42: இருட் குழவிகள் : 02

42: இருட் குழவிகள் : 02

“மானுடர் தம் சொந்த நிழல்களைச் சந்தேகிப்பவர்கள் கூத்தரே. இளமையில் நாம் எண்ணும் கனவுகள் மெய்போலத் தோன்றுபவை. அணுகும் தோறும் காதல் கொண்ட பெண் காதலைப் பூரணம் என எண்ணுவதைப் போல் தோற்றமளிப்பவை. அவை நீடிக்கும் காலத்தில் அப்பூரணத்தின் விளிம்புகள் கரைவதை நம் அகம் நோக்க மறுக்கிறது. நிலவை விழுங்கும் பாம்பென இருள் மூடிக்கொண்டாலும் எங்கோ அப்பூரணம் நிலை கொண்டிருக்கிறது என உளத்தை ஆற்றுகின்றன. நாம் கனவுகளின் குழவிகள் கூத்தரே. கனவையன்றிப் பிறிதெதையும் தொடர முடியாதவர்கள்” என பாறைகளில் மோதிக்கொண்டிருந்த அலைக்கொந்தளிப்பை நோக்கியபடி சொன்னான் எண்திசைத் தோளன். அவன் விழிகளில் அதே பழைய ஒளியிருப்பதைக் கண்டு இன்னுவகையுடன் அவன் முகம் நோக்கி அமர்ந்திருந்தார் ஏழிசைக் கூத்தர்.

“உங்களைக் கண்டது இன்று என் பேறு நண்பரே. நெடு நாட்கள் நண்பர்களையோ வீரர்களையோ கூட நான் சந்திக்கவில்லை. ஒளிந்து வாழவும் இல்லை. இச் சிறு கிராமத்தில் குடிகளின் மகிழ்ச்சியில் உடனிருக்கிறேன். பெருங் கனவுகள் நம் தோள்களை விடப் பெரியவை. சுமக்க முடியாத எடை கொண்டவை. இப்பாறைகளை அலைத்தழிக்கும் நுரைகளென நாம் இடைவிடாது பெருங் கனவுகளை மோதுகிறோம். எத்தனை கோடி அலைக்கரங்கள் பட்டு ஒரு பாறை கரைகிறது என்பதை அலைகள் அறிய முடியாது. நான் ஓர் அலையென இக்கரையில் அமர்ந்திருக்கிறேன். கடல் மீண்ட சிறு அலையென” எனத் தணிந்த பெருக்குள்ள குரலில் சொன்னான் எண்திசைத் தோளன். அவன் மேனி நிலவொளியில் மெல்லிய மின்னற்பூவனெ அவனைக் காட்டியது. அவன் அகம் எங்கெங்கு அலைகிறதென எண்ண முடியாத சுழல் நீரெனக் குவிந்திருப்பதை ஏழிசைக் கூத்தர் உணர்ந்து சொல்லற்று அமர்ந்திருந்தார். தனக்குத் தானே சொல்லிக் கொள்பவனைப் போலத் தொடர்ந்தான்.

“அசலவை நான் முதலில் கண்டது ஆகுரவத்தையில் அமைந்திருந்த சிங்கைச் சிறைச்சாலையில். அவன் அக்கூட்டத்தில் அமர்ந்திருந்த அனைவரையும் ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்த பின் உணவிடுக எனச் சொல்லித் திரும்பினான். அவனைப் பற்றிய கதைகளைக் கேட்டிருக்கிறேன். கதைகளின் படி முன்னூறு வயதிருக்க வேண்டியவன். ஆனால் தோற்றத்தில் இளையவன். உடலில் போர் வீரன் எனச் சொல்லச் சில அம்சங்களே இருந்தன. அவன் விழிகளில் கனிவு இருந்ததை நோக்கினேன். அது ஓர் எளிய கனிவு. வளர்ப்பு விலங்குகளிடம் மானுடருக்கு இருப்பதைப் போன்றது.

ஏழு நாட்கள் கழித்து மீண்டும் அவனைக் கண்டேன். இருளில் தீப்பந்தங்களுடன் வந்தான். என்னை அழைத்து வரச் சொல்லி ஆணையிட்டான். இருநூறு கைதிகள் இருந்த சிறைக்கூடத்திலிருந்து என்னை மட்டும் அழைத்தான். காயம்பட்டிருந்த என் வயிறு அழுகும் பழத்தைப் போலக் குழைந்து கொண்டிருந்தது. சிங்கை மருத்துவர்கள் கட்டிய பச்சிலை ஒளடதங்கள் கரைந்து சதையானது போல் தோன்றியது. வலியுடன் நடக்க முடியாமல் சென்று அவன் முன்னே நின்றேன். அவன் தமிழ் கிளிகளுடையதைப் போல் தோன்றியது. ஓரிரு சொற்கள் பேசினான். ” உங்களது பெயர் என்ன” எனக் கேட்டான். நான் “அதிர்வேலன்” எனச் சொன்னேன். உரக்க நகைத்த பின் என்னைக் கூட்டிச் சென்றான். சிறையிலிருந்து புரவிகள் பூட்டிய தேரில் நான்கு மலைக்காவலர்கள் உடனிருக்க ஒரு இரவு நெடும் பயணம்.

நான் அறியாத குன்றுகளைக் கடந்தேன். காற்றின் வாசனைகள் வேறு ஏதோ நிலத்திற்குள் அழைத்துச் செல்லப்படுபவன் போல உணர்ந்தேன். தீயிலை உருண்டைகளை என்னிடம் அக்காவலர்கள் கொடுத்தார்கள். மயக்கிலேயே என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சி அவற்றை என் மார்பாடைக்குள் மறைத்து வைத்துத் துயில்வது போல் நடித்தேன். ஒருகணம் உறக்கமில்லை. வலியை நோக்கி நோக்கி உறக்கத்தை விரட்டினேன். அன்று தான் உன் இறுதிநாள் என்பது போல் உறக்கம் என்னைத் துரத்தி வந்தது. பாதி விழி திறந்து நோக்கும் பொழுதெல்லாம் காவலர்கள் என்னைக் கொல்ல வேல்களை உயர்த்துவது போல உளமயக்கு எழுந்தது. அவர்கள் நான்கு மலைகளென என்னைச் சுற்றி நின்றனர்.

ஆகுரவத்தைச் சிறைச்சாலையைத் தாக்கி அதிலிருக்கும் புலிகளை மீட்பது தான் எனக்கிடப்பட்ட ஆணை. கடுமையான சமர். எங்கள் தரப்பில் ஏராளமான இழப்புகள். சிங்கை வீரர்கள் படையொன்று எமது தாக்குதல் பொழுதில் ஆகுரவத்தையைக் கடந்து இடாவத்தைக்குச் சென்று கொண்டிருந்தது. போரொலிகள் எழ இணைந்து கொண்ட அப்பெரும் படை தேனிக்கூட்டில் எரிகல் விழுந்தது போல் எங்களை முற்றழித்தது. எஞ்சியது அறுபது வீரர்கள். எங்களைப் பிடிகாப்பிட்டு நாங்கள் மீட்க வந்த வீரர்களுடன் சிறையிட்டார்கள். அங்கிருந்த வீரர்கள் என்னை அடையாளங் கண்டு கொண்டு உற்சாகத்தில் கூக்குரலிட்டனர். நான் மயக்கில் விழ முன் கேட்டது அக்கூக்குரல்களையே. விழித்த போது இருநாளாகியிருந்தது. வயிற்றில் பெரிய புண் ஒன்று எரிந்தது. தேகம் தன் வலிமையை இழந்து காய்ச்சல் கொண்டிருந்தது. தோல்வி உடலை அழிக்கும் பெருநோய். தோற்பவன் உடலும் அகமும் நீங்காத நோயில் வீழ்கிறது.

கனவுகளில் களம் நின்ற தோழர்களைக் கண்டேன். இறப்பை நெருங்கினேன் என உணர்ந்த போது வலி குன்றி மகிழ்ச்சியெழுந்தது. தோல்வியுடன் இருப்பவன் இறப்பதை மகிழ்வான் எனக் கண்டேன். பாணர்கள் சொற்களை மறந்தேன். மண் கண்ட மாவீரன் என என்னைச் சொன்ன சொற்கள் வெய்யிலில் நிற்கும் மாடுகள் விரட்டிக் கொண்டிருக்கும் வால்களென என்னைச் சுற்றுவதை நோக்கினேன். குடிகளை எண்ணினேன். நீலரின் புன்னகை முகம் நினைவில் தோன்றியது. அது ஓர் இனிய கனவு. நாங்கள் இணைந்து பெற்ற முதல் வெற்றியில் நான் பேய்க்களியாடியாதைக் கண்டு தேரில் சாய்ந்தபடி நின்று இளம் நகையுடன் நோக்கிய நீலர் கனவில் வந்தார். அம்முகம் எனக்குக் களிம்பெனத் தோன்றியது. பின் வாகை சூடனும் நானும் மான் வேட்டைக்குச் சென்று உடும்பு பிடித்துத் திரும்பிய போது நானே இதைச் சமைக்கிறேன் வீரர்களே எனச் சொன்ன அரசி இதை இனி ஊரும் மானென அழைக்கச் சொல்லிப் பாணர்களைச் சித்திரவதை செய்யலாம் எனக் கூறி நகைப்பெழுந்த நாள் நினைவில் விரிந்தது. அரசியின் கனி சொற்கள் என்னுள் அக்கையென அவரைத் தோன்றச் செய்வது. குடிலில் ஒவ்வொருவரும் அவருக்கு மகவே. ஆடற் சித்தரும் அவருக்கு ஒரு மகவெனவே முன்னிற்பதாய் தோன்றும். இனிய கனவுகள் மரணத்தறுவாயில் தோன்றும் என எண்ணி மகிழ்ந்தேன்.

பெருங் குன்றுகள் சூழ்ந்த வனவாவி எனும் ஊருக்கு என்னை அழைத்துச் சென்றான் அசல. அது அவனது தந்தையின் கிராமம் எனச் சொன்னார்கள். அங்கிருந்த மருத்துவர்கள் என்னை இரு கிழமைகள் நோக்கினர். பழைய பச்சிலைக் கட்டுகளை அவிழ்த்து இருநாட்களுக்கு ஒருமுறை புதிய ஒளடதங்களை ஊற்றிக் கட்டுகளை இட்டனர். கொல்லப்போகிறவனுக்கு மருத்துவம் பார்க்கப் போவதில்லை என அறிந்து தீயிலை உருண்டைகளை விழுங்கி மயக்கில் கிடந்தேன்.

கனவில் நாகங்களும் சிம்மங்களும் புரியும் போர்கள் எழுந்தன. ஒவ்வொரு முறையும் சிம்மங்களே நாகங்களின் கழுத்தைக் கூர் நகங்களால் கீறிக் கொன்று வெல்வதாக அக்கனவுகள் விரியும். நாகங்கள் பெருஞ் சீறலுடன் பாதாள வாயிலிருந்து படைகொண்டு இருள் நகர்ந்து வருவது போல் சிம்மங்களின் வனங்களுக்குள்ளும் அரண்மனைகளுக்குள்ளும் கோடி கோடி நாகங்களென நுழையும். ஆயிரமாயிரம் சிம்மங்கள் பிடரி சிலிர்த்து கர்ஜித்து வேர்களைத் தட்டி விட்டு போவது போல் நாகங்களை ஒரே வீச்சில் விசுக்கியபடி நடந்து செல்லும். வாயின் பெரும்பற்களில் விடமும் குருதியும் ஏறிநிற்க சிம்மங்கள் சிரிப்பது போல் தோன்றும். ஒரு கனவில் அசலவைக் கண்டேன். அவன் அப்பெரும் சிம்மங்களின் இடையில் சிம்மக் குருளையென நடந்து வந்தான். அங்கு நிகழ்பவற்றை நோக்கிய பின் இறந்து கிடந்த நாகக் குவியலின் அருகே வந்து சுற்றிலும் பார்த்தான். அடிபட்டுக் குற்றுயிராய்க் கிடந்த நாகமொன்றைத் தன் பற்களில் தூக்கியபடி பெருஞ் சிம்மங்களைத் தாண்டி அரண்மனைக்குள் சென்றான். அதனை மஞ்சத்தில் போட்டு விட்டு மஞ்சத்தைச் சுற்றி நடந்தான். கொட்டாவி விடுவது போல் அவன் கர்ஜனை இருந்தது. நாக வடிவில் இருந்த நான் வாலில் துடித்தேன். அருகே வந்து என்னை நோக்கிய பின் காயத்தை நாவால் நக்கினான். விழித்துக் கொண்டேன்.

ஒரு மாதம் கழித்து குடிலில் வந்து அசல என்னை நோக்கினான். “நலமா தளபதி” என நகைத்துக் கொண்டு கேட்டான். நான் தளபதியென்பதை அவன் அறிந்திருந்தான். அதனாலேயே என்னைக் காத்தான் என்பதை உணர்ந்தேன். “நலம்” என ஒரு சொல்லில் பதிலளித்தேன். சிங்கை மருத்துவர்களின் கனிவான மருத்துவ அணுகுமுறையும் அவர்களின் இனிமையான சொற்களும் என்னைத் தேற்றியிருந்தன. உடலில் வலுவந்திருந்தது. என்னுடன் உடன் வந்த நான்கு மலைக் காவலர்களும் என்னுடன் எக்கணமும் ஒரு சொல்லின்றி உடனிருந்தார்கள். அவர்களுக்குள்ளும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. அசலவின் குடியைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களில் அசலவின் அம்சமிருந்தது. ஆனால் அசல சிறியவன். அவர்கள் மலையர்கள். மெளனமான நான்கு மலைகள்.

அசல தன் கிளித் தமிழால் என்னிடம் பேசினான். ஒரு மொழிபெயர்ப்பாளராக சிங்கை வண்டிலோட்டி ஒருவரும் அவனுடன் இருந்தார். அவர் அவனைக் கண்டு அஞ்சுபவனைப் போல உடல் வளைந்து நின்றார். அசல என்னிடம் “உங்களது பெயர் எண்திசைத் தோளன். நீங்கள் கிழக்கின் பெருந்தளபதி. உங்கள் போர் வீரங்களை நேரில் கண்டிருக்கிறேன். பாணர்களின் பாடல்களை மொழிபெயர்த்துக் கேட்டிருக்கிறேன். உங்களை அங்கு தெய்வமென்கிறார்கள். தெய்வங்களை மதிப்பவன் நான்” என சிறுவனைப் போன்ற பாவனையில் சொன்னான். நான் அமைதியாக அவன் விழிகளை நோக்கியபடி நெடுத்திருந்த தேக்க மரக்காட்டின் கரையில் அமர்ந்திருந்தேன். அவன் என் சொற்களை கேட்பவனைப் போல் என்னைஎன்னை நோக்கினான். “என்னை என்ன செய்வதாக இருக்கிறீர்கள்” எனக் கேட்டேன். “ஒன்றுமில்லை தளபதி. உங்கள் உயிருக்கு நான் பொறுப்பு. சிங்கை அரசருடன் தமிழ்க்குடி மூத்தவர்களின் பேச்சுவார்த்தை மன்றுகளுக்கு நான் சென்றிருக்கிறேன்.

சிங்கை அரசர் போர் வெறி கொண்டவர். தமிழ்க்குடியை அவர் மதிப்பதில்லை என்பதை அறிவேன். புத்த துறவிகளும் உங்கள் சித்தரும் குடிமூப்பர்களும் இணைந்து பல கட்டங்களாகப் பேசி வருகின்றனர். எவர் சொல்லும் அவர் காதுகளை எட்டியதாக நான் நம்பவில்லை.

நீலழகரை நான் சந்தித்ததில்லை.
நான் கேள்விப்பட்ட வரையில் அவரும் போரை நிறுத்தப் போவதில்லை. இப்போர்களால் இரண்டு குடிகளிலும் அழிவே அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாரதத்திலிருந்து வரும் படைகளும் சிங்கை புரிக்குப் பெரும் அழிவுகளை உண்டாக்கி வருகின்றன. ஏராளமான கிராமங்களைச் சூறையாடிக் கொன்று குவிக்கிறார்கள். அவர்களில் தமிழ் அரசர்களின் படைகளே அதிகம். புலிகளுக்கும் பாரத அரச படைகளுக்கும் இடையில் சிங்கைக் குடிகளுக்கு வித்தியாசம் தெரியாது. இருவரும் ஒரே மொழி பேசுகிறார்கள். கொல்கிறார்கள். கவர்கிறார்கள். எங்கிருந்து இத்தனை ஆயிரம் வீரர்கள் வருகிறார்கள் என அஞ்சுகிறார்கள். பாதாள நாகங்களே தம்மை அழிப்பதாக எண்ணி எங்களைக் காக்கச் சொல்லி தெய்வங்களை நோக்கி வழிபாடுகளை மேற்கொள்கிறார்கள். நாங்கள் பண்படுத்தப்படும் இளங் குடி தளபதி. தமிழ்க்குடியுடன் இணைபார்க்கும் போது எங்களுக்கு நெடுவரலாறுகளோ நீண்ட மரபோ இல்லை. பாரதத் தென்னகம் பற்றிய எண்ணமும் எங்கள் குடிகளுக்கிடையில் நீங்கள் அங்கிருந்து வந்தவர்களே என எண்ணத் தோன்றுகிறது. அவரவர் அஞ்சும் நம்பிக்கைகளை அழிப்பதோ மாற்றுவதோ கடினமானது.

ஒற்றுச் செய்திகளின் படி நீலழகரும் தென்னக அரசுகளுடன் உறவாடலை உருவாக்கி வருகிறார். வேழங்களும் புரவிகளும் படைக்கலன்களும் ஆனை இறவில் அதிகரிப்பதை அறிந்து மலகந்தகம சீற்றம் கொண்டிருக்கிறார். தென்னகம் தம்மீது போர் தொடுப்பதாக அரசு சூழ்கையாளர்களிடம் சினம் கொண்டு கர்ஜித்ததை நான் கேட்டேன். பாரத அரசுகளுடன் சிங்கை அரசும் உறவு கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் கொடிவழியினர் போல் ஆவதில்லை. சிங்கைக்கு பாரதம் ஒரு அரசு சூழல் மட்டுமே. என்றோ பாரத அரசர்கள் அவர்களின் கொற்றக் குடையை இத்தீவிலும் விரிக்கவே விரும்புவார்கள். அரசர்களின் ஆசைகளுக்கு எல்லைகளில்லை. நாம் விரும்பினாலும் போர் ஓயப்போவதில்லை என்பதை அறிவேன். எவரோ ஒருவர் இங்கு வென்றாக வேண்டும். காலம் கனிந்தால் நான் சிங்கை புரியை ஆளும் காலம் வரும். அப்போது பேச்சுவார்த்தை மன்றுகளில் நீங்களும் உடனிருக்க வேண்டும். நாங்கள் இணைந்து குடிகளை ஒருக்க வேண்டும். இத்தீவு எளியது தளபதி. புரவிப்பயணத்தில் இதைக் குறுக்கும் நெடுக்கும் கடந்திருக்கிறேன். குடிகள் இனியவர்கள். ஆனால் தீராப் பகை கொண்டு விட்டோம். எக்குடியில் இறப்புகள் நிகழ்ந்தாலும் அவர்களுக்கு அவை பேரிழப்புகளே. அரசர்கள் குடிகளைப் போல் வஞ்சம் கொள்ளலாகாது. குடிகளை ஆற்றி எதிர்வரும் காலத்தை இணைந்து பலப்படுத்துவதே இத்தீவு சுய அரசாக நின்றிருக்க ஒரே வழி. இல்லையேல் நாம் பாரதத்தின் கால்மிதியாகவே பயன்படுவோம். அவர்களின் அந்தப்புரமாக நம் மண் ஆகும். அழியும்” எனத் தேர்ந்த மதியூகியின் சொல்நிகழ்த்துகையென சொற்களை அடுக்கி முடித்து என்னை நோக்கினான். நான் சொல்லற்று அமர்ந்திருந்தேன் கூத்தரே. அவனுள் தெரிந்த கனவில் என் கைக்கெட்டாத வலைகளின் பின்னல்களும் தெரிந்தன. அப்படியொருவன் அரசனானால் இப்போர் ஓய்ந்து நாம் தனிதேசமாவோம் என எண்ணம் பிறந்தது. ஆனாலும் நான் சொல்லற்று இருந்தேன். அவன் என்னைப் பார்த்து புன்னகை புரிந்தான்.

அவனது இளைய மகள் குவேனி ஒரு கலயத்தில் சுடுவெண்சோறையும் பருப்பையும் ஊற்றிக் கொணர்ந்தாள். சின்னஞ் சிறுமி. என்னை நோக்கி என் வடுக்களைத் தொட்டு எண்ணினாள். தன் தந்தையின் வடுக்களைத் தொட்டு எண்ணிய பின் நானே பெரிய வீரர் என என்னைக் காட்டிச் சிரித்தாள். சங்கில் கேட்கும் அலையைப் போல குரல் அவளுக்கு. அசல புன்னகையுடன் அவளைத் தடவி ஏதோ சொன்னான். அவள் களித்தபடி பூப்பறப்பதைப் போல மனைக்குச் சென்றாள். “நீங்கள் பெரும் வீரர். அவர் இனி நம்முடன் தான் இருப்பார் எனக் குவேனியிடம் சொன்னேன். மகிழ்வில் துள்ளிச் செல்கிறாள். எனது மகள் நீங்கள் மருத்துவக் குடிலில் சிகிச்சை பெற்ற போது உங்களை வந்து பார்த்துச் செல்வாள். அந்த மாமாவுக்கு என்னவென ஒவ்வொருவரிடமும் விசாரிப்பாள். மருத்துவர்கள் அவளின் கேள்விகளைக் கண்டு என்னிடம் முறையிடுவதுண்டு. அவள் வாழும் காலத்தில் அவளுக்கு உங்களைப் போன்றவொரு மாமா தமிழ்க்குடியில் இருக்க வேண்டும் தளபதி. இரண்டு குடிகளும் கொண்டும் கொடுத்தும் வாழ்வு கூட வேண்டும்” என்றான். அக்கிராமத்தின் உபசரிப்பில் ஏற்கெனவே நெகிழ்ந்து போயிருந்த நான் குவேனியை அழைத்து அவளைத் தூக்கிச் சுற்றினேன். அவள் சிரிப்பலைகளால் முளைத்த மலரென வானில் சுழன்றாள். என் கண்களில் நீர்ப்பெருக்கு ஓடியது. சிங்கைச் சிறுமியொருத்தியை அங்கனம் நானொரு உறவினனாய் நின்று தூக்கி மகிழ்ந்தாடுவேன் என கனவிலும் கண்டதில்லை நண்பரே. எனது வயிற்றுக் காயம் ஆறிய பின்னர் நான் தமிழ்க் குடி திரும்பலாம் என அசல சொன்னான். எனது அகம் அச்சொற்களை அப்போது நம்பவில்லை. அம்மலைக் காவலர்கள் நால்வரும் தமிழ்க்குடியின் வன எல்லையில் என்னை நிறுத்திய பின் என் கால்களில் விழுந்து வணங்கி எழுந்த போது உளமுடைந்து அவர்களைத் தழுவிக் கொண்டேன். பெரும் பாறைகளில் தொங்கும் மந்தியென அவர்கள் என்னை அணைத்தனர். பின் அவர்கள் விலகிச் செல்வதை நோக்கினேன்.

இருமாதங்களின் பின் வனக்குடில் மீண்ட என்னை நீலர் ஓடிவந்து அணைத்துக் கொண்டார். என் காயங்களை நோக்கினார். அன்றிரவு அரசியும் நீலரும் எனக்கு உணவாக்கி அளித்தனர். வனக்குடில் சபையில் உண்டாட்டு நிகழ்ந்தது. இன்மரும் உதிரரும் சத்தகனும் அழியனும் வாகை சூடனும் ஈச்சியும் இருதியாளும் திமிலருமென பெரும் நண்பர்கள் கூட்டம் என்னைச் சுற்றியமர்ந்தனர். புலி வீரர்கள் என்னை மரணத்திலிருந்து மீண்டு வந்த பெருவீரரென நோக்கினர். நீலரின் முதற் புதல்வன் இளங் கதிரோன் என்னைச் சுற்றி ஓடிக்கொண்டே இருந்தான். மாமாவுக்கு மான்கறி கொடுங்கள் என அன்னையிடம் சண்டை பிடித்து கறிக்கலயத்தைக் கொண்டோடி வந்து போட்டுடைத்தான். மண்ணில் விழுந்த அவனைத் தூக்கி சத்தகனை நோக்கிக் காற்றில் எறிந்தேன். அவன் அவனை ஏந்திக் கொண்டு பெருவிழிகளால் வெருட்டி அழ வைத்தான். நகையும் பேச்சொலிகளுமென அந்த நாள் கரைந்தது.

அடுத்த நாள் மாலையில் வனக்குடிலின் அருகிருக்கும் குளத்திற்கு விரியனுடன் நானும் நீலரும் நடை போனோம். நடந்தவற்றைச் சொன்னேன். அவர் நிதானமாகக் கேட்ட பின்னர் சிந்தையில் மூழ்கினார். அவை தொடர்பில் என்னிடம் அவர் பேசிக் கொள்ளவில்லை. எவரிடமும் அதைப் பகிரவுமில்லை எனத் தோன்றியது. மூன்றாம் பருவ யுத்தம் தொடங்கிய போது உதய பூர்ணிகர் இயற்கை எய்தினார். மலகந்தகம போரில் காயம்பட்டு உயிர் பிழைத்தான். சிங்கையின் பெருந்தளபதிகளில் ஒருவனாக அசல எழுச்சி பெற்றிருந்தான். களத்தில் அவனும் நானும் எதிர்கொள்ளும் திசைகளை நீலர் மாற்றியமைத்தார். அது நல்லதற்கே என நான் எண்ணினேன்.

அதன் பின்னர் புலிப்படை ஒற்றர்கள் என்னைத் தொடர்வதை அறிந்த போது எனக்குள் சினம் அழலாடத் தொடங்கியது. என் படையிலேயே எனக்கு ஒற்றர்கள் அமைவதை விடச் சிறுமை ஏதேனும் உண்டா நண்பரே. இதை விட என் உறுதியையும் அர்ப்பணிப்பையும் சீண்டும் செயல் கூடுமா. நான் அகம் கலங்கி அரசியிடம் ஒருமுறை வெடித்துச் சொன்னேன். நீலர் நகர் சென்றிருந்த போது அரசி குடிலின் முன் வாகை சூடனும் சொல்லாடியபடி சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தனர். நான் அப்போது தான் திரிகோண மலையிலிருந்து திரும்பி வந்திருந்தேன். வனக்குடிலில் சில வீரர்களின் விழிகளில் பழைய நட்பு இருக்கவில்லை என்பதை உணர்ந்தேன். என்னை அறியாதவர்கள் போல் சுழித்தோடினார்கள். எனக்குள் ஆத்திரம் பெருக அரசியின் முன் சென்று வாளை நிலத்தில் வீசியெறிந்தேன். வாகை சூடன் திடுக்கிட்டு எழுந்து என்னை நோக்கி வந்தான். அவனை அங்கேயே நிற்கச் சொல்லிக் கைகாட்டிய பின் அரசியின் முன் சென்று மண்ணில் அமர்ந்தேன். “எழுந்திருங்கள் தோளரே. என்ன இது” எனச் சொற்கள் தடக்க எழுந்து விட்டார். என் விழியில் நீர்த்திரை பரந்திருப்பதை நோக்கியவர் தானும் மண்ணில் அமர்ந்தார். வாகை சூடன் என்னருகில் வந்து நின்றான். மாதுமியாள் அரசியின் அருகே வந்து அமர்ந்தார். “நான் உங்களிடம் தனியே பேச வேண்டும்” அரசி எனச் சொன்னேன். “வாகை சூடனும் மாதுமியாளும் நம் நிழல்கள் போன்றவர்கள் தோளரே. சொல்லுங்கள். என்னவாயிற்று” எனக் கேட்டார். அவரின் நிதானமான சொற்களும் அக்கையெனத் தோன்றும் முகமும் என்னை ஆற்றியது. அனைத்தையும் சொற்களென ஆக்கி அவரிடம் சொல்லி முடித்தேன். சொல்லி முடித்து அவரது விழிகளை நேர்நோக்கிய போது அவை எனது விழிகளின் ஆடியென நீர்த்திரை கொண்டிருந்தன. அவர் மெளனமாயிருந்தார். எழுந்து நின்று “நீங்கள் இன்னும் இருநாட்கள் இங்கே தங்கிச் செல்லுங்கள். உங்களுக்குரிய பதில் உங்களுக்குக் கிடைக்கும். இப்பொழுது சொல்வதற்கு என்னிடம் ஒன்று மட்டுமே உண்டு தோளரே. நான் உங்கள் அக்கை. நீங்கள் என் சோதரர்” எனத் தழுதழுத்தபடி சொன்னார். ஓடிவந்து மாதுமியாளின் இடையைப் பற்றியபடி நின்ற இளங் கதிரோனை மாமாவுடன் சென்று விளையாடு எனச் சொல்லியபின் குடிலுக்குத் திரும்பினார் அரசி. நான் இளங்கதிரோனைத் தூக்கியபடி வாகை சூடனுடன் சென்று அன்று மாலை முழுவதும் குழவிகளெனச் சிரித்து விளையாடினோம்.

இரண்டாம் நாள் புலரியில் எனக்கு அழைப்பாணை கிடைத்தது. நீலர் அவைக் கூடத்தில் தனித்திருந்தார். என்னைக் கண்டதும் விழியைத் தாழ்த்தியும் உயர்த்தியும் நோக்கினார். அம்மாற்றம் அவரை எவரோ என அகத்தைத் துடுக்கியது. அவர் என்னை அமரச் சொல்லிய பின் மெல்லிய சொற்களில் “தளபதி. நீங்கள் உணர்பவற்றை நான் அறிந்தேன். நாம் சுமக்கும் பெருங்கனவின் பொருட்டே இங்கு அனைத்தும் சூழ்கின்றன. நானோ நீங்களோ இதற்கு விதிவிலக்கல்ல. உங்களைச் சந்தேகித்து அல்ல ஒற்றர்கள் உடன் வருவது. அசல உங்களை ஏதேனுமொரு வழியில் தொடர்பு கொள்ளவோ வேறேதும் நிலைமாற்றங்கள் அமையவோ வாய்ப்புண்டு. என் அணுக்க ஒற்றர்களையே அனுப்பியிருந்தேன். ஆனால் இத்தகவல்கள் எங்கனம் படைக்குள் நுழைந்தன என்பதை அறிய முடியவில்லை. நம் ஒற்றர்களை நாமே நம்ப இயலவில்லை.

சிங்கை நகர் சிறைச் சாலையிலிருந்து நீங்கள் மீண்டு வந்தது முதல் நீங்கள் எப்படி மீண்டீர்கள் என ஒவ்வொருவரும் உசாவுகின்றனர். நிகழ்ந்த உண்மை சொல்லப்படுவது பெரும் இழுக்கை ஏற்படுத்தும். சிங்கைத் தளபதியின் பரிவில் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள் எனப் படைகள் ஏளனம் கொள்ளும். பாணர்கள் நாக்களில் சொற்கள் நகையாடும். அவை தவிர்க்கப்பட வேண்டும் என நான் மெய்யை அனைவரிடமும் தவிர்த்தேன். மறைக்கப்படும் ஒரு மெய். பல பொய்களாக நம்பிக்கைகளாக கதைகளாக நிழல் நாகங்களென அலையத் தொடங்கி விட்டன. மன்றுகளில் கதைகள் பரவி குடிகளிடமும் சந்தேகங்கள் நிலவுகின்றன. இக்கணம் நீங்கள் கிழக்கிற்கு மீண்டு அங்கிருந்து பணிகளை ஆற்றுவதே நல்லது. நான் உங்களை நம்புகின்றேன். ஆனால் கூட்டங்களிலோ சபைகளிலோ நீங்கள் யாராலும் புண்படுவதை நான் விரும்பவில்லை. கிழக்கில் சில காலம் பணியாற்றி மீள்க” எனச் சொன்னார். அவர் சொற்களின் தருக்கங்களுக்கிடையில் பாறையில் நுழைந்த இளஞ் சிறு வேரென ஒரு சந்தேகத்தை உணர்ந்த போது உடல் சோர்வு கொண்டு இருக்கையிலிருந்து எழ முடியாதவன் ஆனேன். யாரிடமும் விடைபெற்றுக் கொள்ளாமல் கிழக்கிற்குத் திரும்பினேன்.

கிழக்கின் எல்லைகளை மீண்டும் சிங்கைப் படை மூன்று பருவங்களின் பின் தாக்கியது. பெருஞ் சமரில் ஆயிரக்கணகான வீரர்கள் இருபுறமும் மடிந்தனர். சிங்கைப் படையின் ஒரு பெரும் பிரிவை அசல வழிநடத்தினான். ஆனால் நானும் அவனும் களத்தில் எதிர்கொள்ளும் படியாக அப்போர் அமையவில்லை. அப்படியேதேனும் நடந்திருந்தால் அவனைக் கொன்றிருப்பேனா என அஞ்சுகிறேன். குவேனியின் இள உடல் என் கைகளில் இப்பொழுதும் மலர்த்தொடுகையென எஞ்சியிருக்கிறது. போர் முடிந்து இழப்புகள் கணக்கிடப்பட்டது. மாபெரும் இழப்பு புலிகளுக்கு ஏற்பட்டது. பெருந்தளபதிகள் இருவர் கொல்லப்பட்டனர். வனக்குடில் கூட்டத்திற்கு முப்பருவங்களின் பின் சென்றேன். அனைவரும் கொதித்துக் கொண்டிருந்தனர்.

நான் அவையில் நுழைந்த அடுத்த கணமே உதிரர் எழுந்து “உங்கள் நண்பர் என்பதால் படைகளை கொண்டு சென்று தின்னக் கொடுத்தீரா” எனச் சீறினார். என் கரம் வாளைத் தொட்ட போது கரம் நடுங்கியது. நான் நீலரின் முகத்தை நோக்கினேன். அவர் தலை தாழ்ந்திருந்தது. பலரும் வசைச் சொற்களால் கூவி அக்கூடமே இழிகூட்டமெனச் சிதைந்திருந்தது. என்னை நோக்கி விரல்கள் நீள நீள அகமொடுங்கினேன். சொற்கள் எழவில்லை. நீலரை நோக்கிக் கொண்டிருந்தேன். அவையை அடக்குவது அவர் பொறுப்பு. அவரின் அகச் சொற்களென அச் சொற்கள் எழுகின்றன என எண்ணமெழுந்த போது அவையை நீங்கி வெளியேறினேன். அவை இரவு முழுவதும் கொந்தளிக்கும் சொற்களால் நிறைந்திருந்தது என அறிந்து புலரியில் நீலரின் குடில் வாசலில் தசமுகனை வைத்தேன். என்னுடன் என் படையினர் உடன் வந்தனர். முல்லைப்பட்டினம் கடந்த பொழுது என்னுடன் வந்த படையினரைத் தாக்கியபடி இன்மரின் படையெழுந்தது. நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. திரும்பித் தாக்காமல் கிழக்கிற்குள் நுழைந்து விடச் சொல்லிப் படைகளுக்கு ஆணையிட்டேன். அவர்களில் பலரும் சினமுற்றார்கள். பின்வந்த படைகள் அழியத் தொடங்கிய போது தற்காத்துத் தாக்குங்கள் என ஆணை பிறப்பித்தேன். கிழக்குச் சேரும் வரை இழந்தது நானுறுக்கும் மேலே வீரர்களை.

அத்தாக்குதல் உண்டாக்கிய கொந்தளிப்பால் ஒரு பருவம் முழுவதும் இவ்வூரில் வந்து எவருமறியாமல் வாழ்ந்தேன். பின் இது என் ஊரென்றாகியது. என்னை இக்குடிகள் ஏற்றனர். புலிகளும் இங்கு வருவதில்லை. மூன்றாம் பருவப் போரின் தகவல்களைக் குடிகளின் வழி கேட்டறிவேன். வாகை சூடனின் கரம் துண்டிக்கப்பட்டதைக் கேட்டு உளமதிரக் கூவி வாளை எடுத்து ஊர் நீங்க விழைந்தேன். குடிகள் என்னைத் தடுத்தனர். இப்போர் என்றாவது ஓயும். அதை நீங்கள் நேர்நின்று பார்க்க வேண்டும் என்றனர். அதுவே சரியென எண்ணினேன் நண்பரே. இன்று குடிகளை மகிழ்விக்கும் கூத்தனென ஆடுகிறேன். உங்களிடம் கற்ற யாழும் சொல்லும் என் பிற்காலத்தில் இப்படி உதவும் என எண்ணியிருக்கவில்லை” என நகைப்புடன் சொல்லி முடித்தார்.

இருநாட்கள் அவருடன் தங்கியிருந்தேன். உங்களைப் பற்றி விசாரித்தார். உங்கள் நிலமை கேட்டு உளம் கலங்கினார். எனது விழிகளை நோக்கியும் வருந்தினார். இக்கலாங்களைக் கண்களால் காணாதிருப்பதும் நன்றென உரைத்தார். நீலர் அவரை விசாரித்ததாகச் சொன்னேன். அச்சொற்களைக் கேட்ட பின் அமைதியாக அமர்ந்திருந்தார். பின் எழுந்து சென்று பாணர் குழுவிடம் பேசிச் சிரித்தார். என்னை வசைபாடும் பாடல்களை இயற்றிய எவரேனும் இங்குளரா என அவர்களை அச்சுறுத்திப் பின் நகைத்தார். அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுக்கலாம் என எண்ணி வைத்திருந்தேன் எனச் சொல்லி மேலும் நகைத்தார். பாணர் கூட்டம் வெய்யில் பட்ட புழுக்களென நெளிந்தது. செல்லும் தறுவாயில் என்னிடம் வந்தவர். “கூத்தரே என்னைப் பற்றி வடக்கின் பாணர்கள் சொல்லும் சொற்களைக் கேட்டேன். அந்த இழி பாடல்கள் எனக்கு மருந்தாய் அமைந்தன எனச் சொல்லுங்கள். துரோகியின் வாள்முனை வென்ற போர்களை இனி எங்கனம் பாடுவீர்கள் எனக் கேளுங்கள். சிங்கையின் நண்பனென என்னைச் சொல்லும் சொற்களை நான் பாராட்டுகிறேன் நண்பரே. இக்காலத்தில் அனைவருக்கும் நண்பரென ஆவது துரோகமே. ஏதாவது ஒரு பக்கம் சார்ந்தாக வேண்டியிருக்கிறது. இவ்வாடலுக்கு வெளியே அமைந்து நின்று எளிய குடிகளின் பார்வையில் இப்போர் எதுவெனத் தோன்றுகிறது எனச் சொல்லெடுக்கும் கவிகள் யாரும் உளரா. ஆகாது. விடுதலைத் தீயில் வேகும் எரிவிறகுகளுக்கு ஒளியே பாடல். சாம்பல் காற்றுக்கு” எனச் சொன்னார். நான் வடக்குத் திரும்பிய பின் புலிகளைச் சந்திப்பதை நிறுத்தி விட்டேன். போர் உண்டாக்கிய அவலச்சாக்களால் என் அகம் நொதித்து வற்றியது. ஒரு இனிய கனவெனச் சொற்கள் என்னை நீங்கியது. அகம் விழித்த போது மெய்விழிகள் மூடிக் கொண்டன. யாழைத் தொட்டதை விரல்கள் மறந்து விட்டன. இவ்விரல்களில் எங்கோ ஆழத்தில் ஒலி உறைந்திருக்கிறதென அகம் திடுக்கிடும் கணங்களில் காற்றை வருடுவேன். காற்று என்னை ஏற்க மறுத்து விரல்களைக் குலைக்கும். அதுவே பொருத்தமான தண்டனை என அகம் ஏற்று அமைதி கொள்ளும்.

வாகை சூடன் உளமடங்கி அமைதியானான். ஏழிசைக் கூத்தர் தன் பிலவுக்குத் திரும்பியிருந்தார். மனைக்கு அப்பால் வீதிகளில் களிகொண்டு பேசிச் சிரிக்கும் குடிகளை நோக்கினான் வாகை சூடன். அவர்களது களியில் எஞ்சியிருக்கும் மகிழ்வை நோக்கியபோது அவன் உளம் சிலகணங்கள் கனிந்தது. பின் இறுக்கமான முகத்தைச் சூடிக் கொண்டு தீயிலையைப் பற்ற வைத்துப் புகையை ஆழ இழுத்து அகத்திருளில் புகையென்றானான்.

TAGS
Share This