45: சிம்ம நிழல்

45: சிம்ம நிழல்

நெடிய மூங்கில் கழிகளால் தூணிடப்பட்டு பழுத்த பனையோலைகளால் சீராகக் கூரையிடப்பட்ட சத்திரமொன்றில் இளவெயில் தன் ஒளிக்கரங்களை நீட்டியிருந்தது. இடையிலிருந்த சாளரங்களால் சிறு ஒளித்தூண்கள் சத்திரத்தின் உள்ளே விழுந்து கொண்டிருந்தன. வீதியில் பெருகிய குடிகளின் காலடிகளால் விம்மியெழுந்த புழுதியின் தூசுகள் அவ்வொளித் தூண்களில் பரவி ஒளித்தூசென மின்னின. புரவிகளின் கனைப்பொலிகளும் அவை கால்மாற்றிக் கொண்டு நிற்கும் ஓசைகளும் எழுந்தன. நிரையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டில்களில் இருந்த காளைகளின் கொம்புகளில் கட்டியிருந்த சலங்கைகள் அவற்றின் தலை சுழற்றல்களுக்கு ஆடிக் கிலுங்கிக் கொம்புப் பறவைகளென ஒலிக்குரலெழுப்பின.

சத்திரத்தின் உள்ளே நுழைந்த கலவையான ஓசைகள் அசலவைத் துயில விடாமல் அரற்றிக் கொண்டிருந்தன. காற்றில் மானுடக் குரல்கள் உலோகங்கள் உரசிக் கொள்வதைப் போல் தோன்றின. சத்திரத்திற்குள் தீயிலை வாசமும் உணவின் மணமும் எழுந்து பரவியிருந்தது. சிங்கை வணிகர்களும் தமிழ்க்குடி வண்டிலோட்டிகளும் உரக்கச் சிரித்தபடி சொல்லாடிக் கொண்டிருந்தனர். அசல விழிகளை மூடிக்கொள்ளத் துணியொன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு சிற்றிருளைப் போர்த்தினான். கையகல இருளில் அவன் துயில் கொள்வது இது எத்தனையாவது தடவை என்பது அவனுக்கு நினைவில்லை. அவனது தேகத்திலிருந்த போர் வடுக்களை பிறரறியாத வண்ணம் உடையுடுத்தியிருந்தான். குழலை இறுக்கிச் சுற்றிக் கட்டி அதன் மேல் தலைப்பாகையைக் கட்டியிருந்தான். பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்காத மென் வண்ணங்களில் அவனது ஆடை நெடுந்தூரம் வண்டிலோட்டுபவனெனத் தோற்றியது.

அசலவின் கனவில் குவேனி இள வெண் தாமரையைப் பறிக்கக் குளத்தில் நீந்தினாள். அசல அவளை நோக்கி “குவேனி கவனம்” எனக் கூவினான். “இது எனது குளம் தந்தையே. என் தந்தையின் குளம்” எனக் கூவிச் சிரித்தாள். அவளின் குரல் குளத்தில் விரிவுகளென அலையடித்தது. அவளின் கூந்தல் நீரலைகளில் மிதப்பதை நோக்கினான். அவை நீர்வேர்களென அலைத்தன. அவளை உரக்கப் பெயர் சொல்லி அழைத்தான். அவள் ஆழம் ஆழமென நீருக்குள் சென்று மறைந்தாள். அவளைக் காணாது அவன் கரையில் நின்று குரல் நாண் அறுபடக் கத்தினான். அவனால் குளத்திற்குள் இறங்க முடியவில்லை. அவன் கால்கள் மரமென ஊன்றி நின்றுவிட்டன. வெறும் ஒலியாக அவள் பெயர் காற்றில் எழுந்தது. சிலகணங்களில் குளமும் தாமரைகளும் மட்டுமே அங்கிருக்கிறதென நோக்கியவன் கால்கள் வேர்விடுபட்டு மண்ணில் அறைந்து விழுந்தான். அக்கனவிலிருந்து விழித்து விடத் துடித்து எழுந்தான்.

அவனுடன் நூறு தேர்ந்த வீரர்கள் உருமாறிகளென பட்டினத் திருவிழாவின் ஒவ்வொரு திசைக்குள்ளும் ஒவ்வொரு வடிவில் கலந்திருந்தனர். வாணிபர்களாக நாகங்களை வைத்து வித்தை காட்டுபவர்களாக புரவிக்காரர்களென வண்டிலோட்டிகளென பாகர்களென பலவேடங்களில் அவர்கள் பட்டினத்தின் திசைகளில் குடிகளோடு குடிகளாகக் கலந்து விட்டிருந்தனர்.

நீலழகனைக் கொன்று திரும்புவதே அவர்களின் எளிமையான திட்டம். திருவிழாக் காலத்தில் அரண்மனையில் பாதுகாப்புக் குன்றியிருக்கும். லட்சக்கணக்கான குடிகள் திரண்டிருப்பதால் புலிகள் காவற் கடமையில் திணறிக் கொண்டிருப்பர். ஓர் அருங்கணத்தில் நீலனைக் கொன்று ஓசையற்று நிழல்களென நீங்கிவிட வேண்டும். அதற்கான கணத்தை வகுப்பதற்கு மகாசேனன் பராக்கிரம வீர என இரு நுட்பமான ஒற்றர்களைப் பணிக்கமர்த்தியிருந்தான் அசல. அவர்களுக்குப் பட்டினப் பாதைகள் உள்ளங்கை ரேகைகளெனத் தெரியும். பலநூறு தடவைகள் அவர்கள் வந்து சென்ற பாதைகள். இருவரும் நன்கு தமிழறிந்தவர்கள். ஒற்று நுட்பங்களிலும் அசாத்தியத் திறனுள்ளவர்கள். அசலவின் அணுக்கர்கள். அவன் அரசனாக வென்று முடிசூடும் நாளில் அவனது தோழனென நின்றிருக்க விரும்புபவர்கள். அசல எழுந்து திண்ணையில் வணிகர்களுடன் அமர்ந்தான்.

களித் திருவிழாவில் தமிழ்குடிப் பெண்களின் கூச்சல்களையும் அவர்கள் தேகங்களில் ஒளிர்விட்ட அதிகார பாவனையையும் நோக்கினான். பெண் புலிகள் காவற்கடமைக்கென வாள்களில் இடக்கை வைத்தபடி குடிப்பெருக்கில் பணியிலிருந்ததை நோக்கினான். ஈச்சியின் முகம் அவன் நினைவில் ஒரு கணம் மின்னி மறைந்தது. அவளின் கொல்கணப் பேரழகை அசல வியந்திருக்கிறான். அவளை வீழ்த்திய மூவம்புகளை எய்யும் பொழுதும் அவள் குருதி கொட்டி அவனை நோக்கி கொல்வேலெடுத்த பேரெழிலை விழிவிரிய நோக்கியிருக்கிறான்.

மாதோட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்த நிகழ்ந்த யுத்தத்தில் ஈராயிரத்திற்கும் மேலே புலிகளை அழித்தது ஐந்தாயிரம் பேர் கொண்ட சிங்கைப் படை. அசலவே அப்போரை வழிநடத்தியவன். சத்தகனும் ஈச்சியும் மாதோட்டத்தின் தலைமைத் தளபதிகள். சத்தகனின் கொல்வெறியையும் மாபலத்தையும் அசல அஞ்சுவதுண்டு. மூர்க்கன். எதிரிப்படைகளைத் தான் ஒருவனே வீழ்த்தி விடத் துடிக்கும் போர்வெறி கொண்டவன். போரைப் பெருங்களியென ஆற்றுபவன். ஈச்சியின் உக்கிரமான போராற்றலையும் அசல அறிவான். அவள் போர்க்களங்களில் சிங்கை வீரர்களின் குடல்களை உருவிக் கழுத்தில் அணிந்து அமலையாடுபவள். இருவரும் போர் மையத்தில் நிலைகொண்டிருக்கும் வரை சிங்கை வீரர்கள் எரிகல் விழுந்த சருகுக் காடென ஆவார்கள் என்பதை அவன் முன்னுணர்ந்திருந்தான். அப்போரில் அறுநூறு மலை வீரர்களை அவன் அழைத்துச் சென்றிருந்தான். அப்போர் மலகந்தகம அவனது எதிர்கால முதன்மைத் தளபதிக்கான முதற் களப் பரீட்சை. அதில் அவன் வென்றே ஆக வேண்டும். அசல தனது குடியிலிருந்த மாமல்லர்களையும் பேருருவர்களையும் கொண்ட படையுடன் அப்போரை வென்றான்.

மலை வீரர்கள் கட்டளைக்குப் பணிபவர்கள். அரசனை தெய்வமென்று சென்னி சூடுபவர்கள். அவன் ஆணையை வாக்கெனக் கொண்டு தீக்கல்லில் தலை வைக்கக் கூடியவர்கள். தானே அப்போரின் முதன்மை ஆயுதமென்பதை அசல கண்டிருந்தான். மாதோட்ட விளிம்பை அடைந்து படைக்கலன்களை ஒருக்கிய போது அதில் பெரும்பான்மை அரச வீரர்கள் ஆர்வமற்றிருப்பதை நோக்கினான். புலிகளுடன் போர் என்றால் படைப் பின்னணியில் யார் ஒளிந்து கொள்வதென்பதே அவர்களின் முதன்மைச் சண்டை. அவர்களை உற்சாகமூட்டும் உரைகளைத் தளபதிகள் ஆற்றுவதில்லை. காரணங்களும் அளிக்கப்படுவதில்லை. கொன்று கவர்ந்து வெல்தலே ஒரே பணி. சலித்துப் போயிருந்த சிங்கைப் படை மூன்றாவது பருவ நெடும் யுத்தத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் கவர்தலோ கொல்லுதலோ அல்ல உயிர் மீள்தலே போரின் வெற்றியெனக் கணித்திருந்தார்கள்.

வீரர்களின் உளத்தை ஊக்கப்படுத்த ஊதியத்தைத் தவிர மலகந்தகம எதையும் அளிப்பதில்லை. கணவனை இழந்த சிங்கைப் பெண்களின் கதைகளைக் கேட்டு அவன் உதட்டைக் கோணலாக்கி “அனைவரையும் நானே மணம் புரிய முடியாது. எஞ்சியவர்களை மணந்து கொள்ளச் சொல்லுங்கள். இல்லையேல் படிப்பணத்தில் வாழ்ந்து கொள்ளட்டும்” என ஏளனமாகச் சொன்னான். அசல மலகந்தகமவைத் தன் ஆழத்திலிருந்து வெறுப்பவன். மலகந்தகமவின் போர் வெறும் அரச வெறி. ஆணவம். சிங்கை புரியின் பேரரசெனன நின்றிருக்க விரும்பும் ஒற்றை ஆணவம் மலகந்தகம.

அசலவும் பேரசனென இத்தீவை ஒருங்கிணைக்கும் கனவைக் கொண்டவன். ஆனால் அவனுள் எழும் போர் இணைத்து ஆள்வதற்கானது. உதய பூர்ணிகரின் நட்பு அசலவை உளம் தேற்றி அவனிலிருந்த விலங்கிற்குச் சில கடிவாளங்களை இட்டது. உதய பூர்ணிகரை அசல சந்தித்த முதல் நாளில் அவன் அவரின் முகத்தில் தெளிந்த புன்னகையைக் கண்டு உள்ளூர எரிந்தான். அவன் வாழ்நாட்கள் கொதிப்புடனே அலைந்து கொண்டிருப்பவை. அவனது எளிய குடிகளை இணைத்து சிங்கை புரியின் முடியை அடைவதென்ற பெருங்கனவைத் தாள முடியாமல் நிற்பவன்.

எளிய குடிகளை அவன் உள்ளூர வெறுப்பான். கனவற்றவர்கள். வரலாற்றில் வாழ்வில்லாதவர்கள். உண்டு. குடித்து. புணர்ந்து. சாகும் எளிய உயிர்கள். ஓர் அரசன் எளிய குடிகளுக்குக் கனவளிக்க வேண்டியவன். கனவளித்து அதை நோக்கி வழிநடத்த வேண்டியவன். மலகந்தகமவின் கனவு அவன் சொந்தக் கனவு. இந்தத் தீவை ஆண்ட ஒவ்வொரு அரசனினதும் கனவு. அசல அதன் பொருளையும் ஒழுங்கையும் மாற்ற எண்ணினான். நீலழகர் அவனுள் ஒரு தெய்வமென மதிக்கப்படுபவர். தன்னைப் போலவே அதிகாரமற்ற குடியிலிருந்து வந்தெழுந்து குடிகளுக்குக் கனவளித்து அதை வளர்த்து இணைத்து அரசனென முடிசூடியிருப்பவர். ஆனால் தனிதேசமெனத் தன் எல்லைகளை விட்டு அகல விரும்பாதவர். சிங்கையுடன் கூட்டு என்பது பொருளாதாரமும் கலாசாரமும் மட்டுமே எனக் கொண்டவர். பேச்சு வார்த்தை மன்றுகளில் திரும்பத் திரும்ப அச்சொற்களே உச்சரிக்கப்பட்டன. எக்கணத்திலும் தனித்தேசம் எனும் கனவிலிருந்து புலிகள் ஒரு தூசளவும் கீழிறங்கப் போவதில்லை. பகிர்ந்தளிக்கப்படும் அதிகாரமென்பது மையம் கொண்டது. வரி செலுத்தப்பட வேண்டியது. அயல் தேசங்கள் போர் தொடுத்தால் படை கொடுக்க வேண்டியது. இம்மூன்றும் புலிகளால் நிராகரிக்கப்பட்டது. தென்னக அரசுகளின் தொடர்பால் தமிழ்க்குடி அரசர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பளிக்கப்பட்டார்கள். ஆயுதங்களும் படையுதவிகளும் செல்வங்களும் அளிக்கப்பட்டனர். புதிய தென்னகக் குடிகள் வடக்கிலும் கிழக்கிலும் நிறைந்து கொண்டிருந்தனர். சிங்கை புரியின் பாரதத் தொடர்புகள் பலவீனமானவை. அவை எளிய மணமுடிப்புகளால் ஆனது. அவ்வரசுகளும் சிறியவை. சிங்கை புரியை ஒரு பொருட்டாக மதிக்காதவை. வணிகம் மட்டுமே அத்தொடர்புகளின் மைய இழை.

அசல அந்த நெருக்கத்தை அஞ்சினான். அவர்களின் மொழிவழித் தொடர்பு எப்படியும் தம்மை விட நீண்டது. தாம் ஒருநாள் தமிழ் அரசர்களால் முற்றாளப்படலாம் எனும் எண்ணமே அவனைப் போர் வெறி கொள்ளச் செய்வது. எண்திசைத் தோளனைப் புலிகளிலிருந்து விலக்கியமை அவனுக்குத் தெளிவான சேதியைச் சொல்லியது. புலிகள் அகக்கூட்டை அஞ்சுகிறார்கள். சிங்கை புரியை அவர்கள் ஆழத்தில் வெறுக்கிறார்கள். தமிழ்க்குடிகளை ஆற்றும் நம்பிக்கைகளை அளிக்கும் கடந்த காலம் சிங்கை புரிக்கும் இல்லை. ஓர் அரசனின் சொற்கேட்டு நடந்தவற்றை மறப்பதை அசலவும் செய்யப் போவதில்லை. வென்று முற்றாளுவதே இறுதியில் நிலையான ஒன்று எனத் தெளிந்தான்.

சிங்கை புரிக்குள் பிளவுண்டிருந்த குடிகளை வீரபாகுவும் மங்கல சூரியும் தம் முழு ஆற்றலையும் செலவு செய்து இணைத்துக் கொண்டிருந்தார்கள். குடிகள் போரில் இணையும் பெருங்கனவின் வரைபடத்தைக் குடிகளின் மனதில் உருவாக்கினார்கள். தமிழ்க்குடி புரியும் கொடூரங்களைக் கூத்துகளாக்கித் தெருக்களில் ஆடினர். கொல்லப்பட்ட சிங்கை வீரர்களுக்கான பொது நாட்களை உண்டாக்கி வழிபாடுகளை நடாத்தினர். புலிகள் சிங்கை புரியை வென்றாளும் கனவு கொண்டவர்கள் என்ற அச்சத்தை சிங்கை புரியின் குழவிகளும் அறிந்த ஒன்றென மாற்றினார்கள். தமிழ்ப் பெண்களும் போர்க்களத்தில் இணை நிகர் போர் செய்வதை சிங்கை புரி மக்கள் ஆபத்தானதாக நோக்கினார்கள். அவர்கள் பெண்களல்ல பேய்கள் என பேய்முகக் கூத்துகள் சிங்கை புரியின் தெருக்களெங்கும் நடாத்தப்பட்டன. குழந்தைகள் அலறி நடுங்கும் பெண்புலிப் பேய்களை வியூகிகள் உண்டாக்கினர். ஈச்சி அவர்களில் பெரிய பேய். நிலவை அரசியென வீற்றிருக்கும் கொடும் அரக்கி. இருதியாள் கடற் பூதம்.

இக்கற்பனைகளை ஆக்கிய வியூகிகள் அவற்றை மெல்ல மெல்லக் குடிகளின் சொற்களென அவர்களின் நாக்குளில் ஒலித்துத் தவழ விட்டனர். குடிகளின் கற்பனை வியூகிகளின் கற்பனைகளை விட ஆயிரம் மடங்குகள் பெரியவையும் கொடியவையும். நிலவையை எரிக்கும் சடங்கில் சிங்கைப் பெண்கள் அவளின் பேய் முகம் பூண்ட பாவையை அடித்து இழுத்து தெருக்களில் மண்ணுடன் அரைத்துக் கொணர்ந்து மன்றுச் சதுக்கங்களில் எரியும் ஆயிரக்கணக்கான நிலவைப் பாவைகளில் போட்டு எரித்து வஞ்சம் தீர்ப்பார்கள். நிலவை கதை தூக்கி வேழம் மேல் நின்ற காட்சியை நடிக்கும் கூத்தர்களை நோக்கி சிங்கைக் குடிகள் மண்ணிலிருந்தபடி பெருங்குரலெடுத்து வசைகளால் ஏசுவார்கள். நிலவை அவர்களின் துர்சொப்பனக்காரி. கனவுகளில் நிலவை கதையுடன் தோன்றினால் அமங்கலம் எதுவோ நேரப்போகிறதெனக் குடிகள் அஞ்சினர்.

ஈச்சியை இளம் பெண்கள் சிறிய ஈட்டிகளால் எறிந்து கொல்லும் சடங்கு நகர்களில் புகழ் பெற்றது. செல்வமுள்ளவர்கள் இல்லங்களின் அருகில் வீரர்களின் நினைவு நாட்களின் முன்னரான ஆறு நாட்கள் ஈச்சிப் பாவைகள் பிரமாண்டமாகச் செய்யப்பட்டிருக்கும். கரு நிறத்தில் வெண்கோடுகள் கொண்ட பெருந்தலையும் செந்நாவும் கோரப் பற்களும் தலையின் பின்புறம் காய்ந்த புற்களாலான பிசிறுத் தலையும் உடலில் நீண்டு தொங்கும் முலைகளும் சளைத்த ஒல்லிக் கால்களும் அமைக்கப்பட்டிருக்கும். ஊர்ப்பெண்கள் எறிவதற்கென சிற்றீட்டிகள் மூங்கிலில் செய்து குவியலாக வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் அந்தி நேரங்களில் கூட்டமாக நின்று அவள் முலைகளில் ஈட்டி எறிவார்கள். அழுகிய பழங்களைச் சிறு மூட்டையாகக் கட்டி ஈச்சியின் தூங்கு முலைகள் ஆக்கப்பட்டிருக்கும். அவை சிதறி அழுகல் சதைகள் தெறித்து விழும் போது கலகலத்துச் சிரிப்பார்கள். சிறுவர்கள் ஈச்சியின் முகங்களை நோக்கி ஈட்டிகளை எறிவார்கள். அவளது இரு விழிகளைக் குத்தும் ஈட்டியாளர்களுக்குச் சிறு பரிசுகளைச் செல்வந்தர்கள் வழங்குவார்கள். அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஈச்சியை அறைவார்கள். முடிவு நாளில் அவள் ஒல்லிக் கால்களை உடைத்து காய்ந்த புற்களைக் கொழுத்தி அவள் மேல் ஒவ்வொருவரும் உமிழ்ந்து அந்த பொம்மைகளை வனக்கரைகளில் உள்ள தரிசு நிலங்களில் எறிவார்கள். அந்தத் திசைகளுக்குக் குடிகள் அக்காலம் தவிர பிற காலங்களில் செல்வதில்லை. அது அவளின் சுடுகாடு. அங்கு அவள் பேயாய் உலவுகிறாள் என இளைஞர்களும் பயங்கொள்வதுண்டு.

கடற்கரைகளில் வாழும் சிங்கைக் குடிகள் இருதியாளின் பேருருவப் பாவைகளைக் கடற்பாசிகளாலும் தாவரங்களாலும் சிப்பிகளாலும் செய்வார்கள். ஆறு நாட்கள் கடற்கரையில் உள்ள வாடிகளின் முன் இருதியாளின் பெருமுலைகளும் பெரும் பிருஷ்டங்களும் வெய்யிலில் கிடந்து உலர்ந்து வற்றும். இருதியாளைக் கரையில் நின்று மும்முறை கடலை நோக்கி உமிழ்ந்து வீசுவார்கள். கரைக்குத் திரும்பும் எச்சங்களை அள்ளி மீண்டும் கடலில் எறிந்தபடி வசைகளைச் சொல்லி “போ” “போ” என விரட்டுவார்கள். கடலில் யாரேனும் கொல்லப்பட்டாள் இருதியாளின் பூதம் தான் விழுங்கியதென நம்பத் தொடங்கினார்கள்.

ஆண் புலிகளைச் சிங்கை மக்கள் அஞ்சுவதில்லை. பெண் புலிகள் எழுந்த பின்னரே போரில் கொலை வெறியாட்டுக் கூடியதென்றும் புலிகள் வெறிமிக்க பெரும்படை ஆனார்கள் எனவும் நம்பினார்கள். சிங்கைப் பெண்களிடம் பெண்புலிகளின் மேல் அருவருப்பு தேமல்களெனப் பரவியிருந்தது. அவர்கள் பெண்களுருவில் அமர்ந்து போர் புரிவதால் அனைவரும் பரத்தையர் எனச் சொன்னார்கள். யாராவது பெண் வாளெடுத்து ஆணின் தலையை அறுப்பாளா. குடல்களை உருவி அமலையாடுவாளா. அவள்கள் காமுகிகள். காமம் தீராதவர்களே போர் புரிகிறார்கள் என்றார்கள். அவர்களை மஞ்சத்தில் புணராமல் விட்ட தமிழ் ஆடவரால் அவர்கள் போர்க்களம் புகுந்து சிங்கை வீரர்களைச் சிறைப்படுத்திப் புணர விரும்புகிறார்கள் என முதுபெண்டிர் கூறினர்.

சிங்கை அரச படையில் இணையும் இளம் வீரர்களுக்கு அளிக்கப்படும் ஒரே பெருங்கனவென்பது எல்லைகள் கடந்தால் எப்பெண்ணையும் எப்படியும் கலவி புரிந்து கொன்றாடலாம் என்பதே. அக்கதைகளை விடிய விடிய மூத்த படைகள் இளம் வீரர்கள் நாவூறச் சொல்லும். கூட்டுக் கலவிகளில் அவர்கள் கதறும் ஒலியும் மண்டியிட்டு அவர்களைத் தொழ வைக்கும் பொழுதும் எழும் திளைப்பை அவர்கள் சொற்களால் மேலும் மேலுமென விரித்தெடுப்பார்கள். அவர்களின் யோனிகள் எத்தனை குறியும் தாங்கும். இளம் பெண்கள் முதல் சிறுமிகள் வரை காமம் கொண்ட அணங்குகள். அவர்களைப் புணரும் பொழுது அவர்கள் மகிழ்ச்சியில் கூச்சலிடுவார்கள். அவர்கள் வன்கலவிகளில் கிளர்ச்சி கொண்ட குடிகள். கொன்று தலை வெட்டிச் சீறும் குருதியில் மேலும் பெண்களைக் கிடத்திப் புணரும் வாய்ப்பை நம் நிலத்தில் ஆற்ற முடியாது. எல்லைகள் கடந்து போர் புரிவதே களியாட்டு வெறிக்குச் செல்லும் பாதை. நாம் அவர்களைப் புணரவே அவர்கள் இந்தத் தீவிற்குக் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களை நாம் புணர்ந்து கொல்லாமல் விட்டால் நாகங்களென நம்மைத் தீண்டிக் கொன்று விடுவார்கள். வஞ்சம் கொண்ட கொடூரிகள் என அவர்கள் சொல்லிச் சொல்லி இளம் படைகளை வெறியேறுவார்கள். தமிழ்க்குடி எல்லைகளுக்குள் நுழையும் இளம் படைகள் முதலில் நுழைவது மனைகளுக்குள் தான். அங்குள்ள சிறுமியிலிருந்து தொடங்கி முது பெண்டிர் வரை அளைந்து கொடுகலவி புரிந்து தலை வெட்டி எறிகையிலேயே தான் ஒரு சிங்கை வீரனென அவன் உளம் நிறைவு கொள்ளும். அவர்கள் கதறும் மொழியை படைகள் அறியாவிட்டாலும் அவர்கள் முகங்களில் துடிக்கும் அழுகையையும் கெஞ்சலையும் வாழ்த்துகள் எனப் பொருள் கொண்டார்கள். எங்களைப் புணருங்கள் என அழைப்பதாக முதுபடையினர் மொழிபெயர்ப்பார்கள்.

பெண்புலிகளைக் களத்தில் எதிர்கொண்ட பின்னர் சிங்கைப் படைகள் மேலும் கொலை வெறிக் கலவிகள் புரியும் விசை பெற்றிருந்தார்கள். வெல்லும் களங்களில் குற்றுயிராய்க் கிடப்பவர்களைப் புணர்ந்தாடினார்கள். பெண்புலிகளையும் தமிழ்குடிப் பெண்களையும் இட்டு வைத்திருக்கும் சிறைச்சாலைக் காவற் பணிக்குக் கடும் போட்டியிருந்தது. சிறைச்சாலைகள் அல்லும் பகலும் அவர்களின் அலறல்கள் பட்டு அதிர்ந்து கொண்டேயிருக்கும். சித்திரவதைகள் என தனித்து எதுவும் புரிவதில்லை. உயிருடன் அங்கு இருப்பதையே சித்திரவதைகளின் நரகமெனத் தோன்றச் செய்வார்கள். கிழப்படையினர் இளம் பெண்களை நூதனமான வழிகளில் துன்புறுத்தி இன்புற்றனர்.

அசல ஒருமுறை ஆகுரவத்தைச் சிறைச்சாலைக்குச் சென்ற பொழுது ஐந்து பெண்புலிகளைக் கால்களையும் கைகளையும் விரித்துக் கட்டி அந்தரத்தில் தூங்க
விடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தான். சிறைச்சாலைத் தலைமைக் காவலாளியின் அறையது. அவர்களது உடலிலிருந்து மலமும் சிறுநீரும் மாதவிடாய்க் குருதியும் வடிந்து வடிந்து அந்த இடமே கொடுநாற்றத்தில் உறைந்திருந்தது. அவர்கள் உடலிலிருந்த நகக்காயங்களில் குருதி கெட்டித்துக் கெட்டித்து திரும்பத் திரும்ப அந்தக் காயங்கள் கிளறப்பட்டிருந்ததைக் கண்டு சினமுற்று அக்காவலாளியை அழைத்துக் கடும் சொற்களில் பேசினான். அவன் சிரித்துக் கொண்டே “இவர்களை மீண்டும் உயிருடன் தமிழ்க்குடி எல்லையில் விடுவோம் தளபதி. மீண்டும் வில்லெடுக்க இயாலது விரல்களை முறிப்போம். இவர்கள் ஊன உடல் தான் நம் பதில்மொழியென்பதை அவர்கள் அறியட்டும். வாளும் வில்லுமெடுக்கும் பொழுது பெண்களின் கரங்களில் நடுக்கு எழ வேண்டும். நம் சிறைச்சாலைக் கதைகளால் அவர்கள் துயில்கள் நிரந்தரமாய் அகல வேண்டும். இதோ தொங்குகிறார்களே இந்த வேசிகள். இவர்களை நான் புணரவே இல்லை. இங்கு இப்படியே நான்கு நாட்களாகத் தூங்குகிறார்கள். இளம் வீரர்களை அழைத்து இவர்களை மெல்லிய சாட்டைக் கயிறுகளால் யோனியில் அடிக்கச் சொல்லுவேன். முலைகளில் சிறிய கத்திகளால் மெல்லிய கீறல்களிட வைப்பேன். ஒருத்தியின் காம்பை அரிந்திருக்கிறேன். உதடுகளைக் கடிக்கச் சொல்லிக் காயங்களால் வீங்க வைத்தேன். கால்களை அறையச் சொல்லி பிருஷ்டங்களில் கதைகளால் அறைய வைத்தேன். கதறிக் கதறிக் குரல்கள் அறுந்து நிற்கின்ற இவ்வேசிகள் எத்தனை குலவையிட்டு நம் வீரர்களைக் கொன்று களித்திருப்பார்கள்.

அரசர் இவர்களை எப்படியும் வதைக்கச் சொல்லிய ஆணை என்னிடமுண்டு” என நகைத்தபடி சொன்னான். அசல தன் கரத்தால் சுவரில் ஓங்கி அறைந்து அங்கிருந்து திரும்பினான். ஓடிச் சென்று குவேனியைத் தூக்கிக் கொள்ள வேண்டுமென விழைந்தான். இத்தகைய கொடியவர்களிடம் அவள் சிக்கிக் கொண்டால் என்னவாவாள் என அஞ்சி அஞ்சித் துயில் கெட்டலைந்தான்.

அசலவின் குடியில் அன்னைகளின் சொல்லே முதன்மையானது. பெண் குழவிகளை அன்னையெனவே மதிப்பார்கள். தன் அன்னை இந்தச் சிறைச்சாலையை ஒரு கணம் நோக்கினால் தன் கழுத்தறுத்து வீழ்வாள் என நடுங்கினான். தன் படைகளைக் கொடுகலவி புரியக் கூடாது என ஆணையிட்டிருந்தான். மலகந்தகம அந்த ஆணையை அறிந்து அசலவை அழைத்து வசை பாடினான். அசல பற்களை வாய்க்குள் நறுவிக் கொண்டு அவ்வசையைக் கேட்டான். அக்கணமே அவனை அறைந்து கொல் என அவன் உளம் துள்ளியது.

தமிழ்க்குடிகள் சிங்கைப் பெண்களைக் கவர்வதில்லை. புணர்ந்து கொன்றதாக ஒரு நிகழ்வும் அறிந்ததில்லை. அவர்கள் கண்ணியமே அவர்களின் பலம் என அசல எண்ணிக் கொண்டான். ஏனென்றறியாமல் நீலழகரின் கால்களில் ஒராயிரம் தடவைகள் அகத்துள் வீழ்ந்து எழுந்து கொண்டான். சிறைச்சாலைகளைப் பார்த்த பின்னர் குவேனியை அவன் தொடுவது அரிது. அவன் துயிலும் போது நெஞ்சில் படுத்தபடி சொல்லாடும் குவேனி அவனின் நெஞ்சு தாளமற்றுத் துடிப்பதை நோக்கித் தந்தையை எழுப்புவாள். கொடுங் கனாவிலிருந்து விழிப்பவனென அவன் எழுந்து குவேனியைக் கண்டு அஞ்சுவான். அவனது விழிகளில் அந் நடுக்கத்தை கண்டது முதல் குவேனி அவனை விட்டு விலகத் தொடங்கினாள். அவளறியாத தந்தையென அவன் ஆகிவருவதை அவள் அகம் உணர்ந்தது. குவேனி பெண்ணாக மணமுடிக்க முன்னர் சிங்கை புரியை தான் வென்று முடி சூட வேண்டும் என வகுத்துக் கொண்டான். போர்க்களங்களில் புலிகளை வெல்வது அரிது. வென்றாலும் அது நிலையற்றது. நீலழகர் உயிருடன் உள்ள வரை போர் நிகழ்ந்தே தீரும். அவரது சொல்லுக்குத் தமிழ்க்குடி தன் கடைசிப் பிள்ளையையும் போருக்கு அனுப்பும் என அவன் அறிந்திருந்தான். தமிழ்க்குடி முற்றழிந்தே போர் ஓயும்.

நீலழகர் ஏதேனுமோர் வகையில் மரணித்தால் போர் முடியும். அதன் பின்னர் மலகந்தகமவையும் இளவரசர்களையும் கொன்று முடிசூடிக் கொள்வது என அசல எண்ணியிருந்தான். அவனது இணைத் தோழர்களான ஆறு தளபதிகளை அவன் ஒருங்கிணைத்து அவன் திட்டத்தை அவர்களுக்குள் விதைத்தான். அவர்கள் அறுவரும் ஆறு புறக்குடிகளைச் சேர்ந்தவர்கள். போர் புரியும் குடிகளென அரசால் ஆணையிடப்பட்டவர்கள். அதற்குண்டான இணை மதிப்பு அவர்கள் குடிகளுக்கு அளிக்கப்படவில்லை. ஓயாத போரில் மடியும் வீரர்களின் அன்னையரும் உறவினரும் தளபதிகளையே வசை பாடினார்கள். சொல் அள்ளித் தூற்றினார்கள். தென்னகப் படைகள் நுழைந்து நடத்தும் பெருந்தாக்குதல்களில் களப்பலி அவர்கள் குடிகளே. அவர்கள் பெண்களைக் கவர்ந்து ஆலயங்களை உடைத்துச் செல்வங்களை அள்ளிச் செல்வார்கள் பாரதத் தென்னகர்கள். தென்னக அரசுகளின் போர்களில் சிங்கை புரியின் போர்வெறி இருந்தது. புலிகளுக்கும் அவர்களுக்குமிடையில் உள்ள பேதத்தை அசல தன் தோழமைகளுக்கு உணர வைத்தான். இங்குள்ள தமிழ்க்குடிகளின் போர் நெறியை அரச நெறியாக ஆக்குவதே முதன்மையானது என அவன் அவர்களை ஏற்கச் செய்தான். போர்களில் செல்வம் கவர்தல் அன்றிப் பெண்களைத் தொடுதலை எக்கணமும் அனுமதிக்கக் கூடாது என அவர்களை ஒருக்கினான். புறக்குடிகள் தம் சொந்தப் பெண்களின் இழப்புகளிலிருந்து அந்த ஒருமைக்கு வந்து சேர்ந்தனர்.

தென்னகத் தாக்குதல் ஒன்றில் விஜய வீர எனும் தளபதியின் குடியில் ஏராளம் பெண்கள் கவர்ந்து செல்லப்பட்டிருந்தனர். மலகந்தகமவிடம் அவர்களை மீட்கும் போரிற்கு அனுமதி கேட்டிருந்தான். “சென்றவர்களை இனி மீட்கப் போவதில் இழப்புகளே அதிகம். எல்லைகளை பலப்படுத்துங்கள். உங்கள் குடிகளிகளிலிருந்து கடத்தப்பட்ட பெண்களின் உறவினரைப் படையிணையுங்கள்” என உத்தரவிட்டான் மலகந்தகம. விஜயவீர அசலவைச் சந்தித்து மலகந்தகமவின் தலையைக் கொய்யப் போவதாகச் சீறினான். அவனைக் கொன்றால் அவனது மகன்கள் ஆட்சிக்கு வருவார்கள். குடிகளின் முற்றொருமை அவர்களுக்கே உண்டு. புலிகளை வென்று முடியுரிமை வெல்வதே நிலைத்து நிற்க வழியென அவனை ஆற்றினான்.

அசல திண்ணையில் சாய்ந்தபடி உணவு வாசனை எழுந்த திசையை நோக்கினான். அரசர்கள் உண்ணும் உணவு சத்திரத்தில் எளிய குடிகள் முன் போடப்பட்டிருப்பதை நோக்கினான். குடிகள் பேசிச்சிரித்தபடி உணவுண்டனர். எழுந்து சென்று உணவுண்ண அமர்ந்தான். வாழையிலை விரிக்கப்பட்டு சுடுசோறும் ஐவகைக் கறிகளும் இடப்பட்டன. உணவிட்டவர்களின் முகத்திலிருந்த களிப்பு அவனை நெகிழ்த்தியது. உணவை உண்டு வயிறு நிறைந்திருந்த பொழுது கனிக்குழைவில் ஓரகப்பை அள்ளி வைத்த இளம் பெண்ணொருத்தி “உண்ணுக அண்ணா” என்றாள். அவளை நோக்கிச் சிரித்தபடி கனிக்குழைவை உண்டான். அவள் அவனின் முன்னமர்ந்து “நீங்கள் சரியாகவே உண்ணவில்லை. மூநாட்களுக்கு வணிகம் செய்ய உடலில் பலம் வேண்டும் அண்ணா. நீங்கள் உண்ட உணவு எழுந்து செல்லும் போதே செரித்து விடும்” எனச் சொல்லிச் சிரித்தாள். அசல நன்கு பயின்ற தமிழ்ச்சொற்களை எடுத்து “தங்கையே. என் உடலில் வாயிலிருந்து குரல் வரும் வரையாவது இடம் எஞ்சியிருக்க வேண்டுமல்லவா. நீ கொடுத்த உணவு என் கழுத்து வரை உள்ளது. இன்னும் உண்டால் இங்கேயே துயில் கொண்டு விடுவேன். விழிக்கும் போது அடுத்த வேளை உணவுடன் நீ நிற்பாய்” எனச் சொல்லி நகைத்தான். அவள் சிரித்து விட்டு எழுந்து சென்றாள். அசலவுக்கு அவன் சகோதரி சுமித்தையின் நினைவு எழுந்தது. அவள் நடந்து செல்வதைப் பார்த்தவன் அவள் அன்னம் அளிக்கையில் அவளிடம் தோன்றிய முகம் சுமித்தையினுடையது என எண்ணினான்.

தன்னுடன் இரு வீரர்களை மட்டுமே அவன் உடனிருப்பெனக் கொண்டிருந்தான். சுபலவும் விக்கிரமவும் ஏற்கெனவே உண்டுவிட்டு வயிற்றைத் தடவியபடி திண்ணையில் மலைக்கரடிகளென உருண்டு கொண்டிருந்தனர். அவர்களின் முன்னே சென்று “பணியிருக்கிறது நண்பர்களே. இங்கேயே துயின்றால் என்ன செய்வது” எனக் கேட்டு அமர்ந்தான். எழுந்தமர்ந்த விக்கிரம “நான் எவ்வளவோ சொன்னேன். இவன் தான் இன்னும் இன்னுமெனக் கேட்டான். உளம் கேட்காமல் நானும் உண்டு விட்டேன். அவர்களும் எத்தனை தடவை தலை தூக்கினாலும் அன்னத்தால் இலையை நிரப்புகிறார்கள்” ரகசியமான குரலில் அசலவின் செவிகளுக்கு அருகே சென்று “நம் திட்டமறிந்து உணவிட்டே நம்மைக் கொல்வதெனத் தீர்மானித்திருப்பார்கள் போலும்” என உரக்க நகைத்தான். அசல அவன் தோளில் அறைந்து “எழுந்திருங்கள் சோற்றுக் கலயங்களே. உங்களை அழைத்து வந்தேனே நான் தான் அறிவிலி” எனச் சிரித்துக் கொண்டே எழுந்தான்.

குடிப்பெருக்கை நோக்கியவன் அரண்மனை செல்லும் சிறுவீதிகளை அறியும் வகையில் நடந்து செல்ல விழைந்தான். குடிகளின் மகிழ்ச்சியான முகங்கள் அவனையும் தொற்றிக் கொண்டன. மகிழ்ச்சி ஒரு தொற்று நோய் என எண்ணிக் கொண்டான். இளவெயில் கலைந்து சூரியன் தகிக்கத் தொடங்கிய போது அவனுடைய நடையில் முறுக்கு ஏறியிருந்தது. சுபல அங்கிருந்த இளம் தாய்களை நோக்கிய பின் திரும்பி “தளபதி. நம் பெண்களுடன் இவர்கள் நட்புக் கொண்டால் அவர்களையும் தங்களைப் போல் ஆக்கிவிடுவார்கள். பிறகு விக்கிரமவின் மனையாள் அவனை நிலத்தில் போட்டு நெஞ்சிலே மிதித்துப் பிதுக்கிவிடுவாள்” எனத் தன் நீள விழிகளை உருட்டிக் காட்டி நகைத்தான். குழவிகளை நோக்கி அவர்களின் ஆடைகளைப் பார்த்துக் கொண்டிருந்த விக்கிரம “எனது குட்டி இளவரசிக்கும் இப்படி ஒரு ஆடை செய்து கொடுக்க வேண்டும். அழகாயிருப்பாள்” எனச் சொன்னான். அவனது இளம் தோற்றம் அவனைத் தந்தையென எண்ணச் செய்யாதது.

சிறு குழுவாக வீதியால் சென்ற விறலியர் குழுவொன்று விக்கிரமவை மறித்து அவனுடன் பூசலிட்டார்கள். “எங்களைப் பார்த்தால் அழகிகளாகத் தெரியவில்லையா மந்தனே. குழவிகளை நோக்குகிறாய்” என்றாள் அதிலிருந்த மெல்லிய விறலியொருத்தி. அசல இடையில் கரங்களை நீட்டி புகுந்து கொண்டு “உங்கள் அழகை நோக்கி விழிகள் ஒளியிழந்து விடுமென அஞ்சியே எனது நண்பன் குழவிகளை நோக்கினான் குமாரிகளே” என்றான். அவனது வேடிக்கையான ஆடைகளைப் பார்த்த இன்னொருத்தி “விழவுக்கு வருவதற்காக ஒரு பருவமாக இருந்து துன்னிய ஆடையா இது. போ. போய் மாற்றுடை அணிந்து வா. இல்லையேல் என் மனைக்கு வா புத்தாடைகள் தருகிறேன். அதில் நீ இளவரசன் போல் தோன்றுவாய்” எனச் சொல்லாடி நகைத்தாள். அசல “பேறு பெற்றேன் குமரியே. உங்கள் ஆடைகளைக் கொடுத்தாலும் அணிந்து கொள்ளச் சித்தமாயிருக்கிறேன்” எனச் சொல்லி குறும்புடன் புன்னகை புரிந்தான். அவள் அவனது நெஞ்சைத் தள்ளி பின் அவனை ஏறிட்டு நோக்கிவிட்டு “எனது கச்சைகள் உனக்குப் பொருந்தும். ஆனால் சற்றுப் பருமனாக இருக்கிறாய். இடையாடைக்கு என் அன்னையின் துணிகள் தான் வேண்டும்” என்றாள்.

சுபல அந்த வேடிக்கையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க பொலியும் நிறைகுடம் போன்றிருந்த விறலியொருத்தி சுபலவின் வாயில் அடித்து “இந்தத் தவளையும் உங்களுடன் தான் வந்ததா” என அசலவைக் கேட்டாள். சுபல திடுக்கிட்டு அசலவை நோக்கினான். “ஓம். அவனது வாய் பிறவியிலிருந்தே அப்படித் தான். அவனுக்கொரு வினோத நோயுண்டு” என்றான். அசல சொல்லப்போவது என்னவென விறலிகள் மூவரும் நோக்கினர். “பேரழகிகள் என்று யாரையேனும் அவன் பார்த்து விட்டால் அவனால் வாய் மூட முடியாது. அதில் யாரேனும் ஒரு பேரழகி முத்தம் கொடுத்தால் நோய் மாயமாகிவிடும்” எனச் சொல்லிக் கைகளை விரித்தான். சுபல தன் வாயை மேலும் திறந்து கொண்டு அவர்களை நோக்கினான். “அஹ். தவளை வாயில் நாங்கள் முத்தமிட மாட்டோம். வேண்டுமென்றால் உங்களுக்கொரு முத்தம் தருகிறோம். அதை நீங்கள் அவனுக்குக் கொடுங்கள்” எனச் சொல்லி உரக்கச் சிரித்தாள் நிறைகுடமென நின்றிருந்தவள். “எனக்குள்ள நோயைச் சொல்ல மறந்து விட்டேன் குமரியே. அழகிகள் என யாரேனும் முத்தமிட்டால் நான் மயங்கி விடுவேன். எளியவன். எங்களை மன்னிக்கக் கூடாதா” எனக் கெஞ்சுபவன் போலக் குரலைக் குழைத்தான். அசலவின் தோள்களில் மெல்லிய தட்டுத் தட்டி விட்டு “பிழைத்துக் கொள்வாய். வாயுள்ள பிள்ளை” எனச் சொல்லிவிட்டு எதிர்வந்த வாலிபர்களை நோக்கிப் பூசலிடச் சென்றார்கள். “இன்னும் மூநாட்களுக்கு ஆடவர் இங்கே அபலைகள். யாருடனும் பூசலிட வேண்டாம். விழிகளை நேர்நோக்காது வாருங்கள்” எனச் சொல்லிச் சிரித்து சுபலவையும் விக்கிரமவையும் அழைத்தபடி குடிகளை விலக்கியபடி தன் நோக்கை ஒருக்கியபடி நடந்தான் அசல. அவன் நடையில் ஒரு சிம்மம் எப்போதுமிருப்பதை உணர்ந்த இருவரும் அவனைத் தொடர்ந்து நிழலெனப் போனார்கள்.

TAGS
Share This