64: நினைவாலயம் : 02

64: நினைவாலயம் : 02

இடையிலிருந்த விண்யாழியை நீள்மரப்பெட்டியில் அமர்ந்திருந்த ஆடற் சித்தரின் முன் ஆற்றில் உள்ளங்கை நீரை ஊற்றுபவள் போல இறக்கி விட்டாள் தூமழை. விண்யாழியின் வாயில் நுரை கசிந்து கைவிரல்களில் எச்சில் வடிந்திருந்தது. மூக்குநீர் ஊறி வாயில் ஒட்டிக்கொண்டிருந்தது. சிக்குப் படிந்தது போல் புழுதி விண்யாழியின் கேசத்தில் அப்பியிருந்தது. அவள் ஆடற் சித்தரை நோக்கினாள். அவளது மழலை விழிகளின் செம்மையைக் கண்டவரது அகம் வீங்கி வீங்கி அடங்குவது அப்பேருடலில் மூச்சென வெளிப்பட்டது. அவரது நீள்குழலை முடிச்சிட்டுக் கொண்டையிட்டிருந்தார். சுற்றிலும் அழுது கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் பேரொலி அவரது செவிகளில் உலோக முள் முனைகளெனத் தைத்துக் கொண்டிருந்தது. தூமழையின் நிழல் அவரில் கொடுஞ் சாபமிடப் போகும் அன்னையெனப் படிந்து கிடந்தது. நிமிர்ந்து நோக்க வலுவற்ற புழு வாலென அவரின் தலை தாழ்ந்திருந்தது. சூரியனின் மாலைச்சுடர்க் கொள்ளிகள் வடக்குப் பட்டினத்தின் மனைகளின் மீது சரிந்து சொருகி ஊன்றி நின்றது. நூற்றுக்கணக்கான மரணப் பந்தல்களில் தூங்கிய தோரணங்கள் அலைபட்டு ஆடிக்கொண்டிருந்தன. பறையின் தோல்கள் வாடியவை போல அதிர்ந்து அதிர்ந்தன.

தூமழை மண்ணில் அமர்ந்து விண்யாழியை நோக்கிய பின் ஆடற் சித்தரைப் பார்த்தாள். அவரது பேருரு மூச்சு விடுவது சீறலொலி போல் கேட்க அவரின் தாழ்ந்த முகத்தில் ஓங்கி அறைவது போன்ற குரலில் சொல்லெடுத்தாள். “இம்மரணங்களுக்கு என்ன விலை சித்தரே. உங்களின் தோள்களும் வில்லும் இருந்த களத்திலேயே என் இளங் காதலன் மடிந்திருக்கிறான். இளையவரை மடிய விட்டு உங்களைக் காத்துக் கொண்டீர்களா. அரசரும் தளபதிகளும் எல்லாப் பெருவீரர்களும் பட்டினம் திரும்பி விட்டீர்கள். பாணர்கள் நாவினில் பாடல்களென ஆகுவீர்கள். துருவன் அவர்கள் ஓலைகளில் படிந்த தூசென எஞ்சுவான். பாடல்களிடையே அவன் முகம் தோன்றாது. நினைவுகளில் அடித்துச் செல்லப்பட்ட இளம் பச்சை இலை.

நீலழகரின் முகம் பார்த்து தெய்வம் இறங்கியவன் போல் சென்றானே என் துருவன். என் வெள்ளித் தாரகை. என் குழலில் மலரிட்டவன். அகத்தில் காதலின் அனல் கூட்டியவன். இனிமையன்றிச் சொல் தெரியாதவன். கனிவு இன்றி விழிகள் திறக்காதவன். எங்கனம் அவன் போர் புகுந்தான். எவருக்காக மடிந்தான். எனக்காகவா. இந்தக் குழவிக்காகவா. குடிகளுக்காகவா. தர்மத்துக்காகவா. அரசனுக்காகவா. எதற்கு நிகர் அவன் விலையிடப்பட்டான். மாற்றாக இப்போது அரசன் அளிக்கவிருப்பது எதை. அவன் சாம்பலையா. அவன் இளஞ் சூடு பொறுக்காத உதடுகளைத் தீயிட்டு அளிப்பீர்கள் அல்லவா. உங்களுக்கு வாழ்வில் பற்றில்லைச் சித்தரே. நீங்கள் களம் சென்று மடிகையில் சிந்தக் கண்ணீருமின்றிச் செல்வீர். துருவன் எத்தனை பற்றுகளின் சிறு பூ என அறிவீரா. எத்தனை நுண்மையான இழைகளின் நடுவிழை அவன். இளமையின் பொருளென்னவென அறிந்தவனும் இல்லை. அக்காலங்களை வனத்தில் எவரின் பொருட்டோ அழித்துக் கொண்டான். அங்கத்தைச் சிதைத்துக் கொண்டான்.

அறிவீர்களா சித்தரே. முதற் களப்புண் அவன் மேனியில் தழும்பென உறைந்த போது நான் கொண்ட பதைபதைப்பை. ஆயிரம் நுண்ணூசிகள் குற்றி அத்தழும்பில் கட்டி என்னை இழுத்துக் காவடியாடுவது போன்றிருந்தது.
அவனைத் தீச்சொல்லால் வசைபாடி பட்டினம் திரும்பி விடச் சொல்லிக் கெஞ்சினேன். அன்னையருக்கோ காதலிகளுக்கோ தன் உடையவனின் மேனியில் சிறுகீறல் அளிக்கும் வாதையை உங்கள் அகம் அறிய ஒண்ணுமா. துருவனின் மேனி வடுக்களால் ஒற்றைப் பெருந் தழும்பென ஆகும் கனவுகள் கண்டு எத்தனை முறை நிசிகளை ஊடறுத்து ஓலமிட்டிருப்பேன். இன்று அவனை நீங்கள் உடலமெனக் கொணர்ந்து காட்சிக்கு வைத்திருக்கிறீர்கள். சொல்லுக. உங்களின் முதிர்ந்த சொற்களென நீங்கள் கொண்டிருப்பவை எல்லாம் விடம் தோய்ந்த அம்புகள் என உறுதி செய்யக் காத்திருக்கிறேன். என் துருவனின் உயிருக்கு என்ன மதிப்பு இங்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவன் எதற்கு ஈடாகத் தன் இன்னுயிரை அளித்தான். சொல்லுக” என்றாள். அவளின் குரலில் குரல்வளையை அழுத்தி உருவும் இரும்புக் காப்பின் விசையிருந்தது. ஆடற் சித்தர் ஒவ்வொரு சொற்களாலும் உடலை நிறைத்துக் கொண்டு தாள முடியாமல் சரிபவர் போல் முகம் இழுபடத் தன் இடக்கரத்தால் சிரசைத் தாங்கினார்.

அவர் சொல்லின்றி அவள் அங்கிருந்து எழப் போவதில்லை என உணர்ந்தவர். எங்கெங்கோ அலையும் பூச்சிகளைப் பிடித்துப் பற்களில் வைத்து அரைத்து உண்டு அதன் கொடுநாற்றத்தில் வாய் மணந்திருந்து வாழ்ந்த தன் துறவின் ஆரம்ப நாட்களில் உடலிலிருந்த தளர்வை எண்ணினார்.
அத்தகைய கொடுநாற்றம் இப்போது தன் வாயிலிருந்து எழுகிறதென எண்ணி அருவருத்தார். அவரது குரல் நீர்க்கரைகளில் பெருகியிருக்கும் பூச்சிகளின் ஒலியெனக் காற்றில் குலைந்தது.

“மகளே. புடவியில் எதற்கும் நிலையான பொருளில்லை. நாம் அறிவதும் நம்மை அறிவதும் புலன்களே. உனது சொற்களின் நியாயம் புடவியில் மெய்யானது. அதன் மெய் என் எலும்பின்னுள்ளும் சுடுவதை உணர்கிறேன். உனது கண்ணீருக்கு முன் புடவியில் எதுவுமே பெரிதில்லை. அறங்கள். தருக்கங்கள் எதுவும் பொருள் கொண்டிருக்க முடியாத காதலின் கண்ணீருடன் நின்றிருக்கிறாய். அதை நான் எச்சொற்களாலும் நியாயப்படுத்த முடியாது.

மூத்தவனாகவோ சித்தராகவோ நின்று சொல்லும் சொற்களென எதையும் என் அகம் தொட மறுக்கிறது. எளியவனாக நின்று மட்டுமே இச்சொற்களைச் சொல்கிறேன் கேள். உன்னுடைய இளங் காதலனைப் போல் ஆயிரமாயிரம் வீரர்கள் மடிந்தது விடுதலை என்ற ஒற்றைப் பெருங்கனவுக்கானது. அது அரசனுடையதோ என்னுடையதோ உன்னவனுடையதோ கூட இல்லை. அது ஒவ்வொரு குடியும் விழிதிறந்து நோக்க விழையும் தமதென்றான மண்ணின் மீதான மாபெருங்காதல். மண் விடுதலையினையும் காதலென்றே சொல்வது குடிச்சொல். காதலில் இரண்டே உச்சமென நின்றிருப்பவை. ஒன்று மானுடர் மானுடர் மீது கொள்வது. மற்றையது மானுடர் தம் விடுதலையின் மீது பொருளளிப்பது. காதலென எழும் எதுவுமே பற்றென உயிரைப் பிடித்துக் கொள்வது. பற்றென ஒன்றை நாம் கொண்டு விட்டால் அதில் எது பெரிய பற்று என்பதை நாமறியாத காலச்சுழல்வின் ரேகைப் பின்னல்கள் உண்டாக்குகின்றன. இங்கு நிகழும் மண் விடுதலைக்கான போர் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பேராற்று வெள்ளமென அணைகளைப் பெயர்த்து அகங்களில் புகுந்து விட்டது. மானுடக் காதலால் நாம் கொள்ளக் கூடிய எல்லையில் சுயநலன் என்ற அம்சம் ஆழ்விசையைத் தொட்டுக் கொண்டேயிருக்கும் உள் நாக்கு. மண் விடுதலையென்பது நம்மை விட மகத்தானதென நாம் எண்ணிச் சூடும் பெருங் காதலென நிகழக் கூடியது.

இளையவர்களின் உடலங்களைக் கொணர்ந்து இங்கே அடுக்கி வைத்து விட்டுக் காவலுக்கு நின்றிருக்கும் இளையவர்களை நோக்கினாயா. இத்தனை ஆயிரம் கண்ணீரையும் காதலையும் இழப்புகளையும் அவர்களும் கண்முன்னே காண்கிறார்கள். உளம் அழிகளமெனச் சதைச்சிதையில் எரிந்து கொண்டிருக்கிறார்கள். போரில் எஞ்சி மீளுபவர்கள் மடிந்தவரின் மனையினரையும் காதலியையும் காணும் போது உளம் கொள்ளும் கொதிப்பை எண்ணிப் பார். அது மடியாமல் மீண்டதன் குற்ற உணர்ச்சியில் கொழுகொம் பொன்றின்றி ஏறிப்படரும் விடக்கொடி.

ஆனாலும் இந்த இளையவர்கள் இக்கண்ணீர்ப் பெருக்கினை மேவி நெடும்பாறைகளென உடல் நிமிர்த்தி ஏன் நின்றிருக்கின்றனர் என எண்ணினாயா. எதன் பொருட்டு இத்தனை தாங்கும் வல்லமையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். எது அவர்களுக்கு அறமளிக்கிறது. இந்த நிலையும் அறமே மகளே. கண்ணீர் பலமொழிகள் பேசிடும் ஒற்றை நீர். அதை ஒவ்வொருவரும் அவரவர் நிலையிலிருந்து பொருள் கொள்கிறார்கள். மடிந்தவர் பொருட்டு இனி மடியாமை வேண்டுமென்பது அன்னையின் கண்ணீர். இழந்தவை எண்ணி இனி இழக்காமை வேண்டுமென்பது தந்தையின் கண்ணீர். இருப்பவை கொண்டு இனி எஞ்சவேண்டுமென்பது குடிகளின் கண்ணீர். ஆனால் எதன் பொருட்டும் காதலியின் கண்ணீருக்கு மாற்று என ஒன்றில்லை மகளே. உன் கண்ணீருக்கு ஈடாக என் தலையையே உன் முன் வைக்க முடியும். மெய்யாகவே அதையே விழைகிறேன்.

இங்கு நிகழ்வது இரு காதல்களுக்கிடையிலான போர். மானுடம் என்பது வாழ மண்ணென்பது வேண்டும் என்ற காதலுக்கும் மானுடரும் மானுடரும் வாழக் காதலென்பது வேண்டும் என்பதற்கும் இடையிலான நுண்மையான ஒரே பொருளுடைய சொற்களுக்கிடையில் நிகழும் போர். எத்தனை விலை கொடுத்து மானுடக் காதலை நோக்கி மானுடர் வந்து சேர முடியும் என்பதை எவரால் கணிக்க இயலும். மானுடர் தாம் பெருவிழைவெனக் கொள்பவற்றை வெல்ல உயிரளிப்பதில்லை. பெருங்காதலெனக் கொள்ளும் ஒன்றின் பலிமேடையிலேயே தாமாகச் சென்று தம் வாழ்வை முற்றழிக்கிறார்கள்.

உனது காதலன் மண்ணிலும் காதல் கொண்டவன். நீலழகனில் அவன் கண்டது அப்பெருங் காதலின் பித்தை. அப்பித்தை விழியுற்று அகமிருத்தித் தான் எனக் கண்ட ஒருவர் மனை திரும்பி வாழ்வதென்பது விடுதலை கொண்ட மண்ணின் மீதேயே இயலும். அவர்களால் தாம் காதலிப்பவர்களுக்காக மண்ணை வென்று கொடுக்கும் பெருங்கனவை இழக்க முடியுமா. என்றோ ஒரு சிங்கைப் படையெடுப்பில் நீயோ இக்குழவியோ கொல்லப்படுவதைத் தடுக்கவே அவன் நேற்றுக் களம் புகுந்தான். இங்குள்ள ஒவ்வொருவரும் தான் நேசிப்பவர் பொருட்டே களம் புகுகிறார்கள். மண் விடுதலையென்பது அதன் மெய்யான அர்த்தத்தில் காதலைத் தடுக்கும் அனைத்தையும் அழிப்பதே. அதனாலேயே அது பெருங்காதலென்றாகிறது. தன் காதலையும் பிறர் காதலையும் இணைத்தே அது காக்கிறது. மானுட விழைவுகளில் காதல் என்ற ஒன்றே ஒவ்வொன்றையும் பொருளேற்றி அளிக்கிறது. அன்பினால் உண்டாகும் அனைத்துமே போரிற்குச் செல்பவரின் குருதியென்றாவது. காதலினால் நெய்யப்படுவதே அவர்களின் சதைகளென்றாவது. காக்கும் கருணையே கவசங்களெனப் பூண்டிருப்பது. தாழாமை என்ற மானுட விசையே அவர்கள் கரங்களில் ஆயுதங்களென மின்னித் தெறிப்பது.

உனது இளங் காதலனின் விழிமணிகள் களத்தில் எங்கேயோ விழுந்து விட்டன என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அவன் இமைகளைத் தைத்து மூடி இங்கு வைத்திருக்கிறோம். விடுதலை நாளில் களிகொள்ளும் குடிகளையோ உன்னையோ கண்டு கொண்டிருக்க அவன் விழிமணிகள் எங்கேயோ இன்னமும் இருந்து கொண்டிருக்கின்றன. அவை இப்பொழுதும் நம்மை நோக்கியிருக்கின்றன எனத் தோன்றுகிறது. ஒவ்வொரு நிசியிலும் ஏதோவொரு விண்மீனாய் அவன் விழிதிறப்பான். இம்மண்ணையும் உன்னையும் நோக்கியிருப்பான்” என்றார் ஆடற் சித்தர். அச்சொற்களில் அவர் சொல்ல விரும்பிய எதுவோ ஒன்று சொல்லிமுடிக்கப்பட்டது என எண்ணிய போது அவரது அகம் சற்று அமைதியடைந்தது. சொல்லி முடித்த சொற்கள் அடுக்கி வைக்கப்பட்ட மரணப் பந்தல்களெனத் தன் முன் விரிந்து கிடக்கின்றதென நோக்கினார். மடிந்தவர்களின் முன் சிந்தும் நீரும் சினமுமென அவரது சொற்கள் அவள் முன் உயிரற்று அணைந்திருந்தன. ஆனால் உளத்தில் மெல்லிய அமைதியை அவரடைந்தார். தூமழையை நிமிர்ந்து நோக்கினார். அவளது விழி பித்தில் எப்பொழுதோ எங்கோ தொலைவு சென்றுவிட்டதெனத் தோன்ற அவரது அகம் மீண்டும் நடுக்குக் கொண்டது.

காதலுற்ற பெண்ணின் விழியில் தோன்றும் கொல்பித்து தூமழையில் நின்றடர்ந்தது. வெறிவிழியில் துலங்கும் தூமணிக் கண்ணீரில் சாம்பலும் எரியும் என எண்ணினார். அவரது உடல் அங்கேயே இறுகிக் கல்லாய் அமைந்தது. கரங்கள் தூக்க முடியாத எடை கொண்டிருந்தன. தூமழை அவரை நோக்கி அரூபமான குரலில் ஒலித்தாள் “அவனுக்கு ஈடென இப்புடவியில் எதுவுமில்லையென அறிவேன். நீங்கள் நின்றிருக்கும் இக்களம் அழிவின் பிணச்சாலை. இன்றறிக. இக்காலம் மடிந்து மீண்டும் திறந்து பல்லாயிரம் கோடி முறை மீள மீள இதுவே நிகழ்ந்தாலும் நான் கலங்கேன். அவன் என நின்றிருக்கும் காதலின் தழலில் எத்தனை புரங்களும் எரிப்பேன். தீச்சொல் உமிழ்வேன். அழிப்பேன். அழிவென நின்று சாபமிடுவேன். குடிகளைக் கொன்று கழுதைப் புலிகளுக்கு உணவிடுவேன். நெறிகளையும் தர்மங்களையும் அறங்களையும் பொசுக்குவேன். ஆறாத கண்ணீரால் அனைத்தையும் அழித்து இப்புடவி சாம்பலென எஞ்சினால் அதை மேனியில் பூசிப் பேய்க்களியாடுவேன். அது மட்டுமே அவனுக்கு ஈடென நான் கொள்ளும் வஞ்சம் என்பதை உணர்கிறேன்.

ஆனால் நான் எளியவள். என்னிடம் அத்தகைய வல்லமைகள் இல்லை. அறிந்து தான் அத்தகைய வல்லமைகளின்றிப் பெண் படைக்கப்பட்டிருப்பாள். அல்லையேல் ஒவ்வொரு நாளும் புடவி எரியுண்டிருக்கும். ஒவ்வொரு கணமும் அது அழிந்து கொண்டிருக்கும். அழிவு மட்டுமே இமைத் துடிப்பான புடவியை எண்ணியிருக்கிறீரா சித்தரே. உம் சித்தனும் ஈசனும் அறியாத அழிவைப் பெண் சினம் ஆக்கும். அழிவை ஆக்கும் மாகாளி பெண்ணே என அறிக. ஆனால் நான் அங்கனம் இப்புடவியை அழிக்க விரும்பவில்லை. இக்கணம் என்னுள் எழும் சினத்திற்கு என்னை அளிக்க விழையவில்லை.

அவனற்ற அவனியிலே எதுவும் பொருள் கொள்ளப் போவதில்லை. அவனே இப்புடவியின் எழிலெனவும் வண்ணமெனவும் வார்த்தையெனவும் அர்த்தமெனவும் அறமெனவும் நின்றிருந்தவன். அவனை இழந்த பின் அனைத்தும் இழந்தவளானேன். உமது விடுதலை நாளைக் காண அவன் விழிமணிகள் எஞ்சியிருந்து என்ன பயன். விண்மீன்களை விழியென எண்ணி மடிந்தவரின் விழிமணிகளென எண்ணிக் கொள்வது மானுடரை ஆற்றும் எளிய பொய். மானுடர் தமக்குத் தாமே பொய்களைச் சூடிக் கொள்ளாமல் வாழ இயலாது என்பதை அறிவேன். ஆனால் நான் சூடிக் கொண்டு காத்திருக்க என் துருவன் இன்றில்லை. இப்பொழுது உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் நான் என்னுள் எஞ்சியிருந்த எதுவோ எனக் கொள்க. விடுதலைக் காதலை அறியாத எளிய மகளென எண்ணுக” என்று சொல்லி முடித்தவள் பருந்து குஞ்சைத் தாவித் தூக்கும் வேகத்தில் விண்யாழியைத் தூக்கிக்கொண்டு அவளின் அன்னையிடம் சென்று கொடுத்தாள். பின் அங்கிருந்து மறைந்தாள். அன்றிரவு துரு வீரனின் பெயர் பொறிக்கப்பட்ட முட்டை வடிவ நடுகல்லில் தலை மோதி மடிந்து அவன் பெயரிடைக் குருதியென ஒட்டிக் கொண்டாள். அவளது தலை மோதிய வேகத்தில் விழிமணிகள் தெறித்து விழுந்திருந்தன. எத்தனை சினம் கொண்டிருந்தால் அப்படி மோதியிருப்பாள் என எண்ணிய போது அவரில் அவளின் நிழல் சடைத்திரிகளெனச் சுழன்று கொண்டது.

*

விண்யாழி தன் வாளை எடுத்து இடைக்கவசத்தில் இட்டுக் கொண்டாள். ஆடற் சித்தரை நோக்கிப் புன்னகையுடன் வந்தவள் “அனைத்துப் பணிகளும் ஒருங்கியதா சித்தரே. இன்னும் ஏதேனும் பணிகள் இருந்தால் சொல்லுங்கள். இன்று எனது பணி இங்கு தான்” என்றாள். அவர் அவளது இளம் வதனத்தை நோக்கிய போது நெஞ்சில் தூமழைப் பூம்பொழில் எழுந்து வந்து அமர்ந்து கொண்டாள். “இல்லை மகளே. அனைத்தும் ஒருங்கி விட்டது. நீ உணவு கொண்டாயா” என்றார். அவரது குரலில் எழுந்த தந்தை பாவத்தைக் கண்ட விண்யாழி சிறிய புன்னகையுடன் “இன்று ஒருவேளை மட்டுமே உணவு சித்தரே. நீத்தோருக்கென என் உடல் செலுத்தும் நினைவுக் கடன். அண்ணனுக்கும் தூமழைக்கும்” என்ற போது ஆடற் சித்தரின் முகத்தில் அவரில்லாத புன்னகையொன்று எழுந்தது. “நல்லது மகளே. இருவரும் என் இரு விழிமணிகளைப் போலானவர்கள்” எனச் சொல்லி உரக்கச் சிரித்தார். அச் சிரிப்பில் அவருள் எழுந்த பித்தரை விண்யாழி நோக்கியிருந்தாள். அவர் விழிகளில் தெரியும் இருவரும் இரு பித்தின் மணிகளென எண்ணிக் கொண்டாள். நடுகல்லின் முன்னெரிந்த இரு அகல் நாவுகளும் ஓம் ஓம் என்றன.

TAGS
Share This