49: ஆடி மயில்

49: ஆடி மயில்

திருதிகா தோழிகளுடன் மாற்றுடை அணிந்து தன்னைக் குடிகள் அறியாத வண்ணம் உருமாற்றிக் கொண்டாள். மன்றுக்குச் செல்லும் பெருவீதியால் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் வண்ண பேதங்களை நோக்கிக் களிச்சிரிப்பாடினர்கள் தோழியர். திருதிகா ஒவ்வொன்றையும் தொட்டு எடுத்து நோக்கினாள். ஒவ்வொரு ஆடியிலும் தன்னை உற்றாள். ஒவ்வொரு குழவியிலும் அதன் விழிகளையும் விளையாட்டுகளையும் நோக்கினாள். அவர்களின் கால்களிலும் கரங்களிலும் துள்ளியமையும் நடனத்தை புன்சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள். கருவண்ணக் குழந்தைகள் தேவர்களென நின்றாடின. மாந்தளிரும் பாலாடை வண்ணமும் கொண்ட குழவிகள் மலர் மஞ்சங்களில் நடப்பவர்கள் போல் தெருக்களிலும் அன்னையரின் முலைகளிலும் தோள்களிலும் எட்டி உதைந்து அசைந்தனர். விளையாட்டுப் பாவைகளின் உடல்களைத் திருகிப் பார்த்தனர். ஒன்றோடு ஒன்று மோத வைத்து உடையுமா என நோக்கினர். உடையாத பாவைகளை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டன. உடைந்தவற்றை உவ்வே என வாய்சுழித்து இளிவரல் காட்டின. இரண்டு வைரங்களை நோக்கி எது இன்னொறென அறிபவள் போல் குழவிகளையும் அவளுள் எழும் சிற்பனையும் ஒப்பிட்டு மயங்கினாள் திருதிகா. ஒளிகள் ஊடி ஒருமுனையைப் பிறிதொரு முனை பெருக்கியது. பலநூறு நுண்முனைகள் கொண்டதெனக் குழவிகளுடலும் சிற்பனின் உடலும் மயக்காட்டின. வைரங்களை இருட்டில் அகலின் துளித் தீயில் நோக்கி இருவிழிகள் அவையென எண்ணி உறுபவள் போல் குழவிகளின் தீரா வியப்பை நோக்கினாள்.

மன்றினருகே பேரொலியுடன் பறைகள் ஒலிக்க ஆயிரக்கணக்கான மயிற் தோகை விரியும் காவடிகள் ஆடிவந்தன. களத்தில் முதற் புண் ஏற்றவர்கள் முதல் தழும்பால் மேனி கொண்டவர்கள் வரை நூற்றுக்கணக்கில் குவியல் குவியலாகச் சுற்றிச் சுழன்று வெறியாடும் காவடிகள் எழுந்தாடின.
ஆடும் மஞ்சைகளின் பேராடல் விழவெனக் காவடியாட்டக்காரர்கள் ஆடிக் களித்தனர். பறைகள் அடிகூடி அழற் பெருக்கனெ நாதம் எழுந்தது. ஒவ்வொரு மேனியிலும் வெள்ளியூசிச் செதில்கள் நுழைந்து அவர்களைப் பின்னின்று இழுத்தன. அவளுள் உந்தும் வேகமென ஆடற்காரர்கள் முன்னெழுந்து ஆடினர். பட்டினத்தை கணத்திருகலில் ஆயிரமாயிரம் மயில்கள் முற்றுகையிட்டது போல் அவை ஆடிப் பெருகின. ஆடலில் மயிலெனத் தோற்றமும் அசைவில் பருந்துகளின் கூர்மையும் அகல்வில் காளைகளின் திமில் வளைவுகளும் எழ அவள் ஒவ்வொரு ஆடலையும் அகத்திருத்தினாள். தாளம் கொட்டி இசையெழும் உடல்கள். நாதம் பிளந்து நாக்கொள்ளும் வாய்கள். மேனியென மின்னும் பொன் வேல்கள். பெண்களின் அங்கங்களில் குற்றிய வெள்ளியூசிகள் தோலை விம்மி வெறிபட்டு எழுந்தார்கள். கூந்தல்கள் புரளத் தலை சுழன்றார்கள். மார்புகள் விடைக்க வளைந்தாடினார்கள். பறையும் முழவும் முழங்கிக் கூவ மயிலென எழுந்த புலிகளெனச் சீறினார்கள். ஆடவர்கள் கால்கள் மண் தொட மறந்த புழுதியென தரை மிதித்தெழுந்தன. தோள்களில் செதில் முட்கள் கனற்கயிறால் ஆனவையென தோலை இழுத்தன. கள் குடித்த மந்திகளெனக் கிளைக்குக் கிளை தாவினார்கள். இழுகயிறுகள் கிளைக்கயிறுகளென அமைந்தசைந்து உலுக்கின. ஆடலர்களை இழுப்பவர்கள் அவர்களின் ஆடியிலிருந்து பிரிந்து நின்றாடும் நிகர்ப்பாவைகள் என விசையுற்றிருந்தார்கள். மயிற்கண்களின் வண்ணச் சிதறல்களை உச்சிச் சூரியன் உதறி பட்டினத்தின் அங்காடிகளையும் மனைகளையும் ஒளிக்குவைகளெனத் தெறித்தான். மண் புழுதியடங்கக் கலயங்களில் நீரள்ளித் தெளித்து விசிறினர் சிறுவர்கள். மென்கரங்களென எழுந்த புழுதிச் சுவாலைகள் நீர் குடித்து அணைந்தன.

திருதிகா குடிகளின் பெருக்கில் தானொரு மயிற்பீலி என வளைந்து நின்றாள். மன்றிலிருந்து வெளியின் திசைக்கலைவை நோக்கியிருந்த துடியன் அங்காடியொன்றின் மூங்கில் தூணிலிருந்து பூங்கிளையொன்று எடை தாளாது வளைவது போல் நின்று கொண்டிருந்த திருதிகாவைக் கண்டான். அவள் விரல்கள் தலையை மூடியிருந்த துணியைப் பற்றியிழுத்துக் கொண்டிருந்தன. சீராக நறுக்கிய இரு சிமிழ் உதடுகளில் அறியா நோக்கொன்று விழித்திருந்தது. மூக்கின் கூர்வளைவில் மெல்லிய வியர்வைகள் அரும்பி மின்னின. மூக்குத்தியின் நீலக்கற் சுடர் அவளை யாரென அவனிடம் காட்டியது. ஒயிலையின் சிறுமார்புகள் ஊதியணைபவை போல் அவன் நெஞ்சில் தோன்ற துணுக்குற்று விலக்கிப் பின் தலை திருப்பித் திருதிகாவை நோக்கினான். ஆடு மகளின் உருமாற்று வேடம் இதுவென உய்த்தவனின் அகம் அட்டைக் கால்களென நகரத் தொடங்கியது. காவடிச் சீற்றங்களுக்கிடையில் காற்று விலகிச் சுழன்று வழி கண்டு நுழைவதென உட்புகுந்து அவளருகே இருந்த ஆடியங்காடியின் வாயிலுக்குச் சென்றான்.

வட்ட வடிவ நெளிகூந்தல் விளிம்புகள் கொண்ட ஆடியொன்றைக் கைகளில் எடுத்து நோக்கினான். அவள் விழிகளைப் பார்க்கும் ஆசை அவனுள் மொய்ப்புக் கொண்டது. பலபருவங்களின் முன் ஒருமுறை அவளின் ஆடலை அவன் நோக்கியிருந்தான். சிறுமியிலிருந்து இளம் பெண்ணுக்கான ஏணியின் இறுதிக் கட்டில் கால்வைத்தபடி அரையுடலைப் பெண்ணுக்கும் அபிநயங்களைச் சிறுமிக்கும் கொடுத்து நின்று ஆடினாள். அவளின் ஆடலில் சுழன்றெழுந்தவை மலர்களின் நறுஞ்சோலை. கூந்தலில் நெளிந்து துடித்தவை பேதமையின் கூர் நாவுகள். பேதைக் காதலின் விழைவு நாவால் தன்னைப் பெண் என உணரும் பருவத்தில் அன்றிருந்தவள் இன்று முழுப்பெண் என நின்றிருக்கிறாள். அவள் விழிகளில் எவை கூடிப் பெண் என மாறினாள் என அறியும் ஆர்வம் அவனது அட்டைக் கால்களை நேர்த்தியாக எடுத்து வைத்து முன்னகர்ந்தது.

ஆடியங்காடியின் பனையோலைப் பாய்களால் விரிக்கப்பட்டிருந்த தரையில் அமர்ந்து வட்ட ஆடியின் அமைவை நோக்குபவனெனப் பாவனை புரிந்தான். ஆடியங்காடியின் வாணிகன் குலசூரிய அவனது நாட்டியத்தை நோக்கிப் புருவத்தைத் தூக்கித் துணைச் சிறுவனுக்குச் சைகை செய்தான். துடியனை அங்காடித் திருடன் என எண்ணிக் கொண்டான் குலசூரிய. பார்ப்பதற்கு செல்வனாக ஆடை பூண்ட வேடிக்கைக்குத் திருடுபவன் என அவனை உய்த்த குலசூரிய துணைச் சிறுவனின் காதில் சில சொற்களைப் போட்டான். அவன் துடியனின் முன் வந்தமர்ந்து “ஆடியை இத்தனை விரிவாகப் பெண்களும் ஆய்வதில்லை அண்ணா” எனக் கொஞ்சு தமிழில் சொன்னான். அவனை நிமிர்ந்து நோக்கிய துடியன் “ஓம். ஆடியைப் பெண்கள் தொலைவுகளில் வைத்து ஆய்வதில்லை. அருகிலேயே நோக்குவார்கள். ஆடியின் அருகாமை அவர்களுடன் தோழியெனக் குடியிருப்பது. மெய்யாகவே பெண்களின் ஒரே தோழி ஆடி மட்டுமே. அது தான் உங்கள் வாணிபம் கொழிக்கிறது” என நகைத்துக் கொண்டு சொன்னான். “நான் எளியவன் அண்ணா. நானறிந்த ஆடிகள் பார்ப்பவரைத் திருப்பிக் காட்டும். அவர்கள் அகம் கற்பனை செய்வது அவரல்ல என நேர்நின்று காட்டும். நான் என் புன்மீசையை வளர்விக்க ஆடிகளைப் பார்க்கிறேன்” எனச் சிரித்தான். அவன் சிரிக்கும் பொழுது குலசூரிய அவனை நோக்கிவிட்டு துணைச் சிறுவனின் தொழிற் திறமையை மெய்ச்சியபடி பின்னகர்ந்து குடிகளுடன் உரையாடத் தொடங்கினான். இதைச் சற்றுப் பிடித்துக் கொள் எனத் துணைச் சிறுவனிடம் ஆடியைக் கொடுத்த துடியன் அதில் தன் முகத்தை நோக்குபவனெனக் குழலைச் சீர்படுத்தினான். அவன் பின்னே தூணுடன் வளைந்து படர்ந்திருந்த திருதிகாவின் கழுத்தின் சிறு தசையும் அதில் ஓடிய பசும் நரம்பும் பிடி கூந்தல் கொத்தும் ஆடியுள் விழுந்தன. இன்னும் சற்றுப் பின்னால் சென்று பிடித்துக் கொள்ளச் சொன்னான். துணைச் சிறுவன் எழுந்து வெருகென நான்கு கால்களில் நடந்து திரும்பி ஆடியைப் பிடித்துக் காட்டினான். தென்னோலைக் கூரையின் துளைகளால் கதிர்க் கூர்கள் ஆடியங்காடியில் விழுந்து ஆடிகளில் பட்டு ஒளிக் கூடமென உருகிக் கொண்டிருந்தது. அதில் சில கதிர்த் தொடுகைகள் திருதிகாவில் விழுந்து வியர்வைத் துளிகள் அரும்பியோட கழுத்தின் பசும் நரம்பு உயிர்கொண்டதென நெளிந்தது. அவள் உதட்டில் ஒட்டிய கதிர் முனையொன்றில் அதன் மென்விரி ரேகைகள் துலங்கியெழுந்தன. அவன் ஆடியை உற்று உற்று நோக்க துணைச் சிறுவன் அவன் யாரை நோக்குகிறான் என ஆடியைத் திருப்பி அதில் அவன் நோக்குபவரைத் தேடுபவனென நோக்கிவிட்டுத் தலையில் ஆடியால் மென்னடியிட்டுத் திரும்ப ஆடியைச் சீராகப் பிடித்துக் கொண்டான். துடியன் அவனை ஆடியைச் சற்றுச் சரித்துப் பிடிக்கச் சொன்னான். துணைச் சிறுவனுக்கு எரிச்சல் எழுந்தது. முகத்தில் வலிந்து ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு ஆடியைச் சரித்தான்.

திருதிகாவின் நீலக்கல் மூக்குத்தியும் அதன் பொன்மலர் விரிவுகளும் சுடர்ந்தன. நீலக்கல் தனி இதயத்துண்டென அவளது மூக்கில் துடித்துக் கொண்டிருந்தது. அவள் இமைமயிர்கள் தழைந்து அசைவதைக் கண்டான். அவை அவளது வியர்க்கும் உடலை விசிறி விடுபவையெனப் படபடத்துக் கொண்டிருந்தன. தோழிகள் அவளைச் சுற்றிலும் நின்று அவளது தோளைத் தொட்டு உலுப்பியபடி சொல்லாடிச் சிரித்தனர். திருதிகாவின் உதடுகள் சிரித்த பொழுது பற்களின் வெளிர்சுவற்றில் ஒளிவிழுந்து தவழ்ந்தது. சிமிழுதடுகள் திறந்து மூடுகையில் குங்கும நாவு வெளிவந்து உதட்டைத் துடைத்துத் திரும்பியது. துடியனின் அகம் விழி விழி என ஏங்கியது. விழியை ஒரு கணம் நோக்கும் சரிகோணம் எதுவென எண்ணிக் கொண்டான். அவளை நோக்கியொருகணம் இம்மை மறந்து ஒரு ஒளித்தொடுகையெனத் தொட்டு அமரவேண்டும் என எண்ணமெழுந்தது. துணைச் சிறுவன் ஆடியை தலையாட்டுவது போல் அசைத்து “இப்போது யார் தெரிகிறார்கள் அண்ணா” எனச் சினம் சொற்களில் எழக் கேட்டான். அவனது சினத்தைக் கண்டு நகையெழுந்த துடியன். “அவ்வாறே அசை” எனச் சொன்னான். அசையும் ஆடியில் திருதிகாவும் துடியனும் சிலகணங்கள் நடமிட்டு மீண்டார்கள் என எண்ணிக் கொண்டான் துடியன். துடியனுக்குள் உள்ளுறையும் துடியன் ஆடியில் தெரியும் துடியனை நோக்கினான். அவன் விழிகளில் மின்னும் ஆசை எவ்வளவு எளியது. இத்தனை சொற்களைக் கூட்டிக் கொண்டு அவற்றை விரித்துக் கொள்கிறான். அவன் ஒயிலையையோ அல்லது வேறு பெண்களையோ நோக்குவது ஒரே ஆடியில் என எண்ணினான்.

ஒவ்வொருவரையும் அவன் தன் ஆடிப்பாவையுடன் இணைத்து வேறொரு நிகர்வெளியில் புனைந்து கொள்கிறான். ஆடியில் துலங்கும் அவர்கள் அவனின் அக விழைவுகள். அவர்கள் மெய்யில் நெருங்குந் தோறும் வேறெவரோவென மாறிக் கொள்பவர்கள். அசைக்கும் ஆடிச் சரிவுகளென்பவை அவனது அகவிழைவின் ஆடலில் தோன்றும் மயக்குகள் என உணர்ந்திருந்தான். பெண்கள் போதையின் முதல் சுருளலையில் எழும் புகைவிருப்பு. பின் செவ்வரிகளென விழிநரம்புகளைப் பின்னும் மெய்விழுக்கம். மேலும் உறைந்தால் ஊழ்கம். அறிந்தால் பித்தின் ஊழ்கம். அறிந்து கடந்தால் புலரியில் எழும் இறுதி நினைவின் விழுப்பிசை.

வழுக்குப் பாறையில் தூங்கும் தேன்வதைத் துண்டொன்று துள்கணம் எதிர்நோக்கி ஆடிக்கொண்டிருப்பதை போல் திருதிகாவின் கழுத்தில் குரல்நாண் தூங்கியாடுவதை நோக்கி இள நகை கொண்டான் துடியன். ஆடுமகள் எதிர் கொண்டு விழைவு கொள்ளத்தக்கவள் அல்ல. அவள் கனவுகளை நிரப்பி உண்டாக்கிய பொற்பாவை. அவள் மையத்தில் நின்றிருந்து சுடர் நாணுகையில் தொலைவில் இருளில் விழியுறைத்து நிற்பதே துடியனின் அகம் தீண்ட விரும்பும் கணம். அவள் விழியின் கீழ்வெண்திரை ஆடியில் அசைந்து தெளிந்தது போல் கலங்கியது. உற்ற போது மறைந்து மூடிக் கொண்டது. முதல் ஊழ்கம் பயில்பவனென அகத்தை ஆயிரங் கரங்கொண்டு விலத்தி ஆடியை உற்றான். அவள் எதுவெனவும் எஞ்சாது ஆடி வெறுமையுற்றது. நோக்க நோக்க அவள் விழிகள் வேழவிரிவென இருவிழி கொண்டு தோன்றினாள். வேழத்தின் விழிகளில் அமைந்த தாழ் பார்வையால் அசைந்து கொண்டிருந்தது ஆடிச்சுவர். அவன் எழுந்து ஆடிக்குள் காலைத் தூக்கி வைத்து உள் நுழைந்தான். அப்படிக்கட்டின் விளிம்புகளில் ஒயிலையின் தோல்நிறம் மின்னிச் சுடர்ந்தது. உள்ளேறும் தோறும் பலவண்ணப் பெண்கள் அவனுள்ளிருந்து நிழல்களெனப் பிரிந்து மெய்ப்புல்களென எழுந்து மேனி கொண்டு மதர்ப்பு முற்றி நகையணி கொண்டு சிரிப்பலைகளில் மூழ்கடிக்கும் ஒலிகளை எழுப்பிக் கூவினார். துடியா என் மடியில் துயில் எனத் தொடைகளைத் தட்டித் தழைந்து அழைத்தாள் அதிசூடி. இதோ என் மார்பை அருந்து என்ற புகழ்விழி தன் சிறுமத முலைகளைக் கசக்கியபடி ஆடையைப் பிழிந்தாள். என் விரல்களைப் பற்றிக் கொள் நாம் ஆகாயத்தில் சொப்பனமென மின்னலாம் என்றாள் தாபினி. என் கழல்களை உன் நெஞ்சு மிதிக்க விடுவாயா கண்ணா என யாழ்க்குரலில் மீண்டாள் ஒயிலை. பிடரி சிலிர்த்து இருபுரவிகள் உதட்டில் முத்தமிட்டுக் கொள்வது போல் ஆயாழியும் வேனிற் செல்வியும் கூந்தல் களைந்து உதடுகள் அருந்திக் கொண்டு இன்பாகு வேண்டுமா கார்மினுக்கா என்றார்கள். நூறு நூறாய் மேனிகள் ஒசிந்து வளைந்து அருந்தி அளைந்து அழைப்புற்று எழுந்தன. திருதிகா மின்னில் தகித்திடும் பொற்சிலையென நோக்கு உயர்த்தி இமைச்சாளரங்கள் மூடி அசையாக் கணத்தில் வலக்கால் வான் தூக்கி ஏந்தியபடி இடமுலை ஒரு நோக்கென விழிகொண்டு உறைந்து நின்றாள். அவள் நிழல் அனைத்துத் திசையிலும் அசைந்து கொண்டிருந்தது. அந்த அசையாச் சிலையின் ஆடும் நிழல்களே பெண்களென எண்ணினான் துடியன்.

வட்ட ஆடி சரிந்தாடியது. ஒரு நோக்கு. ஒரே நோக்கு. ஒரு நுனிக்காற் கணம். திருதிகாவின் வலவிழியின் கரும் புடவி ஆடியில் உறைந்து கரைந்தது. துணைச் சிறுவன் சலிப்புடன் ஆடியைப் பாயில் வைத்து எழுந்து இடையில் கைகளை ஊன்றித் துடியனை நோக்கினான். அக்கணத்தில் அகமறைந்து வீழ்ந்தவனென ஆடாதிருந்தான். கரங்கள் ஆடியைப் பிடித்திருப்பவனென நீண்டிருந்தது. அது விழியா. விழியைப் போலொரு மயக்கா. உளம் கலைகையில் உளமே ஆக்கி அனுப்பும் அதிகனவா. மானுட விழிகளுக்கு எவ்விதம் புடவியை விழியெனச் சூடும் எழில் கூடும். அஞ்சனக் கோடுகள் கீழிமைகளில் மயிற் பீலியின் ஒரு புல்லிதழென நீண்டிருந்தது. மெல்லிய சிறுமஞ்சளும் நீலமும் அதில் குழைந்திருந்தது. அது அவள் விழி தான். ஒரு விழி. ஒரு விழி நோக்கில் ஒரு புடவி. அது மெய்யாகவே அங்கிருக்கிறதா அல்லது அவனே அவனுக்குச் சமைத்து ஊட்டிக் கொள்வதா. அகம் தோய்ந்து விசும்பினான். இருவிழிகளையும் முழுவதனத்தையும் எழிற் பேருடலையும் அறியும் புரவிகள் அவனுள் எழுந்து உதைத்துக் குளம்படிகள் பட்டுத் தேகம் நோகும் வலியெழுந்தது.

எழுந்து தன்னை ஒருக்கிக் கொண்டு காவடித்திரளை நோக்கினான். ஆறு கொண்டு சென்ற கானகமெனக் குடிகள் அகன்று காவடியாடுபவர்கள் பெருவீதியை மிதித்து உழுது மிதந்து எழுந்து முகங்கள் உக்கிரக் களியென விரியத் துள்ளாட்டம் கொண்டிருந்தனர். பெண்களின் காவடிகள் சுழன்று ஆடுகையில் காவடிக் கிளிகள் முன்மண்ணும் பின்மண்ணும் தொட்டன. தசைகள் கிழிந்து விடுபவையைப் போல விதிர்ப்புக் கொண்ட மேனிகள் இழு இழுவென எதிர்க்காற்றில் ஆடின.
மென்மையில் கூடும் பெண் ஒரு சொப்பனம். தீவிரம் சுழலும் பெண் அதிகனவு என எண்ணிக் கொண்டான் துடியன். மேனி மறந்த பித்தில் வெள்ளியூசிகள் ஏந்தி நின்றாடும் பெண்கள் அழகில் அரக்கிகள். அரக்கியின் காதல் கொல்லும் கனல் கொண்டது. காமம் மீட்கும் விரல்களாக ஆனவை. தேவ பெண்டிரின் காதல் நீங்காத் தண்மை பூண்டது. காமம் எரியும் கொங்கைகள் என்றமைந்தவை. பாவனைகளில் அரக்கியென்றும் தேவ மகளிரென்றும் தோன்றுபவை ஒரு பெண்ணின் இரு ஆடிகள். அவள் எதில் எதுவெனத் தோன்றுவாள் என்பது அவள் முன்னெழும் ஆணின் அகவாடியில் தெரியும் அவனின் ஆடிபாவையை அவள் அறியும் கணத்தில் தீர்மானமாகிறது. என்றாவது மெய்யில் அவளை வெறும் விழைவென அறிபவன் காண்பது இருநிழல் கொண்ட ஓர் அணங்கை. யட்சியை. காமினியை. மோக சொரூபியை. தாப விருகையை. அனற் கொழுந்தை. தண் சிலையை. தெய்வ புணரியை. யோக அல்குலை. மோட்ச முலையியை. பேற்றின் பெருங் கூட்டை. சூர்மிகும் தேக விம்மியை. அடங்காத விழைவில் ஆடும் ஓர் ஆடலை. ஆடலில் புரளும் ஒரு நிழலில் நீந்தும் ஆயிரமாயிரம் நாகங்களின் விட மூச்சை. இன்னொரு நிழலில் ததும்பிச் சொரியும் அமிர்தத்தின் ஊற்றை.

திருதிகா மயில்களாலான மானுடர்களின் மேனிப் பெருக்கில் பீலியில் உரசும் பீலியென நடந்து சென்றாள். மண் கரைத்த நீரின் வாசனை நாசியைத் தூண்டித் திண்மணம் என எழுந்தாள். அந்தியில் சிற்பனின் ஆடலில் இத்தனை ஆயிரம் உடல்களும் எவ்விதம் ஒன்றெனப் பொருதி அவன் எழுவான் என அகத்தில் வியந்தாள். எளிய மானுடனெனத் தங்களுடன் களிப்பேச்சாடி இளம் பெண்களென நாணுபவன். ஆனால் ஆடல் வணக்கம் வைத்து அரங்கெழும் பொழுது விண்ணும் மண்ணும் அறியாப் பெருஞ்சோதியின் ஒரு திவலையென எழுபவன் என தோன்றுவது என்ன மாயை. எவர் எண்ணிய கனவின் மானுடன் அவன். யார் தொட்டு எழுப்பிய ஆடலிறை. எங்கு நிகழும் பேராடலின் எதிரொலி. யாருமறியாக் கணத்தில் தோன்றிட்ட முதற் கனலின் வெங்கதிர். எங்கு பொழிந்தும் உயிர் தழைக்கும் நீரன். எத்திசையும் உடல் திகைக்கும் வியப்பு. எக்களியிலும் மின்னாத ஊழ்கநொடி. பொன்னில் பொன்னென ஒளிர்பவன். முத்தில் முத்தெனச் சுடர்பவன். மாணிக்கம் பதித்த மணியிழைக் கயிறோன். வைரங்கள் அரியும் நுண்வைரன். அலகிலாப் பெருக்கில் அனைத்துமென ஆடுபவன். ஆடலின் தேவன். ஆடுகையில் அரக்கன். அமைகையில் முடிவிலி. எழுகையில் முதற் தொடக்கம்.

சொற்களைப் பெருக்கிச் சிற்பனுக்குச் சூட்டியபடி மயிற் தோகை விசிறிகள் அகம் பரத்த நடந்தாள் திருதிகா. அன்று இளங் குருத்தென முகிழ்த்து அன்றே வளர்ந்து சடைத்துப் பூத்துப் பொலிந்து கனிந்து பறவைகளின் வானமாகி ஆயிரமாயிரம் கதைகள்பரப்பி உதிர்ந்து படர்ந்து மீண்டும் தளிர்க்கும் அப்பெரு விருட்சனை வெல்லும் ஒரு கணம் அவளில் துளிப்பாதரசமெனக் கூடியுருள்வதை எண்ணினாள். அது அவளே ஆக்கிக் கொண்ட அவன் வெல்லவியலா அகம். வெல்லத் துணியாச் செருக்கு. அவன் சிகரங்களின் நுனிச்சிறு நிலத்தில் கனவுகள் அமைந்தவன். அங்கு அவன் ஏறியலைந்து உயிர் வற்றி வருகையில் சாரலின் பொழிவு கொண்ட ஒருதுண்டு மேகமென நின்றிருக்கும் விழைவு எனத் தன்னை ஆக்கிக் கொண்ட தொல்தெய்வத்தின் கொல்கருணை அவள். அவளில் மின்னிடும் பேரெழில் சுரந்து தீர்த்திடும் முகில்முலை. அவளறியும் அவள் அவன் அருந்தி உயிர்த்துக் கிடந்து துயிலக் கனிந்து விரிந்த மேகமஞ்சம்.
மயில்களின் நடனம் பட்டினத்தின் பெருவீதியில் விடமேறும் கழுத்தென உயர்ந்து நாகதேவி ஆலயத்தை நோக்கி நீண்டது. நஞ்சில் மின்னும் நீலம் காதல் என எண்ணினாள் திருதிகா.

TAGS
Share This