி அது. ஆட்ட விதிகளை மாற்றும் பொழுது அரசியும் அழிவற்றவளாக கட்டங்களுக்குள் மதிப்பு வாய்ந்தவளாக இருக்க முடியும். நீ ஆடும் பொழுது உன்னிடம் ஒரு முழுப்படையே இருக்கிறது. ஆனால் நீ அரசியை முதன்மையாக ஏன் நினைக்கிறாய். நமக்கு அளிக்கப்பட்ட விதிகளுக்குள் எதைச் செய்ய வேண்டுமோ அதுவாக நாம் மாறுவது இயலக்கூடியதல்லாவா. நீ ஏன் உன்னை அரசனாக நினைத்துக் கொள்ளக் கூடாது. தன்னை அழித்து அரசனைக் காத்துக் கொள்ளுவது அரசியின் இயல்பல்ல நிலவை. அது பெண்ணின் இயற்கை” எனக் கூறினான்.
நிலவையின் இனிகுரலில் மெல்லிய கசப்பு எழுந்தது “ஓம். வேந்தரே. பெண் இயற்கையிலேயே காக்கும் விழைவு கொண்ட உயிர். எல்லா விலங்குக் கூட்டத்திலும் அவ்வாறு தான் என நூல்கள் சொல்கிறன. அந்த விதியை அவளால் மாற்றிக் கொள்ள ஒண்ணாது. அவளே அந்த இயற்கையை ஆக்கிய விதிசமைப்பவள். அதிலேயே சிக்கியும் கொண்டு விட்டாள்.
நான் ஏன் அரசனாக வேண்டும் நீலா. நான் ஏன் என்னை ஆணாக ஆக்கிக் கொண்டு இக்களத்தில் நின்றிருக்க வேண்டும். ஆண் பலம் பொருந்தியவன் என்பதாலா. ஆணே ஆளும் மையவிசையென மரபுகள் இருப்பதாலா. நான் ஆண்கள் வெறுக்கும் பெண்ணாகவே நின்று இம்மண்ணை ஆளக் கூடாதா. இயலாது நீலா. பெண் ஓர் இரங்கி. அவள் எவ்வளவு விசை கொள்கிறாளோ அவ்வளவு விசை இழப்பவளும். நிலையற்ற சிந்தனைப் பெருக்கில் அவள் உளம் ஒரு சருகிலை. அவள் ஆளும் அரசில் ஆண்களால் வாழ முடியாது. ஆண்கள் ஆளும் அரசில் பெண்களால் வாழ முடியாததைப் போல”
நீலன் மூச்சை ஆழ இழுத்து விட்டான். “நிலவை நீ ஆடுகாய்களை மெய்யாக எண்ணிக் கொள்கிறாய். அதுவொரு விதித்தொகுப்பு மட்டுமே. இது பெண்களின் பிரச்சினை. சொற்களை மெய்யாகக் காண்பது. மிகையாகச் சிந்திப்பது. அதில் தீராது உலைவது. அதன் வழி தன்னை இரங்கி எனும் நிலையில் தக்க வைப்பது. சலிப்பூட்டும் சுழற்சி அது. அதைப் பெண்ணால் மீற முடியாது. அது அவளே ஆக்கிக் கொண்ட சொந்தப் பிடிகாப்பு. இரண்டாவது நினைவுகள். பெண்கள் எதை ஞாபகம் கொள்கிறார்கள் என்பதே அவர்களின் சிந்தனையின் மையப்பின்னல்களை இழைத்திருக்கும் நரம்புகள். அவர்கள் கெடுதியானவற்றை இழப்பை அளித்தவற்றை மறப்பதில்லை. ஒரு வகையில் அது பாதுகாப்பு உணர்வு என்றாலும் அதுவே மிகையான உழல்வையும் உளத்திற்கு அளிக்கிறது. பெண்கள் உணர்வுகரமாக உச்சமானவர்கள். ஆகவே பலவீனமானவர்கள்” என்றான்.
நிலவை கசப்பின் புன்னகையில் மேலும் நெளிந்து ஆட்டத்தில் மெல்லத் தொய்வடைந்து சொற்களில் மூழ்கினாள். “நீலா, பெண் காதலின் விழைவு. ஆண் காமத்தின் விழைவு. இரண்டு சந்திக்க முடியாத எல்லைகள் அவை. ஆண் கற்பனை செய்து கொள்ளும் காதல் பரஸ்பரமற்றது. அது அவன் சார்ந்த ஒன்று. ஆகவே அவனால் அதில் காயமின்றி வெளியேறிவிட முடிகிறது. காயம் ஏற்பட்டாலும் அது நிலைத்திருப்பதில்லை.
பெண் நினைவின் விலங்கு. அவள் ஒவ்வொரு பொருளிலும் பூவிலும் புள்ளிலும் நினைவுகளைச் சேகரிக்கிறாள். அது அவளது களி. அதுவே அவளது சிறையும். ஆண் காமத்தினால் விசையூட்டப்படுவதால் அது அழியக் கூடியதும் கைவிடக் கூடியதுமாக இருப்பதனால் அவனால் அதை எளிதில் கடக்க முடிகிறது. நினைவாற்றலும் முற்றிலும் ஒருவரது விழைவுகளினால் தீர்மானிக்கப்படுவது. ஆணுக்குக் காமமும் புடவியும் பெண்ணுக்குக் காதலும் வாழ்வும். இந்த ஆட்டம் சமனற்றது. யாரேனும் இதன் விதிகளை மாற்ற ஒண்ணுமா எனவும் தெரியவில்லை.
பெண்கள் உணர்வுகரமாக உச்சமானவர்கள். ஆகவே பலவீனமானவர்கள் என்றாய். ஆண்கள் உணர்ச்சிகரமாக உச்சமானவர்கள். ஆகவே பயனற்றவர்கள். ஆண்களின் வாழ்வில் களியே முதன்மையான மகிழ்வு. பெண்களுக்கு அது பொறுப்பின் நிறைவு. உணர்வும் உணர்ச்சியும் தீயும் சாம்பலும் போன்றவை. உணர்வு எதிலாவது பற்றிக் கொண்டால் தான் சாம்பல் எஞ்சும். உணர்ச்சிகள் காற்றில் அலைக்கழியும் சாம்பல்கள் நீலா. ஆண்களைப் போல”.
“ஆண்களின் அகத்தை எளிமை நிரப்புகிறது நிலவை. அவன் இளம் பிள்ளை போல அன்றாடத்தின் தித்திப்பை விரும்புகிறான். அதன் இனிமையை வாழ்வாக்கிக் கொள்ள விழைகிறான். அவன் நிகழும் காலத்தின் குழவி. பெண் கடந்த காலத்துக்குரியவள். குகையிலிருந்து ஒலிப்பது போல் அவளின் சொற்கள் கேட்பது அதனால் தான். உணர்ச்சிகரங்கள் ஆணின் அன்றாட இனிமையை அறியும் புலன் கொம்புகள். அவற்றை அவன் உளமாக ஆக்கிக் கொண்டிருக்கிறான். அதுவே அவனது பலமுமாகப் புடவியில் நிலை பெற்றிருக்கிறது. பெண்களின் உணர்வுபூர்வமான உளம் ஆழத்தில் உணர்ச்சிகரமானது என நினைக்கிறேன். என்னால் அவர்களின் அகத்தை மதிப்பிட முடிவதில்லை.
ஒரு அரசனாக நான் அறியும் பெண் நீ சொல்வது போலவே பொறுப்பானவள். பொறுப்பின் நிறைவில் செயல்களை ஆற்றக் கூடியவள். அவள் ஆழுள்ளம் ஒன்றை அடைவதென எண்ணிவிட்டால் அவள் இடைவிடாது அதை நோக்கியே செல்கிறாள். அதே நேரம் தானே தனித்து மகிழ்வறியாதவள். அவள் பிறிதொன்றால் மகிழ்வடையும் நிலையில் தன்னை வைத்துக் கொள்பவள். அதனாலேயே அவளுக்குச் சொற்கள் ஆடுகாய்களெனத் துணை வருகின்றன. சொற்போரில் வெல்லப்பட முடியாதவர்களாகப் பெண்கள் அமைவதால் தான் அரசு சூழ்கையில் பெண்களை அனுமதிப்பதில்லை” என நகைத்துக் கொண்டு சொன்னான் நீலன். அவனது எளிய அம்புகளைக் கண்டு சிரித்தாள் நிலவை.
“ஓம். உங்கள் மதிசூழ்கையாளர்கள் என்னைக் கண்டு அஞ்சுவதை அறிவேன். ஆனால் நீங்களோ ஒவ்வொரு பெண்ணையும் கண்டு அஞ்சுகிறீர்கள்” என உரக்கச் சிரித்தாள். சிரிக்கும் போது மேனி குலுங்கி எழிற் கணமொன்று மின்னியது. “பெண்கள் தனித்து மகிழ்வறிய முடியாதவர்கள் என்பது மெய்தான் நீலா. உலகை ஆக்கியவள் அவள். அவள் தனித்திருக்க விரும்பியிருந்தால் புடவியில் உயிர்கள் தழைத்திருக்காது. பேணப்பட்டிருக்காது. வளர்ச்சியிருந்திருக்காது. அவளே மானுடர் எனும் கூட்டை இழைக்கும் நெய்நூல். தனித்து மகிழ்வதென்பது என்ன நீலா. துறவியரையும் சித்தர்களையும் போலவா. பெண் தனித்து மகிழ்வடைந்திருந்தாள் என்றால் துறவிகளும் சித்தர்களும் மண் நுழைந்திருக்கவே இயலாது. அவள் புடவிக்கு மானுடர் வரும் வாசல் அல்ல நீலா. அவளே புடவி. ஆகவே தான் அவளைக் குடிகள் கொற்றவையெனவும் அன்னையெனவும் நாகதேவியெனவும் வணங்குகின்றனர். ஈசனின் உடலில் உமையவள் ஒருபாதியென அமைவதும் அங்கனமே. அவளிலிருந்தே உயிராற்றல் பெருகுகிறது. எழுதப்பட்ட நூல்களோ காவியங்களோ முழுதும் வகுத்துவிட முடியாத பேராற்றலாக பேரன்னையாகப் பெண்கள் ஆகுவதும் அப்படியே. ஆனால் அதுவொரு சிறை நீலா. கருப்பை குழந்தைக்குப் பாதுகாப்பானது. அன்னைக்குத் தீங்கானது. பெண்ணின் கருணை கருப்பையின் இருட்டில் தோன்றுவது. அதில் தழைக்கிறது வையம்”.
நீலன் அவளது சொல்லாடலிலிருந்து விலகி ஆட்டத்தில் அவளது அரசியை வீழ்த்துவதற்கு ஒரு கட்டம் முன்னிருந்தான். குறும்பும் சிரிப்புமாகக் கைகளைக் குழைத்துக் கொண்டு சதுரங்கப் பலகையை நோக்கியிருந்தான் நீலன். நிலவை சொற்களில் நின்று கொண்டே அதை நோக்கினாள். “பெண்ணை வீழ்த்தும் விழைவை ஆணால் என்றும் கைவிட முடியாது நீலா. இதோ நீ என் அரசியை அழிக்க முன்வந்து விட்டாய். உனக்குள் இப்போது எழும் விசை தான் என்ன நீலா. எந்தக் கரம் என்னை அழிக்கச் சொல்லி உன்னில் எழுகிறது” என்றாள்.
நிலவையின் சொற்களால் நீலன் சோர்வடைந்தவன் போல கரங்களை இருபுறமும் ஊன்றிக்கொண்டு சாய்ந்து இருந்து கொண்டு அவளை நோக்கினான். “அறியவில்லை நிலவை. இதைச் செய்யக் கூடாதென்பதை என் சித்தம் நன்கறியும். உளம் ஆழத்தில் கூட அதை அறியும். ஆனால் எக்கணம் என்னை உன் அரசியை அழிக்கும் கரத்தை என்னில் உண்டாக்கியது என்பதை நோக்க நோக்க அங்கு இருள் தான் தெரிகிறது. ஒருவேளை அந்த இருட்டே ஆணாக இருக்கும். யாரறிவார். உன்னை அழிப்பது என்பது என்னில் எஞ்சியிருக்கும் கருணையை அழிப்பது நிலவை. இப்போரில் நான் அழித்து அழித்து எஞ்சுவது ஒன்றுண்டென்றால் அது மானுடரை உடல்களாக அன்றி எங்கோ ஒரு கணத்தில் அவர்களில் கருணையும் பிறக்கிறது. அக்கருணை போரின் விதிகளுக்கு எதிரானது. கருணையுள்ளவன் வனம் புகுந்து துறவடைய வேண்டியவன். அல்லது இல்லறத்தான் ஆக வேண்டியவன். நான் போரை முற்றறிவதென்பது முழுதழித்து மட்டுமே நிலவை. போர் முழுதும் அழியக்கூடியது. மீண்டும் ஆகவும் கூடியது. அதை அழிப்பதற்கு அஞ்சுபவன் போரை அறிய முடியாது. நான் எனது எல்லையை அறியும் விசை என இக்கணம் என்னை உணர்கிறேன் நிலவை”.
நிலவை அவனது முன்னகர்த்துகையை முறியடித்துத் தன்னை ஆட்டத்தின் மையக் களத்தில் பொருதினாள். நீலன் அதை எதிர்ப்பார்க்காதவன் என பலகையையும் அவளையும் நோக்கிய பின் சிரித்தான். ” பெண்களை நான் காக்கத் தேவையில்லை அரசியே. அவர்கள் வாழ்வை வெல்லும் நுட்பங்களை அவர்களே ஆக்கிக் கொள்கிறார்கள்” என நகைத்தான்.
நிலவை அவனை நோக்கிச் சிரித்துக் கொண்டு “அழகரே. நீங்கள் அழிக்க விழையும் நானல்ல நான். அது நீங்கள். நீங்கள் உங்களின் அகங்காரங்களையும் அற்பத்தனங்களையும் விழைவுகளையும் பொருதும் களம் இவ்வாட்டம். ஆட்டத்தில் நிலையில்லாது குலையும் தோற்கும் பின்வாங்கும் தருக்கப்படுத்தும் எளிய ஆண்மகவைக் கருணையை அன்றிப் பிற எந்த உணர்வினாலும் நியாயிக்கவோ அருகுசேர்க்கவோ முடிவதில்லை. கருணையளவுக்குத் தமக்கு வாழ்வளிக்கும் பிற உணர்வுகள் பெண்களிடம் உண்டா என ஆண்கள் எண்ணிக் கொள்ள வேண்டும்” என்றாள்.
” பெண்ணின் கருணையில் எஞ்சும் சாம்பல் ஆண்கள்” எனச் சொல்லி நகைத்தான் நீலன். “இயற்கை சமநிலையற்ற கற்களைப் பொருத்தி உண்டாக்கப்பட்ட ஒரு பேராலயம் நிலவை. அதில் சமனென்பதே இல்லை. பொருந்தும் இடங்கள் ஒன்றையொன்று அறிந்து கொள்ள வேண்டியது மட்டுமே நிகழும். ஆட்ட விதிகளை மாற்றுவது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்து மலைப்பாறைகள் மண்துணிக்கைகள் ஆவதைப் போல் நீண்ட யாத்திரை கொண்டவை” என்றான்.
“நீலா, காதல் தான் பொருந்தும் இடம். ஆகவே தான் பெண் காதலை எதன் பொருட்டும் கைவிட மறுக்கிறாள். அங்கு ஆணே இல்லையென்றலும் பெண்களின் காதல் நின்றிருக்கும். பெண்ணும் பெண்ணும் கொள்ளும் காதலில் இரண்டு காதல்கள் பெருவிசையுடன் மோதிக்கொள்ளும்.
இரண்டு காதல்கள் துவித முழுமைகள். ஆகவே ஒன்றையொன்று பொருந்திக் கொள்ளாது நீலரே. காதலும் காதலென்றே என்னவென்று தெரியாதவரும் இணைந்தே நீண்ட காலம் காதலை ஆடுகிறார்கள். அவர்கள் ஆட்டத்தில் அறியும் கண்டடைதல்கள் உண்டு. அதுவே புடவியில் காதல். ஆகவே உங்கள் ஆட்டத்தை ஆடுக”. என வலக்கரத்தை ஆணையிடுபவள் போல் தூக்கிச் சொன்னாள். அந்த பாவனையையும் அவளின் பிறவி அரசித் தோரணையும் அவனுள் கனியின் சாற்றில் நா நீட்டும் குழவியின் வாய் ஒன்றை ஏந்தியது. நிலவை அவன் பார்வைக்குள் தெரிந்த குழவியை நோக்கிக் கருணையுடன் புன்னகைத்தபடி அவனது அரசனை வீழ்த்தினாள். தான் தோற்றுவிட்டதை நோக்கிய நீலன் ” என்றாவது உங்களை வீழ்த்த வேண்டும் அரசியே” எனக் குழலைக் கோதியபடி சிரித்தான். “அது நான் விரும்பினால் மட்டுமே அழகரே” என மார்பை மிதத்திச் சொன்னாள் அரசி.