72: மலைமேல் பனி : 02

72: மலைமேல் பனி : 02

“நீர்க்குமிழியின் காற்றை வெளியிருக்கும் காற்று வந்து தொட்டுத் திறப்பது எங்கென அறியாமுடியாததைப் போல் முதுவிறலியின் சொற்கள் எனது அகத்திற்குள் நுழைந்தன. அவரின் சொற்கள் காதலின் நீர்மையின் பலவடிவ பேதங்களை உருமாற்றி உருமாற்றி உண்டாக்கின. நெருப்பில் உறையும் நீரென்ற சொல்லிலிருந்து அவர் எழுந்தார். விழிகள் தீக்கங்குளென உறைந்த இளையவர் கூட்டம் அவரை நோக்கியிருக்க முதுபாணர் ஒருவர் இருகரம் தலைகூப்பி ‘அன்னையே’ என விழிநீர் பொங்கி வரக் கூவினார். முது விறலியின் அருகிருந்த யாழ்களை விறலிகள் எண்மர் கரத்தில் ஏந்தினர். சுற்றிலும் படையென எழுந்த நாகங்களுக்கிடையில் ராஜநாகமென முதுவிறலி தலையும் கருமேனியும் ஆடிச் சீறலென மூச்சுக் கொண்டு அசைந்து கொண்டிருந்தார். கனவிலென அக்காட்சி தோன்றியது. வானில் கருநிலவு. விண்மீன்களும் பொலியவில்லை. மேகங்களும் அகன்ற வானம் மாபெரும் கருவெற்றிலையெனத் தலைமேல் விரிந்திருந்தது. எரிவிறகுகளை மூட்டிக் கொண்டிருந்த இளையவர்கள் தீயையே நோக்கியிருந்தனர். அனைத்தும் அக்கணம் குமிழியென உடைபட முன்னர் மெளனத்தில் ஆழ்ந்தன. பெருங்காரியங்களுக்கும் பெருநிகழ்வுகளுக்கும் முன் அமைதியே அறிவிப்பு ஓசை என்ற முதுசொல் அங்கு அங்கனம் நிகழ்ந்தது.

முதுவிறலியின் உதடுகளில் சொற்கள் உருத்தன. “நீரில் கலந்த தண்மையே ஈச்சியென்றானாள். அவள் காதல் கொண்டு நின்றிருக்கையில் மாகடலாவாள். உப்பில்லாத பெண்காதல் புடவியில் அமைவதில்லை. கரிப்பே காதலின் நாச்சுவை. அறிக இளையோரே. புடவியில் வாழும் மானுடரே. விண்ணில் கரந்து நிற்கும் தேவர்களே அசுரர்களே கந்தர்வர்களே கின்னரர்களே. தெய்வங்களே கேளீர்.

புவியில் மாகடல் மீதினில் அலையில் அலையென அலைக்குள் பேரலையென பேரலை மடிப்பில் விசையென மண் வந்த களித்தெய்வம் எங்கள் அன்னை ஈச்சியைப் பாடுகிறேன். உடலில் ஆயிரங் காமங்கள் சூடியவள்.

போரெனுங் காமம். விழைவெனுங் காமம். வெல்தல் எனுங் காமம். மேனியெனுங் காமம். ஆணெனுங் காமம். பெண்ணெனுங் காமம். அனைத்துக் காமமும் பொலிவது ஆயிரங் கோடி மானுடரில் ஒருத்திக்கே நிகழ்வது. குன்றாக் காமமே வாழ்வின் விசையென்றாவது.

விண்ணிருந்து பொழிகையில் நீர்ச்சுடரெனத் தோன்றுவது. காற்றில் விழுகையில் வைரத் திரையென ஆடுவது. மண்ணைத் தொடுகையில் தாளக் கட்டைகளென உருளுவது. ஆற்றில் புரள்கையில் மீனெனத் துள்ளுவது. ஆழியில் சரிகையில் வெம்மையென்றாவது. மரங்களில் வழுவுகையில் தழுவலென இறங்குவது. மலர்களில் தூங்குகையில் அருமணியென்றாகுவது. கூடுகளில் படர்கையில் அணைப்பதென்றாகுவது. மேனிகளில் நீந்துகையில் காமமென்றாகுவது.

நீரே முதல் தெய்வம். எங்கள் அன்னையின் அம்சம் நீரே. நீரில் விழும் பாவைகளில் மானுடர் காண்பது அன்னையென்றெழுந்தவளின் கருணையை. நீரின் உச்சம் முலையில் பாலென ஊறும் பரிவு.

நீராடி நின்றிருக்கும் போதிலே வெய்யவன் புடவியின் மீது காமம் கொள்கிறான். அனைத்தையும் தழுவி உயிர்ச்சூட்டை அளிக்கிறான். உயிர்கள் தோற்றிய முதல் நீர் வாழ்க. உயிராய்த் தோன்றிய அன்னையே வாழ்க.

கருமையின் நீர் தன்னை மானுடரென்றாக்கியது ஈச்சியின் மேனியிலே. விழைவின் நீர் மதனமென்றாகியது அவளின் திருவினிலே. காதலின் நீர் பெருக்கென்றானது அவளின் இருப்பினிலே.

எங்கும் நிறைவதும். அனைத்தும் அளிப்பதும். தங்குதலற்றதும். தாங்குவதும். மென்மையானதும். கொடியதும். ஈவும் இரக்கமும் அற்றதும். வடிவமும் அரூபமும் ஆனதும் நீரென அறிக. ஈச்சி எங்கும் துலங்கும் நிறைமகள். அளியே அவள் அள்ளித் தின்ற மண். நீரின் அம்சம் அவளே. நீரே உனை வணங்குகிறோம். நீரே உன்னைத் தொழுகிறோம். உன் காதலில் வையகம் செழிப்பதாக” எனப் பாடிக்கொண்டு எழுந்து இருகரங்களும் துடிதுடிக்க விரல்களை மடக்கி வானைத் தள்ளுபவள் போல் காற்றைக் குத்தினார். விறலியர் கரங்களில் தந்திகள் துள்ளின. சிறுபறைகள் தட்டியெழுந்தன. இளையவர் கட்டுண்டு மயக்கெழுந்து தீமுன் சென்று ஆடத் தொடங்கினர். எனக்கு அனைத்தும் எப்பொழுதோ எழுதப்பட்ட நாடகத்தின் காட்சியெனத் தோன்றத் தொடங்கியது. அத்தனை நாட்கள் கேட்ட அன்னையின் கதைகளில் மெய்மையெனத் திரண்டது நீரெனும் இருப்பே என அகமறிந்த போது என்னுள்ளும் அவர்களின் ஆடலின் கால்கள் முளைத்துத் துள்ளின. ஆடினேன். ஆடலில் ஒவ்வொருவர் முகமும் நோக்கினேன். அங்கில்லா உவகையொன்றில் அவர்கள் ஆடினார்கள். மேனிகள் தங்களை மறந்து சிரித்துக் கொண்டன. முதுவிறலி மயக்கடைந்து விழுந்தார். அவரை யாரும் தொடவில்லை. கவனிக்கவும் இல்லை. அங்கு அச்சொல்லென எழுந்தவர் எவரோ நீங்கி அங்கு எல்லாவற்றிலும் எழுகிறார் என எண்ணமெழுந்தது. நானொரு ஈச்சியென எண்ணிக் கொண்டேன். சிலகணங்களில் நான் காதல் கொண்ட பெண்ணின் வதனம் உளத்தில் உதித்தது. காதலே ஈச்சியென்றேன். ஈச்சியே உனைக் காதலிக்கிறேன் என்றேன். உன்னில் எழும் ஈச்சியைக் காதலிக்கிறேன் என்றேன். சொற்களற்று விழிகளால் பேசினேன். அங்கு அவள் எழுந்து நிற்கிறாள். ஆடிச்சிரிக்கிறாள் என எண்ணம் தோன்றியது. சக இளையோர் எதன் மயக்கில் ஆடுகிறார்கள் எனக் கண்டேன்.

காதலின் பெருக்கே பித்தின் நடனம். வெறுமையில் ஆடும் நடனம் கனவற்றது. காதலில் தொடங்கும் நடனம் முடிவற்றது. அன்று புலரி வரை ஆடல் நிகழ்ந்தது. முதுசிற்பிகளும் ஆசிரியர்களும் இளையோரின் பித்தைக் கண்டு திகைத்தார்கள். பிறகு அவர்களில் பித்தென அதுநாள் வரை நின்றாடியதே இன்று இவர்களைத் தொட்டதெனச் சொல்லினர். ஆடிக்கொண்டே மேனியே இன்றி உறங்கச் சென்றோம். காற்றுத் தரையில் விழுவது போலக் கூடத்தில் எங்கும் பரவி விழுந்தோம்.

புலரியில் நான் விழித்த போது என் முன்னே ஆசிரியர்களும் முதுசிற்பிகளும் கையில் வரைதோல்களுடன் நின்றிருந்தனர். மேனியற்ற காற்றால் வரையப்பட்ட கனவே அன்னை. கனவில் ஒரு துண்டு எப்பொழுதும் நினைவில் தங்குவதுண்டு. நான் விழிக்கும் முன் சிலகணங்கள் மலையொன்றின் மேல் பனித்திரையைக் கண்டேன். அத்திரையை விலக்கவோ அறியவோ விரும்பாமல் விழிநீர் உகுக்க நெஞ்சு உருகி நின்றேன். என் வாழ்நாளில் அத்தனை இனிய கனவுடன் நான் விழித்ததேயில்லை. விழித்த போது அகம் காதலில் பொன்கரைசெலன எடைகொண்டு மின்னியோடியது. உவகையென்பது காதலில் விழிக்கும் கனவென்று எண்ணினேன்” என்றான் மாதுளன். அவனது கதையைக் கேட்டுக் கொண்டிருந்த சேடியர்கள் அன்னை அறியாது காதலனைச் சந்திக்க இரவில் கரவு செய்யும் பெண்ணின் காற்சலங்கைகள் கிலுங்கும் ஒலியுடன் இவன் கந்தர்வன் எனச் சொல்லிக் கொண்டார்கள். அவர்களது விழிகள் பெய்யினியைத் தொட்டுத் தொட்டு மீண்டன. நாணத்தில் சிவந்து உருகிக் கொண்டிருந்தாள் பெய்யினி. அவளது அகம் ஈச்சியின் சிலையை நோக்கி நின்றபோது அங்கு சிலையென எழுந்து நிற்பது தானெனக் கண்டு அதிர்ந்தாள். அத்தனை மெலிய தெய்வம் அவளில் அவனது காதலே. அதுவே வலியதெனவும் இன்று மண்கண்டுள்ளது. எவரும் அதைக் கண்டுகொள்ளலாகாது எனத் தன் முகத்தை மறைப்பவள் போல் குனிந்து நின்றாள்.

நிலவை மாதுளனின் இளமீன்கள் துள்ளும் விழிகளை உற்றபடி புன்னகைத்துக் கொண்டிருந்தார். தனது கையிலிருந்த அன்னமுத்திரை கொண்ட கணையாழியைக் கழற்றி அவனுக்கு அணிவித்தார். விசும்பலின் பின்னரான குரலின் நடுக்குடன் “இளையோனே நெடுங் காலத்தில் நான் உவந்து பரிசளிக்கும் ஒரு செயல் நிகழவேயில்லை. எனக்கு நீ அளித்துள்ள இம்மாரும் பரிசின் முன் இக்கணையாழி உனக்கு நானளிக்கும் சிறு நினைவு மட்டுமே.
ஈச்சி என் உயிருக்கு நிகரானவள். உன்னைப் போலவே அவள் எனக்கும் காதலி. தோழி. குடிகளுக்குக் காவல் தெய்வம். எதிரிகளுக்கும் கூட அவள் தெய்வமே. காதலையன்றி அவள் மெய் முகம் காணும் வழியே இல்லையென்பதை அறிவேன். இத்தனை இளையவனான உனக்குள் எந்த தெய்வம் அருளியதென அறியாத மாயக்கரங்கள் கொண்டிருக்கிறாய். உனது கனவுகள் மண்ணில் பொலிக. மாகலைஞனாய் புடவியில் திகழ்க” என வாழ்த்தினார். மாதுளனின் விரல்கள் நிலவையின் பாதத்தைத் தொட்டன. அகம் கரைந்து ஊற்றுபவன் போல் நீராலானான். நிலவை அவன் சிரசு தொட்டு வாழ்த்தினார். பெய்யினி அவர்களின் நிழல்கள் தொட்டுக் கொள்வதைக் கண்டாள்.

*

முன்முகப்பில் சூரியன் சாய மூநாழிகை மீதமிருந்தது. சற்றைக்கெல்லாம் அனைத்தும் ஒருங்கி பவனி தொடங்கவிருக்கிறது என எண்ணமெழுந்த மாதுளன் பொற்தேரின் அருகு நின்று மங்கலச் செல்வரும் பொன்னனும் நடந்து வருவதைக் கண்டான். முன்னால் வந்த மங்கலச் செல்வர் மாதுளனின் தோளைத் தொட்டு “அனைத்தும் ஒருங்கியதா. நுண்பிழை கூட நிகழ்ந்து விடக் கூடாது” என்றார். “அவ்வாறே ஆசிரியரே. அனைத்தும் முற்றொருமை கூடியிருக்கிறது” என்றான். மேலிருந்த கனியிழையன் கரடியொன்று கிளையிலிருந்து விழுவது போல் குதித்தான். முகப்பிலிருந்த உருவங்கள் மின்மினிகளெனத் தோன்றியது. பொன்னன் மாதுளனின் காதருகில் வந்து “அனைவரும் உன் சிலையை ஈச்சியென எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உன் காதல் கிறக்கத்தைக் கண்டேன் கள்வனே” எனக் காதுகள் கூசும் மென்னொலியில் சொன்னான். மாதுளன் இளநகை கொண்டு பொன்னனின் இடுப்பில் கிள்ளிவிட்டு “காதலிக்கும் மானுடனுக்கு அனைவரும் அனைத்தும் அவன் காதலியே என்பதல்லவா நூலோர் சொல்” என்றான். கனியிழையன் பொன்னனை நோக்கிச் சிரித்துக் கொண்டு “அனைத்தையும் காதலிப்பர் எதை வடிக்க முடியும்” எனச் சொல்லி மாதுளனின் தோளில் அறைந்து சிரித்தான். உரக்கச் சிரித்த பொன்னன் “அனைத்திலும் காதல் கொள்பவர் அல்ல கனி. அனைத்திலும் காமம் கொள்பவர் வடிப்பது எதையென அறிவேன். அதுவே நம் ஆலயங்களில் சிலைகளென ஆவது. காவியங்களில் காதலென்றாகுவது. ஆடலில் களியென்றாவது. இக்களியில் பொருளென்றாவது” எனச் சொன்னான்.

பேரிகைகளும் பறைகளும் ஆகுளிகளும் முழவுகளும் முரசுகளும் தண்ணுமைகளும் ஒலித்தாளங்களும் கொம்புகளும் கொக்கரைகளும் எக்காளங்களும் திருச்சின்னங்களும் நமரிகளும் அணிவகுக்கப்பட்டு முன்னொருங்கின. பூசல் கொண்டிருந்த பாணர்கள் தவளை விழுந்து மறைந்த குளத்தில் பாசி ஒருங்குவதைப் போல் ஒட்டிக்கொண்டார்கள். இளையவர்கள் சிலர் ஓடிச் சென்று ஒளிவிடங்களில் இருந்து தீயிலை புகைத்துக் கொண்டு இசைக்கணம் எதுவென நோக்கி நோக்கி நின்றார்கள். வேறுகாடாரும் இளம் பாணனும் முன்னொருங்கிய இசைக்குழு ஒருங்கத் திணறுவதைக் கண்டு சொல்லாடிச் சிரித்துக் கொண்டிருந்தனர். நானூறுக்கும் மேலே இசை வாத்தியக்காரர்கள் தலை வெட்டப்பட்ட உடல் போல் ஒருங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தனர்.

இடவர் புரவியொழுங்கை நோக்கிய பின் தனது ஆடைகளைச் சீர்செய்து கொண்டு திமிலரை நோக்கிச் சென்றார். விரியன் அசையாத பெருஞ் சிலை போல் நின்றான். அவனருகில் நின்ற பாகனுடன் உரையாடிக் கொண்டிருந்த திமிலர் இடவரைக் கண்டு வணக்கம் செலுத்தினார். இடவரும் வணங்கியபடி முன்சென்று அவரின் தோள்களைப் பற்றி சிரித்துக் கொண்டே தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.

அமைச்சர்களது அணி பவனியின் திசையை நோக்கி அரண்மனையிலிருந்து நெருங்கிக் கொண்டிருந்த போது ஒவ்வொருவரும் தங்கள் இடங்களுக்கு நகர்ந்து கொண்டும் அனைத்தும் ஒற்றைப் பேருடலென வடிவம் கொண்டும் ஒருங்கியது. தலைமை அமைச்சர் சூர்ப்பனகர் அசையா உறுதியிலான நோக்குடனும் நிலையறிய ஒண்ணாத விழிகளுடனும் கற்சிலை கால்கொண்டது போல் நடந்து வந்தார். அவருடன் தமிழ்ச் செல்வனும் செங்கரனும் இடமும் வலமும் நடந்தனர். இரண்டு புலிகள் கற்சிலையைக் கயிற்றில் கட்டி நடப்பது போல் அவர்கள் அவருடன் நடந்தார்கள். அவர்களின் பின்னே காவற் படை வீரர்கள் நூற்றுவர் ஒரு தாளமெனக் காலெடுத்து வைத்து உடன் வந்தனர். வேறுகாடார் சூர்ப்பனகரைக் கண்ட பின்னர் இளம் பாணனிடம் திரும்பி “அமைச்சர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இனி அனைத்தும் அரசமுறையென்றாகும். நாம் சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்த பின் அம்பலம் செல்வோம்” என்றார். வேறுகாடாரின் சொற்களில் இருந்த கசப்பைக் கண்ட இளம் பாணன் “இங்கு யாரோ உமது அகமறிந்தவர் வந்து கொண்டிருக்கிறார் அல்லவா கிழவரே” என்றான். “என் அகமறிந்த ஒருவரும் புடவியில் நெடுநாள் வாழ்ந்ததில்லை இளம் பாணரே. என்னை ஒரு நாடகப் பாத்திரமெனவே அனைவரும் எண்ணிக் கொள்வர். எனக்கு அரச முறைகள் ஒவ்வாமையளிப்பவை. அது ஒரு சடங்கு. அரசரும் அரசியும் பொற்தேர் எழுவது மட்டுமே திருக்கோலம். இக்காட்சியை என் வாழ்நாளில் மீளக் காண வாய்க்குமோ தெரியவில்லை. அரியவை மேல் மானுடர் கொள்ளும் ஈர்ப்பை எந்த விந்தையால் விளக்குவது” எனச் சொல்லி கீழுதட்டில் சிரித்தார். இளம் பாணன் மெல்லிய நகையுடன் “அரியவை ஒவ்வொன்றும் மானுடர் காலம் தாழ்த்துவதால் நிகழ்பவை. அனைத்தும் எப்பொழுதும் விரும்பிய வண்ணம் நிகழுமென்றால் எதற்கும் மதிப்பற்று வாழ்வு சுவையற்றுப் போய்விடும். அரியன அனைத்தும் எப்பொழுதும் நாம் எண்ணிக் கொள்பவை மட்டுமே. கூழாங்கல்லும் அருமணியும் துறவிக்கும் பாணர்களுக்கும் ஒன்றே. எளிய குடிகளின் பார்வையே ஒவ்வொன்றையும் பொருளளிக்கிறது. உச்சமும் தாழ்வும் அரியதும் சிறியதும் புடவியில் உண்டு. ஆனால் அவை மெய்யிலேயே அரியவை. காவியத்தில் திகழும் மெய்மையைப் போன்று” என்றான். “எல்லாக் காகங்களுக்கும் தங்கள் குஞ்சுகள் பொன்னே என்ற எளிய குடிச்சொல் உங்கள் சொற்களால் பொருள் கொண்டதாகிறது பெருங்கவியே” எனச் சொல்லி அவன் முதுகில் அறைந்து சிரித்தார் வேறுகாடார். சூர்ப்பனகரின் விழிகள் ஒரு வாட் கணம் வேறுகாடாரைத் தொட்டுத் திரும்பின. நோக்காமலேயே அத்தொடுகையை அறிந்தவர் இளம் பாணனை நோக்கிச் சொல்லாடிக் கொண்டு திரும்பி நடந்தார். அனைத்தும் அனைத்திலும் ஒட்டுவதில்லை. மலைமேல் பனித்திரை போல. இரண்டும் இரண்டு வேறு அழகுகள். இரண்டு மெய்மைகள். இரண்டும் இரண்டினாலும் கூடும் ஒன்றை விழிகள் கலந்து கொள்கின்றன. இளம் பாணன் விழிகள் கொண்டு அனைத்தையும் நோக்கி மெல்ல நடந்தான். ஒவ்வொரு கணமும் மயக்கும் அதே கணத்தில் விழிப்பும் கொண்டது கவியின்கண் என்ற நூலோர் சொல் அவனில் சுடர்ந்தது.

TAGS
Share This