73: அணியறை

73: அணியறை

தேர்ச்சில் கழல்வது போல் உருண்டு ஆழியின் மேலே தங்கக் கனியெனத் தனக்குள் தான் உருகிக் கொண்டிருந்தது பரிதி. கடற் பறவைகள் கூட்டமாக ஒலியெழுப்பிக் கொண்டு கரை நண்டுகளைக் கொத்திப் பறந்து கொண்டிருந்தன. மேகங்களில் பரிதி சிந்திய வண்ணங்கள் ஊறி ஊறி ஒவ்வொரு குவையும் அதிகனவில் தோன்றும் மலர்ச்சோலைகளெனக் களி கொண்டிருந்தன. கரைக்கடலில் மிதந்த சிறுபடகுகளில் ஆடவரும் பெண்டிரும் கள் மயக்கில் அட்டைகள் போல் ஒருவர் மேல் ஒருவர் புரண்டு ஊர்ந்து கொண்டிருந்தனர். சிதி தன் மார்பில் ஊரும் அட்டையை உதறுபவளெனத் தன் மேலாடையை உதறினாள். நிலவண்ண ஆடை வண்டின் பெருஞ்சிறகொன்று நெருப்பில் எரிந்து ஒழிந்தது போல் அகன்று மறைந்தது. பரிதியின் செங்குழம்பு அவள் கருநிறக் கொங்கைகளில் அயர்ந்து தலை வைத்தது. களிக்குச் செல்ல விழைவு எழுந்தவள் அவர்களது படகு நெடுநேரம் நகராமல் நிற்பதைக் கண்டு எழுந்து கண்களைக் கசக்கிக் கொண்டு முன்னே நோக்கினாள். விரிமாகடல் வாவென அழைத்துக் கொண்டிருந்தது. கள்மயக்கிலோ காற்றினாலோ அடித்து வரப்பட்டு ஆழியின் பிறிதொரு திசைக்குள் அகப்பட்டோமோ என அஞ்சித் திரும்பி நோக்கினாள். கரையில் கயிறுழுத்துக் கட்டப்பட்டு நின்ற படகு வாலில் கட்டப்பட்ட ஓணானெனக் காற்றில் தாவி அலைகளில் உந்தியபடி நின்றது. கரை வந்தது அறியாமல் தன்னுடன் துயின்று கொண்டிருக்கும் தோழியரை உலுக்கி எழுப்பினாள் சிதி. “கடற் பூதம். கடற் பூதம். ஆயிரங் குறிகள் கொண்டது” என அலறிக் கொண்டு எழுந்தாள் சுமிதை. “எங்கே அது கட்டிக் கொணர்ந்து காலடியில் இடுக” என அரற்றினாள் சிப்பி. காலைத் தூக்கிப் படகின் மேல்வரையில் போட்டிருந்த கர்ணிகை வாயில் எச்சில் வழிய இருகரத்திலும் மதுக்குப்பிகளின் கழுத்தை ஈட்டி போல் பிடித்துக் கொண்டு துயிலில் மிதந்தாள்.

சிதி அனைவரது கோலத்தையும் கண்டு எழுந்து நின்று வெறும் முலைகள் காற்றில் மஞ்சுப் பொதிகளென ஆட ஒவ்வொருவரையாய் எட்டி மிதித்தாள். அரண்டோடும் அட்டைகளெனத் தலை தூக்கி மயக்கு விழிகளால் அவளைப் பார்த்து வசைகளால் ஏசினர் தோழியர். “கரையில் தானடி நெடுங்காலம் நின்றிருக்கிறோம்” எனக் கூவினாள். “கடலென்பது உள்ளே ஆடுவது அறிவிலி” எனத் தன் முலைகளில் கைவைத்துப் பிதுக்கிக் கூவினாள் சிப்பி. “சொல்லாட இது பொழுதல்ல. நோக்குக. சூரியன் கடலில் குதிக்க இன்னும் சில நாழிகைகளே உண்டு. விழவு செல்லும் எண்ணமில்லையா உங்களுக்கு” என்றாள் சிதி. ஒவ்வொருவராய் எழுந்து மயக்கில் நின்ற உடலை சிலுப்பி கடல் நீரில் குதித்து முகம் கழுவி நிமிர்ந்தனர். “உன் விழவுக் கோலம் அழகாயிருக்கிறது சிதி. காற்றில் குலுங்கும் உன் கொங்கைகளில் ஆடவர் விழிகள் கயிறிட்ட படகுகளென அலைநெளியப் போகின்றன” என உரக்கச் சிரித்தாள் கர்ணிகை. “அணியற்ற என் மேனி பொற்தேர் என்பதை அறிவேன் பல்லியே. உன் வாலை அறுக்க இன்று எத்தனை பேர் அலையப் போகிறார்களோ தெரியவில்லை” என நகைத்தபடி சொன்னாள் சிதி. “என் வாலை அறுக்க எவனாலும் முடியாது. அவர்களது முன் வாலை நான் மிதித்து உடைப்பேன்” எனக் கூவிச் சிரித்தாள் கர்ணிகை. அவள் சிரிக்கும் பொழுது தூண்களின் பின்னின்று ஒளிந்து தெரு நோக்கும் குழந்தைகள் போல் பற்கள் நிரையில் குலைந்து நிற்பது மாலையின் பேரொளியில் எழிலியெனக் காட்டியது. சிதி படகிலிருந்த துணியொன்றை மேலாடையெனப் போட்டுக் கொண்டு மனை நோக்கிச் சென்றார்கள்.

நன்னீரில் நீராடி ஐந்து வகை வாசனைப் பொடி கலந்து மேனியை அலம்பி சிகைக்காய் வைத்துத் தலைமுழுகி நறுந்தைலங்கள் பூசி அக்குளும் அல்குலும் நிறைத்து கழுத்தில் மலர்ச்சரம் அணிந்து முத்தாரங்களை மார்புக் குவைகளில் குவிய விட்டனர். இடைசரங்களும் காலில் பரியகமும் பாடகமும் அணிந்தனர். ஒருவர் முகத்தை இன்னொருவர் ஆடியில் நோக்கி உதடு சுழித்து நகைத்து ஒருவரை ஒருவர் ஏங்கிக் கொண்டனர். ஒருத்தியில் அழகென உயர்ந்து நிற்பது இன்னொருத்தியில் கரவு கொண்டிருப்பது பெண்களில் தீரா ஏக்கத்தின் விசைகளை அளிக்கிறது. அணியால் நிகர் செய்பட விழைகிறது. ஆதலால் மேலும் உணர்ச்சிகளாலும் பாவங்களாலும் அணியிடப்படுகிறது. அலங்கரிப்பதென்பது அகத்தில் தொடங்கி மேனியில் அணிந்து அதன் மேல் மேலொரு அடுக்கும் உண்டாக்கி உருவாக்குவது. பாதாளமும் மண்ணும் விண்ணுமென மூன்று உலகங்களால் பெண் தன்னை அலங்கரிக்கிறாள். அழகை எந் நேரமும் ஆயுதமென ஏந்தியலையும் தொல்தெய்வமொன்று ஒவ்வொரு பெண்ணிலும் தன் நகை முகத்துடன் வீற்றிருக்கிறது. ஒரு நாளில் பார்க்கும் ஆடவரில் முழுவரையும் வீழ்த்தாது அதன் குருதி தாகம் அடங்குவதில்லை. ஒரு மெல்கணமாவது அவன் நலுங்கியாக வேண்டும். விழியில் ஒரு பிசிறு இழைத்தாக வேண்டும். அதன் பின் அவன் ஒடுங்கி வேறிடம் செல்ல வேண்டியவன். வணங்கிய பின் திரும்பி விட வேண்டியவனே பக்தன்.

*

பரத்தையர் தெரு கலகலத்து களியின் தொல்புரமென ஆடல் தொடங்கி அதிர்ந்தெழுந்து கொண்டிருந்தது. யவனக் கப்பலில் வந்த காப்பிரிகளும் யவனர்களும் சிங்கை புரியின் வணிகர்களும் வண்டிலோட்டிகளும் தமிழ்க்குடியின் செல்வந்தர்களும் பாணர்களும் மனையாள்களை விழவுக்கு அனுப்பி விட்டு புறத்தால் பரத்தையர் தெருவுக்கு வந்த அறவான்களாலும் நிரம்பி வழிந்து எடை கொண்டு ஆடியது. அப்படியோர் அறவான் கள் மயக்கில் திண்ணையில் சாய்ந்தபடி “விழவிற்கு அனைவரும் சென்று விட்டால் பூமி எடை தாளாது ஒருபுறம் சரிந்து விடும் அபாயம் இருக்கிறது. சிவனின் திருமணத்தில் புடவிச் சரிவைச் சீராக்க எதிர்முனை சென்ற அகத்தியரின் மெய்வாரிசுகளை இங்கே தான் நீங்கள் காணலாம் காப்பிரியே” என தீயிலையை ஆடு குழை உண்பது போல் மென்று கொண்டிருந்த காப்பிரி ஒருவனுக்கு விளக்கியபடியிருந்தான். காப்பிரிக்கு அவன் சொல்லும் சொற்கள் தீவிரமான துயர் எனத் தோன்றவும் அறவானின் தோள்களைத் தட்டி ஆறுதற்படுத்தினான். “இல்லை காப்பிரியே. எங்கிருந்தோ வந்த உனக்கே இதன் மதிப்பு விளங்கும் போதும் என் மனையாள் இதை ஒப்ப மாட்டேன் என்கிறாள். நீயே சொல் யாராவது ஒருவராவது பொறுப்பாய் இருக்க வேண்டுமல்லவா” என்றான். அறவான் கண்ணீர் சிந்தி விடுவான் என்பது போல் தோன்றிய போது காப்பிரி எருமை அலறுவது போலக் கூவி அழுதுகொண்டே அவனைத் தன் பெருநெஞ்சில் போட்டுக் கொண்டு தலையைக் கோதினான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த யவனப் பணியாட்கள் “இன்று இரவு இவனது குதவழியோ வாயோ கிழிவது உறுதி” எனச் சொல்லித் தங்கள் பொன்வண்ணத் தாடியையும் மீசையையும் நீவிக் கொண்டு சிரித்தார்கள்.

தெருவின் கடைசி இல்லமான அங்கினியின் திண்ணையில் புலி வீரர்கள் புரவிகளில் வந்திருந்தார்கள். அங்கினியுடன் உரையாடிய பின் அவர்கள் செல்வதை நோக்கிய பதும்மை “எத்தனை நாழிகையில் நாம் அங்கிருக்க வேண்டும்” எனக் கேட்டாள். “நாம் ஆலயத்திற்கு நேரே சென்று விட இன்னும் இருநாழிகை உண்டு. முதற் பூசை முடிந்த பின் ஆடலுக்கு முன்னர் அறுபத்து நான்கு பரத்தையர்கள் சுற்றமர்ந்து ஆடலனின் செல்கையின் போது உடன் செல்ல வேண்டும். இளமையில் ஒருமுறை சென்றிருக்கிறேன். முறைமைகள் கூட இப்பொழுது நினைவில் எழுவில்லை. அன்றைய நாளின் களியொவ்வொன்றும் இன்று இக்கணம் இதோ இப்பொழுது தொட்டதைப் போல் நினைவிருக்கிறது. மேனியில் மெய்ப்பு விரிகிறது. முறைமைகள் மட்டும் அன்று மறைந்த துயர்கள் போல ஒழிந்து விட்டன” என்று புலம்பிக் கொண்டே திண்ணையில் அமர்ந்தாள். “அத்தை. முறைமையைத் துறப்பதே பரத்தையர் என்பதல்லவா நம் மூத்தோர் சொல்” எனச் சொல்லிக் கண்சிமிட்டிச் சிரித்தாள். உளம் மெலிதாக விடுபடல் கொள்ள “சரிதான். நானே மறந்து விட்டேன் என்றால் அச்சடங்கை நினைவு கூர இன்று யார் தான் இருக்க முடியும். நாம் அம்பலத்தின் முன்னரை வட்டம் வரை சென்று திரும்பினால் போதும். ஆனால் நாம் இன்று முழுதான அணிசூடி தெய்வங்களை மண்ணிறக்கும் மானுடக் கண்ணிகளென நின்றிருக்க வேண்டும். ஆடலின் முன்னர் குடிகளிடம் இது தெய்வங்களின் ஆடலென உணர்த்துவதே இச்சடங்கில் நாம் எழும் காரணம்” என்றாள் அங்கினி.

வெளியே பலகுரல் கொண்ட பட்சிகளின் விழவென மானுடக் குரல்கள் கூவிக் கீச்சிட்டு கரகரத்துக் கரைந்து அகவி குலைந்து பெருகின. பதும்மை வெளியை ஒருசுற்று நோக்கி விட்டு அகத்தில் எதையோ கண்டவளென “லட்சம் விழிகள் நோக்குமில்லையா அத்தை” என்றாள். “இருள் முழுவதும் விழிகள் முளைத்து நோக்கும் பதும்மை. ஒவ்வொரு விழியும் ஒரு காமம் என எண்ணினாலும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஓருடல் கொள்ளக் கூடிய பார்வைத் தீண்டல்களை ஒரு நாளில் நாம் அடைவோம். எனக்கு நினைவிருக்கிறது. அன்று போல் காமம் துளைக்கும் பார்வைகளால் இன்புற்ற நாளே பிறிதில்லை. இன்று அதை விடக் கூட வாய்க்கலாம். எண்ணற்று விண்மீன்கள் புடவியெனும் ஒற்றைப் பேரழகியை நோக்குவதால் இரவு எங்கனம் அழகில் பொலிகிறது. காமத்தில் நுரைக்கிறது என்பதை இன்று நீ நேரில் அனுபவிப்பாய். அத்தனை விழிகள் நோக்குவதால் காமம் உன்னை விட ஆயிரமாயிரம் பேருடல் கொண்டு உடல் தாளாமல் தவிக்கும். மேனிகளை மெய்ப்புல்கள் கடப்பது போல் ஒவ்வொரு மேனியும் சிலிர்த்து விழிகள் கூச்சலிடும். ஆடவர் நோக்கில் விழைவையும் பெண்களின் நோக்கில் பொறாமையையும் ஒரு நேரத்தில் இருபெரும் தட்டுகளில் வைக்கப்பட்ட நிகர்ப்பரிசுகளென வைத்து நம் அகம் நடுமுள்ளில் நின்றிருக்கும். அக்கணம் நாமே காமத்தின் தெய்வங்களென வணங்கப்படுவோம். என் தோழியொருமுறை சொன்னாள். நாமெல்லாம் காமத்தின் தெய்வங்கள் மானுடருடன் கலவி கொள்ள ஆக்கப்பட்ட பிறவிகள் என்று. இன்னும் மூநாளைக்கு அதுவே மெய்யென்றாகுக” என்றாள் அங்கினி.

“இன்று நம் இல்லத்தின் அழகிகள் யாவரும் அரைநாழிகைக்குள் முழுதணி கொண்டு நம் முன்னோர்களின் வழியால் ஆலயம் செல்ல வேண்டும். அனைவரையும் தயாராகச் சொல்” என்ற அங்கினியைப் பார்த்து நகைத்த பதும்மை “அத்தை. மதியம் முதலே அவர்கள் அணிப் பெட்டியின் முன்னிருந்து பாகம் பிரித்துப் பூசலிட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கும் உனக்கும் மலர்சரங்கள் தான் எஞ்சப் போகின்றன. வா. போய்ப் பார்க்கலாம்” என்றாள்.

பதும்மையின் அறையில் தலை நுழைத்து நோக்கிய அங்கினி முத்தினியும் செழியையும் தங்களை அணிசெய்வதைக் கண்டு உரக்கச் சிரித்துக் கதவில் அறைந்து “எனக்கும் ஏதேனும் அணிகள் மீதமுண்டா தேவியரே” எனச் சொன்னாள். செழியை “போ” என்பது போல் தலையசைத்து ஐம்புரியாகக் கூந்தலைப் பின்னிக் கொண்டிருந்தாள். முத்தினி செழியையின் கூந்தலில் நறும்புகைத் தூபத்தைத் தொட்டிலென ஆட்டிக் கொண்டிருந்தாள். இருவரது கழுத்திலும் இளநீல அருமணி மாலைகள் தூங்கின. கூந்தலில் தொய்யகமும் புல்கமும் மினுங்கின. புருவத்தில் நிறைப் பிறையெனக் கருமை தீட்டப்பட்டிருந்தது. இடைச்சரங்களில் பதிந்த இரத்தினங்கள் மாதுளை முத்துகள் போல ஒளிர்விட்டன. செழியை செவ்வண்ண ஆடைகொண்டு தாமரையென விரிந்திருந்தாள். முத்தினி பாலாடை வெண்மை கொண்ட ஆடையுடன் ஒளிவீசும் பெருமுத்தென குமிழ் சிரிப்புடன் தூபம் காட்டிக் கொண்டிருந்தாள். அங்கினி இருவரையும் விரல்களால் சுற்றி அள்ளித் தலையின் இருபுறமும் மடித்து நெட்டி முறித்துக் கண்கழிப்புச் செய்தாள். அங்கினியின் நோக்கைப் பார்த்த இருவரும் இரண்டு புன்னகையின் ஆடிப்பாவைகளென அவளை நோக்கினார். உச்சி முகர்பவள் போல முகம் கூம்பி உதடு குவித்துக் காற்றில் முத்தமெறிந்த பின் நீரகம் திரும்பினாள் அங்கினி. பதும்மை மூலிகைகளும் வாசனைப் பொடியும் கலந்த மனை நீரகத்தில் படுத்திருந்தாள். மேனியின் கருமை வாசனை நீருள் முழுதாய் அமிழ்ந்திருக்க தலையில் சிகைக்காய் ஊறிக் கொண்டிருந்தது. அங்கினி அவளின் பின்னே வந்து சிகைக்காயை கிளறித் தலையில் வழிய விட்டாள். நீரில் மூழ்கியெழுந்த பதும்மையின் மேனி கருமஞ்சட் பொலிவு கொண்டு சுடரென வீசியது. உலர் துணியை எடுத்து மார்புடன் இறுக்கிக் கட்டிக் கொண்டு அணியறைக்குச் சென்றாள்.

அங்கினி நீரில் இறங்கி உடலைத் தளர்த்தி மென்சூடான மூலிகை நீர் தன்னை அலசித் தூய்மை செய்யவிட்டுக் காத்திருந்தாள். பதும்மை அணியறைக்குள் சென்று நோக்கிய போது அணியறையின் பேராடியின் முன் அவள் கண்டதிலேயே பேரழகியும் தொல்தெய்வமுமாய் இருந்தவள் முழுதணி பூண்டு தன்னழகில் தானே திகைத்து விழிகள் ஆடிப்பாவையில் பின்னி பித்தாய் உறைந்திருப்பதைக் கண்டு மேனி மெய்ப்புகொள்ள நின்றாள். ஆடிப்பாவையை நோக்கியிருந்த பதும்மை தன் விழிகளும் அகலாத் தூண்டிலில் அகப்பட்டதை மறந்து கூர்ந்தாள். ஆடிப்பாவையில் விழவின் மெய்த்தெய்வம் தன்னை அறிந்து தான் நகைத்துக் கொண்டிருந்தது.

TAGS
Share This