59: காய விழைஞன் : 02

59: காய விழைஞன் : 02

பித்தர் விழிதிறந்து நோக்கிய போது சலனமற்ற நீர்ப்பரப்பில் ஓடும் ஒளிச்சில்லுகளைக் கண்டேன். சினமென அமைந்த உவகை அவரிடம் சுவறியிருந்தது. பெண்கள் கூந்தலில் நறுமணமென எண்ணிக் கொண்டேன். அலைந்து அலைந்து என் அகம் அவரைக் கண்ட பின்னர் அடங்கியிருந்தது. நோயில் காறிய கடைசி எச்சிலென என் வசவுகளையும் துப்பிய பின்னர் சொல்லென என்னில் எதுவும் எஞ்சியிருக்கவில்லை. வடுவென எண்ணிய தேகத்தின் நாற்றம் பழகியிருந்தது. ஆயிரமாயிரம் கொடுமைகள் புரிந்தவனின் விந்தின் அணு நான். பித்தாகி அழிந்த என் அன்னையின் புதல்வன். உடுக்கள் வான் பரப்பில் யாரையோவென என்னை நோக்கியிருந்தன. காற்றில் வனத்தின் பசுமிலை வாசம். எழுந்து விழிமூடி ஊழ்கத்திலென உடலமைத்து அமர்ந்தேன். அவர் என்னை நோக்கியது சினத்தின் கனிவிலென எண்ணினேன். சினத்தினுள் என்றும் கனிவின் கசப்பு ஒட்டியிருப்பதை அன்று அறிந்தேன். அதை நோக்கப் பழகிய விழிகளுக்கு சினம் ஒரு ஆடிபிம்பம் எனத் தோன்றும். நாம் சினத்திற்கு அப்பால் நின்று கொண்டிருக்கும் மனிதரின் அறியாமையுடனோ அறிவுடனோ நம்மைப் பொருதிக் கொள்கிறோம். சமச்சினம் ஒரு கேலி. சீழ்க்கையை எதிரொலிக்கும் பிலவுச் சுவர்களைப் போல.

பித்தர் சினக்கனிவின் குரலில் “மைந்தா. இப்புடவியை ஆளும் நியதிகள் விந்தையானவை. ஈசனின் ஆடலில் தலைச் சிலுப்பலில் மின்னும் சடைவார்களெனத் தாவிக் குதித்துப் பின்னிப் பிரிவன. நீ அவற்றுடன் பொருதத் தேவையில்லை. உனது எல்லா விருப்புகளும் வெறுப்புகளும் இங்கு கோடி கோடி உடல்களில் நடந்து முடிந்த ஆடலின் பாவனைகள். உனக்கென்று புதிய நன்மையோ தீமையோ இல்லை. உன் மேனியில் நீ தலைக்கொண்ட பின்னர் தந்தையும் தாயும் உற்றவரும் மற்றவரும் வேறே. நீயாகத் தருக்கி உண்டாக்கிக் கொண்ட நீயும் வேறே. ஆனால் உன் தருக்கினால் உண்டாகியிருக்கும் மெய்விழைவில் ஒரு முடிச்சுண்டு. அதை நீ அறியாது விடின் உன்னால் வாழ்வனப் புடவி கொள்ளும் உயிர்ப்பை அறிய முடியாது. வடுவை அறிந்தவர் அதன் வாசலில் தலைவைப்பவர். அறியாதவர் தன் கால்களை வைத்தபடி தங்களை மேன்மையானவர் எனத் தருக்கிக் கொள்கிறார்கள். எங்கு மேன்மையென்ற ஒன்று முழுதுருக் கொள்கிறதோ அங்கு வஞ்சமும் விழைவும் இல்லை. எளிய மானுடர் தம்மை இப்புடவி வஞ்சிக்கிறதென எண்ணிக் கொள்கிறார்கள். விழைவுகளால் அவ்வஞ்சத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள். அறிக. விழைவை முற்றறியாதவர் வஞ்சத்தை வெல்வதில்லை. உன் யாக்கையை நீ பலியிட்டுக் கொள்ளுமளவு எந்த தெய்வமும் பலி கோரவில்லை. அளியெனக் கொடுக்கப்பட்டதே வாழ்க்கை. அது உனது தந்தையும் அன்னையும் ஆக்கியளிக்கும் உண்டியல்ல. யாக்கையை யாக்கை யாப்பது என்பது அதிர்வின் அதிர்வின் அதிர்வதிர்வுகள். யாத்தல் என்பது தளைப்பதில்லை. தந்தையினதோ அன்னையினதோ முன்னோரினதோ எச்சொல்லும் எண்ணிக் கருதி அறிந்து கடப்பதே. அதன் மேன்மைகளோ சிறுமைகளோ உனக்கில்லை. உனதென்று சொந்தக் காயங்களை ஆற்றாத வரை நீ கொள்ளும் அகமென்பது தூய்மையின் எண்ணத்தால் தளையுண்டது. உடலிற்குத் தூய விழைவுகளென்று உள்ளவை அவ்வாறே புடவியில் நிகழ முடியாது. தூய்மையில் கலக்கும் மாசே அறமென்றறிக. விழைவு அறத்தால் கட்டுண்டது. அதன் எல்லைகளை நீ விரிக்கும் பொழுது அவ்விரிவு காயமின்றி நிகழாது. காயங்களைக் கண்டு அஞ்சுபவர் மெய்மையை அறிய முடியாது. மானுடர் ஒருவருக்கொருவர் காயங்களை வழங்கிக் கொள்பவர்கள். தான் தூயவர் எனத் தருக்குமொருவர் அறியாமையின் குழவி. மாசை அறிந்தவர்களே புடவியை நீட்டிக்கிறார்கள். அவர்களே மெய்மையில் எவ்வளவு மாசு கலக்க வேண்டுமென அளக்கிறார்கள்.

உன்னில் கலந்ததென நீ எண்ணும் மாசு உன் அறமென்றாகுக. அறங்களின்றிப் புடவியில் நிலைத்தல் இல்லை. அவை காலம் தோறும் மாசினால் நிறைக்கப்பட்டு விரிவு கொள்கிறது. தூயதென ஒன்றுண்டு என்பதே மாயையின் முதற் சொல். மாயை அங்கனமே ஒருவரின் நான் எனும் அகங்காரத்தை ஆளத் தொடங்குகிறது. தூய்மையெனும் பாவனையைக் களைக. நீ யாரோ அதுவென அச்சமின்றித் திகழ்க. உன் ஊழை நீ வழிநடத்து. நன்மையும் தீமையும் உன் விழைவின் பொருட்டே எழட்டும். நீ அறிந்தவை எவையும் உன்னைக் கட்டுப்படுத்தலாகாது. குடி திரும்பி உன் தளைகளை அறுத்து விழைவுகளை வென்று வனம் புகுக. அதுவரை வனம் உனை ஏற்காது” என்றார்.

அவரது சொற்களை ஊழ்கமெனக் கொண்டேன். எரிதீயில் எஞ்சிய சிறுசருகின் துண்டனெ உளம் படபடக்க அக்கேள்வி என்னில் தங்கியது. நானே கண்டு அறியும் என் வினா அது. யாக்கைக்குத் தூய விழைவென்ற ஒன்று உண்டா. மாசற்று மலரும் மலர்ச்சுடரென விழைவை ஆக்கிக் கொள்ள மானுடருக்கு இயலாதா. உடலையும் உளத்தையும் அறிவதற்கு சொற்களளவுக்குத் தடையுள்ளவை பிறிதொன்றில்லை இளையவனே. உன் பாதையும் என் பயணமும் இங்கு சந்தித்துக் கொண்டன என்பது ஊழே. ஞானத்தின் பாதை அரிதானது. சிற்றடிகளால் மட்டுமே நீண்ட காலகல மண்பாதை. கோடான கோடி மானுடரிலிருந்து சிறுகூட்டம் அவ்வழியே பிரிகிறது. வழிகளில் சந்தித்து அது தன்னைச் சாத்தியம் என உரைக்கிறது. தாகமென்பது நாம் அறிந்தவற்றினால் ஆவதல்ல. அறியாதவற்றால் எஞ்சியிருப்பது. இறுதித் துளியையும் அருந்தி விட்டேன் என எண்ணிக் கொண்டால் நாம் இருப்பென இருப்போம்.

கொற்றன் அவனது மேனியை நோக்கினான். மாகருப்பின் கன்னத்தில் முளைந்த கருந்தாமரையென அங்கம் திரண்டிருந்தது. உதட்டின் செங்கருமை கருமுத்தென ஒளிவீசியது. அவன் குழல்களில் மானுடம் ஆக்கியளித்த அழகின் சிலகீற்றுகளைக் கண்டான். விழிகளில் தீயிலையின் புன்னகை. தான் அமர்ந்திருந்த விண்சிலை நழுவி மண்வந்தான் கொற்றன். அவனருகிலென அமர்ந்திருந்த ஓசையிலான் தீயிலையை மீண்டும் மூட்டிய போது அவனது இருப்பில் இருந்த புன்னகை தன்னை ஒரு வியப்பெனச் சொல்லியது. மானுடக் கீழ்மைகள் அண்டாத புதுநிலமென அவன் படர்ந்திருந்தான். “மூத்தவரே. யாக்கைக்குத் தூய விழைவொன்று உண்டா. குடிநெறி மீறாது அதை ஆற்றுதல் சாத்தியமா” என்றான் கொற்றன்.

துதியைக் கொற்றனிடம் நீட்டிய ஓசையிலான் மெல்லச் செருமி உடலை நிமிர்ந்திக் கொண்டு காவியம் உரைக்கவிருப்பவன் போல் தருக்கி அமர்ந்து கொண்டான். “சாத்தியமாகுதல் வேண்டும் இளையோனே. மானுடம் முன்னோக்கி மட்டுமே செல்ல முடியுமென்பது நூலோர் சொல். குடிநெறிகளும் அறங்களும் ஒழுக்கங்களும் பல்லாயிரம் வாழ்வுகளின் விளைவுகளால் உண்டாக்கப்பட்டவை. அவைக்கு மெய்ப்பெறுமதி அன்றாட வாழ்வில் உண்டு. நெறியும் அறங்களும் ஒழுங்கங்களுமின்றிக் குடியென ஒன்று மண்ணில் நீடிக்க முடியாது. நெறியழியும் குடிகள் ஈசல்களாகிப் பெருகி உதிர்வார்கள். அறங்கள் மீறும் மானுடர் தொட்டாற் சுருங்கி இலைகளென மூடிக் கொள்வார்கள். ஒழுக்கங்களைக் கைவிடும் மக்கள் ஈரமுலர்ந்த மணலெனப் புயற் காற்றில் வீசியெறியப்படுவார்கள். ஆனால் நம்முன் உள்ள வினா இம்மூன்றுக்கும் அப்பாலான உயிர்களின் ஆதர விசைகளிலிருந்து பிறப்பது. மூலம் திரும்புவோர் மூன்று நிலைகளிலிருந்தும் வெளியேறியோர். குடி நீங்கியவர்களாகவே அவர்கள் வாழ முடியும். ஆகவே தான் சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் கவிகளும் கலைஞர்களும் எளிய குடிகளுக்கு மாறான இயல்பு கொண்டிருக்கிறார்கள். குடிகள் அவர்களை வெறுப்பதும் அவர்களின் மதியாமை குறித்தே. அவர்கள் எளிய குடிகளின் சட்டங்களை உதறுகிறார்கள். வாழ்வை அதன் நிர்வாணத்தில் நோக்குகிறார்கள். மானுட நியமங்களைப் புறந்தள்ளுகிறார்கள். அறங்களும் ஒழுக்கங்களும் சிம்மத்தைக் கண்ட சிற்றுயிர்களென அவர்கள் முன் விலகித் தலைதாழ்த்தி வழிவிடுகின்றன. ஆனால் புடவியில் எதுவும் வணிகமே இளையோனே. ஒருவர் ஞானவழியைத் தேர்கையில் அதன் எடைத் தட்டில் தன் முழுவாழ்வையும் அதன் மூலம் ஈட்டிக் கொண்ட அனைத்தையும் அங்கு நிகர் வைத்தாக வேண்டும். அதுவே துறவென்றாகிறது. துறப்பவர் இகவாழ்வின் முழுத்தேட்டத்தையும் துறக்கிறார். அதன் மூலம் மானுட சாத்தியத்தின் பிறிதொரு வாசலைத் திறக்கிறார். புதிய வழிகளை உண்டாக்குபவர் நிர்வாணமாகவே அங்கு செல்ல முடியும். அதுவே ஞானத்தின் நியமம்.

ஞானத்தை அறிய விழைபவர் அனைத்து விழைவுகளையும் விழைவின் கொடுந் தெய்வங்களையும் நிகர் போருக்கு அழைக்கிறார். குருதிப் பலி கேட்பவற்றுக்குக் குருதியையும் வென்று செருக்க வேண்டிய இடங்களில் வென்று செருக்கியும் விவாதித்துப் பெருக்கி அழிக்க வேண்டியவற்றை அங்கனமேவும் முன்கனிந்து அறிதலை ஒரு தொகுப்பெனச் சொல்லாக்கியும் அளிக்கிறார். அவரவர் வினாவுடன் நிகழும் இப்பயணத்தில் வினாவுடன் மறைபவரும் உளர். ஆனால் மகிழ்ச்சியின் சாரலில் நனைந்தபடி நிகழும் மரணம் ஒரு மகத்தான வாய்ப்பு. பயணம் முற்றுற்று ஞானம் பொதிந்தவர் மகிழ்வின் ஊற்றென ஆகிறார். இரண்டில் இரண்டும் பேறே.

தூய விழைவுகள் எவை இளையோனே. விழைவுகள் அனைத்தும் அதன் எண்ண நிலையில் குழவிகள். செயலிலேயே அவற்றின் தூய்மை மாசுறுகிறது. ஆயிரமாயிரம் கிளைநதிகள் ஒன்றை வெட்டி ஒன்று கடந்து செல்லும் மாபெரும் பிரவாகம் இந்தப் புடவியின் வாழ்க்கைகள். அவற்றில் எது எங்கனம் நிகழுமென்பது தற்செயல்களினால் உண்டாகின்றன. உன்னுடைய இச்சைகளை நீ பணயமாக்கி ஒரு வாழ்வை ஆட முடியுமா. உன்னுடைய மேலான கருணையை இனிமையை நற்செயல்களை நீ பணயம் வைத்து இச் சூதை ஆட முடியுமா. உடலின் ஆதார விசைகளான தாகம். பசி. காமம் மூன்றும் நிறைவினால் அக்கணம் வெல்லப்படத்தக்கது. பொருண்மை சார்ந்த நியதிகளுக்கு உட்பட்டது. ஆனால் அகத்தின் விழைவுகள் ஆயிரம் மாயங்கள் காட்டும் பேராடிச் சுழல். புடவியை ஆளும் கனவு. நின்று தருக்கி ஒவ்வொரு கணமும் வெல்லும் விவாதங்களில் ஆணவத்தின் விழைவு. பொன்னின் விழைவு. மண்ணின் விழைவு. அனைத்தும் விரும்பித் தன் முன் பணியும் விழைவு. எத்தனை எத்தனை விழைவுகள் மானுடருக்கு. கற்பனை இரண்டு புறத்திலும் தன்னைப் பெருக்கிக் கொள்கிறது. கற்பனையே மானுடத்தை ஆக்கிய மூலக்கருவி. அதுவே மானுட விழைவுகளைப் பெருக்கியதும். கற்பனையற்றவர்கள் எளிய குடிகள். அவர்கள் ஆக்கி அளிக்கப்பட்ட கற்பனையில் அமைந்து வாழ்பவர்கள்.

கற்பனை கொண்டவர் நுண்மையின் அகவிழிகளைத் திறந்தவர்கள். நுண்மை பிறிதற்றது. தன்னை மட்டுமே துணைக் கொள்வது. தனது அறிதலே அதற்கு முதன்மை மதிப்பும் பொருளும் கொண்டது. அழகென்பது நுண்மையில் அமைவதும் நுண்மையை நோக்குவதாலும் உண்டாகுவது. எவ்விழைவும் நுண்மையால் தீண்டப்பட வேண்டியது. எளிய தருக்கங்களோ ஆணவங்களோ குடிநெறிகளை அழிக்கலாகாது. அதன் விழைவுகள் குடியை அழிவிற்கே இட்டுச் செல்லும். கற்பனையில் புடவியை ஆக்கக் கற்பவர் நுண்மையிடம் தன்னை ஒப்பளிக்க வேண்டும். எங்குதிரும்பிடினும் குத்திடும் முள்முனைகளாலான கூண்டினுள் தினம் வசிக்க வேண்டும். உடலின் தூய விழைவை அறிவதென்பது அகத்தின் பல்லாயிரங் கோடிக் கற்பனைகளின் துணை கொண்டு கற்பனைக்கு அப்பாலானதைச் சென்று தொடும் நெடுப்பெரும் ஊழ்கம். மானுடரில் சிலரே அங்கு சென்றமைகிறார்கள். அவர்கள் சொல்லே காவியங்களில் மைய தரிசனமாக ஒளிகொள்வது. கீழ்மைகளில் கீழானவராக அமைந்த போதும் மேன்மைகளில் மேலானவராக வென்ற போதும் இரண்டும் சமபொருள் கொள்வது காவியத்தின் வழி கண்டடையும் அறிதல்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கையிலேயே. காவியம் மானுட அகமென்னும் அருட்பெருஞ்சோதியின் அடியையும் முடியையும் அறியும் அன்னமும் பன்றியும் என்பதை அறிக.

ஈசன் சோதி வடிவினனாக எழுந்தமை வாழ்வின் பேரதானத்தை விளக்கும் பொருட்டே என முதுசொல்லுண்டு. மாசு பன்றியெனவும் தூய்மை அன்னமெனவும் கிளறியும் மிதந்தும் அறியும் கலை காவியம். யாக்கைக்குத் தூய விழைவைச் சென்று சேரும் வரமளிக்கும் தெய்வமே காவியம். காவியத்தில் பித்தாகுபவர்கள் அச்சோதியை சிலகணம் விழியுற்று தன் தாங்கிக் கொள்ளாத மெய்மையால் பேதலிப்பவர்கள்” என்றான் ஓசையிலான்.

“அகத்தின் நுண்மையை அடைவது எங்கனம் மூத்தவரே. எனது அகம் நுண்மையென எழுந்தவற்றால் அலைக்கழிந்து பெருக்கென்றானது. அதை அஞ்சி அழித்தேன். நோக்கற்ற விழிகொண்டு அதைக் கொன்றேன். என் கனவுகளை எரித்தேன். அறங்கள் வான்விழிகளென என்னை எதிர்நோக்கி நின்றிருக்கின்றன. நான் அவற்றின் விழிகளுக்கு அஞ்சுகிறேன். கீழ்மையெனக் குடிகள் வகுத்தவற்றை நான் மீறியதில்லை. ஆனால் அவ்வெண்ணங்கள் என்னில் நானென அமைந்தவை. என் நுண்மை அழிந்த பின்னர் அவற்றை மீட்க நான் முயன்றதில்லை. தேவையென நான் எண்ணும் போது அவை கானல் நீரென விழிமயக்களித்து விலகிச் செல்கின்றன” என்றான் கொற்றன்.

“அறிக இளையோனே. நுண்மை என்பது அகத்தின் குழவி விழிகள். அதை நீ வளர்த்துக் கூர்மையாக்கிப் பயில்வித்தல் வேண்டும். அதுவே நூல் கற்றல். சொல்லெண்ணிக் கற்றல். கற்றலை இடைவிடாது தொடர்தல். இளையோனே. நுண்மையை நீட்டிக்கவே கல்வி அளிக்கப்படுகிறது. நுண்மையை அழிக்கும் எதுவும் தீங்கான கல்வியே. தம்மை மெய்யனெ நம்பிப் பின் தொடர்க எனும் சொல்லுடன் எழும் எந்த நூலும் மானுட நுண்மைக்கு எதிரானது. நான் இங்கு இவற்றைச் சுட்டுகிறேன். இவை கொண்டு மேலும் களங்களை ஆக்கிக் கொள்க என்ற அறைகூவலுடன் எழுபவையே மெய்நூல்கள். நுண்மை சொல்லால் நுணுக்கப்படும் சிலை. நூல்கள் உளிகள். நூலாசிரியர்கள் சிற்பிகள்.

நூல் கற்காதவர் நுண்மையை நீட்டிக்க முடியாது. அத்தகையவர்கள் மெய்மை எனச் சொல்லிக் கொள்பவற்றை நம்பி அடிபணிந்து வாழ்பவர்கள். மீறித் தருக்குதலும் தருக்கி விவாதித்தலும் விவாதித்துத் தொகுத்தலும் தொகுத்து அறிதலுமே நுண்மையின் வழி. ஆகவே நீ அஞ்சற்க. நுண்மையென்பது பயின்று ஈட்டிக் கொள்ளக் கூடியதே. அனைவருக்கும் பிறப்பில் அளிக்கப்படுவது அங்கேயே தான் அமைந்திருக்கும். நீ அழித்திருப்பது நுண்மையின் வெளிப்பாடுகளை. அவை புனல் மேல் புலனாகும் பிம்பங்கள். அகப்புனல் என்றும் அங்கேயே இருப்பது. உன் அகத்தை நோக்கி ஊழ்கமமை. உன் ஆழுள்ளம் ஒரு நதிப்பெருக்கென என்றுமிருப்பது. ஊழ்கம் அதற்குள் சென்று மீளும் வாயில். உன் அகப்பெருக்கிடை விழுந்து எழும் போது உன் நுண்ணகத்தை உணர்வாய்” என்றான் ஓசையிலான்.

கொற்றன் விழிமூடி அவன் சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்தான். கள் குடிச்சாலையின் அரவங்கள் அழிந்து அங்கு ஓசையிலான் மட்டுமே நின்று கொண்டிருக்கும் ஒரே ஒலியென எண்ணிக் கொண்டான். தீயிலையை இழுத்து நெஞ்சை நிறைத்துக் கொண்டான். தன்னுள் தானெனத் தூழாவிக்கொண்டிருந்தான். அவனறிந்த காட்சிகள் ஒன்றன் மேலொன்று ஓடிச் சிதறின. உற்று விலக்கினான். உறுத்தலை ஒழிந்தான். ஆயிரமாயிரம் காட்சிகளின் துண்டுகள் இழைவுகள் அவனுள் பெருகிக் கொண்டேயிருந்தன. ஒவ்வொரு நினைவுப் பெருக்கிலும் சருகான தேக்கிலையில் எறும்பென ஓசையிலான் உடன் வந்தான். அவனை மட்டுமே நோக்கியிருந்தான். மூச்சில் நிகழும் ஊழ்கமென இலையில் எறும்பென நின்றவனை நோக்கினான். அவனது அகம் விரிந்து அவன் ஒளித்தவை வெளிப்பட்ட போது அதிர்ந்து விலகி இலையில் ஓசையிலானுடன் ஒண்டிக் கொண்டான். அவை அவனறியாத அவனின் ஆழ்விழைவுகள். எண்ணாத சிறுமைகள். கொள்ளாத மேன்மைகள். எதுவும் பொருளின்றி அனைத்தும் பொருள் கொண்டு அவனை ஆர்த்தன. விழிதிறந்து ஓசையிலானை நோக்கி “ஒருங்க முடியவில்லை மூத்தவரே” என்றான்.

அவன் புன்னகைத்து உடலைத் தேய்த்துக் கொண்டு “ஒரு நாளில் இயல்வதென்றால் எல்லாக் குடிகளும் ஞானியரே” என வெண்பற்கள் நிரை தெரியச் சிரித்தான். “உன்னை இறுக்கிக் கொள்ளாதே இளையோனே. எளிதாக எண்ணிக் கொள். அகம் நாம் ஒருக்க எண்ணும் போது ஓராயிரம் நாகங்களின் பிலவெனத் தன் நஞ்சை முழுதுதிரட்டி அளிக்கும். தன்னைத் தான் ஆளுவதே அகம். அது எதனாலும் தான் கட்டுறுவதை விரும்புவதில்லை. முதலில் நீ அதன் சொற்கேட்டாக வேண்டும். பின் அதை அறி. அதன் சொற்களின் பொருளின்மையை அறிந்தே உன் அகம் சொற்களை இழக்கும். அழிப்பதால் அல்ல இழப்பதாலேயே அகம் கூர்கிறது. வா. களிக்குள் புகுந்து களியென்றாவோம். அகம் சலிக்க அனைத்தும் புரிவோம். எஞ்சுவது எதுவென நோக்குவோம். எனது பயணத்தில் உன்னைப் போன்ற இளையோனை இனிக் காண்பது அரிது. இத்தற்செயலை ஊழெனக் கொண்டு ஊழை வகுப்போம்” என்றான் ஓசையிலான். துதியை இழுத்துப் புகையை எளிதாகக் காற்றில் ஊதியபடி வான் தொட எழுந்த பனைகளின் சடைத்தலைகளை நோக்கினான் கொற்றன். சூரியன் தகித்துப் பனைகளில் விழுந்தது. அதன் தகிப்பைத் தலைகளில் சூடிக் கொண்டு மண்ணில் விழுந்த பனைநிழல்களை நோக்கினான். வெய்யில் விழுவது நிழல்களுக்கு அருகில் அல்ல. வெய்யிலில் விழுவதே நிழற்குளிரென மண்ணில் மானுடர் அமரும் இடத்தை அளிக்கிறது என எண்ணிக் கொண்டான். அவனுள் புன்னகை ஒரு பனை நிழலின் குளிர்மையென விழுந்தது. அவனது தகிக்கும் சிரசு அதில் அமர்ந்து கொண்டு ஓசையிலானை நோக்கிப் புன்னகைத்தது.

TAGS
Share This