68: மங்காத கருமை
“மானுடரில் உறையும் அசுரத்தனத்தை விடுவிப்பதென்பது பெண்ணை விடுவிப்பதாலேயே நிகழும் இளம் பாணனே. பெண்ணின் வேட்கையாலேயே புடவி இல்லமென மானுடருக்கு அமைந்தது. ஆடவர் அனைவரும் அவளின் எளிய பணியாட்கள். தன்னை ஆள்பவரை அஞ்சாத பணியாள் எவர். ஆகவே பெண் குடிநெறிகளால் சிறையிடப்பட்டாள். நெறியே அவளின் முதற் பிடிகாப்பு. அதை என்றைக்கும் நினைவு கொள்ளவே கைவளைகள் அணிவிக்கப்படுகின்றன” எனச் சொல்லி உரக்கச் சிரித்தார் வேறுகாடார்.
“நீங்கள் பெண்களில் அடிவேருக்கு அப்பாலும் வெறுப்புக் கொண்டவர் என்பதை அறிவேன் கிழவரே” என்றான் இளம் பாணன். பட்டினத்திற்குள் நுழைந்தது முதல் இளம் பாணன் கண்டவை கேட்டவை அறிந்தவை அனைத்தும் அவனை ஒரு நாளில் மூத்தவனாக்கியது. துயரும் மகிழ்வும் தத்துவச் சிக்கல்களும் கொண்டவனாக்கியது. மூப்பதே மூன்றும் என எண்ணிக் கொண்டான். அவனறியாத உலகினில் கைவிடப்பட்டவன் அவன் விழையாமலேயே வேறுகாடாருடன் தாய் மந்தியின் மார்பில் கட்டித்தூங்கும் மந்திக்குட்டியென ஒட்டியேயிருந்தான். பெருவீதியால் ஆடலுக்கும் நினைவாலயத்திற்கும் செல்பவர்களின் குடிவெள்ளம் எங்கிருந்து வருகிறது எங்கு பிரிகிறது எங்கு கலக்கிறது எத்திசை எங்கு கிளைத்து இப்பெருக்கு முனைகொண்டிருக்கிறதென அறியமுடியா வண்ணம் திசைகள் குழம்பி நின்றன.
வேறுகாடார் குடிகளிடையே விளையாடிக் களித்துச் சிரிக்கும் சிறுமிகளையும் இளம் பெண்களையும் தாய்களையும் விறலியரையும் காட்டி “அச்சமின்றி நோக்குக இளம் பாணனே. இங்கு நாகணவாய்களும் நிலக்கிளிகளும் காகங்களும் புறாக்களும் ஓயாது குரலெழுப்பும் ஓசைப்பிசிறல்களை உண்டாக்குவது எவர் என்பதைக் காண். அனைத்தும் பெண் குரல்கள். பாணர்கள் குடியாகிய நீங்கள் உங்கள் மயக்குகளுக்கும் விழைவுகளுக்குமாகப் பெண்களின் குரல்களை யாழென்றும் குயிலென்றும் குழலென்றும் பாடலாம். நான் எதற்காக இந்த இரைச்சலை இசையென உடன்பட வேண்டும்” எனச் சொல்லிச் சிரித்து அவனை அறைந்தார்.
“பெண்களின் குரல் வரை வெறுப்பா கொள்ளுவீர் கிழவரே. எனக்கு அனைத்தும் இசையாயே கேட்கின்றன. மயிலின் அகவல்கள். தேனின் நனிகுரல்கள். மலரின் அதிர்வுகள். வீணையின் தந்திகள். மயக்கின் மானுடக் குரல்கள். அனைத்தும் பெண்குரலே. இன்னும் ஆயிரம் உவமைகள் சொல்வேன். ஆயிரமாயிரம் உவமைகள் அவள் மீது பாடப்படும். அவள் அதற்குத் தகுதியானவளே. உங்களிடம் உள்ளூறும் வெறுப்பு உங்கள் செவிகளில் குடம்பியென அடைத்திருக்கிறது. அனைத்தும் இன்னொன்றாய் ஒலிப்பொருள் கொள்கின்றன” என்றான் இளம் பாணன்.
மதுவருந்திக் கரங்களைத் தூக்கி ஆடிவந்த பெண்கள் குழுவொன்று இளம் பாணனைச் சூழ்ந்து கொண்டு ஆடியது. வேறுகாடார் இருளில் கரந்த நிழல் போல குடிப்பெருக்கில் கரைந்தார். பத்துப் பேருக்கும் மேல் எவர் அக்குழு என அறியா வண்ணம் அவனைச் சூழ்ந்து கொண்டு கூச்சலிட்டு அவனைச் சீண்டி நகைத்தனர். இளம் பாணன் மேனி விதிர்விதிர்க்க அன்னை மந்தியைத் தேடினான். அதுவோ எந்தக் கொப்பிலென அறியாது ஒளிந்து கொண்டு குட்டியின் காதல் களியை நோக்கியிருந்தது. அப்பெண்கள் அனைவரும் இளம் பாணனை விட உருவில் பெரியவர்களாய் இருந்தார்கள். பெண்களின் மேனியெங்கும் மதுவும் வியர்வையும் வெய்யிலில் வாடிய மலர்களின் நாற்றமும் கலந்து இளம் பாணனுக்கு வயிற்றைப் பிரட்டி எக்கியது. அவர்கள் உடலில் வியர்வை வடிந்து அங்கங்களின் திரட்சிகள் நீர்வழியும் சிலைகளென உருக்கொண்டு ஆடின. இருவர் கரத்தினில் சிறிய யாழ்களை விரும்பியபடிக்குத் தட்டிக் கொண்டிருந்தனர். சிறுமுரசுகளும் பறைகளும் அருகிருந்த திண்ணைகளிலிருந்து ஒலித்துத் தாளங்கள் ஒன்றையொன்று திசை கலந்து பிரிந்தன. அவனுக்குள் நடுக்கம் ஏறி வியர்வை பெருகியது. அதிலொருத்தி அவன் கன்னத்தில் வழிந்த வியர்வையை நாவால் நக்கி “சீசீ.. உப்பு” என்றாள். “எங்கே நானும் பார்க்கிறேன்” என இன்னொருத்தி அவன் தோளை முத்தமிடுவது போல் உதடுகள் குவித்து உறிஞ்சி நக்கி “அய்யோ கரிக்கிறது” எனக் கூவினாள். அதில் பெருமுலைகளின் கோட்டுகள் தடித்த நாவல்களென ஈர ஆடையால் புடைத்து முழுமுலையும் தெரியும் வகையில் நின்றவள் இளம் பாணனின் குழலைக் கலைத்து அவன் வியர்வையைத் துடைத்து அவன் மார்பிலே விசிறினாள். “இவன் ஒரு உமணனாக இருக்க வேண்டுமடி. உப்பிலே குளித்து வந்திருக்கிறான். கழுதையின் வாடையும் எறிக்கிறான். நறுமணம் கொண்டே விழவுக்கு வரவேண்டும் மூடனே” எனச் சொல்லிக் கொண்டு அவனது முதுகில் மாறி மாறி நான்கைந்து கரங்கள் அறைந்தன. இளம் பாணன் குடித்திரளின் மத்தியில் கூனிக் குறுகி நின்றான். எங்கிருந்தோ அவனுக்கான காக்கும் கரமொன்று இடைநுழைந்து அவன் வலக்கரம் பற்றி கொன்றைத் தண்டில் பூக்களை உருவுவதைப் போல் அக்கூட்டத்திலிருந்து அவனை வெளியே இழுத்தது. அவன் நிமிர்ந்து அக்கரத்தை நோக்கியபோது அது அன்னை மந்தியின் கரமெனக் கண்டு ஆறுதலடைந்தான். “ஏய் கிழவா. ஓரிடம் அமரும் வரை கையை விட்டுவிடாதே. இப்பெருக்கில் நானொரு தூசெனத் தொலைந்து விடுவேன். பெண்களா இவர்கள். கொடூரிகள்” எனச் சொல்லி கத்தினான். வேறுகாடார் அவனைத் திரும்பி நோக்கி “இளம் பாணரே. பெண் வெறுப்பைப் பேசாதீர்கள். என் உளம் புண்படுகிறது” என்று சொல்லி ஹோவெனெச் சிரித்தார். அவன் கையை விடுவிக்கப்போவபன் போல் இழுத்துப் பின் அவருடனே இழுபட்டுச் சென்றான்.
இளம் பாணன் காலையிலிருந்த தூய ஒலிகளும் இசையும் நறுமணங்களும் குமைந்து நாற்றமென காற்றில் அலைப்பிரள்வென ஓடுகிறதை நோக்கினான். குடிகளின் முகங்கள் மயக்கும் போதையும் ஊறிச் சிவந்தும் பித்துற்றும் தணற்றன. நினைவாலய வழியில் செல்பவர்கள் முகங்கள் மட்டும் வெட்டி எடுத்து வைக்கப்பட்ட பாவைத் தலைகள் போல் உறைந்திருந்தன. அம்பலத்திற்கும் ஆலயத்திற்கும் செல்பவர்கள் களிமயக்கில் மேனி கொண்டு உடற் பெருக்கில் உலைந்தார்கள். மாலையின் செம்பட்டு வண்ண ஒளி மரங்களின் இலைத்தோகைகளால் உதிர்க்கப்பட்டு மண்ணையும் குடிகளையும் செவ்
வண்ணமாக்கியாது. கருநிற உடல்களில் புழுதியும் வியர்வையும் ஊறித் ததும்பின. மாந்தளிர் வண்ணங்களில் பாலாடைத் தோல்களில் செம்புழுதி மேலுமொரு தோலாடையெனச் சேர்ந்திருந்தது. ஆலயவழியில் ஓடிய சிற்றாறுகள் குடிகள் குளித்துக் குதித்து ஆடிய கூத்தில் சேற்றுக் களியெனக் கருங்கலை வண்ணம் கொண்டிருந்தது. புத்தாடையும் புதுமலர்களும் அணிந்து குடிப்பெருக்கில் நுழைந்தவர்கள் வானவர் என எண்ணச் செய்தனர். கறுப்பாற்றில் நீந்தும் தங்க மீன்களென அவர்கள் குடியாற்றில் துலங்கித் தெரிந்தனர். வானில் மேகங்கள் குவை குவையாய் திரண்டு பேருருக் கொண்டு காற்றில் நடந்தன.
அருகிருந்த மதுச்சாலைத் திண்ணையில் அமர்ந்திருந்த விறலியர் குழுவொன்றைக் கண்ட வேறுகாடார் இளம் பாணனைக் கைபிடித்து இழுத்துச் சென்றார். அன்னைப் பசுவுடன் கயிறுகட்டிய இளங்கன்றெனக் கால்கள் துள்ள ஓடினான் இளம் பாணன். திண்ணையிலிருந்த விறலிகள் புத்தாடை அணிந்து இளமலர்ச்சரங்கள் கூந்தலில் சூடி ஆடிகளை நோக்கி அஞ்சனமும் பொட்டுகளும் இட்டபடி கழுத்தாரம் இடைச்சங்கிலி கழல் வளை பூண்டு இனிய நறுமணத் தைலப் பாவைகளெனத் தோன்றினர். அவர்களது விழிகள் தேமா மலர்களின் வெண்மையைச் சூடியிருந்தன. போதையற்ற பெண்களின் அருகில் அமர்வதைக் கண்ட இளம் பாணன் அகம் பனையோலை மணலில் விழுவதென அமர்ந்தான். அவர்களின் மயக்கு வண்ணங் கருந்தோல்களும் இளைய பாகங்களும் இளம் பாணனின் அகத்தைக் கிளர்த்தின. காமம் ஓர் விழைவென உள்ளில் எழுகையிலேயே மேனி முழுதாற்றலுடன் தன்னை உணர்ந்து கொள்கிறது என எண்ணிக் கொண்டான். போரில் நிகழும் உடலின் ஆற்றல் உளத்தால் விசைகொண்டு ஒன்றெனக் குவிவது. காமம் பல்லாடிப் பெருக்கில் ஒவ்வொரு ரூபங்களிலும் திளைத்துத் தன்னை அணுவிடையையும் அளந்து கொள்வது.
வேறுகாடார் சிரிப்பும் பேச்சுமாக அங்கிருந்த முதுபாணர்களுடன் சொல்லாடிக் கொண்டிருந்தார். இளம் பாணன் அண்மையில் தெரிந்த சிற்றாலயத்தின் முன் இருந்த கேணியில் தாமரைகள் கூம்பியும் கூம்பத் தொடங்கி இதழ் விரல்களை மடித்துக் கொண்டும் நின்றிருப்பதைக் கண்டான். தாமரை இலைகளில் நீர்த்துளிகள் வைரத் துளிகளென மின்னின. வண்ணச் சிதறல்களெனக் காற்றில் ஆடி இலையில் வழுகியூர்ந்தன. வேறுகாடாரிடம் சொல்லிவிட்டு எழுந்து சென்று சிற்றாலயத்தை நோக்கினான். கருங்கல்லால் புடைக்கப்பட்ட பன்றியின் சிலையொன்று உக்கிர பாவத்தில் நின்றிருந்தது. அதன் கொம்புகள் கிளைத்து படைக்கலனென ஈட்டி தூக்கிய பன்றியின் கழுத்தில் எருக்கு மாலையும் நுதலில் குங்குமமும் அணிந்திருந்தது. சிற்றாலய வளவில் குடிகள் தங்கியிருக்கவில்லை. பெருக்கிடை ஓர் நீர்க்குமிழியென அவ்வாலயம் அமைந்திருப்பதென எண்ணியவன் அதற்கேதும் காரணமிருக்கலாம் என எண்ணி எவரிடம் வினவுவதென நோக்கினான். பின் மேனி புழுதியாலும் களைப்பாலும் சோர்ந்திருக்க குளிரகமென தெளிநீர் கொண்டிருந்த கேணியை நோக்கி நீராடலாம் என எண்ணினான். நீராடல் ஒரு நாளுக்கும் இன்னொரு நாளுக்குமிடையிலான திரையை விலக்குமென அவன் அறிந்திருந்தான்.
கேணியில் இலைகள் மலர்த்தண்டுகளில் ஆடும் முறங்களைப் போல் காற்றில் எழுந்து நீரில் அமர்ந்து அவனை அழைத்தன. ஆடையைக் கழற்றி வைத்துக் கெளபீனத்துடன் இறங்கி நடந்தான். கேணிக்கரையில் கால் தொட்டவுடன் வெம்மையும் புழுதியுமென மேனியில் அனல் குடிகொண்டு எழுந்திருப்பதைக் கண்டுற்றான். அடிப்பாதங்கள் குளிரை வாவென அழைத்து முத்தமிட்டன. கேணியில் நாரையென நடந்து சென்று தவளையெனப் பாய்ந்தான். சுற்றியிருந்தவை மறந்து அவனது சொந்தக் கிராமத்தில் அலையடிப்பவனென மகிழ்ந்து மூழ்கி நீந்தினான். குளிர் அவனைப் பெருங்கருணையுடன் அணைத்து வா என் மகவே எனக் கூவுகிறது என எண்ணிப் புற நீச்சலும் ஆழ் நீச்சலும் அடித்துக் கொண்டு நீள் கேணியின் ஈராள் ஆழ அடிமண் வரை தொட்டு எழுந்தான். தாமரைகளிடை சென்று அவற்றின் இதழ்களில் ஒட்டியிருந்த நீர்மணித் துளிகளின் அருமணி ஒளிகளை விழிகளால் அள்ளினான். ஒவ்வொரு இதழும் செம்மையும் வெண்மையும் எது எவ்வளவு பகுதியெனக் கலப்பதென இயற்கை எங்கனம் தீர்மானிக்கிறது. யார் வரைந்த பேரோவியங்கள் இந்த இதழ் மகள்கள். எவரின் சாயக்கிண்ணங்களில் இவ்வண்ணங்கள் பெருகுகின்றன என எண்ணியெண்ணி வியந்தான். வியந்து நீரை வாயில் அள்ளிக் குவித்துத் துதிக்கரத்தால் நீர் விளையாடும் குறு வேழமென மலர்களில் மழை பொழிந்தான். நீராடல் மேனியின் கடந்த காலத்தின் புழுதிப் பெருக்கையும் தூசுகளையும் மாசுகளையும் கழுவி நீரில் எற்கிறது என்ற தன் நாட்டின் முதுசொல்லை நினைவில் ஒலியெனக் கேட்டான். விழிகளைத் திறந்து கொண்டு நீரடியில் நீந்திய போது சாம்பல் திரையில் மினுங்கும் பலவண்ணங்கள் கொண்ட மீன்களைக் கண்டான். கேணி நண்டுகள் ஆழத்தில் நடந்து செல்வதை நோக்கினான். நீரில் மூழ்கி மூச்சை எவ்வளவு நேரம் காக்கிறானோ அவ்வளவு காலம் அவன் ஆயுள் நீள்கிறது என எண்ணிக் கொண்டான். மூச்சால் நீள்வதே வாழ்வு. மார்பில் மூச்சை ஆழ இழுத்து நீருள் புகுந்து மூச்சு விழிவழியே வெளியேறுவதென விம்மும் வரை நீரடியில் நண்டென ஊர்ந்தான்.
நீராடல் முடித்துக் குழலை உதறிக் கொண்டு எழுந்தான். தாமரைகளின் வாசனை தன் அக்குளிலிருந்து கரைந்து எழுகிறதென எண்ணினான். கரத்திலும் சில தாமரைகளைப் பறித்திருந்தான். நீர் சொட்டி மண்ணில் விழ சிற்றாலய முகப்பில் வந்தமர்ந்தான். அவன் சென்று வருவதற்குள் யாரோ அகலை ஏற்றியிருக்கிறார்கள். பன்றியின் உக்கிர ரூப வளைவுகள் அகலின் மஞ்சள் வெளிச்சத்தில் துலங்கித் தெரிய அச்சிலையைச் சிலகணம் உற்றான். கரத்திலிருந்த செந் தாமரைகளைப் பன்றிக்குச் சாற்றினான்.துணிப்பையில் இருந்த துவைத்து உலர்ந்த ஆடையை எடுத்து இடையில் கட்டிக் கொண்டு காதில் தூங்கிய குழையைச் சீர்படுத்தினான். துணிப்பையிலிருந்த அவனது தந்தையின் செப்புக் காப்பை எடுத்து அணிந்தான். அவனது கருமையும் மண்ணிறமும் கலந்த விழிகளைப் போல் அக்காப்பு நிறத்திருந்தது. பார்ப்பவரின் விழிகளெனவே அணிகள் ஆகின்றன என எண்ணிக் கொண்டான்.
காற்றில் குழல் சிலுப்பி உலரவிட்டு இளம் புலியின் நடையில் குடிகளை நோக்கி வேடிக்கை பார்த்தபடி வந்த இளம் பாணனில் கூடிய புத்தொளியைக் கண்டு சிரித்தார் வேறுகாடார். “விழவுக்கு ஆயத்தமா” என நகைத்துக் கொண்டே அவனிடம் கேட்டார். “எப்பொழுதோ” என்றான் ஒற்றைச் சொல்லில். அச்சொல்லில் துடித்த வேட்கையை அவர் உணர்ந்தார். விறலிகளில் இளையவள் ஒருத்தி இளம் பாணனின் மார்புகளை நோக்கியதைக் கண்ட வேறுகாடார் அவளை நோக்கி “இவர் பாரதத்தின் தென்னகத்திலிருந்து விழவுக்கென அழைத்து வரப்பட்ட பெருங்கவி. உங்களின் அழகெல்லாம் இவர் சொற்களிலேயே நித்தியத்தில் நீடிக்கும். உங்களில் அழகானது எதுவென வினவுங்கள். பாட்டிலேயே பதிலிறுப்பார்” எனத் தீவிரமும் வேடிக்கையும் குழைந்த குரலில் சொன்னார். இளைய விறலி மாசற்ற சோதி அவனை நோக்கிக் குறும்புடன் புன்னகைத்தாள். “பெருங்கவியே பெண்ணில் அழகென்பது எது” என மிழற்றும் குழவிக் குரலில் கேட்டாள். அக்குரல் அவனைப் பறவைச் சிறகென உலர்த்தியது. அச்சொற்கள் அலகென அவன் சிறகுகளில் துழாவியது. வேறுகாடாரை எரிப்பவன் போல் நோக்கிய பின் மாசற்ற சோதியைப் பார்த்து அவளது வதனத்தின் கூர்ந்த இளமையை உற்றான். சிலகணங்கள் மெய்மறந்தான். அவள் விழிகளில் தாபம் ஆழஊற்றுகளென எழுந்து கொண்டிருப்பதை அவன் அகம் கண்டது. அவள் செவிகளில் சுருண்ட மயிர்க்கற்றைகளை வருடிச் செவிகளுக்குப் பின்னே சொருகிய போது அவனது குழலின் மயிர்களைக் காற்று வருடியது போல் மெய்ப்புக் கொண்டான். அவள் தன்னை அங்கிருந்தே தொடுகிறாள் என்ற மயக்கு எழ அவன் குரல் கனியென ஊறியது. “பெண்ணென நிகழ்ந்ததே மண்ணின் அழகு எல்லாம். புடவியின் எல்லாச் சிறந்தவையும் சேருமிடம் பெண்ணே. வைரங்களில் பட்டைகளெனத் தீட்டுவதும் அருமணிகளில் ஒளியெனச் சுடர்வதும் பொன்னில் மதிப்பென எழுவதும் மலர்களில் இன்மணமெனத் திகழ்வதும் சொற்களில் கவியெனத் திரள்வதும் பெண்ணே. பெண்ணில் அழகெனத் தனித்து நோக்குபவர் அதன் முழுமையை இழக்கிறார். எளிய மானுடர் அழகைச் சொற்களால் அளக்கின்றனர். அகத்தில் சுனைக்கும் இன்னூற்றின் மணமும் சுவையும் பெண்ணே. ஆடவரின் அழகென்பது வீரத்தினாலும் திண்மையினாலும் சொல்லிடப்படுவது. அச்சொற்களில் வழுக்கு மரமேறுபவர்கள் போல் ஆடவர் தீராது முயன்று தாவியபடி இருக்கிறார்கள். பெண் அமர்வதே அழகில். திளைப்பதே எழிலில். களிப்பதே வேட்கையில்.
ஒவ்வொரு பெண்ணிலும் அழகென ஒன்று கூர் கொண்டு வளரும் அவளின் மேனியின் அங்கங்கள் அழகில் தேனென ஊறுகையில் அகத்தில் தாபமும் காதலும் வேட்கையும் விசை கொண்டு துள்ளுகையில் பெண் பேரியற்கையின் முதல் விழைவெனத் தன்னைக் காண்கிறாள். சொல்லால் சொல்லி அவளை முடிச்சிட்டு அவள் அழகின் பேராற்றலை ஆடவர் வெல்கின்றனர். ஒவ்வொரு கவியும் சொல்லில் எழுப்புவது அவளில் ஒன்றையே. உங்களில் நான் இப்போது காண்பது இருவிழிகளெனும் தாபத்தின் அனலூற்றை” என்றான் இளம் பாணன். விறலியர் குழுவில் நீரூறிய மலர்கள் வானிலிருந்து சிந்தித் தெறிப்பது போல் சிரிப்பொலிகள் விழுந்து தெளித்தன.
வேறுகாடார் தன் தொடையில் அறைந்து “சொன்னேன் இல்லையா. அவர் பெருங்கவி. அவர் சொல் வாக்கென ஒலிப்பது. அடுத்தவர் எவர் வாக்குக் கேட்கப் போகிறீர்கள்” என்றார். ஆடியில் புருவங்களில் வடிந்த அஞ்சனத்தைத் தீக்கொழுந்தைத் தொடுபவளெனத் தொட்டுச் சீராக்கிய விறலி காரிகை அவனது முகத்தின் சீர்மையை நோக்கினாள். அவனது வெருகு விழிகளில் மின்னிட்ட தூயதொன்று அவளைத் தொட்டது. இளந்தளிரின் ஒளிவீசியது. அவனது மூக்கின் நெளிவளைவை நோக்கி ஒருவிழியால் அவனைத் தொட்டாள். “எனக்குச் சொல்லுண்டா” என்றாள் காரிகை. “எதை விழைகிறீர்கள் பேரழகியே” என்றான் இளம் பாணன். அவள் அணிந்திருந்ததிலேயே நுண்மை கூடிய அணியொன்று அவள் உதட்டில் சூடிய புன்னகையென்று கண்டான் இளம் பாணன். “என்னைப் பாடுக” என்றாள் காரிகை. இளம் பாணன் அவளை நோக்கினான். “பாடுவதென்றால் நான் முழுது நோக்க வேண்டுமே” எனச் சொல்லி நாணச் சிரிப்புதிர்த்தான். “எதை முழுது பார்க்க வேண்டும்” எனக் கூவினாள் சலிகை. விறலியர் நகைமணிகள் கொட்டுண்டதைப் போல் சிரித்தார்கள். அந்தியின் கதிரொளியில் அனைவரின் மேனிகளும் தங்கத்தில் எரிவதென எண்ணமெழுந்தான் இளம் பாணன்.
ஆடியைக் கீழே வைத்த காரிகை எழுந்து வலக்கரத்தைக் கூரையை நோக்கி மலர் பறிப்பவளெனக் கையை விரித்து ஒசிந்து நின்றாள். அய்யோ இவளெப்போது மண் வந்தாள் என்ற பாவனை கொண்ட விண்ணவள் போல் மேனி. ஒவ்வொரு பாகமும் அதற்கென உண்டாக்கப்பட்ட மகத்தான நிறைவில் தளும்பின. அவளது விழிகளை நோக்கியெழுந்த இளம் பாணனை இடைமறித்து “பாடலென்றால் விலை கொடுக்க வேண்டும். அவர் வீணே ஊர் சுற்றும் பரதேசிப் பாணரல்ல. அவருடைய சொல்லுக்குத் தென்னகத்தில் ஆயிரம் பொற்காசுகள் கொடுப்பது வழமை. உன்னிடம் ஆயிரம் உண்டா” என்றார் புருவங்களின் வில் நெளிவுகளில் குறும்பு துள்ள வேறுகாடார். காரிகை தன் கரத்தை இறக்கி இடுப்பில் ஊன்றிச் சிந்திப்பவள் போல் ஒருவிரலால் தாடையில் இருமுறை தட்டி எண்ணமெழுந்தவள் போல் முகத்தை பாவனை செய்துகொண்டு “ஆயிரம் பொற்காசுகளுக்கு ஈடாக ஒன்று கிட்டும்” என்றாள். விரிந்த வாய்களால் பற்கள் வெள்ளொளியில் மின்னிடச் சிரித்தனர் விறலியர். இளம் பாணன் நாணத்துடன் விழிதாழ்த்தினான். வேறுகாடார் தேர்ந்த முதுவணிகரெனச் சொற்களால் விலையை உயர்த்திக் கொண்டிருந்தார். சலிப்புற்ற காரிகை சினத்துடன் “ஓராயிரம் பொன்னிற்கு ஈடாக ஓர் உதட்டு முத்தம் கிட்டும். ஓம் என்றால் பாடுக. இல்லையேல் ஓடி ஒளிக” என்றாள். வணிகத்தில் பெருந்திரவியம் ஈட்டியவரின் பயணச் சோர்வும் அகக் களிப்பும் கொண்டவரெனச் சுவற்றில் சாய்ந்து உடலை இறுக்கித் தளர்த்தினார் வேறுகாடார். இனி உன் பணி தான் மிகுதி என்ற விழியாணை பெற்றான் இளம் பாணன். தனது சொல்லாடலின் வழி தன்னை முத்தம் நோக்கி இழுத்து வந்த வேறுகாடாரை நோக்கிக் கசந்து பின் நாணி இளம் பாணனின் அருகில் இருந்த மூங்கில் தூணில் சாய்ந்தமர்ந்தாள் காரிகை. ஓவியத்தின் மெய்யுருவென நிகழ்கணத்தில் உறைந்து விட்டவள் போல் தோன்றினாள்.
“வாக்கு உரைக்க முன்னர் தேவ இலை மலர்கள் புகைக்கிறீரா பெருங்கவியே” எனச் சொல்லிக்கொண்டு மூட்டிய துதியை விரல்களில் மலரென நீட்டினாள் சலிகை. “அடுத்த பாடல் எனக்குத் தான்” என அவன் காதில் மந்தணம் உரைத்தாள். இளம் பாணனுள் நுழைந்த தேவ மலர்களின் இன்புகையின் தந்திகள் ஒவ்வொன்றும் அவளைப் பாடுக என அதிர்ந்தன. காரிகையை விழியுற்றால் அத்தனை போதையும் விழியே எனத் தோன்ற மேலும் மேலும் புகையை உள்ளிறக்கித் தன்னுள் உறைந்த தெய்வத்தை அழைத்தான். அவள் நாணிச் சிரித்து அந்தியின் கதிரில் ஆடும் விழவை நோக்கி முகம் திருப்பிய போது கடற் குதிரையின் வால்போல் வளைந்து நின்ற காதின் முன்னான சுருள் முடியில் சொல்லின் தெய்வம் ஊஞ்சலாடுகிறதென நோக்கினான். அவளது நடுவகிட்டின் வெள்வீதி நீண்டு நடக்கும் விழவின் சாலையின் கோடு எனக் கண்டான்.
அவளது இமைகள் கூரைச் சாரல்களெனத் தெறித்து மயங்கின. விழியில் தன்னை முழுதென ஆக்கி முன்னெழும் காம விழைவின் தொல்தெய்வங்கள் சிறகுகள் கொண்டு சுழன்றசைந்தன. சிதறக் காத்திருக்கும் பெருநீர்க்குமிழியென காற்றூதிய முலைகள் தூங்கியாடியது. இடையில் மின்னிய இடையாரங்களில் பதித்த நீல இரத்தினக் கற்கள் நூறு விழிகொண்டு இளம் பாணனை மயக்கியது. மேனிக் கருமையில் தெய்வம் என்றானாள். முழுவதும் நோக்கியவன் விழி மூடியமைந்து அகத்தில் அவளைச் சொல்லென இருத்தினான். ஊழ்கமென உற்றான்.
அருகிருந்த சீறியாழை எடுத்து விரல்களால் இருதீற்றல் வரைந்தான். காற்றில் அவளும் அவனும் சொல்லும் இருந்தனர் ஒலியாய்.
“புற்காட்டின் காற்றிலையில் ஆடுகூந்தலில்
மெய்க்காட்டின் புல்கள் எழக் கண்டேன் தோழி
நுதல் முற்றம் உற்ற கருமை எழிலாடும் அருமணிகள் உதிக்கின்ற
வான் திரை கண்டேன்
உருகும் கரும்பொன் விளைகின்ற வயல் நிலங்கள்
இடை நாழி கண்டேன்
செதுக்கும் கரங்கள் ஒவ்வொன்றும் தொட விதிர்க்கும் வழிமுலைகள் அகவிழியில் கண்டேன்
கழலில் காற்காப்பாய் நாகத்தோல் மினுக்கு
விழியில் மிதிதோலாய் உலையும்
பெருக்கு
அளையாத இளமுலைகள் விழிதிறக்கக் கண்டேன்
இளையாத வேட்கையின் தீ
உயிர் எரிக்கக் கண்டேன்
கலையாத தொல்கனவில்
தவமிருக்கக் கண்டேன்
பிறக்காத தெய்வங்கள்
உடனிருக்கக் கண்டேன்
அழையாத சொல்லொன்றும் உனக்கு
உண்டோ தோழி
எரியாத தீயில் ஏங்கும் தவிப்பே”
திண்ணையில் கரவொலிகள் ஆயிரம் பறவைச் சிறகடிப்புகளாய் படபடத்து வெடித்தது. சிரிப்பொலிகள் கனிந்தவை போல் உருகின. காரிகை விழிதாழ்த்தி மேனியொருக்கி அமர்ந்திருந்தாள். வேறுகாடார் தீயிலைத் துதியை இழுத்தபடி புகையை வெளியே ஊதிக்கொண்டு “சொல் மாறுவது பெண்ணின் குணமல்ல. எங்கே ஊதியம்” எனக் குழைவுடன் சொல்லி இளம் பாணனை நோக்கிய பின் காரிகையை நோக்கினார். அவளது இளங்கருமை முகம் செம்மையில் சுடர்வதென மினுங்கியது. “இப்பாட்டே அவரெனக்கு அளித்த பொற்கிழி தான் கிழவரே” என நகைகொண்டு அகம் கிளர்ந்து கொண்டிருந்தான் இளம் பாணன். அவனது வெருகு விழியை நோக்கிய காரிகையின் உதடுகள் காற்றில் பெருமுத்தமென ஒருசுழி துளித்து இளம் பாணனின் அகத்தில் விழுந்தது. அவளது விழிகளில் சிறுதுளி நீர் மின்னித் தூங்கியது. உவகையில் பெருகும் கண்ணீரே பெண்ணின் அகம் எனக் கண்டான் இளம் பாணன்.