69: எட்டுத்திக்கும்

69: எட்டுத்திக்கும்

நிலவை முன்முகப்பிற்கு வந்து நின்று சடங்கு நிலைகளை நோக்கினாள். பொற்தேரினைச் சுற்றி ஆயிரக்கணக்கான சிறு புட்கள் பறப்பன போல் பணியாட்களும் காவலர்களும் முதுசிற்பிகளும் படைவீரர்களும் அரண்மனைப் பெண்டிரும் இடத்திற்கு இடம் தாவிக் கொண்டிருந்தனர். வானில் சுற்றிக்கொண்டிருந்த புறாக்கள் தாம் உன்னை விட்டு விலகுவதில்லை எனச் சொல்வது போல் தடதடவெனச் சிறகொலியெழுப்பின. நிலவை முழுதணி பூண்டிருந்தாள். சிரசில் மாணிக்கம் பதித்த தூங்குமணி நுதற் கண்ணெனத் திறந்திருந்தது. கூந்தலில் மென்நரைகள் மலர்ச்சரங்களில் பின்னப்பட்டு விரிந்து தோகையெனப் பரந்திருந்தது. தீச்சுடரின் நடுக்கண்ணின் நீலத்தில் ஆடையுடுத்தியிருந்தாள். கரங்களில் சர்ப்பங்கள் பின்னிக் கொள்வது போன்ற கைவளைகளும் பத்து விரல்களில் ஒன்றில் மூன்றென அடுக்குகள் கொண்ட முப்பது வகையான கணையாழிகளும் அவளை வேறொருத்தியெனத் தோற்றியது. கழுத்தில் பதக்க மாலையும் வெண்முத்தாரமும் புலிப்பல் தாலியும் அருமணிச் சங்கிலியும் ஒன்றின் கீழ் ஒன்று ஓவிய நெளிவுகளென மின்னின. இடையாரத்தில் சுடர்விட்ட முப்பத்தியிரண்டு செவ்விரத்தினக் கற்கள் விண்மீன்களை இடையில் கட்டியிருப்பவளென அவளைத் தோற்றியது. கழலில் தங்கச் சிலம்பு சாரை மேனியுடன் தகதகத்தது. பாதணியின் தோல் வண்ணம் அவளை மானுடரெனச் சொல்லும் ஒரே ஓர் அம்சம் என எஞ்சியிருந்தது. மதர்த்த மாகனி. மாகளச் சூடினி. வீரர்களில் பெருந்தேவி. அன்னையரில் முதல் அன்னை. காமத்தின் கரையிலா ஆழி.
தானகி பின்னிருந்து அவள் நகர் நோக்குவதைப் பார்த்து “இவள் தெய்வம்” என்ற சொற்களை அகத்திற்குள் ஊழ்கச் சொல்லென உருட்டிக் கொண்டிருந்தாள்.

“அரசியாரின் பேருடலில் அணிகள் முற்றமைந்த பின் அங்கு அனைத்து தெய்வங்களும் மண்ணிறங்கியாக வேண்டுமென்பது நாகங்களின் ஆணை” என அரண்மனை முகப்பை நோக்கியபடி சொன்னார் மங்கலச் செல்வர். தேரின் இடச்சில்லின் மேலிருந்து அவர் நோக்கிய திசையில் தோன்றிய நிலவையின் நிழலுருவில் பலநூறு விழிகளென எழுந்திட்ட ஆபரணங்களின் ஒளிப்பெருக்கை விழிகொண்டான் பொன்னன். மெல்ல மெல்ல விண்மீன்கள் உதிப்பதைப் போல் அங்கலைந்த விழிகள் ஒவ்வொன்றும் நிலவையைக் கண்டன. அவளின் எழிற்கோலத்தைக் குடிகளுக்கு முன் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் அரணமனையைச் சுற்றியிருந்து பணிபுரிந்தவர்களுக்கிடையில் புலரியிலிருந்து சொல்லாட்டாய் இருந்தது. அணியற்று அரசியென அவர் எளிமையுடன் அரண்மனையில் அமர்கையில் தொல்தெய்வங்களின் உருக்கொண்டிருப்பார். நுணுகியிழைத்ததே அவர் மேனியில் தூங்கத் தான் என்பது போல் செய்யப்பட்ட அணிகளைக் காண இளைய அணிசெய்பவர்கள் கூட்டம் உயர்ந்த இடங்களில் ஏறியமர்ந்து பணி செய்வது போல் பாவனை புரிந்தது. செவிகளில் எவ்வண்ணத் தோடுகள் அணிகிறார் என நோக்கிய பின் அவ்வண்ணத்தையே தேர்ந்தெடுக்கக் காதணி அணியாது பணியிலிருந்த அரண்மனைப் பெண்டிர் அவை மயில் நீலம் எனக்கண்ட பின்னர் நிலக்கிளிகளின் ஒலியில் தத்தியரற்றினர்.

“அவரது அழகை முழுதுநோக்குவதும் மா பொற்தேரை மும்முறை வலம் வருவதும் ஒரே பேறு” என முகத்தில் தொங்கிய சதைகள் குலுங்கச் சிரித்தார் மங்கலச் செல்வர். பொன்னன் அவரது உவமையைக் கேட்டதும் மெல்ல நகைத்தான். தேரின் பொன்னொளி கூசும் ஒவ்வொரு முனையும் புதுவெளிச்சம் கொண்டு துலங்கத் தொடங்கியது. புழுதியெழுந்த பறக்காமலிருக்க தெளிக்கப்பட்டிருந்த ஆயிரங் கலய நீரால் மண் சிறுசேற்று நெளிவு கொண்டிருந்தது. ஆனாலும் வெம்மை காற்றில் எழுந்து மேனிகளைத் தடவிச் சென்றுகொண்டிருந்தது. மலர்களின் இன்மணங்களும் அகிற்புகைகளின் நறுவாசங்களும் அரண்மனையைப் புட்பக விமானம் என மிதக்க வைத்தது. அன்னம் போன்ற மாபெரும் பறக்கும் அரண்மனையில் ஆயிரம் பணியாட்கள் சூழ நிலவை விண்ணிருந்து குடிகளை நோக்குகிறாள் என எண்ணினான் பொன்னன். கனியிழையன் மலர்ச்சரமொன்றால் அவனை அடித்தான். “மயங்கி விட்டாயா பொன்னா” எனச் சொல்லி நகைத்தான். “இக் கனவில் மயங்கத் தானே இத்தனை நாள் தவமும் கனி” என்றான் பொன்னன்.

தமிழ்க்குடியின் இளையோரில் ஆடவரும் மகளிரும் நிலவையின் அழகை ஆயிரமாயிரம் சொற்களாகக் கேட்டிருக்கிறார்கள். மகளிர் இளவயதில் எதிர்ச்சொல் பேசி மனையினை அதிகாரம் செய்தால் “நிலவையென உன்னை எண்ணிக் கொள்கிறாயா” என்பதே தந்தை தாயின் வாயில் வரும் முதல் வாக்கியம். நிலவையென நானும் எழுவேன். ஆளுவேன். அழகெலாம் கொண்டு புடவியை வெல்வேன் எனக் கனவு கொள்ளாத இளஞ் சிறுமிகள் எப்பட்டினத்திலும் இல்லை. அரிதான அருமணியொன்றை நீலழகர் மார்பில் சூடியிருக்கிறார் என முதுபெண்டிர் நீலனின் அழகை வர்ணிப்பர். நிலவை போன்ற இணை அமைந்தால் நாங்களும் அரசரே என முதுகிழவர்கள் சொல்லாடி முறங்களால் அறை வாங்குவார்கள். நிலவையினதும் நீலனதும் காதற் கதை பாடாத பருவமமென எதுவும் பாணர்குடிக்கு விடிந்ததில்லை. எம்மன்றிலோ விழவிலோ சிற்றாலயங்களில் படையல்களிலோ சத்திரங்களிலோ மதுச்சாலைகளிலோ சிங்கை புரியின் கிராமங்களிலோ நகர்களிலோ கூட அவர்களின் காதலே கதையென இத்தீவில் எழுதப்பட்டுப் பல்லாயிரம் நாவுகளால் உச்சரிக்கப்பட்டது. காதல் கொள்ளும் பெண் ஆடவனிடம் கேட்கும் வாக்கும் அதுவே. நீலரைப் போல் நெஞ்சு சுமப்பாயா. காதல் புரிவாயா என்பதே ஆடவர் அச்சத்துடன் எதிர் கொள்ளும் கோரிக்கைகள். பாணர்கள் நாவுகள் வெறுமே இருக்காமல் தம் கற்பனையெல்லாம் கொட்டி ஓர் அற்புதக் காதலை உருவேற்றி விட்டார்கள். நாம் எங்கே சென்று தலையை மோதுவதென்று ஆடவர் அரற்று வாயால் புலம்புவார்கள்.

“காதலை ஆயிராமாய்ப் பெருக்கி ஒன்றாய்ச் சுருக்குவதே உங்கள் குடித் தொழில்” எனச் சிரித்தார் வேறுகாடார். இருவரும் பொற்தேரின் முன்னே நின்று கொண்டு அரண்மனை முகப்பை நோக்கினர். அரசியின் அருகே நூற்றுக்கணக்கான அரண்மனைப் பெண்டிரும் காவற் பெண்களும் சூழ்ந்து நிற்கத் தொடங்கியிருந்தாலும் ஆழ்கடலில் ஒளிரும் மா சங்கின் பேரொளியுடன் கருந்தேவியென நிலவை மின்னினாள். பட்டினத்தின் முதன்மைப் பாணர்கள் தம் குழுக்களுடன் நின்று ஓலைகளை எடுத்துப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “அரசரும் அரசியும் தளபதிகளும் பொற்தேரில் ஏறிய பின்னர் அரசரை வாழ்த்தி லட்சத்து ஆயிரத்து எட்டு முழக்கங்கள் எழுப்புவார்கள். அதில் பாதிச் சொற்கள் தமிழிலேயே இல்லை. எப்படி ஒருவரை ஒரு முழுமொழியாலும் வாழ்த்துவது. இரவல் வாங்கியும் வாழ்த்துவதே குடிக்கடன்” எனச் சொல்லி முதுபாணர்கள் ஓலைகளை விழிகளுக்கு அருகில் பிடித்து இளமார்புகளில் காம்பு தேடும் குருடர்கள் போல் வியந்து உறுவதைக் கண்டு சிரித்தார் வேறுகாடார். இச்சொல்லை எந்த ஓலைக்கட்டிலிருந்து எடுத்தாய் மூடனே என இளையவர்களை வசைபாடினார்கள். ஆஹ் இதை நானா எழுதினேன் என வியந்தபடி மீண்டும் இளையவர்களையே அறைந்தார்கள். இச்சொற் கூட்டைப் பார் புடவியில் இதற்கு நிகர் எந்த அருமணியும் இல்லை எனச் சக முது பாணர்களிடம் கூவினார்கள். இதோ இங்கு பார் உன் தலைக்கு ஈடாகவே இந்த ஒற்றை ஓலை மதிப்பு உள்ளது எனப் பூசலிட்டார்கள். வேறுகாடார் இளம் பாணனைத் திரும்பி நோக்கி “தென்னகத்திலும் இவர்கள் இப்படிப் பித்தர்கள் தானா. வெறுஞ் சொல்லுக்குக் கொலை புரிபவர்கள் போல் அடித்துக் கொள்கிறார்கள்” என்றார் வேறுகாடார். இளம் பாணன் குழலை முடிந்து கட்டிக் கொண்டு “தென்னகத்தில் இந்நேரம் கொலை நிகழ்ந்திருக்கும். இவர்கள் சற்று மென்மையான பாணர்கள்” எனச் சொல்லி உதட்டில் நகைத்தான்.

“மூடர்கள். வீணர்கள்” எனச் சொல்லி உரக்கச் சிரித்து இளம் பாணனின் தோளில் தன் முழங்கையை ஊன்றி மடக்கி வாயில் வைத்தபடி பாணர்களின் பூசலை நோக்கினார். “கிழவரே. பாணர்களைப் பித்தர்களாக்கியது காலமல்ல. காலமென்றும் பொருளென்றும் புடவியின் ஒவ்வொன்றையும் இணைக்கும் சரடென்றும் மண் நிகழ்ந்தது சொல்லே. சொற்கள் மந்திரமென ஒவ்வொன்றையும் பொருளளித்து ஒவ்வொன்றுக்கிடையிலும் இழையும் இணைவை உறவை உண்டாக்குகின்றன. வகுக்கின்றன. விரிக்கின்றன. மாயம் திகழும் கருவியென்பதாலேயே அவர்கள் மயக்கு விழிகளால் அனைத்தையும் நோக்குகிறார்கள். சொல்லின்றி ஒன்றை நேர் நோக்கும் பொழுது எதிலும் எதுவும் நிகழ்வதில்லை. அழகோ வியப்போ அருவருப்போ துயரோ மகிழ்வோ இனிமையோ கனவோ ஒவ்வொன்றும் சொல்லாலேயே அகத்தில் திகழ்கின்றன. சொல்லை அளியெனக் கொடுப்பவர் என்பதால் பாணர்கள் மானுடருக்குக் கொடையளிக்க வந்தவர் என்ற பாவனையைச் சூடுகிறார்கள். அளியெனக் கொடுப்பதில் கர்ணனின் கரங்களென்றே பாணரின் நாவுகள் எக்காலமும் புரள்கின்றன. மானுட அறிதலின் மாபெரும் செல்வத்தைக் கூட்டித் திரட்டிச் சந்ததி சந்ததிகளாய் ஆழ்நினைவில் செதுக்கும் சொற்சிற்பிகள் பாணர்கள்.

அவர்களில் சொற்கள் ஏன் நிகழ்கின்றன என்பதை அவர்களே அறியாத மழலைகள். சொல் நிகழும் போது தெய்வமென நின்றிருக்கும் பாணரின் வதனத்தை நோக்கியிருக்கிறீர்களா கிழவரே. அதுவே தெய்வீகம். அவருள் அக்கணம் எழும் தெய்வம் தன் கொடையை அளித்த பின் நீங்கிச் சென்றுவிடும். தெய்வம் வந்து சென்ற உடல் பித்தாகித் தவிக்கும். மீண்டும் அத்தெய்வம் வரும் வரை மதுவிலும் தீயிலை மயக்கிலும் உழலும். ஓயாது இடும் பூசலே கவிகளுக்குக் களியென்றாவது” என்றான் இளம் பாணன். தனது சொற்கள் கூர்மையும் நுண்மையும் கூடி வருவதை உளம் கண்டு தித்தித்தான்.

வேறுகாடார் தன் கரத்தை எடுத்து இடையில் ஊன்றிக் கொண்டு “இந்த மூடர்களா தெய்வமேறி அருளும் மானுடர்கள். குடிகளில் ஏதாவது ஒரு பிரிவை அழிக்க வேண்டுமென நிலையெழுந்து குடிச்சம்மதம் கேட்டால் மறுபேச்சின்றிப் பாணர்களைக் கழுவேற்ற முழுதாணை கிடைக்கும். இவர்களுக்கு எந்தப் பொறுப்புமில்லை. காதலும் காமமும் வீரமும் அறமும் இவர்கள் சூடும் பாவனைகள். குடிநெறிகளைச் சொற்களில் யாத்துக் குடிகளிடமே வணிகம் செய்து கள்ளும் மதுவும் அருந்தும் கூட்டம். போரில் வீரரெனச் செல்வதில்லை. ஆனால் முழுப்போரையும் தானே நடத்தியது போல் பெருங் காவியம் பாடுவார்கள். காதலென்றோ மனையாள் என்றோ நிரந்தரமாய் இருப்பதில்லை. பிறழ் காதலின் சுரங்கமே இக்கூட்டம். ஆனால் காதலின் உன்னதம். காமத்தின் உச்சாணிக் கிளையெனப் பாடம் நடத்துவார்கள். இம் மூடக் குடிகளும் அவை பாணர்கள் சொல்லிய சொற்களென அறியாமல் தாமே கண்டடைந்த மெய்மையெனச் சொல் மயக்கில் வாழ்கிறார்கள். அறமென்ற ஒன்றை வாழ்வில் நோன்பெனக் கொண்ட ஒரு பாணரையும் நான் கண்டதுமில்லைக் கேட்டதுமில்லை. நீயோ இவர்களின் குடிப்பெருமை பேசுகிறாய். நீயும் அவர்களின் குருதியினன் தானே. வேறு எப்படிச் சொல்லாடுவாய்” எனச் சொல்லி அவன் விழிகளில் எழப் போகும் தோல்வியைக் காணக் குறுஞ் சிரிப்புடன் நோக்கினார்.

இளம் பாணன் பல்லாயிரம் முறை சொல்லப்பட்டு பலநூறு பிழைகள் மேலும் சொல்லப்படாமலும் இருந்த அவரின் சொற்களைக் கண்டு உதடு விரியச் சிரித்தான். “கிழவரே. குடிகள் அழியப் போகிறார்கள். யாராவது ஆயிரம் பேர் குடிகளைக் காக்கக் குருதிப்பலி கொடுக்க வேண்டுமென நிலையெழுந்தால் தலையளிக்கும் முதற் குடி பாணர் குடியே. குடிகளைக் குடிகளென்று ஆக்கியதும் நாமே. குடிகளின் அறங்களை ஆக்கியதும் நாமே. குடிகளைக் காதலில் ஆழ்த்தியதும் நாமே. காமத்தில் காதலை உருக்கியதும் நாமே. காலத்தின் கதைகளை எழுதியதும் நாமே. பண்பாட்டின் கூடு பின்னும் குருவிகளும் நாமே. நல்லது தீயது உரைத்ததும் நாமே. உரைத்ததை உரைகல்லில் தீட்டியதும் நாமே. பிழைத்ததைப் பிழையென்று சொல்லியதும் நாமே. மெய்யை மெய்யென்று நிறுவியதும் நாமே. புடவியில் தெய்வங்களைச் சமைத்ததும் நாமே. சமைத்ததைப் பரிமாறி ஊட்டியதும் நாமே. கற்றலில் நிற்பதைக் கண்டதுவும் நாமே. கண்டதைக் கற்றலில் சேர்ப்பவரும் நாமே. அறியாத பலகோடி உண்டென அறிந்தவரும் நாமே. அறிதலே அனைத்திற்கும் முதன்மையென்று வாக்குரைப்பதும் நாமே. அறிக.
நாமே மானுடரின் மெய்த் தெய்வங்கள். சொல்லில் ஆகும் புடவி நீளும் வரை சொல்லை ஆக்குபவரே மானுடரைக் காப்பவர். மானுட தர்மங்கள் நெறிகள் ஒழுக்கங்கள் சட்டங்கள் அறங்கள் எச்சொல்லில் எழுந்தாலும் அச்சொற்களையும் அளியெனக் கொடுத்தவர் நாமே. அடங்காச் செருக்கும் அமையாத் திண்மையும் தாழாச் சிரசுகளும் அதனாலேயே கொண்டோம் நாம். கொண்டதாலேயே மானுடரை வழிநடத்தி நிற்கிறோம். தெய்வம் எப்போதும் குடிக்கு வெளியில் தான் நின்றிருக்க முடியும்” எனச் சொன்ன இளம் பாணனில் மெய்ப்புல்கள் எழுந்தன. அவரறியாத தெய்வமொன்று அருகு நின்றதெனெ வேறுகாடார் சிலகணம் விலகினார். பின் பாணர் கூட்டத்தை நோக்கி “மூடர்கள். அறிவிலிகள். தம்மைத் தாமே தெய்வமென்று சொல்லும் மூடர்களைப் பாணரென்றும் சொல்லலாம் என இன்றறிந்தேன்” எனச் சொல்லி முகத்தில் மின்னியெழுந்த ஐயத்தைச் சிலுப்பி உதறினார். இளம் பாணன் எவருமறியாது கானகத்தில் மலர்ந்த பூவெனப் புன்னகைத்தான்.

*

திமிலர் ருத்ரம் சுற்றப்பட்ட செம்பட்டுத் துணியை விரியனின் மேல் அமைந்த அரசுப் பெட்டகத்தில் வைத்தார். பொன்னிழைத்த பட்டுடை உடுத்தியிருந்தார். கூம்பு போன்ற பனையோலைத் தலைப்பாகை மீனவக் குடியின் குலக்குறியென அவரில் நீண்டிருந்தது. இருகையளவு கொண்ட சிறு பெட்டகத்தைச் சுற்றிலும் புலிகள் சீறியெழுவது போன்ற செதுக்கல்கள் மேலும் சீர்செய்யப்பட்டிருந்ததை நோக்கினார். திமிலரின் வழிவழிச் சொத்தான அவ்வலம்புரிச் சங்கு அரச பவனியில் முதன்மை நிலையில் வைக்கப்பட்டு முன் செல்வது. நினைவாலயத்திலும் நாகதேவிக்கு முழுக்காட்டு நிகழ்த்துகையிலும் அம்பலத்தில் ஆடல் தொடங்குகையிலும் என முவ்வேளை முழங்க வேண்டியது. திமிலர் விரியனைச் சுற்றி வந்து அதன் அணிகளைக் கண்டு வியந்தார். அயல் தேசங்களிலிருந்து கொணர்ந்த பட்டாடைகளாலும் அணிகளாலும் முகபாடத்தாலும் முற்றெழில் சூடிய விரியன் செருக்களம் நுழையும் மாகளிறென நின்று சுற்றம் நோக்கியது. சீரான இடைவெளியில் செவிகள் அசைந்தன. விரியனின் முன் வந்து இருகரத்தையும் அணைப்பவர் போல் விரித்துக் கொண்டு “எங்கள் தோழன்” எனக் கூவினார். விரியன் துதிக்கையை சுழற்றி மடக்கி மெல்லிய பிளிறலோசை எழுப்பி “ஓம்” என்றது.

வேழங்களின் நிரை பவனிக்கென ஆயத்தமாகியிருந்தது. பொற்தேரின் முன்னே விரியன் ஒற்றை மா அழைப்பென எழ ருத்ரத்துடன் திமிலர் அமர்ந்து முன் செல்வார். அதன் பின் பெரும் பொற்தேர் புரவிகளால் இட்டுச் செல்லப்படும். அதன் பின் பெருந்தேர்களில் தளபதிகளும் அதன் பின்னே வேழ நிரையும் அதன் பின்னே கொல்வேல் ஆடவர் புரவிகளிலும் பின்னர் வாள் வீரர்களும் அதன் பின்னே வில்லாளிகளும் பின்னர் கதை வீரர்களும் நிரை நிரையாய் மாபவனி குடியிடை ஊரும். அனைத்து வரிசைகளும் ஒன்றன் பின் ஒன்றாய் நிரையாகிக் கொண்டிருந்தன. கலைந்த எறும்புக் கூட்டமொன்று மீண்டும் தன் வரிசையில் இணைவதென எண்ணிக் கொண்டார் திமிலர். குடிகளின் செல்வமும் காவலுமான புலிகளின் பேரரசின் பெரும் பவனி மக்களின் விழிமுன்னே சென்று அகத்தில் ஊர்ந்து சித்தத்தில் அனைத்தையும் நிறைக்கும் காட்சியென விரியும் மாயக் கணத்தைக் காண அவருளம் ஓடிக்கொண்டிருக்கும் அடிப்பாதமெனத் துடித்துக் கொண்டிருந்தது.

*

முடிவற்று நிறைந்திருக்கும் மானுடம் எனும் பேராழியின் கரங்கள் அலைகளென ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. யாதினியும் இருதியாளும் தங்கள் குடிகளுடன் பெருவீதிக்குள் நுழைந்தனர். யாதினி இளவெண்ணிற ஆடையணிந்திருந்தாள். இருதியாள் மண் வண்ணம் கொண்ட ஆடை. இருவரும் அணிபூண்டு மலர் மாலை சூடியிருந்தனர். யாதினியின் பேரழகை விழியுற்ற பாணர்கள் மலர் மொய்க்கும் தேனீக்களென அவளின் பின்னே திரண்டனர். இருதியாள் மெல்லக் குனிந்து யாதினியின் செவிகளில் “இன்று உன் அழகில் பட்டினமே மதங் கொண்ட வேழமென எட்டுத்திக்கும் துழாவப் போகிறதடி கண்ணே” எனச் சொல்லி நகைத்தார். “அக்கா. மதங் கொண்ட வேழங்களின் துதிகளை இப்பிலவு தாங்குவதாக” எனச் சொல்லிக் குமிந்து சிரித்தாள். அவளின் தோள்களில் அறைந்த இருதியாள் “உன் பிலவு வேழக் கூட்டங்கள் படுத்துறங்கும் பெருங்குகையென அறியாத மூடர்கள் இவர்கள். இதோ பார் இந்த இளம் பாணர்களை இளம் புரவிகள் போல் உன் பின்னே அலைகிறார்கள். ஒரு சொல்லென்றாலும் உன்னை ஒரு அருமணியென ஈர்த்திடாதா என அவர்கள் வாய்கள் நீரூறுகின்றன. அவர்களுக்கும் கொஞ்சம் கருணை காட்டு” என்றார். யாதினி அவர்களைத் திரும்பி நோக்கி அதில் இளையவனாய் இருந்த மிழலனின் தாமரை மாலையைப் பற்றி இழுத்தாள். கிழங்குடன் பெயர்ந்து வரும் தாமரையென யாதினியின் முன் வந்து சரிந்தான். இள வேழக் கூட்டமொன்று குடிகளிடையில் ஆடியபடி கலைந்து கொண்டிருந்தது. பாகர்கள் அவற்றைப் பிடித்து நிரைப்படுத்த ஓடிக்கொண்டு இடறினர். வெண் தாமரைகளைக் கழுத்தில் சூடிய புன்னை எனும் குறு வேழம் யாதினியினைப் பின்னால் இடித்தது. “பின்னால் ஒரு வேழம் முன்னால் ஒரு புரவி. இப்பொழுது கணக்குச் சரிதானே அக்கா” எனக் கூவினாள் யாதினி. இருதியாளுடன் வந்த அவளது தோழிகள் யாதினியின் களிக்கூச்சலைக் கேட்டு புன்னையைப் பிடித்துத் தடவிக்கொண்டு “இவள் வேண்டுமா உனக்குக் குறுவேழமே” எனச் சிரித்தனர். புன்னை அவர்களின் அணைப்பிலிருந்து விடுபடுபவன் எனச் சிறுதுதி தூக்கிப் பிளிறினான். இருதியாள் புன்னையின் துதிக்கையைப் பற்றித் தடவிக் கொடுத்தாள். மிழலன் துதிக்கை இருந்தால் தானும் பிளிறுபவன் போல அகப்பட்டு விழித்தான்.

“பாணரே என் மேனியழகைப் பாடுக” என்றாள் மெல்லிய பிளிறல் போன்ற ஆணையுடன் யாதினி. அவன் தன் நண்பர்களைத் தேடினான். அவர்கள் புழுதியில் தூசென மறைந்திருந்தார்கள். ஆடவர் கரந்து மறையும் களியிதுவென அனைவரும் சொல்வது இதனால் தான் என அகமறிந்தான் முதல் விழவு கண்ட மிழலன். “பாடுகிறேன் அக்கா” என்றான். “என்னடா அக்கா என்கிறாய். தமக்கையின் மேனியழகு பாடுபவனா நீ. சீ. பாடடா. உன் காமக்கிழத்தி என நினைத்துக் கொள்” எனச் சொல்லி அவன் கன்னத்தைச் செல்லங் கொஞ்சிக் கிள்ளினாள். அவள் உதடுகள் மடிந்து மீண்ட போது அவளில் எழும் விழைவை நோக்குவது கொல்லீட்டிகளை விழிகொண்டு எதிர்ப்பதென எண்ணினான் மிழலன். அருகிருந்த பெருவேம்பின் நிழலில் யாதினியின் குழுப்பெண்கள் ஆறியிருக்க அங்கே அவனை இழுத்து வந்து அமர்த்தினாள். அவனின் முன்னே புன்னை நின்றிருந்தது. இருவரும் நன்றாக அகப்பட்டோம் என எண்ணிய போது மிழலனுக்கு நகைப்பு வந்தது. “ஆஹ். என் காமன் எனக்கான சொல் கண்டு நாணிச் சிரிக்கிறான்” எனக் கூவினாள் யாதினி. அவளை அவன் விழியுற்ற போது உடலில் தெரியும் இளையவன் அல்ல அவன் என அகம் கண்டது. யாதினியில் மெல்லிய நலுங்கல் ஒன்று கடந்து சென்றது. அவளின் விழியில் ஒருகணம் அவள் தெய்வம் வந்து அமர்ந்து நீங்கியது. பக்தன் காணாத தெய்வம் எங்குளது. மிழலன் அவளை அவள் பொற்பீடத்தில் கண்டான். அவனது தோழர்களும் அவனைக் கண்டுபிடித்து வந்து சேர்ந்து சுற்றியமர்ந்தார்கள். “மிழலனின் முதல் விழவுப் பாடலிது” எனச் சொன்னான் விசித்திரன். “ஆஹ். அது நன்று. பாடுக. யாதினியைப் பாடி உன் முதற் பாடலைத் தொடங்குவது சொல்மகளைப் பணிவதற்கு நிகர்” என்றார் புன்னகையுடன் இருதியாள்.

தீயிலையை எரித்து எழுந்த வாசம் அம்மரத்தடியைப் புகைவெளியென ஆக்கியது. மெல்ல மெல்லப் போதையின் மயக்கு மலர்கள் காற்றிலும் இலைகளிலும் படிந்து பரவின. நாசிகள் நறும்புகையை இழுத்து உறிஞ்சிக் கொண்டன. மெல்லிய மயக்கு சொல்லிற்கு அழைப்பு என எண்ணிய மிழலன் யாதினியை நோக்கி விழியிருத்தினான். சிறிய யாழ்கள் இசைக்கத் தொடங்கின. குடிகளின் காலடிகள் விழுந்து எழும் ஓசை தாளமென்றாகியது.

கோடி கோடி யுகமடிப்பில் மிதக்கும் பொன்மலரில் ஓயாது கலவி கொள்ளும்
வண்டினங்கள் வாழ்க

ஆயிரமாயிரம் தொல்கனவுகளில் சிறகசைக்கும்
தெய்வங்களைத் தீராது புணரும்
மானுடர் வாழ்க

சொல்லினிக்கும் முதற் சொல்லே மாயை நீ ஆகுக
மாயை அழைத்து வரும் மாவிழியே பனிச்சிலை நீ ஆகுக

தாபம் இனிக்கும் பேரதரங்கள்
தழைக்க
வேட்கை விரும்பும் எரிமுலைகள் வெடிக்க
விழைவின் பெருங்காட்டில் அல்குல் அவிழ்க்க
ஆழியென்றோ எழுந்தனை ஆடும் அதிகனவே

செம்மாதுளைக் கன்னங்கள் கடிக்க ஒரு வாய்
அருநுரை முலைக்கோட்டுகள் உடைக்க ஒரு வாய்
மாமலைப் பிருஷ்டங்கள் பிளக்க ஒரு வாய்
பின் தொடையில் படியிறங்கி பல்பதிக்க ஒரு வாய்
இழுத்தணைக்கும் இடைக்கனி அமுதுண்ண ஒரு வாய்

ஆயிரம் உதடுகள் சூடுவேன்
ஆயிரம் வாய்கள் வேண்டுவேன் ஆயிரம் நாவுகள் கொள்வேன் ஆயிரம் விழவுகள் ஆடுவேன்
ஆயிரம் பொற்கனவுகள் அளிப்பேன் ஆயிரஞ் சொல்லெடுத்துப் பாடுவேன் ஆயிரம் ஆயிரம் பல்லாயிரம் பலகோடி உன்னையே தொடுவேன்
தொட்ட பின் சொல்லினை மறப்பேன்
சொல்லிய சொல்லினை அழிப்பேன்
அழியும் உச்சத்தில் உன்னையும் கொல்வேன்

கொல்லும் விழியாளில் உறையும் தெய்வங்களே
இதோ உங்கள் விழவு
இதோ உங்கள் பெருமேனியாள் இதோ உங்கள் கனிக்குடம்
இதோ உங்கள் அருட்கருமை
இதோ உங்கள் கலவியின் அவி இதோ உங்கள் புணர்வின் பலி”

எனப் பாடிக்கொண்டிருந்தவனின் கரங்கள் நடுநடுங்கித் துடிக்க கலையாடும் பூசாரி போல் நா துடித்து வெளியாட மேனி விதிர்த்து எழுந்தான் மிழலன். அவன் மூடிய விழிகளுக்குள் அமர்ந்திருந்த தெய்வம் எவள். எட்டுத்திக்கும் இள வேழமென நின்றவள். மேலும் கீழும் பெரும் பன்றியென நிற்பவள். அனைத்திலும் உறையும் அனைத்தினும் தீ. அனைத்தையும் கடக்கும் காலத்தின் வாயில். அவள் விழிகள் அசைவற்று மிழலனில் உறைந்தன. அவன் மேனியதிரச் சரிய அவன் தோழர்கள் அவனைப் பற்றிக் கிடத்தினார்கள். புன்னை தன் துதியைத் துழாவி யாதினியைத் தொட்டது. இறகு தொட்டு மேனி மெய்ப்புல் கொண்டவளென மிழலனின் சிற்றுதடிகளில் துடித்துச் சொல்லாகாத சொற்களைக் அகத்தில் கேட்டாள். அவளில் உறைந்த தெய்வங்கள் அவனைக் கேட்டன.

TAGS
Share This