47: மாகதா : 02
மடாலயத்தில் உணவு சமைக்கும் வாசனை எழுந்து புகையின் இன்மணம் காற்றில் வீசிக் கொண்டிருந்தது. மாகதா இளம் பாணனின் மெல்லுடலை நோக்கியபடியிருந்தார். அவனுள் சுழிக்கும் உடலசைவுகள் நிரந்தரம் என்பது போல் தோன்றியது. இளையவர்களிடம் தோன்றும் மிதப்பிற்கும் கனவுகளுக்கும் அப்பால் துயர் கொண்டிருப்பவன். துயரை அனுபவிப்பவர்களை விடச் சொற்களால் அறியும் நுண்கரங்கள் கொண்டவர்களின் துயர் ஆயிரமாயிரமாய் பெருகுவது. சொற்கள் எண்ணிக் கலையும் மேகங்களென தோன்றுவது. பின் எங்கிருந்தோ ஒரு காற்றின் திசையில் அதை மேலும் ஆயிரம் மேகங்களென விரித்தபடி குவிந்து கொள்வது. அதன் விசைகளில் அலைபடுபவர்கள் சொற்களை அதன் எளிய கோதுகளை உடைத்து உயிர்களை அளிப்பவர்கள். அவனது துயரம் அவனுடையதல்ல. அவன் சுமந்து நின்றிருக்கும் மேகமேயெனத் தோன்றியதும் மாகதாவின் முகத்தில் இளம் புன்னகை மீண்டது.
“இளையவரே. உம்மை நோக்கும் பொழுது என்னுள் உறையும் அன்னையை உணர்கிறேன். என் இளைய மகன் உங்களின் அம்சங்கள் கொண்டவன். புதல்வர்களை இழந்த அன்னையர்களுக்கு ஓராயிரம் புதல்வர்களைக் காலம் உருவாக்கியளித்து அவர்களை மீற முடியாத இணைப்பில் நிலை நிறுத்துகிறது” என்றார் மாகதா. அச் சொற்களைக் கேட்ட இளம் பாணன் அம்பு விலகிய வில் நாணென அதிர்ந்தான். மாகதாவை நிமிர்ந்து நோக்கி விழி கூர்ந்தான்.
“எனது குடியில் நிகழ்ந்த விடுதலைப் போரிற்கு என் ஐந்து மகவுகளும் ஏகினர். ஒருவர் பின் ஒருவராக மடிந்தனர். எனது இளைய புத்திரன் வளவன் இளங் காளைகளின் கூர் திமிலென நின்றிருப்பவன். எனது நிழலைச் சுற்றியே தன் பிடிகயிற்றை வைத்திருப்பவன். அவனுள் இக்குடியின் துயர்கள் சென்று சேரவில்லை என எண்ணியிருந்தேன். மூத்தவர்கள் நால்வரும் மடிந்தமையால் நான் தனித்திருப்பேன் என அவன் எண்ணியிருக்கலாம். எனது அன்னையின் மடியில் கிடந்து எள்ளல் பேசி விளையாடும் குறும்பன். அவனது உடல் ஆயுதங்களை ஏந்தி நான் பார்த்ததில்லை. அவனது தோழர்கள் வாளும் வில்லும் கதையும் கொல்வேலும் பழகிய போது இவன் கன்றுகளை மேய்த்துப் பட்டியிலிட்டு நிற்பான். பாலைக் கறந்து சாணம் அள்ளி எருவாக்கி முதுமகளிருடன் சொல்லாடி புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருப்பான். நிசிகளில் நான் துர்சொப்பனங்களால் அலைபட்டுக் கண்விழித்தால் என் ஆடையைப் பற்றியபடி துயிலும் என் இளைய குருத்தை நோக்குவேன். விண்ணில் கனவென விழிகூடித் துயின்றிருப்பான்.
இரண்டாம் பருவப் போரில் அவன் புலிகளில் இருந்த தோழர்களுக்கு உணவளிக்கச் செல்வான். கடும் வறுமை சூழ்ந்திருந்த காலமது. நெற்களஞ்சியங்கள் வற்றின. குளத்தில் மீன்களும் இல்லாமலாயின. கடல் புகுவோர் சிங்கையின் தாக்குதல்களுக்கு அஞ்சிக் கலனேகாமல் அமைந்தனர். புலிகள் ஆயிரக்கணக்கில் பெருகியிருந்ததால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. குடிகள் தம் புதல்வர்களுக்குத் தங்கள் கடைசி இருப்பையும் கரைத்து உணவளித்தனர். உக்கிரமான போர்களில் வீரமரணம் எய்திய மகவுகளின் சாவுகளால் பட்டினமே ஒரு கொடுங் கனவென மாறியது. இழப்பை அறியாத மனைகளே இல்லை. ஏதோவொரு கடுஞ் சாபம் ஆற்றில் நஞ்செனப் பரவிய நகரென மாறியிருந்தது. பாணர்கள் நாக்கள் சொல்வற்றி உலர்ந்தன. அன்னமிட்டு மனைகளின் வயிறுகள் ஒட்டின. குழவிகள் உணவின்றிப் பசியால் அழும் இரவுகளில் உறக்கம் ஒரு நோய் எனவும் கூட எங்களை அண்டியிருக்கவில்லை. புதல்வர்களை இழந்த அன்னையரும் உற்றாரும் தெருக்களில் புழுதியென வீழ்ந்து புரண்டனர். அவர்களின் நாவுகளில் எழுந்த கொடுஞ் சொற்களின் பாடலென விம்மியது நகர். பகல் ஏதோவொரு உழைப்பில் தன்னை மறந்தது. இரவு கொடியதாகிக் குடிகளைப் போர்த்தியது. கொடு மழையிரவில் ஈரப்போர்வையென இரவுகள் நடுங்கின. இளம் பெண்களும் ஆண்களும் வனங்களை நோக்கி விரைந்தனர். போரைக் கொல்ல ஒரு போர் என மன்றுகளின் அருகில் துணிகளில் எழுதப்பட்ட சொற்கள் காய்ந்த குருதியில் ஆடின. புழுதி அதில் சாபங்களெனப் படிந்திருந்தன. மரணம் கொடியது இளையவரே. இள வயது மரணங்கள் குடியை மாளாச் சோகத்தில் அழுந்திக் கிடக்க வைப்பது. மரணத்தை அறியாத குடிகளென்று இங்கு எவரும் இல்லை. மரணத்தைத் தூற்றாத நாளில்லை. எல்லைகளில் துயருறும் இளம் பெண்களின் கதைகள் மனையில் அடங்கிக் கிடந்த பெண்களின் உளத்தில் குருதிப்பெருக்கென வழிந்து உறைந்தன. சிங்கையின் சிறைச்சாலைகளிலிருந்து மீண்டு வந்த பெண்கள் சித்தமழிந்து இருளறைகளில் சொல்வறண்டு கேவுமொலி மனைச் சுவர்களை அதிர்ததிர்த்து உடைத்தன. நிசிகளில் அவர்கள் ஆடைகள் சரிய ஆழிக்கரையில் உலவுவதாகக் கதைகள் எழுந்து கரைகள் எந் நேரமும் காவலிடப்பட்டன.
இளைஞர்கள் கட்டாயம் ஊர்க்காவலில் பணிபுரிய வேண்டுமென ஆணை அரசிடமிருந்து கிடைத்தது. வளவன் நிசி வரை காவலுக்குச் சென்றுவிட்டு இரவில் வந்து என்னருகில் துயில்வான். அவனுடைய காதலை நான் அறிந்திருக்கவில்லை. அவனுடைய காதலி கானவிருகி சிங்கைச் சிறைச்சாலையில் அகப்பட்டு ஒருபருவம் கழிந்து திரும்பிய அன்று அவன் இருள் வானையே நோக்கியிருந்தான். விண்மீன்களில்லாத காரிருட்டு. அதை எழுதுபலகையென எண்ணியெண்ணி அழித்துக் கொண்டிருந்தான். எழுந்து சென்று அவனருகில் அமர்ந்து கொண்டேன். என் அன்னை திண்ணையில் படுத்திருந்து அவனை நோக்கியபடி இருந்தாள். ஒரு பகலில் அவன் வதனம் முதுமை கொண்டிருந்தது.
கானவிருகியின் மார்புகளில் இடைவெளியின்றிப் பற்கள் கண்டிய கடுஞ் சிவப்புக் குருதிக் கண்டல்களை நோக்கியதாக எனது தோழியொருத்தி அந்தியில் என்னிடம் சொல்லியிருந்தாள். அவள் கூந்தல் நரிகள் கடித்து இழுத்தவை போல அலங்கோலமாய் பிய்க்கப்பட்டிருந்தது. அவளது முதுகில் மூங்கில் கழிகளால் அறைந்திருந்த தடித்த கோடுகளும் அதனிடையில் திருக்கை மீனின் வாலால் அடித்த விளறுகளும் வரிவரியெனக் கிடந்தன. அவள் முதுகில் மருந்துச் சாறை ஊற்றிய மருத்துவிச்சியின் விழிகள் கரைந்து ஊற்றியது. அவள் இடமுலைக் காம்பு சீழ்க்கட்டியென வடிந்து கொண்டிருந்தது. அவளது தந்தை தலையைத் தூணில் மோதிச் சித்தமிழந்து கிடந்தார். அவளது மனையின் நிழல் ஒரு தோற் பூதமென மண்ணை அழுத்திக் கிடந்தது எனவும் அயலவர் கூறினர்.
அன்று அவன் முகத்தில் தோன்றியது துயரல்ல. கொல்லும் குரூரம். பற்கள் நறநறக்க அவன் உதடுகள் விம்மின. அடிமிதிபட்ட மண்புழுவென அவன் தேகம் இழுபட்டிருப்பதை நோக்கினேன். அவனது புல்லாங்குழலை எடுத்து இசைத்தேன். அதன் துளைகளில் நானறியாத துக்கம் மண்டியிருந்து எழுந்து பரவியது. இருளில் விண்மீன்களை அவை ஏற்றும் என எண்ணினேன். அவனுடன் பேசிக்கொள்ளும் இறுதிச் சொற்கள் அவையென எண்ண எண்ண என் விரல்கள் தழைந்து தழைந்து காற்று குழலை என் அகமென அவன் முன் கிடத்தியது. குழலின் ஒலி கேட்காத தொலைவில் அவன் சென்று கொண்டிருப்பதை அகம் கண்ட போது திகைத்து நிறுத்தினேன். புலரி வரை மூவரும் வாயிலில் சொல்லற்று விழித்திருந்தோம்.
ஒரு விடைச் சொல்லின்றி அவன் வனம் சென்றான். அரவம் நீங்கிய செட்டையென மனையை உரிந்து நீங்கினான். அதை அறிந்த போது உளம் அதை ஏற்கெனவே அறிந்திருந்தை எண்ணினேன். அங்கிருந்து அவன் மீள்வானென ஆழத்தில் என்னுள்ளிருந்த அன்னை நம்பினாள். அன்னை என்பது நம்பிக்கை மட்டுமல்லவா.
அவனது மரணம் என்னை மரத்தை உலுக்காமல் விலகிச் செல்லும் காற்றென அகன்று விரிந்தது. சென்ற முதற் களத்திலேயே அவன் கொல்லப்பட்டான். அவனுடைய கரங்கள் போர் பழகாதவை. விழிகள் கொண்டிருந்த வஞ்சினம் போரை வெல்லப் போதியதில்லை. அவனுடைய தேகம் மனைக்கு வரவில்லை. ஆயிரக்கணக்கில் வீரர்கள் கொல்லப்பட்ட மாதோட்டப் போரில் அவன் வீழ்ந்திருந்தான் என்ற சேதி மட்டும் என் சொற்களே செவியை அடைந்தது.
இரவுகளில் எண்ண எதுவுமற்று எரிவிறகின் காய்தலென அமர்ந்திருப்பேன். அவனது புல்லாங்குழலை அணைத்தபடி துயில்வேன். அது அவனல்ல என அகம் எண்ணியது. எண்ணிக் கரைந்தது.
எனது அன்னை வெந்து நோய் படிந்தாள். நாளைக்கு ஒரு வேளை உண்டாள். அவளது நோன்பு தொடங்கியதை உணர்ந்தேன். மெல்ல மெல்ல இருளை நோக்கி உரையாடத் தொடங்கினாள். குழவிகளை அஞ்சி வெறுத்தாள். அவர்களை வசைபாடி விரட்டினாள். முழுநிலவு நாட்களில் முற்றழிந்து ஓலமிட்டு வயிற்றிலும் மார்பிலும் அடித்துக் கத்தினாள். அவளை அயலவர் அஞ்சினர். என்னுடைய நிழலைக் கூட அவள் அறிவதில்லை என எண்ணினேன். நானொருத்தி அங்கிருப்பதை மறந்தாள். நினைவு தப்பித் தப்பிச் சரிந்தது.
பட்டினத்தில் புதிய மடாலயம் திறக்கப்பட்ட பொழுது எனது தோழிகள் என்னை அழைத்துச் சென்றனர். என்னுள் தயக்கமிருக்கவில்லை. எதிலும் ஒன்றாத உளத்தைக் குழப்பிக் கொள்ள இன்னும் ஏதேனும் அறிய முடியாதா என்ற விருப்பே என்னில் அமைந்திருந்தது. உதய பூர்ணிகரின் முகத்தை நோக்கிய முதற்கணம் அவரில் சொல்லெணா வெறுப்பு எழுந்தது. அவரிடமிருந்த புன்னகை என் அடிவயிற்றில் தீக்கட்டிகளென விழுந்தன. மடாலயத்திலிருந்து எழுந்து இம்மரத்தடியில் வந்தமர்ந்தேன். அவரது சொற்களைக் கேட்காத தொலைவில் என்னை நிறுத்தினேன். உரை முடிந்ததும் அவர் எழுந்து மடாலயச் சுற்றத்தில் நடந்தார். என்னைப் பார்த்துப் புன்னகையுடன் தலையசைத்தார். என்னுள் எழுந்த அன்னையின் வெங்கரத்தை எது எழுப்பியதெனத் தெரியாது. வாலில் எழுந்த நாகமென அவரின் முன் சென்று அவரை அறைந்தேன். இருகரங்களாலும் அவரைத் தாக்கினேன். நெஞ்சில் அடித்து முகத்தில் உமிழ்ந்தேன். அவர் தனது மாணாக்கர்களை அருகே வரவேண்டாம் என நிறுத்தினார். நான் அவரை ஓங்கி அறைந்தறைந்து உளம் கலைந்து வீழ்ந்தேன். விழித்த போது எனது தோழியொருத்தியின் மடியில் உடல்வியர்த்துச் சரிந்திருந்தேன். உளம் அடங்காமல் உமிழ்நீர் கசந்து கொண்டிருந்தது. அன்றிரவு வரை எழ முடியாமல் மடாலயத்தில் உடல் வீங்கிக் கிடந்தேன்.
இரவில் தண்மதி இப்பேரரச மரத்தின் பல்லாயிரம் இலைகளின் நடுக்கங்களிற்கு அப்பால் மிளிர்ந்தது. அதை நோக்கி உடல் விரிந்திருந்தது. காற்று மென்மையாக வீசியது. தோழியரும் குடிகளும் கூட்டங் கூட்டமாக அமர்ந்து சொல்லாடிக் கொண்டிருந்தனர். நான் நிறைவாகத் துயின்று நெடுநாளாகியிருந்தது. விழிகள் மெல்லிய வலியுடன் கீறிப் பிளந்த காயமெனத் திறந்திருந்தன. எனது தேகம் குளிர்ந்திருந்தது. வானை நோக்கினேன். விழி கொள்ளாப் பொற்கண்கள் திறந்து அது மண்ணை நோக்கியது. இலைகளில் சலசலத்து ஓடிய காற்று அனைத்தையும் தழுவிச் சென்றது. நிலவில் களங்கங்களை விழிபடர்த்தி நோக்கினேன். அவையும் அழகெனத் தோன்றின. அந்த அமைதி எதனால் என்னுள் எழுந்ததென எண்ணினேன். உதய பூர்ணிகரை ஏன் தாக்கினேன். அறைந்தேன். உமிழ்ந்தேன். வளவனின் மரணத்தின் போது கூட நான் அழவில்லை. முள் சிக்கிக் கொண்டது போலக் கண்ணீர் அகப்பட்டுக் கொண்டிருந்தது. என்னைச் சுற்றிலும் துயருற்ற முகங்களே நின்றிருந்தன. முற்றிலும் துக்கத்தால் அலைக்கழியும் நகரில் யாரின் துக்கம் யாருக்குப் பெரிதாக அமையக் கூடும். துயர்களைப் பெரிதாக்குவது மகிழ்ச்சியே. நிறை மகிழ்ச்சியில் வாழும் குடிகளில் ஒரு சிறிய இழப்புக் கூட எடை கொண்டிருக்கும். இங்கு தான் துயர்களின் அங்காடி அல்லும் பகலும் அன்னசத்திரம் போல் திறந்திருக்கிறதே. யாரை யார் தேற்றுவது. யாருக்காக யார் அழுவது. கண்ணீருக்கு அன்றைய மதிப்பிற்கு மேல் என்ன பொருளிருக்கும்.
அன்று உதய பூர்ணிகரின் முகத்தில் இருந்த நிறைவை நான் அறைந்தேன். அவர் உதட்டில் மலரென அவிழ்ந்திருந்த மகிழ்வை நான் உமிழ்ந்தேன். துயர்ப்பெருக்கிடையில் களியுற்று வாழ்பவரை ஒரு எளிய குடியாகச் சென்று தாக்கினேன். பித்தனே இத்துயர்களுக்கு அப்பால் நின்று கொண்டிருக்கும் நீ யார் என நெஞ்சில் அறைந்தேன். வாழ்வின் பொருளின்மையில் குவிவது துயர் மட்டுமே என எண்ணும் எளிய பெண்ணாய் இருந்தேன். அங்கு மகிழ்ச்சியைத் தேர்வு செய்பவர் அதுவரையான அனைத்து அறங்களையும் மீறுகிறார். அடிப்படை மானுட உணர்வுகளெனச் சொல்லப்படுபவற்றைச் சிறுமை செய்கிறார். அவரது புன்னகை என்னுள் கொல்லீட்டியென இறங்கியது. இரவு முழுவதும் அதன் விசை பற்றி எண்ணியிருந்தேன். எதுவோ ஒன்று என்னுள் அறுபட்டிருந்தது. அது என்னுள் எஞ்சிய கண்ணீரின் கயிறு என எண்ணினேன். நிசியில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். உதய பூர்ணிகர் மாணாக்கர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். மகாசோதி அவருடன் வாதத்தில் ஈடுபட்டிருந்தார். குடிகள் அமைந்து உறங்கிய பின்னர் நிலவின் ஒளியென அவர்களின் குரல் துலக்கமாய்க் கேட்டது. மகாசோதி அப்பெண் எதற்கு உங்களைத் தாக்கினார். நீங்கள் ஏன் அவரைத் தடுக்கவில்லை எனக் கேள்விகளை விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
உதய பூர்ணிகரது குரல் அத்தனை இனிமையானது எனக் கேட்டது. “குடிகள் துறவிகளை அறைவதில்லை. தாக்குவதில்லை. உமிழ்வதில்லை என்பதை அறிக துறவியே. அவர்கள் துறவிகளை வணங்குபவர்கள். மதிப்பவர்கள். துறவிகளைத் தாக்குவதைப் பாவம் என எண்ணுபவர்கள். இன்று அந்த அன்னை என்னைத் தாக்கிய போது அவரிடம் எழுந்தது என்ன என நோக்கினாயா” என்றார். மகாசோதி ” இல்லை. அவரது கோலம் பயங்கரமானதாய் இருந்தது. அவரது விழிகளில் கொல்லும் குரூரம் மின்னியது. உங்களை வெறுங் கரங்களால் அறைந்தே கொன்று விடுவார் என அஞ்சினோம்” எனச் சொன்னார்.
உதய பூர்ணிகர் “துயரை அறிந்தவர்கள் துறவியர் முன்னே பணிகிறார்கள். துயரை மீறும் விசை எழுந்தவர்களே நம்மை அறைகிறார்கள். அவர்கள் மீட்சியின் முனையில் தம் சொந்தத் துயர்கள் அலைக்கழியாது அகம் எங்கோ உறைந்து நிற்கையில் அதை சினத்துடன் உமிழ்கிறார்கள். அவர் அறைந்தது அவரை. அவர் சினந்தது அவரை. அவர் உமிழ்ந்தது அவரை. நான் அவரின் ஆடிபிம்பமென நின்றிருக்கிறேன். ஆடிகள் பிரதிபலிக்கலாமே ஒழிய மறுவினை ஆற்ற முடியாது” என்றார். அக்குரலில் இருந்த தீர்மானமான ஒன்று என் காதில் அம்பெனத் தைத்தது. என் அகம் மெல்லக் கரைந்து நீராலானது போல் ஓடியது. எழுந்து அமர்ந்து அவர்களை நோக்கினேன். சிறுவர்களின் மகிழ்ச்சியுடன் அங்கு சொல்லாடுபவர்கழ் துறவியர் அல்ல என் மகவுகள் என்ற எண்ணமெழுந்தது. உடல் அதிர்ந்து விசை கொண்டு அவர்களை நோக்கி ஈர்ப்பெழுந்தது. உதய பூர்ணிகரின் முன் சென்றமர்ந்தேன். மாணாக்கர்கள் என்னைப் புன்னகையுடன் வரவேற்றார்கள். மகாசோதி மூங்கில் குவளையில் நீர் கொணர்ந்தார். அருந்தினேன். தாகமற்று அருந்துவது போலிருந்தது. உவகை ஒரு இருப்பனெ அறிந்தேன். காம்பில் எஞ்சிய ஓரிதழும் நானறியாது உதிர்ந்து விட்டதைப் போல.
உதய பூர்ணிகர் எனை நோக்கிப் புன்னகைத்து “காலம் தாழ்வில்லை. திறந்திருக்கிறது” என்றார். தலையசைத்து அவ்வழைப்பை ஏற்றுக் கொண்டேன். அன்றிலிருந்து மனை மீளவில்லை. அன்னை ஆழியுள் புகுந்த சேதி காம்பும் உதிர்ந்தது என எண்ணச் செய்தது.
இளையவரே. என் மகவுகள் சூடியது அனைத்தும் என் விழைவுகளே. என்னில் எழாத ஒன்றும் அவர்களில் அமையவில்லை. நானே கொல்லும் போர். நானே காதலின் ஊற்று. நானே வெல்லும் விசையை அவர்களுக்கு அளித்தவள். என் முலைப்பாலில் கசிந்தது நானல்லவா. என் உதிரமல்லவா. இன்று போருக்குச் செல்வதை விடத் துறவுக்குச் செல்லும் இளையவர்களை நான் வரவேற்கிறேன். சேர்ந்து இரந்துண்கிறோம். ஊழ்கத்தில் அமர்கிறோம். வாழ்வின் ஆதாரமான கேள்விகள் தொடர்பில் விவாதிக்கிறோம். நான் எந்தச் சுனையின் ஊற்றுமல்ல. ஒரு விழைவு. விழைவு கடந்த பிரக்ஞை மட்டுமே. இங்கு துயருறும் ஒவ்வொன்றும் நானே. அவ்வாறே மகிழ்வதும் நானே” என்றார் மாகதா.
இளம் பாணன் உளம் நோக்கற்று விரிந்திருந்தது. குடிகளின் பேச்சொலியில் இருந்த சலசலப்பை இலைக்குரல்களுடன் இணைத்து நோக்கினான். “துறவியே நான் பிரக்ஞையில் அமைய முடியாது. அது அதிரும் தந்தி. நான் ஒரு தூசு என்ற வரிகள் எனக்கு நினைவில் எழுகிறது. என்னால் அங்கு அமர இயலாது. அமையவும் அகம் கூடவில்லை. நான் பித்து. சொற் பித்து. அதன் உச்சியில் அமையும் சிலகணப் பிரக்ஞையில் நான் உங்களை அறிவேன். துயரின் கீழாளத்தின் பாதாளங்களில் பிறிதொருவரை அறிவேன். காதலின் தீரா விடாயில் பெண்ணை உணர்வேன். காமத்தின் கொடும் கனலில் ஆணைத் தொடுவேன். எனது ஊழ்கம் சொல்லென்றாவதாக” என்றான். மகாசோதியும் மாகதாவும் இணைந்த ஓருதடெனப் புன்னகைத்தார்கள். “இளையவரே. இத்தனை இளவயதில் உங்கள் அழைப்பை நீங்கள் பெற்றுக் கொண்டது எத்தனை அளப்பரியது. அவ்வாறே ஆகுக” என்றார் மாகதா. “ஓம். அவ்வாறே ஆகுக” என்றார் மகாசோதி. வாழ்த்துப் பெற்ற இளம் பாணன் அகம் சொற்களால் மினுங்குவதை நோக்கினான். அவை பொன்னும் மாணிக்கமும் மரகதமும் பவளமும் இரத்தினங்களும் முத்துகளும் கொண்ட சுரங்கமெனத் தகதகத்தது. அவன் அகத்தின் நுண்கரங்கள் விரிந்து ஆயிரமாயிரம் கரங்களென சுரங்கத்தை அள்ளி எறிந்தன. பித்தனின் ஆயிரமாயிரம் கைகள் நான் என எண்ணிக் கொண்டான்.