46: மாகதா

46: மாகதா

“உங்கள் சொற்கள் எதன் பொருட்டு எழும் பாணரே” என அமைதியில் எழும் நதியலையென ஒலித்த குரலில் கேட்டார் மகாசோதி. நீண்டு தடித்த பேரரச மரத்தில் நலுங்கிக் கொண்ட ஆயிரமாயிரம் இலைகளின் தளும்பல்களின் கீழ் பனையோலையால் இழைக்கப்பட்ட நீள் பாயில் ஊழ்கத்தில் உடலமைத்து அமர்ந்திருந்தார். அவர் விழிகளில் ஒரு குறுஞ்சிரிப்பு நித்திய கல்யாணி மலர்களை இளம் பாணனுக்கு நினைவூட்டியது. காற்று தேகத்தை உரசி அமைதி அமைதியென ஒலிப்பது போல் கேட்டது. அவரின் விழிகளை நோக்கிய பின் வானை நிமிர்ந்து நோக்கினான். சூரியன் உச்சியில் விளைந்த சிறுகுமிழ்ச் சுடரென ஒளிர்ந்து கொண்டிருந்தது. மேகங்களின் குவையடுக்குகள் பல்லாயிரம் பொருள்களில் கனவு உயிரிகளென விண்ணளந்து கொண்டிருந்தன. தூவெண்ணிதழ்களான மாமலர்க் கொத்துகள் என எண்ணிக் கொண்டான். அவரது கேள்வியை அலை தொட்ட கரையென அமைந்து ஊற சிலகணங்களை இடைவெளி விட்டுக் கொண்டான். வேறுகாடார் பட்டினத்தின் மடாலயத்தில் துயில் கொண்டிருந்தார். பிரேதம் போல் நெஞ்சில் கைகளைக் குவித்து தண்கற்கள் பாவிய மடாலயக் கூடத்தில் அவரின் தேகம் பரத்தி வைக்கப்பட்ட நீள்மலரெனெத் தோன்றியது. பார்வையை விசிறி தன்னைச் சுற்றிலும் அசைபவற்றையும் அசையாதனவற்றையும் நோக்கினான். மடாலயத்தில் சிங்கைக் குடி வாணிபர்களும் தமிழ் புத்த துறவிகளும் சொல்லாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கிடையே இனிப்பான புன்னகைகள் பரிமாறியபடியிருந்தன. அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரே என எண்ணிக் கொண்டான் இளம் பாணன். திரும்பவும் மகாசோதியின் விழியை நோக்கிய போது அக்கேள்வியை எழுப்பியவர் அங்கில்லை என்பது போல் அமர்ந்திருந்தார்.

மெல்லிய தாளத்துடன் புகை நழுவியேறுவது போல் சுவாசம் ஏறியிறங்கியது. இளம் பாணன் சொற்களைக் கைவிட்டு அவர் தொட்டிருக்கும் அமைதியை அகத்தால் துழாவி அங்கே சிலநொடிகள் அமர்ந்திருந்தான். அவனது உடலும் ஊழ்கமென தன்னை அமைத்தது. “துறவியே. நான் கனவுகளால் உலகைக் காண்பவன். எளிய உலகின் அன்றாடத்தில் என்னால் வாழ ஒண்ணவில்லை. சொற்கள் ஏணிகளெனவோ பசுஞ்சிறகுகளெனவோ என்னில் எழுந்தமையும் போது நான் இங்கிருந்து பிறிதொன்றுள் என்னை அமைத்துக் கொள்கிறேன். அங்கு என் சொல்லப்படாத காவியத்தின் திசைவெளிகளில் காற்றென உலவுகிறேன். சொற்கள் எங்கோ தவறி என்னைத் தீண்டும் பொழுது சொற்களைத் தக்கைகளெனப் பற்றியபடி வாழ்வின் அலைகளில் நீந்திச் செல்கிறேன். கனவே என் சொற்கள் துறவியே.

முதன் முறையாகச் சொற்கள் என்னைத் தொட்டு எழுப்பியதை இக்கணம் என உணர்கிறேன். காலாதீதத்தில் சொற்கள் மானுடரைச் செலுத்தும் வாயில்களென நின்றிருக்கிறன. காவியமோ நாம் எண்ணாச் சொற்களில் அமைந்து மானுடரைக் கடந்து மெய்மை என ஒன்றை ஆக்கிக் கொண்டு இவ்வுலகை வேறொரு பேராடியில் பிம்பங்களென ஆற்றுகின்றன. சொல்லை அறிந்தவர்கள் அப் பிம்பங்களை மெய்யென ஆக்கிக் கொண்டு அவ்வுலகு ஏகி மீள்கிறார்கள். சொற்களை உளம் தீண்டாத போது அமையும் மெளனம் அச்சமூட்டுவது. இருள் கொண்டது. இருளை நான் விரும்புபவன். ஆனால் சொற்கள் அங்கு விண்மீன்களென விழித்திருக்க எண்ணுகிறேன். சொற்களின்றிப் புடவியில்லை. புடவியில் எந்த உறவும் சொற்களின் இணைவால் ஆகுபவை. புடவியின் அழகும் அழகின்மையும். இருப்பும் இன்மையும். நன்மையும் தீங்கும். துயரும் துயரின்மையும் சொற்களினாலேயே சிருஷ்டிக்கப் படுகின்றன. சொற்களே நம்மை ஆக்கி நம்மை அழிக்கும் நியதிகள். அதை அக்கணம் அடைபவன் எனும் நிலையில் நான் சிலபோது என் இருப்பின் ஊழ்கத்தில் திளைக்க சொற்களை நாடுகிறேன். அவை என்னைக் கைவிடும் போது பேரிருளில் நின்று ததும்பிக் கொண்டிருக்கிறேன்.

சில பொழுதுகளில் எவ்வளவு எளியவை சொற்கள் எனத் தோன்றும். உளம் கலைந்து விம்மல் கொள்ளும். உடல் நடுக்குக் கொண்டு காய்ச்சல் எழும். சித்தம் பிணம் மொய்க்கும் ஈக்களென சொற்களால் வதைபடும். எண்ணியமையாத சொற்கள். எங்கும் புரண்டு கொண்டிருக்கும் சொற்கள். நான் தொட எழாமல் விலகிச் செல்லும். சொற்கள் நீங்கிய நான் ஒரு இன்மை துறவியே. நானே சொல்” என்றான் இளம் பாணன். சொல்லிய பின் அச்சொற்கள் பொருளின்றி நீரில் கரைந்த உப்பென அவனுக்குள் பரவியது. பின் அந்த நீருள் அவ்வுப்பு நீரெனத் தோற்றம் கொண்டிருக்கிறது என எண்ணி மூச்சை இழுத்துக்கொண்டான்.

மகாசோதி அவன் முகத்தை இளங் குழவியை நோக்கும் அன்னையென நோக்கி மெல்லச் சிரித்தார். “ஆக. நான் இறுதியில் சொல்லைக் கண்டேன் பாணரே. இதுவரை என்னுள் அமைதியென உறைவது ஒரு சொல். மானுடர் என அமையும் சொல்” எனச் சொல்லி மேலும் சிரித்தார். அவை வேழங்களிடம் விளையாடும் சிறுவர்களின் அச்சமற்ற சிரிப்பு. அவரைக் கண்டது முதல் அவர் அஞ்சுவது எதையெனவே அவனுளம் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தது. அவரின் சிரிப்பிடை வெளியை நோக்கியவன் அதைக் கேள்வியென யாத்து முன்வைத்தான்.

“வாழ்வு அச்சத்தினால் ஒளிரும் நிலவு இளம் பாணரே. நீங்கள் இளையவர். உங்களிடம் அந்தப் பிரகாசம் என்னை விடச் சற்று அதிகமாகவே வெளிச்சம் கொள்ளும். மேலும் நீங்கள் கவிஞர். உங்களை ஆட்டுவிக்கும் அச்சங்களைத் துறவிகள் அடைய முடியாது. ஆழ்ந்த பொருளில் அவை மானுடருக்குரியவையே அல்ல. நான் உங்களின் உளத்தில் ஒருகணம் என்னை இருத்தி நின்று நோக்கினால் அச்சமென்பது எவ்வளவு மகத்தான ஈர்ப்புக் கொண்ட எரிதீயென எண்ணுகிறேன். வியப்பில் எழுவது அச்சத்தின் வேர் முனையே. திகைப்பில் நடுங்குவதும் அச்சமே. துயரில் மீட்டப்படுவதும் அச்சத்தின் தந்திகளே. இன்பம் என்பதே துயரின்றி இருத்தல் எனச் சொல்வது என் நெறி. அச்சமின்றி அமைவதே இன்பமென அறிக. அச்சம் எளிய உளங்களைத் தீராது உலைக்கும் நோய். அச்சங்களிலிருந்தே புடவியில் அனைத்தும் அமைந்தன. மானுடர் வணங்கும் தெய்வங்கள் முதல் மானுடர் கொள்ளும் காதல் ஈறாக அச்சமே ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொன்றைச் சமைக்கிறது. அச்சமிழந்து எழும் ஒரு நிலவு நிலவேயல்ல. அது வெங்கதிர் கொண்டு தன்னில் தானே எரியும் சூரியன். அச்சமற்றவர் குடி வாழ்க்கைக்கு எதிரானவர். அவர் எதையும் அஞ்சப் போவதில்லை. அறங்களோ நெறிகளோ கூட அவரை அஞ்சவைக்கப் போவதில்லை. ஆகவே தான் உமது நெறியில் கானேகுகிறார்கள். எனது நெறியில் தலை மழித்து இரந்துண்டு குடிநீங்கி வாழ்கிறார்கள். குடிகளுக்கு அச்சம் ஒரு சூரியன் போல் நிலை கொண்டிருக்க வேண்டியது. அச்சத்தின் ஒளியிலேயே அவர்களால் எதனையும் விழிகொண்டு நோக்க முடியும். ஆகவே தான் துறவிகளையும் அவர்கள் நோக்குகிறார்கள். அவர்கள் பணிவது அவர்கள் அஞ்சுவதன் முன் என்பது ஒரு போதும் மாறப்போவதில்லை. அச்சமற்றவர் துறவியென அமைகிறார். விலகி நின்று ஒளிகொள்கிறார். அவர் நெறியை அவரே ஈட்டி அதில் ஒன்றென இணைவு கொள்கிறார்.

நான் அஞ்சுவதென்று இப்புடவியில் எதுவுமில்லை இளையவரே. இங்கிருக்கும் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று ஆடலென இசைவு கொண்டிருப்பது. ஒன்றை இன்னொன்று நீங்க முடியாதது. முற்றறிதல் எனும் கனவு கவிஞர்களுக்குரியது. காவியங்களில் மெய்மையெனச் சூடுவதற்குரிய அணிகலனது. முற்றறிந்தவர் இருப்பற்றவர். அவர் செயலாற்றும் தோறும் அறிந்ததை மேலும் அறியாமையில் வைத்து நோக்குகிறார். அறியாமைகளுக்குள்ளிருந்து எழும் சிற்றறிதல்கள் அவரது அறிதலை மேலும் துலக்கி ஒளிர்விடச் செய்யும். கேள்வியற்று அமையும் துறவி ஒரு மெளனமான கல். எஞ்சும் சொற்களுடன் அமைபவர் மேலும் ஒரு எளிய சொல்லின் பளிங்குக் கணத்திற்கெனத் திறந்திருப்பவர். நான் அறியாதது என எதுவோ சிலது எஞ்சும். அனைத்தும் அறிந்தேன் என எஞ்சும் போது ஆணவம் ஒரு விதையென அகத்தில் முளைவிடும். அறிதலென்பது விதைகளற்ற மண்ணில் பொழிந்து கொண்டேயிருக்கும் மழை” என்றார் மகாசோதி.

அவரது சொற்களில் ஊடிழையில் ஒரு மின்கதிர் நெளிவலைவென விரிவதை நோக்கிய இளம் பாணனுள் எழுதாகமெனக் கேள்விகள் விளைந்தன. “துயரை நீங்கள் அஞ்சுவதில்லையா துறவியே. பிறர் துயர் உங்களை உலுக்குவதில்லையா. பிறர் பொருட்டுச் சிந்தும் கண்ணீர் குருதியை விட அடர்த்தியானதில்லையா. இந்த தீவின் கொடுயுத்தங்களின் சிறுதீற்றல்களே என்னை அகம் கொந்தளித்துக் கால்கள் மண்ணைத் தொடாது எழவேண்டுமென எண்ண வைக்கின்றன. மானுடர் முடிவின்றி மோதிக் கொண்டும் எளிய அன்றாடங்களின் துயர் மேடைகளில் தலை வைத்தபடியும் குருதியும் வாழ்வும் சிந்தக் கிடக்கிறார்கள்.

கெளதமர் அடைந்த துயரல்லவா அவரை ஒளியென ஆக்கியது. அம்முதிய எலும்புடலில் குறிகளெனக் குற்றப்பட்டிருப்பவை மானுடர் கொள்ளும் மெய்த் துயர்களல்லவா. அவர்கள் அவற்றை நீங்க முடியாமையின் துக்கத்தினால் அகம் கொள்ளும் கனிவில் மெலிந்தவையல்லவா. உங்களது அகமும் துயரை அறிந்திருக்கும். நீங்கள் ஞானியுமல்லர். ஞானிகள் சொற்களற்ற பாறைகள் போன்றவர்கள். சொல்லெடுக்கும் ஞானிகள் ஞானத்திலிருந்து ஒவ்வொரு கல்லாக உடைகிறார்கள். மானுடச் சொற்கள் அவர்களை மோதி மோதி அகத்தை உண்டாக்குகின்றன. ஞானி அகமற்றவர்.

பெண்களால் ஞான வழியைத் தேர்ந்து அதில் சென்றமைய முடியாமை எதனால் தளையுண்டது. அகத்தை நீங்குவதை அவர்களால் எண்ணவும் இயலாது. ஆண்களால் அகம் அழித்துக் கொள்ள இயலும். அகமற்ற மெளனம் கூடும் வாய்ப்பைத் தம் உயிரியல்பால் அடைந்தவர்கள் என எண்ணுகிறேன்.
புத்த பெண் துறவிகள் அன்னையர் போல் தோன்றுகிறார்கள். அவர்களிடம் புத்தரின் கனிவு உண்டாக்கும் வண்ணமே சுடர்கிறது. ஞானமுண்டாக்கும் இன்மை நிகழ்வதில்லை” எனச் சொன்ன இளம் பாணன் அச் சொற்கள் அவனில் ஓடுகின்ற புரவியின் பிடரிச் சிலிர்ப்புகளென நிறைந்து குலைவதை நோக்கி மெல்ல அமைந்து கொண்டான்.

“உங்களிடம் ஏராளமான வினாக்கள் இருப்பது நல்லது தான் இளையவரே. காவியங்களை ஆக்குபவர்களின் இயல்பு அது. நீங்கள் அவற்றை ஒன்றுக்கு ஒன்று எதிரிடையாகக் கொண்டு துலாப்புள்ளியை சென்று சேர இயலும்.

நான் இளமையில் துயர் கொண்டிருக்கிறேன். அவை எளிய அனுபவங்களென இன்று சுருங்கி விட்டன. துயரம் எண்ணும் தோறும் பெருகுவதென்பது இளைமையின் எண்ணம். காலம் அவற்றை ஒவ்வொன்றாக உதிர்த்து வெறுங் காம்பென நிற்கச் செய்யும் வரை ஓய்வதில்லை. சிலர் அதை அறியாமலேயே உதிர்ந்து மடிவார்கள். சிலருக்கு அவை உதிர்வதன் போதமிருக்கும். சிலருக்கு அவை மகிழ்ச்சி. சிலருக்கு அவை பெருந்துயர். துயரே ஆயிரமாயிரம் பேரிதழ்கள் கொண்ட தாமரை. அதையே புத்தரின் காலடியில் வைக்கிறோம். அது அவர் அத்துயரைச் சூடிக் கொள்ளும் பொருட்டல்ல. துயரை வென்றமைவரின் முன் வைக்கப்படும் துயர் எளியதாகி விடுகிறது. எனது துயர்களை அவரது காலடியில் வைத்த முதல் நாட்களில் அகம் கொந்தளித்திருக்கிறேன். அவரிடம் அகத்தால் உரையாடியிருக்கிறேன். சொற்கள் அவரது கற்சிலைகளில் அறைந்து வெடிக்கும் ஒலியெழக் கனவுகள் கண்டு விழித்திருக்கிறேன்.

ஒவ்வொருவரும் தேர்ந்து கொள்ளும் துயரே அவர்களது வாழ்வின் பாதையை உண்டாக்குகிறது. நான் அறிதலைத் துயராகத் தேர்ந்து கொண்டவன். இன்னொருவர் அன்றாட வாழ்வின் நெருக்கடியை கடும் வாதைகளுடனான மரணங்களை வறுமையை நோயை இழப்பை வெறுப்பை நீங்குதலை என எதையோ ஒன்றின் வழியில் ஞானத்தின் வழியைத் தேர்கிறார். ஞானம் துயர்களிலிலிருந்து தன்னை விடுவிக்கும் என எண்ண விழைகிறார். ஞான வழி அணுக எளியதாகவும் நடக்கக் கடினமானதாகவும் தோன்றுவது எளிய குடிகளை ஈர்க்கிறது. சில தொலைவு நடந்த பின்னர் தொடர்கிற வெறுமையை அவர்கள் அஞ்சுகிறார்கள். நிழலுமற்றுச் சென்றமரும் இருப்பின் அண்மையில் அதை விட்டகன்று வாழ்க்கைக்குத் திரும்புபவர்களும் உண்டு. புத்தர் தனது வாழ்வினால் ஆக்கியளித்திருப்பது ஞானம் மானுடருக்குச் சாத்தியம் எனும் வாய்ப்பையே. அவரின் பின் சென்ற ஒவ்வொருவரும் அடைந்தவை வேறு வேறு நிலைகள். அதை நாம் பொதுவாக புத்த நிலை என சுட்டிக் கொள்கிறோம்.

துறவி ஞானியல்ல இளையவரே. நான் துறவி. எனது இருப்பு ஞான நிலையை எய்தும் வரை நான் காத்திருக்க இயலும். என்னால் இப்பயணத்தை அச்சமின்றித் தொடர இயலும். ஆகவே நான் துறவி. ஞானம் எங்கனம் நிகழ்கிறது என்பதற்கு வரைபட விளக்கம் அளிக்க இயலாது. போரில் சிந்தித் தெறிக்கும் குருதியை நோக்கும் விழி ஞானத்தை அடைய இயலும். ஆனால் அதற்கான அகப்பயணம் அகத்திற்குள் நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். காத்திருப்பு மட்டுமே துறவியருக்கானது. காத்திருப்பும் கூட அகன்று ஊழ்கமென என்றோ நிகழும் தன்னிலையை நான் சொற்களால் சுட்ட முடியும். ஞானம் இப்போது சொற்களில் அனைவருக்கும் பொதுவென நின்றிருக்கிறது இளையவரே. ஆனால் அவை சொற்களின் கனவுகள். மெய்யை அறிவது மெய்யின் வழியிலேயே. நீங்கள் அதற்காக உங்கள் அகத்தால் தூண்டப்பட்டிருக்க வேண்டும். துறப்பதால் அல்ல விழிப்பதாலேயே அகம் ஞானத்தைக் காண்கிறது.

பெண்களுக்குக் கருப்பையே ஞான வழியென எண்ணுகிறேன் இளையவரே. அது அவர்களைச் சிறையிட்டு அன்னையெனும் பீடத்தில் அமர்த்துவதாக எண்ணிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் அன்னையாகும் பெண் ஞானத்தின் மீது கருணை கொண்டு அவ்வாய்ப்பை மானுடருக்கு அருளும் நிலையில் ஞானத்திலிருந்து ஓரடி பின்னிற்கிறார். அது ஞானத்தை விட மேன்மையான நிலை எனக் கொள்கிறேன். பெண்களுக்கு உயிரியல்பால் அளிக்கப்பட்டிருக்கும் கருப்பையே ஆணுக்கு ஞானமென அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கு அவன் தன்னைக் கர்ப்ப காலத்தில் சுமந்து ஈன்று கொள்கிறான். அன்னையாகும் பெண் அவள் உளம் ஊழ்கமெனத் திரள்கையில் அக்குழவியில் தன் ஞானத்தை அடைகிறாள். புடவியில் உயிர்களை ஆக்கும் பெரும்பணியை ஒவ்வொரு விலங்கினமும் பெண்ணிடமே கொண்டிருக்கிறது. பெண் கருப்பையைத் தன் ஞான கர்ப்பமெனக் கொள்கையில் அங்கு விளைவது ஞானத்தின் மலர். ஆணால் அதை உணர இயலாது. ஆண் தன் அகத்தைக் கருப்பையெனக் கனிந்து கொள்ள வேண்டியவன். பின் அதில் கருக்கொண்டு அமைய வேண்டியவன். ஆதலாலேயே பெண்களை விட இருமடங்கு தொலைவு பயணிப்பவன் ஆகிறான்.

புத்த பெண் துறவிகள் ஆண்களின் வழியில் ஞான வழியைத் தேர்கிறார்கள். ஞானத்தை அகத்தால் அறிய விழையும் பெண் ஆணென நின்று அத்தனை கீழ்மைகளையும் கொண்டவரென ஆகி நின்று கனிந்து அகம் கருக்கையிலேயே வழி அவர்களை ஏற்றுக் கொள்கிறது. ஞானத்தை அகத்தால் விழையும் எப்பெண்ணும் ஆணே. கருப்பையில் தன் ஞானத்தை அடையும் பெண் அன்னையே” என்றார் மகாசோதி.

அச்சொற்களால் இளம் பாணனின் உளம் அலைக்கொழிப்பென எழுச்சியடைந்தது “நீங்கள் சொல்வது அறியாமை துறவியே. நான் ஞானவழிகளை வெறுப்பவன். அது பெண்ணை நீக்குவதாலேயே முழுமையற்றது என எண்ணுகிறேன். தன் மனையாளையும் மகவையும் துறந்து புத்தர் எய்யும் எதுவும் எங்கனம் ஞானமெனப் புடவியில் பொருள் கொள்ள இயலும். அவரிடம் சுரக்கும் கனிவு என்னை அகம் விரியச் செய்வது மெய்யே. ஆனால் எந்த நெறிகள் அளிக்கும் ஞானமும் பெண்ணை விலக்குவதே. ஞானம் பெண்ணென அமைவது அவர்கள் அன்னையராகையில் என நீங்கள் சொல்வது அவர்களை மேலும் மேலுமெனக் குடிச்சிறைகளுக்குள் தள்ளுவதே என நீங்கள் எண்ணவில்லையா” என்றான்.

மகாசோதியின் உதட்டில் புன்னகை ஓர் அங்கமென அமைந்து நிற்பதை நோக்கிய இளம் பாணன் அவனது அகம் அவரை நோக்குந் தோறும் அவர் அறிந்தவை மெய்யென எண்ணச் செய்தது. மகாசோதி இன்முகத்துடன் “நாம் புடவியின் நியதிகளிலிருந்தே கனவை ஆக்கிக் கொள்ள இயலும் இளையவரே. உங்கள் சொற்களில் துடிக்கும் ஞான வெறுப்பென்பது கவிதையுள்ளம் கொள்ளும் அடிப்படை விலக்கம். ஞானம் விலக விலக உங்களை நெருங்கி வருவது.

இதில் எவ்வகை பேதமும் மானுட சிந்தனையால் நிகழ்த்தப்படவில்லை. இவை இயற்கையின் உயிரியல்புகளால் உண்டாக்கப்பட்டவை. இன்னும் ஆழமாக நோக்கினால் பெண்களே குடி எனும் மனையை ஆக்கியவர்கள். அவர்களது கனவை அவர்கள் வென்றே அமைகிறார்கள். மனை ஆணுக்குரியது அல்ல. அவன் உயிரியல்பால் வெறுமை கொண்டவன். அவனது உடல் ஆக்கும் இன்பத்தை அறிய இயலாதது. காவியங்களை இயற்றுபவர்கள் பெண் தன்மை கொண்டிருப்பது ஆக்கும் இன்பத்தைக் கற்பனையால் அடைவதால். பெண் என்பது நினைவுகளின் பெருந்தொகுப்பு. அவர்களால் தம் நினைவுகளை நீங்க முடியாது. அதுவே அவர்கள் ஞானத்தை அறிய முதற் தளை. நிகழுலக நினைவுகளை முற்றறுத்து எழும் பெணின் நிகழ்கணத் தன்மை அவளை ஞானத்தின் வழியில் இட்டுச் செல்கிறது. குடிகளுக்கு வெளியே ஓர் இருப்பெனத் தன்னை இயற்கையில் ஓர் ஆடலென அமைத்துக் கொள்ள இயல்கிறது. ஆனால் அப்படி எண்ணும் ஒரு பெண்ணையும் இதுவரை நான் கண்டதில்லை.

பெண் காதலுறுவதால் மேலும் தளையைச் சூடிக் கொள்கிறாள். காதல் அடிப்படையில் பற்று. பற்றினால் அடையும் எதுவும் துயரையன்றி வேறெதும் எல்லைகளில் சென்றமைய முடியாது. முழுக்காதலால் நிறைவுற்ற ஒரு பெண்ணையாவது நீங்கள் அறிந்திருக்கிறீர்களா. அவர்கள் காதலைக் கற்பனையின் வழியே தங்களை ஆற்றிக் கொள்ளும் ஒன்றாக மாற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் மெய்யை அறிய விழைவதேயில்லை. மெய் குறித்த அச்சமே பெண் என ஆகியது. அதை அன்னையென ஆக்கியது மெய்யால் ஆன பொய். அப்பொய்யை உதறும் ஒரு பெண் எழுந்து வந்து மண் கொண்ட ஞானவழி அனைத்தையும் மறுத்து புதியதொன்றை ஆக்கினால் அதுவும் ஞானமே. அத்தகைய பெண்ணுக்கெனப் புடவி ஒரு துறவியைப் போல் காத்திருக்கிறது” என்றார் மகாசோதி. அவரது சொற்களில் ஈவிரக்கமற்ற கூர்மை ஒரு புன்னகையென ஒளிர்வதாக நோக்கிய இளம் பாணன் மேலும் அலைவுற்றான்.

“இல்லை. நீங்கள் சொல்வது துறவியர் பூணும் பெண் வெறுப்பு வாதம்” எனக் கூவினான். அவனது சொற்களால் அவன் எதை மோதியுடைக்க எண்ணுகிறான் என அதிர்ந்து கொண்டிருந்தான்.

மகாசோதி “துயரை இழக்கும் போதே ஒருவர் வெறுப்பையும் இழக்கிறார். குடிகள் வாழ்க்கை குறித்து எண்ணிக்கொள்ளும் அணுவிடைச் சிந்தனையும் இங்கு ஏற்கெனவே சொற்களின் வழி நிரூபிக்கப்பட்டவை. முற்றிலும் காரண காரிய தருக்கங்களுக்கு உட்பட்டவை. அவர்களால் எளிய மெய்மைகளைக் கூட தங்களின் அன்றாட அறிதலுக்கு அப்பால் நின்று நோக்க இயலாது.

பெண்கள் ஞானத்தை அடையும் வழியில் உள்ள தளைகளையே நான் சுட்டினேன் இளையவரே. மேலும் பெண்ணை வெறுப்பதென்பது பெண்ணை விரும்புவதிலிருந்து உண்டாகும் உப விளைவு. என்றேனும் தம்மையிழந்து அல்லது தாம் குன்றி ஒன்றை விரும்பவோ மதிக்கவோ செய்யாதவர்கள் வெறுப்பதில்லை. அன்போ வெறுப்போ அற்ற நிலையில் நாம் சூடிக்கொள்ள மெளனம் மட்டுமே கூடும். பெண்களது உளம் கவிஞர்களை விட ஆயிரக்கணக்கான சொற்களால் யாக்கப்பட்டிருக்கிறது இளையவரே. அவர்கள் சொற்களின் மூலம் புடவியைத் தொட்டுக் கொண்டேயிருக்கும் அகவிழைவு கொண்டிருப்பவர்கள். மெளனமான ஆழியென்று எதுவுமில்லை. பெண்ணைக் கடலென்பது அவளது அலைக்கழிப்பும் சேர்ந்தது தான்” என்றார்.

சோர்பவனைப் போல் சாய்ந்த இளம் பாணன் இருட் குழியில் பிடிவேரைப் பற்றியவனென எழுந்து “என் காவியத்தால் அவர்களை நான் வெளியேற்றுவேன். காதலுக்கு நிகர் காமத்தை வெல்லும் கருவியென அளிப்பேன். பல்லாயிரம் சொற்களால் அவர்களின் சொற்களை அறைந்து வீழ்த்துவேன்” என விழிகள் கூச்சலிடச் கூவினான்.

மகாசோதி குறு வேழத்தின் துதியென உதட்டைச் சுழற்றிச் சிரித்தார். “ஓம் இளையவரே. பெண்களின் அகச் சொற்களை அழிக்க உங்களுக்குப் பல்லாயிரம் பலகோடி சொற்கள் வேண்டும். ஆனால் அவற்றை உச்சரிக்குந் தோறும் நீங்களும் ஒரு பெண்ணென அமைகிறீர்கள். உங்களால் அதன் எல்லையைக் கடக்க முடியாது. ஆக்குபவர் ஆணவத்தின் உச்சிப் பரணிலிருப்பவர். பெண் அந்த உச்சிப் பரணில் பல ஆயிரம் ஆண்டுகளாக வீற்றிருப்பவள். பெண் என்பது தன்னளவில் ஆணவத்தின் பீடத்தை இட்டுக்கொண்டிருக்கும் விழைவு. அதன் நுண்முனைகளைக் காவியங்கள் மறைத்து அவர்களை தெய்வமென மூடிக் கொள்கிறது.

இளையவரே. காவியங்களில் பெண்ணை தெய்வமென்றும் அன்னையென்றும் சுட்டுவது அவர்களை இன்னும் இன்னும் ஆணவத்தில் நிலைகொள்ள வைக்கும் ஏற்பாடு. ஞானவழியில் அன்னையராவது என்பது குழவிகளைப் பெறுவது அல்ல. அதை ஊழ்கமென எண்ணி இயற்றுவது.

ஒரு வகையில் பற்றை மேலும் பெருக்கி அதன் வழி பற்றை அறுப்பது. பற்றை அறுக்காத ஆணோ பெண்ணோ ஞானவழியில் சேர்வதில்லை. அவர்களின் அகம் நூற்பந்துக் குலைவுகளினால் ஆன பேராலயம் என ஆகியிருப்பது. அங்கு ஒரு தீ விழுந்து பஞ்சுத் திரிகள் எரியாத வரை அவர்களை மூடியிருக்கும் நூற்திரிகளை அவர்கள் அறிவதில்லை. பற்று மாயம் கொண்டது இளையவரே. மேன்மையானது அறமுள்ளது என எண்ணத் தோன்றும் புடவிப் பற்றுகள் அதி நுண்மையான நூற் திரிகள். குடி நன்மை. பெண் போற்றுதல். குழவிகளின் வருங்காலம். தானம் புரிதல். இரங்குதல். கருணை என பற்றுகள் பலவடிவங்களில் நம்மை நெருங்குகின்றன. அவை மேலும் மேலும் இருளில் இருட் கயிறுகளால் நம்மை இறுக்குபவை. பற்றை அறுத்து வெளியேறுவதைக் குடிகள் கொடுஞ் செயல் என எண்ணுவர். அரிதானவர்களுக்குத் திறந்திருக்கும் வழியில் அனைவரும் செல்ல இயலாது இளையவரே. எளிய குடிகளிற்கு ஞானம் கனவெனக் காவியங்களில் அளிக்கப்படுகிறது. அதைக் கொடையென நிகழ்த்துவதால் கவிஞர்கள் தெய்வமென ஆகின்றார்கள். பின் சொற்கள் எழாத போது பித்துற்று அழிகிறார்கள். தன் தெய்வம் அழிதல் காவியம் கோரும் நிபந்தனை இளையவரே. அச்சமின்றி அதற்குத் தயாராகுக” எனச் சொல்லி இளம் பாணனின் வதனத்தில் ஓடிய குழப்ப ரேகைகளின் விரிவுகளையும் பின்னல்களையும் நோக்கினார். அவனின் மூச்சு ஏறி இறங்கி குலைந்து கொண்டிருந்தது. அவனுள் ஆழமாய் இருந்ததென அவன் எண்ணிக் கொண்ட மிருதுவான ஒன்றில் அவர் கூரூசியை இறக்கியிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டார்.

“நீங்கள் காதலித்திருக்கிறீரா இளையவரே” என்றார் மகாசோதி. அக்கேள்வியை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. மேலும் நிலை குலைந்து சொற்கள் அகப்படாதவன் போல் இல்லை எனத் தலையசைத்தான். “ஆக நீங்கள் காவியமியற்றும் முதன்மைத் தகுதி கொண்டிருக்கிறீர்கள். காதலற்ற உளம் புடவியில் அனைத்துப் பற்றையும் நோக்கும் விழிகள் கொண்டிருக்கிறது. அதனை அஞ்சாது தொடருக. காதல் காவியத்தில் துக்கத்திற்கென ஆக்கப்பட்ட மது. அதை விலக்குவதை என் நெறி வலியுறுத்துகிறது” எனச் சொல்லி தோள்கள் மெல்லக் குலுங்கச் சிரித்தார். “நான் துறவி ஆகாதிருந்தால். உங்களைப் போல் கவிஞனாகியிருப்பேன் என எண்ணுகிறேன். காவியத் துக்கம்” எனச் சொல்லி விரிந்து சிரித்தார். இளம் பாணன் சோர்வு நீங்கி சற்று விழித்தான். அவனது துதியை எடுத்து புகைக்கவா எனச் சைகையால் கேட்டான். மகாசோதி தலையை ஒருமுறை ஓம் என அசைத்தார். அவன் துதியை மூட்டி விரிபுகையால் தன்னை எழுப்பிக் கொண்டான். இளவெண் திரையில் செவ்வரிகள் நீரிலையில் குருதியென ஓடியது. குடிகளின் சத்தம் மடாலயத்தை நிறைந்திருந்தது. அங்கிருந்த பெண் துறவியொருவர் முதியவர் என உடல் தோன்ற முகத்தில் இளவதனமென ஒளி குடிகொண்டிருந்தது. அவர் மகாசோதியை நெருங்கி மூங்கில் குடுவையில் நீரையளித்தார். மகாசோதி அவரை நோக்கித் தலையசைத்து வாங்கிக் கொண்டார். அப் பெண் துறவி ஒரு தமிழர் எனக் கண்ட இளம் பாணன் விழிசுருக்கி அவரை நோக்கினான். இளம் பாணனைக் கண்ட மாகதா தன் கடுங்குருதி வண்ணத் துறவாடையை ஒருக்கி அவனது செவ்வரி விழிகளை நோக்கிப் புன்னகைத்தார். “காவியனா” என மகாசோதியைக் கேட்டார். “சகல லட்சணங்களும் பொருந்திய காவியன்” எனச் சிரித்தார். “ஆக இன்று நமக்கு நல்ல விவாதக் களங்கள் உண்டு” எனச் சிரித்தபடி ஓலைப்பாயில் அமர்ந்து கொண்டார். இளம் பாணனின் உடலில் பாறையொன்று அழுத்துவதைப் போன்ற அசைவெழுந்தது.

” இளையவரே. தங்களது கேள்விகளை மாகதாவிடம் கேளுங்கள். அவர் வாழ்வை அதன் இருட்டிலும் ஒளியிலும் நோக்கியவர்” என்றார் மகாசோதி. மாகதா புன்னகை ததும்ப உதட்டை விரித்து “ஒளியை அறிய முடியாது இளையவரே. இருட்டை அறிய இயலும். இருட்டு நம்முள் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஒளியொரு சொல் என்ற காவிய வழக்கு உண்டில்லையா” எனச் சொன்னார்.

இளம் பாணன் தனது துதியை அணைத்து விட்டு அவர்களிருவரையும் நோக்கினார். இரண்டு புன்னகைகளின் நடுவே தான் ஒரு துயர் என எண்ணிக் கொண்டான். அறியாமை அளிக்கும் துயருடன் எழுந்த குரலில் “நீங்கள் ஒரு பெண். உங்களால் ஞானத்தை அடைய முடியாது. அதற்கான தளைகளாக நினைவுகளையும் காதலையும் பற்றுகளையும் கொண்டிருக்கிறீர்கள் என்கிறார் துறவி. நான் அதை பெண் வெறுப்பு என எண்ணுகிறேன். நீங்கள் ஞானத்தை அடைய இயலாதா துறவியே” என மாகதாவின் விழிகளை நோக்கிக் கேட்டான் இளம் பாணன்.

மாகதாவின் முகம் கருமையால் பொலிவு கொண்ட கருஞ்சிலை போலிருந்தது. அவரது தோலில் அது மினுக்கென ஓடியபடியிருந்தது. அவரை இளந்தோற்றம் கொண்டவரென கருமை ஆக்கியிருந்தது என எண்ணினான் இளம் பாணன். ஆனால் அதற்கும் மேலே அவரிடம் உள்ள எதுவோ ஒன்று அவரை இளமையாக்குகிறது. எழிலமைதி கூடுகிறது என விரிந்தான்.

“இளையவரே. நான் வாழ்வின் நெடுங்காலத்தில் ஐந்து மகவுகளைப் பெற்றவள். அவர்கள் ஐவரும் இன்று மண்ணில் இல்லை. போர் அவர்களை உண்டு செரித்திருக்கிறது. நான் துறவு பூண்ட பொழுது எனது அன்னை ஆழியில் புகுந்து தன்னை மாய்த்துக் கொண்டார். அவளின் மரணத்தை நான் அறிந்த பொழுது அடைந்தது ஆறுதலே. அவர் மண்ணில் இருக்கும் வரை நான் துறவில் நிலைக்க இயலாது. என் நினைவுகளில் அவரது இருப்பு நீள்கயிறெனத் தூங்கியபடியே உடன் வரும். நான் வெறுப்பிலும் ஆற்றாமையிலும் சினத்திலும் துறவாடை ஏற்றவள். வாழ்க்கைக்கு ஏதேனும் பொருளுண்டா என எண்ண விரும்பினேன். காலம் தாழ்வதில்லை. திறந்திருக்கிறது என்ற உதய பூர்ணிகரின் சொற்கள் என்னை அழைத்தன. எனது அகத்தில் துயரென எண்ணுவது எதையென நான் ஓயாமல் துழாவியிருக்கிறேன். மடாலயங்களில் பணிவிடை புரிகையில் நான் ஒரு அன்னையென உணர்வேன். ஆனால் எனது அகம் அன்னையெனும் எண்ணம் உருவாகும் தோறும் பற்றுக் கொண்டிருக்கிறது. பெண்ணால் பற்றை ஒழிய இயலாது. அறிய இயலும். அறிவதன் மூலம் தன் வழியை இருட்டிலிருந்து துமியளவு வெளிச்சம் நோக்கி நகர்த்திடல் கூடும்.

எனது நோன்புகள் கடுமையானவையாக ஆகின. உடலை ஒறுத்தேன். ஆனால் அதுவும் எளியதெனவே தோன்றியது. ஒறுத்தல் பெண்ணுக்கு இயல்பான விழைவு என்பதை அறிந்தேன். ஒறுக்கும் தோறும் நான் பெண் எனும் ஆணவத்தை அறிந்தேன். பெண் தன்னை அழித்துக் கொள்வதன் வழி புடவியைப் பணிய வைக்கும் நுண் ஆணவம் கொண்டவள். தனது ஒழுங்கினால் புடவியை ஆளும் பெருவிருப்புக் கொண்டவள். அறிக. ஆளும் விழைவே பெண்ணென அமைவது. பெண் சூடும் அனைத்துத் துயரும் அவ் விழைவின் சுடரினடியில் குவியும் இருளே. அதை நான் விலக்க விலக்க காற்று அசைப்பதைப் போல விழைவு அலைந்தது. பணிந்து மேலும் இன்மையை நோக்க அங்கு பெண்ணில்லை. ஆணுமில்லை. இன்மை என்னை அச்சமூட்டியது. அங்கு செயலில்லை. செயலற்ற இருப்பளவு அச்சமூட்டும் கணம் பெண்ணுக்குப் பிறிதில்லை. பெண் அலையும் சுடர் என அறிக இளையவரே. பெண் விழைவின் நுண்தெய்வம். அவள் அதை மறுத்துப் புடவியில் தன்னை ஒருக்குவது எந் நிலையிலும் பாவனையே. ஆகவே என் இருப்பை நான் ஏற்றுக் கொண்டேன். துறவின் ஒறுப்பு ஒரு பெண். ஞானம் பெண்ணும் ஆணுமற்ற நிலை. புத்தர் ஆணுமோ பெண்ணுமோ அல்ல. விழைவோ விழைவின்மையோ அல்ல. அவர் மூன்றாவது நிலையை அடைந்தவர். நான் அதை அடைவதை நோக்காகக் கொள்ளவில்லை. எனக்கு இந்த நெறிகள் பிடித்திருக்கின்றது. கொல்லாமை அதில் உயர்ந்த நெறி. ஆனால் அதுவும் என் பற்றுகளால் அளவிடப்பட்டு மதிப்பிடப்பட்ட நெறியே. ஞானம் கனியாமல் போகலாம். ஆனால் அதில் துயரில்லை.

விழையும் ஒன்றை அடையாமல் போவது புடவியில் பெண்ணுக்கு  நிகழுமா” எனச் சிரித்தார் மாகதா. அவரது சிரிப்பில் சிறுகுருவிகளின் கூட்டக் குரலொலி கேட்டது. அவருள் அமைந்த ஒவ்வொரு பெண்ணும் குரலென ஒலிக்கிறாள் என எண்ணினான் இளம் பாணன்.

“ஆனால் விழைவையும் அறுப்பதே துயரின்மை என்றல்லவா புத்தர் போதிக்கிறார்” என்றான் இளம் பாணன்.

“நான் புத்தரை சொல் சொல்லாகப் பின்பற்றுவதில்லை இளையவரே. அதை அவரே மறுக்கவும் செய்கிறார். அவரை நான் என் தோழனெனக் கொள்கிறேன். ஒரு முதுதந்தை” என்றார்.

“தோழனா” எனக் கூவியவன் மகாசோதியின் முகத்தை நோக்கினான். அவர் இன்முகம் தித்திப்பில் திளைத்திருந்தது. இளம் பாணனை நோக்கி “எனக்கும் அவர் தோழனே” என நகைத்தார்.

இளம் பாணன் சொற்கள் குலைந்து துணிக்குவியலென அவனுள் கிடப்பதை நோக்கி மெளனமானான்.
மாகதா தன் குருவிக் குரலைச் செருமி “இளையவரே. உங்கள் வயது உங்களை இச்சொற்களால் அஞ்சுகிறது. புடவியின் மெய்ப்பொருள்களென அறியப்பட்ட ஒவ்வொன்றும் ஞான வழிகளில் எளிய கூழாங்கற்களே. விழைவை ஒறுத்தல் வழியல்ல. விழைவை முற்றறிதலே முன்செல்லும் பாதை. விழைவை முற்றறிய அதை நீங்கள் கற்பனையில் பெருக்கிக் கொள்ள வேண்டும். குடி நெறிகளை குலைத்து அச்சமின்றி அதைத் தீண்டித் திளைக்க வேண்டும். திளைப்பு அழிந்து ஞான வழி மீண்டால் நீங்கள் ஞானியாவீர்கள் அல்லது காவியம் புனைவீர்கள். இரண்டும் மானுடருக்கு நன்மையே” என்றார்.

இளம் பாணன் அச்சொற்களால் எழுந்து நடந்து “காவியம் ஞானத்தை அறிய முடியாதல்லவா. அவை எளிய சொற்கள். உங்களின் வார்த்தைகளில் சொன்னால் கூழாங் கற்கள். அவற்றை ஆக்குவதால் என்ன பயன்” என்றான். மாகதா அவனை ஒரு கணம் உற்ற பின் “பயன் விழையாது செய்யும் செயலே ஊழ்கமென்றாவது. சொற்களை ஊழ்கமென எண்ணிக் கொள்ளுங்கள். முதன்முறை உங்களை நோக்கிய பொழுது உங்கள் விழிகள் சூடியிருந்த பாவனைத் துயருக்கு அடியில் எரியும் ஆணவத்தை பார்த்தேன். அது பெருங்கனவுகளை விரிக்கும் ஆணவம். சொற்களை அழிப்பதை நீங்கள் எண்ணவும் இயலாது. ஆகவே சொல்லை நோக்குக. அறிக. அமைக. அதன் வழி நீங்குக. சொல்லற்ற மெளனமே காவியம் என்றுணர்க. அதைப் பல்லாயிரம் சொற்களின் சிகர நுனியிலேயே நீங்கள் சூடிக்கொண்டு அமர முடியும். நோன்பு பெருங்களியில் கூடும் வாய்ப்பை தற்செயல் கவிஞர்களுக்கு அளிக்கிறது. அதைத் துறக்க வேண்டியதில்லை” என்றார். இளம் பாணன் சொற்கள் அடைந்து காதில் கிண் என ஒற்றைப் பேரொலி எழுவதைக் கேட்டான்.

TAGS
Share This